குருதிச்சாரல் - 9
பகுதி இரண்டு : பெருநோன்பு – 3
அறைக்குள் அசலை நுழைந்தபோது பானுமதி மான்தோல் விரிப்பில் அமர்ந்து மடியின்மேல் மென்பலகையை வைத்து அதில் பரப்பப்பட்ட ஓலைகளை கூர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து நோக்கி “வாடி” என்று புன்னகைத்து அருகே விரிக்கப்பட்ட மான் தோல் இருக்கையை காட்டினாள். அசலை சுவரில் சாய்ந்தமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டாள். பானுமதி மேலும் சுவடிகளை படித்து முடித்து கட்டிவைத்துவிட்டு “நாம் அனுப்பிய ஓலைக்கு மறுமொழிகள் வந்துள்ளன” என்று சொன்னாள். “ஆம், அனைத்தும் சுருளோலைகள், நோக்கினேன்” என்றாள் அசலை.
“பெரும்பாலான அரசர்கள் லட்சுமணனுக்கு மகள்கொடை அளிப்பதை தங்கள் பேறென்றே மறுமொழி அளித்திருக்கின்றனர். ஒரு சில அரசர்கள் மட்டும் தங்கள் குலக்குழுக்களைக் கூட்டி உசாவிவிட்டு மறுமொழி அளிப்பதாக எழுதியுள்ளார்கள். மறுத்து எவருமே எழுதவில்லை” என்றாள் பானுமதி. அசலை “ஆம், அனைவரும் ஒரு பெரும்போரை எதிர்பார்க்கிறார்கள். அதில் அஸ்தினபுரி வெல்லுமென்பதில் எவருக்கும் ஐயமில்லை. சத்ராஜித்தாக மும்முடி சூடப்போகும் துரியோதனரின் பட்டத்து இளவரசருக்கு தன் மகளை கொடுக்க விரும்பாத அரசர் எவரும் இருக்கமாட்டார்கள்” என்றாள்.
பானுமதி போர் குறித்த சொல்லால் சற்று உளம் சீண்டப்பட்டு முகம் சுளித்தாள். ஆனால் உடனே கடந்துவந்து புன்னகைத்து “உடனடியாக மைந்தரில் மூத்தவர்கள் அனைவருக்குமே பெண்நோக்கி மணம் செய்வித்துவிடலாம் என்று நினைக்கிறேன். லட்சுமணனின் மணத்தூதுக்கு அரசர்கள் எந்த வகையில் எதிர்வினையாற்றுவார்கள் என்றுதான் சற்று தயங்கினேன். இது நம்பிக்கையளிக்கிறது” என்றாள். “அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு மகள்கொடை அளிக்க எவர் தயங்க வேண்டும்?” என்றாள் அசலை. “அது நீயும் நானும் எண்ணுவது. நம் மைந்தரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் சித்திரம் பிறிதொன்று. கல்லாதவர்கள், கடும்போக்கு கொண்டவர்கள், மானுட உடல் கொண்ட விலங்குகள்… சூதர்கள் சொல்லி பரப்பிவைத்திருக்கிறார்கள்” என்றாள் பானுமதி.
அசலை புன்னகைத்து “ஒரு போரில் வென்றுவிட்டார்கள் என்றால் அதுவேகூட அவர்களுக்கு புகழ்சேர்க்கும். ஏனெனில் பாரதவர்ஷத்தின் பெரும்பாலான அரசர்கள் அத்தகையவர்கள்” என்றாள். பானுமதியும் சிரித்து “ஆம், ஒருவகையில் அது உண்மை” என்றபின் கைகளைத் தூக்கி சோம்பல்முறித்து “அமைச்சரை அழைத்து பிற அனைவரின் இயல்புக்கேற்ப பெண்கள் எங்குள்ளனர் என்று பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இப்போது வந்திருக்கும் ஒப்புதல் ஓலைகளிலிருந்து லட்சுமணனுக்கு உகந்த பெண் யாரென்று தேர்ந்தெடுக்க வேண்டும். கலிங்க அரசனின் மகள் சௌபர்ணிகை அழகி. நிமித்திகர் அவளுக்கு பன்னிரண்டு மைந்தர் பிறப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். கலிங்கம் நமது நட்பு நாடும்கூட” என்றாள்.
