மாமலர் - 30
30. அறியாமுகம்
மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை கொள்பவன் என்றனர் குலப்பூசகர். இளமையிலேயே நாகர்குலத்திற்குரிய நான்கு போர்க்கலைகளான நச்சுமிழ்தல், இமையாவிழிகொள்ளுதல், ஓசையின்றி அமைதல், பறந்தெழுதல் ஆகியவற்றை கற்றான்.
பின்னர் தன் அணுக்கத்தோழனாகிய கம்பனனுடன் குடிவிட்டுக் கிளம்பி பிறிதொருவனாக ஆகி அசுரகுலங்களில் அடிமையென்று சென்று இணைந்து அவர்களின் போர்க்கலைகளான காற்றில் மறைதல், விண்ணேறிச் செல்லுதல், உடலை விழியாக்குதல், இரக்கமின்றி இருத்தல் ஆகியவற்றையும் கற்றான். மலைவணிகனாக மானுடருக்குள் ஊடுருவி காவலனாக உருமாற்றம்கொண்டு அவர்களின் போர்க்கலைகளான படைக்கலம் தேர்தல், சூழ்மதி கொள்ளுதல், சேர்ந்தமைந்து ஓருடலாதல், வருவதை முன்னுணர்தல் ஆகியவற்றை அறிந்தான்.
அவன் தோழனுடன் திரும்பி தன் நிலம் வந்துசேர்ந்தபோது நோக்கிலும் நடையிலும் பேரரசன் என்றாகிவிட்டிருந்தான். நாகர்குடிகள் அவனை முதன்மைத்தலைவன் என ஏற்றன. நாகநிலம் முழுதும் வென்று வைப்ரம் என்னும் தன் சிற்றூரைச் சுற்றி நச்சுமுட்கள் சிலிர்த்துநிற்கும் கோட்டை ஒன்றைக் கட்டி கொடிபறக்க கோல்நிறுத்தி ஆளலானான். அவனை நாகாதிபன் என்றும் மகாநாகன் என்றும் வாழ்த்தின நாகர்குலங்கள்.
ஏழுஅடுக்கு அரண்மனையில் விபுலை வித்யுதை என்னும் இரு மங்கையரை மணந்து ஹுண்டன் வாழ்ந்தான். எட்டாண்டுகளாகியும் தேவியர் கருவுறாமையால் துயருற்றிருந்தான். குலப்பூசகரை அழைத்து அவர்கள் வயிறு நிறையாமை ஏன் என வினவினான். “அரசே, படைப்பென்று எழுவதெல்லாம் உளம்குவியும் தருணங்களே. சிறுபுழுவும் காமத்தில் முழுதமைகிறது என்பதே இயற்கை. உங்கள் காமத்தில் அவ்வண்ணம் நிகழவில்லை. உடலுடன் உள்ளம் பொருந்தவில்லை. குவியாக் காமம் முளைக்காத விதையாகிறது” என்றார் பூசகர்.
“ஆம்” என்று ஹுண்டன் சொன்னான். “நான் பிறிதெங்கோ எவரையோ எண்ணத்தில் கொண்டிருக்கிறேன். முற்பிறவிக் கனவில் கண்ட முகம் ஒன்று ஊடே புகுகிறது.” பூசகர் “ஊழ் பின்னும் வலையின் மறுமுனைச் சரடு. அது தேடிவரும்வரை காத்திருப்பதன்றி வேறு வழியில்லை” என்றார். “அது நன்றா தீதா?” என்றான் ஹுண்டன். “ஊழை அவ்வண்ணம் வகுக்கவியலாது. அது நன்றுதீதுக்கு அப்பாற்பட்டது” என்றார் பூசகர். “அது எனக்கு அளிப்பது என்ன?” என்றான். “அரசே, மெய்க்காதலை அறியும் நல்லூழ் கொண்டவர் நீங்கள் என்கின்றன தெய்வங்கள். ஆனால் அது இன்பமா துன்பமா என்பதை அவையும் அறியா” என்றார் பூசகர்.
