மாமலர் - 18

18. மலர்ப்பகடை

மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம் ஒருவர் தங்களை ஓவியமென தீட்டிக்கொண்டனர். துளிதொட்டு துளிதொட்டு ஆக்கிய அந்த ஓவியம் ஆயிரம் ஓவியங்கள் அழித்தழித்து எழுந்த திரைமேல் அமைந்தது.

தங்கள் விருப்ப வடிவை தீட்ட எண்ணி தீட்டிமுடித்து நோக்கி அதைக் கண்டு வியந்து அகன்று அதை பிறர் நம்புகிறாரா என எண்ணி ஐயுற்றனர். அதை வெல்லும்பொருட்டு மெல்லிய துயரை அதில் பூசி கூர்படுத்திக்கொண்டனர். இனிய தருணத்தின் துயர் மேலும் இனிதென்று உணர்ந்து அதை தொட்டுத்தொட்டு பெருக்கினர். ஒருவர் துயரை பிறிதொருவர் ஆற்றினர். சொற்கள் சொற்களென பெருகி பின் பெருமழை துளியென்றாவதுபோல் ஓய்ந்து பொருளற்ற ஒற்றைச் சொற்களும் விழிக்கசிவுமென எஞ்சினர்.

உணர்வுகளை தட்டிஎழுப்பி விசைகொள்ளச் செய்வது எளிது. அவை கொள்ளும் திசைமீறல்களை கட்டுப்படுத்துதல் அரிது. ஆடற்களமொன்றில் வழிகுழைந்து திசைமயங்கி தடுமாறி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தையே வந்தடைந்தனர். பெண் பெருகியதும் ஆண் குறுகியதும் முழுமை அடைந்தபோது இருவர் பரபரப்பும் அடங்கியது. பின் சொற்கள் எழவில்லை, நீள்மூச்சுகளும் சிறுபுன்னகைகளும் மென்தொடுகைகளுமே எஞ்சின.

இனிமை முழுத்தபோது இருவருமே தனிமையை விரும்பினர், மேலுமொரு சொல் அவ்வினிய குமிழியை உடைத்துவிடும் என அஞ்சியவர்கள்போல. அவ்வெண்ணத்தால் அச்சம்கொண்டு ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விலக்கினர். ஒருவர் சொல்லும் சொல்லை மற்றவர் செவிகொடுக்காமல் வெற்றுப்புன்னகையும் தலையசைப்பும் அளித்தனர். இனிமை அது இழக்கப்படும் எனும் துயரை தவிர்க்கமுடியாமல் தான் கொண்டுள்ளது. அத்துயரால்தான் அது மேலும் இனிதாகிறது.

புரூரவஸ் நீண்டமூச்சுடன் மீண்டுவந்தான். பிறிதொன்றை பேசுவதற்கு உளம் அமையவில்லை. அனைத்தையும் பொருளிழக்கச்செய்து அதுவொன்றே மெய்மை என்றது அந்த நறுமணம். மரத்தை நிமிர்ந்து நோக்கி “இந்த மலர்கள்தான்” என்றான். அவள் காதுக்குள் என ஒலித்த குரலில் “என்ன?” என்றாள். “இந்த மலர்களின் மணத்தைத்தான் இச்சோலையை அணுகுகையிலேயே நான் அறிந்தேன். அங்கிருக்கையில் பாரிஜாதம், அணுகுகையில் செண்பகம். இப்போது இதுவரை அறியாத மலரின் மணம்… ஆனால் புதியதல்ல. நான் அறிந்த ஒன்று” என்றான். அவள் “ஆம், இந்த மணம் விண்மலர் ஒன்றுக்குரியது என்கிறார்கள்” என்றாள்.

