குருதிச்சாரல் - 15
பகுதி இரண்டு : பெருநோன்பு – 9
அசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள். “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள். இளைய அரசிகள் உடனிருக்கிறார்கள்” என்றாள். “நான் பேரரசியை பார்க்கவேண்டும், உடனடியாக” என்றாள் அசலை. “தாங்கள் அதை முன்னரே அறிவித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் முதிய சேடி. “இல்லை, ஓர் எண்ணம் தோன்றி எழுந்து வந்தேன். அவரை நான் சந்தித்தாகவேண்டும்” என்று அசலை சொன்னாள். சில கணங்களுக்குப் பின் “நன்று, நான் தங்கள் வரவை அறிவிக்கிறேன். பேரரசி விரும்பினால் தாங்கள் சந்திக்கலாம்” என்று முதுமகள் சொன்னாள்.
அவள் உள்ளே செல்ல கதவு மூடியபோது அசலை மீண்டும் தனிமையை உணர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு தன்னுள் கலைந்து கிடந்த சொற்களை ஒன்றன்பின் ஒன்றென அடுக்கிக்கொண்டாள். கைவளைகளைப்பற்றி திருகியபடி கதவு திறப்பதற்காக காத்து நின்றிருந்தாள். மெல்லிய ஓசையுடன் கதவு திறந்தபோது உள்ளத்தில் ஓர் அதிர்வு எழ சொற்கள் கைபட்ட தேனீக்கூட்டமென கலைந்து ரீங்கரித்து பறக்கலாயின. தன்னை உந்தி உள்ளே செலுத்தவேண்டியிருந்தது. ஒவ்வொரு எண்ணமும் நம்பிக்கையூட்டி உளவிசை கூட்டுகிறது. அணுகும்தோறும் பொருளிழந்து இறந்து குளிர்ந்து கிடக்கிறது. ஏன்? என்ன ஆயிற்று எனக்குள்?
அறைக்குள் தரையில் அமர்ந்து குறுபீடத்தில் உணவை வைத்து காந்தாரியும் ஒன்பது அரசியரும் உணவருந்திக்கொண்டிருந்தனர். ஏழு சேடியர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். அவர்கள் எவரும் பேசிக்கொண்டிருக்கவில்லை. கலங்களின் ஓசையும் நாவுகளின் ஓசையும் கலந்த ஓசை பொருட்களின் உரையாடலென கேட்டுக்கொண்டிருந்தது. அசலை உள்ளே நுழைந்தபோது அரசியர் அனைவரும் நிமிர்ந்து அவளை பார்த்தனர். சத்யசேனை மட்டும் “அமர்ந்துகொள்” என்று சொல்லி அருகிருந்த குறும்பீடத்தை காட்டினாள். “நான் முன்னரே உணவருந்திவிட்டேன், அன்னையே” என்றாள் அசலை. “தாழ்வில்லை, சற்று ஊன்சாறு அருந்து” என்றாள் சத்யசேனை.
குறுபீடத்திற்குப் பின்னால் அமர்ந்து ஆடையை சீர்செய்துகொண்டாள் அசலை. முதிய சேடி அவளுக்கு வெள்ளித்தாலத்தை வைத்து அதில் ஊன்சாறையும் தீயில் சுட்ட அரிசி அப்பத்தையும் வைத்தாள். அசலை ஐம்பருக்களை நுண்சொல்லால் வணங்கிவிட்டு அதை உண்ணத் தொடங்கினாள். அங்கே ஒலித்த சீரான நாவோசை அவளுக்கு ஓர் அமைதியை அளித்தது. மீண்டும் தன்னுள் சொற்களை திரட்டிக்கொண்டாள். அவள் பேசுவதற்காக காந்தாரியும் அரசியரும் காத்திருந்தனர். இருமுறை நாவசைத்த பின் “நான் பேரரசியிடம் ஒரு சொல்லை உரைக்கும்பொருட்டு வந்தேன்” என்று அசலை சொன்னாள்.
