குருதிச்சாரல் - 41

பகுதி ஆறு : பொற்பன்றி – 6

bl-e1513402911361கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க! எதிரிலான் வெல்க! விழிவலியன் வெல்க!” என்று கூவினார். “வெல்க! வெல்க!” என குரல்கள் இணைந்தொலித்தன. ஊர்வரின் உடல் மழைபட்ட கரும்பாறையென இறுகித்திரண்டிருந்தது. பெரிய குடவயிற்றின்மேல் வெள்ளெலும்பில் செதுக்கிய மணிகளாலான மாலை துவண்டது. எலும்புமணிக் கங்கணம் அணிந்த வலக்கையின் சுட்டுவிரலில் நீலமணியாழி அணிந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் அவரைப்போலவே தோன்றிய துணைப்பூசகர் நின்றிருந்தனர்.

“அரசர் வருக!” என்றார் ஊர்வர். துர்மதன் திரும்பி கைகாட்ட சுபாகுவும் துச்சலனும் இருபக்கமும் வர துரியோதனன் சீர்நடையுடன் வந்தான். அவனுக்குப் பின்னால் துச்சகன் உடைவாள் ஏந்தி வந்தான். துச்சளை இருளுக்குள் கூர்ந்து அப்பால் துச்சாதனன் வருகிறானா என்று பார்த்தாள். துரியோதனன் நீலப்பட்டாடை அணிந்து கரிய கச்சையை இடையில் முறுக்கியிருந்தான். கைகூப்பியபடி வந்து ஊர்வர் முன் நின்றான். நீராடிய குழலில் இருந்து துளிகள் சொட்டி முதுகில் வழிந்தன. தாடியில் நீர்மணிகள் செவ்வொளியில் குருதியோ என மின்னின. இடையிலணிந்திருந்த சுரிகை குருதிச்செம்மை பூசியிருந்தது.

துச்சளையின் கையை தாரை மெல்ல தொட்டாள். துச்சளை திரும்பி நோக்க “நாம் சென்றுவிடுவோம், அரசி” என்றாள். “ஒருவேளை நாம் இதை பார்க்கவே வந்தோம் போலும். பார்த்தால் நம் அழல் அவியும். இல்லையென்றால் இதையே எண்ணி உழல்வோம்” என்றாள் துச்சளை. விகர்ணன் “ஆம், அதுவே மெய். இங்கேயே அனைத்தையும் கழற்றி வீசிவிட்டுத் திரும்பலாம். சாவுக்குப்பின் வரும் அமைதி… மானுடருக்கு தெய்வங்கள் அருளும் நற்கொடை அது என்பார்கள்” என்றான். அருகே நின்றிருந்த சூதமுதியவர் “ஓசையின்மை, இளவரசே” என்றார். விகர்ணன் தலையசைத்தான்.

செதுக்காத மலைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட ஆலயத்திற்குள் கரிய நீளுருளைக் கல்லில் இரு கண்கள் மட்டும் பொறிக்கப்பட்ட கலியின் உருவம் அமர்ந்திருந்தது. அக்கண்கள்மேல் அரக்கு பொருத்தப்பட்டு நீலப்பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் அதன் முன் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரி விளக்குகள் தளர்ந்து எரிந்தன. நீலமலர்தார்கள் சூட்டப்பட்டு இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் எரிய அமர்ந்திருந்த உருவிலாவடிவை  நோக்கிக்கொண்டிருந்தபோது அது உடல்கொண்டு கைகால்கள் நீண்டு எழுந்துவிடுமெனத் தோன்றியது. காகத்தின் இறகுகளாலான விசிறிகள் அதன் காலடியில் விரிக்கப்பட்டிருந்தன. வலமும் இடமும் இரு உயிருள்ள நாகங்கள் புகையில் மயங்கியவை என கிடந்தன.

ஊர்வர் “அரசே, முழுதளித்தல் என்றால் என்ன என்று உங்களுக்கு சொல்லியிருப்பார்கள்…” என்றார். துரியோதனன் “ஆம்” என்றான். “ஐந்து நிலைகளினாலானது இந்தத் தன்னளிப்பு. எச்சமின்றி அளித்தல், ஐயமின்றி பணிதல், பிறிதின்றி ஒழுகுதல், ஒரு போதும் திரும்பி நோக்காதொழிதல், துயரின்றி ஏற்றல். ஐவகை நோன்பில் ஒன்றில் ஒரு கடுகுமணியிடை குறைவென்றாலும் கனியும் தெய்வம் கடுஞ்சினம் கொள்ளும். அறிக, கலியின் நோக்கு கனல்விழியனையே துயருற்றலையச் செய்துள்ளது. அவன் முன் ஊழும் சுருங்கி வளையும்.”

துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இது மீளவழியில்லா பாதை…” என்றார் ஊர்வர். “ஆம், அறிவேன்” என்றான் துரியோதனன். ஊர்வர் புன்னகைத்து “ஆனால் இப்புவியில் அனைத்துப் பாதைகளும் மீளமுடியாதனவே” என்றார். “இது இறப்பு என்று உணர்க!” துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இறந்து பிறக்காதவர் எதையும் அடைவதில்லை” என்றார் ஊர்வர். “இந்த காகச்சிறைத் தடுக்கில் அமர்க!” என்றார். துரியோதனன் மழித்திட்ட தலைமயிராலானதுபோன்ற காகச்சிறகுத் தடுக்கில் அமர்ந்தான். “கைகளை மடியில் பூட்டுக! இங்கு வேறு எவரும் இல்லை என்றே கொள்க! ஒருநாழிகைப்பொழுது உங்கள் தெய்வத்தின் காலடியை நோக்கி அமர்ந்திருக்கவேண்டும்.”

“ஆம்” என்றான் துரியோதனன். “இது இறுதி வாய்ப்பு. இப்பூசனை முடிவதுவரை உங்களுக்கு பொழுதிருக்கிறது. இறுதிக்கணத்தில்கூட நீங்கள் இதிலிருந்து ஒழிவதாக அறிவித்து திரும்பிச்செல்ல முடியும்…” என்றார் ஊர்வர். துரியோதனன் “ஆம்” என்றபின் கலியின் சிலையை நோக்கியபடி நிமிர்ந்த தலையும் நிகர்த்துலாவென அமைந்த பெருந்தோள்களுமாக அமர்ந்திருந்தான். ஊர்வர் துர்மதனை நோக்கி “பூசெய்கைப் பொருட்களனைத்தும் வரட்டும். அவற்றை எண்ணி நோக்கிய பின்னரே நான் வேள்விக்கு எழமுடியும்” என்றார். துர்மதன் கைகாட்ட சூதர்கள் ஒவ்வொரு பொருளாக கொண்டுவந்தனர்.

முதலில் ஏழு குடங்களில் நீர். பின் ஏழு குடலைகளில் தாமரை, குவளை, செண்பகம், நொச்சி, ஊமத்தை, வள்ளை, சங்குமலர் என ஏழுவகை நீலமலர்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. வாழையிலையில் பொதிந்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அப்பங்கள் அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு ஏழு கூடைகளில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஏழு குடங்களில் நுரையெழும் கள். சூதர்கள் கொண்டுவந்த கூடைகளில் இருந்து  ஏழு கருங்கழுத்துக் காகங்கள், ஏழு கருநாகங்கள், ஏழு கரிய அட்டைப்பூச்சிகள், ஏழு கூகைகள், ஏழு கருங்குரங்குகள், ஏழு கரிய மீன்கள், ஏழு ஆமைகள் கொண்டுவந்து ஊர்வருக்கு காட்டப்பட்டன.

அவர் “பலிவிலங்குகள் ஒருங்கியுள்ளனவா?” என்றார். “ஆம், சுனையருகே நின்றுள்ளன” என்றான் துர்மதன். அவர் நிறைவுடன் தலையசைத்தபின் கருவறைக்குள் நுழைந்தார். துணைப்பூசகர்கள் அப்பகுதியைச் சுற்றி நெய்ப்பந்தங்களை ஏற்ற காட்டெரி என அனல் சூழ்ந்தது. நாகங்கள் வெருண்டு கூடைக்குள் எழுந்து படமெடுத்தன. அவர் கருவறைக்குள் மேலும் பந்தங்களை கொளுத்தினார். ஊர்வர் நீலக்குவளையால் அள்ளி இடக்கை சரித்து ஊற்றி ஏழுமுறை கலியை நீர்முழுக்காட்டினார். பின்னர் மணையில் கால்மடித்து அமர்ந்து ஓசையென்று ஒருபோதும் எழுந்திராத நுண்சொற்களை உதடுகளின் அசைவாக சொன்னபடி கைகளில் எழுந்த நுண்செய்கைகளினூடாக கலிதேவனுடன் உரையாடலானார்.

தாரை மெல்ல “நாம் சென்றுவிடுவோம்” என்றாள். துச்சளை மறுமொழி சொல்லாமல் விழியூன்றி நின்றாள். நீலமலர்களை அள்ளி கலிதேவன்மேல் இறைத்தபடி வாழ்த்துச்சொற்களை சொன்னார். தொன்மையான குடிமொழி எதிலோ அமைந்த அச்சொற்கள் வண்டு முரள்வதுபோலவும் புறா குறுகுவதுபோலவும் கிளி மிழற்றுவதுபோலவும் கூகை குழறுவதுபோலவும் புலி உறுமுவதுபோலவும் மாறிமாறி செவியுடனாடின. ஒருகணத்தில் முழவின் தோற்பரப்பில் கையால் வருடும் ஒலியென்றாயின. பின் குறுவில்லின் நாணொலி என உருமாறின.

துணைப்பூசகர் ஏழு இலைகளில் அப்பத்தை எடுத்து அளிக்க கலிதேவனின் முன் அவற்றை படைத்தார். பலியேற்கும்படி கையசைவு காட்டி தொழுதபின் மலர்களை அவற்றின்மேல் தெளித்தார். அவற்றில் ஓர் இலையை எடுத்துக்கொண்டு சென்று அப்பாலிருந்த காஞ்சிரமரத்தின் அடியில் வைத்துவிட்டு திரும்பி வந்தார். இன்னொரு இலையை எடுத்து மும்முறை சுழற்றி காற்றில் தென்திசை நோக்கி வீசினார். கைகூப்பி ஏழுமுறை வணங்கியபின் வெளிவந்து நின்று நான்கு திசையிலும் சூழ்ந்திருந்த இருளை வணங்கினார்.

