குருதிச்சாரல் - 55

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 5

bl-e1513402911361பலந்தரை எழுந்து சென்றுவிடுவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தாள். அன்னை எத்தனை பெரிய வீண்நெஞ்சத்தவள் என தோன்றியது. இந்நாடுகள் நகரங்கள் அரசவைகள் போர்கள் மட்டுமல்ல நூல்களும் கொள்கைகளும் வேதங்களும் என ஆண்கள் வகுத்து அமைத்து அவர்கள் மட்டுமே அமர்ந்து ஆடும் பெருங்களம் இது. அதில் பெண்கள் கருக்கள், பேசுபொருட்கள், சிலையுருக்கள் மட்டுமே. அவர்கள் அதில் ஈட்டுவதும் இழப்பதும் ஏதுமில்லை. அவர்கள் மீது பெண்களுக்கிருக்கும் ஒரே சொல்கோன்மை அவர்களின் குருதியை மைந்தராக்கி அளிக்கவியலும் என்பதே.

அங்கிருந்து எப்படி எழுந்து செல்ல வேண்டுமென்று எண்ணியபோது ஏதும் வழி தென்படவில்லை. புரியாமல் சலிப்புற்றோ, வெல்லவியலாதென்று ஏமாற்றமுற்றோ எழுவதுபோல தெரியக்கூடாது. எரிச்சலுற்று எழவேண்டும். சினந்து எழுந்து சென்றபின் அவர்கள் வருந்துவதுபோல எதையாவது சொல்லவேண்டும். அவள் அவர்களின் பேச்சுக்களை விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு சொல், ஒரு சிறுபொறி போதும் என. ஆனால் அவர்கள் அவளை முழுமையாக மறந்துவிட்டிருந்தார்கள்.

இளைய யாதவர் “அதன்பின் நாம் நம் உரிமையை கோருவோம். அது என்றும் அவ்வண்ணம் இருந்துகொண்டுதான் இருக்கும்” என்றபோது அவள் உரிமை என்ற சொல்லை மட்டுமே கேட்டு தன்னை பற்றவைத்துக்கொண்டாள். பீடத்தின் கைகளை இரு கைகளாலும் தட்டியபடி உரத்த குரலில் “நான் கேட்கவிருப்பது ஒன்றே. எவ்வண்ணம் நீங்கள் ஐந்து சிற்றூர்கள் மட்டும் போதுமென்று அவர்களிடம் கேட்டீர்கள்? ஐந்து சிற்றூர்கள் என்றால் என்ன? ஐந்து மேழிகள் திருப்பும் இடமிருக்குமா? ஐந்து பசுக்கள் நின்று மேயும் நிலம் எஞ்சுமா? ஐந்து சிற்றூர்கள் பத்து மைந்தருக்கு பகிரப்பட்டால் அதில் என் மைந்தனுக்கு கிடைப்பதென்ன?” என்றாள்.

அவர்கள் அந்த எதிர்பாராத குரலில் திகைக்க அவள் மேலும் கூச்சலிட்டாள் “இதற்கப்பால் கீழ்மை என ஏதும் எழுந்து சூழக்கூடுமா? பாரதவர்ஷத்தின் வரலாற்றில் ஷத்ரியர் எங்கும் இரக்க கைநீட்டியதில்லை. இதோ, அதுவும் நிகழ்ந்துவிட்டது.” இளைய யாதவர் “நான் அங்கு யாதவனாகவே சென்றிருந்தேன், ஷத்ரியனாக அல்ல” என்றார். “நீங்கள் காடுசென்று கன்றோட்டுக! நீங்கள் அந்த அவையில் பாண்டுவின் குருதியில் பிறந்த ஷத்ரியர்களுக்காக கையிரந்தீர்கள்” என்று அவள் சொன்னாள். அவள் குரல் அந்த உச்சத்தால் உடைந்தது. “ஐந்து ஊர்கள் கோரப்பட்டன என்னும் இழிவே சூதர் நாவில் இருக்கும். அது மறுக்கப்பட்டதென்னும் சிறுமையோ இன்னும் நூறு தலைமுறைக்காலம் நம் கொடிவழிகளின் உள்ளத்தில் எஞ்சும்” என்றாள்.

