குருதிச்சாரல் - 29
பகுதி நான்கு : ஒளிர்பரல் – 4
கலையாமல் காலமென நீடிக்கும் என எண்ணமூட்டிய அந்த அமைதி ஏதோ ஒரு கணத்தில் இதோ உடையப்போகிறதென்று தோன்றியது. எவர் எழவிருக்கிறார்கள்? திருதராஷ்டிரர், சகுனி, கணிகர், பீஷ்மர்? அல்லது எவரென்றே அறியாத ஒரு குடித்தலைவர்? அல்லது அவரே அதை உடைக்கப்போகிறார் போலும். மறுசொல் என எழக்கூடுவது எது? ஏற்புக்கும் மறுப்புக்கும் அப்பாற்பட்ட இந்தச் செயலின்மையிலிருந்து முளைப்பது. பெரும்பாறைகளை விலக்கியெழும் சிறு ஆலமரத்துமுளை.
விகர்ணன் எழுவதைக் கண்டதும் தாரை அசலையின் கைகளை பற்றினாள். அசலை “நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்” என்றாள். “ஆம், அவர் ஆற்றவேண்டிய பணி இது” என்றாள் தாரை. ஆனால் அத்தருணத்தில் அவன் கூறவிருக்கும் வழக்கமான நெறிச்சொற்கள் மேலும் கேலிக்கிடமாகக்கூடும். அவை நகைப்பினூடாகவே அவற்றை கடந்துசெல்வதை அவள் முன்னரே கண்டாள். விகர்ணன் உரத்த குரலில் “தந்தையே, இந்த அவையில் எழுந்து நான் கேட்க விரும்பும் வினா ஒன்றே” என்றான். திருதராஷ்டிரர் அவன் சொற்களுக்காக செவிதிருப்பினார்.
“உங்கள் உள்ளத்தில் மைந்தரென முதன்மை கொண்டிருப்பவர்கள் யார்? கௌரவர்களாகிய நாங்களா, அன்றி உங்கள் இளையோன் மைந்தர்களா?” என்றான் விகர்ணன். “உங்கள் குருதியின் அடையாளத்தை நீங்கள் எங்களுக்கு அளித்திருக்கிறீர்களா, அவர்களுக்கா?” என்று தொடர்ந்தான். திருதராஷ்டிரர் தலைகுனிய குழல்கற்றைகள் முகத்தில் படிந்து ஆடின. விகர்ணனின் சொற்கள் அவர்மேல் இரும்புருளைகள்போல் விழுவதை அவர் தசைகள் இறுகி நெகிழும் அசைவுகள் காட்டின. “கூறுக, தந்தையே! எங்களிடம் முன்வைக்காத அம்மன்றாட்டு எப்படி பாண்டவர்களுக்கு சென்றது? எங்களை உதறி நீங்கள் உங்கள் குருதியின் மூத்த மைந்தரை நோக்கி கைநீட்டி இரந்தது ஏன்?”
“தாங்கள் அதை மந்தணமாக அனுப்பியிருக்கலாம், ஆனால் இதோ இந்த அவையில் அது முன்வைக்கப்பட்டுவிட்டது. என்றும் இனி சூதர் நாவில் அது தவழும். தன் குருதியில் பிறந்த மைந்தர்களை நீங்கள் நம்பவில்லை என்றும் அவர்கள் உங்கள் சொல்லுக்கு பணிவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் நாடறிந்துவிட்டது. முன்னரே இந்நகர் மக்கள் நம்புவதொன்றுண்டு, உங்கள் இளையோன் மைந்தர்களே அறத்தில் அமைந்தவர்கள், அவர்களில் மூத்தவரே பேரறத்தான், வெறும் குருதித்தொடர்பால் மட்டுமே என் மூத்தவரும் நாங்களும் இங்கே அரசர்கள் என அமர்ந்திருக்கிறோம் என்று. தங்கள் செயல் மூலம் அதை உறுதி செய்துவிட்டீர்கள்.”
திருதராஷ்டிரர் இல்லை இல்லை என்பதுபோல் தலையசைத்தார். இருமுறை வாயசைய தொண்டையை கமறினார். பின்னர் விழியற்றவர்களுக்குரிய முறையில் வாய் திறந்து தலையை உருட்டினார். அவருடைய தாடை இறுகியசைந்தது. கழுத்தில் குரல்வளை ஏறியமைந்தது. அவர் அருகே நின்ற சஞ்சயன் செவிகளை அவர் உதடுக்காக சாய்த்தான். “தங்கள் சொல் எங்களால் தூக்கிவீசப்படுமென்று தாங்கள் அஞ்சினீர்கள் என்றால் அச்சொல்லை பாண்டவர்களிடம் கொண்டுசென்றிருக்கக் கூடாது, தந்தையே” என்றான் விகர்ணன். “தூக்கிவீசியவர் நீங்கள், எங்களையும் எங்கள் மூத்தவரையும். இந்த அவையில் இதை மட்டுமே உங்களிடம் சொல்ல விழைகிறேன், கௌரவர் நூற்றுவருக்கும் தாங்கள் இழைத்த பேரிழிவு இது” என்றான் விகர்ணன்.