காந்தாரி அவள் சொற்களைக் கேட்க முகம்திருப்பி செவிகளை இயல்பாக சரித்தாள். “அரசி, தாங்கள் இன்னமும்கூட இப்போரை தவிர்க்க இயலும்” என்றாள். காந்தாரி “நேற்றைய அவை என்னிடம் காட்டியது ஒன்றே. அனைத்துத் தரப்பிலிருந்தும் நம்மிடம் நாம் வெறும் பெண்கள் மட்டுமே என்கிறார்கள். நம் ஆடையும் அணியும் அரியணையும் மணிமுடியும் வெறும் அடையாளங்கள் மட்டுமே என்று நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், ஆனால் இங்குள்ள ஒவ்வொருவருமே அவ்வாறு அடையாளங்களை மட்டுமே சூடிக்கொண்டிருக்கிறார்கள். தன்முடிவால் எதையும் ஆற்றும் இடத்தில் எவருமே இல்லை” என்று அசலை சொன்னாள். “பேரரசி, இன்னமும்கூட இந்நகரில் பிறர்மேல் சொல் ஆதிக்கம் கொண்டவர்களில் முதன்மையானவர் தாங்களே.”
“இனி எவரிடம் பேசுவதற்கு இருக்கிறது? ஒவ்வொருவரும் தங்களை அறிவித்துவிட்டார்கள்” என்றாள் காந்தாரி. “ஆம் அன்னையே, ஆனால் இன்னமும் ஒருவர் தன்னை அறிவிக்காமல் இருக்கிறார்” என்றாள் அசலை. காந்தாரி புருவம் சுளித்தாள். “தாங்கள் பேரரசரிடம் பேசலாம்” என்றாள் அசலை. காந்தாரி புன்னகைத்தாள். பின்னர் கைகளை நீட்ட முதிய சேடி யானத்தில் நறுமணநீரை வைத்து அவள் கையைப்பற்றி அதில் வைத்து கழுவினாள். சேடி அளித்த மரவுரியால் கைகளை துடைத்தபடி “நீ அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்திருக்கமாட்டாய். ஒவ்வொரு வாயில்களாக மூடி மிக உள்ளே சென்றுவிட்டிருக்கிறார். இப்போது சென்று சொல்லப்படும் எந்தச் சொல்லும் அவரை சென்றடையாது” என்றாள்.
பெருமூச்சுடன் “தன்னை இசை சற்றே நெகிழ்த்துகிறது என்று உணர்ந்து அதையும் துறந்துவிட்டிருக்கிறார். அரசன் இறுகியிருப்பதைவிட மேலும் இருமடங்கு இறுகியிருக்கிறார்” என்றாள். “அவ்வாறுதான் நானும் உங்களிடமிருந்து அறிந்துகொண்டிருந்தேன். ஆனால் சற்றுமுன் என் கனவில் அவர் தோன்றினார்” என்றாள். அனைத்து விழிகளும் முள்ளம்பன்றி முள்முனைகள் என சிலிர்த்து அசைந்து அவளை நோக்கின. “யார்?” என்று காந்தாரி கேட்டாள். “இன்று காலை முழுக்க நிலையழிந்திருந்தேன், அன்னையே. என்னென்னவோ எண்ணங்கள். உணர்வுகள் உருத்திரளாத அலைக்கழிப்பு. உணவுக்குப் பின் சற்று துயின்றேன். அதில் ஒரு கொடுங்கனவு” என்று அசலை சொன்னாள். “ஆம், வேறெதையும் எவரும் கனவு காண்பதில்லை” என்றாள் காந்தாரி.
அசலை கனவுநிறைந்த விழிகளுடன் “பெருங்களம். அதில் அப்போது முடிந்த போரில் கொன்று குவிக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் திசையெல்லை வரை சிதறிக்கிடந்தன. துடித்துக்கொண்டிருக்கும் புரவிகள், உடைந்து சிதறிய தேர்கள். அதனூடாக கூந்தல் பறக்க ஆடை நெகிழ நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறியபடி விரைந்தோடுகிறேன். தொலைவில் இளைய அரசர் விழுந்துகிடப்பதை பார்க்கிறேன். கைகளால் என் நெற்றியின் குங்குமத்தை அழித்தபின் ஓடிச்சென்று அவர் அருகே மண்டியிட்டு கால்களை பற்றிக்கொண்டேன். அவர் மார்பு பிளக்கப்பட்டிருந்தது. உள்ளிருந்து செங்குலையென நெஞ்சு பிடுங்கி வீசப்பட்டிருந்தது. அவர் கால்களை பற்றிக்கொண்டு கதறி அழுதேன். தலையை அவர் பாதங்களில் அறைந்தேன்” என்றாள்.
