குருதிச்சாரல் - 10

பகுதி இரண்டு : பெருநோன்பு – 4

bl“பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்” என்று சத்யசேனை சொன்னாள். அசலை “நாங்கள் காத்திருக்கிறோம்” என்றாள். சத்யவிரதை “உணவுண்கையிலேயே உங்களிடம் பேசவிரும்புகிறார்களா என்று கேட்டுச் சொல்கிறேன்” என்று உள்ளே சென்றாள். அவளுடன் வந்த காந்தார இளவரசியர் ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியோர் நின்றனர். அவர்கள் வருவதைக் கண்டதுமே சத்யசேனையின் முகம் மாறிவிட்டது. அவர்களின் விழிகளை ஏறிட்டு நோக்க அவள் அஞ்சுவதுபோலத் தோன்றியது.

கோசல இளவரசிகளான காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் தனியாக அப்பால் நின்றிருந்தார்கள். அவர்களுடன் அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் இணைந்துகொண்டனர். வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் ஒட்டரநாட்டு அரசியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோருடன் பிறிதொரு குழுவாக நின்றிருந்தனர். அவர்களின் மூச்சொலியும் ஆடைநலுங்கும் ஒலியும் பெரிய கூடத்தை நிறைத்திருந்தது.

சத்யவிரதை வெளியே வந்து “இத்தனைபேர் உள்ளே செல்லமுடியாது. அக்கை உணவருந்தி முடித்துவிட்டார். கைகழுவியதும் வெளியே கூட்டிவருகிறோம்” என்றாள். அசலை “நன்று” என்றாள். சத்யவிரதையும் அவள் விழிகளை நோக்குவதை தவிர்த்தாள். அவர்கள் எவரும் எவர் விழிகளையும் நோக்கவில்லை. கூடத்தின் சாளரங்களில் திரைச்சீலைகள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோருடன் உள்ளே வந்தனர். உள்ளே இருந்தவர்கள் அவர்களை விழிகளால் வரவேற்றனர்.

எப்படி இயல்பாகவே நூற்றுவரும் பல தனிக் குழுக்களாக ஆகிக்கொள்கிறார்கள் என அசலை வியந்தாள். நூற்றுவர் என்பது ஒரு குழுவல்ல, திரள். திரளாக இருப்பது நெருக்கடிகளில் ஆற்றலையும் பாதுகாப்புணர்வையும் அளிக்கிறது. ஆனால் சிறுகுழுக்களே அன்றாடத்துக்கு உதவுவன. பகிர்வதற்கும் பிறரை உருவாக்கிக்கொண்டு வெறுப்பதற்கும். இந்த நூற்றுவரும் மடிப்பு மடிப்பாக விரிந்து சென்ற அரண்மனைகளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சார்ந்தும் வெறுத்தும் புறம்கூறியும் இக்கட்டுகளில் உதவியும் வாழ்க்கையை கழித்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நெற்றியோரம் நரைவரிகள் எழுந்திருந்தன. கண்கள் நிழல்கொண்டிருந்தன.

ஆனால் முதுமையை முதலில் வெளிக்காட்டுவது பற்கள். அவை ஈறுகளிலிருந்து நீட்டிக்கொள்வது. வாயைச் சூழ்ந்து விழும் கோடு. நானும் இப்படித்தான் இருக்கிறேனா என அசலை எண்ணிக்கொண்டாள். இன்னமும்கூட எனக்கு அகவை தெரியலாம். இவர்கள் அனைவரிலும் விளக்கவியலாத சிறுமியரியல்பு ஒன்றும் திகழ்கிறது. அவர்கள் விழிகளை உருட்டி, தலையை ஆட்டி பேசிக்கொள்கையில், வாய்பொத்தி கண்கள் ஒளிர நகைக்கையில், ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் பூசலிடுகையில், துயர்கொண்டு கண்ணீர் மல்குகையில் அவர்களுக்கு பதினைந்து அகவை கடக்கவில்லை என்றே தோன்றும்.

இந்த அரண்மனைக்குள் காலமில்லை போலும். எவரையும் சந்திக்காமல், எந்த இடர்களிலும் தொட்டுக்கொள்ளாமல் இவர்கள் காலத்தை கடந்து வந்துவிட்டார்கள். அகவை என்பது வாழ்தலின் தடம். இவர்கள் வாழவே இல்லை. நாளை இவர்களின் உடல்கள் முதுமைகொண்டு சிதையிலேறுகையில் ஆத்மா காற்றில் எழுந்து நின்று ஏன் என்றறியாது தவிக்கும் போலும். பிறிதொரு பிறவிகொண்டு துயர்களும் உவகைகளுமாக இருண்டும் ஒளிர்ந்தும் வாழ்ந்து நிறைந்தாலொழிய இவர்களுக்கு விண்ணுலகில்லை. அவ்வெண்ணங்களைக் கருதி அவளே உள்ளத்துள் புன்னகைத்துக்கொண்டாள்.

மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோருடன் வந்தனர். மச்சர்களும் மல்லர்களும் நிஷாதர்களிடமிருந்து எழுந்துவந்த அரசகுடியினர். அவர்களின் குலம் அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. கரிய பெரிய உடல்களும் எருமைவிழிகளும் ஒளிரும் வெண்பற்களும் கொண்டவர்கள். உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் வந்தபோது அவர்கள் முறைப்படி சொல்லுரைத்தாலும் வெளிர்நிறமும் சிறிய விழிகளும் ஒடுங்கிய தோள்களும் கொண்ட அவர்களுடன் ஒன்றாகச் சேரவில்லை. இருவண்ணப் பறவைகள் என தனியாகவே அவர்கள் குழுக்கொண்டனர்.

விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி ஆகிய திரிகர்த்தர்நாட்டு இளவரசிகளுடன் உள்ளே வந்தனர். அனைவரும் வந்துவிட்டார்களா என எண்ணிப்பார்க்கவேண்டும் என அசலை எண்ணியதுமே அறியாது புன்னகைத்தாள். அப்புன்னகை சத்யசேனையை சீண்டியதுபோல அவள் “எவர் பேரரசியிடம் பேசப்போகிறீர்கள் என்பதை முன்னரே வகுத்துக்கொள்க! அக்கை அமர்ந்தபின் இங்கே கூச்சல்கள் எழலாகாது” என்றாள். “நான் மட்டுமே பேசப்போகிறேன்” என்றாள் அசலை.

மச்சநாட்டு அரசி தாரை “நானும் பேசவேண்டுமென்று வந்துள்ளேன்” என்றாள். அசலை அவளை திகைப்புடன் பார்த்தாள். அவளை முன்னரே கண்டதாகக்கூட நினைவு சொல்லவில்லை. “நான் விகர்ணரின் துணைவி” என அவள் அசலையின் திகைப்பைக் கண்டதும் சொன்னாள். “ஆம், நினைவுகூர்கிறேன்” என்றாள் அசலை. அந்தப் பெண் அதற்குமுன் எங்கும் குரலெழுப்பியதை அவள் கேட்டதே இல்லை. ஷத்ரிய குலத்து அரசர்கள் நடுவே அவள் குலத்தவர் சேடியர்போலவே உடலசைவு கொண்டிருப்பார்கள். “ஆம், நீயும் பேசலாம். ஆனால் ஓரிருவரே பேசமுடியும். பேசுபவர் எவர் என்பதை இப்போதே சொல்லிவிடுங்கள்” என்றாள் அசலை. வேறு எவரும் எதுவும் சொல்லவில்லை. தாரை “நான் பேசுகிறேன்” என்றாள்.

அசலை அவளை நினைவுகூர்ந்தாள். விகர்ணன் மணந்த காந்தார நாட்டு விருஷகரின் மகள் மித்யை மகட்பேறில் இறந்தபோது அவன் மறுமனைவியாக அவளை மணந்தான். மச்சநாட்டு இளவரசியும்  வாதவேகனின் அரசியுமான அனங்கையின் இளையவள் அவள்.  மெலிந்த சிற்றுருவுடன் சிறுமியைப்போல வந்தவள். அரண்மனையின் சூழலில் முற்றிலும் அயலவளாக தன் தமக்கையின் சேடியென திரிந்தவள். காலை சற்று தட்டினாலே மயிர்சிலிர்த்து விழித்து உறையும் எலி போன்றவள். ஆனால் அவள் அனைத்தையும் கூர்ந்து நோக்கும் விழியொளி கொண்டிருந்தாள். கூர்ந்து நோக்குபவர்கள் எப்போதும் கடந்துவிடுகிறார்கள்.

சத்யசேனை காந்தார இளவரசி ஸ்வாதாவிடம் “நீ பேசவேண்டாமா?” என்றாள். ஸ்வாதா ஆம் என்று தலையசைத்தாள். “அப்படியென்றால் பேசவேண்டும் என சொல்வதற்கென்ன? மண்பாவை என நின்றிருக்கிறாய்?” என்றாள் சத்யசேனை. ஸ்வாதா தலைகுனிந்தாள். சத்யவிரதை உள்ளிருந்து வந்து “பேரரசி வருகிறார்” என்றாள். இரு சேடியர் வந்து காந்தாரி அமர்வதற்கான இருக்கையை பட்டுவிரித்து செம்மையாக்கினர்.

