குருதிச்சாரல் - 60

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 5

bl-e1513402911361காவலர்தலைவன் வந்து சேய்மையிலேயே நின்று தலைவணங்கி “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். சேடி விருஷாலியின் ஆடைகளை சீரமைத்தாள். இன்னொருத்தி அவள் படைப்பன்னம் உண்ட இலைகளையும் தொன்னைகளையும் அகற்றினாள். கூந்தலை சீரமைத்து விருஷாலி நிமிர்ந்து அமர்ந்தாள். தொலைவில் ஹரிதர் வழிநடத்த விகர்ணனும் குண்டாசியும் அவர்களுக்குப் பின்னால் தாரையும் நடந்துவருவதை அவள் கண்டாள். அவர்களுக்கு முன்னால் வீரன் ஒருவன் எதிரே எவரும் வராமல் விலக்கியபடி வந்தான். இடையில் அறிவிப்புச்சங்கு செருகியிருந்தான்.

தொலைவில் நடந்தணையும் அசைவிலேயே குண்டாசி மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிந்தது. ஆனால் அவன் நடையில் தளர்ச்சியும் கைகளில் நடுக்கமும் இருப்பதும் புலனாகியது. கூன்விழுந்து முன்வளைந்த மெலிந்த உடலில் தொங்கிய அணியாடைகள் முட்புதரில் சிக்கி காற்றில் உலைபவை என அசைந்தன. அவள் அவன் கால்களை நோக்கினாள். பறவைப்பாதங்கள் என அவை மெலிந்து எலும்பும் நார்களுமாக இருந்தன. ஒன்றன்பின் ஒன்றென வைக்கப்பட்ட சிற்றடிகள். அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள்.

கௌரவர் திரளில் ஒருவனாகத் தோன்றி, மெல்ல தனி முகம் திரட்டி, தெரிந்த விழிகள் என்றாகி விகர்ணன் அருகே வந்தான். அவர்களுக்குப் பின்னால் தலையாடையால் முற்றிலும் முகம் மறைத்து வரும் தாரையை அவளுடைய சிற்றடிகளிலிருந்து அவள் அறிந்தாள். சிட்டுக்கால் என்றே அரண்மனையில் அவளுக்குப் பெயர் என்று அவள் அறிந்திருந்தாள். “சிற்றுணவு, நிலைகொள்ளாமை, சிறகடிப்பு. இவள் என் சிட்டு” என்று காந்தாரி ஒருமுறை சிரித்தபடி சொன்னாள். ஆனால் பிற அரசியர் அச்சொல்லை களியாக்குதலாகவே பயன்படுத்தினர்.

கௌரவர் அரண்மனையை சிறுமியர் மன்று என்றே காளி சொல்வதுண்டு. “மூத்த அன்னை சத்யசேனைக்கே இன்னும் அகவை முதிரவில்லை. மடியில் வறுத்த பயறை கட்டிவைத்து எவரும் பார்க்காமல் வாயிலிட்டு மெல்கிறார். தசார்ணை ஒருமுறை கீழாடையை இரு கைகளாலும் பற்றியபடி சுழன்றாடியதை கண்டேன். அவர்களின் மருமகள்களை கைக்குழவி கால்கொண்டவர்கள் என்றே சொல்லவேண்டும்.” விருஷாலி சிரித்து “ஆம், அவர்கள் அனைவரிலுமுள்ள அந்த முதிராமை விந்தையானது” என்றாள்.

காளி கரிய வாய் திறந்து நகைத்து “அரண்மனையின் தடித்த சுவர்களுக்குள் காலம் நகர்வதில்லை. காலம் நுழைவது சூழ்ந்திருக்கும் பொருட்களின் மாற்றத்தினூடாக. மொழியின் அலைகளினூடாக. இரண்டும் அங்கு மாற வாய்ப்பில்லை. எனவே மூப்பின்றி சிறுமியரென்றே வாழ்ந்து விண்புகுவார்கள் அவர்கள். அங்கே விண்நுழைந்துள்ள அவர்களின் மூதன்னையரும் மூப்பில்லாதவர்களே” என்றாள். “மூப்பு கொள்பவர்கள் அங்கே சாளரம் வழியே வெளியே நோக்கி அமர்ந்திருப்பவர்கள் மட்டும்தான்.” ஏனென்றறியாமல் நெஞ்சு திடுக்கிட “என்ன பேச்சு… விடு!” என்று கைவீசி அச்சொல்லை விருஷாலி தவிர்த்தாள்.