அசலை புன்னகைத்தாள். பானுமதி “மாளவ அரசமகள் சுப்ரதீபையை அடுத்ததாக எடுத்து வைத்திருக்கிறேன். படைக்கலம் பயின்றவள். அங்கு அவையமரும் வழக்கமும் அவளுக்கு இருக்கிறது” என்றாள். “காந்தாரத்திலிருந்தும் ஓலை வந்துள்ளது. அவனுக்கு இரண்டு துணைவியர் அமைவதை தவிர்க்க முடியாது. ஒருத்தி பாரதவர்ஷத்தின் ஷத்ரிய குலத்திலிருந்தும் இன்னொருத்தி காந்தார நாட்டின் தொல்குடியிலிருந்தும். இரு வல்லமைகளாக அவர்கள் அவன் பின்னால் நிற்க வேண்டும். என்றிருந்தாலும் காந்தாரமே அவனுடைய அடித்தள வல்லமை.”
அசலை “ஆம், அதையும் எண்ணிப் பார்க்கவேண்டியதுதான்” என்றாள். பானுமதி சுவடிகளை பேழையில் இட்டு அப்பால் நீக்கிவிட்டு “ஏன் ஆர்வமின்றி பேசுகிறாய்?” என்றாள். “இல்லையே” என்றாள் அசலை. “மைந்தனின் திருமணம் எனும்போது அன்னைக்கு வரவேண்டிய உளஎழுச்சி உனக்கு ஏற்படவில்லை” என்றாள் பானுமதி. “அவ்வாறு ஒரு உளஎழுச்சி ஏற்படுமா என்ன?” என்று அசலை கேட்டாள். பானுமதி சில கணங்களுக்குப்பின் முகம் மாறுபட “உருவாகாதுதான். அவனுக்கு மணம்தேவை எனும் எண்ணம்கூட என்னில் எழவில்லை. அதை தந்தை சகுனிதான் என்னிடம் சொன்னார்” என்றாள்.
“ஆமாம், நானும் அப்போது இருந்தேன்” என்றாள் அசலை. “அவர் சொன்னது வேறு பொருளில். போர் நிகழ்வதற்குள் மைந்தர் அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அவரிடம் கணிகர் சொல்லியிருக்கிறார். மைந்தரின் கொடிவழியினர் அவர்களின் மகளிர் கருவில் உருவான பிறகு அவர்கள் களம் காணலாம் என்னும் பொருளில். அவர் அவ்வாறு சொன்னதே எனக்கு கடும்கசப்பை உருவாக்கியது. என் முகத்தைப் பார்த்ததும் அவர் சொல்மாற்றிக்கொண்டார். நாம் படை திரட்டிக்கொண்டிருக்கிறோம் அரசி, இளவரசர்களுக்கு மணம் செய்விப்பதனூடாக அரசர்களைத் திரட்டி குருதியுறவினூடாக இறுக்கி செறிவாக்கிக்கொள்ள முடியும் என்றார். ஆம் அது நன்று என்று சொல்லி திரும்பிவந்தேன்.”
“உண்மையில் ஓரிரு நாட்கள் அவ்வெண்ணத்தையே என் உள்ளத்தில் எழவிடாமல் ஒதுக்கினேன். தந்தை சகுனி சொல்லியனுப்பினார் என்று சேடியர் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். உகந்த முறையில் அனைவருக்கும் ஓலை செல்லட்டும் என்று ஓர் ஆணையை பிறப்பித்துவிட்டு அதை அப்படியே மறந்துவிட்டேன். இன்று கலியின் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மீள்கையில்தான் என்னென்ன ஓலைகள் வந்துள்ளன என்று பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. இவற்றை தந்தை சகுனியின் அமைச்சுநிலையிலிருந்து வரவழைத்தேன்” என்றாள். அசலை பெருமூச்சுவிட்டாள். “என்னடி?” என்றாள். “மணம் என்பது மங்கலம். ஆனால் இன்று அதைப்பற்றிய பேச்சு குறைமங்கலமாகவே காதில் ஒலிக்கிறது.” பானுமதி “ஏனடி?” என்றாள். அசலை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “சொல்லடி” என்றாள் பானுமதி.