பேரரசி கால்வைப்பதற்கான பட்டுத்தலையணை பீடத்தின் அருகே கொண்டு வைக்கப்பட்டது. அந்த ஏற்பாடுகள் வழியாகவே நுண்வடிவில் அவள் வந்துவிட்டதாகத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அவள் இருப்பை உணரத்தொடங்கினர். அணியாடைகளை சீர்படுத்தினர். நிமிர்ந்தும் தனித்தும் நின்றனர். சத்யசேனை குரல் கொடுத்ததும் பணிப்பெண் முன்னால் வந்து சங்கு ஊதி “பேரரசி காந்தாரி வருகை!” என்றாள். காந்தாரியின் உருவம் வாயிலில் தோன்றியதும் மருகியர் அனைவரும் ஒரே குரலில் வாழ்த்துரைத்தனர்.

blசத்யவிரதையின் தோளைப்பற்றியபடி பெருமூச்சுவிட்டுக்கொண்டு மெல்ல காந்தாரி நடந்துவந்தாள். அவளுடைய பெரிய வெண்ணிற உடலில் தசைகள் அலையடித்தன. கழுத்திலும் தோள்களிலும் மென்தசை நனைந்த வெண்பட்டு என ததும்பியசைந்தது. சின்னஞ்சிறிய கால்களால் அவள் எடையை தாளமுடியவில்லை. பெரிய கைகளின் முடிவில் மிகச் சிறிய மணிக்கட்டும் குழந்தைகளுடையதுபோன்ற உள்ளங்கையும். அவள் மெல்ல பட்டுப்பீடத்தில் அமர்ந்துகொண்டு பெருமூச்சுவிட்டாள். “என்னடி, நேற்றுதான் வந்தீர்கள்? என்ன மீண்டும்?” என்றாள். அசலை “நான்தான் தங்களை சந்திக்க விரும்பினேன். இவர்களும் உடனிருக்க விழைந்தனர்” என்றாள்.

“நீதான் நாளும் என்னை வந்து பார்க்கிறாயே? பிறகென்ன?” என்றாள் காந்தாரி. “இது அரசமுறையான சந்திப்பு, பேரரசி” என்றாள் அசலை. காந்தாரியின் முகம் சுருங்கியது. மற்ற பெண்களை நோக்கி செவிகூர்ந்தபோது அவள் முகம் கோணலாக திரும்பியது. பெருமூச்சுவிட்டு “சொல்!” என்றாள். அசலை “பேரரசி, இப்போது என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்திருப்பீர்கள்” என்றாள். “பெரும்போர் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அரசியலாளர் சொல்வதைப் பார்த்தால் ஒரு மாதத்திற்குள் போர் மூண்டுவிடக்கூடும். நாடெங்கிலுமிருந்து படைகள் அஸ்தினபுரி நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. தெற்கே திருவிடத்திலிருந்தும் தமிழ்நிலத்திலிருந்தும்கூட படைகள் கிளம்பி வருகின்றன.”

காந்தாரி தலையசைத்தாள். “பாரதவர்ஷம் கண்டவற்றிலேயே பெரும்போராக அது இருக்கலாம். இங்கே என்னென்னவோ முரண்கள் சென்ற பலநூறாண்டுகளாகவே வளர்ந்து வந்துள்ளன. ஷத்ரியர்களுக்கும் பிற குடி அரசர்களுக்கும் பூசல். தொல்குடிகளுக்கும் பிறருக்குமான பூசல். கடல்வணிகத்தால் வளர்ந்த நாடுகளுக்கும் உள்நில நாடுகளுக்குமான வணிகச்சிக்கல்கள். சாலைகளில் சுங்கவரி கொள்வதைப்பற்றிய மோதல்கள். தொல்வேதங்களுக்கும் எழும்வேதங்களுக்குமான கருத்துப்போர். நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு சிக்கலானவை அவை. அனைத்தும் இந்த ஒற்றைமுனையில் இன்று கூர்கொண்டு நின்றிருக்கின்றன. நம் குடிப்போரில் பாரதவர்ஷம் தன் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்துக்கொள்ள எண்ணுகிறது.”