தாரையின் முகம் அவள் நினைவில் எழவில்லை. எண்ணும்போதெல்லாம் அசலையும் பானுமதியும்தான் வந்துசென்றார்கள். மேலும் அருகே வந்தபோது தாரையின் நடையில் இருந்த சிறிய தாவலை அவள் பார்த்தாள். அரசியாக அத்தனை ஆண்டுகள் ஆகியும்கூட நீள்நடை அவளுக்குப் பழகவில்லை. சுமை கொண்டுசெல்லும் சிற்றூர் பெண்கள் போன்ற அத்தாவல் அவளுக்குள் புன்னகையை எழுப்பியது. மறுகணமே அவள் முகத்தை அருகெனக் கண்டாள். மிகச் சிறிய தாடையும், அழுந்திய கன்னஎலும்புகளும் கொண்ட கூர் முகம். உள்ளங்கையளவே அவள் முகம் இருப்பதை அவள் இருமுறை சொல்லி சிரித்திருக்கிறாள். மெலிந்த உதடுகள், கண்குழிக்குள் மின்னும் மணிகள்.

வெள்ளெலி என்று சில அரசியர் அவளை சொல்வதுண்டு. சிறுமியருக்குரிய கீச்சுக்குரல். உணர்வுகள் கொந்தளித்து உருமாறிக்கொண்டே இருக்கும். பேசும்போது எவராயினும் எட்டி கைகளை பற்றிக்கொள்ளவும் அக்கையை தன் நெஞ்சின்மேல் வைத்து தலைசரித்து சொல்லாடவும், உணர்வு மீதூறும்போது கட்டிக் கொள்ளவும், தோளில் முகம் புதைக்கவும் அவளால் இயலும். அரசியென்று ஆவது உடலை பிற உடல்களிலிருந்து அயலென்று ஆக்குவதுதான். உடலுக்குமேல் சித்தத்தின் வேலியொன்றை கட்டிக்கொள்வது அது. அரசியென தன்னை தடுத்துக்கொள்ளாமையால் அவள் அகவைமுதிர்வு கொள்ளக்கூடும். ஆனால் அவர்களில் அவளே என்றும் சிறுமி. தன்னைச் சூழ்ந்து பிறிதொன்றால் அவள் வேலி கட்டிக்கொண்டிருக்கிறாள். ‘சுவர்களால் மட்டுமல்ல, வானத்தாலும் அரணிட்டுக்கொள்ள இயலும்’ என்ற காளியின் சொற்களை நினைவுகூர்ந்தாள்.

விகர்ணன் அருகே வந்து தலைவணங்கி “அங்கநாட்டின் அரசியை சந்திக்கும் நற்பொழுதுக்காக தெய்வங்களுக்கு நன்றி கூறுகிறேன். நானும் என் இளையோனும் துணைவியும் தங்களை சந்திக்கும்பொருட்டு அஸ்தினபுரியிலிருந்து வந்திருக்கிறோம். இப்பொழுதை பரிசெனப் பெற்றோம்” என்றான். “நலம் சூழ்க!” என்று அவள் அவனை வாழ்த்தினாள். குண்டாசி தளர்ந்த குரலில் “இத்தருணத்திற்கு என் முன்னோருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அரசி. தங்களை இவ்வாறு ஆலயத்தில் காக்க வைத்ததற்கு பொறுத்தருளவேண்டும்” என்றான். “ஆலயம் இனியோரை காண்பதற்கு உகந்த இடமல்லவா?” என்றாள் விருஷாலி. “ஆலயத்தில் பிறரை தாள்தொடலாகாது என்று நெறி. எனவே உள்ளத்தால் தொடுகிறேன், அரசி” என்றான் குண்டாசி. அவள் புன்னகைத்து “உள்ளத்தால் உன் தலைதொடுகிறேன், இளையோனே” என்றாள்.

தாரை அருகே வந்து வணங்கி “அருள்புரிக, அன்னையே!” என்றாள். அவள் தாரையை இழுத்து தன் தோள்தொட்டு அணைத்துக்கொண்டாள். “எப்படியடி இருக்கிறாய்? அரண்மனை இன்னும் சலிக்கவில்லையா உனக்கு? அண்மையில் மச்சநாடு சென்றாயா?” என்றாள். தலையிலிருந்து ஆடை நழுவி விழ, சிறிய முகத்தை தூக்கி ஒளிரும் கண்களுடன் புன்னகைத்தபடி தாரை “மச்சநாட்டிற்கு சென்று நோக்குகையில் நான் அறிந்த எதுவும் அங்கில்லை, அரசி. அஸ்தினபுரிக்கு பெண்கொடுத்த குடி என்பதனாலேயே தந்தை பிற மச்சர் குடி அனைத்திற்கும் தலைவராகிவிட்டார். அஸ்தினபுரியின் பொருட்டு அவர் கப்பம் கொள்கிறார். மூன்றடுக்கு மாளிகை கட்டியிருக்கிறார். புரவிகளும் யானைகளும் முற்றத்தில் நின்றிருக்கின்றன. ஆயிரம் அம்பிகள் சர்மாவதியில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று என்னிடம் பெருமையுடன் சொன்னார். ஆகவே சென்ற ஆறாண்டுகளாக நான் அங்கு செல்லவில்லை” என்றாள்.