தன் உள்ளத்தை ஒவ்வொருநாளும் துழாவிக்கொண்டிருந்தான் ஹுண்டன். கம்பனனிடம் “நான் எதற்காக காத்திருக்கிறேன்? பிறிதொன்றிலாது ஏன் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்?” என்றான். அவர்கள் காட்டில் ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தனர். “நாம் நம்மையறியாமலேயே செலுத்தப்படுகிறோம், அரசே. நம்மில் விழைவென, அச்சமென, ஐயமென எழுபவை எவரோ எங்கிருந்தோ நம்மில் புகுத்தும் எண்ணங்களே” என்றான் கம்பனன். “நாம் எங்கு செல்கிறோம் என ஒருபோதும் நாமறிய முடியாதென்பதையே அனைத்து நூல்களும் சொல்கின்றன.”
“இந்த முகம்… இது முகமென என்னுள் திரளவுமில்லை. கலையும் ஓர் எண்ணமென அன்றி இதை நான் இன்றுவரை அறியேன்” என்றான் அரசன். “அமுதென்றும் நஞ்சென்றும் ஆன ஒன்றே அத்தனை விசையுடன் நம்மை இழுக்கமுடியும்” என்றான் கம்பனன். “அது நம்மை தன் உள்ளங்கையில் வைத்து குனிந்துநோக்கும் ஒன்றின் புன்னகையை வானமென நம்மீது படரச்செய்கிறது.” ஹுண்டன் நீள்மூச்செறிந்து “ஆம், ஆனால் நன்றோ தீதோ பெரிதென ஒன்று நிகழும் வாழ்வமைவது நற்கொடையே” என்றான்.
அணுக்கனிடம் அரசை அளித்துவிட்டு தன்னந்தனியாக அலைந்து திரியலானான் ஹுண்டன். அருகமைந்த நகர்களில் ஏவலனாகவும் வணிகனாகவும் பயணியாகவும் அலைந்தான். காடுகளினூடாக கடந்துசென்றான். ஓவியங்களையும் சிற்பங்களையும் சென்று நோக்கினான். நிமித்திகர்களை அணுகி உரையாடினான். அந்த முகத்தை ஒவ்வொரு கணமும் விழிதேடிக்கொண்டிருந்தான்.
ஒருநாள் காட்டில் மரக்கிளைகளுக்குமேல் பறந்தவனாக உலவுகையில் சுதார்யம் என்னும் சிற்றோடையின் கரையிலமைந்த சிறுதவக்குடில் ஒன்றை கண்டான். அதைச் சூழ்ந்திருந்த மலர்க்காட்டில் மலர்வண்ணங்களால் அங்கு நிறைந்திருந்த ஒளியையும் மணத்தையும் வண்டுகள் எழுப்பிய யாழொலியின் கார்வையையும் அறிந்து மண்ணிலிறங்கி அருகே சென்றான். அக்குடிலில் ஓர் அழகிய இளநங்கை தனித்துறைவதை கண்டான்.
அவன் சென்றபோது அவள் ஒரு முல்லைக்கொடிப் பந்தலுக்குக் கீழே அமர்ந்து வெண்மொட்டுகளால் கழற்சியாடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிய அக்கணமே அவன் அறிந்தான் தன் ஊழின் மறுநுனி அவளே என. அவன் எண்ணிய அறியாமுகம் அது. பிறிதொன்றை எண்ண இனி தன்னால் இயலாது என்று தெளிந்ததும் அருகணைந்து அவளிடம் “இனியவளே, இக்காட்டில் தனித்துறையும் நீ யார்?” என்றான். அவள் அயலவரை அறியாதவள் என்பதனால் எச்சரிக்கையும் அச்சமும் விலக்கமும் அற்ற விழிகளால் அவனை நோக்கினாள்.
“நான் அசோகசுந்தரி. என்னை கல்பமரத்தில் பிறந்தவள் என என் தந்தை சொன்னார். அவர் தவமுனிவர். அவர் அளித்த நற்சொல்லால் அழியா இளமைகொண்டு என் கணவனுக்காக இங்கே காத்திருக்கிறேன்” என்றாள். வியப்பில் அருகே வந்து அவன் தலையிலணிந்த நாகபடக் கொந்தையை நோக்கி “அது என்ன? மெய்நாகமா?” என்றாள். “நான் நாகர்குலத்து அரசன், என் பெயர் ஹுண்டன். என் குடி ஏழிலும் முதல்வன். எங்கள் நிலத்தின் பெருந்தலைவன்” என்றான் அவன்.