“வீழ்வது நம் குருதி, அரசி” என்றாள் அசலை. “நம் இளமைந்தரே இப்போரில் முதற்களப்பலியாவர். நாம் நம் குடிப்பூசலை நமக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும். குடும்பப்பூசலில் ஊர் தலையிட்டால் அது அக்குடும்பத்தையே பலிகொள்ளும் என சிற்றூரில்கூட பேசிக்கொள்வதுண்டு. இந்தப் போர் பொருளற்ற பேரிழப்பு. அதற்கு நாம் ஒப்புக்கொள்ளலாகாது.” காந்தாரி ஏதோ சொல்வதற்குள் அசலை குரலை உயர்த்தி “நாம் பெண்கள். நாம் செய்வதற்கு எல்லை உண்டு. நாம் சொல்வதை அவர்கள் இதுவரை பொருட்படுத்தியதில்லை. இனிமேல் பொருட்படுத்துவார்கள் என்றும் சொல்லமுடியாது. ஆனாலும் நாம் முழுமூச்சாக முயலவில்லை என்றே சொல்வேன். நம் உயிரையும் முன்வைத்து எதிர்க்கவில்லை. நம் மைந்தருக்குமுன் நாம் இறப்போம் என நாம் அவர்களிடம் இன்னும் சொல்லவில்லை” என்றாள்.

காந்தாரி அமைதியிழந்து தலையை அசைத்தாள். அவளுடைய சிறிய சிவந்த வாய் திறந்து மூடியது. மீண்டும் பெருமூச்சுவிட்டு “மூத்தவள் எங்கே?” என்றாள். “அக்கை உங்களிடம் தனியாக பேசுவார்கள். இளையவர்களுடன் வந்து உங்களை சந்திக்கும்படி அவர்கள்தான் சொன்னார்கள்” என்றாள் அசலை. “உம்” என்ற காந்தாரி மீண்டும் தலையை அசைத்துக்கொண்டே இருந்தாள். அவள் விழிகள் நெடுநாட்களாகவே நோக்கின்றியிருந்தமையால் சூழுணர்வை முற்றாகவே இழந்துவிட்டிருந்தாள். அங்கிருந்து எழுந்துசெல்ல விரும்புபவள்போலத் தோன்றினாள்.

மூச்சுத்திணற முனகியபடி கைகளால் துழாவி காந்தாரி “சத்யை” என்றாள். சத்யசேனை “அக்கையே” என்றாள். “இளையவள் எங்கேடி?” சத்யவிரதை “இங்கிருக்கிறேன், அக்கை” என்றாள். “என் நஸ்யம் எங்கே?” என்றாள் காந்தாரி. சத்யவிரதை சிறிய தந்தச் சிமிழை அளிக்க அதை வாங்கி மூக்கில் வைத்து அதிலிருந்த ஊசித்துளை வழியாக ஏலக்காய்ச்சுக்குப் பொடியை சற்று உறிஞ்சினாள். முகம் இழுபட்டு கோணலாகியது. ஓங்கி தும்மி அடங்கினாள். சத்யவிரதை அளித்த பட்டுத்துணியால் மூக்கை துடைத்துக்கொண்டாள். அசலையிடம் திரும்பி “அசலைதானே பேசிக்கொண்டிருந்தாய்?” என்றாள்.

“பேரரசி, நான் சொன்னவற்றை தாங்கள் உளம்கொள்ளவேண்டும். இது எங்கள் மைந்தரின் வாழ்வு. உங்கள் மருகியர் அனைவரும் இங்கே வந்துள்ளோம். இந்தப் போர் எவ்வகையிலேனும் நிறுத்தப்பட்டாகவேண்டும்” என்றாள். காந்தாரி “நாம் என்னடி சொல்வது? தீர்வை மூத்தவர்கள் அல்லவா கண்டுபிடிக்கவேண்டும்?” என்றாள். “மூத்தவர்கள் அதில் தோற்றுவிட்டார்கள். எப்போது பெண்ணை அவைநடுவே துகிலுரிந்தபோது நோக்கியிருந்தார்களோ அப்போதே அவர்கள் அதற்கான ஆற்றலை இழந்துவிட்டார்கள். நாம் சொல்லியாகவேண்டும். இந்நாடே பாண்டவர்களுக்குரியது. அனைத்து அரசமுறைகளின்படியும் இது அவர்களுக்குரிய நிலம்” என்றாள் தாரை.