பேசும்போது அவள் புருவங்கள் நெளிவதையும் உடல் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ப குழைவதையும் கண்டு சிரித்து “நன்று, நீ அவ்வாறே இருக்கிறாய். ஆயிரம் அம்பிக்கு தலைவனின் மகளாக மாறவேண்டியதில்லை” என்றாள். “இங்கு தங்களிடம் பேச வருவதாக இவர் சொன்னார். நானும் கிளம்புகிறேன் என்றேன். அதற்கு முறைமை இல்லை என்றார்கள். முறைமையை நான் வந்து சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லி தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டேன். கைபிடித்து இறக்கிவிட இயலாமல் தவித்தனர். கண்களை மூடி அமர்ந்துகொண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள் தாரை சிரித்துக்கொண்டே.

“உன்னைக் கண்டது நிறைவளிக்கிறது, சிட்டு” என்றாள் விருஷாலி. “என்னை இப்போது பரல் என்கிறார்கள்” என்று தாரை சிரித்தாள். “ஏன்?” என்றாள் விருஷாலி. “அது இளைய யாதவர் இவளைப்பற்றி சொன்னது. அதை இவளே அனைவரிடமும் சொல்லி பரப்பிக்கொண்டிருக்கிறாள்” என்றான் விகர்ணன். “நல்ல பெயர். பரல்போல் ஒளியுடன் இருக்கிறாய்…” என்று விருஷாலி சொன்னாள். “பரலைப்பற்றி ஒரு கதை உண்டு. பெரிய மீன்கள் அதை விழுங்க முடியாது. வாய்க்குள் சென்றால் கண்வழியாகவும் செவுள் வழியாகவும் வெளியே வந்துவிடும்” என்றாள் தாரை.

விருஷாலி உரக்கச் சிரித்து “நீ இன்று மாலை என்னுடனேயே தங்கு. தனி அரண்மனையில் அவர்கள் தங்கிக்கொள்ளட்டும்” என்றாள். தாரை “உங்கள் முதுசேடி, அவர் இருக்கிறாரா?” என்றாள். “காளியை சொல்கிறாயா?” என்றாள் விருஷாலி. “ஆம். அவருடன் நான் நிறைய உரையாடியிருக்கிறேன். ஒவ்வொரு சொல்லையும் நாம் அறியாத வேறேதோ கரவிடத்திலிருந்து அவர்கள் எடுக்கிறார்கள் என்று தோன்றும். உண்மையில் அவர்களுடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன்” என்று தாரை சொன்னாள்.

விகர்ணனை நோக்கி அவள் விழிதூக்க அவன் அதை புரிந்துகொண்டு மேலும் தலைவணங்கி “அரசி, தங்கள் பொழுதை நீட்டிக்க நான் விரும்பவில்லை. இது பொது இடம்” என்றான். “சொல்க!” என்றாள் விருஷாலி. “நான் அங்கநாட்டு அரசரிடம் ஒரு சொல் உரைக்கவே வந்தேன். இன்னும் இங்கு இவ்வாறு இருப்பது அவருக்கு உகந்ததல்ல” என்றான் விகர்ணன். “அதை அறியாதவர் யார்?” என்று தலைதாழ்த்தியபடி விருஷாலி கேட்டாள். “இங்கு மைந்தரும் நானும் நாளும் அதை கையறுநிலையில் நோக்கிக்கொண்டிருக்கிறோம். தெய்வங்களிடம் முறையிடுவதன்றி நாங்கள் செய்வது ஏதுமில்லை.”

“அவையில் நிகழ்ந்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள், அரசி. அங்கே இளைய யாதவரை மூத்தவர் இழிவு செய்துவிட்டார். நீட்டிய கையுடன் அவர் அவை நின்றபோது நீங்களும் நிலமில்லாதவர் அல்லவா, உங்களுக்கென கேளுங்கள் என்றார். அவர் அவையிலிருந்து துயருடன் எழுந்து செல்லும்போது என்னால் இடைநாழிவரைகூட உடன்செல்ல இயலவில்லை. பின்னால் சென்று தயங்கி நின்றேன். தலைசுழன்று அமர்ந்துவிட்டேன். என்னை மஞ்சத்தறைக்கு கொண்டுசென்றனர். மதுவருந்தி மூன்று இரவுகள் எங்கிருக்கிறேன் என்றே தெரியாமல் இருந்தேன்” என்றான் விகர்ணன்.