அவையில் எவரும் விகர்ணனை தடுக்க முயலவில்லை. ஏதேனும் நிகழட்டும், சொல்கிளம்பி அந்த அமைதி கலையட்டுமென அவர்கள் எதிர்பார்த்தனர். விகர்ணன் திரும்பி காந்தாரியிடம் “அன்னையே, இன்று தாங்கள் அவை வந்திருக்கிறீர்கள். தாங்கள் கூறுக, இங்கிருக்கும் இவ்விழியிழந்தவரின் வெண்துளியில்தான் நாங்கள் பிறந்தோமா? அவர் எங்களை நம்பவில்லையென்றால் நாங்கள் உங்கள் கற்பை நம்புவதெப்படி?” என்றான். தாரை அறியாது தலையில் கைவைத்தாள். “சொல் மிஞ்சிவிட்டார்” என்றாள் அசலை. “ஆனால் ஏளனம் எழாதபடி கடந்துசென்றுவிட்டார்.”
தாரையின் கைகளும் உடலும் நடுங்கத் தொடங்கின. அஸ்தினபுரியின் அவையெங்கும் பதற்றம் நிறைந்த குரல்கள் பரவின. துச்சாதனன் இரு கைகளையும் விரித்தபடி “அறிவிலாக் கீழ்மகனே!” என்று கூவியபடி முன்னகர்ந்தான். துர்மதனும் துச்சலனும் சகனும் நந்தனும் உபநந்தனும் எழுந்தனர். “என்னை கொல்லலாம். ஆனால் நான் கேட்ட வினாவை என் குருதியால் நீங்கள் உறுதிசெய்வீர்கள்” என்றான் விகர்ணன். துச்சாதனன் இரு கைகளையும் பேரோசையுடன் சேர்த்து அறைந்தபடி உடலுக்குள் இருந்து பேருருக்கொண்ட பிறிதொன்று தோல்கிழித்து எழ வெம்புவதுபோல தசைகள் அலைபாய நின்றான்.
“என் உள்ளத்தில் எழுந்த எண்ணம் இது. தன் துணைவியின் நெறிமீது இம்முதியவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால் ஒற்றைச்சொல்லில் தன் மைந்தனுக்கு ஆணையிட்டிருக்கவேண்டும்” என்ற விகர்ணன் திரும்பி தன் உடன்பிறந்தவர்களை நோக்கி “மீண்டும் உரைக்கிறேன், நீங்கள் என்னை கொல்லலாம். இந்த அவையிலேயே குருதி சிந்தி நான் மடிகிறேன். அதனூடாக என் கேள்வியை குருதியால் முழுக்காட்டுகிறேன். அது தெய்வமாகுக!” என்றான். கௌரவர்கள் அனைவரும் எழுந்து கைகளை வீசி கூச்சலிட்டனர். துச்சலன் “அக்கீழ்மகனைக் கொன்று குருதி கொள்க!” என்று கூவினான்.
துரியோதனன் மெல்லிய கையசைவால் துச்சாதனனை தடுத்தான். பற்களை நெறித்து இரு பெருங்கைகளையும் விரித்தபடி விகர்ணனை நோக்கி ஓர் அடியெடுத்து வைத்த துச்சாதனன் பற்றி எரிபவன்போல் நின்று பின்னர் தன்னை அடக்கி நீள்மூச்சுவிட்டு தளர்ந்து தலையை அசைத்தபடி திரும்பினான். கௌரவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி முனகியும் முரண்டும் மெல்ல அமைந்தனர். துச்சாதனன் அவை மூலையை அடைந்து இரு விரல்களால் கண்களை அழுத்திக்கொண்டு தலைகுனிந்து நின்றான்.
விகர்ணன் மேலும் குரலெழுப்பினான். “கூறுக அன்னையே, உங்கள் குருதியினர் என்றால் மறுசொல்லின்றி நாங்கள் கட்டுப்படவேண்டிய மனிதர் யார்? இவரல்ல என்றால் பிறிதெவர்?” துரோணர் பற்களைக் கடித்தபடி “மூடா, நீ கூறுவன கீழ்மையின் சொற்கள். அதை நீ உணரவில்லையா, அறிவிலி?” என்றார். “இல்லை, எந்தை இயற்றிய அச்செய்கையில் உள்ள கீழ்மையை சொல்வடிவாக்கியதொன்றே நான் செய்தது. அது கீழ்மை அல்லவென்றால் அவரோ அன்னையோ அவையெழுந்து சொல்லட்டும் எவர் எங்கள் தந்தை என. எவர் சொல்லுக்கு நாங்கள் மாற்றிலாது கட்டுப்பட்டவர்கள் என்று” என்றான்.