அவன் எழுந்து அந்த மரக்கிளையொன்றை தாவிப்பற்றி இழுத்து ஒரு வெண்மலரை பறித்தெடுத்தான். அவள் முகம்மலர்ந்து எழுந்து அதை கைநீட்டி வாங்கி காம்பைப்பற்றி இதழ்களைச் சுழற்றி நோக்கி “தூய வெண்மை” என்றாள். “ஆம், மாசில்லாதது” என்று அவன் சொன்னான். வெறும் சொற்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்ல அவர்கள் அஞ்சினர். பொருள்கொள்ளும் சொற்கள் அத்தருணத்திற்கு ஒவ்வாத எடைகொண்டிருந்தன. ஆனால் அறியாது “வண்ணங்கள் பல கோடியென பெருகிக்கிடக்கும் மலர்களின் வெளியில் வெண்ணிறம் இத்தனை பேரழகு கொள்வதெப்படி?” என்றான். அத்தருணத்திலும் வினாவென அமையும் தன் உள்ளத்தை எண்ணி மறுகணம் சலிப்புற்றான்.

அவள் “அதன் மென்மையினால்…” என்றாள். எத்தனை பெண்மைகொண்ட மறுமொழி என எண்ணியதுமே எத்தனை சரியான சொல்லாட்சி என்றும் அவன் உணர்ந்தான். நிமிர்ந்து விழியிமை சரிய, சிறு உதடுகள் சற்றே கூம்ப, மலரை நோக்கி குனிந்திருந்த அவள் முகத்தை நோக்கியபின் “ஆம், பிற எவ்வண்ணத்தைவிடவும் வெண்மையே மென்மை மென்மை என்கிறது” என்றான். என்ன சொல்கிறோம் என வியந்தபடி “வேறெந்த மலரையும் இதழ் தொட்டு வருடலாம். வெண்மலரைத் தொட விரல் தயங்குகிறது” என்றான். அவள் நிமிர்ந்துநோக்கி புன்னகை செய்தாள்.

வீண்சொல் பேசுகிறோம் என அவன் உள்ளம் தயங்கியது. ஆகவே சொன்னவற்றை மேலும் கூராக்க முனைந்தான். “தூய்மை ஒரு மலரென்றானதுபோல்” என்றான். “நான் ஒரு புன்னகை என்று இதை நினைத்துக்கொண்டேன்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று அவன் வியப்புடன் சொன்னான். அவள் சிறுமியைப்போல் மிக எளிமையாக சொல்லும் ஒரு வரிக்கு முன் கற்று அடைந்த தன் கவிதைவரிகள் ஒளியிழக்கின்றனவா? ஒவ்வொரு ஒப்புமைக்கும் ஏற்ப அம்மலர் தன்னை மாற்றி காட்டிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. இது உண்மையிலேயே விண்ணுலக மலரா என்ன?

சொற்களினூடாக அனைத்தையும் கடந்து கீழிறங்கி வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஓர் எண்ணம் பிறிதொன்றுடன் தொடர்புகொள்ளவே விழைகிறது. கோத்துக்கொண்டு சரடென வலையென கூரையென தரையென மாறுகிறது. எண்ணங்கள் எழுந்தாலே அவை வடிவமென்றாகிவிடுகின்றன. சொற்கள் அறுந்த மாலையின் மணிகள். விண்மீன் மின்னுகைகள்.

“திரும்பு! இதை உன் குழலில் சூட்டுகிறேன்” என்று அவன் சொன்னான். அவள் சிரித்தபடி திரும்பி அள்ளிச்சுருட்டி வளைத்துக்கட்டிய தன் கொண்டையை அவிழ்த்து விரல்களால் நீவி குழலை விரித்திட்டாள். பொழிந்து அவள் இடைக்குக்கீழ் எழுந்த இணைப்பாறைகளில் வழிந்த அக்குழலின் பொழிவில் ஒரு கீற்றெடுத்து சுட்டு விரலில் சுற்றிக் கண்ணியாக்கி அதில் அம்மலரை அவன் வைத்து இழுத்து இறுக்கினான்.