பின்னர் துரியோதனனிடம் “சொல்க, இது தருணம்” என்றார். “ஆம், மாற்றமில்லை. என் முடிவு அதுவே” என்றான். “எழுந்து நில்லுங்கள், அரசே” என்றார் ஊர்வர். “கலிதேவனின் ஆலயப்படியை தொட்டு மூன்றுமுறை ஆணையிடுக, அதுவே உங்கள் தன்னளிப்பாகும்.” துரியோதனன் முன்னால் சென்று கல்படியில் வலக்கையால் மும்முறை அறைந்து “ஆணை! ஆணை! ஆணை!” என்றான். “இந்தச் சொற்கோள் இனி உங்களை ஆளும்!” என்றார் ஊர்வர். “இது உங்கள் கால்தாங்கும் மண்ணும் தலைகவித்த வானும் சூழ்காற்றும் பெய்யொளியும் அனலும் ஆகி உடனிருக்கும்.” துரியோதனன் “ஆம், பேறுகொண்டேன்” என்றான்.

“அரசே, நான்கு சடங்குகளால் நீங்கள் இவ்வெல்லையை கடக்கவிருக்கிறீர்கள். முதல் சடங்கு உலகளித்தல். உங்கள் பதக்கத்தை இரண்டாக உடைத்து கலிதேவனுக்குப் படைக்கும்போது உங்கள் மூதாதையருடன், குருதியுடன், குலத்துடன், நட்புடன், கடமையுடன் கொண்டுள்ள அத்தனை உறவுகளையும் அறுக்கிறீர்கள்” என்றார் ஊர்வர். துச்சலன் உதவ துரியோதனன் தன் கழுத்திலணிந்திருந்த மாலையில் தொங்கிய அரசப்பதக்கத்தை பிரித்தெடுத்தான். ஊர்வர் கைகாட்ட அதை பலிபீடத்தின்மேல் வைத்தான். துணைப்பூசகர் அளித்த வாளால் அதை ஓங்கிவெட்டி இரு துண்டுகளாக தெறிக்க வைத்தான். அதை அவர்கள் எடுத்தளிக்க மும்முறை தலையைச் சுற்றிவிட்டு கலிதேவனின் காலடியில் வைத்து வணங்கினான்.

“இரண்டாவது சடங்கு உடல் அளித்தல்” என்றார் ஊர்வர். அவன் இடப்பக்கமாக விலகி அமர முதியவரான அரசநாவிதர் தன் கருவிப்பெட்டியுடன் அருகே வந்தமர்ந்தார். அவன் தலைகுனிய அவர் தன் கத்தியை எடுத்து வெண்கல்லில் மும்முறை தீட்டிவிட்டு அவன் குழல்கற்றைகளை மழித்தார். காக்கைச்சிறகுகள் என அவை அவன் முன் விரிக்கப்பட்ட வெண்ணிறத் துணியில் விழுந்தன. தாடியையும் மழித்து முடித்தபோது அவன் முகம் புதுக்கலம் என தெரிந்தது. அவன் உடலெங்குமிருந்த மயிர்ப்பரவலை முற்றாக மழித்து வீழ்த்தினார். அந்த மயிர்க்கற்றைகளை துணியுடன் கொண்டுவந்து கலிமுன் பரப்பினர். அவன் தன் சுரிகையை எடுத்து இடக்கையின் தசைப்பரப்பை கிழித்தான். ஏழு சொட்டு குருதியை மயிர்மேல் உதிர்த்துவிட்டு அதை சுருட்டி எடுத்து மும்முறை தலையைச் சுழற்றி வலப்பக்கமாக எறிந்தான்.

“மூன்றாம் சடங்கு உள்ளம் அளித்தல். இதை கலம்முற்றொழிதல் என்பர்” என்றார் ஊர்வர். அவர் கைகாட்ட துடிகளும் முழவுகளும் கொம்புகளும் மீண்டும் முழங்கத் தொடங்கின. ஆலயத்திற்கு தென்புறமாக செங்கல் அடுக்கி அமைக்கப்பட்டிருந்த பெரிய வேள்விக்குளத்தில் ஏழு பூசகர்கள் விறகுகளை அடுக்கினர். கலிதேவனின் கருவறையில் இடப்பக்கம் எரிந்த பந்தத்திலிருந்து சுடர்பொருத்தி எடுத்துச்சென்று அந்த விறகுக்குவையை பற்றவைத்தார். தழல் எரிந்து எழத்தொடங்கியதும் முழவுகளும் துடிகளும் கொம்புகளும் அவிந்தன. துரியோதனனை ஊர்வர் அழைத்துச்சென்று தெற்குநோக்கி போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாயில் அமரச்செய்தார். அவனுக்குப் பின்னால் தம்பியர் அமர்ந்தனர். அனலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த பூசகர் வேதச்சொல்லை ஓதத் தொடங்கினர்.