தன் இடையிலிருந்து வாளை உருவி நீட்டி “இந்த அவையில் என் சொற்களுக்கு முழுப் பொறுப்பேற்று நான் அறிவிக்கிறேன். அன்னை கூறட்டும், இவர் எங்கள் தந்தையென்று. ஆம் என்று மூத்தவர் சொல்லட்டும். தந்தையென்று நின்று பாண்டவருக்கு முன் அவர் வைத்த அதே ஆணையை அவர் எம்மிடம் இங்கு உரைக்கட்டும். அவரை தந்தையென ஏற்கும் கௌரவர் நூற்றுவரும் அதை தலைமேல் கொள்ளட்டும். அப்போதுதான் ஐயமின்றி நிறுவப்படுகிறது என் அன்னையின் கற்பும், தந்தையின் மாண்பும். நான் உரைத்த சொற்கள் அப்போதுதான் கீழ்மையென்றாகும். அக்கணமே இந்த வாளால் என் கழுத்தை அறுத்து இவ்வவையில் விழுகிறேன். ஆம், என் மூதாதையர் மேல், குடித்தெய்வங்கள் மேல், அவை நிறைந்திருக்கும் என் குலத்தின் மேல் ஆணை!” என்றபின் பின்னடைந்து விழுபவன்போல பீடத்தில் சரிந்து தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு குனிந்து அமர்ந்தான் விகர்ணன்.
அவை மீண்டும் தளர்ந்தது. காந்தாரி தன் சேடியிடம் மெல்லிய குரலில் எதையோ உரைப்பதை தாரை கண்டாள். சேடி அவைமுகப்பில் ஏறி கைகூப்ப அனைவரும் அவளை நோக்கினர். அவள் உரத்த குரலில் “பேரரசி காந்தாரி தன் சொற்களை அவையில் உரைக்க என்னை பணித்திருக்கிறார். இவை அவருடைய சொற்கள். இங்கு இளவரசர் விகர்ணர் கேட்ட வினா தன் அன்னையை நோக்கி அல்ல, தன் தந்தையை நோக்கியே. அவையிலெழுந்து மறுமொழி உரைக்கவேண்டியவர் அவர் மட்டுமே. அவர் உரைக்கட்டும், மைந்தர் மறுமொழி கூறட்டும். அவர்கள் இருவரும் இணைந்து முடிவெடுக்கட்டும் அன்னை கற்புடையவளா அல்லவா என்று” என்றாள்.
“ஏனென்றால் காந்தாரத்துப் பெண் தன் கற்பை எந்த ஆணிடமும் நிறுவவேண்டியதில்லை, தந்தையிடமோ கணவரிடமோ மைந்தரிடமோ குடியிடமோ அவையிடமோ. தேவர்களும் முதல்மூவரும்கூட அவளிடம் அதை உசாவ இயலாது. தன் மூதன்னையருக்கும் அனலன்னை ஸ்வாகைக்கும் பாலைநிலத்து அன்னை தெய்வங்களாகிய மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை ஆகியோருக்கும் மட்டுமே அவள் சொல்லளிக்கக் கடமைப்பட்டவள். இது அன்னையர் அமரா அவை. எனவே இனி இந்த அவையில் அரசி என்னும் சொல்லே எழலாகாது” என்று சொல்லி வணங்கி பின்னகர்ந்தாள்.
திருதராஷ்டிரர் காற்றாடியில் பொருத்தப்பட்ட அரவைக்கல் என தலையை விரைந்து சுழற்றிக்கொண்டிருந்தார். கைகள் காற்றில் துழாவுவதுபோல் அசைந்தன. சஞ்சயன் அவரை கட்டுப்படுத்துவான் என அவையோர் எண்ணி அவனை நோக்க அவன் வெற்றுவிழிகளுடன் அமர்ந்திருந்தான். பின்னர் திருதராஷ்டிரர் மெல்ல அடங்கினார். நீண்ட பெருமூச்சுகளுடன் தோள் தளர்ந்தார். கைகளால் இருக்கையின் பிடிகளை நெருடிக்கொண்டிருந்தார். அனைவரும் சகுனியையும் கணிகரையும் நோக்கி திரும்பியபோது பேரொலியுடன் கைகளை பீடத்தின் பிடிமேல் அறைந்தபடி எழுந்தார். அவ்விசையில் பெரிய பீடம் பின்னால் நகர்ந்து ஓசையுடன் மரத்தரையில் அறைபட்டு விழுந்தது.
