குருதிச்சாரல் - 4

பகுதி ஒன்று : பாலைமகள் – 4

blதேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன் ஒரு புரவியின்மேல் பொதிகளை கட்டிக்கொண்டிருந்தான். “கிளம்பப்போகிறார்கள்” என்றாள் பூர்ணை. “கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள், நெடுநேரமாக” என்றாள் சுரபி. தேவிகை நெஞ்சு படபடக்க அதை பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் பூர்ணையின் கையைத் தொட்டு “ஏன் வந்தோம் என உணரத்தொடங்கிவிட்டேன், பூர்ணை” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள், அரசி?” என்றாள் பூர்ணை. “நான் எப்படி அவர் முன் சென்று நிற்பேன்? எதை பேசத் தொடங்குவேன்? முன்பு நான் பேசியது முறைமைச்சொல். அதை எவரிடமும் சொல்லலாம். அடுத்த சொல்லை எடுப்பதுதான் கடினம்” என்றாள். “இக்கட்டான சூழல்களில் நடிப்பதுதான் நல்லது. அது ஒரு முகப்போர்வையென நம்மை காக்கும். நடிப்பில் நாம் நன்கு இயன்று அமைந்தபின்னர் மெல்ல அதை விலக்கி மெய்முகம் காட்டமுடியும்” என்றாள் பூர்ணை.

தேவிகை “என்ன நடிப்பது?” என்றாள். “அங்கே உங்கள் கணையாழி ஒன்று விழுந்துவிட்டது. அதைத் தேடி வந்தீர்கள்” என்ற பூர்ணை ஒரு கணையாழியை எடுத்து “இது” என்றாள். “அதை எடுத்ததும் நீங்கள் கிளம்பும்போது தற்செயலாக அவரை பார்க்கிறீர்கள். இந்தக் கணையாழி எத்தனை இன்றியமையாதது என்கிறீர்கள், மீண்டும் கண்டதனால் முகமனுரைப்பவர்போல. பின்னர் எண்ணியிராதபடி நினைவுகூர்ந்து நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா செல்கிறீர்கள் என்று கேளுங்கள். ஆம் என்று சொல்வார். அவ்வாறென்றால் ஒரு தூதை அளிக்கமுடியுமா என்று பேச்சை தொடங்குங்கள். அதற்குள் உங்கள் கால்நடுக்கம் நின்றுவிட்டிருக்கும்.”

தேவிகை சில கணங்கள் எண்ணியபின் “சரி” என்றாள். சுரபி “அக்கணத்தில் எவ்வுணர்வு எழுமென்று முன்னரே வகுக்கமுடியாது, அரசி. எதுவாயினும் அது அக்கணத்தை ஆளும் தெய்வங்களுக்குரியதென்று கொள்ளுங்கள். நாம் எதற்கும் பொறுப்பல்ல” என்றாள். தேவிகை அவளை ஒருகணம் நோக்கி இமைக்காமல் அமைந்து மீண்டு “நம்மை மீறியா?” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே?” தேவிகை பெருமூச்சுடன் “ஆம்” என்றாள்.

தேரிலிருந்து பூர்ணை முதலில் இறங்கினாள். தேவிகை இறங்கியதும் பூர்ணை மட்டும் முன்னால் சென்று அவளை எதிர்கொண்ட காவலனிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு உள்ளே சென்றாள். சுரபியும் தேவிகையும் நடந்து விடுதி முகப்பை அடைந்தனர். தேவிகையின் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அவள் அப்போது தன் முகத்தை ஏதேனும் ஆடியில் பார்க்க விரும்பினாள். கூந்தல் கலைந்து நெற்றியில் விழுந்திருப்பதை உணர்ந்து அள்ளி காதோரம் செருகிக்கொண்டாள். நெஞ்சை உலைத்தபடி பெருமூச்சு ஒன்று வந்தது.