“அப்போது அவர் மெல்ல முனகுவதை கேட்டேன். வலது கையை ஊன்றி மெல்ல எழுந்தமர்ந்து இடக்கையை என் தலைமேல் வைத்தார். திடுக்கிட்டு நான் அவர் முகத்தை பார்த்தேன். அது பேரரசரின் முகம். நோக்கற்ற விழிகள். உதடுகள் மெல்ல அசைய அவர் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். என்ன சொல்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் சொல்லிக்கொண்டிருந்த சொற்கள் எனக்கு நன்றாகவே கேட்டன. ஆனால் முற்றிலும் நானறியாத பிறிதொரு மொழி என அது தோன்றியது. நான் விழித்துக்கொண்டேன். அக்கனவை எண்ணி நடுங்கியபடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து வந்து யானத்திலிருந்து குளிர்நீரை அள்ளி முகத்தை கழுவினேன். மரவுரியால் துடைத்துக்கொண்டிருந்தபோது தோன்றியது, அது என் கனவல்ல அவருடைய கனவு என்று. ஆகவேதான் தங்களைப் பார்க்க ஓடிவந்தேன்” என அசலை சொன்னாள்.
சத்யசேனை “என்ன சொல்கிறாய்?” என்றாள். சத்யவிரதை “இத்தகைய கனவுகள் அனைவருக்கும் வருகின்றன. இங்கிருக்கும் சூதர்கள் சொல்லிச் சொல்லி கனவுகளை உருவாக்கி நம்மேல் திணித்திருக்கிறார்கள். நாம் இவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்” என்றாள். அசலை “அவர்கள் புதிய கனவுகளை உருவாக்கவில்லை, அரசி. நாம் அனைவரும் காணும் கனவுகளை அவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து பின்னி பெருங்கனவாக்கி இந்நகர்மேல் பரவச்செய்திருக்கிறார்கள். இப்போது நாமனைவரும் ஒரே கனவில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆனால் அது அவர்களின் கடமை. கலைஞர்களும் கவிஞர்களும் காலந்தோறும் செய்துகொண்டிருப்பது அதையே.”
அவள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை என விழிகள் காட்டின. “சொல்க!” என்றாள் காந்தாரி. “பேரரசி, அங்கே தன் அறையில் பேரரசர் தொடர்ந்த கொடுங்கனவுகளில் வாழ்கிறார். ஆயிரம் மைந்தரின் தந்தை ஒவ்வொரு மைந்தருடனும் தானும் இறந்து மீண்டுகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஆயிரம் இறப்புகள். மீண்டும் பிறக்கும் இறப்புகளே துயரத்தின் உச்சிப்புள்ளிகள். இன்று அவர் இருக்கும் கொடுநரகில் ஆயிரம் பழிசேர்த்து தெய்வத்தீச்சொல் பெற்றவர்கள்கூட இருந்ததில்லை. தாங்கள் அவரை கைவிட்டுவிட்டீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றாள்.
காந்தாரி சேடியை நோக்கி நீட்டிய மரவுரி அவ்வாறே அசைவற்று நிற்க அவளை நோக்கி செவிநாட்டி நிலைத்தாள். பின்னர் பெருமூச்சுடன் கைகளைத் தாழ்த்தி “மெய்தான்” என்றாள். “துயர் கொண்டவுடன் நாம் பிறரை நோக்கி ஓடுகிறோம். பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறோம். ஆனால் பெருந்துயர் கொண்டதும் அனைத்து வாயில்களையும் மூடி தனிமை கொள்கிறோம். முற்றிலும் பிறர் அறியாது நம்மை ஒடுக்கிக்கொள்கிறோம். ஏனெனில் துயர்கள் மானுட உருவாக்கம், பெருந்துயர் என்பது தெய்வத்தின் கொடை” என்று அசலை சொன்னாள். “நீங்கள் இருவரும் முற்றாக விலகிக்கொண்டுவிட்டீர்கள். சென்ற பதினைந்தாண்டுகளில் நீங்கள் ஆண்டுக்கொருமுறை அவருடன் அரியணை அமர்ந்ததற்கு அப்பால் அவரை அணுகியதே இல்லை.”