வெண்மலர் அவள் கூந்தலிலேயே மலர்ந்ததுபோல் தோன்றியது. அக்கருமை கூர்ந்து ஒளிமுனை சூடியதுபோல. “வேல்முனை ஒளிபோல” என்றான். அவள் திரும்பி நகைத்து “அவையில் பாணர்களின் பாடல் மிகுதியாக கேட்கிறீர்கள் போலும்” என்றாள். அவன் அவ்விழிகளில் இருந்த ஒன்றால் மிகச்சற்றே சீண்டப்பட்டான். உண்மையில் அதை அப்போது அவன் உணரவுமில்லை. “அது அரசனின் தொழில்” என்றான்.

“ரீங்கரித்து சுழன்று சுழன்று குளவி தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை.

அவன் முகம் சிவந்து “எந்தை என்னை காட்டில் கண்டெடுத்தார். நான் விண்ணுலாவியான ஒளிக்கோள் புதனுக்கும் வைவஸ்வத மனுவின் மகள் இளைக்கும் பிறந்த மைந்தன் என்று நிமித்திகர் கூறினர். நான் வேடர் குலத்தவனல்ல” என்றான். “காடுவென்று நாடாக்கி முடிசூடும் குடியினர் குலம்சேர்த்து பொது அரசன் என முடிசூடும் மைந்தனை காட்டில் கண்டெடுத்ததாக சொல்லும் வழக்கம் இங்குண்டு. அவன் தேவர்களுக்குப் பிறந்தவன் என்று கதைகள் உருவாகி வரும். ஏனெனில் தங்களில் ஒருவனை தலைவனென்று ஏற்பது வேடர்களுக்கு எளிதல்ல. தெய்வங்கள் அருளிய மானுடன் அவர்களுக்குத் தேவை. நீங்கள் சந்திரகுலத்தோன் என்பது உங்கள் குலவழியை வேடர்களிடமிருந்து விலக்கும்” என்றாள்.

கண்கள் நீர்கொள்ள அவன் உரக்க “மலைமகள் நீ. அரசு அமைதலும் வளர்தலும் உனக்கென்ன தெரியும்?” என்றான். “நதிகள் ஊறும் மலைமேல் இருப்பவள் நான். நீர்ச்சுவையை இங்கிருந்தே கூற முடியும்” என்றாள். சொல்லெடுத்து அவளை வெல்ல முடியாதென்று அறிந்தபோது அவன் மேலும் சினம்கொண்டான். “என் பிழைதான், எளிய காட்டாளத்தியிடம் சொல்லாட வந்திருக்கலாகாது” என்றான்.

அவன் சினம் அவளை மேலும் நகைசூட வைத்தது. “ஏன், முதல்நோக்கில் காட்டாளத்தி என உணரவில்லையா அரசர்?” என்று சிரித்தபடி கேட்டாள். “காட்டாளத்தியிடம் அரசர்கள் காதல் கொள்வது புதிதல்ல” என்று அவன் சொன்னான். “காட்டாளத்தியிடம் அரசர்கள் கண்டடைவது தங்கள் உள்ளுறையும் காட்டாளர்களைத்தானே?” என்றாள் அவள்.

சினம் எல்லைமீற “உனக்கென்ன வேண்டும்? இறுதிச்சொல் உரைத்து என்னை வென்று நிற்க வேண்டுமா?” என்று புரூரவஸ் கேட்டான். அவனை முழுதும் வென்றுவிட்டதை அறிந்ததும் ஒரு மாயப்பொழுதில் சிறுமியென்றாகி சிரித்தபடி “ஆமாம், இதோ வென்றுவிட்டேன். இவ்விரு விரல்களில் ஒன்றை தொடுங்கள்” என்று கொஞ்சி அவள் கைநீட்டினாள். அவன் சற்றே சினந்து “எதற்கு?” என்றான். “தொடுங்கள்!” என்றாள். சுட்டுவிரலை அவன் தொட “தோற்றுவிட்டீர்கள்! தோற்றுவிட்டீர்கள்!” என்று அவள் கைகொட்டி நகைத்தாள். “சரி, தோற்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான். மெல்ல முகத்தசைகள் இறுக்கமிழந்தன. “தோற்றவர் எனக்கு தண்டமிடவேண்டும்” என்றாள். “என்ன?” என்றான். “தண்டம், தண்டம்” என்றாள்.