“என் உடல் கூசுகிறது. அவையமர்ந்திருக்கும் மூத்தவர் சொல்க, இதற்கிணையான இழிவை உங்கள் குடியில் எவரேனும் ஏற்றிருக்கிறார்களா? இழிவுபடுத்தப்படுவதே இழிவு. அவ்விழிவை ஏற்பது பேரிழிவு” என்று பலந்தரை கூவினாள். “ஆம், தொல்குடிப் பிறந்த நான் இவர்களை ஒருபோதும் எனக்கு நிகராக ஏற்றதில்லை. அதன்பொருட்டு இவர்கள் என்மேல் சினம்கொண்டதும் உண்டு. இன்று உணர்கிறேன் இவர்களை மிகச் சரியாகவே நான் புரிந்துகொண்டிருக்கிறேன் என்று. ஷத்ரியர் வாளெடுத்து சங்கு அறுத்து விழும் சிறுமைகளின் முன் இளித்து பணிந்து வளைந்து நின்றிருக்கும் இழிசினர் இவர்கள்.”

யுதிஷ்டிரர் கைநீட்டி ஏதோ சொல்ல வர பீமன் கசப்பு நிறைந்த சிரிப்புடன் “சில தருணங்களிலேனும் மிகச் சரியாகவே என் உள்ளத்தை இவள் வெளிப்படுத்துகிறாள், மூத்தவரே” என்றான். பலந்தரை அவனை ஒருகணம் திகைப்புடன் நோக்கிவிட்டு “அங்கே அவையில் என் தந்தையும் மூத்தவரும் அமர்ந்திருந்தனர். அவர்களிடமும் சென்று இரந்துள்ளார் உங்கள் தூதர். பெண்ணென்று இனி எனக்கு இழிவு என்ன எஞ்சியிருக்கிறது?” என்றாள். மேலும் சினத்தை எழுப்பி சொல்விசை கூட்டி இளைய யாதவரிடம் திரும்பி “அதற்கும் கீழே சென்று இனி நீங்கள் கோரப்போவதென்ன? நீங்கள் வேத அவையில் வென்றீர்கள் என்றே கொள்வோம். போருக்கு அந்தணர் ஒப்புதல் அளிக்க தயங்கினார்கள் என்றே ஆகுக. அதன் பின் அவையமர்வில் நீங்கள் அவரிடம் கோரப்போவதுதான் என்ன?” என்றாள்.

“அஸ்தினபுரியின் மண்ணில் இவர்களுக்கு ஏதேனும் இடம், அவ்வளவுதான். ஐந்து இல்லங்கள். அல்லது ஐந்து குடில்கள் அமைக்கும் நிலம்” என்றார் இளைய யாதவர். “சீ!” என்று உரத்த குரலில் சீறியபடி பலந்தரை எழுந்தாள். “என்ன சிறுமை இது! இதற்கும் கீழ் ஷத்ரியர் இறங்க முடியுமா என்ன?” யுதிஷ்டிரர் முகம் சுளித்து அவளை பொறுக்கும்படி கைகாட்டிய பின் “சொல் இளையவனே, இது என்ன? எவர் கேட்டாலும் நகைக்கும் கோரிக்கை அல்லவா இது?” என்றார். இளைய யாதவர் “பாண்டவரே, அஸ்தினபுரியின் அந்நிலத்திற்குள் உங்கள் குடித்தெய்வங்கள் பதினெட்டு குடிகொண்டிருக்கின்றன. உங்கள் குல மூத்தார் அன்னமும் நீரும் பெறும் ஏழு சுனைகள் அமைந்துள்ளன. அவற்றுக்கு பூசையும் பலிக்கொடையும் அளிக்கும் தகுதி உங்களுக்கு வரவேண்டுமெனில் நீங்கள் அந்நிலத்தில் குடியிருந்தாகவேண்டும். அதன்மேல் உங்களுக்கு குடியுரிமையேனும் எஞ்சவேண்டும்” என்றார்.