சஞ்சயன் எழுந்து “அரசே!” என்று அவர் கையைத் தொட அவன் கையைத் தட்டி விலக்கிவிட்டு “தெய்வங்கள் அறிக! அவை அறிக! இப்புவியில் நான் கொண்ட நற்பேறென்பது காந்தாரத்து அரசியரை அடைந்தது. பாலையில் மலர்ந்த பனைகள் என்னை பெருந்தந்தையென்றாக்கின. என் முதற்கடன் அவர்களுக்கே. அவர்களில் முதல்விக்கே இப்புவியில் நான் முதலில் தலையளிப்பேன். தெய்வங்களுக்கு அல்ல, மூதாதையருக்கு அல்ல, பிதாமகருக்கும் ஆசிரியருக்கும் மைந்தருக்கும் அல்ல. குடிக்கும் கோலுக்கும் அல்ல. இப்புவியில் என்னையாள்வது அவளே. விசித்திரவீரியனின் மைந்தனாகிய நான் அவளுக்கு அடிமைசெய்பவன் என்றே என் கொடிவழிகள் அறிக! இங்கிருந்து செல்வது வரை என்னுடன் அவளிருப்பாளென்றால் மூன்றுதெய்வங்களிடமும் பிறிதொன்று வேண்டேன்” என்றார்.
அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. உதடுகளை அழுத்தி நெஞ்சிலிருந்து கிளம்பிய விம்மல்களை வெல்ல முயன்றார். அவரை மீறி அவை கொதிகலக் குமிழிகளென உடைந்து தெறித்தன. இரு கைகளையும் நெஞ்சில் வைத்து அழுத்தி இருமுறை விக்கலோசை எழுப்பினார். விதுரர் பதறியவராக அவரை நோக்கி செல்ல சஞ்சயன் தேவையில்லை என கைகாட்டினான். கண்களை அழுந்தத் துடைத்தபடி நிமிர்ந்து “என் மைந்தன் விகர்ணன் கோரியது சரியானதே. நான் என் மன்றாட்டை என் நேர்க்குருதி மைந்தரிடமே முதலில் முன்வைத்திருக்கவேண்டும். அது பிழையே, அதை உணர்கிறேன்” என்றார்.
“இதுவரை அரசன் என ஆணையிட்டிருக்கிறேன். தந்தை என அறிவுறுத்தியுமிருக்கிறேன். முதுதந்தையின் இறுதிக் கோரிக்கை என அவர்களிடம் சொன்னவற்றை இவர்களிடம் கேட்டதில்லை. இது தருணமென்றாகுக! இந்த அவையில் அதை முன்வைக்கிறேன். பிதாமகரும் ஆசிரியரும் அவையோரும் கேட்கட்டும். என் மைந்தன் துரியோதனனிடமும் அவன் இளையோரிடமும் நான் கைநீட்டி இரந்து நிற்கிறேன். அறம் வழுவற்க! குலநெறி பிறழாதொழிக! பாண்டவருக்குரியவை இந்திரப்பிரஸ்தமும், இந்நிலத்தில் மேற்கும், கருவூலத்தில் பாதியும். அதை அவர்களுக்கு அளியுங்கள்.”
காற்றில் மழையெச்சம் அகல்வதுபோல சொற்களால் துயர் விலக அவர் குரல் எழுந்தது. “இதுவே அத்தருணம். இதோ, அவர்கள் என் சொல் கேட்டு போரொழிந்துள்ளனர். இப்போது இரு கை விரித்து நீங்கள் சென்று அவர்களை தழுவிக்கொண்டால் அதுவே அரசாண்மை எனக் கருதப்படும். அரசனுக்குரிய பெருங்குணம் வீரம். அதைவிட மேலானது கொடை. அதைவிடச் சிறந்தது பணிவு. மைந்தர்களே, அனைத்தையும்விட மேலானது பேரியல்பு. இத்தருணத்தில் சிறுமையை உதறி நீங்கள் எழுந்தால் பாரதவர்ஷமே உங்களை போற்றும். நீங்கள் இரு தரப்பும் இணைந்தால் இங்குள்ள அரசரெல்லாம் உங்கள் அடிபணிவார்கள். உங்கள் கொடிவழிகள் இந்நிலத்தை நிறைத்து இங்கே செழிக்கும். தெய்வமென எழுந்தருளிய யாதவர் அளித்த வழி இது எனக் கொள்க!”