“என்னடி சொல்கிறாய்?” என்றாள் காந்தாரி. “ஆம், இது அவர்களின் நிலம். அவர்கள் வைத்திழந்தது மட்டுமல்ல. மொத்த அஸ்தினபுரியே அவர்களின் தந்தை பாண்டு வழியாக அவர்களுக்குரியதே” என்றாள் தாரை. “அவர்களுக்கு காண்டவப்பிரஸ்தத்தை மட்டும் அளித்து அனுப்பியதுதான் முதற்பெரும்பிழை. அங்கு நம் குரல் எழுந்திருக்கவேண்டும். அப்போது செய்த பிழையே பெருகிப்பெருகி பூதப்பேருருவென நம் முன் வந்து நின்றிருக்கிறது.”

சீற்றத்துடன் கைநீட்டி முன்னால் வந்த சத்யசேனை “என்ன உளறுகிறாய்? இது பாண்டுவுக்கு பதினெட்டாண்டு காலம் மட்டும் ஆட்சிசெய்யும்பொருட்டு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசன் துரியோதனன் அகவைநிறையும்போது இயல்பாகவே அவனுக்கு வந்துவிட்டது” என்றாள். “இது எந்த ஊர் வழக்கம்? முன்பு பாரதவர்ஷத்தில் இது நடந்துள்ளதா என்ன?” என்றாள் தாரை. “அரசமுடி என்பது முற்றுரிமைகொண்டது. முடிசூட்டிக்கொண்டவர் அதை தெய்வங்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார், எந்த மானுடரும் அதை அளிக்கவில்லை என்றே நெறிநூல்கள் சொல்கின்றன. பாண்டு முடிசூட்டிக்கொண்டதுமே இந்நாட்டின் முழுமுதல் உரிமையாளர் ஆகிவிட்டார். அவர் அளித்தாலொழிய இந்நிலம் பிறருக்குரியதல்ல. அவர் அளித்திருந்தாலும்கூட அவர் மைந்தர் அதை மறுக்க நூல்கள் ஒப்புகின்றன.”

சத்யசேனை திகைத்துவிட்டாள். உதவிக்கு என அவள் சத்யவிரதையையும் அசலையையும் பார்த்தாள். காந்தாரி “அதை இப்போது நாம் பேசவேண்டியதில்லை” என்றாள். “இப்போது நாம் செய்யவேண்டியதென்ன?” தாரை “நாட்டை அவர்களிடம் அளிக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் நிலத்தைப்பெற்று கௌரவர்கள் ஆளட்டும். அதுவே நெறி. நெறி ஒன்றே பாதுகாப்பு. தலைமுறைகளைக் காப்பதும் அதுவே” என்றாள். அசலை “வீண்பேச்சு வேண்டியதில்லை” என்றாள். “பேரரசி, அஸ்தினபுரியின் அரசர் பாண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் குறைந்த ஒத்துதீர்ப்புக்கு முன்வரவேண்டும். அதை பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவருக்கு சொல்லவேண்டும்” என்றாள்.

“அவர் சொன்னால்கூட இன்று அவன் கேட்கமாட்டான்” என்றாள் காந்தாரி. “நான் பலமுறை அவனிடம் சொல்லமுயன்றேன். என் சொற்கள் எழவே அவன் ஒப்புவதில்லை.” அசலை பேசுவதற்குள் தாரை “பேரரசி, இதெல்லாம் நாம் எவரை ஏமாற்ற சொல்லிக்கொள்வது? பிதாமகர் பீஷ்மரே இன்றும் குருகுலத்தின் மூத்தவர். விழைந்தால் இந்த நாட்டின் மணிமுடியை கொள்ளவும் உரிமைகொண்டவர். நால்வகைப் படைகளும் அவர் ஆணைப்படியே என்பது எவருக்குத் தெரியாது? அவர் படைகளுக்கு ஆணையிடாமல் அஸ்தினபுரி போருக்கு எழமுடியுமா என்ன? அவர் போருக்கு மறுக்கட்டும். படைகளை தன் ஆணையில் எடுத்துக்கொண்டு அஸ்தினபுரியின் அரசருக்கு ஆணையிடட்டும்” என்றாள்.

அசலை அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். மாநிறமான சிறிய வட்டமுகம். நீண்ட கண்கள். சிறிய உதடுகள். குழந்தைபோலவே அவள் முகபாவனைகள் இருந்தன. குரலும் மழலையுடன் இருந்தது. ஆனால் சொற்கள் பலமுறை எண்ணிக்கூர்கொண்டவை போலிருந்தன. சத்யசேனை “நாம் அவரை வழிநடத்துவதா? பேசுவதற்கும் ஒரு முறை வேண்டும்… யாரிடம் கேட்டு இதையெல்லாம் இங்கே சொல்கிறாய்?” என்று கூவ காந்தாரி கையமர்த்தி அவளை அமையச்செய்துவிட்டு “அவள் சொல்வதும் சரிதான். பிதாமகருக்கு இன்று அவனை நிறுத்தும் உரிமை உண்டு. அவர் அதை செய்யட்டும்” என்றாள்.