“அறிக, அரசன் தன் குடிகள் மேல் எந்நிலையிலும் படையெடுக்கமுடியாது. அவ்வாறு படைகொண்டு செல்ல வேண்டும் என்றால் மூன்று பெரும்பிழைகளை அவர்கள் இயற்றியிருக்க வேண்டும். அரசவஞ்சம், வேதம் பழித்தல், இறைமறுத்தல். இம்மூன்றும் நீங்கள் ஆற்றவில்லை என்பதை நான் வேதியர் அவையில் நிறுவிவிட்டு வந்தேன் என்றால் அதன்மேல் உங்களை குடிவிலக்கம் செய்து படைகொண்டெழ அஸ்தினபுரியின் அரசனால் இயலாது. அதை அவர்கள் இயற்றாமல் தடுப்பதே நாம் இன்று செய்யவேண்டியது” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “நீங்கள் அரசகுடியினரல்ல என்றனர். ஷத்ரியர் அல்ல என்று மீண்டும் வகுத்தனர். குடியென்றேனும் அவர்கள் ஏற்றாகவேண்டும்.”

“அதனால் என்ன பயன்?” என்று சகதேவன் கேட்டான். “நாம் வென்றால்கூட என்றோ ஒரு நாள் நாம் தொடுத்த போர் முறையானதல்ல என்று அந்தணர் அவை எண்ணக்கூடும். நமக்கு வேள்வி செய்ய அவர்கள் மறுக்கலாம். நம் குடியினரில் சிலரேகூட அஸ்தினபுரிக்கும் அயலாருக்குமான போரென்று அதை கருதக்கூடும். இன்றே எண்ணிச் சூழ்ந்து அதை தடுத்து வைப்பது நமக்கு நல்லது” என்றார் இளைய யாதவர். “ஏனென்றால் போர் தொடங்கியபின் அறமென ஏதுமில்லை. வெல்வதே ஒரே அறம் அங்கே. நாம் வென்றபின் அறப்பிழைகள் நூறு நம் மீது சுமத்தப்படும். குலமிலிகள், அஸ்தினபுரியின் நிலம்விலக்கப்பட்டோர் கொண்ட வெற்றி என்ற சொல் மட்டும் நம் மீது ஒட்டிவிடக்கூடாது.”

பலந்தரை எஞ்சிய முழு சினத்தையும் திரட்டி  “இதற்கு நான் ஒருபோதும் ஒப்பப்போவதில்லை. இரந்துண்டவள் என்னும் பழியுடன் காசிநாட்டு அரசியாகிய நான் வாழப்போவதில்லை. அறிக, என் மைந்தன் ஒப்புதலின்றி நீங்கள் செல்ல இயலாது. அவனை என் சங்கில் வாள்வைத்து என் சொல்லில் நிறுத்துவேன். அவனை அகற்றி அங்கு சென்றீர்கள் என்றால் நானும் தொடர்ந்து வருவேன். அதே அவையில் எழுந்து எனக்கும் மைந்தனுக்கும் அத்தூதில் ஒப்புதல் இல்லை என்று அறிவிப்பேன்” என்றாள். “நான் உயிருடனிருக்கும் வரை என் மைந்தனின் தந்தையென்றானவர் பெயர் சொல்லி எவரும் மண்ணிரக்கப் போவதில்லை.”

யுதிஷ்டிரர் “என்ன பேச்சு இது…? இங்கே எவரும் இரக்கப்போவதில்லை, இது ஓர் அரசியல் சூழ்ச்சி” என்றார். “அரசியல் சூழ்ச்சியாக இல்லப்பெண்களை அவர்களின் படுக்கைக்கு அனுப்புவீர்களா என்ன?” என்றாள் பலந்தரை. அறைவிழுந்தவர்போல யுதிஷ்டிரர் வாய்திறந்து உறைய சகதேவன் அறியாமல் எழுந்து நின்றான். ஆனால் பீமன் கைகளை மார்பில் கட்டியபடி அசையாமல் நின்றான். உள்வலித்த குரலில் “சொல்லெண்ணுக!” என்றான் சகதேவன். “நாம் எண்ணிச் சொல்லெடுக்கலாம், ஊருக்கு அதை ஆணையிட நம்மால் இயலாது” என்றாள் பலந்தரை. “முன்னரே உங்கள் குலமகள் அவைச்சிறுமை அடைந்துவிட்டாள். அதையே சொல்லிச் சிரிக்கிறது பாரதவர்ஷம். இன்று அதையும் கடந்துசென்று நிலம் கோரி நின்றிருக்கிறீர்கள்.”