“இன்று காலைமுதலே என்னில் ஒரு நிலைகுலைவு இருந்தது. புலரியில் கனவில் மைந்தனை பார்த்தேன். அவனை அழைத்து பார்த்துவிடவேண்டும் என்று எண்ணினேன். அந்நினைவுடன்தான் கலி ஆலயத்திற்கு வந்தேன். அவன் என்னை பார்க்க வந்தான். உணவு பரிமாறி அனுப்பினேன். ஆனால் அவன் சென்றபின் அப்படியே படுத்துவிட்டேன். உள்ளத்திலிருந்தும் உடலிலிருந்தும் அனைத்து விசைகளும் ஆற்றலும் ஒழுகி மறைய, இமையைக்கூட அசைக்க முடியாதென்று தோன்றியது. மஞ்சத்தில் பிணமெனப் படுத்திருந்தேன். நீங்கள் அழைக்கும் செய்தி வந்தபோது சேடியர் பலமுறை என்னிடம் சொல்லவேண்டியிருந்தது.”
பானுமதி அவளை கூர்ந்து நோக்கி “நாம் எதை அஞ்சுகிறோம்?” என்றாள். அசலை “நாம் அதைப்பற்றி பேசவேண்டாமே” என்றாள். “அஞ்சுவதிலிருந்து ஒளிந்தால் அது கரவுப்பாதைகளினூடாக வந்து நம்மை சூழ்ந்துகொள்ளும். அச்சமூட்டுவதை விழிதூக்கி நேருக்கு நேர் நோக்குவதே நன்று என்று இளமையிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது” என்றாள் பானுமதி. அசலை “அச்சம் ஒன்றுமில்லை” என்றாள். “புரிந்துகொள்ளமுடியாத ஒரு வெறுமை, அல்லது பொருளின்மை. அல்லது உள்ளீடின்மை என்று அதை சொல்லவேண்டுமா? எப்படி சொன்னாலும் எஞ்சும் ஓர் உளநிலை அது.”
பானுமதி கைகளை மார்பில் கட்டியபடி பின்னுக்கு சாய்ந்தாள். இருவருக்கும் இடையே பொழுது கடந்துசென்றது. சிறிய அசைவொன்றில் உயிர்கொண்டு திரும்பிப்பார்த்த பானுமதி “இன்று கலிதேவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?” என்றாள். “நானா?” என்றாள் அசலை. “ஆம், நீதான். என்ன வேண்டிக்கொண்டாய்?” என்றாள் பானுமதி. “என் மைந்தனுக்காக.” பானுமதி “மைந்தனுக்காக மட்டுமா?” என்றாள். அசலை அவள் விழிகளைப் பார்த்து “ஆம்” என்றாள். பானுமதி “நான் என் மைந்தனுக்காகவும் உடன்பிறந்தாருக்காகவும் மட்டுமே வேண்டிக்கொண்டேன்” என்றாள். “அதுவே நம் இயல்பு. நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்று அசலை சொன்னாள்.
பானுமதி பெருமூச்சுடன் “ஒவ்வொரு நாளும் இந்த அரண்மனை சுருங்கிச் சுருங்கி வருகிறது. இதன் சுவர்கள் இருபுறமும் அழுத்தி விலாவெலும்புகள் நொறுங்கும்படி விசை கொள்கின்றன” என்றாள். “நான் நன்கு உறங்கி பதினான்காண்டுகளாகின்றன. உடலும் உள்ளமும் களைத்து பின்னிரவில் சற்றே துயில்வேன். முன்புலரியில் ஏதேனும் ஒரு கனவில் விழித்தெழுவேன். பின்னர் நெடுநேரம் நெஞ்சழிந்து அமர்ந்திருப்பேன்” என்றாள் அசலை. “இன்று எனக்கும் ஒரு கனவு. எப்போதும்போல கொடுங்கனவு” என்றாள் பானுமதி.
அசலை பேசாமல் அமர்ந்திருந்தாள். “என்ன கனவு என்று கேட்கமாட்டாயா?” என்றாள் பானுமதி. அசலை அவளை நோக்கி திரும்பவேயில்லை. சில கணங்கள் காத்திருந்துவிட்டு பானுமதி தன் விழியை திருப்பிக்கொண்டாள். அசலை எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றாள். “ஏனடி இந்த ஓலைகளை நீ பார்க்கவேண்டாமா?” என்றாள் பானுமதி. “இதில் எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது. இவ்வோலைகள் அனைத்தையும் காந்தார அரசரிடமே அளித்துவிடுவோம். மைந்தருக்குரிய இளவரசியை அவர் தெரிவு செய்யட்டும்” என்றாள் அசலை. “ஏன்?” என புருவம் சுளித்து பானுமதி கேட்டாள். “நாம் தெரிவுசெய்வதில்தான் மங்கலப்பிழை உள்ளது.”