காந்தாரி “மெய்தான், நானும் அத்தகைய பெருந்துயரில்தான் இப்பதினைந்து ஆண்டுகளை இங்கு கடந்தேன்” என்றாள். “ஆனால் அது அன்னையின் துயர். அது உடல் சார்ந்தது, எனவே பருவடிவு கொண்டது. இப்புவியில் பருப்பொருள் தன் அளவை விட்டு பெருகாதென்னும் தெய்வ ஆணையை கொண்டுள்ளது. அன்னையே, தந்தையின் துயர் இருளென, வெறுமையென நுண்வடிவானது. கணம் கோடிமடங்கென பெருகும் வல்லமை கொண்டது அது. அது கடல் எனில் உங்கள் துயர் துமி” என்றாள் அசலை. காந்தார அரசிகள் ஒன்பதின்மரும் பெருமூச்சுவிட்டனர். சத்யசேனை “மெய்தான், நாங்களும் அவரை முற்றாக கைவிட்டுவிட்டோம். எங்கள் துயரை வெல்ல அக்கையுடன் ஓருடலென ஒட்டிக்கொண்டோம்” என்றாள்.
தசார்ணை “சில நாட்களுக்கு முன் அவர் அறைக்குச் சென்று எதையோ அளித்தபோது மஞ்சத்திலிருந்து எழும்பொருட்டு என் கையை பற்றினார். என் உடல் சிலிர்த்து குளிர்ந்தது. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டாரென்றும் உடல் குளிர்ந்துவிட்டிருக்கிறதென்றும் எனக்குத் தோன்றியது. பின்னர் அவ்வறைக்குள் செல்வதைப்பற்றி என்னால் எண்ணவே இயலவில்லை. அவ்வுடலிலிருந்து குளிர்காற்று கிளம்பி அம்மஞ்சத்தையும் அறைகளையும் அங்கிருக்கும் பீடங்களையும் கலங்களையும் தண்ணென்றாக்கிவிட்டிருக்கிறது. குளிர்நீர் நிறைந்த சுனையில் முங்குவது போன்றது அவர் அறைக்கதவைத் திறந்து அவ்வறைக்குள் நுழைவது” என்றாள்.
“என் கனவில் அவர் வருகையிலெல்லாம் வெம்மை கொண்டிருக்கிறார். அவர் காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும் சூளையின் துளைகளினூடாக தழல் என அனல் பீறிடுவதை கண்டிருக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. சத்யவிரதை “இருமுறை என் கனவில் அவர் வந்தார். அஞ்சி விழித்துக்கொண்டு அக்கையை நோக்கி ஓடிவந்தேன்” என்றாள். சம்ஹிதை “இங்கு அக்கையுடன் இருக்கையில் அவர் கனவுகளில் எழுவதில்லை. செம்மண் அலைகளெனப் படர்ந்து வான்விளிம்பால் எல்லையிடப்பட்ட காந்தாரப் பெருநிலத்தில் வாழமுடிகிறது” என்றாள்.
“நீங்கள் அனைவரும் அவர்மேல் உள்ளூர வெறுப்புத்துளி ஒன்றை கொண்டிருந்தீர்கள். அதையே அவருக்கு மைந்தர்களென பெருக்கி திருப்பியளித்தீர்கள். மைந்தர்கள் கணவர்களை நோக்கும் அன்னையரின் கண்மணிகளுக்குள் ஒளியென்றோ இருளென்றோ முதலில் தோன்றுகிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றாள் அசலை. அவர்கள் எவரும் மாற்றுச்சொல் எடுக்கவில்லை. சற்று அசைந்த சத்யசேனை “ஏன் நாங்கள் அவரை வெறுக்கவேண்டும்?” என்றாள். “பெண்கள் கொழுநரை சற்றேனும் வெறுக்காமலிருக்க முடியாது, அரசி” என்றாள் அசலை. “ஏனென்றால் பெண்களின் முற்றுவகை முதிரா இளமையில் மட்டுமே. இளமையை இழப்பதே அவர்களின் துயர். அத்துயரின் விழிதொடு வடிவென இருப்பவர் கொழுநர்.”