“நாம் அதை அவரிடம் சொல்லமுடியுமா, அக்கையே?” என்றாள் சத்யசேனை. “இப்படி எண்ணித்தான் இதுவரை அகத்தளத்திலேயே இருந்துவிட்டோமா என எண்ணுகிறேன். நான் என்னை அனைத்திலுமிருந்தும் விலக்கிக்கொண்டது போலவும் அனைத்தும் நன்மைக்கே முடியும் என்றும் கற்பனை செய்துகொண்டேன். அது என் துணிவின்மையை மறைத்துக் கொள்வதற்காகவே. பேரன்னையாக நான் இன்று எழுந்து என் மக்களைக் காக்காவிடில் பேரழிவே எஞ்சும். நான் சென்று பீஷ்மரை பார்க்கிறேன். அவரிடம் சொல்கிறேன், இப்போர் நிகழலாகாது என்று. நிகழ்ந்தால் அவரே அதற்கு முழுப் பொறுப்பு என்று.”

அசலை “அத்துடன் நீங்கள் உங்கள் இளையவருக்கும் ஆணையிடவேண்டும், பேரரசி” என்றாள். “இவ்வழிவின் ஊற்றுமுகம் அவர் என்பதை மறக்கவேண்டாம்.” அவள் சொல்லிமுடிப்பதற்குள் தாரை “அவரல்ல, பேரரசியேதான். பேரிழப்பு அணுகுவது அவருக்கே. எனவே அதன் கருத்துளியும் அவரிலிருந்தே எழுந்திருக்கும்” என்றாள். சத்யசேனை பாய்ந்து தாரையை ஓங்கி அறைந்தாள். அந்த ஓசை கூடமெங்கும் ஒலித்தது. கன்னத்தைப் பற்றியபடி தாரை உடல்வளைத்து தலைகுனிந்தாள். “கொன்றுவிடுவேன், கீழ்மகளே. உன் குலத்துக்குரிய கீழ்மையை காட்டிவிட்டாய்” என்றாள்.

காந்தாரி “என்ன செய்தாய்? என்ன செய்தாய், அறிவிலி? கைநீட்டினாயா? விலகு… போ உள்ளே!” என்றாள். சத்யசேனை “அக்கையே…” என்றாள். “போடி உள்ளே” என்று காந்தாரி கூவினாள். சத்யசேனை சினத்துடன் உள்ளே சென்றாள். காந்தாரி “அருகே வா, மகளே” என்றாள். தாரை ஒரு கையால் கன்னத்தைப் பொத்தியபடி அருகணைந்தாள். காந்தாரியின் பெரிய கை நீண்டு அவளை தேடியது. அசலை அதைப்பற்றி தாரையின்மேல் வைத்தாள். அவள் தோளைத்தொட்டு தன்னருகே இழுத்தாள்.

தாரை அருகே நிலத்தில் அமர்ந்தாள். அவள் தலையை வருடியபடி “நீ சொன்னது உண்மை, மகளே. உண்மைதான் அவர்களை கொந்தளிக்கச் செய்கிறது” என்றாள் காந்தாரி. “நெடுநாட்களுக்கு முன்பு நான் என் இளையோனுடன் காந்தாரப்பாலையில் புரவியில் பாய்ந்தோடி விளையாடினேன். ஒரு மலைமேல் ஏறிநின்று தொலைநிலத்தை நோக்கினேன். கிழக்கே பசுமை நிறைந்த பெருநிலங்கள் பரவிக் கிடப்பதாக அன்று நூல்களில் கற்று அறிந்திருந்தேன். முகில்கள் இடைவிடாது மழைபொழியும் வானம். வானவிற்கள் சூடிய திசைகள். பொன்விளையும் வயல்கள்… நான் அந்நிலத்தை வெல்ல விரும்பினேன்.”