பானுமதி விழிநிலைக்க நோக்கி அமர்ந்திருந்தாள். “நாம் செய்யவேண்டியது மைந்தரின் அன்னையென்று அவை சென்று நிற்பதை மட்டுமே” என்றாள் அசலை. மீண்டும் ஓர் அமைதி உருவாகியது. விண்ணிலிருந்து எடைமிக்கதும் விழியறியாததுமான ஒரு அரக்கு உள்ளே பொழிந்து அனைத்தையும் கவ்வி நிறுத்திவிட்டதைப்போல. அங்கிருக்கும் அனைவரும் அதில் சிக்கிச் சிறகடித்துக்கொண்டிருக்கிறார்கள். நெடுநேரம் கழித்து பானுமதி மீண்டுவந்து “மைந்தன் எப்படி இருக்கிறான்?” என்றாள். “அவனுக்கென்ன? வழக்கம் போல உணவும் களியாட்டும்” என்றாள் அசலை. பானுமதி புன்னகைத்து “நல்லூழ்கொண்டவர்கள். அவர்கள் துயரென்பதையே அறிந்ததில்லை” என்றாள்.
“ஆம், நானும் அதையே எண்ணினேன். மானுடர்க்குரிய உளச்சோர்வும் தனிமையும் வெறுமையும்கூட அவர்களிடம் உருவானதில்லை. எப்போதும் மாபெரும் பறவைக்கூட்டம்போல கலைந்து சுழன்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றாள் அசலை. பானுமதி “அவர்கள் இங்கு அரசர் பிறந்தபோது வந்து சூழ்ந்த காகங்களின் மானுடப்பிறப்பு என ஒரு சூதர்சொல் உண்டு” என்றாள். அசலை “எனக்கு அவர்களைப் பார்க்கும்போது ஏரியில் அலைகள் அடித்துக்கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது. ஒரு கணமும் ஓயாது ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் ஒன்றேதான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. மீண்டும் கூர்ந்து நோக்கினால் ஓர் அலைபோல் பிறிதொன்று இல்லை” என்றாள்.
பானுமதி உரக்க நகைத்து “நல்ல ஒப்புமையடி. இதை ஏதேனும் சூதனிடம் சொல். பாட்டில் வைப்பான்” என்றாள். அசலை சிரித்தபடி “வருகிறேன்” என்று திரும்பியபோது கதவு திறந்து பானுமதியின் அணுக்கச்சேடி சத்யை வந்து தலைவணங்கினாள். பானுமதி “என்ன?” என்றாள். “இளைய பால்ஹிகர் தங்களை சந்திக்கும்பொருட்டு பொழுதுகோரியிருக்கிறார்” என்றாள் சத்யை. “யார், பூரிசிரவஸா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம், இன்று காலைதான் அவர் நகர் நுழைந்திருக்கிறார். அவையில் தோன்றி முறைமைகளை முடித்தபின் அரசரையும் காந்தாரத்து அரசரையும் சந்தித்திருக்கிறார். இப்போது ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். மாலையில் தங்களை சந்திக்க முடியுமா என்று பொழுது கோரினார்.”
“தனியாகவா?” என்று பானுமதி கேட்டாள். “இல்லை, இளைய அரசியும் கூடவே இருக்கலாம் என்று அவரே சொன்னார்” என்றாள் சத்யை. பானுமதி அசலையை பார்த்துவிட்டு “பெண்களை நன்றாக பயின்றவர்” என்றாள். அசலை புன்னகைத்தாள். “என்னடி?” என்றாள் பானுமதி. “பெண்களைப் பயில்பவர்கள் அவர்களை அடைவதே இல்லை” என்றாள் அசலை. “பிறகு?” என்றாள் பானுமதி சிரிப்பு தெரிந்த முகத்துடன். “விற்கலை பயில்பவர்களே பறவைகளை அடைகிறார்கள். பறவைகளை நோக்குபவர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள்” என்றாள் அசலை. பானுமதி உரக்க சிரித்தாள். அவள் சிரிக்க விரும்பியது தெரிந்தது.