சுரபி “முகம் கழுவிக்கொள்ளலாம், அரசி” என்றாள். அதை தேவிகை மிக விரும்பினாள். “ஆம்” என்றபடி பக்கவாட்டில் சென்று அங்கிருந்த நீர்த்தொட்டியை அணுகி குனிந்து அதில் தன் முகத்தை பார்த்தாள். அந்த முகம் அவளை திடுக்கிடச் செய்தது. படபடப்புடன் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டாள். பின்னர் முகத்தின்மேல் நீரள்ளிவிட்டு கழுவினாள், அந்த முகத்தை நீர்ப்பாவையை என கலைக்க விழைபவள்போல. சுரபி அளித்த மரவுரியால் முகத்தை துடைத்தாள்.

சுரபி பேழையிலிருந்து கொம்புச்சீப்பை எடுத்து அளித்தாள். அவள் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு தேவிகை அதை வாங்கி தன் தலையை சீவிக்கொண்டாள். சுரபி அவள் கழுத்திலணிந்திருந்த நகைகளை சீரமைத்தாள். தேவிகை அதை முரண்கொண்ட உடலசைவால் தவிர்த்து தானே சீரமைத்துக்கொண்டாள். ஆனால் அவள் எடுத்தளித்த நறுஞ்சுண்ணச் செப்பை மறுக்க முடியவில்லை. அவளை நோக்காமல் அதை வாங்கி சுண்ணத்தை சிறுதுணியில் சிறிது உதிர்த்து அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தாள்.

“அகவைகளுக்கு அவற்றுக்குரிய அழகுகள், அரசி” என்றாள் சுரபி. அந்த மீறல் அவளை எரிச்சல் கொள்ளச்செய்ய ஒன்றும் பேசாமல் திரும்பினாள். வெளியே வந்த பூர்ணை “கிடைத்துவிட்டது, அரசி. கீழே விழுந்து கதவுக்குப் பின்னால் கிடந்தது” என்றாள். அவள் உதடுகள் வளைய “நன்று” என்றாள். உளமொருங்காமல் புன்னகை செய்வது இத்தனை கடினமா என்ன? விடுதிக்காவலர் அவள் பின்னாலேயே வந்து “நல்லவேளை… இல்லையென்றால் ஏவலர் அனைவரையும் நோக்கவேண்டியிருக்கும். நாளுக்கு இரண்டாயிரம்பேர் வந்து உண்டு மீளும் விடுதி இது” என்றார்.

பூர்ணை “அரசி, இளைய பால்ஹிகர் இங்குதான் இருக்கிறார். சற்றுமுன் அவருடைய ஏவலனை பார்த்தேன்” என்றாள். பொருளில்லாமல் “ஆம்” என்றாள் தேவிகை. விடுதிக்காவலர் “கிளம்பிக்கொண்டிருக்கிறார். அவர் எதையோ எழுத வேண்டியிருந்தமையால் பிந்துகிறது. பிறர் காத்திருக்கிறார்கள்” என்றார். சுரபி “இங்குதானிருக்கிறாரா? என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்” என்றாள். அனைத்தும் ஒரே கணத்தில் எளிதாகிவிட்டதைக் கண்ட பூர்ணை “ஆம் அரசி, அவரிடம் சொல்லலாம். காவலரே, அரசியை அவருக்கு அறிவியுங்கள். அறையில்தான் இருக்கிறார் அல்லவா?” என்றாள்.

“ஆம், அங்குதான்… வருக, அரசி” என்றார் விடுதிக்காவலர். ஆனால் தேவிகை தயங்கி நின்றாள். “செல்க!” என்று அவள் தோளை மெல்ல தொட்டாள் பூர்ணை. அவள் காலகள் எழ மறுத்தன. “செல்க, அரசி” என்றாள் பூர்ணை. விடுதிக்காவலர் முன்னால் சென்றுவிட்டிருந்தார். “நாம் திரும்பிவிடுவோம்” என்றாள் தேவிகை. “அரசி, அவர் உங்கள் வருகையை அறிவித்துவிட்டார்” என்றாள் பூர்ணை. “ஆம், நீங்கள் திரும்பினால் பிழையென்றாகும்” என்றாள் சுரபி. “நான் எதையும் அவரிடம் பேசவிரும்பவில்லை” என்றாள் தேவிகை. “சரி, அவ்வாறெனில் முகமன் மட்டும் உரைத்துவிட்டு கிளம்புங்கள்” என்றாள் பூர்ணை.