பெருமூச்சு எழ அவர் சொல்நின்றார். இருமுறை பேச்செடுக்க முயன்றாலும் மூச்சுச்செறிவு சொற்களை தடுத்தது. மீண்டும் அவர் பேசத்தொடங்கியபோது குரல் தழைந்திருந்தது. “இந்த அவையில் நான் உங்கள் உச்சிமுகர்ந்து கோருகிறேன். அடிபணிகிறேன், மைந்தரே. உங்கள் பாதங்கள் என் நெஞ்சிலும் தலையிலும் ஆடியவை என்பதனால் அதில் பிழையில்லை. தொழுது மன்றாடுகிறேன். இப்பிறவியில் இனி நான் விழைவதற்கொன்றும் இல்லை. மண்மறைந்தபின் மைந்தர் அளிக்கும் அன்னமும் நீருமே தந்தையருக்கு அவர்கள் ஆற்றும் முதற்கடன் என்பர். இது நான் வாழ்கையில் எனக்களிக்கும் அன்னமும் நீருமெனக் கொள்க! இதை மட்டும் எனக்களியுங்கள்.”
சொற்களால் உளமழிய அவர் மீண்டும் விம்மி அழத்தொடங்கினார். விம்மல்களும் கேவல்களும் எழ நெஞ்சில் கைவைத்து நின்று தேம்பியழுதார். அவ்வழுகை ஒலி அவைக்கூடமெங்கும் ஒலித்ததை தாரை கேட்டாள். நுண்வடிவான யயாதியும் ஹஸ்தியும் குருவும் அங்கே நின்று விம்முவது போலிருந்தது. சற்று உளவிழி கூர்ந்தால் பிரதீபரையும் சந்தனுவையும் விசித்திரவீரியரையும் பார்த்துவிடலாமெனத் தோன்றியது.
“என் மைந்தரே, உங்கள் உடன்குருதியினரிடம் எந்நிலையிலும் பூசலிடாதிருங்கள். எதன்பொருட்டும் அவர்களுக்கு எதிராக உங்கள் படைக்கலங்கள் எழக்கூடாது. உங்கள் கையால் அவர்களின் குருதி சிந்தக்கூடாது. அவர்களின் மைந்தரும் மைந்தர்மைந்தரும் உங்களுடையவர்களென்றே ஆகுக! அதுவே விண்ணமைந்த நம் மூதாதையர் உகக்கும் செயல். நம் குடியினருக்கு நலம்பயப்பது. நம் கொடிவழியினர் தழைக்க அடிகோலுவது. அளி கூர்க! தந்தைக்கு புன்கொடையென இதை அளியுங்கள், என் குழந்தைகளே…”
இரு கைகளையும் இரப்பதுபோல நீட்டி அவர் விம்மியழுதார். கண்ணீர்த்துளிகள் மார்பில் சொட்டி வழிந்து அகன்ற கரிய பரப்பை மழைவழியும் பாறையென்றாக்கின. விம்மல்களில் எட்டு அடுக்குகளாக அமைந்த செறிவயிறு அதிர்ந்தது. சஞ்சயன் அவர் கைகளை தொட்டான். அவர் தடுமாறியவர்போல தன் பீடத்தை நோக்கி பின்னகர்ந்து அதைத் தொட்டு உறுதிசெய்தபின் அமர்ந்தார். இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டார்.
சஞ்சயன் திரும்பி பின்னால் நின்ற ஏவலனிடம் ஆணையிட அவன் பெருங்கலத்தில் இன்னீர் கொண்டுவந்தான். அவரிடம் அது நீட்டப்பட்டபோது வேண்டாம் என மறுத்தார். ஏவலன் கலத்துடன் திரும்பியபோது அதை கைநீட்டி வாங்கி கொப்பளிக்கும் ஓசை எழ குடித்து திரும்ப அளித்தார். இன்னீர் அவர் உள்ளெழுந்த அனலை மெல்ல அடக்கியதுபோல அவர் முகம் தெளிவுற்றது. நீண்ட மூச்சுடன் மெல்ல தளர்ந்தார். கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டு உடலை விரித்தார். சஞ்சயன் ஏதோ கேட்க வேண்டாம் என மறுத்தார்.
அவர் தலை துயில்கொள்வதுபோல சரிந்தது. அக்கணமே விழித்துக்கொண்டு மெல்ல எழுந்துநின்று சஞ்சயனிடம் செல்வோம் என கைகாட்டினார். சஞ்சயன் அவர் கையை பற்றிக்கொள்ள தளர்ந்த சிற்றடி வைத்து நடந்து அவைநீங்கினார். அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று அவரை கைகூப்பி வணங்கினர். அவர் அவையைவிட்டு மறைந்தபோது மட்டும் “பேரரசர் வாழ்க! குருகுலத்தலைவர் வாழ்க!” என்னும் வாழ்த்தொலிகள் எழுந்தன. அவரை முன்னுரைத்து அழைத்துச்சென்ற நிமித்திகனின் குரல் அப்பால் அப்பாலென ஒலித்தது.