அவள் மகிழ்ந்து “நான் இன்றுவரை அரசர்களை சந்தித்ததில்லை. அவர்கள் படைசூழ கொடிசூடி வாழ்த்தும் இசையும் சூழ எழுந்தருள்வார்கள் என்றே அறிந்துள்ளேன்” என்றாள். “ஆம், அவை எனக்கும் உள்ளன. நச்சுவாளி தொடுத்த நாகவிற்களுடன் என்னைச் சூழ பெரும்படை உண்டு. இன்று நான் காடுகாண தனியே வந்தேன். தனித்தலைந்தாலும் நான் ஒரு படைக்கு நிகரானவனே” என்றான் ஹுண்டன். அவளுடைய அஞ்சாமையை அவன்மீதான விருப்பென அவன் எண்ணிக்கொண்டான். அவள் கண்களின் கள்ளமின்மையைக் கண்டு மேலும் மேலும் பித்துகொண்டான்.
“நீ காத்திருப்பது யாருக்காக?” என்றான். “உன் அழகு அரசர்கள் அணியென சூடத்தக்கது. அரியணையில் அமரவேண்டியவள் நீ.” அவள் புன்னகைத்து “ஆம், இந்திரனுக்கு நிகரான அரசனின் மணமகள் நான் என்றார் என் தந்தை” என்றாள். “அவன் நானே. இன்று இந்நிலத்தின் ஆற்றல்மிக்க பேரரசன் நான்” என்றான் ஹுண்டன். “நீ காத்திருந்தது எனக்காகத்தான். என்னை ஏற்றுக்கொள்க!” அவள் அவனை கூர்ந்து நோக்கி “நீர் அழகர். உம்மை ஏற்பதில் எனக்கு தயக்கமும் இல்லை. ஆனால் நான் மண்ணுக்கு வந்தபோது ஒரு மலரும் உடன் வந்தது. அந்த வாடியமலர் என்னிடம் உள்ளது. எவர் என் தலையில் அதைச் சூட்டுகையில் அது மீண்டும் புதிதென மலர்கிறதோ அவரே என் கணவர் என்றார் எந்தை. இருங்கள், கொண்டுவருகிறேன்” என குடிலுக்குள் ஓடினாள்.
திரும்பி வந்தபோது அவள் கையில் ஓர் அசோகமலர் இருந்தது. வாடிச்சுருங்கி ஒரு செந்நிறக் கீற்றென ஆகிவிட்டிருந்தது. “அசோகம்” என்று அவள் சொன்னாள். “துயரின்மையின் அழகிய மலர் இது. இதை தாங்கள் கையில் வாங்கும்போது மலர்ந்து முதற்காலை என மென்மையும் ஒளியும் கொள்ளவேண்டும்.” அவன் தயங்கியபடி அதை வாங்கினான். அது அவ்வாறே இருந்தது. அவள் அதே புன்னகையுடன் “பொறுத்தருள்க, அரசே! அவ்வண்ணமென்றால் அது நீங்கள் அல்ல” என்றாள்.
அவன் சீறி எழுந்த சினத்துடன் “என்ன விளையாடுகிறாயா? நான் எவரென்று அறிவாயா? நீ தனித்த சிறுபெண். பருந்து சிறுகுருவியை என உன்னை கவ்விக்கொண்டு வானிலெழ என்னால் இயலும். உன் கள்ளமின்மையை விரும்பியே சொல்லாடினேன்” என்றான். “இனி உன் விருப்பென்ன என்பதை நான் கேட்கப்போவதில்லை. நீ என் துணைவி” என அவள் கையை பற்றச்சென்றான். அவள் பின்னால் விலகி கூர்ந்த கண்களுடன் “அரசே, அறிக! இது என் இடம். இங்கு எல்லைமீறி என்னை கைக்கொள்ள முயல்வது பிழை… முனிவராகிய என் தந்தை எனக்கருளிய காவல் கொண்டுள்ளன இந்தக் குடிலும் சோலையும்” என்றாள்.
“நாகத்திற்கு வேலிக்காவல் இல்லை, அழகி” என சிரித்தபடி அவன் அவளை பற்றப்போனான். “விலகு, மூடா! இதற்குள் வந்து என் ஆணை மீறும் எவரையும் அக்கணமே கல்லென்றாக்கும் சொல் எனக்கு அருளப்பட்டுள்ளது. இதோ, இச்சிம்மம் அவ்வாறு என்னால் கல்லாக்கப்பட்டது. அந்தப் புலியும் அப்பாலிருக்கும் கழுகும் செதுக்கப்பட்ட சிலைகளல்ல, உயிர்கொண்டிருந்தவை” என்றாள். “இந்தக் குழவிக்கதைகளுக்கு அஞ்சுபவர்களல்ல நாகர்கள்” என்று சிரித்தபடி அவன் மேலும் முன்னகர அவள் கைநீட்டி “உன் வலக்கால் கல்லாகுக!” என்றாள்.