சகதேவன் “போதும்!” என மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஐந்து வீட்டுக்கு அமைகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களுக்குத் தகுதியானது என எண்ணுவது அதுவே என்று பொருள். பாதி நாடும் நகரும் கருவூலமும் கோரியது மிகைவிழைவென்று பொருள். நான் ஒப்பமாட்டேன். என் குருதியின் மீதன்றி நீங்கள் சென்று இதை கோரப்போவதில்லை” என்றாள் பலந்தரை. இளைய யாதவர் “மிக எளிதில் எங்களால் உங்களை தடுக்க முடியும், அரசி” என்றார். “உங்கள் கணவர் உங்களைத் துறந்தால் பிறகு நீங்கள் சொல்லெடுக்கவியலாது. அதற்கு மங்கலநாணைக் கழற்றி அளித்துவிடும்படி உங்களிடம் அவர் கோரினாலே போதும்” என்றார்.

பீமன் “இளைய யாதவரே, இவள்மேல் எப்பொழுதும் முதல் தருணத்தில் எழுவது சினமும் விலக்கமும் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு முறையும் அதன் இறுதியில் விலக்கமுடியாத அன்பொன்றையே இவள்மேல் உணர்கிறேன். ஏனென்றால் இவளும் என்னைப்போல் அறியாது பதைக்கும் சிறுமியை அகத்தில் கொண்டிருக்கிறாள். இவள் குருதியில்தான் என் மெய்நிகர் வடிவமான என் மைந்தன் பிறந்திருக்கிறான். எந்நிலையிலும் என் உடன்பிறந்தார் பொருட்டோ, குலத்தின் பொருட்டோ, இறைவடிவென என் முன் எழுந்த தங்கள் பொருட்டோகூட இவளை என்னால் துறக்க முடியாது” என்றான். “அதற்கான ஆணை எனக்கு பிறப்பிக்கப்படுமெனில் வாளெடுத்து என் கழுத்தில் வைப்பதன்றி நான் செய்யக்கூடுவதொன்றுமில்லை.”

“போதும், இளையோனே” என்றார் யுதிஷ்டிரர். “இளைய யாதவனே, அவள்மேல் ஒரு துளி அன்பு அவன் உள்ளத்தில் எஞ்சுமென்றால் இவள் எங்கள் குலமகளாகவே இருப்பாள். இவள்பொருட்டு அனைத்தையும் துறக்கவும் படைமுகம் நின்று முற்றழியவும் ஒருங்குவோமே ஒழிய மங்கலநாண் மறுப்பதற்கல்ல. அப்பேச்சை ஒழிக!” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் “நன்று அரசி, தாங்கள் இயற்றுவதற்கும் இனி ஒன்றுள்ளது. மங்கலநாணை தாங்கள் துறக்கலாம். மிக எளிது. இடக்கையால் அதை இழுத்து அறுத்து தலைக்கு மேல் மும்முறை சுற்றி வலமாக இட்டால் போதும். காசிநாட்டு அரசியர் தொல்குடி ஷத்ரிய முறைமைகள் கொண்டவர்கள். நிஷாதர்களைப்போல எத்தனை முறை வேண்டுமென்றாலும் பூட்டவும் அறுக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

“அரசி, அகல்விழி அன்னை உடனுறை உலகாள்வோன் அமர்ந்த காசி ஷத்ரிய குடிகளில் மிகத் தொன்மையானதும் தூயதுமாகும். நால்வேதங்களால் நிலைநாட்டப்பட்ட முடி அது. அந்நாட்டரசியின் குடியில் பிறந்த மைந்தர் இயல்பிலேயே முதன்மை ஷத்ரியர் ஆகிவிடுகிறார்கள். பிறப்பாலேயே வேதவாழ்த்தும் வேள்வியவையில் முதலிடமும் பெறுகிறார்கள். ஆகவே சிறுகுடி ஷத்ரியர்கள் மட்டுமல்ல பெருங்குடி அரசர்களேகூட தங்களை மீண்டும் மணம்கொள்ள நிரைவகுத்திருப்பார்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள். அதை தாங்கள் இயற்றலாம். அதன் பின் இக்குடியினரிடம் உங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை. இவர்கள் கொள்ளும் எச்சிறுமையும் தங்களுக்கும் தங்கள் மைந்தனுக்கும் வந்துசேராது” என்றார் இளைய யாதவர்.