அரசியர் அமைதியிலாழ்ந்து அமர்ந்திருந்தனர். விழிகள் ஒவ்வொரு கோணத்தில் தரையிலும் அருகிருந்த பொருட்களிலும் ஊன்றி தழைந்திருந்தன. “உங்கள் எவருக்கும் அவருடன் சொற்தொடர்போ உளத்தொடர்போ இன்றில்லை. அத்தொடர்பு உள்ளவர் சூதஅரசி அன்னை பிரகதி மட்டுமே” என்றாள் அசலை. காந்தாரி சீற்றத்துடன் “அவளா?” என்றாள். “ஆம், தாங்கள் சற்று அறிந்திருப்பீர்கள். இன்று ஒவ்வொரு நாளும் யுயுத்ஸுவின் அன்னை மட்டுமே அவரைச் சென்று சந்திக்கிறார். பகலெல்லாம் அவர் அறைக்குள் இருப்பவர் அவர் மட்டுமே. பேரரசர் அவருடனும் சஞ்சயனிடமும் யுயுத்ஸுவிடமும் மட்டுமே சொல்லெடுக்கிறார்” என்றாள் அசலை.
இளைய அரசியர் சீறி எழுவர் என்று அசலை நினைத்தாள். ஆனால் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். காந்தாரி “ஆம், அவள் இதற்காக காத்திருந்தாள். அத்தனை துணைவியராலும் அவர் கைவிடப்படும்போது அருகே சென்றமர்ந்து தன் இடத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று எண்ணினாள். ஊழ் அதற்கான வாய்ப்பை அளித்தது” என்றாள். “நன்று, அம்மைந்தனுக்கு மணிமுடியும் அமைக!” அத்தனை அரசியரும் திகைப்புடன் விழிதூக்க அசலை துயருடன் புன்னகைத்தாள். “நான் இன்று விழைவதெல்லாம் சத்யவதி சென்றதுபோல காடணைவதை மட்டுமே…” என்றாள் காந்தாரி. “ஆனால் இங்கல்ல. மீண்டும் காந்தாரச் செம்புலத்திற்கு.”
“அன்னையே, உண்மையில் இப்படியொரு தருணம் அரசருக்கு வருமென்று எண்ணித்தான் தெய்வங்கள் அன்னை பிரகதியை அவருக்கு சேர்த்தனவோ?” என்றாள் அசலை. சத்யவிரதை உரத்த குரலில் “இப்படியெல்லாம் இதை விளக்கிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? அவர் காட்டை நிறைக்கும் மதகளிறு. ஆயிரம் பெண்டிர் அவருக்கு. யார் அமைந்தாலென்ன, மறைந்தாலென்ன?” என்றாள். “அது உண்மையல்ல என உங்களுக்குத் தெரியும்” என்றாள் அசலை. “இதைப்பற்றி நீ பேசவேண்டியதில்லை” என்றபடி சத்யவிரதை எழுந்து அருகே வந்தாள். “எதற்கு இப்போது வந்தாய்? எங்கள்மேல் பழிசுமத்தவா? அன்றி, அக்கையை துன்புறுத்தவா?”
கையசைவால் அவளை அமரவைத்த காந்தாரி “நீ சொல்வது மெய். அவரை நாங்கள் விலக்கினோம். அவ்விடத்தில் அவள் சென்று அமர்ந்தும்விட்டிருக்கிறாள். ஆனால் எனக்கு முள்முனையளவுகூட குற்றஉணர்வு இல்லை” என்றாள். “அன்று அவையில் எழுந்து சூழ்ந்து பெண்ணை துகில் களைந்து இழிவுபடுத்தியது அவருடைய குருதி. மைந்தரை தந்தையிலிருந்து பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை” என்றாள். அசலையின் இதழ் மெல்ல பிரிந்த ஓசையைக் கேட்டவள்போல “ஆம், அவர் பேரறத்தான் என்றும் பெருந்தன்மையே அன்றாட இயல்பென்று கொண்டவரென்றும் நான் அறிவேன். ஆனால் உள்ளாழத்தில் எங்கோ உறையும் இருள் ஒன்று அவருள்ளில் இருந்துவந்து மைந்தராகிப் பெருகி இந்நகரை நிறைத்திருக்கிறது” என்றாள் காந்தாரி.