சத்யை “நான் என்ன சொல்ல?” என்றாள். “எதன்பொருட்டு சந்திப்பு என்று சொன்னாரா?” என்றாள் பானுமதி. “இல்லை அரசி, தனிப்பட்ட சந்திப்பென்று மட்டுமே சொல்லப்பட்டது” என்றாள் சத்யை. “இன்று மாலை புறத்தோட்டத்தில் சந்திக்கலாம் என்று அவரிடம் சொல்” என்று பானுமதி சொன்னாள். சத்யை வணங்கி வெளியே சென்றாள். “எதற்காக என நினைக்கிறீர்கள்?” என்றாள் அசலை. “தெரியவில்லை. பெரும்பாலும் மைந்தர்களின் மணம்குறித்ததாக இருக்கும்” என்றாள் பானுமதி.
அசலை “இல்லை, வேறேதோ ஒன்று” என்றாள். பானுமதி “வேறென்ன?” என்றாள். அசலை “அவர்தான் இங்கே போருக்கான அனைத்தையும் ஒருங்கமைக்கிறார். தூதுகள் செல்கிறார். அது குறித்த ஒன்று. அக்கையே, அது பெரும்பாலும் வரவிருக்கும் போர்குறித்தே” என்றாள். பானுமதி எண்ணி தலையசைத்து “ஆம்” என்றாள்.
பூரிசிரவஸ் அவர்களை நோக்கி சீரான நடையில் வருவதை அசலை நோக்கினாள். அவன் அரசமுறையாக வருவதை அந்நடை வழியாக தனக்கே சொல்லிக்கொள்கிறான் எனத் தோன்றியது. அவர்களை அணுகி முறைப்படி தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசியையும் இளைய அரசியையும் வணங்குகிறேன். இந்நாள் எனக்கு சிறப்புற அமைந்துள்ளது. என் குடியின்பொருட்டும் வணக்கங்களை தெரிவிக்கிறேன்” என்றான். பானுமதி “மலைநாட்டின் இளவரசரை சந்திப்பது எனக்கும் நற்பேறு” என்றாள். பூரிசிரவஸ் அவள் காட்டிய இருக்கையில் கால்களைச் சேர்த்து முறைப்படி அமர்ந்து “நான் தங்கள் பொழுதை வீணடிக்க விழையவில்லை, அரசி. என் செய்தியை சொல்லிவிடுகிறேன்” என்றான். பானுமதி “சொல்க!” என்றாள்.
“சில நாட்களுக்கு முன்னர் பால்ஹிகத்திலிருந்து வரும்போது வழியில் ஒரு சாவடியில் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய அரசியும் சிபிநாட்டு மகளுமான தேவிகையை சந்தித்தேன். குருஷேத்ரத்தில் புண்டரீகம் என்னும் வாவியில் நீராடி பூசனைசெய்து திரும்பிக்கொண்டிருந்தார்கள்.” பானுமதி “ஆம், அவர்களுக்கும் உங்கள் அரசுக்குமான குடித்தொடர்புகளை அறிவேன்” என்றாள். அச்சொல்லில் இருந்தே அவள் குறிப்பதை உணர்ந்துகொண்ட பூரிசிரவஸ் சற்று முகம்சிவந்து மெல்லிய மூச்சுத்திணறலுக்கு ஆளானான். “ஆம், அவர்களை நான் முன்னரே அறிவேன்” என்றான்.
“புண்டரீகத்திற்கு எதற்காகச் சென்றாள்?” என்றாள் பானுமதி. “அங்கே வாவிநீராடி அன்னையை வணங்கினால் மைந்தர்நலம் திகழும் என அவர் நாட்டு நாகசூதன் கணித்துரைத்திருக்கிறான்” என்றான் பூரிசிரவஸ். “அனைத்து அன்னையரும் மைந்தர்களின் பிறவிநூல்களுடன் நிமித்திகரை அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் பானுமதி. “அரசி, சிபிமகள் என்னிடம் சொன்னதை சொல்கிறேன். அவர் மைந்தர் போரிலிருந்து மீளமாட்டார் என்பது நாகசூதனின் குறிச்சொல். இருதரப்பிலும் மைந்தர்களே உயிரிழப்பார்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை என்று அக்கணமே நானும் உணர்ந்தேன்.”