சற்றுநேரம் கழித்தே அச்சொற்களின் ஒலிமாறுபாட்டை துச்சளை உணர்ந்தாள். அவள் வியப்புறுவதை அவள் கையை தொட்டுக்கொண்டு நின்றிருந்த தாரை அறிந்து “அது அசுரவேதம். எங்கள் குடிகளில் மழையெழ வேண்டி நிகழும் வான்தொழு வேள்விகளில் அச்சொற்களை கேட்டிருக்கிறேன்” என்றாள். “காடுகளுக்குள் இருந்து அசுரகுடிப் பூசகரை முறைச்சொற்கள் கூறி அன்னமும் ஆடையும்  பொன்னும் பரிசில்களாக அளித்து வரவழைத்து அதை இயற்றுவோம். ஆண்டுபிறழாமல் வான்கனியச் செய்வது அவர்களின் சொல்லே.”

துச்சளை “ஆனால் நான் இதை முன்பு கேட்டது போலுள்ளது” என்றாள். “நான் கேட்ட அசுரவேதம் தவளைகளை வழுத்திப் பாடுவது. தவளைக்குரல் எனவே ஒலிப்பது” என்றாள் தாரை. “ஆம், இந்தச் சொல்லொழுக்கு அதர்வ வேதத்தைப்போல் உள்ளது” என்றான் விகர்ணன். துச்சளை “தவளைப்பாடல் வேதம் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “மாண்டூக்யம் அதர்வ வேதத்தைச் சார்ந்த மரபு” என்றான் விகர்ணன். அனலெழுந்து கூத்தாடத் தொடங்கியது. அதில் அவர்கள் மரக்கரண்டியால் நெய்யை ஊற்றிக்கொண்டே இருந்தனர். நடமிடும் தழலுடன் வேதச்சொல் இசையும் விந்தையை துச்சளை பலமுறை கண்டிருந்தாள். காட்டிலெழும் தழலுடன் மேலும் பிழையின்றி இணைந்தாடியது அசுரவேதம்.

தழலாட்டத்திற்கு தாளச்சொற்கட்டுபோல. தழலை செவியால் அறிவதுபோல. அறியாது விழிதிருப்பியபோது பெருநிழல்களாக எழுந்த காடு அவ்வோசையில் தாண்டவமாடுவதை துச்சளை கண்டாள். முதல்முறையாக அச்சம் அவள் நெஞ்சை கவ்வியது. அவள் கொண்ட அச்சத்தை உணர்ந்தவளாக தாரை “செல்வோம், அரசி” என்றாள். “ஆம்” என்றாள். ஆனால் அங்கிருந்து அசையமுடியுமென தோன்றவில்லை. விழிகளை காட்சியால் அவ்வாறு பிணைத்துவிடமுடியும் என அப்போது அறிந்தாள். பெருமூச்சுவிட்டபடி கால்மாற்றி நின்றாள்.

வேள்வித்தீயில் நீலமலர்கள் பொழியப்பட்டன. அவை பொசுங்குகையில் முதற்கணம் தசைவேகும் கெடுமணமெழுந்து குமட்டச்செய்தது. பின்னர் அப்பங்கள். கருகும் அன்னம் எங்கோ அறிந்த மணம் கொண்டிருந்தது. பின்னர் கனிகளும் காய்களும் அவியாக்கப்பட்டன. இறுதியாக கள்குடங்கள் அனலில் பெய்யப்பட்டன. கருகியணைந்த அனல்மேல் நெய் ஊற்றப்பட்டு தழல் மூட்டப்பட்டது. வேதக்குரல் காட்டு ஓடையின் ஓசைகொண்டு எழுந்து சூழ்ந்தது. முதலில் தேரட்டைகள் அனலுக்கு ஊட்டப்பட்டன. அவை மெழுகென உருகி எரியாயின. பின்னர் காகங்கள். அனலில் போடப்பட்டபோது அவை சிறகடித்து எழமுயன்று பொசுங்கி விழுந்து துள்ளித்துள்ளி விழுந்து அனல்கொண்டன.

தாரை குமட்டலோசையுடன் குனிந்தாள். “ம்” என விகர்ணன் அதட்ட அவள் கால்மடித்து அமர்ந்து தலையை முழங்கால்மேல் வைத்துக்கொண்டாள். குனிந்து அவளை நோக்கினால் தானும் வாயுமிழ்ந்துவிடுவோம் என துச்சளை அஞ்சினாள். கூகைகள் பின்னர் அவியாயின. அனலில் விழுந்ததுமே அவை அச்சமூட்டும் ஓசையுடன் இருமுறை துள்ளி அமைந்தன. கரிய மீன்கள் அனலை அடைந்ததுமே செந்தழலால் வாய் திறந்து கவ்வப்பட்டன. இன்னும் இன்னும் என அனல் எழுந்து கிளை விரித்தது. நாவாக, மலராக, வான்குருதியாக. அனலில் இருந்து விழிவிலக்க அவளுக்குள் சித்தம் திமிறித்துடித்தது. விழி முதலில் அனலுக்கே கட்டுப்பட்டது என அவள் எண்ணினாள்.

ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கருங்குரங்குகள் அனலில் இடப்பட்டன. கைகள் கட்டப்பட்டிருந்த அவற்றின் வால்கள் சொடுக்கி அதிர்ந்து நீண்டு பொசுங்கி எரிய உடல் உருகி கண் நோக்கியிருக்கவே விலாவெலும்புகள் தோல்மீறி எழுந்து வந்தன. ஒரு குரங்கின் எலும்புமுகம் தசைப்பரப்பு சேறு என வழிந்தகல உந்தி மேலெழுந்தது. அதன் விழிக்குழிகளிலும் பல்நிறைந்த வாயிலும் செவ்வழல் ஊடுருவி எழுந்தது. ஏழாவது குரங்கு முன்னர் எரிந்த குரங்குகளை தன் சிறுவிழிகளில் மின்னும் அனலுடன் வேறெங்கிருந்தோ என நோக்கிக்கொண்டிருந்தது. அதன் சேர்த்துக் கட்டப்பட்ட கைகள் கூப்பியவை போலிருந்தன. அதை பூசகர் தூக்கியபோது உளிதீட்டும் ஓசை எழ ஒருமுறை விதிர்த்து திரும்பி அவருடைய கைகளை பற்றிக்கொண்டது. அனலில் அதை அவர் வீசியதும் அஞ்சி எரியும் விறகனலைப் பற்றி அந்த அணைப்பிலேயே முடிபொசுங்கி அரக்குடன் சேர்ந்து எரிந்தது.

நாகங்களை ஒவ்வொன்றாக மண்ணில் விட்டார்கள். வேதம் ஓதியபடியே அதன் வளைந்த உடலினூடாக கைகளால் வருடினார் பூசகர். மெல்ல அது உடல்முறுக்கி ஈரமென ஒளி படர்ந்த சுருள்களுக்குமேல் படமெடுத்தது. அதன் வாலில் ஒருவர் தட்ட திடுக்கிட்டு திரும்பி மண்ணில் கொத்தியது. அக்கணமே அதை கழுத்தைப் பற்றி தூக்கினார். அவருடைய கையில் சுற்றி வால்துடித்தது. வால்முனையை இடக்கையால் பற்றி சுருளவிழ்த்து அனல்நோக்கி வீசினார். தழலுக்குள் கருந்தழல் என அதன் வால் நெளிந்து மறைந்தது.

ஏழு நாகங்களையும் அவியாக்கிய பின்னர் பூசகர் ஆமைகளை எடுத்தனர். அதை அனலில் இட்டபோது துள்ளி மல்லாந்தது. அதன் அடிவயிற்றின் தசை உருகி பற்றிக்கொண்டது. ஓடு வெடித்தபோது எழுந்துவிடுவதுபோல தீயுடன் துள்ளியது. ஏழாவது ஆமையை எடுத்து தலைக்குமேல் தூக்கி வேதச்சொல்லை உரக்கக் கூவியபின் நெருப்பிலிட்டார். பூசகர்கள் எழுவரும் இரு கைகளையும் வான்நோக்கித் தூக்கி வேதப்பேரொலி எழுப்பினர். முழவுகளும் கொம்புகளும் துடிகளும் இணைந்துகொள்ள அலையலையாக அப்பேரோசை எழுந்து இருண்ட வானை மோதியது.

ஊர்வர் “அரசே, இவ்வேள்வியில் அச்சம் எனும் அட்டையை அவியாக்கினீர்கள். விழைவெனும் காகங்கள், காமம் எனும் குரங்குகள், ஆணவமெனும் கூகைகள், சோர்வெனும் ஆமைகள் அவியாக்கப்பட்டன. மந்தணம் எனும் மீன்கள் அனலூட்டப்பட்டன. இறுதியாக நாக வடிவுகொண்ட வஞ்சங்கள். அறிக, இனி உங்களுக்கு இப்புவியில் அஞ்சவும் விழையவும் வெல்லவும் இணையவும் மகிழவும் ஏதுமில்லை. பொன்னோ மண்ணோ பெண்ணோ ஒரு பொருட்டல்ல. புகழும் விண்ணுலகும் எவ்வகையிலும் இனி உங்களுக்கு பொருள்படுவன அல்ல. அரசே, இனி உங்களுக்கு இப்புவியில் எவருடனும் வஞ்சம் என ஏதுமில்லை” என்றார் ஊர்வர். “ஆம்” என துரியோதனன் கைகூப்பினான். “இனி ஆத்மாவை அளித்தல் எனும் சடங்குமுழுமை. அது இறந்துபிறந்தெழல் என்று சொல்லப்படும்” என்றார் ஊர்வர். “ஆம்” என்றான் துரியோதனன்.

நீலக் கச்சை அணிந்த பூசகர் எரியும் பந்தத்துடன் முன்னால் நடக்க அவருக்குப் பின்னால் முழவுகளையும் கொம்புகளையும் துடிகளையும் முழக்கியபடி செவ்வாடை அணிந்த சூதர் சென்றனர். தொடர்ந்து கையில் நீர்க்குடத்துடன் ஊர்வர் நடந்தார். அவரைத் தொடர்ந்து துரியோதனன் நடக்க தம்பியர் உடன்சென்றனர். “செல்வோமா?” என்றாள் துச்சளை. தாரை தரையில் சோர்ந்து சுருண்டு படுத்துவிட்டிருந்தாள். விகர்ணன் “வேண்டாம் அரசி, இதற்குமேல் என்னாலும் இயலாது” என்றான். “ஊன் எரியும் கெடுமணம் அல்ல இது. நாமறியா பெருங்கீழ்மைகளின் நாற்றம்.”