“திரௌபதி சிறுமை செய்யப்பட்டபின் அவரை நான் சந்தித்தபோது நெஞ்சுடைந்து கதறி அழுதார். அவ்வழுகை எத்தனை மெய்யானது என்று எனக்குத் தெரியும். அதன் பின்னரும் பலநாட்கள் எண்ணி எண்ணி கலுழ்ந்தார். சொல்லிச் சொல்லி நெஞ்சாற்றாமல் கைகளால் தரையை ஓங்கி அறைந்துகொண்டு விம்மும் அவரை இளையவர்கள் கண்டிருக்கிறார்கள். அவ்வுணர்வுகள் முற்றிலும் மெய்யானவை. ஐயத்திற்கு இடமில்லை. ஆனால் அது அச்செயலை இயற்றியது தானே என்னும் உணர்விலிருந்து எழுந்ததல்லவா? அச்செய்தியைக் கேட்டதும் ஒருகணமேனும் மைந்தரென நின்று அவர் அதை நடிக்கவில்லையா? அவ்வினாவை நான் சென்றடைந்த அன்றே அவரிடமிருந்து ஒழிந்தேன்.”
உரத்த குரலில் காந்தாரி சொன்னாள் “அப்பழியிலிருந்து அவர் ஒருபோதும் விலகமுடியாது. தன் கைகளால் குருதிபலி அளித்து அப்பழியை அவர் ஈடுகட்டியாகவேண்டும். இரக்கத்துக்குரியவர் என்பதில் மாற்று எண்ணமில்லை எனக்கு. பழிக்குரியவர் என்பதிலும் பிறிதொரு கருத்தில்லை.” சிறிய உதடுகளை வெண்முனைப் பற்கள் கடித்து அழுத்த அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். முகம் சிவந்து குருதிவண்ணம் கொண்டிருந்தது. கழுத்திலும் தோளிலும் கன்னங்களிலும் பச்சை நரம்புகள் புடைத்திருந்தன. மூச்சில் பெருமுலையின் இடுக்கு அசைந்தது.
அசலை பெருமூச்சுவிட்டு “இத்தனை பெருவஞ்சத்தையா நாம் இங்கு ஈட்டியிருக்கிறோம்?” என்றாள். பின்னர் “அன்னையே, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் என் கணவரைப்பற்றி நானும் எண்ணியிருக்கிறேன். இப்போது இச்சொற்கள் என் செவியில் விழுகையில் ஆம் ஆம் என்று என் உள்ளமே எழுகிறது” என்றாள். காந்தாரி நாகச்சீறலென “ஆம், பெருவஞ்சமேதான். வஞ்சம் பாஞ்சாலத்து அரசியுடையது அல்ல, பெண்குலத்து முழுமைக்கும் உரியது. பேரன்னையருக்கு உரியது. அறிக, இந்தச் சிற்றறையில் அமர்ந்திருக்கும் நான் இம்மண் மறைந்த அத்தனை பேரன்னையரின் தசைவடிவம். எந்நிலையிலும் அச்செயலுக்காக இவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அன்னையென்று ஆயிரம் கைநீட்டி கண்ணீருடன் மைந்தருக்காக எழுகையிலேயே குருதி குருதி என்று கூவும் ஒரு கொடுந்தெய்வத்தையும் என்னுள் கொண்டிருக்கிறேன். அப்பழியின் முதல் புள்ளி பேரரசரே” என்றாள்.