அவன் தன் வலதுபாதம் கல்லாகி எடைகொண்டதை உணர்ந்து அஞ்சி குளிர்ந்து நின்றான். “அணுகவேண்டாம்! உன்னை கல்லென்றாக்கி இங்கு நிறுத்த நான் விழையவில்லை. அகன்று செல்க!” என்று அவள் கூவினாள். அவன் காலை இழுத்துக்கொண்டு பெருஞ்சினத்தால் உறுமியபடி சோலையைவிட்டு வெளியே சென்றான். அங்கு நின்றபடி “விழைந்ததை அடையாதவன் நாகன் அல்ல. நான் உன்னை பெண்கொள்ளாமல் மீளப்போவதில்லை” என்றான்.
அவள் அதுவரை இருந்த பொறையை இழந்து சினந்து “இழிமகனே, விரும்பாப்பெண்ணை அடைவேன் என வஞ்சினம் உரைப்பவன் வீணரில் முதல்வன். நீ என் கணவன் கையால் உயிரிழப்பாய்” என்றாள். தன் கையை ஓங்கி “ஆம்! ஆம்! ஆம்!” என மும்முறை உரைக்க வானில் ஓர் இடி எழுந்தது. அச்சொல் பிறிதிலாது நிலைபெற்றுவிட்டதை அறிந்த ஹுண்டன் ஒருகணம் நடுங்கினாலும் கோல்கண்டால் மீண்டும் படமெடுக்கும் நாகத்தின் இயல்பு மீண்டு “எஞ்சியதை என் மஞ்சத்தில் சொல், பெண்ணே” என்றபின் மரங்களின்மேல் ஏறிக்கொண்டான்.
தன் அரண்மனைக்கு மீண்ட ஹுண்டன் கம்பனனை அழைத்து எவ்வண்ணமேனும் அசோககுமாரியை அவள் வாழும் சோலையின் எல்லைகடத்தி அழைத்துவரும்படி ஆணையிட்டான். கம்பனனின் திட்டப்படி அரண்மனைச்சேடி ஒருத்தி நிறைவயிறென உருவணிந்து அசோககுமாரி நீராடும் சோலைச்சுனையருகே நின்றிருந்த மரத்தில் காட்டுவள்ளியில் சுருக்கிட்டு தன்னுயிரை மாய்க்க எண்ணுவதுபோல நடித்தாள். அங்கே வந்து அதைக் கண்ட அசோககுமாரி ஓடிவந்து அவளைப் பிடித்து தடுத்து “என்ன செய்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்றாள்.
கதறியழுத சேடி தன்னை அந்தணப் பெண்ணாகிய சுதமை என்றும் தன்னை விரும்பி கவர்ந்து கொண்டுசெல்ல முயன்ற நாகர்குலத்து அரசனாகிய ஹுண்டன் அதைத் தடுத்த தன் கணவனை கொலை செய்துவிட்டான் என்றும் சொன்னாள். இறுதிச் சொல்லை அவனை பழித்துச் சொன்னபடி உயிர்விட்டு அவன்மேல் தெய்வங்களின் பழி நிலவச்செய்யும்பொருட்டே அங்கு வந்ததாகச் சொல்லி கதறினாள்.
அசோககுமாரி உளம்கலங்கி அழுதாள். பின் தான் தேறி அவளுக்கு ஆறுதலுரைத்தாள். “பழியை மறந்துவிடுக! தெய்வங்கள் நின்று கேட்கட்டும். உன் வயிற்றிலுள்ள மைந்தனுக்கு வாழும் உரிமை உள்ளது. அதை அளிக்கவேண்டியது உன் கடன்” என்றாள். “வாழாது இறந்து உன் மைந்தன் நிகழாதுபோன கனவாக வெறும்வெளியில் பதைக்கலாகாது. நீ உயிர்தரித்தே ஆகவேண்டும்” என்றாள். “இல்லை, என்னால் இயலாது. துயர் என் உள்ளத்தை அனல்கொண்ட பாறைபோல வெம்மையேற்றி வெடிக்கச்செய்கிறது” என்றாள் சுதமை.