ஒருகணம் அடிவயிறு பொங்கி நெஞ்சிலறைய துச்சளை குமட்டினாள். பின்னர் அதை உள்ளே செலுத்தி உடலை அடக்கி “நான் சென்று பார்க்கவிருக்கிறேன்” என்றாள். விகர்ணன் “வேண்டாம், இதிலிருந்து நாம் மீளவே முடியாது” என்றான். “இது என்னில் எதை நிறைக்கிறதென்று பார்க்கிறேன்” என்றாள் துச்சளை. “இதை பார்க்காதொழிந்தால் இதுவே என் நெஞ்சில் நின்று பெருகும். இத்துடன் நானும் இங்கே இறந்து பிறந்தால் அது நன்றே.” விகர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் திரும்பி அவர்கள் சென்ற திசை நோக்கி சிற்றடி வைத்து நடந்தாள். கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் அவளால் சீராக நடக்கமுடியவில்லை. இடறி நின்றும் மூச்சிளைக்க ஓய்வெடுத்தும் தொடர்ந்துசென்றாள்.

ஒரு மருதமரத்தடியை அடைந்ததும் கால் தயங்கி நின்றாள். அதன் முதலைத்தோல் பட்டைப்பரப்பில் கையூன்றி எழுந்த வேர்புடைப்பில் மெல்ல அமர்ந்தாள். சரிந்துசென்ற பாதையின் இறுதியில் ஊர்வரும் துணைப்பூசகரும் கூடி நின்றிருந்தனர். நடுவே ஓடையிலிருந்து சால் திருத்தி கொண்டுவந்து சேர்த்த சுனை நீர்ச்சுழிமேல் அனல் அலைய இருளில் ஒரு பெருநாகவிழி எனத் தெரிந்தது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு அலைவடிவுகள் நுரைக்கோடுகளெனப் பதிந்து சூழ அதில் இறங்குவதற்காக மரத்தாலான படிகள் இடப்பட்டிருந்தன. ஊர்வர் அதனருகே சென்று நிற்க துரியோதனன் அவர் அருகே சென்று வணங்கி நின்றான். ஊர்வர் கைகாட்ட ஓசைகள் ஓய்ந்தன.

ஊர்வர் “அரசே, இது இறுதிக்கணம். இனி பிறிதொரு எண்ணத்திற்கு இடமில்லை. இப்போதுகூட பின்னடி வைக்கமுடியும். உங்கள் உள்ளம் சிதைவுறும், உடல் நோயுற்று அழியும். ஆனால் எழும்பிறவிகளில் மீட்புண்டு, மண்ணிலிருந்து வரும் எள்ளும் நீரும் வந்துசேர பாதையும் எஞ்சும். இவ்வெல்லையைக் கடந்தால் உங்கள் ஆத்மா முடிவின்மையை நோக்கி வீசப்படுகிறது. முடிவற்றவை இருள், தனிமை, வெறுமை மூன்றுமே என்று அறிக” என்றார். துரியோதனன் “என் முடிவில் மாற்றமில்லை. என் தெய்வம் என்னை அணிந்துகொள்க!” என்றான்.

“அவ்வாறே ஆகுக!” என்ற ஊர்வர் துர்மதனிடம் கையசைக்க அவன் திரும்பி ஓடிச்சென்று கைவீசி பலிவிலங்குகளை கொண்டுவரச் சொன்னான். சூதர்கள் காட்டில் கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளை கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டுவந்தனர். ஏழு எருமைகள் தளர்ந்த நடையுடன் உருளைக் கருவிழிகளில் பந்தவெளிச்சங்கள் துளிகொள்ள பெருமுரசுக்கோல்முழை என குளம்புகளை தூக்கிவைத்து நடந்து வந்தன. ஓசைகளுக்கேற்ப அவற்றின் செவிகள் அசைந்தன. துயிலில் என ஏழு கழுதைகள் வந்தன. தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி கழுதைகள் துயின்று நிற்க எருமைகள் குனிந்து தரையிலிருந்து புல்சரடுகளை கடித்து மென்றன. ஏழு பன்றிகளை கால்கள் சேர்த்துக் கட்டி நடுவே மூங்கில் செலுத்தி தூக்கிக்கொண்டுவந்து போட்டனர். அவை கரிய தோல்நீர்ப்பை என வயிறுகள் துள்ள எம்பி எம்பி முழவொலியெழுப்பி உறுமின.

பேருடல்கொண்ட இரு துணைப்பூசகர்கள் இடையளவு உயரம் கொண்ட பெரிய பள்ளிவாட்களுடன் வந்து நின்றனர். சுனைக்கரையில் இருந்த பெரிய மரவட்டம் பலிபீடம் என்பதை துச்சளை அப்போதுதான் உணர்ந்தாள். அந்த அதிர்ச்சி அவளை அறியாமல் எழுந்து நிற்கச்செய்தது. பள்ளிவாளை ஒரு பூசகர் அசைத்தபோது அதிலமைந்திருந்த வெண்கலச் செண்டுமணிகள் சிலம்பின. முதல் எருமையை இரு பூசகர் அழைத்துவந்து பலிபீடத்தருகே நிறுத்தினர். தலையில் நீர் தெளிக்கப்பட்டதும் அது கழுத்தை நீட்டியது. எடைமிக்க வாள் மின் என இறங்கி பீடத்தில் பதிந்து நடுங்க எருமைத்தலை எடையுணர்த்தும் ஓசையுடன் அப்பால் விழுந்து சேற்றில் உருண்டு சுனைநீருக்குள் விழுந்தது.