“நிகழ்ந்தது அறப்பிழை, குலப்பழி பெருகிக்கொண்டே இருக்கிறது என உணர்ந்தேன். ஆனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அணுகிய அனைவரிடமும் சினம்கொண்டேன். இவள் உடன் இருந்ததால் மட்டுமே உயிருடன் மீண்டேன்.” அவன் விழிகள் நீர்கொண்டவை என பளபளத்தன. விருஷாலி “ஆம், இவள் உனக்கு இறைக்கொடை” என்றாள். விகர்ணன் “அரசி, எவருக்கும் அங்கு நிகழ்ந்ததன் மெய்ப்பொருள் புரியவில்லை. மீண்டும் ஒரு குலமகள் அரசவை நடுவே சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். நம் குலத்து அன்னையின் கற்பை அவை நடுவே இழிவுபடுத்தியபோது உடன்பிறந்தோர் அனைவரும் முன்பு போலவே அதை நோக்கி மூடர் என அவையமர்ந்திருந்தனர். அன்று போலவே பிதாமகரும் ஆசிரியரும் ஊமைப்பாவைகளென ஆயினர்” என்றான்.

“ஷத்ரிய அவையில் இழிவுபடுத்தப்பட்டது நம் அன்னை மட்டுமல்ல, ஒரு குலமகள். இனி பிறக்கவிருக்கும் அஸ்தினபுரியின் அனைத்துப் பெண்டிரும் அவைச்சிறுமை கொண்டிருக்கின்றனர். இனி எந்த மன்றிலும் எந்த ஆணும் அன்னையையும் துணைவியையும் அவைக்கு வந்து தன் கருப்பைமுளைக்கு புறச்சான்று சொல்க என்று ஆணையிடமுடியும். எந்த மைந்தனையும் தாயைச் சொல்லி அவைவிலக்கு செய்ய முடியும். கீழ்மையை மானுடருக்கு கற்பிக்கவேண்டியதில்லை, அதை அவர்களே நன்கறிவார்கள். அதை செய்யலாகாது என முன்னோர் அளித்த ஆணையை மட்டும் சற்று வேலியுடைத்துவிட்டால் போதும், திரண்டு பெருக்கெடுக்கும் நம் சிறுமதியும் தன்னலமும் பெருவிழைவும்.”

“அந்த அவையில் எனக்கு குரல் இல்லை. அரசி, இதை எங்குதான் நான் சொல்வது? எனக்கிருக்கும் இடம் இன்னமும் நெஞ்சில் அனல் எஞ்சும் அங்கர் அவைதான் என்று இவள் சொன்னாள்.” விருஷாலி ஒன்றும் சொல்லாமல் நிலம் நோக்கி விழிசரித்திருந்தாள். “ஆம், அன்று அவையில் அவரும்தான் கீழ்ச்சொல் எடுத்தார். ஆனால் அதன்பொருட்டு இங்கு எரிந்தழிகிறார். அந்த அனலை நோக்கி பேசவேண்டும் என்றே வந்தேன்” என்றான் விகர்ணன். விருஷாலி தாரையைப் பார்த்து “ஆனால் அவர் என்ன செய்ய முடியும்?” என்றாள். “அரசி, அஸ்தினபுரியின் அரசரிடம் இன்னும் ஒரு சொல் உரைக்கும் இடம் அங்கநாட்டரசருக்கு மட்டுமே உள்ளது. பிதாமகரும், ஆசிரியர்களும், அமைச்சர் விதுரரும் தோற்றுவிட்டனர். அன்னையும் தந்தையும் அகன்றுவிட்டனர். இனி தோழரென்று உரைக்கப்படும் ஒருவர் சொல் மட்டுமே அவர் செவி வரைக்கும் செல்ல முடியும்” என்றாள்.

விருஷாலி “அச்சொல்லை கேட்கும் நிலையில் உள்ளாரா அரசர்?” என்றாள். “கலி அவரை கவ்வியுள்ளது என்றார்கள். அவரிலெழுந்து பேசுவது மானுடரை காலடியின் சிற்றெறும்புகளென்றாக்கும் பெருந்தெய்வம் என்று சூதன் இங்கே பாடினான்” என்றாள். தாரை தயங்க விகர்ணன் “அவர் சொல்வதை கேட்பார் என நம்புவதன்றி வேறு வழியில்லை, அரசி” என்றான். குண்டாசி நடுங்கும் உரத்த குரலில் “நான் சொல்கிறேன்” என்றான். “இளையோனே, நீ பேசாதே” என்றான் விகர்ணன். குண்டாசி அவனை கையால் விலக்கி ஓணான் என தலை முந்தி நீள, உதடுகள் துடிக்க “ஏன் தெரியுமா? ஏன் தெரியுமா? மூத்தவர் துரியோதனருள் கூடிய அதே இருளில் ஒரு பகுதி அங்கரிடமும் உள்ளது. ஆம், அதனால்தான்!” என்றான்.