“ஏனென்றால் இது நிலவுரிமைக்கான போர். நாளை தன் கொடிவழிகளுக்கும் இதே நிலப்பூசலின் இடர் எழக்கூடாதென்றே இருசாராரும் எண்ணுவார்கள். அரசி, போர் நிகழ்ந்தால் முதல் அம்புகளே இளையவர்களை நோக்கித்தான் தொடுக்கப்படும்” என்று பூரிசிரவஸ் தொடர்ந்தான். “பெருமழை என கூடிப்பெருகி சூழ்ந்து வந்துகொண்டிருக்கிறது போர். இதுவரை பாரதவர்ஷத்தில் அத்தனை அரசர்களும் இரு தரப்பிலாக அணிதிரண்டதில்லை. இந்நிலம் இரண்டாகப் பிளந்து மோதிக்கொள்ளவிருக்கிறது.” அசலை “ஆனால் அதை ஒருக்கூட்ட முயன்றவர்களில் நீங்கள் முதன்மையானவர்” என்றாள்.
“மெய்தான். கலிங்கம், வங்கம், பௌண்டரம், கூர்ஜரம், மாளவம், அவந்தி, காமரூபம், அயோத்தி, கோசலம், விதர்ப்பம் என அனைத்து நாடுகளுக்கும் மன்னர்பொருட்டு தூதுசென்றவன் நானே. நம் தரப்பு வலுவாக ஆவதே போர் தவிர்க்கப்படுவதற்கான சிறந்த வழி என எண்ணினேன். வெல்லற்கரிய தரப்பாக நம்மை நிறுத்திக்கொண்டால் அனைத்தும் அடங்கிவிடுமென்றுதான் அனைவரையும் நம் தரப்புக்கு கொண்டுவந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.
“இன்று என் கணிப்புகள் இரு வகையில் பிழையாகிவிட்டன என உணர்கிறேன். நான் இளைய யாதவர் என்னும் பேராற்றலை கணிக்கத் தவறிவிட்டேன். இந்நாட்டில் ஷத்ரியர்களுக்கு மட்டுமே பயின்ற படைகள் உள்ளன என்றும் அவர்களே ஒப்பந்தங்களின்படி இணைந்து போரிடமுடியும் என்றும் எண்ணினேன். அசுரரும் நிஷாதரும் ஒன்றிணைந்த படைகளாக ஆன வரலாறே பாரதவர்ஷத்தில் இல்லை. அதை இளைய யாதவர் நடத்திக்காட்டிவிட்டார். உருவாகி வந்துள்ள பாண்டவப் படையும் நமக்கு பெரும்பாலும் நிகரானதே” என்றான் பூரிசிரவஸ். “அதோடு அவர்களிடமிருப்பவர்கள் அசுரர்களும் நிஷாதர்களும். அவர்கள் களத்தில் யுதிஷ்டிரரின் ஆணைகளை நிறைவேற்றுவர் என எண்ணவேண்டியதில்லை. நம் குழந்தைகளை அவர்கள் வெறும் அம்பிலக்காகவே எண்ணுவர்.”
பெருமூச்சுடன் “நிலைமை இதுதான், அரசி. நீங்கள் இதை எந்த அளவில் உணர்ந்துள்ளீர்கள் என அறியவில்லை. ஆகவேதான் நான் வந்தேன். இன்றுகூட அவர்கள் வெல்லும் நிலையில் இல்லை. ஆனால் அவர்களால் நமக்கு பேரழிவை அளிக்கமுடியும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் வென்றுவிட்டோமென்றும் எவ்வகையிலும் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ். பானுமதி “நாம் வெல்லமுடியாது” என்றாள். “ஏன்?” என அவன் திகைப்புடன் கேட்டான். “ஏனென்றால் அவரை மானுடர் எவரும் வெல்லமுடியாது” என்றாள் பானுமதி. “அத்துடன் அவளுடைய சொல் நின்றுவெல்லும் பெருந்தழல்.”