தேவிகை தளர்ந்த காலடிகளுடன் நடந்தாள். விடுதிக்காவலர் வந்து “இளவரசர் காத்திருக்கிறார்” என்றார். “ஆம்” என்றபின் அவள் முகத்தின்மேல் ஆடையை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு சென்று அறைவாயிலில் நின்றாள். விடுதிக்காவலர் அதை மெல்ல தட்டி “சிபிநாட்டு அரசி” என்றார். “வருக!” என பூரிசிரவஸின் குரல் கேட்டது. அப்போது அந்தக் குரல் அவளுக்கு திகைப்பை அளித்தது. முற்றிலும் அயலான, முதிர்ந்த மனிதரின் குரல். விடுதிக்காவலர் கதவைத் திறந்து “செல்க, அரசி!” என்றார். அவள் உள்ளே சென்றாள்.

blஉள்ளே குறும்பீடத்தில் அமர்ந்திருந்த பூரிசிரவஸைக் கண்டதும் தேவிகை நின்றாள். அவனே எழுந்து தலைவணங்கி “வருக, அரசி… இந்நாள் இனியது. இருமுறை அரசியால் வாழ்த்தப்பட்டேன்” என்றான். அத்தருணத்தில் முறைமைச்சொல் மிக இனிதாக இருந்தது. “ஆம், நானும். தற்செயலாக இங்கே வரவேண்டியிருந்தது. என் கணையாழி இங்கே விழுந்துவிட்டிருந்தது. நீங்கள் கிளம்பாததும் நன்றே” என்றாள். “கிளம்பிக்கொண்டிருந்தேன்… ஒரு கடிதம்” என்றான்.

அவள் கைகளை மார்பில் கட்டிக்கொண்டபோது முகத்திரை நழுவியது. அதை தலைமேல் இழுத்துவிட்டுக்கொண்டு புன்னகையுடன் “ஆம், நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா கிளம்புகிறீர்கள்?” என்றாள். “ஆம், இந்த ஓலை என் மூத்தவருக்கு…” அவள் சிரித்து “என்னைப்பற்றி அல்ல என நினைக்கிறேன்” என்றாள். அவன் தலையை அண்ணாந்து உரக்க சிரித்து “இல்லை, இது ஒற்றர்செய்தி” என்றான். அவன் குரல்வளை அழகாக இருந்தது என நினைத்தாள். இளமையிலிருந்ததைவிட தோள் பெருத்திருந்தான். மலைமக்களுக்கே உரிய சுண்ணவெண்ணிறம். சிவந்த உதடுகள். காதுகள் கூட ஒளிகொண்டு சிவந்திருந்தன.

அவன் “தாங்கள் என்னிடம் பேசவிழைவதாக சொன்னார்கள்” என்றான். “ஆம், நான் ஒரு தூது சொல்லி அனுப்பலாமென எண்ணினேன்” என்றாள். “தூதா? நானா?” என்றான். கண்களில் சிரிப்புக்கு அப்பால் உள்ளம் எச்சரிக்கை கொள்வதை கண்டாள். உணர்வுகளை மறைக்கத்தெரியாத இளைஞனாகவே இருக்கிறான் என எண்ணியதும் மேலும் உளஅணுக்கம் கொண்டாள். அது அவளை அவனை நோக்கி இரண்டு அடியெடுத்துவைத்து நெருங்கும்படி செய்தது. “ஏன், எனக்காக தூது செல்லமாட்டீர்களா?” என்றாள். “என் கடமை அது. ஆணையிடுக!” என்றான். “எவரிடம்?”

அவள் வாய்க்குள் நாவைச் சுழற்றி சிரித்து தோள்களில் மெல்லிய குழைந்த அசைவு வெளிப்பட “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரிடம்” என்றாள். அவன் மூச்சுத்திணறுவது நன்றாகவே தெரிந்தது. விடுவித்துக்கொண்டு சிரித்து “ஆணையிடுங்கள்…” என்றான். “வெறுமனே சொன்னேன்” என்றாள். அவள் விளையாடுவது அவனை நிலைகுலையச் செய்தது. அங்கிருந்து விலகிவிடவேண்டுமென அவன் விழைவது அவன் அசைவுகளில் தெரிந்தது. அது அவளை மேலும் உவகைகொள்ளச் செய்தது. அகவை மறந்து இளமகளென்றானதுபோல.