பலந்தரை திகைத்து அமர்ந்திருக்க அவள் முகத்தை கூர்ந்து நோக்கி புன்னகை அணைந்து கூர்கொண்ட உணர்வுகளுடன் “அன்றேல் அரசியென்று காசிநாட்டில் அமையலாம். அஸ்தினபுரியின் படைக்கூட்டில் இணையலாம். வென்ற நிலத்தில் உங்கள் மைந்தன் தனிக் கோலேந்தி அமரலாம். இந்த உடைந்த படகில் அமர்ந்திருக்க வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர். அருகணைந்த அவர் முகம் அவளை ஒருகணம் உள நடுக்குறச் செய்தது. கால்தளர்ந்தவள்போல மீண்டும் பீடத்தில் அமர்ந்து தலைகுனிந்து கைகளை பின்னிக்கொண்டாள். விரல்கள் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“தங்கள் அன்னை தங்களுக்கு ஆணையிட்டு அனுப்பியது அதுவே என்று நான் அறிவேன். எந்நிலையிலும் இப்போரை தவிர்க்க நீங்கள் ஒப்பலாகாதென்று அவர் உரைத்தார். போர் தவிர்க்கப்பட்டு எளிய ஒப்புதல்களில் இது முடியுமென்றால் நாணறுத்து மீளும்படி ஆணையிட்டிருக்கிறார். அதை நீங்கள் செய்யலாம்” என்றார் இளைய யாதவர். “அரசே, உங்களுக்கு அதில் எண்ணமாற்று உண்டா?” யுதிஷ்டிரர் “ஆம், எண்ணினால் அதுவே நன்று என்றும் தோன்றுகிறது. காசி அஸ்தினபுரியின் படைக்கூட்டில் இருக்கையில் தந்தைமேலும் தமையனிடமும் பெரும் பற்றுகொண்டுள்ள அரசி இங்கிருந்தால் உளத்துயரே எஞ்சும். நாம் கொண்டுள்ள சிறுமைகளை பெருமைமிக்க காசி அடையவேண்டியதுமில்லை… அவர் நாண் துறந்து செல்வார் என்றால் அதை முழுதேற்கிறோம். அவர்மேல் எந்த உளக்குறையும் இன்றி ஒப்புகிறோம்” என்றபின் திரும்பி பீமனிடம் “சொல்க, இளையோனே!” என்றார்.

பீமன் “அவள் செல்லப்போவதில்லை” என்று முழங்கும் குரலில் சொன்னான். பெருங்கைகளைத் தூக்கி “ஒருபோதும் நான் அவளை விடமாட்டேன். என்னை நீங்கி அவள் சென்றால் எங்கணைந்தாலும் தேடிச்சென்று அவள் தலையை உடைப்பேன். ஆம்!” என்றபின் கதவை காலால் உதைத்துத் திறந்து வெளியே சென்றான். மீண்டும் கதவு வந்து அறைந்த ஓசை வெடி என ஒலித்தது. பலந்தரை தன் கைகளால் பாதிமுகத்தைப் பொத்தியபடி நடுங்கும் உடலுடன் அமர்ந்திருந்தாள்.

“அரசி, அது வெறும் உணர்வு. அவரிடம் நான் பேசுகிறேன்” என்றார் இளைய யாதவர். “அவர் தமையன் சொல்லை மீறுபவர் அல்ல. தாங்களோ புவிவெல்லும் அஸ்தினபுரியின் படைக்கூட்டிலமைந்த நாட்டுக்கு செல்லப்போகிறீர்கள். தாங்கள் விரும்பினால் இன்றே நாண்நீத்து காசியின் அரசி மட்டுமே என இங்கிருந்து எங்கள் காவலுடன் கிளம்பலாம்.” பலந்தரை எழுந்து மீண்டும் அமர்ந்து முனகலாக “இல்லை” என்றாள். “நான் அவரை துறக்கவியலாது.” இளைய யாதவர் “ஏன்? அதை மட்டுமேனும் சொல்லி அகல்க!” என்றார். அவள் தலைகுனிந்து கழுத்து விம்மலில் எழுந்தமைய கைவிரல்கள் பின்னித்தவிக்க அமர்ந்திருந்தாள். “சொல்க!” என்றார் இளைய யாதவர்.