தேய்ந்தடங்கிய ஓசைகளை பார்க்க முடிகிறது என்று தாரை எண்ணினாள், புட்கள் வானில் சென்று மறைவதுபோல. அவள் பெருமூச்சுடன் எழுந்தமைந்தாள். அருகே அசைவெழ திரும்பியபோது காந்தார அரசியர் எழுந்ததை கண்டாள். சத்யசேனையும் சத்யவிரதையும் காந்தாரியை கைதொட்டு அழைத்துச்சென்றார்கள். அவர்கள் செல்லும் ஓசையையும் அவளால் கண்மூடி கேட்க முடிந்தது. கலத்திலிருந்து நீர் ஒழுகி ஒழியும் ஓசை.
விழிதிறந்தபோது பெண்டிரவை எவருமில்லாமல் இருந்தது. அசலை அவளிடம் “அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்” என்றாள். “காந்தாரியர் செல்லட்டும், பிறர் ஏன் செல்லவேண்டும்?” என்றாள் தாரை. “பிறர் செல்வதற்கு தருணம் தேர்ந்திருந்தனர்” என்று அசலை புன்னகை செய்தாள். தாரை முகத்தால் மட்டுமே புன்னகை செய்தபின் அவையை நோக்கினாள். அவையினர் ஒருவரை ஒருவர் நோக்கியபடியும் மெல்லிய குரலில் உரைகொண்டபடியும் இருக்க கூடத்தின் குவைமாடம் வீணைக்குடமென கார்வை கொண்டிருந்தது.
“இவர்கள் பேரரசர் அவையொழிந்ததில் மகிழ்கிறார்கள் போலும்” என்றாள் தாரை. “ஆம், அவர் அழுதபோது அவையில் எவருமே விழிகசியவில்லை” என்றாள் அசலை. தாரை “விந்தைதான்” என்றாள். “தங்கள் தந்தை என அவரை கொண்டிருந்தவர்கள். அவருடைய உணர்வுகளுடன் இணைந்து வளர்ந்தவர்கள்” என்றாள். அசலை அவையை நோக்கி விழிநட்டபடி “அது மெய். ஆனால் அவர்கள் போரை நோக்கி நெடுந்தொலைவு சென்றுவிட்டார்கள். ஒன்றை நாம் உள்ளத்தில் வளர்க்கத் தொடங்கிவிட்டால் பின்னர் அது தானாகவே வளரும். நீரூற்றி வளர்த்த மரத்தின் கிளைகளில் இன்று அமர்ந்திருக்கிறார்கள். இன்று பேரரசர் பேசியதைக் கேட்கையில் சென்ற தொலைவனைத்தையும் திரும்பி கடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதன் கசப்பையே அவர்களில் காணமுடிந்தது” என்றாள்.
தாரை புரியாமல் தலையை மட்டும் அசைத்தாள். “எங்காவது மக்கள் போருக்கு எதிராக எழுந்ததை கேட்டிருக்கிறாயா?” என்றாள் அசலை. தாரை “இல்லை” என்பதுபோல தலையசைத்தாள். யுயுத்ஸு துரியோதனனின் அருகே சென்று குனிந்து ஏதோ சொல்வதையும் அரசன் தலையசைப்பதையும் கண்டாள். அவை தங்களுக்குள் பேசத்தொடங்கிய ஒலி வலுத்தது. ஒற்றை உளக்குவிப்பு அகன்றதுமே அது அவையல்லாதாகி வெற்றுத்திரள் என உருக்கொண்ட விந்தையை அவள் உணர்ந்தாள்.
அசலை “நான் எண்ணி எண்ணி நோக்கியது அது, எளிய மக்களுக்கு எப்போதும் போரில் பேரிழப்பே. அவர்களின் மைந்தர்கள் இறப்பார்கள். ஆநிரைகளும் வயல்வெளிகளும் அழிக்கப்படும். ஊர்கள் எரிகொள்ளும். சந்தைகளும் சாலைகளும் மறையும். ஒவ்வொரு போரும் பெருநோய் என அவர்களை பீடிக்கிறது. அவர்கள் மீண்டெழுவதற்கு மீண்டுமொரு தலைமுறை தேவைப்படும். வெற்றியின் செல்வம் மக்களுக்கு அளிக்கப்படுவதில்லை. வென்றாலும் தோற்றாலும் அவர்களுக்கு பொருளிழப்பே. வெற்றியின் புகழ் மக்களை எவ்வகையிலும் சென்றடைவதில்லை. ஆயினும் இன்றுவரை ஒருமுறைகூட எளிய மக்கள் போருக்கெதிராக கிளர்ந்ததில்லை. எங்களுக்கு போர் தேவையில்லை எனும் குரல் எந்த அவையிலும் எழுந்ததில்லை” என்றாள்.