“நான் சொல்லும் தூது உங்கள் நாட்டு நலன்களுக்கு எதிரானது என்றால் என்ன செய்வீர்கள்?” என்றாள். அவன் “இல்லை… அதாவது, அப்படி நீங்கள் சொல்ல மாட்டீர்கள்” என்றான். “சொன்னால்?” என தலைசரித்து கேட்டாள். “சொல்லமாட்டீர்கள், அரசி.” அவள் வாய்விட்டுச் சிரித்து “மெய்யாகவே உங்கள் நாட்டுக்கு எதிரானதுதான்” என்றாள். அவன் பேசாமல் நின்றான். முகத்தில் தெரிந்த அச்சத்தையும் குழப்பத்தையும் கண்டு அவள் புன்னகையுடன் “அஞ்சவேண்டாம்… இது வேறு. எங்களுக்கும் அஸ்தினபுரிக்கும் இடையேயான பூசல்” என்றாள்.

“அதுவும் என் நாட்டுடன் தொடர்புள்ளதுதான், இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “நான் உங்களை துரியோதனரின் அரசி பானுமதியிடம் பேசுவதற்காக அனுப்புகிறேன்” என்றாள் தேவிகை. அவன் முகம் தத்தளிப்பு விலகி கூர்கொண்டது. அவள் அகம் ஏமாற்றமடைந்தது. அதை சொல்லியிருக்கக்கூடாது என்று எண்ணினாள். அந்தத் தூதையே தவிர்த்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தை முடிந்தவரை நீட்டி அதில் திளைத்திருக்கவேண்டும். “சொல்லுங்கள், அரசி” என்றான்.

அவள் “துச்சாதனரின் துணைவி அசலையிடமும் அங்கரின் அரசி விருஷாலியிடமும் நீங்கள் என் செய்தியை கொண்டுசெல்லவேண்டும்” என்றாள். அவன் தலையசைத்தான். “கொண்டுசெல்வீர்களா?” என்றாள். அதிலிருந்த கெஞ்சலை அவள் எண்ணியிருக்கவில்லை. “சொல்லுங்கள், அரசி” என்றான். “சொல்வேன் என்று கூறுங்கள்” என்றாள். குரல் மேலும் தழைந்து கெஞ்சியது. “தூதை சொல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “அதையொட்டியே நான் முடிவெடுக்கமுடியும்.”

அவள் உள்ளம் ஏமாற்றத்தில் சூம்பியது. நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டை அடைக்க விழிகளை திருப்பிக்கொண்டாள். உருக்குறைந்து புழுவென்று ஆகி நிற்கிறேன். இவனிடம் இரக்கிறேனா? இவனிடமா? யார் இவன்? என் அரசரின் முன் நிகரென அமரக்கூட இடமில்லாத சிறுநாட்டின் இளவரசன். இவன் எனக்கு பரிசிலளிக்கிறானா? வேண்டாம், திரும்பிவிடுவோம். ஆனால் அவள் தொண்டையிலிருந்து மெல்லிய விம்மல் ஒன்று வெளிவந்தது. “நான், என் மைந்தனுக்காக…” என்றதுமே அழுகை பொங்கி வர அவள் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டாள். தோள்கள் குலுங்க விசும்பல்களும் சீறல்களுமாக அழத்தொடங்கினாள். அவன் வெறுமனே நோக்கி நின்றான்.

“என்னால்… எனக்குத் தெரிகிறது, அனைத்தும் எங்கு செல்கின்றன என்று. என் வாழ்க்கையில் நான் பொருட்டென நினைப்பது என் மைந்தனை மட்டுமே. இப்புவிவாழ்க்கையில் நான் வேறேதும் காணவில்லை. அவனை இழந்தால்…” என்றாள். கேவல்களும் விம்மல்களுமாக சொற்கள் உடைந்து தெறித்தன. பெருமூச்சுகளுடன் மெல்ல அமைதியடைந்து மேலாடையால் முகத்தை துடைத்தாள். முகத்தை நன்றாக மூடிக்கொண்டு திரும்பி நின்றாள். திரும்பிவிட்டோம் என்ற உணர்வே அவளுக்கு விடுதலையை அளித்து எண்ணங்களை திரட்டிக்கொள்ளச் செய்தது.