காந்தாரி பெருமூச்சுவிட்டாள். “அந்நாளை நன்றாகவே நினைவுகூர்கிறேன். செம்மண்புழுதி தரைமுகில்கள்போல சுழன்றுபரவிய பாலைநிலம். அந்தியின் செந்நிற ஒளி. அன்று நான் சொன்ன சொற்களை இன்று என நினைவுகூர்கிறேன்.” பிறிதொரு காலத்திற்குச் சென்று நிற்பவள்போல அவள் சொன்னாள் “இந்த மண்மீது குதிரையில் விரைகையில் இதை தழுவிக்கொள்வதாகவே உணர்கிறேன், மைந்தனை தழுவித்தழுவி நிறைவுகொள்ளாத அன்னைபோலத்தான் நானும்.”

தன்னுள் ஆழ்ந்து அமைந்திருந்துவிட்டு அவள் தொடர்ந்தாள் “அன்று அச்சொற்களை என் நாவில் வந்தமைத்த தெய்வம் எது என எண்ணி வியந்துகொள்கிறேன். என்னைச் சூழ்ந்து மைந்தர்களை நிரப்பியது அது. அவர்களைப் பெருக்கி ஒரு குலமென்றாக்கியது. எண்ணி எண்ணி நினைவில்கொள்ளமுடியாதபடி மைந்தர். தழுவித் தழுவி தீராத தோள்கள். இன்று கேட்கிறது அக்கொடுந்தெய்வம். இப்போது சொல், இத்தனை மைந்தரையும் அளித்தால் நீ விழையும் நிலத்தை தருகிறேன் என்று. தெய்வங்களுக்கு மானுடர்மேல் உள்ள வஞ்சத்துக்கு அளவேயில்லை. ஆணவத்தையும் பெருவிழைவையும் கருக்களாகக்கொண்டு அவை ஆடும் ஆடலுக்கு முடிவுமில்லை.”

“அன்று அவன் சொன்னான், நான் அடையவேண்டியவை எல்லாம் அங்கே இருக்கின்றன. என் நிலம்… தென்குமரி முனைவரை செல்லும் பாரதவர்ஷம் என. அன்று அவன் விழிகள் மின்னியதை நான் அருகிருந்து கண்டேன். என் கண்ணில் உடன்பிறந்தான் என எஞ்சியிருப்பது அந்த முகம்தான். பொருள்வல்லமையே படைவல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துகொண்டிருக்கிறது என்று அவன் அன்று சொன்னான். அவன் நாடுவது எது என இன்றும் எனக்குப் புரியவில்லை. ஒன்று தெரிகிறது, முதிரா இளமையில் உள்ளத்தை அள்ளிக்கொண்டுவிடும் பெருங்கனவுகள் கொடியவை. அவை நச்சுநோய் என உடலில் ஊறி நிறைகின்றன. எஞ்சிய வாழ்க்கையை முழுக்க உண்டு திகழ்கின்றன. அழித்துவிட்டே செல்கின்றன” என்றாள் காந்தாரி.

அவைக்கூடத்திலிருந்த பெண்கள் விழிகளில் நீர்மை மின்ன அசைவிலாது அமர்ந்திருந்தனர். தாரை அண்ணாந்து காந்தாரியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். “ஆம் குழந்தை, நீ சொல்வது மெய். நன்றும்தீதும் பிறர்தர வாரா” என்றாள் காந்தாரி. “என் பெருந்துயர் என்னிலிருந்து எழுந்தது. நான் அதை என்னால் முடிந்தவரை சிறைகட்ட முயல்கிறேன். அது என்னைக் கொன்று கடந்துசெல்லுமென்றால் அவ்வாறே ஆகுக!” அசலை “நீங்கள் சொல்வதை பேரரசர் தட்டமாட்டார்” என்றாள். காந்தாரி மெல்ல உதடு கோணலாக நகைத்து “மதயானைக்கு காதுமடல், ஒட்டகத்திற்கு மூக்குச்சவ்வு. ஆற்றல்மிக்க எவருக்கும் மிக மெல்லிய இடமொன்று உண்டு. அணையின் ஆற்றலை அதன் மிக நொய்ந்த பகுதியைக்கொண்டே கணிக்கவேண்டும்” என்றாள்.

அசலை அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். விழியற்றிருந்தமையாலேயே அனைத்தையும் நோக்குபவள் என்று அப்போது காந்தாரி தோற்றமளித்தாள். அவைக்கூடத்தில் மீண்டும் அமைதி நிலவியது. காந்தாரி “நான் பசுநிலப்பெருக்கை விழைந்தபோது என் பின்னால் நின்று இளங்காற்றாக நகைத்தது என் ஊழின் தெய்வம். இளையோரே, நான் பசுமையையே கண்டதில்லை. என் விழிகளில் எஞ்சியிருப்பது நான் பிறந்து வளர்ந்த காந்தாரத்துச் செம்புலம்தான்” என்றாள். அவள் முகம் மெல்ல மலர்ந்தது. “ஆனால் இன்று அது பேரழகுமிக்கதாகத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளில் அது என் கனவுக்குள் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு கணமும் அழகுகொண்டபடியே செல்கிறது.”