பூரிசிரவஸ் சொல்லவிந்து அமர்ந்துவிட்டான். அசலை “அவள் என்ன சொன்னாள்?” என்றாள். பூரிசிரவஸ் மீண்டுவந்து “இப்போரை தவிர்க்கவேண்டும் என்றார். இது ஆண்களின் போர், ஆனால் அழிவும் துயரும் பெண்களுக்கே மிகுதி. ஆகவே அவர்கள் போரைத் தவிர்க்க முயன்றாகவேண்டும் என்றார். பேரரசி காந்தாரியும் நீங்களிருவரும் இளவரசி துச்சளையும் அங்கநாட்டு அரசியும் இதில் இணைந்துகொள்ளவேண்டும். என்ன செய்யலாமென்று எண்ணி இயன்ற எல்லா வழிகளிலும் முயலவேண்டும். தங்கள் மைந்தரைக் காப்பதே அவர்களின் முதன்மைக்கடன்” என்றான்.
“அதை முதலில் எண்ணவேண்டியவர் பாஞ்சாலத்து அரசி” என்றாள் அசலை. “ஆம், அதையே நானும் சொன்னேன். பாஞ்சாலத்தரசியிடம் சென்று பேசுமாறு சொல்லி சிபிமகளை அனுப்பினேன். உங்களிடம் சொல்லும்பொருட்டு நான் இங்கு வந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “பால்ஹிகரே, பாஞ்சாலத்தரசி பகையொழிந்தாலும் அவள் சொன்ன வஞ்சினம் மறையாது. சொல்லப்பட்ட சொற்கள் சொன்னவர்களுக்குரியவை அல்ல. அவை பிறந்த மைந்தர்போல. கருவறை குழவிகளை திரும்ப உறிஞ்சிக்கொள்ள முடியாது” என்றாள் பானுமதி. பூரிசிரவஸ் அவள் சொற்களை நம்பமுடியாதவன்போல பார்த்தான்.
“அந்தச் சொற்கள் நின்றிருக்கும். முழுமைகூடிய எதுவும் தெய்வமே என்கின்றன நூல்கள். நன்றோ தீதோ, அன்போ பகையோ. அச்சொற்கள் பகைகொண்டெழுந்த தெய்வங்கள். அவை உரிய குருதிபலி கொள்ளாமல் அமையா” என்று பானுமதி சொன்னாள். பூரிசிரவஸ் வாய்நீர் விழுங்கும் ஒலி மட்டும் கேட்டது. அவன் இமையசையும் ஒலி கேட்கிறதா என அசலை எண்ணினாள். “அரசி…” என அவன் தொண்டையைக் கமறியபடி அழைத்தான். “அவ்வஞ்சினத்தில்கூட நம் மைந்தர் குறிக்கப்படுவதில்லை.” பானுமதி “ஆம், நம் மைந்தர் அந்தப் பன்னிரு படைக்களத்தில் இல்லை” என்றாள். “அதனால் என்ன? இது அவர்களின் தந்தையரின் போர். அவர்கள் களம்புகாதொழிந்தால் அவர்களுக்கு என்ன மதிப்பிருக்கமுடியும்?”
பூரிசிரவஸ் “அரசி, அவ்வஞ்சினம் அவ்வண்ணமே நிகழட்டும். அதற்கும் போருக்கும் என்ன தொடர்பு?” என்றான். “போர் அந்த வஞ்சினத்துக்காக அல்ல. அது ஒரு முகம் மட்டுமே. போர் நிகழ்வது மண்ணுக்காக. அஸ்தினபுரி மண்ணுக்காக மட்டும் அல்ல, பாரதவர்ஷ மண்ணுக்காக. மண்ணை ஆளும் கொள்கைகள் போரிடுகின்றன. அப்போரை நாம் தவிர்ப்போம். வஞ்சினத்தின்பொருட்டு நிகழும் போர் அவற்றுக்குரியவர் நடுவே நிகழ்க! பீமனும் அர்ஜுனனும் அரசரையும் இளையவரையும் சகுனியையும் தனிப்பட்ட முறையில் அறைகூவட்டும். நெஞ்சுபிளக்கட்டும், குருதியுண்ணட்டும். அத்தகைய போர்கள் முன்னரும் நிகழ்ந்துள்ளன இங்கு.”