நாணில் கைபட எழுந்த அம்புபோல அவளில் இருந்து சொல் எழுந்தது. “ஏனெனில் நான் அவரை அன்றி எவரையும் உளம்கொண்டிருக்கவில்லை.” முகத்திரையை இழுத்துவிட்டு அதன் நுனியால் விழி நீரைத் துடைத்தபடி எழுந்தாள். “வெல்லும் தரப்பு அது என்று…” என்று இளைய யாதவர் சொல்லத் தொடங்குவதற்குள் சீற்றத்துடன் இடைமறித்தாள். “உங்கள் எவரையும்விட அவரை நான் அறிவேன். அப்பெருந்தோள்களை வெல்ல இப்புவியில் அரசனென்றோ ஆண்மகன் என்றோ எவருமில்லை. பாரதவர்ஷத்தின் மணிமுடிகள் அவரால் பிறருக்கென விட்டளிக்கப்பட்டிருக்கின்றன” என்றபின் அறையை விட்டு வெளியேறினாள்.

bl-e1513402911361கதவுக்கு அப்பால் நின்றிருந்த சுரேசர் அவளை விந்தையென பார்க்க அவள் பொருட்படுத்தாமல் இடைநாழியினூடாக விரைந்தாள். சற்று நேரத்திற்குப் பின்னர் விழிநீர் வழிந்துகொண்டிருந்தாலும் தன் உள்ளம் முற்றிலும் துயரற்றிருப்பதை உணர்ந்தாள். வாழ்நாளில் ஒருபோதும் அத்தனை எடையின்மையை உணர்ந்ததில்லை என்று தோன்றியது. புன்னகைத்து மெல்ல நடக்கத் தொடங்கினாள். மீண்டும் தொட்டபோது கன்னத்திலிருந்த கண்ணீர் ஈரம் விந்தையெனத் தோன்ற அழுத்தி துடைத்தாள்.

அவளுக்காக குந்தியின் சேடி பார்க்கவி அறைவாயிலில் காத்து நின்றிருந்தாள். அவள் நடைதயங்கியதும் பார்க்கவி வணங்கி “பேரரசி தங்களை அழைத்துவரும்படி சொன்னார்கள்” என்றாள். பலந்தரை “நான் சற்றுமுன்னர்தான் வந்தேன், வந்ததுமே…” என தயங்க “தாங்கள் வந்ததுமே அங்கு செல்வீர்கள் என பேரரசி எண்ணினார்கள். காத்திருந்த பின் என்னிடம் அழைத்துவரச்சொல்லி ஆணையிட்டார்கள். நான் வந்தபோது தாங்கள் அவைகூடச் சென்றிருப்பதை அறிந்தேன். அதை அரசியிடம் சொன்னேன். காத்திருந்து அழைத்துவரும்படி சொன்னார்கள்” என்றாள். “நான் ஆடைமாற்றி…” என சொல்லவந்த பலந்தரை “சரி, வருகிறேன்” என்றாள்.

செல்லும் வழியில் பார்க்கவி “பேரரசி நோயுற்றிருக்கிறார். ஒவ்வொருநாளும் காலையில் சற்று உளம்தேறியிருப்பார். மாலைக்குள் துயரூட்டும் செய்திகள் எவையேனும் வந்துவிடும்” என்றாள். “அவர்கள் நன்கு துயில்வதில்லையா?” என்றாள் பலந்தரை. “அகிபீனா இன்றி துயில்வது கடினம்” என்றாள் பார்க்கவி. பலந்தரை திடுக்கிட்டவள்போல திரும்பி நோக்க “அவர்களை கனவுகள் தொடர்கின்றன” என்றாள். “மைந்தரை எண்ணியா?” என்றாள் பலந்தரை. “இருக்கலாம். இரவிலொருநாள் மைந்தா என்று அலறியபடி விழித்துக்கொண்டார்.” பலந்தரை தலையசைத்தாள்.