அச்சிரிப்பினூடாக அவன் சினத்தை கடந்தான். “இதோ” என்று இரு செவிகளையும் பற்றி அவள் முன் மும்முறை தண்டனிட்டான். அவள் அவன் தலைமேல் கைவைத்து “போதும் அடிமையே… உன்மேல் கனிவுகொண்டோம்” என்றாள். “தேவி, உன் காலடிகளை சென்னிசூடுகிறேன். என்றும் உடனிருக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “அருளினோம், அடியவனே” என அவள் நகைத்தாள்.

அந்தச் சினம் தலைமுட்டும் ஆடுகள் பின்விலகுவதுபோல விசைகூட்ட உதவியது. ஏன் அச்சினம் எழுந்தது என்று எண்ணியபோது அவளை எளிய பேதை என்று எண்ணிய ஆணவத்தில் அடிபட்டதனால் என்று உணர்ந்தான். ஆனால் பின்னர் இணைந்தபோது அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர். அந்த மலர்மரத்தினடியில் அவளை அவன் மணம் கொண்டான். பொன்னிற நாணல்சரடொன்றை எடுத்து மும்முறை சுழற்றி விரலாழியாக்கி அவள் கையிலணிவித்தான். “இன்று முதல் நீ என் அரசி” என்றான். விழிகனிந்து “என்றும் உங்கள் இடம் அமைவேன்” என்று அவள் சொன்னாள்.

சருகுமெத்தைமேல் அவர்கள் உடல் ஒன்றாயினர். அவள் வியர்வையில் எழுந்தது அந்த மலர்மணம். இதழ் இணைந்தபோது மூச்சில் மணத்ததும் அதுவே. உடல் உருகியபோது மதமென எரிமணம் கொண்டிருந்ததும் அந்த மலர்நினைவே. எழுந்து விலகி வான்நோக்கிப் படுத்து மெல்ல உருவாகி வந்த புறவுலகை உள்ளிருந்து எடுத்த ஒற்றைச் சொற்களை எறிந்து எறிந்து அடையாளம் கொண்டபடி கிடந்தபோது அவன் “நீயிலாது நான் அரண்மனை மீளப்போவதில்லை” என்றான். அவள் அச்சொற்களை கேட்காமல் எங்கோ இருந்தாள். திரும்பி அவள் உடல்மேல் கையிட்டு வளைத்து “என் அரசியென நீ உடன்வரவேண்டும்” என்றான்.

திடுக்கிட்டு அவனை எவர் என்பதுபோல நோக்கி “என்ன?” என்றாள். “உன்னை உடனழைத்துச் செல்லவிருக்கிறேன்” என்றான். அவள் அவன் கையை மெல்ல எடுத்து விலக்கிவிட்டு “இல்லை, இக்காடுவிட்டு நான் எங்கும் வருவதாக இல்லை” என்று மறுத்தாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இந்தக் காடு என் உள்ளம். இதை நான் என் ஆடுகளுடன் சூழ்ந்தறிந்துள்ளேன். இதைவிட்டு வந்தால் பொருளற்றவளாக ஆவேன்” என்றாள்.

துயர்சீற்றத்துடன் “உனைப்பிரிந்து ஒருநாளும் இனி வாழமுடியாது. எங்கிருந்தாலும் உன்னுடன்தான்” என்றான் அரசன். “உங்கள் நகரில் நான் வாழ காடு இல்லை” என்று அவள் சொன்னாள். “இக்காட்டிலும் எனது நகரத்தை நான் கொண்டுவந்து விடமுடியும்” என்று அவன் மறுமொழி சொன்னான். அவள் கை பற்றி நெஞ்சோடணைத்து “பிரிவெனும் துயரை எனக்கு அளிக்கவேண்டாம்” என்றான்.