அசோககுமாரி தன் தோட்டத்திலிருந்து துயரிலி மலர் ஒன்றைப்பறித்து “இதை உன் நிலத்தில் நட்டு வளர்ப்பாயாக! இது உன் துயர்களை களையும்” என்றாள். “இல்லை, என் துயர்மிக்க கைகளால் இதைத் தொட்டால் இது வாடிவிடும். நீயே வந்து என் சிறுகுடில் முற்றத்தில் இதை நட்டு ஒரு கை நீரூற்றிவிட்டுச் செல்!” என்றாள் சுதமை. அசோககுமாரி “நான் என் குடில்வளாகத்தைவிட்டு நீங்கலாகாதென்பது எந்தையின் ஆணை” என்றாள். சுதமை மீண்டும் மீண்டும் கைபற்றி கண்ணீர்விட்டு மன்றாடவே உடன்செல்ல இசைந்தாள்.
சுதமை அவளை காட்டுவழியே இட்டுச்சென்றாள். நெடுந்தொலைவு ஆவதை அறிந்த அசோககுமாரி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றாள். “அருகிலேதான்… நீ காட்டுவழி சென்றதில்லை என்பதனால்தான் களைப்படைகிறாய்” என்றாள் சுதமை. பின்னர் அவளுக்கு மெல்ல புரியலாயிற்று. அவள் திரும்பிச்செல்ல முயல நகைத்தபடி சுதமை அவள் கைகளை பற்றிக்கொண்டு “எங்கு செல்கிறாய்? நீ என் அரசரின் அடிமை” என்றாள். கையை உதறிவிட்டு அசோககுமாரி தப்பி ஓட நாகர்கள் மரங்களிலிருந்து பாய்ந்து அவளைச் சூழ்ந்தனர்.
அவள் முன் தோன்றிய கம்பனன் “நீ என் அரசனின் கவர்பொருள். திமிறினால் உடல் சிதையப்பெறுவாய்” என்றான். அவர்கள் அவளை கொடிகளால் கட்டி இழுத்துக்கொண்டு வந்து ஹுண்டனின் அவையில் நிறுத்தினர். அவையமர்ந்திருந்த அரசன் அவளைக் கண்டதும் வெடிச்சிரிப்புடன் எழுந்து அருகே வந்தான். “உன் எல்லைக்குள் நீ ஆற்றல்கொண்டவள். முதலையைப் பிடிக்க இரையை பொறியிலிட்டு அதை கரை வரச்செய்யும் கலை அறிந்தவர் நாகர்” என்றான். அவள் அவன் சொல்வதென்ன என்று அறியாமல் நோக்கி அமர்ந்திருக்க “நீ என் ஆணையை மீறினாய்! விரும்பியதைக் கொள்ள அரசனுக்கு உரிமை உள்ளது. ஆணைமீறுபவரை தண்டிக்கவும் அவன் கடமைப்பட்டவன். நீ இன்றுமுதல் என் அரசி. அது என் விழைவு. என் அரண்மனைவிட்டு வெளியே செல்ல உனக்கு இனி என்றும் ஒப்புதல் இல்லை, அது உனக்கு அரசன் அளிக்கும் தண்டனை” என்றான் ஹுண்டன்.
அவள் கதறியழுது தன்னை விட்டுவிடும்படியும், தன் தந்தையின் ஆணைப்படி நெடுங்காலமாக தன்னை வேட்டு வரும் தலைவனுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னாள். அவைமுன் நீதிகேட்கவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுமியைப்போல அழுதபடி அமர்ந்து கைகளை உதறி அடம்பிடிக்கவே அவளால் இயன்றது.
அரசனின் ஆணைப்படி அவளைப் பிடித்து இழுத்துச்சென்றனர் நாகசேடியர். அவளை நீராட்டி நாகபடக் கொந்தையும் நாககங்கணங்களும் நாகக்குழையும் சூட்டி அணிசெய்து ஏழு நாகங்கள் எழுந்து விழிசூடி நின்றிருந்த குலதெய்வத்தின் ஆலயத்திற்கு கொண்டுசென்றனர். அவள் கழுத்தில் நாகபட மாலையை அணிவித்து ஹுண்டன் அவளை வலுமணம் கொண்டான். அவள் அழுது சோர்ந்து ஆற்றலிழந்து நனைந்த தோகைமயில்போல கைகால்கள் தளர்ந்திருந்தாள். அவளை தன் காமமண்டபத்திற்கு கொண்டுசெல்லும்படி அவன் ஆணையிட்டான்.