“என் மைந்தன் வாழவேண்டுமென்றால் போர் நிகழலாகாது. ஆனால் அங்கும் இங்கும் ஆண்களனைவரும் போரையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போரை நோக்கி காலத்தை உந்திச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “இல்லை அரசி, போரைத் தவிர்க்கவே அனைவரும் முயல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். அவள் சீற்றம்கொண்டு திரும்பி “அதை மட்டும் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. போர் வேண்டாம் என்று நாளுக்கு நூறுமுறை சொல்பவரின் அகமென்ன என்று நானும் அறிவேன்” என்றாள்.

அவன் திகைத்து விழிவிரிய நோக்கிநின்றான். அவள் குரலைத் தாழ்த்தி “நான் கோருவது இதுவே. அரசர்களிடமும் அவையிடமும் அல்ல, என்னைப்போன்ற அன்னையரிடம். இந்தப் போர் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இது நிகழ்ந்தால் இங்கே எவரும் எஞ்சப்போவதில்லை. எவர் எஞ்சினாலும் உறுதியாக அழியப்போவது நம் மைந்தர். என் மைந்தன் மட்டுமல்ல அவர்களின் மைந்தர்களும்கூடத்தான். அவர்களை காக்கவேண்டியது அன்னையராக நம் கடமை.”

அவன் “அரசி, அவர்கள் அரசருக்கும் மைந்தர்களே” என்றான். “ஆம், நான் சொல்வது அதைத்தான். நிலம்வென்று கொடிவழிகளுக்கு அளிக்க நினைப்பவர்கள் முதலில் செய்வது என்னவாக இருக்கும்? தன் எதிரிகளின் கொடிவழியை முற்றழிப்பதை அல்லவா?” அந்த நேரடி உண்மையின் முன் அவன் சொல்லிழந்து உதடுகளை மட்டும் அசைத்தான். “அதுதான் நிகழும். களத்தில் இரு தரப்பும் எதிர்நிற்பவர்களின் மைந்தர்களை நோக்கியே படைக்கலம் எடுப்பார்கள்… அனைவரும் கொல்லப்படுவார்கள். ஆம், ஒருவர்கூட எஞ்சமாட்டார்கள்.”

மூச்சிரைக்க அவள் சொன்னாள் “இதை நான் சொன்னதாக சொல்லுங்கள். அன்னையர் அனைவருமே அதை உணர்ந்திருப்பார்கள். சொல்லென்றாக்க அஞ்சி உள்புதைத்திருப்பார்கள். ஏனென்றால் சொல்லென்றானது நிகழ்வென்றாகும் என்பது தொல்மொழி.” பூரிசிரவஸ் “நான் சொல்கிறேன்” என்றான். “அன்னையராகிய நமக்கு நிலமில்லை, குலமும் குடியும் நகரும் கொடியும் ஒன்றுமில்லை. நாம் பெண்கள், அன்னையர். பிறிதெவருமில்லை. அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதோ இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமைப்போரில் என் மைந்தன் களமிறங்குகிறான். நான் இந்திரப்பிரஸ்தத்தை தெரிவுசெய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை. பானுவும் அசலையும் அவ்வாறே. இந்தப் போர் எங்களுடையதல்ல. ஆனால் இழப்புகளனைத்தும் எங்களுக்கே. எவர் வென்றாலும் தோற்பவர் அன்னையர்…”

பெருகிவந்த சொற்கள் தடைபட அவள் மூச்சிழுத்து உதடுகளை அழுத்தியபடி தலைகுனிந்து நின்றாள். அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த மெல்லிய ஓசையைக் கேட்டு உளமுலுக்கப்பட்டு சொற்கள் மீண்டும் பொழிந்தன. “மகளென்று நம் சொல் அவையேறவில்லை. மனைவியென்றும் செவிகொள்ளப்படவில்லை. அன்னையென்று ஆனபின்னராவது அதற்கு ஆற்றல் வந்தாகவேண்டும். என் கொழுநர் முன் சென்று நிற்கிறேன். அவர்கள் மீறிச்சென்றார்கள் என்றால் வழியில் சங்கறுத்து விழுகிறேன். எங்கள் குருதிமேல் கடந்து அவர்கள் நிலம்கொண்டு முடிசூடட்டும். அதையே அவர்களும் செய்யவேண்டுமென்று கூறுக!”