“ஆம்” என்றாள் பானுமதி. “அதுவே நானும் சொல்லிவருவது. இப்பெரும்போர் தவிர்க்கப்படவேண்டும். இது மைந்தரை மைந்தருக்கு எதிராக நிறுத்தும் போர்.” பூரிசிரவஸ் “நான் நேரடியாகவே சொல்கிறேனே. பீமனின் கதையும் அபிமன்யூவின் அம்புகளும் நம் குலத்தை முற்றழிக்க எழுந்துள்ளன. நாம் அவற்றுக்கும் நம் மைந்தருக்கும் குறுக்காகச் சென்று நின்றாகவேண்டும்” என்றான். பானுமதி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “சொல்லுங்கள், அரசி. உங்கள் சொல்லுக்கு பெருமதிப்புண்டு” என்றான் பூரிசிரவஸ். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்றாள் பானுமதி. “நீங்கள் அரசரிடம் பேசுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, நான் அவரிடம் பேசமுடியாது” என்றாள் பானுமதி.
சற்றுநேரம் கழித்து “நீங்கள் பிதாமகர் பீஷ்மரிடம் பேசலாம். துரோணரிடமும் கிருபரிடமும் பேசலாம். இருவரும் இணைந்து பேரரசி காந்தாரியிடம் பேசலாம். அங்கர் நம் குரலை உணர்ந்தாரென்றாலே போர் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிட்டது என்றே பொருள்” என்றான் பூரிசிரவஸ். “இப்போரை எவராலும் எப்போதைக்குமாக தவிர்க்கமுடியாதென்று எனக்குத் தெரியும். மீண்டும் ஒரு தலைமுறைக்கு ஒத்திப்போடலாம். நம் கண்முன் நம் மைந்தர் இறப்பதை மட்டும் தவிர்க்கலாம்…” பானுமதி “அவர்கள் வாழவேயில்லை, பால்ஹிகரே. நான் எண்ணுவது அதை மட்டுமே” என்றாள்.
“இரண்டு தலைமுறைக்காலம் இப்போரை தள்ளிவைக்க பீஷ்மரால் இயன்றது. அவர்பொருட்டு நாம் மீண்டுமொருமுறை இதை செய்வோம். தன் குடி முழுதழிவதைக் காணும் தீயூழை அவருக்கு அளிக்காமாலிருப்போம்” என்றான் பூரிசிரவஸ். பானுமதி பெருமூச்சுவிட்டு “நான் பீஷ்மபிதாமகரிடம் பேசுகிறேன்” என்றாள். “நீங்கள் அரசரிடமும் பேசலாம்” என்றான் பூரிசிரவஸ். “அதனால் பயன் ஏதுமில்லை, பால்ஹிகரே. அதை நான் நன்கறிவேன்” என்றாள் பானுமதி. “போர் ஒத்திவைக்கப்படவேண்டும் என்றால் இறுதியாக எதை அளிக்கவேண்டியிருக்கும்? ஆகக் குறைந்த அளவில்?” என்றாள். பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் நிலம். அவர்கள் ஒப்புக்கொள்ளுமளவுக்கு சற்றேனும்” என்றான். “அது நிகழாது” என்றபடி பானுமதி எழுந்துகொண்டாள்.
பூரிசிரவஸும் எழுந்தான். “அங்கே தேவிகை பாஞ்சாலத்து அரசியிடமும் பிற அரசியரிடமும் பேசுகிறேன் என்று சென்றிருக்கிறார். அவருடைய கண்ணீரின் ஆற்றலை நான் நம்புகிறேன். அதைவிட பாஞ்சாலத்து அரசியின் உள்ளக்கனிவை.” பானுமதி மெல்ல புன்னகைத்து “அவள் கனிவாள் என்றே நான் எண்ணுகிறேன், பால்ஹிகரே. கனியாதது ஒன்றே. இளைய யாதவர் உள்ளம். அது கனியாதவரை ஒன்றும் நிகழாது” என்றாள். “அவர்…” என பூரிசிரவஸ் தடுமாறினான். “வெறும் போர்வீரர் அல்ல. அவர் சாந்தீபனி குருநிலையின் இன்றைய முதலாசிரியர்… அவரிடம் கனிவில்லையேல்…”
பானுமதி “மலரின் உச்ச வடிவமே வைரம்” என்றாள். அசலையின் தோளைத் தொட்டு “செல்வோமடி” என்றாள். திகைப்பு மாறா முகத்துடன் பூரிசிரவஸ் “விடைகொள்கிறேன், அரசி” என தலைவணங்கினான். அவன் செல்வதை நோக்கியபடி பானுமதி பெருமூச்சுவிட்டாள். “வா” என்றபடி பானுமதி நடக்க எடைமிகுந்து தலை தழைய அசலை உடன்நடந்தாள்.