அவர்கள் அவளை இரவுக்கான மென்பட்டு ஆடைகளும் உறுத்தாத நகைகளும் அணிவித்து அந்திமலர்கள் சூட்டி அவன் மஞ்சத்திற்கு கொண்டுசென்றனர். அவள் மஞ்சத்தில் அவர்களால் அமரச்செய்யப்பட்டபோது எங்கிருக்கிறோம் என்பதையே அறியாதவள் போலிருந்தாள். ஏதோ ஒற்றைச்சொற்களை எவரிடமோ எனச் சொல்லி மெல்ல அழுதுகொண்டிருந்தாள். “அழுதுகொண்டிருக்கிறார்” என நாகசெவிலி அரசனிடம் சொன்னாள். “நாளை நாணமும் நகையாட்டுமாக வருவாள்” என்று சொன்னபின் அரசன் மஞ்சத்தறைக்குள் புகுந்தான்.
இரவுக்கான வெண்பட்டாடை அணிந்திருந்தான். மார்பில் மெல்லப் புரளும் முல்லை மலர்தார். காதுகளில் ஒளிரும் கல்குழைகள். அவன் குறடோசை கேட்டு அவள் விதிர்த்தாள். அவன் அருகே வந்து அவளிடம் குனிந்து மென்குரலில் “அஞ்சவேண்டாம். நீ அரசனின் துணைவி ஆகிவிட்டாய். நாகர்குலத்துக்கு அரசியென்று அமரவிருக்கிறாய்” என்றான். அவள் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவனை நோக்கிய விழிகளில் அவன் தோற்றம் தோன்றவுமில்லை. உதடுகள் ஏதோ சொல்லை உச்சரித்து அசைந்துகொண்டே இருக்க விழிகள் சிறார் விளையாட்டில் பிடித்து சிறுகிண்ணத்து நீரில் இட்ட பரல்கள் இறுதிமூச்சுக்குத் துடிப்பதுபோல அசைந்தன.
அவள் செவிகள் மட்டுமே கேட்கும்படியாக “நீ எனக்கு உன் காதலை மட்டும் கொடு, உனக்கு நான் இவ்வுலகை அளிக்கிறேன்” என்று ஹுண்டன் சொன்னான். அவள் முகம் மாறாததைக் கண்டு உடனே சினம்கொண்டு “அதை நீ மறுத்தால் நான் நஞ்சு என்றும் அறிய நேரும்” என்றான். அவள் அசையும் உதடுகளும் தத்தளிக்கும் விழிகளுமாக அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “என்னடி சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். அவள் அதையே சொல்லிக்கொண்டிருக்க அவள் தோள்களைப்பற்றி உலுக்கி “இழிமகளே, சொல்… என்ன சொல்கிறாய்?” என்றான்.
அவள் அணங்குகொண்டவள் போலிருந்தாள். அண்மையில் அவள் உதடுகளை நோக்கிய அவன் அவை மட்டுமே கண்களை நிரப்புவதுபோல் உணர்ந்தான். “என்னடி சொல்கிறாய்? பிச்சியா நீ? சொல்!” என அவளைப் பிடித்து உலுக்கினான். “சொல், கீழ்மகளே! என்ன சொல்கிறாய்?” என அவளை ஓங்கி அறைந்தான். அந்த அறையைக்கூட அவள் உணரவில்லை. அவன் “இது ஒரு சூழ்ச்சியா? இதனால் நீ தப்பிவிடுவாயா?” என்று கூவியபடி அவளை பிடித்துத்தள்ளி மஞ்சத்தில் சரித்து அவள் உடலை ஆளமுயன்றான்.
அவள்மேல் படுத்து அவள் முலைகளைப் பற்றியபோதும் அவள் அதை அறியவில்லை. அவன் எழுந்த அச்சத்துடன் அவள் உதடுகளை நோக்க ஒரு கணத்தில் அச்சொல் அவனுக்குப் புரிந்தது. அவன் உடல் குளிர்ந்து கால்கள் செயலிழந்தன. எடைகொண்டுவிட்ட உடலைப்புரட்டி அவன் படுக்கையில் மல்லாந்தான். அவன் இடைக்குக்கீழே கல்லாகிவிட்டிருந்தது.