அப்போதுதான் அவள் சொல்வதன் உள்ளுறையை தாரை உணர்ந்தாள். “மெய்தான்… எண்ண எண்ண விந்தை” என்றாள். “ஏனென்றால் காலந்தோறும் தெய்வக்கதைகளும் குலநெறிகளும் நூல்களும் போரை போற்றி வந்துள்ளன. தன்மதிப்பென்றும் வீரம் என்றும் புகழென்றும் சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் இங்குள்ள அனைவரும். போருக்குகந்த உளநிலைகளை ஒவ்வொருநாளும் பயிரிட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன ஒவ்வொரு நாடும். எண்ணிப் பார், நாம் கேட்கும் கதைகளும் நோக்கும் கலைகளும் அனைத்துமே போர்குறித்தவை அல்லவா?”
“ஆம்” என்றாள் தாரை. யுயுத்ஸு சென்று சகுனியிடம் குனிந்து பேசத்தொடங்குவதை கண்டாள். அதற்குள் அவையமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அந்நிகழ்வை நோக்கிவிட்டனர். மெல்ல அவை அமைதிகொள்ளத் தொடங்கியது. அனைவரும் சகுனியை நோக்கிக்கொண்டிருக்க விதுரர் எழுந்தார். “அவையோரே” என்றார். அவையினர் திடுக்கிட்டவர்கள்போல அவரை நோக்கினர். சகுனியின் உடலில் எழப்போவதற்கான மெல்லிய அசைவு தோன்றிய அக்கணத்தில் விதுரர் எழுந்ததாக தாரைக்குத் தோன்றியது. விதுரரின் முகம் நோயுற்றது போலிருந்தது. உதடுகள் வெளுத்திருந்தன. வலியுடன் நின்றிருப்பதுபோல் உடலில் ஒரு வளைவு இருந்தது.
“அவையோரே, எளியோன் சொல்லை கேட்டருள்க! இக்குடியில் பிறந்தவன் என்பதாலும் இந்த அவையை பேரரசி சத்யவதியின் காலம் முதல் வகுத்து நடத்துபவன் என்பதாலும் மட்டுமல்ல, சென்ற எட்டு வியாழவட்டத்திற்கும் மேலாக என் மூத்தவர் திருதராஷ்டிரரின் குரல் நான் என்பதனாலும்கூட” என்றார் விதுரர். “இதோ, கண்ணீருடன் என் மூத்தவர் நடந்து அகல்கிறார். நான் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல. அங்கே அவருடைய காலடியில்தான். இங்குள்ள எவருக்கும் நான் சற்றும் பொறுப்பல்ல. எவர் நலமும் எனக்கு ஒரு பொருட்டும் அல்ல. நான் இங்கிருப்பது இந்த மண்ணுக்காகவோ குடிக்காகவோ இதன் தொல்மூதாதையருக்காகவோ இதை ஆளும் தெய்வங்களுக்காகவோகூட அல்ல. என் மூத்தவரன்றி இப்புவியில் எனக்குரியவர் எவருமில்லை.”
“அவருடைய செவியும் நாவும் கொண்டு இந்த அவையில் நிற்கவேண்டுமென்பதற்காகவே இங்கிருக்கிறேன்” என விதுரர் தொடர்ந்தார். “இங்கு என் மூத்தவரின் விழிநீர்த்துளிகள் விழுந்தபோது உடன்சொட்ட என் விழிநீர் மட்டுமே எழுந்தது. நான் எவரென்றும் என் பணி ஏதென்றும் காட்டியது அது. அதை நிகழ்த்திய தெய்வங்களை வணங்குகிறேன். நீங்கள் இருக்கும் நிலையென்ன என்று அறிவேன். எங்கும் எப்போதும் எளிய மானுடர் போரை விலக்கியதில்லை. ஒவ்வொருநாளும் அவர்கள்மேல் ஏற்றிவைக்கப்படும் எடைகளுக்கு எதிராக அவர்கள் கொள்ளும் வன்களியாட்டே போர்.” தாரை அசலையின் முழங்கையை பற்றினாள். அசலை “ஆம்” என்றாள்.