“இளையோனே…” என்றான் விகர்ணன். விருஷாலி அவனை கையமர்த்தி “அவன் சொல்லட்டும்” என்றாள். “நான், நான், நான்…” என குண்டாசி திக்கினான். “நான் சொல்வது அதனால்தான். அவ்விருளால் அங்கர் மேலும் அரசருக்கு அணுக்கமாக இருக்க முடியும். ஒரு சொல்லேனும் அவர் செவியில் போட முடியும். ஏனென்றால் ஏனென்றால் ஏனென்றால் நாகம் நாகம் நாகம்…” என்றான். நாத்தடுமாற கைகளை வீசி “ஏனென்றால் கருநாகத்தை அரசநாகமே ஆளமுடியும். வாசுகியின் நஞ்சை முறிக்க சேடநஞ்சு வேண்டும். அதன் பொருட்டே வந்தோம்” என்றபின் “நான் சொல்வது என்னவென்றால்…” என்றான்.

“என்ன சொல்கிறாய்?” என்று விகர்ணன் குண்டாசியின் தோளை பற்றினான். “நான் மது அருந்துவதே என் நாவில் எழுவதை சொல்வதன் பொருட்டுதான். இப்போதுகூட ஒரு மிடறு அருந்திவிட்டுதான் வந்திருக்கிறேன். அந்தத் தெய்வம் துணையில்லாமல் என்னால் உளமோட்ட முடியாது” என்று குண்டாசி சொன்னான். “ஏனென்றால் நான் ஒரு சிறிய நாகம்… நஞ்சற்ற புழுபோன்ற நாகம். தலைதூக்கமுடியாத உரகம்.” விகர்ணன் சினத்துடன் “போதும்” என்றான். அவன் “ஆம், அவ்வளவுதான் நான் சொல்லவருவது” என்றான். “இனி நீ வாய் திறக்கவேண்டாம். மூத்தவரிடம் நானே பேசிக்கொள்கிறேன். அரசி உடனிருப்பார்” என்றான் விகர்ணன்.

விருஷாலி “நான் அவரிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. நாங்கள் இருவரும் அவரிடமிருந்து நெடுந்தூரம் அகன்றிருக்கிறோம். அதற்கு இங்குள்ள சடங்கையும் முறைமையையும் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்தி எங்கள் கரைகளுக்கு ஒதுங்கிக்கொண்டோம் என்பதே உண்மை” என்றாள். “எங்களுக்கென ஒரு தருணத்தை உருவாக்கி அளிப்பதாக அமைச்சர் ஹரிதர் கூறியிருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்கையில் நீங்களும் உடன் இருக்கவேண்டும். அங்கு நிகழ்ந்தனவற்றை முழுமையான வடிவில் அங்கர் இன்னும் அறிந்திருக்க மாட்டார். அவற்றை நாம் சொன்னாலே போதும்” என்றான் விகர்ணன். “யாதவ அரசி சிறுமை செய்யப்பட்டதறிந்தால் அவருள் வாழும் நாகம் எழும்” என்று குண்டாசி சொன்னான். விருஷாலி அவனைப் பார்த்ததும் விழி திருப்பிக்கொண்டான். விகர்ணன் “ஏன்?” என்றான். தாரை அவனிடம் விழி காட்டி அடக்கினாள்.

விகர்ணன் “இப்போதுகூட அஸ்தினபுரியில் அறம்திகழச்செய்ய வாய்ப்புள்ளது, அரசி. அரசரிடம் அங்கர் வந்தமர்ந்து பேசட்டும். அரசர் ஒப்பவில்லை என்றால் அஸ்தினபுரிக்கு வந்து குழுமியிருக்கும் வைதிகர்களிடம் அறமுரைக்கட்டும். அஸ்தினபுரியில் போரெழுகைக்காக புருஷமேத வேள்வி நிகழ்த்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேள்விச்சாலையின் சொல்சூழ்கையின்போது அனைத்து தரப்புகளும் ஒலிக்க இடமளித்தாகவேண்டும். அதில் இளைய யாதவர் வந்து அமரவிருப்பதாக பேசப்படுகிறது. அந்த அவையில் அங்கநாட்டரசர் வந்து தன் உள்ளத்தை பேசவேண்டும்” என்றான் விகர்ணன்.