அவள் எழுந்து ஓடுவதை அவன் சொல்லில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் வெளியே சென்று அரண்மனை முற்றத்தை அடைந்து தெருக்களினூடாக அலறியழுதபடி ஓடி நகர்நீங்கினாள். அவளை அரசன் விட்டது ஏன் என காவலர் குழம்பினர். அழியா தீச்சொல் ஒன்று நகர்மேல் கவிந்ததோ என ஊரார் அஞ்சினர். அவள் ஒருமுறை நின்று நகரை திரும்பி நோக்கியபின் கண்ணீர்த்துளி நிலத்தில் சிதற குழல் உலைய கால்சிலம்பு கறங்க நடந்தாள் என்றனர் கோட்டைக்கு வெளியே நின்றிருந்த நகர்க்காவலர்.
விடியும்போது அவள் மீண்டும் தன் குடில்சோலையை அடைந்தாள். ஓடி அவ்வெல்லையைக் கடந்தபோது கால்தடுக்கியதுபோல நினைவழிந்து விழுந்தாள். பின்னர் இளவெயில் முகத்தில் விழ விழித்தெழுந்தபோது அவள் தான் ஏன் அங்கு கிடக்கிறோம் என வியந்தாள். தன் உடலில் இருந்த அணியும் ஆடையும் எவ்வண்ணம் அமைந்தது எனத் திகைத்து நோக்கியபின் அவற்றை பிடுங்கி வீசினாள். குடிலுக்குள் சென்று மரவுரி அணிந்து முகம்கழுவி ஆடியில் தன் முகத்தை நோக்கியபோது அதில் இளமைப்புன்னகை திரும்பியிருந்தது.
மீண்டும் குடில்முற்றத்திற்கு வந்தபோது அங்கே சிதறிக்கிடந்த அணிகளும் ஆடைகளும் எவருடையவை என்று அறியாது குழம்பி கையிலெடுத்து நோக்கினாள். தன் உடல்மேல் வைத்து அவை பெண்கள் அணிபவை என உய்த்தறிந்து புன்னகைத்தாள். பின்னர் சற்றுநேரம் எண்ணிநோக்கியபின் அவற்றை கொண்டுசென்று அக்குடில்சோலையின் எல்லைக்கு அப்பால் வீசினாள். பின்னர் துள்ளியபடி அங்கே பூத்துநின்ற மலர்மரம் ஒன்றை நோக்கி ஓடினாள். அதன் அடியில் சென்றுநின்று அடிமரம் பிடித்து உலுக்கி மலர்மழையில் கைவிரித்துத் துள்ளி கூச்சலிட்டுச் சிரித்தாள். அவள் அக்குடில்வளைவு விட்டு அகன்றபோது அவள் உடலில் அகவை நிகழத்தொடங்கிவிட்டிருந்தது. அந்த இரண்டுநாட்களின் மூப்பைக் களைந்து மீண்டும் சென்றகணத்தில் இருந்த காலத்தை அடைந்தது அவள் உடல்.
காவலர் ஓடிவந்து நோக்கியபோது ஹுண்டன் மஞ்சத்தில் நடுங்கியபடி படுத்திருந்தான். “அரசே, அரசி ஓடிச்செல்கிறார்கள்” என்றான் அணுக்கனாகிய அமைச்சன் கம்பனன். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை. “என்ன ஆயிற்று தங்களுக்கு? ஏன் படுத்திருக்கிறீர்கள்?” என்றபடி அருகணைந்த கம்பனன் அப்பார்வையிலேயே அரசனின் கால்கள் கல்லென்றாகிவிட்டிருப்பதை கண்டான். அவன் கைநீட்ட ஹுண்டன் அவன் தோள்களை பற்றிக்கொண்டான். கம்பனன் அவனைப் பற்றி எழுப்பினான். அவன் உடல் எடைமிகுந்து கற்சிலைபோல அவன் மேல் அழுந்தியது.
அரசனை மருத்துவர்கள் வந்து நோக்கி திகைத்தனர். “கால்கள் எப்படி கல்லாயின? அமைச்சரே, இது தெய்வங்களின் தீச்சொல்” என்றனர். எவரும் எச்சொல்லும் எவரிடமும் உரைக்கலாகாது என அமைச்சனின் ஆணையிருந்தபோதும் அரசனின் கால் கல்லானதை மறுநாள் புலரியிலேயே நகர் அறிந்தது. குலங்கள் அறிந்து அஞ்சி தெய்வங்களை நோக்கி படையல்களும் பலிகளுமாக நிரைவகுத்தன. “பெண்பழியும் கவிப்பழியும் அறப்பழியும் அகலாது” என்றனர் மூத்தோர்.