“ஆம், நான் தங்கள் உணர்வுகளுடன் இச்சொற்களை அரசியர் மூவரிடமும் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “கூடவே அரசரிடமும் பேசுகிறேன். இளவரசர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னது உண்மை என உணர்கிறேன். அதை சொல்கிறேன். முடிந்தால் இரு தரப்பிலும் இளவரசர்களை அனைத்திலிருந்தும் தவிர்க்கமுடியுமா என்று பிதாமகரிடம் பேசிப்பார்க்கிறேன்.” தேவிகை சினத்துடன் உதடுகள் வளைய “பார்த்தீர்களல்லவா, நீங்களும் போரை வரவழைக்கவே அறியாது முயல்கிறீர்கள். மைந்தருக்காக அன்னையர் எழுந்தால் போர் நின்றுவிடுமோ என அஞ்சும் உங்கள் உள்ளம் கண்டுபிடித்த வழி இது” என்றாள்.

“இல்லை, அரசி. மெய்யாகவே…” என்று பூரிசிரவஸ் தொடர அவள் கைகாட்டி தடுத்து “பிதாமகரோ பேரரசரோ போர் என்று வந்துவிட்டால் வேறேதும் அவர்கள் விழியில் படாது. மேலும் குடிகளின் இளமைந்தர் போரில் சாக நம் மைந்தர் மட்டும் ஒளிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால் நானே அதை ஏற்கமாட்டேன்” என்றாள். “மைந்தரைக் குறிவைப்பதையாவது தடுக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். “மைந்தரைக் குறிவைப்பது அரசர்களோ அவர்களின் படைக்கலங்களோ அல்ல. தொல்விலங்கின் உகிர்களும் பற்களும் கொம்புகளும்” என்றாள் தேவிகை மீண்டும் சீற்றம்கொண்டு. “கானாடல்களில் குருளைகளைக் கொல்லவரும் ஆண்புலிகளையும் ஓநாய்க்கடுவன்களையும் மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறேன்.”

கைகளை விரித்து ஒன்றும் சொல்வதற்கில்லை என்று காட்டியபின் பூரிசிரவஸ் “நான் சென்று சொல்கிறேன், அரசி. என்னுள் வாழும் காட்டுதெய்வங்கள் என்ன எண்ணுகின்றன என்றறியேன். நான் மெய்யாகவே இப்போர் எவ்வகையிலேனும் தவிர்க்கப்பட்டாக வேண்டுமென்றே விழைகிறேன். அதன்பொருட்டு எதைச் செய்வதும் என் கடன் என்றே உணர்கிறேன். அரசியரை தனித்தனியாகக் கண்டு பேசுகிறேன். கண்ணீரையும் சினத்தையும் கொண்டு அவர்கள் போராடவேண்டுமென்று கோருகிறேன்” என்றான்.

“ஆனால் இப்போர் நிகழாதென்றே இப்போதும் எண்ணுகிறேன். நீங்கள் சொன்னதுதான் அடிப்படை. நாளுக்குநாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது களம். பாரதவர்ஷமே இரு கூறாக பிரிந்துகொண்டிருக்கிறது. போர் நிகழ்ந்தால் அது பேரழிவாகவே எஞ்சும். வென்றவர்கள் பெரும்பழி சூடவேண்டியிருக்கும். அந்த அச்சமே போரைத் தவிர்க்கும் விசையாக ஆகும்.” தேவிகை ஏளனத்துடன் சிரித்து “இன்னமும் மானுடரின் நல்லகத்தை நம்பும் இளையோனாகவே இருக்கிறீர்கள். எண்ணிக்கொள்க, ஓங்கிய படைக்கலம் குருதியின்றி அமையாது. நான் விழைவது என் மைந்தன் வாழும்காலம் வரை இப்போர் தவிர்க்கப்படவேண்டும் என்றே” என்றாள்.