அவன் கண்களில் நீரைக் கண்டு அவள் மனம் குழைந்தாள். அவன் அவளிடம் “நீ என் தேவியென அன்னையென தெய்வமென உடனிருக்கவேண்டும்” என்றான். “உங்களுடன் நான் வருவதென்றால் மூன்று உறுதிகளை நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும்” என்றாள். “எந்த உறுதியையும் அளிக்கிறேன்” என்று அவன் சொன்னான். “என் இடமும் வலமும் அமைந்து இவ்விரு ஆடுகளும் எப்போதும் அரண்மனைக்குள் இருக்கும். அவற்றை முற்றிலும் காப்பது உங்கள் கடன்” என்றாள். “ஆம், என் உயிரை முன்வைத்து காப்பேன்” என்று அவன் சொல்லளித்தான்.

“நான் வேள்விமிச்சமான நெய்யன்றி பிற உணவை உண்பதில்லை. அதை உண்ணும்படி சொல்லலாகாது” என்றாள். விந்தையுணர்வுடன் அவன் “நன்று, அதுவும் ஆணையே” என்றான். அவள் அணங்கோ என ஓர் எண்ணம் உள்ளில் எழுந்தது. அணங்குகள் வேள்விநெய் அருந்துமா என எண்ணி அதை கடந்தான். ஆனால் அவ்வச்சம் அவளை மேலும் அழகாக்குவதை உடனே உணர்ந்தான்.

அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டு சில கணங்கள் தன்னைத் தொகுத்து பின் விழிதாழ்த்தி “ஒருபோதும் ஒளியில் என் முன் உங்கள் வெற்றுடலுடன் தோன்றலாகாது” என்றாள். திகைத்து “ஏன்?” என்று அவன் கேட்டான். அவள் “தோன்றலாகாது, அவ்வளவுதான்” என்றாள். “சொல், ஏன்?” என்றான் அவன் சற்றே எரிச்சலுடன்.

“அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று! வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான்.

தன் குலத்திடமும் தந்தையிடமும் சொல்லளித்து மீள்வதாக சொல்லிச்சென்று அவள் அன்று மாலையே மீண்டுவந்தாள். இரு ஆடுகள் இரு பக்கமும் வர அவன் கைபற்றி காட்டிலிருந்து வெளியேறி வந்தாள். காட்டின் எல்லையில் அமைந்த முக்குடைமலை ஒன்றை கடக்கையில் குனிந்து கூழாங்கல் ஒன்றை பெண்செல்வமென எடுத்துக்கொண்டாள். அவன் அரண்மனைக்குள் வலக்கால் எடுத்துவைத்து நுழைந்தபோது தன் இரு விழிகளில் ஒற்றி அவனுக்களித்தாள்.

 imagesசியாமையுடன் ஏழு ஆண்டுகாலம் பித்தெடுத்த பெருங்காதலில் திளைத்து வாழ்ந்தான் புரூரவஸ். அவ்வேழு ஆண்டுகளும் அவன் ஆண்ட குருநகரமே அவளுடைய அணியறையும் அரசமன்றும் மட்டுமே எனத் திகழ்ந்தது என்றனர் குலப்பாடகர். நகரில் எங்கும் அவளைப்பற்றியே அனைவரும் பேசினர். பாலைநிலமெங்கும் காற்று பதிந்திருப்பதுபோல நகரின் அனைத்துப்பொருட்களிலும் அவளே இருந்தாள் என்றனர் அரசவைக்கவிஞர்.