பின்னர் ஹுண்டன் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அவனை கல்படுக்கை ஒன்றைச்செய்து அதில் கிடத்தினர். அவனுக்குப் பணிவிடை செய்ய சேடியரும் ஏவலரும் எப்போதும் சூழ்ந்திருந்தனர். கைபற்றி எழுந்து அமர்ந்தும் சிறுசகடத்திலேறி வெளியே செல்லவும் அவனால் இயன்றது. அமைச்சனைக்கொண்டு அவன் நாடாண்டான். உணவுண்ணுதலும் நூல்தோய்தலும் இசைகேட்டலும் குறைவின்றி நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என அவன் எவரிடமும் சொல்லவில்லை. அதை உசாவும் துணிவும் எவருக்கும் இருக்கவில்லை. அதைக் குறித்து ஒவ்வொருநாளும் எழுந்த புதிய கதைகளை எவரும் அவன் செவிகளில் சேர்க்கவுமில்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் சோர்ந்துவருவதை அமைச்சன் கம்பனன் கண்டான். அவன் அருகே அமர்ந்து அரசுசூழ்தலின் வெற்றிகளைப்பற்றி சொன்னான். குலங்கள் அவனைப் புகழ்வதையும் குடிகளின் பணிவையும் கூறினான். அவர்கள் கூடி காட்டிலாடிய இளமைநாட்களைப்பற்றி கதையாடினான். எச்சொல்லும் அரசனில் பற்றிக்கொள்ளவில்லை. ஒருமுறை பேச்சின்போக்கில் அமைச்சன் அசோககுமாரியைப்பற்றி சொன்னான். அரசனின் விழிகளில் அசைவைக் கண்டு அவள் காத்திருக்கும் இந்திரனுக்கு நிகரான அரசனைப்பற்றி பேசினான். அரசனின் முகம் உயிர்ச்செம்மை கொண்டது. அவன் சினத்துடன் முனகினான்.
அதுவே அவனை மீட்கும் வழி என உணர்ந்த கம்பனன் அதன்பின் அவ்வஞ்சத்தைப் பற்றியே அரசனிடம் பேசினான். ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அதைக் குறித்து அவனிடம் பேசும்படி ஆணையிடப்பட்டனர். வஞ்சம் ஹுண்டனை மீண்டெழச் செய்தது. கல்லான கால்களை நீட்டி கல்படுக்கையில் அமர்ந்தபடி அவன் செய்திகளை எட்டுத் திசைகளிலிருந்தும் சேர்த்துக்கொண்டிருந்தான். குருநகரின் அரசனாகிய ஆயுஸ் தத்தாத்ரேய முனிவரின் அருள்பெற்று மைந்தன் ஒருவனை ஈன்ற கதையை அவனிடம் ஒற்றர்கள் சொன்னார்கள். தாயைப் பிளந்து மண்ணுக்கு வந்த அம்மைந்தன் இந்திரனை வெல்வான் என நிமித்திகர் எழுவர் களம்பரப்பி குறித்ததை அவன் அறிந்தான்.
அரசனின் ஆணைப்படி அம்மைந்தனின் பிறவிநூலை ஓர் ஒற்றன் திருடிக்கொண்டு வந்தான். அதை தன் குலப்பூசகர் எழுவரிடம் அளித்து நிலைநோக்கச் சொன்னான் ஹுண்டன். அவர்களும் இந்திரனை வெல்லும் ஊழ்கொண்டவன் அவன் என்றனர். “அவன் மணக்கப்போவது எவரை?” என சிறிய கண்களில் நச்சு கூர்ந்துநிற்க ஹுண்டன் கேட்டான். அவர்கள் கருக்களை நோக்கியபின் “அவள் முன்னரே பிறந்துவிட்டாள். அவனுக்காக காத்திருக்கிறாள்” என்றனர். “ஆம், அவனே” என்று பற்களைக் கடித்தபடி ஹுண்டன் சொன்னான். “அவன் பெயர் நகுஷன்” என்றான் கம்பனன்.