குளம்புகள் இழுபட சேற்றில் கிடந்து துடித்த எருமையின் வெட்டுண்ட கழுத்துவழியாக குருதி கொப்புளங்களுடன் பெருகி வழிந்து சுனைநீரை அடைந்தது. அதன் பெரிய வயிறு காற்றொழியும் தோல்கலம் என அதிர்ந்து சுருங்க விலாவெலும்புகள் உள்ளே அசைந்தன. வால் சுழன்று பூழியை அளைந்தது. துணைப்பூசகன் பீடத்தை இழுத்து இடமாற்றம் செய்தான். இரண்டாவது எருமை அங்கே கொண்டுவரப்பட்டது. அதன் குருதி சிற்றோடையாக வழிந்து சுனையில் கலந்தது. குருதி கருநிறம் கொண்டிருப்பதாக துச்சளை எண்ணினாள். ஆனால் செம்மையை நினைத்ததுமே அது செந்நிறம் கொண்டது.

பலிபீடத்தை இழுத்து அகற்றி சுனையைச் சுற்றி அமைத்து ஏழு எருமைகளையும் வெட்டி குருதிபெருகச் செய்ததும் கழுதைகள் கொண்டுவரப்பட்டன. குருதி மணம் பெற்று அவை மயிர்சிலிர்த்து செவிகோட்டி மூச்சொலி எழுப்பின. இருவர் பின்னின்று தள்ள தயங்கி பிடரி அதிர நின்று பின் மெல்ல பலிபீடத்தை அணுகின. முதல் கழுதையின் வெட்டுண்ட தலை சேற்றிலேயே செவியசைத்தபடி கிடந்தது. அதை கைக்கோலால் தள்ளி நீரிலிட்டனர். தரையில் ஒருக்களித்து விழுந்து ஓட முயல்வதுபோல காலசைத்தது. இரண்டாவது கழுதை வெட்டப்பட்டபோது பின்னால் நின்ற கழுதை மெல்ல கனைத்தது. அதன் தலை நீரில் விழுந்த பின்னரும் காதுகள் அசைந்து அங்கே மீன் கொப்பளிப்பதுபோல தோன்றியது. பன்றிகளை பீடங்களின்மேல் வைத்து அடிக்கழுத்தை கிழித்து குருதி பீறிடச்செய்து தலையுடன் சேற்றில் கிடத்தினர்.

சுனையைச் சூழ்ந்து பலியுடல்கள் இறுதித்துடிப்பில் அதிர்ந்துகொண்டிருக்க சேற்றில் ஊறி வழிந்த குருதியால் சுனை பெரும்புண் என மாறியது. குருதியின் சுழிப்பு. நோக்கிழந்த ஊன்விழி.  ஊர்வர் துரியோதனனிடம் “அரசே, அணி களைக! இப்புவி அளிக்கும் ஒரு துளிகூட உடலில் இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் கொள்க!” என்றார்.  துச்சலன் துரியோதனனின் கைகளில் இருந்த அரசக் கணையாழியை கழற்றினான். இடையில் இருந்த மங்கலச்சரடை சுரிகையால் அறுத்து எடுத்தான். துர்முகன் அவன் இடையிலிருந்த ஆடையை கழற்றினான். உள்ளே கட்டியிருந்த தற்றாடையை அதன்  முடிச்சுகளை அறுத்து அகற்றினான். சுபாகு அவன் தலையில் மலரிதழ்கள் எஞ்சியிருக்கின்றனவா என நோக்கினான்.

முழுதுடலுடன் நின்ற துரியோதனனை ஊர்வர் சுற்றி வந்து நோக்கினார். உடலில் ஒட்டியிருந்த புல்சரடு ஒன்றை எடுத்து வீசினார். துணைப்பூசகரும் அவனை மும்முறை சுற்றி வந்து நோக்கினர். துச்சளை அவன் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள். முன்பு பலமுறை நோக்கிய உடலென்று தோன்றியது ஏன் என அவள் அகம் குழம்பியது. மானுட உடல் அல்ல அது. கல்லில் மட்டுமே அம்முழுமை இயல்வது. மயிரற்ற உடல் உலோகப் பளபளப்பு கொண்டிருந்தது. எங்கோ என்றுமென இருக்கும் அச்சு ஒன்றில் வார்த்தெடுக்கப்பட்டது. தெய்வங்கள் மானுடக் கைகளை எடுத்துக்கொண்டு நுண்சீர் செய்தது. இனியில்லை என முழுமையைச் சென்றடைந்த தசைகள், நரம்புகள். கால்நகங்கள் சிறுத்தைக் குருளைகளின் விழிகள் என வெண்ணிற ஒளி கொண்டிருந்தன.