வேடன் மகளை மைந்தன் மணம்கொண்டு வரும் செய்தியை அறிந்தபோது ஹிரண்யபாகு திகைத்து பின் கடும்சினம் கொண்டார். அவன் செங்கோலை வலுவாக்கும் தென்னகத்து சூரியகுலத்து அரசன் ஒருவனின் மகளை அவர் மணம்பேசிக்கொண்டிருந்த காலம் அது. அவன் முன்னரே மணம்கொண்டிருந்தவர்கள் புகழ்பெற்ற தொல்குடிகளில் பிறந்தவர்கள். “அவனை அங்கேயே நிற்கச் சொல்லுங்கள்! நகர் நுழையவேண்டியதில்லை. அவளை அவன் மணம்புரிந்து நகர் நுழைக்க நான் ஒப்பவில்லை. விழைந்தான் என்றால் அவளை விருப்பக்கிழத்தியென கொள்ளட்டும். அப்பால் ஆற்றுமுகத்தில் மாளிகை அமைத்து அங்கே அவளுடன் வாழட்டும்” என்றார்.

அன்னை “காட்டுப்பெண் மாயமறிந்தவள் என்பார்கள். என் மைந்தன் உள்ளத்தை அவள் எப்படி கவர்ந்தாள் என்றறியேன்” என கலுழ்ந்தாள். “அவள் கானணங்கு. கொலைவிடாய் கொண்ட வாயள். என் மைந்தன் குருதிகுடித்தபின் கான்மீள்வாள்” என்றாள். “வீண்சொல் பேசாதே. கானகமகளிரை அரசர் மணப்பதொன்றும் புதியதல்ல” என்றார் ஹிரண்யபாகு.

தந்தையின் செய்தி அறிந்ததும் புரூரவஸ் உறுதியான குரலில் “நான் பெண்ணெனக் கொள்பவள் இவள் ஒருத்தியே. எனக்கு தந்தையின் முறையென வருவது அரசு. அவர் அளிக்கவில்லை என்றால் என் துணையுடன் மீண்டும் காட்டுக்கே செல்கிறேன். நகரில் இவளின்றி ஒருநாளும் அமையமாட்டேன்” என்றான். அவனுடைய உறுதியைச் சொன்ன அமைச்சர்கள் “மறுசொல் எண்ணாமல் ஆனால் உணர்வெழுச்சியும் இல்லாமல் சொல்லும் சொற்கள் பாறைகள் போன்றவை அரசே, அவற்றுடன் பேசுவதில் பொருளில்லை” என்றனர்.

பன்னிருநாட்கள் அவன் நகர்எல்லைக்கு அப்பால் காத்திருந்தான். பின்னர் “நான் என் துணைவியுடன் கானேகினேன் என எந்தையிடம் சொல்லுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான். ருத்ரன் நகருக்குள் சென்று ஹிரண்யபாகுவிடம் “அவரை அச்சுறுத்தியோ விருப்புஎழுப்பியோ உளம்தளர்த்தியோ அவளிடமிருந்து அகற்றமுடியாது, அரசே. தணிவதன்றி வேறுவழியில்லை உங்களுக்கு” என்றான். “அவளிடம் அப்படி எதை கண்டான்?” என்றாள் அன்னை. “அதை அவளைக் கண்டதும் நீங்கள் உணர்வீர்கள்” என்றான் ருத்ரன்.

சினத்துடன் “அவன் அரசன்” என்றார் ஹிரண்யபாகு. “அரசே, அவள் புவிக்கெல்லாம் அரசி போலிருக்கிறாள்” என்றான் ருத்ரன். “அவள் எப்படி இந்நகரில் வாழ்வாள்?” என்றாள் அன்னை. “அவள் விண்நகர் அமராவதியும் கண்டவள்போல தெரிகிறாள், அன்னையே” என்றான் ருத்ரன். இறுதியில் அவனுக்குப் பின்னால் தூதர்களை அனுப்பி அவன் துணைவியை ஏற்பதாக தந்தையும் தாயும் ஒப்புக்கொண்டனர்.