“அஸ்தினபுரியின் அவையில் கௌரவமூத்தவர் நாவிலெழுந்த சிறுமையில் இருந்து அன்னை மீளவே இயலவில்லை. எவரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. மைந்தர்களைக்கூட. இளைய யாதவர் சந்திக்க விழைந்தபோதுகூட மறுத்துவிட்டார்” என்று பார்க்கவி சொன்னாள். பலந்தரை உதடுகளைக் கடித்து தன் நெஞ்சை அடக்கிக்கொண்டாள். “ஆனால் பாஞ்சாலத்து அரசியை சந்திக்க விரும்பி அவரே என்னை அனுப்பினார். பாஞ்சாலத்து அரசியைக் கண்டதுமே கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர்விட்டார். அவர்கள் மட்டும் நீண்டநேரம் பேசிக்கொண்டார்கள். இப்போது உங்களை அழைக்கிறார்கள்” என்றாள் பார்க்கவி.

குந்தியின் அறைக்குள் நுழைந்து அவள் வரவை பார்க்கவி அறிவித்து வந்து உள்ளே செல்லும்படி கைகாட்டினாள். பலந்தரை உள்ளே நுழைந்தபோதுதான் அவ்வறை எத்தனை சிறியது என உணர்ந்தாள். மஞ்சமும் ஒரு பீடமும் போடப்பட்டபோது அங்கே பிறிதொருவர் நிற்கவே இடமிருந்தது. அவள் உள்ளே நுழைந்ததைக் கண்டு தலையணைமேல் எழுந்து அமர்ந்திருந்த குந்தி புன்னகைத்தாள். அவள் கால்களைத் தொட்டு சென்னிசூடி அருகே மஞ்சத்திலமர்ந்தாள் பலந்தரை. அவளை கூர்ந்து நோக்கிய குந்தி “என்ன?” என்றாள். “ஏன்?” என்றாள் பலந்தரை. “உவகை கொண்டிருக்கிறாய்?” என்றாள் குந்தி. “ஆம்” என்றாள் பலந்தரை. “அவையில் என்ன நிகழ்ந்தது?” என்றாள் பலந்தரை

அவள் நிகழ்ந்ததை சுருக்கமாக சொன்னாள். “என்னிடம் அவரை நாண்நீத்து துறக்கச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன்.” குந்தி புன்னகைத்து “மூடர்கள், அவர்களில் அவனைத்தவிர எவருக்கும் பெண்ணுள்ளம் தெரியாது” என்றாள். “எவருக்கு?” என்றாள் பலந்தரை. “இளைய யாதவனுக்கு.” பலந்தரை நிமிர்ந்து நோக்க “அவன் உன் உள்ளம் அறிந்துதானே அவ்வாடலை நிகழ்த்தியிருக்கிறான்?” என்றாள். பலந்தரை புன்னகையுடன் தலையசைத்து “ஆனால் எனக்கே என் உள்ளம் இப்போதுதான் தெரிகிறது” என்றாள். “அதை அறிவதென்ன விந்தையா? என் மைந்தரில் பெண்டிர் ஒருபோதும் வெறுக்கவியலாதவன் அவன்” என்றாள்.

“ஆம்” என்றாள் பலந்தரை. “ஆகவேதான் அரசியும் அவரை நெஞ்சில் நிறுத்தியிருக்கிறார்.” குந்தி சிரித்து “அதுதான் உன் இடரா?” என்றாள். பலந்தரை சிரித்து தலைகுனிந்து முகத்திரையை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டாள். “அறிவின்மை, ஆனால் நாம் அதிலிருந்து தப்பவியலாது” என்று குந்தி சொன்னாள். “அவர் அரசிக்கு அளித்த மாமலரைப் பற்றி சூதர்கதைகள் அங்கே வந்தன.” குந்தி “அவன் அதை அவளுக்கு மட்டும் அளிக்கவில்லை…” என்றாள். “அது அவன் உள்ளம் அல்லவா? மூதன்னையரிடமிருந்து அவன் பெற்றது.” பலந்தரை “ஆம், அது இப்போது தெரிகிறது” என்றாள்.