“வேள்வியன்னத்தை பகிர்ந்து உண்டபின்னரே போருக்கென வாள்தூக்கி வஞ்சினம் உரைப்பார்கள். அந்த அன்னத்தில் ஒரு வாயேனும் அங்கர் உண்டாக வேண்டும். அப்போது மட்டுமே அவர் ஷத்ரியர் என்று வைதிக அவையால் ஏற்றுக்கொள்ளப்படுவார். அதன்பொருட்டும் அவர் அஸ்தினபுரிக்கு வரவேண்டும்” என அவன் தொடர்ந்தான். “அவரை அவையமரச் செய்ய மாதுலர் சகுனியும் கணிகரும் மறுக்கலாம். ஷத்ரியர் எதிர்க்கலாம். ஆனால் அதை அரசரிடம் அங்கர் கோரிப்பெறவேண்டும். வைதிகர் அவையில் அன்னை பொருட்டு ஒரு சொல்லையேனும் அங்கர் கூறவேண்டும்.”

“ஆம், வில்லேந்தத் தெரிந்தவன் நாவில் சொற்களும் கூர்கொள்ளும்” என்றான் குண்டாசி. விகர்ணன் “இப்போரை தடுக்கமுடியவில்லை என்றால் ஒரு சொல்லையேனும் வைதிகர் நாவிலிருந்து அங்கர் கேட்டுப்பெறவேண்டும், அரசி” என்றான். “இப்போர் அரசர்களுக்கு எதிரானதே ஒழிய அரச மைந்தர்களுக்கு எதிரானதல்ல, பெண்டிருக்கு எதிரானது அல்ல. அவை நடுவே குலமகள் இழிவுசெய்யப்பட்டதைச் சுட்டி வைதிகர்களை உளம்குன்றச் செய்தால் அதை நிகர்செய்யும்பொருட்டு இந்தச் சொல்லை அவர்கள் அளிப்பார்கள். எங்கள் மைந்தர் உயிருக்கான உறுதியையாவது அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து அங்கர் பெற்று எங்களுக்கு அளிக்க வேண்டும். இனி நாங்கள் மன்றாடுவதற்கு பிறிதொரு இடமில்லை.”

விருஷாலி பெருமூச்சுவிட்டாள். விகர்ணன் விசைதாழ்ந்து தளர்ந்த குரலில் “அரசி, போருக்கென சில நெறிகளை வேதமரபு வகுத்துள்ளது. அந்தணரும், ஆநிரைகளும், கற்பரசியரும், இளமைந்தரும், விளைவயல்களும் பேணப்பட வேண்டும். நீர்நிலைகளும் சாலைகளும் அழிக்கப்படலாகாது. இளமைந்தரென்பதில் எங்கள் மைந்தரும் அடக்கமென்று அந்தணர் அவையில் அங்கநாட்டு அரசர் சொல்லவேண்டும். இத்தருணத்தில் இனி நாங்கள் எதிர்பார்ப்பதற்கு பிறிதொன்றுமில்லை” என்றான். குண்டாசி “யாதவ அரசிக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு நிகர்மாற்றாக இந்தக் கொடையை அவர்களிடமிருந்து அங்கர் கேட்டுப்பெறவேண்டும்” என்றான். விகர்ணன் அவனை நோக்கி பல்லை கடித்தான்.

விருஷாலி “அவரை எவ்வண்ணம் சந்திக்கவிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இங்கே ஆலயத்தில் சந்திப்பதில் மட்டுமே முறைமைத்தடையென ஏதுமில்லை” என்றாள். தாரை “அதை நான் ஹரிதரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றாள். குண்டாசி “என்னுள் மது இறங்கத் தொடங்குகிறது. நான் நிகர்நிலை அடைந்தால் தீயவனாக ஆகிவிடுகிறேன் என்று சொல்லப்படுவதுண்டு” என நகைத்தான். அவன் வாயில் பற்கள் பெரும்பாலும் உதிர்ந்திருந்தமையால் சிரித்தபோது அது குகைபோல திறந்து மூடியபோது அழுந்தி மூக்கு தொங்குவதுபோலத் தெரிந்தது. “உடனே மது அருந்தியாகவேண்டும்… நல்லூழாக தேரிலும் சிறிது மது வைத்திருக்க பாகனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றான்.