ஊர்வர்  துரியோதனனின் கைகளைப் பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக, அரசே!” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக!” என்றார் ஊர்வர். துரியோதனன்  திடுக்கிட்டவன்போல திரும்பி அவரை நோக்கினான். “செல்க, இது உங்கள் அன்னையின் கருக்குழி” என்றார் ஊர்வர்.  அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக!” என்றார் ஊர்வர். அவன் குழந்தைபோல் அதை செய்தான். பிறிதெவரையோ என அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அறியாமல் நடந்து அக்குழுவருகே வந்துவிட்டிருந்த துச்சளை அவ்விழிகளை அண்மையில் நோக்கினாள். அறியாமையின் பேரழகுகொண்ட இளமைந்தருக்குரிய விழிகள் அவை. மறுகணம் வாய்திறந்து மழலைச்சொல் எடுக்கக்கூடுமென தோன்றச்செய்தவை.

சுனையில் நீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் கருநாகங்கள் நெளிவதுபோலத் தோன்றியது. “இறங்கி மூழ்குக!” என்றார் ஊர்வர்.  “இது கருபுகுதல். அங்கு நீருள் நூற்றெட்டு நொடி அமர்ந்திருக்கவேண்டும். முதல் முழுக்கில் உங்கள் பழைய நினைவுகள் அழியும். இரண்டாம் முழுக்கில் மூதாதையரை காண்பீர்கள். மூன்றாம் முழுக்கில் அவர்களை உதைத்து உதறி தலைகீழாக மண்ணில் விழுவீர்கள்.” துரியோதனன் பால்பற்கள் கொண்ட குழவியரின் வாய்களில் மட்டுமே எழும் இனிய புன்னகையுடன் அவரை நோக்கி தலையசைத்தான். அறியா உணர்வெழுச்சியால் துச்சளை விழிநீர் மல்கினாள்.

துரியோதனன் மெல்ல படிகளில் இறங்கி இடைவரை குருதியில் நின்றான். “மூழ்குக!” என்றார் ஊர்வர். அவன் கண்மூடி நீரில் மூழ்க அவர் நூற்றெட்டு வரை விரல்விட்டு எண்ணினார். அவன் நீர் பிளந்து எழுந்தான். மழிக்கப்பட்ட தலையிலிருந்து குருதி சொட்டி வடிய வயிறுகிழித்து எழும் மகவென்றே தோன்றினான். “பிறிதொருமுறை! பிறிதொருமுறை!” என்றார் ஊர்வர். அவன் நீரில் மூழ்கியபின் அவர் எண்ணத்தொடங்கியபோது நீர் பிளந்து எழுந்த காகம் ஒன்று “கா!” என்னும் கூச்சலுடன் துளிசொட்டச் சிறகடித்து இருளில் மிதந்து சுழன்றது. மீண்டும் ஒரு காகம் எழுந்து அதனுடன் இணைந்தது. கைகூப்பியபடி எழுந்த துரியோதனன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் ஊர்வர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் எழுந்து நீரைச் சிதறடித்து இருளில் சுழன்றன.

மூன்றாம் முறை துரியோதனன் நீரிலிருந்து எழுந்து கைகூப்பியபடி கரையை அணைந்தபோது தலைக்குமேல் இருளின் சுழி என நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் சுழன்று பறந்தன. அவற்றின் குரல்கள் இணைந்து எழுந்த ஓசையை அவள் முன்பு கேட்டிருந்தாள். ஊர்வர் “நேராகச் சென்று உங்கள் தெய்வத்தின் படியில் தலைவையுங்கள், அரசே” என்றார். அவன் கூப்பிய கைகளை விலக்காமல் நடந்துசெல்ல அவன் பின்னால் ஊர்வரும் துச்சாதனனும் துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சென்றனர். துணைப்பூசகர் தொடர்ந்தனர்.

சுனையருகே நின்றபடி துச்சளை நெஞ்சில் கைவைத்து நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளிருந்து அலையலையென காகங்கள் எழுந்து இருளில் கருங்குமிழிகள் என சுழன்றுகொண்டிருந்தன. காலடியில் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டு மேலே சென்று குனிந்து நோக்கினாள். நீருக்குள் இருந்து ஓசையிலா வழிவாக நாகங்கள் கிளம்பி அம்புகள் என இருள்செறிந்த காட்டுக்குள் சென்று புதைந்துகொண்டிருந்தன. துள்ளி ஓடி மேலேறி மருதமரத்தடியில் சென்று நின்றாள். உடல் மெய்ப்புகொண்டு தசைகள் இறுகி அதிர்ந்தன. பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் இழுபட்டிருந்தன. அங்கும் தரையெங்கும் நிழல்களுடன் நாகங்களும் நெளிவதை கண்டாள்.

மீண்டும் ஓடி மேலே கலிதேவனின் ஆலயமுகப்பிற்கு சென்றாள். அங்கே துரியோதனன் ஆலயத்தின் படிக்கட்டில் நெற்றியை மும்முறை முட்டி வணங்கினான். திரும்பி நோக்க ஊர்வர் அவனுக்கு அவனுடைய சுரிகையை இரு கைகளாலும் எடுத்தளித்தார். அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான்.  துர்மதன் அவன் ஆடைகளை எடுத்து அணிவிக்கத் தொடங்கினான்.