“அவன் தமையனிடமும் அந்த மலரே இருந்தது. அதை அவன் தன் இறைவனுக்கு படைத்தான். இவன் அதை மகளிருக்கு அளித்திருக்கிறான். அங்கே காட்டில் இடும்பியும் அதை உணர்ந்திருப்பாள்” என்றாள். முகம் நிமிர்த்தி “அவரை பார்க்கவிழைகிறேன்” என்றாள். “கனிந்த விழிகள் கொண்டவள். அவள் மைந்தனை இருமுறைதான் நானே பார்த்திருக்கிறேன். அவனுக்கு மணம்முடித்து வைக்கவேண்டும். அவர்களின் குலத்தில் அவன் பெண்கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் மைந்தன் நாடாளவியலாது. அவன் ஷத்ரியக் குடியிலேயே பெண்கொள்ளவேண்டும். அதன்பொருட்டு தூதுச்செய்திகளை அனுப்பியிருக்கிறேன். எவரும் இதுவரை மறுமொழி உரைக்கவில்லை.”

பலந்தரை “நம் படைக்கூட்டு உறுதியானதும் ஆணையும் கலந்து ஒரு தூதுச்செய்தி சென்றாலொழிய ஷத்ரியர் அதற்கு முன்வரமாட்டார்கள்” என்றாள். குந்தி சிரித்து “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீங்கள் பார்த்தபோது எப்படி இருந்தான்?” என்று பலந்தரை கேட்டாள். “மைந்தர்களில் அவனே பெருந்தோளன் என்றனர்.” குந்தி “உண்மை, என்னை ஒரு புறாவைப்போல் தோளிலேந்துபவன். உன் கணவனைவிட பெருந்தோள் கொண்டவன்” என்று குந்தி சொன்னாள். “இங்கே வரும்படி அவனிடம் சொல்லியிருக்கிறேன். முறையான படைத்திரட்டுடன் வருவதாக சொன்னான். அவனை பார்க்கத்தான் இப்போது மிகமிக விழைகிறேன்.”

பலந்தரை எழுந்துகொண்டு “ஓய்வெடுங்கள், அன்னையே” என்றாள். “நீ இங்கிருப்பாய் அல்லவா?” என்றாள் குந்தி. “ஆம், இங்கிருந்தாகவேண்டும்” என்றாள் பலந்தரை. “இப்போதுகூட என் தலைவர் பொருட்டு கையளவு நிலம் கோரி நிற்பது என்னை கூசச்செய்கிறது. ஆனால் ஏதோ நானறியாத சூழ்ச்சி உள்ளதென்று தோன்றுகிறது.” குந்தி “என்ன சூழ்ச்சி?” என்றாள். அவள் விழிகள் மாறுபட்டன. “அன்னையே, நீங்கள் அறியாததா? உங்கள் மைந்தர் தன் கைகளால் அஸ்தினபுரியின் அரசரையும் இளையோரையும் கொன்றுகுவிக்கவிருக்கிறார். நிலம்பொருட்டு உடன்குருதியரைக் கொன்றாரென்னும் பழி அவர்மேல் அமையாமலிருக்கும்பொருட்டு இளைய யாதவர் செய்யும் சூழ்ச்சி இது.”

“ஆம்” என்றாள் குந்தி. “நீங்கள் மைந்தர்பொருட்டு கவலை கொள்கிறீர்கள் என்றாள் பார்க்கவி” என்றாள் பலந்தரை. “ஆம்” என்று குந்தி சொன்னாள். “உங்கள் இளைய மைந்தரை எவரேனும் வெல்லக்கூடும் என எண்ணுகிறீர்களா?” என்று பலந்தரை கேட்டாள். குந்தி மறுமொழி சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள். பலந்தரை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தாள். சற்றுநேரம் கழித்து எழுந்து வெளியே நடந்தாள். வணங்கிய பார்க்கவியை நோக்கி தலையசைத்துவிட்டு இடைநாழியினூடாக மெல்ல நடந்துசென்றாள்.

வெண்முரசு வாசிப்பு -ராஜகோபாலன்