சியாமையுடன் புரூரவஸ் நகர்நுழைந்த நாளில் நகர்மக்கள் முகப்பெருக்காகக் கூடி ஆர்ப்பரித்து காத்திருந்தனர். அவன் ஊர்ந்த தேர் உள்ளே வந்ததும் கடுங்குளிர்கொண்டு மலைச்சுனை உறைவதுபோல அவர்கள் சொல்லும் அசைவும் இழந்தனர். சித்தமழிந்து விழிகள் வெறும் மலர்களென்றாக நின்றிருந்தனர். ஒரு வாழ்த்தொலியும் எழவில்லை. அமைதியில் தேர்ச்சகட ஒலி மட்டுமே கேட்டது. நெடுநேரம் கழித்து ஒருவன் பாய்ந்து சென்று முரசை முழக்கினான். உடன் பொங்கி எழுந்தது மக்களின் பேரொலி.

அவள் புவியரசியென்றே பிறந்தவள் போலிருந்தாள். பேரரசர்களின் மணிமுடிகளுக்குமேல் கால்வைத்து நடப்பவள் போல தேரிறங்கிச் சென்று அரண்மனைப்படிகளில் ஏறினாள். அருள்புரிபவள் போல ஹிரண்யபாகுவையும் மூதரசியையும் கண்டு புன்னகைத்து முறைப்படி வணங்கினாள். அவளுடன் தேரிறங்கி வந்த ஆடுகள் சூழ்ந்திருந்த திரளையும் முரசொலிகளையும் அரண்மனைவிரிவையும் அறியாதவை போலிருந்தன. அவை மட்டுமே அறிந்த காடு ஒன்றில் அவை அசைபோட்டபடி சிலம்பிய குரலெழுப்பியபடி நடந்தன.

“இவள் முடிமன்னர் பணியும் பேரரசி. இவள் அருளால் நம் மைந்தன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான்” என்றார் ஹிரண்யபாகு. “ஆம், நாம் இவள் நோக்கில் எளியோர். ஆனால் இவள் வயிற்றில் அவனுக்கொரு மைந்தன் பிறந்தால் அவன் மன்றில் எழுந்து நின்றாலே போதும், குடிமுடிகள் தலைவணங்கும். கோல்கள் தாழும்” என்றாள் மூதரசி. அரண்மனையே அவளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதை மூதரசி கண்டாள். பேசாது நின்ற வீரர் விழிகளிலும் அவளே ஒளிவிட்டாள் என்பதை உணர்ந்தாள்.

அரண்மனையில் அவளுடன் வாழ்வதற்கு ஓர் அணிமண்டபத்தை புரூரவஸ் அமைத்தான். அதில் அழகிய மங்கையர் மட்டுமே பணிபுரியும்படி வகுத்தான். கவிதையும் இசையும் நடனமும் மதுவும் இன்னுணவும் காதலின் களி சிறகோய்ந்து மண்ணுக்கு வந்த தருணங்களில் வந்து இணைந்துகொண்டு அவனை மீண்டும் எழச்செய்தன. மண்ணில் கால்தொடுவதே உந்தி விண்ணுக்கு எழுவதற்காகத்தான் என அவன் எண்ணினான்.

அவனை பிறர் நோக்குவதும் அரிதாயிற்று. கதிரையும் நிலவையும் காற்றையும் பனியையும் மழைச்சாரலையும் அவன் அக்காதலின் பகுதியென்று மட்டுமே அறிந்தான்.வானும் மண்ணும் அக்காதலின் களங்கள் என்று மட்டுமே பொருள்சூடின. அவள் அனைத்துமாகி அவனைச் சூழ்ந்திருந்தாள். களித்தோழியாகி சிரித்தாடினாள். குழவியென்றாகி அவன் உளம் குழையச்செய்தாள். அன்னையென்று ஆகி மடியிலிட்டாள்.