“உண்மையில் இப்போர் தொடங்கி நீண்டகாலமாகிறது. இது சத்யவதி குறித்திட்ட போர். இரு தலைமுறைக்காலம் இதை நீட்டிக்கொண்டுவந்து நிறுத்தியவர் பிதாமகர் பீஷ்மர். இன்று நாமனைவரும் முயன்றால் மீண்டும் ஒரு தலைமுறைக்காலம் கடத்திச்செல்லமுடியும். தெய்வங்கள் காத்திருக்கும் ஆற்றல்மிக்கவை. ஏனென்றால் அத்தனை வேட்டைவிலங்குகளும் பொறுமையானவை. நாம் இன்று தப்புவதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றாள் தேவிகை. “ஆம், அரசி. நாம் நம்மால் இயன்றதை முயல்வோம்” என்றான்.

அவள் பெருமூச்சுடன் தன் தலையாடையைத் தூக்கி அணிந்துகொண்டு திரும்பினாள். பூரிசிரவஸ் சற்று தயங்கி சொல்கோத்து “அரசி, ஒரு சொல்” என்றான். அவள் நின்றாள். “நீங்கள் செல்லவேண்டிய இடம் சிபிநாடல்ல, உபப்பிலாவ்யம்” என்றான். அவள் ஏறிட்டு நோக்கினாள். “அங்குதான் உங்கள் அரசி இருக்கிறார். குருதிவஞ்சம் அவர்களுடையது. அவர் தன் வஞ்சமொழிந்து குழல் அள்ளிமுடிந்தால் போர் பாதி முடிந்துவிட்டது என்றே பொருள். எஞ்சியது எளிது” என்றான் பூரிசிரவஸ். அவள் தலையசைத்தாள். “ஆம், நான் அதை எண்ணிநோக்கவில்லை. நானும் எதிரியையே எண்ணுபவளாகிவிட்டேன். இங்கிருந்தே உபப்பிலாவ்யம் கிளம்புகிறேன்” என்றாள்.

“நன்று, நான் வருகிறேன்” என்று தேவிகை திரும்பினாள். கதவு தொலைவிலெனத் தெரிந்தது. காலடிகள் வைக்க வைக்க அகன்றது. பிசினில் ஒட்டிய ஈயென சிறகுகள் துடிக்க தவித்தாள். அவன் விட்ட மூச்சொலியில் மெல்லிய மெய்ப்புகொண்டு திரும்பாமலேயே நின்றாள். “என்னை எண்ணியமைக்கு நன்றி, அரசி” என்றான். அவள் கழுத்து மூச்சில் குழிந்தெழ உடலிறுக நின்றாள். “அச்சொற்கள் பொய்யென்றும் கனவென்றும் ஆகவில்லை என்று இப்போது உணர்கிறேன்” என்றான். “வேண்டாம்” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “நாம் அதைப் பற்றி பேசவேண்டாம்.”

அவன் அருகே வந்தான். ஒவ்வொரு காலடியோசையும் நீர்நிலையில் கல் விழுவதுபோல் அவள் உடலை அலைகொள்ளச் செய்தது. அணுகிய அவன் உடலின் மென்வெம்மையை உணர்ந்தாள். வகிட்டில் அவன் மூச்சை. “நான் இரவுபகலாக புரவியில் வந்தேன் என அறிவீர்களா?” என்றான். “ஆம்” என்றாள். ஓசை மூச்சென வெளிவந்தது. “என்றாவது என்னை எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். “அதெல்லாம் எதற்கு? நான் செல்கிறேன்” என்றாள். “நன்று!” என்றான்.

அவள் மேலும் சற்றுநேரம் நாண் இறுகி ஒடிவதற்கு முந்தையகணத்து வில்லென நின்றாள். பின்னர் மெல்ல தோள் தளர்ந்தாள். கைவளைகள் ஓசையிட்டு தழைந்தன. பெருமூச்சுடன் ஏதோ சொல்ல வந்தபின் தலையசைத்து அதை உளத்திலேயே கலைத்தாள். விழிதூக்கி அவனை நோக்கினாள். அவன் கன்னத்தில் தாடி நரையோடியிருந்தது. கண்களுக்குக் கீழே சுருக்கங்கள். திடீரென அகவைகொண்டுவிட்டான் என. அவள் பெருமூச்சுடன் “நான் கிளம்புகிறேன்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.