அசலை உள்ளம் எடைகொண்டு மெல்ல அசைய அணியோசை ஒரு சொல்லென காந்தாரியிடம் எதையோ உரைத்தது. அவள் முகம்தூக்கி “அவர்மேல் காழ்ப்பு என்று சொன்னாய் அல்லவா? அது மெய். எங்கிருந்து எழுகிறது அது என்று அறிவாயா?” என்றாள். “முன்பு நானும் இதை எண்ணியதுண்டு. சுனையில் மிதக்கும் ஓர் இலையின் நிழல் ஆழத்தில் அதன் சேற்றுத்தட்டில் விழுந்திருப்பதைபோல அவர் உடல்கொண்ட இவ்விழியின்மை உள்ளாழத்தில் எங்கோ நிழலாக விழுந்து வடுவென பதிந்துள்ளது. அவர் கொண்ட நல்லியல்புகள் அனைத்தும் அதற்கெதிராக அவர் கற்று எண்ணி நிரப்பிக்கொண்டவையே. நாம் காணும் பேரரசர் அந்நல்லியல்புகளால் மட்டுமே ஆனவர். ஆனால் துலாவின் மறுதட்டில் சற்றே மிகுந்த எடையுடன் அக்கருந்துளி அமைந்திருக்கிறது. வென்று தன்னுள் ஒடுக்கி அவர் ஆண்ட அக்கருநிழலே மைந்தரென எங்கள் வயிற்றினூடாக எழுந்து பெருகி அவரைச் சூழ்ந்துள்ளது. அவை நடுவே அரசியை சிறுமை செய்த கீழ்மை எது? அது ஒரு விழியின்மை அல்லவா?”
அசலை “அன்னையே, அவ்விழியின்மை இல்லாத ஆண்கள் உண்டா? அவ்விழியின்மை இல்லாத ஒருவர் பெருந்தந்தை என்று ஆகமுடியுமா?” என்றாள். “தீர்க்கதமஸின் கதையை நாம் அறிவோம். பெருங்காமமும் பெருவிழைவும் பேராற்றலும் விழியற்றவை. விழியின்மையே வேதப்பெற்றியென்றான தீர்க்கதமஸின் குருதியிலிருந்து பிறந்தவர்களல்லவா இன்று பாரதவர்ஷத்தை நிறைத்திருக்கும் அரசர்களில் பெரும்பகுதியினர்?” காந்தாரி அதை எண்ணியதனால் மெல்ல தணிந்து “ஆம், தீர்க்கதமஸின் விழியின்மையே இங்கு படைக்கலங்களாகி பெருகி பாரதவர்ஷத்தை நிறைத்திருக்கிறது. மாறி மாறி கொன்று களம்பட்டு குருதி பெருக்கி அழியப்போவது அதுதான்” என்றாள்.
“அக்கையே, இத்தனைக்கும் அப்பால் நாம் ஒருபோதும் மறுத்துவிட முடியாத ஒன்றுண்டு. அவர் நம் மைந்தரின் தந்தை” என்றாள் சத்யவிரதை. சத்யசேனை “ஆம், நம் மைந்தரின் தந்தை அவர். நம் மைந்தர் எவராயினும் நாம் அளித்த குருதிகொண்டவர் என்பதை மறக்க முடியாது. உளம் அளித்தது தந்தையென்றால் உடல் அளித்தது நாம். அப்பழியிலிருந்து நமக்கும் மீட்பு கிடையாது” என்றாள். அசலை “நான் சொல்லவந்ததும் அதுதான், அன்னையே. தாங்கள் பேரரசரை சென்று சந்திக்கவேண்டும். அதற்கு முன் யுயுத்ஸுவையும் அவர் அன்னையையும் சந்தித்தாகவேண்டும்” என்றாள். காந்தாரி “நானா?” என்றாள். “ஆம், அது தாங்கள் இறங்கும் எளிமையின் இறுதி எல்லை என்று நானும் அறிவேன். மைந்தர்பொருட்டு அங்குவரை நீங்கள் சென்றீர்கள் என்று இருக்கட்டும்” என்றாள் அசலை.