“போர் ஒருங்கும் பொழுதுகளில் உச்சநிலை உணர்வுகள் உருவாக்கப்படுகின்றன. விருப்புவெறுப்புகள் ஆழ நிறுவப்படுகின்றன. தலைமுறை வஞ்சங்கள் கிளர்த்தப்படுகின்றன. உள்ளுறையாக பெருமிதங்களும் மிகைவிழைவுகளும் ஏற்றப்படுகின்றன. நெறியுரைக்கவும் நலம்நிறுத்தவும் உதவும் கதைகளும் இசையுமே அப்பணியையும் செய்கின்றன. மெல்ல மெல்ல மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள், நாகர் நஞ்சுக்கு உடலை பழக்குவதுபோல. அவர்கள் புழங்கும் மொழி முற்றிலும் நஞ்சென்றாகிவிடுகிறது. நஞ்சுண்டு நஞ்சில் திளைக்கிறார்கள். நஞ்சல்லதை அறியவும் ஒண்ணாதவர் ஆகிறார்கள். பின்னர் அவர்களின் நகக்கீறல் போதும், உமிழ்நீர்த்துளி போதும், நஞ்சு பரவும். அஸ்தினபுரியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்நகர் நஞ்சு கொள்ளத்தொடங்கி நெடுநாளாகிறது.”
“போருக்கு ஒருங்கும் மக்களிடம் எவரும் எந்த நெறியையும் சொல்லிவிடமுடியாது. எரியுணர்வும் வஞ்சக் கொந்தளிப்புமாகவே அவர்கள் அதை எதிர்கொள்வார்கள். தங்களுடன் இணைந்து வாளேந்தாத எவரும் கொன்றொழிக்கப்படவேண்டிய எதிரிகளே என்றன்றி அவர்களால் எண்ண முடியாது. போர் முதிரும் அக்காலகட்டத்தில் மக்கள் தங்கள் கனவுள்ளங்களில் நூறுநூறு முறை களம்கண்டு கொன்று குருதியாடி களித்திருப்பார்கள். பெருவிழைவு கொண்டு சூறைகொண்டாடியிருப்பார்கள். அத்தனை கீழ்மைகளும் விடுதலைகொண்ட களிப்பிலிருப்பார்கள்” என்றார் விதுரர்.
அவர் குரல் உடைந்தது. “உங்கள் முன் இரந்து நின்றார் என் தமையன். தெய்வங்களும் அஞ்சும் தோள்கொண்டவர். பேரறத்தான் என அழியாச் சொல்லோர் புகழ்ந்த பெருமகன். இவ்வூழை அவருக்கென கரந்திருக்கின்றன தெய்வங்கள்.” நெஞ்சு உலைய தொண்டை எழுந்தமைய அவர் தலைகுனிந்து தன்னை அடக்கினார். மேலாடையால் முகம் துடைத்து நிமிர்ந்து “நான் சொல்வதற்கு ஏதும் மீதியில்லை. அவையோரே, உங்களை ஆட்கொண்டு அள்ளிச்செல்லும் இச்சூறாவளியை சற்று நோக்குங்கள். இது செல்லும் திசை நீங்கள் எவ்வகையிலும் அறியக்கூடுவதல்ல. மீன்கூட்டங்கள் படையெனக் கிளம்பி வாய்பிளந்து அமைந்த கவந்தப்பெருமீனை நோக்கி செல்கின்றன. இக்கணம் இந்த அவையில் அவன் எவரென்றே நான் அறிவேன்” என்றார்.
சொல்நிலைக்க நீள்மூச்செறிந்து விதுரர் தொடர்ந்தார் “உங்கள் ஊழ் அதுவென்று அறிந்தாலும் அறிந்தவன் என்ற முறையில் கைநீட்டி உங்களிடம் நானும் இரக்கிறேன். உங்கள் மைந்தரை இருளகழிக்குள் தள்ளவேண்டாம். எரியெழுந்து அணுகுகிறது இந்த யுகத்தை. துளி உளத்தெளிவிருந்தால், ஒருகணம் விலகிநின்று நோக்கமுடிந்தால் நம்மை நாம் காத்துக்கொள்லலாம். நம் குடிகளையும் கொடிவழியினரையும் வாழவைக்கலாம். எண்ணிநோக்குக… சற்றேனும் விலகி விழிகொள்க!” கைகூப்பியபடி அவர் அமர்ந்தார்.
தாரை இளைய யாதவரை நோக்கினாள். அதே அறியாப் புன்னகையுடன் அங்கிலாத எதையோ நோக்கியவர்போல் அமர்ந்திருந்தார். அவர் நோக்குவதை தான் நோக்கமுடியுமென ஒருகணம் தோன்றியபோது அவள் உடல் அஞ்சி மெய்ப்பு கொண்டது. தன்னை விலக்கி அவர் கால்களை நோக்கி விழிசரித்தாள். புன்னகைக்கும் நகநிரைகள். அவை “அறிவேன் யான்” என்றன.