“என் மைந்தர், மைந்தர் மைந்தர், அவர் மகளிர் அனைவருமே அந்தச் செம்புலத்து புழுதிப்பரப்பில்தான் வாழ்கிறார்கள்” என்று அவள் தன் சிறிய பற்கள் தெரிய சிரித்தாள். அவள் பற்கள் சிறுகுழந்தைகளின் பற்கள்போல உப்புப்பரலென மின்னின. “நான் இறக்கையில் என்னை நீங்கள் இங்கே பச்சைபொலியும் பெருங்காட்டில் எரித்தாலும் நான் எரிவது செம்புழுதிமேட்டில்தான். எனக்கு நீங்கள் இங்குள்ள எதையும் சொல்லி புரியவைக்கவே இயலாது.” அவள் முகம் விரிந்துகொண்டே சென்றது. “என்ன ஒரு நல்லூழ்! இதை நான் தெய்வங்களிடம் கோரவில்லை, அவை எனக்கு கனிந்தளித்தன. ஆயிரம் பெயர்மைந்தருக்கு அன்னையான பின்னரும் பிறந்த நிலத்திலேயே வாழ்வதுபோல பேறு வேறுண்டா என்ன?”

மீண்டும் அவள் முகம் எண்ணத்தால் முழுத்தது. “என் திருமணநிகழ்வுக்கு தாலிப்பனையின் பூ வேண்டுமென்றனர் பூசகர். எங்கள் தொல்குடிப்பெண்டிர் பாலையெங்கும் அலைந்தனர். இறுதியில் ஒருத்தி தனித்து நின்ற தாலிப்பனையை கண்டுபிடித்தாள். தாலிப்பனை எப்போதும் பாலைநிலத்தின் சரிவில் தனித்தே நிற்கும். அது நின்றிருக்கும் இடத்தின் அடியில் மந்தண ஊற்றொன்று இருக்கும். அது மலர்விட்டிருந்தது. மலர் என்றால் பெரிய சாமரக்குடைபோல் ஒன்று. அதைக் கொண்டுவந்து என் மணநிகழ்வை நடத்தினர்.”

“அதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மலரிலிருந்து ஒரு பாலையையே நிறைக்கும் மகரந்தப்பொடி கிளம்பும் என்பதுதான். காற்றில் பறந்து பல நாழிகை தொலைவு செல்லும். தன் இணையை கண்டுகொண்டு கருவுறும். பாலையில் கோடியில் ஒன்று கருவுற்றால் நன்று. மாருதர்கள் அருளவேண்டும்” என்றாள் காந்தாரி. “தாலிப்பனை கங்கைச்சதுப்புக்கு வந்ததென்றால் அதற்கு இந்நிலம் போதுமா என்ன?” அவள் சொல்லோய்ந்து அமர்ந்திருந்தாள். நெடுநேரம் அங்கே ஒலியே எழவில்லை. பின்னர் “இளையவளே” என்றாள். சத்யவிரதை “அக்கையே” என்றாள். காந்தாரி கைநீட்ட அவள் பற்றித்தூக்கினாள்.

எழுந்துநின்று “நான் பீஷ்மபிதாமகரையும் துரோணரையும் இளையோனையும் சந்திக்கிறேன். அசலை…” என்றாள். “பேரரசி” என்றாள் அசலை. “நீயும் உடனிரு…” என்றாள் காந்தாரி. “நன்று நிகழுமென எண்ணுகிறேன்” என்றபின் “தாரை” என்றாள். “பேரரசி” என்றாள் அவள். அவள் தலையைத்தொட்டு “எண்ணுவதில் உறுதிகொள், மகளே. நீ அகநிறைவுகொள்வாய்” என்றபின் “செல்வோம்” என்று சத்யவிரதையிடம் சொன்னாள். தங்கை தோள்பற்றி அவள் மெல்ல நடந்து உள்ளே செல்ல அனைவரும் நோக்கி அமர்ந்திருந்தனர். எவரோ பெருமூச்சுவிட்ட ஒலியில் கலைந்து ஆடையோசையும் அணியோசையுமாக கூடம் உயிர்கொண்டது.