காதலில் பெண்ணின் அத்தனை தோற்றங்களும் காதலென்றேயாகி வெளிப்படுகின்றன. சழக்குச்சிறுமகள் என, வஞ்சமகளென, சினக்கொற்றவை என எழுந்து அவனை காய்ந்தாள். அவன் சிறுத்துச் சுருங்க அணைத்து மீண்டெழச்செய்தாள். விலகுதல்போல அணுகுவதற்கு உகந்த வழி பிறிதில்லை. விலகியணுகும் ஆடல்போல காமத்துளியை கடலாக்கும் வழியும் ஒன்றில்லை.

எத்தனை அழகிய சிறுமைகள். அறுந்துதிர்ந்த சிறுமணி ஒன்றுக்கென பெரும்பேழைகள் நிறைய அணிகள் கொண்டவள் நாளெல்லாம் ஏங்கினாள். அதை மீட்டுக்கொடுக்காதவன் என அரசனை குற்றம்சாட்டி ஊடினாள். தோழியொருத்தி சூடிய பொன்னிழையாடை கண்டு முகம் சிவந்தாள். பாணினிக்குக் கொடுத்த சிறுபொருளை மும்முறை எண்ணி கணக்கிட்டாள். மூதன்னை சொன்ன சொல் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து சொல்லாப்பொருள் கொண்டாள். அவள் நோக்கிலும் நடையிலும் குறைகண்டாள்.

எத்தனை அழகிய மலர்தல்கள்! தெருவில் கண்ட கீழ்மகள் ஒருத்தியின் இடையிலமைந்த கரிய குழந்தையை முகம் மலர்ந்து அள்ளி எடுத்து முலைகள்மேல் சூடிக்கொண்டாள். அதன் மூக்கை தன் பட்டாடையால் துடைத்தாள். அணிந்த அருமணிமாலையைக் கழற்றி அதற்கு அணிவித்தாள். திருடி பிடிபட்டு கழியில் கட்டுப்பட்டிருந்தவனை அக்கணமே சென்று விடுவித்தாள். அவன் சவுக்கடிப்புண்ணுக்கு தானே மருந்திட்டாள். அரியணை அமர்ந்து கொடையளிக்கையில் கைகள் மேலும் மேலும் விரியப்பெற்றாள்.

தாயக்கட்டையென புரண்டுகொண்டே இருந்தாள். காவிய அணிகளுக்கு காட்டுப்பெண்ணென நின்று பொருள்வினவி நகைக்கச் செய்தாள். அதன் மையமென எழுந்த மெய்மையை பிறர் உன்னும் முன்னரே சென்றடைந்தாள். நாளெல்லாம் அணி புனைந்தாள். ஒரு சிறுகுறை நிகழுமெனில் உளம் குலைந்தாள். அணியின்றி மலர்ச்சோலையில் சென்று தனித்திருந்தாள். யாரிவள் என்று ஒவ்வொரு முறையும் எண்ணி குலையச்செய்தாள். எண்ணிய ஒவ்வொன்றையும் தானே அழித்து பிறிதொருத்தி என எழுந்தாள்.

பிறிதொன்றிலாத காமமே காமம் என்று அவன் உணர்ந்தான். காமத்திலாடுதல் பெண்களை பேரழகு கொள்ளச்செய்கிறது. பெண்ணழகு காமத்தை மீண்டும் பெருக்குகிறது. புரூரவஸ் ஏழு பிறவிக்கும் இயன்ற இல்லின்பத்தை அவ்வேழு ஆண்டுகளில் அடைந்தான் என்றனர் கவிஞர். அவள் அவனுடைய ஏழு மைந்தரை பெற்றெடுத்தாள். ஆயுஸ், ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ், ரயன், விஜயன், ஜயன் என்னும் மைந்தர் அவன் அரசுக்கு உரியவர்களெனப் பிறந்தனர். மைந்தருக்கென நோற்று அவர்கள் அரண்மனையைத் துறந்து காடேகி வேள்விநிகழ்த்துகையில் ஈன்ற தலைமைந்தனாகிய ஜாதவேதஸ் தந்தையின் மெய்மைக்கு வழித்தோன்றல் என்று ஆனான்.