“பிரகதியை நான் இன்றுவரை அரசவிழாக்களிலன்றி எங்கும் சந்தித்ததில்லை. முறைமைச்சொற்களுக்கு அப்பால் ஒன்றும் பேசியதில்லை” என்றாள் காந்தாரி. “ஆனால் யுயுத்ஸுவை மைந்தர் என நெஞ்சிலேற்றியிருக்கிறீர்கள். அதுவே அவ்வன்னைக்கு நீங்கள் அளிக்கும் நற்சொல்தான். அன்னை பிரகதியிடம் தாங்கள் நேரில் பேச வேண்டிய சொல் இதுவே என முன்னரே ஊழ் வகுத்திருக்கும் போலும்” என்று அசலை சொன்னாள். “அவர்களிடம் சென்று சொல்லுங்கள் அன்னையே, அவர்களின் சொல்லே இன்று பேரரசரின் உள்ளத்தில் நுழையும் என்று. அவர் கட்டிவைத்திருக்கும் கோட்டைச் சுவர்கள் அனைத்தையும் கடந்து சென்று ஆழத்தில் ஒளிந்திருக்கும் அவ்வெளிய உயிரிடம் அன்னை பிரகதி பேச முடியும்.”
“நடுங்கி கூசி சிறுத்து அமர்ந்திருக்கும் அவ்வுயிரிடம் அவர் சொல்லட்டும், இத்தருணத்தில் இனியும் ஒன்று அவர் செய்வதற்கு உள்ளதென்று. யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனன், இளையோர் இருவரும் என ஐவரும் செவிகொள்ளும் ஒரு சொல் இன்று பேரரசருடையதே. ஏனென்றால் இப்புவியில் அவர்களுக்குச் செவியறியும் தந்தைசொல் என இருப்பது இது ஒன்றே” என்றாள் அசலை. காந்தாரி தலையசைத்தாள். தாழ்ந்த குரலில் “அதைவிடவும் பேரரசி குந்தி அவர் சொல்லை கேட்பார். எங்கோ உள ஆழத்தில் யாதவப் பேரரசிக்குள் நம் பேரரசர் வாழ்கிறார்…” என்றாள்.
காந்தாரி கைநீட்டி சொல்மறித்து “பெண்டிருக்குள் என்றாலும் நாம் பேசக்கூடாத சில உள்ளன” என்றாள். அசலை தணிந்து “ஆம்” என்றாள். சத்யவிரதை “மெய்தான், பேரரசரின் சொல்லென ஒன்றை யாதவஅரசி அடைந்தால் அவள் மறுக்க மாட்டாள்” என்றாள். காந்தாரி “அதைவிட பீமன் மறுக்கமாட்டான். தெய்வங்களுக்குப் பின் அவன் உள்ளத்தில் வாழும் மானுடன் பேரரசராகவே இருப்பார். தந்தையென பிறிதொருவரைக் கொள்ள அவனால் இயலாது” என்றாள். அசலை “பேரரசரின் சொல் ஒன்று பாண்டவர்களைச் சென்று அடையட்டும். எதன்பொருட்டும் இப்போருக்கு அவர்கள் துணியலாகாதென்று அவர்களிடம் பேரரசர் சொல்லவேண்டும்” என்றாள்.
“எப்படி அதை அவர் சொல்லமுடியும்? அவர்களுக்கு உகந்த பங்கை அளிக்க தன் மைந்தருக்கு ஆணையிடும் இடத்தில் அவர் இல்லையே” என்றாள் காந்தாரி. “மெய். கௌரவர்களின் தந்தையென அமைந்து பேரரசர் அச்சொல்லை அனுப்பவேண்டியதில்லை. பாண்டவர்களின் தந்தையென அச்சொல் எழட்டும். கௌரவர் அளிப்பது எதுவோ அதை பெற்றுக்கொண்டு அமையும்படி அவர் ஆணையிடட்டும்.”
“எதுவோ என்றால்?” என்றாள் சத்யசேனை. “எதுவாயினும். தாங்கள் கோருவன அனைத்தையும்கூட போரைத் தவிர்ப்பதற்காக அவர்கள் கைவிடவேண்டுமென்று பாண்டவர்களுக்கு பேரரசர் ஆணையிடட்டும். அவ்வாணை தலைமேல்கொள்ளப்படும், ஐயமே வேண்டியதில்லை” என்றாள் அசலை. “ஆனால் பேரரசி பிரகதியை சந்திப்பதென்பது…” என்று சத்யசேனை சொல்லத்தொடங்க காந்தாரி கைநீட்டி “நான் செல்கிறேன். பிறிதொரு எண்ணம் தேவையில்லை. நான் செல்கிறேன்” என்றாள்.