“அரசவைகளில் நீ சொல்லெடுக்கவேண்டியதில்லை, இளையோனே” என்றான் விகர்ணன். “நான் நாகம். நாநீட்டலாகாது என்று என்னிடம் சொல்லவேண்டியதில்லை. மாநாகம் விரும்பினால் என்னை உண்ணட்டும். அதன் வயிற்றுக்குள் வாழ்கிறேன்” என்றான் குண்டாசி. சீறும் ஒலியெழச் சிரித்து “நான் வந்ததே அவரிடம் சில கேள்விகளை கேட்கவேண்டும் என்றுதான். அன்று கேட்டிருக்கவேண்டும். எப்போது? எப்போது?” என்றவன் கையை காற்றில் நிறுத்தி “பாஞ்சாலத்தரசி அவைச்சிறுமை செய்யப்பட்டபோது. அன்று அன்று அன்று கேட்டிருக்கவேண்டும். அன்று நான் மதுவருந்தி படுத்துவிட்டேன். என்னை அறையிலிட்டு பூட்டிவிட்டனர். நான் எழுந்தபோது அங்கர் சம்பாபுரிக்கு கிளம்பிவிட்டார் என்றனர்” என்றான்.

அவன் முகம் சிவந்து கண்கள் வெறித்தன. “அன்று கேட்டிருந்தால் இவ்வினா இத்தனை நஞ்சு கொண்டிருக்காது. இன்று இது என் உடலெங்கும் பரவி வளர்ந்திருக்கிறது. அன்று அன்று…” அவன் விருஷாலியின் அருகே தன் முகத்தை கொண்டுவந்தான். தாடியில்லையேல் அது வெறும் மண்டையோடு என அவளுக்குத் தோன்றியது. “அன்று கேட்டிருந்தால் அழுதிருப்பேன். இன்று சிரித்துக்கொண்டே கேட்பேன். ஐவருக்கும் பத்தினி அவள் என்றால் இவள் யார் அங்கரே என்று. அங்கு பழிகொண்டால் இங்கு நிகர்செய்யவேண்டும் கருநாகரே என்று. ஹெஹெஹேஹெ.” அவன் சிரித்து இருமினான்.

விகர்ணன் “போதும்” என்றான். “ஆம், போதும். ஆனால் நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றான் குண்டாசி. “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. செல்க!” என்றான் விகர்ணன். “சம்படை என்ற ஒருத்தி. அவளும் அன்னைதான். அவள் உருகி உருகி செத்தாள். அவள் பாலைநிலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு சாளரத்தினூடாக… ஆனால்” அவன் கைகளை காற்றில் அசைத்தான். “அவளுக்கு மது தேவையாக இருக்கவில்லை. குருதி நொதித்துப் புளிக்குமென்றால் அதுவே மதுவென உடல்நிறைக்கும். அவர்களுக்கு மது தேவையில்லை.”

விகர்ணன் கையசைக்க அருகே வந்த காவலனிடம் “அரசரை தேருக்கு அழைத்துச் செல்க!” என்றான். “தேரிலேறுவதற்கு முன் ஒரு சொல். அதாவது நான் அங்கரிடம் கேட்கவேண்டியது. குருதி நஞ்சாக வேண்டுமென்றால் அதை உறைகுத்த முதற்துளி நம்முள் இருக்கவேண்டும் அல்லவா? அங்கரே, அழகரே, வில்லவரே, முதற்துளி நஞ்சு எங்குள்ளது? உங்கள் குருதி புளிக்கும் அந்த முதற்துளி…” அவன் மேலாடையை சீரமைத்து “நான் என்ன சொன்னேன்?” என்றான். “செல்க, தேரில் மது உள்ளது” என்றான் விகர்ணன். “ஆம், என் உடலில் மது குறைகிறது. அதனால்தான் உளறத் தொடங்குகிறேன்… செல்வோம்” என்ற குண்டாசி காவலன் தோளைப்பற்றியபடி நடந்தான்.

கூன்விழுந்த உடலும் தொங்கியாடும் கைகளுமாக அவன் செல்வதை விகர்ணன் நோக்கி நின்றபின் பெருமூச்சுடன் “பொறுத்தருள்க, அரசி” என்றான். “அவர் அங்கநாட்டரசரை சந்தித்துவிடக்கூடாது. அதை கருத்தில் கொள்க! இந்நச்சுச் சொற்களை அவரிடம் சொல்லிவிடக்கூடும்” என்றாள் தாரை. “சந்தித்தாலும் ஒன்றுமில்லையடி. அவர் இவனிடமிருந்து விரும்புவதே இத்தகைய முட்களைத்தான் என நினைக்கிறேன்” என்றாள் விருஷாலி.

bl-e1513402911361அவர்கள் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த ஹரிதர் தலைவணங்கி “தங்களுக்குரிய தேர்கள் ஒருங்கியுள்ளன, அரசே” என்று விகர்ணனிடம் சொன்னார். விருஷாலி “இவள் என்னுடன் வரட்டும்…” என்றாள். தாரை “ஆம், நான் அரசியுடன் சென்று தங்குகிறேன். என்னை அங்கே வந்து சந்தியுங்கள். என் திட்டத்தை சொல்கிறேன்” என்றாள். ஹரிதர் “முறைமைப்படி…” என்று சொல்லத் தொடங்க “முறைமையா? நான் மச்சர்குடிப் பெண். எங்கள் முறைமைகள் வேறு” என்றாள் தாரை. ஹரிதர் புன்னகைத்து மீண்டும் தலைவணங்கினார்.