உடலை அசைத்தபோது அது கல்லென எடைகொண்டிருப்பதாகத் தோன்றியது. வேறேதும் சொல்லி உளம்விலக்கவேண்டுமென்று எண்ணி “கானேகியபின் திரௌபதி மிகவும் கனிந்துவிட்டாள் என்றனர்” என்றாள். “ஆம், அப்படித்தான் நானும் அறிந்தேன். மேலும் பிறரைவிட அவர்களுக்கு ஐந்துமடங்கு மைந்தர்துயர்” என்றான் பூரிசிரவஸ். அவள் சினத்துடன் கண்கள் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்? அவ்வாறு நாவிலெழலாமா?” என்றாள். “இல்லை, நான் நாவழங்கி…” என அவன் தடுமாறினான். அவள் மீண்டும் “நான் வருகிறேன். தேரை உபப்பிலாவ்யத்திற்கே செலுத்தச்சொல்கிறேன்” என்றாள்.

“மீண்டும் எங்காவது பார்ப்போம்” என்றான். அவள் “இல்லை, மீண்டும் சந்திக்கவேண்டியதில்லை” என்றாள். “ஏன்?” என்றான். “நான் இவ்வாறு எதிர்பார்க்கவில்லை.” அவன் மீண்டும் “ஏன்?” என்றான். “இல்லை. ஒன்றுமில்லை” என்றபின் அவள் கதவைத் திறந்து வெளியே சென்றாள். அவன் அவள் பின்னால் வந்து கதவைப் பற்றியபடி நின்றான். அவன் நோக்கை உடலெங்கும் உணர்ந்தபடி அவள் நடந்து இடைநாழியை கடந்தாள். ஏன் திரும்பி நோக்கவில்லை என எண்ணியபோது அவனையே எண்ணிக்கொண்டிருந்தமையால் என மறுமொழி எழுந்தது நெஞ்சில்.

கூடத்திற்கு வந்தபோது அவள் எங்காவது படுத்துவிடவேண்டும் என எண்ணுமளவுக்கு களைப்படைந்திருந்தாள். “இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா, அரசி?” என்றாள் பூர்ணை. “இல்லை, கிளம்பிவிடுவோம்” என்றாள். நேராகச் சென்று தேரிலேறிக்கொண்டாள். அங்கிருந்து விலகிவிடவேண்டும் என்னும் விரைவு அவளுள் எழுந்தது. எதையோ அஞ்சுகிறவள்போல வண்டிக்குள் கதவை மூடிக்கொண்டாள். பூர்ணை ஏறிக்கொண்டதும் “நாம் உபப்பிலாவ்யம் செல்லவேண்டும்” என்றாள். “அரசி?” என்றாள் பூர்ணை. “ஆம், அங்குதான் செல்லவேண்டும். பாகனிடம் சொல்!”

பூர்ணை பாகனிடம் சொல்ல அவன் அதை வியப்பின்றி ஏற்று “ஆணை” என்றான். தேவிகை பொறுமையிழந்து “விரைக!” என்று பூர்ணையிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். அவள் வியப்புடன் நோக்க முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டு அவள் கண்மூடினாள். அவள் கால் கட்டைவிரல் நெளிந்துகொண்டே இருப்பதை பூர்ணை கண்டாள். சுரபி தேரில் ஏறி அமர்ந்ததும் பாகன் தேர்மேடைமேல் அமர்ந்தான். ஒரு புரவி உறுமியது. குளம்புகளால் தரையைத் தட்டியது.

வண்டி கிளம்பியதும் தேவிகை ஆறுதலடைந்து கால்களை நீட்டிக்கொண்டாள். கண்கள் செருக துயில் உடலெங்கும் பரவியது. எண்ணங்கள் நனைந்து படிந்தன. சொற்கள் கரைந்து மறைந்தன. நெடுநாட்களுக்குப்பின் அவள் முற்றிலும் தன்னை இழந்து துயிலில் மூழ்கினாள். வண்டியின் ஆட்டத்தில் அவள் தலை ஆடிக்கொண்டிருந்தது. பூர்ணை அவளை நோக்கியபின் சுரபியை பார்த்தாள். சுரபி புன்னகைக்க அவள் விழிவிலக்கிக்கொண்டு வெளியே பார்க்கத்தொடங்கினாள்.

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22