அவர்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். விகர்ணனும் குண்டாசியும் ஊர்ந்த தேர் முன்னால் செல்ல தொடர்ந்து விருஷாலி தாரையுடன் ஏறிக்கொண்ட அரசத்தேர் சென்றது. “அருகே மூன்றாவது பெருந்தெருவில்தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட மாளிகை, அரசி. அரசர்கள் வந்தால் தங்குவதற்காக கட்டப்பட்டது. அரக்குமணம் மாறாதது” என்றாள் தாரை. விருஷாலி வெளியே நோக்கி “கொம்பொலியா?” என்றாள். தாரை “எங்கே?” என்றாள். “இளவரசர்களுக்குரியது!” என்று விருஷாலி சொன்னாள். “இந்தப் பொழுதில் அவர்கள் இங்கு வர வாய்ப்பே இல்லையே?” தாரை “ஒருவேளை எங்களைப் பார்க்கவென்று வரக்கூடும்” என்றாள். “இங்கு எவரும் முறைமைகளை மீறுவதில்லை” என்றாள் விருஷாலி.

புரவியில் காவலர்தலைவன் அவளை நோக்கி வந்து தேர் அருகே விரைவழிந்தான். “என்ன?” என்று விருஷாலி கேட்டாள். “அரசி, பட்டத்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். வேட்டைக்குச் சென்றவர் இங்கு அஸ்தினபுரியின் இளைய அரசர்கள் வந்திருப்பதை அறிந்து வழிதிரும்பினார்.” அவள் விழிகளை நோக்கியபின் “ஆம், சிறு முறைமை மீறல். ஆனால் அவர் அதற்கு முடிவெடுத்திருக்கிறார்” என்றான். விருஷாலி தெருவின் முகப்பில் கரிய குதிரையில் அறிவுப்புக் கொம்பை ஊதியபடி முதற்காவலன் வருவதை கண்டாள். பின்னர் வளைவு திரும்பி ஏழு புரவிகள் வந்தன. வெண்புரவியில் வெண்ணிற ஆடையும் தலையணியும் வெள்ளி அணிகளுமாக விருஷசேனன் அமர்ந்திருந்தான்.

முன்னால் சென்றுகொண்டிருந்த தேர் நிற்பதற்குள் அதிலிருந்து குண்டாசி பாய்ந்து தெருப்புழுதியில் வீசப்பட்டதுபோல விழுந்தான். மேலாடை நழுவ கையூன்றி எழுந்து இரு கைகளையும் விரித்து உடல் நடுங்க நின்றான். கைகளை தலைக்குமேல் கூப்பி “மூத்தவரே, அங்கரே” என்று கூவினான். “அஸ்தினபுரியில் கதிரவன் துணை வர அன்று நுழைந்த அதே கோலம்! ஆம், நீங்கள் என்றுமிருப்பவர். காலத்தை ஆக்கி விளையாடும் நாளவன் நீங்கள்!” என்றான். கைகள் பதற திரும்பி தேரிலிருந்து இறங்கிய விகர்ணனை நோக்கி “நோக்குக, அந்தச் செம்பொன்கவசம்! மணிக்குண்டலம்! அதே கதிரெழு பேரழகு!” என்றபின் “எந்தையே! எந்தையே!” என்று அழுதபடி ஓடினான்.

குண்டாசி தலைக்குமேல் கைகூப்பியபடி தடுமாறி திசைகுலைந்த கால்களுடன் ஓடிச்சென்று புரவியிலிருந்து இறங்கிய விருஷசேனனின் கால்களில் குப்புற விழுந்தான். அவனைத் தொடர்ந்து ஹரிதரும் சிற்றமைச்சர்களும் ஓடிவந்து தயங்கி நின்றனர். “அரசே!” பதறியபடி விருஷசேனன் குனிந்து அவனை தூக்கிக்கொள்ள குண்டாசி விருஷசேனனின் மார்பில் முகம் பதித்து கைகளைக் கூப்பியபடி நரைத்த தாடி அசைய விம்மி அழுதான். விகர்ணன் கைகூப்பியபடி விருஷசேனனை அணுகினான். தாரை கண்களில் பளபளப்புடன் அதை நோக்கி அமர்ந்திருந்தாள். விருஷாலி “நாம் செல்வோம்” என்றாள்.

வெண்முரசு வாசிப்பு – ராஜகோபாலன்