கிராதம் - 82
[ 37 ]
கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன.
மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் மெல்லிய கோடிழுத்து உள்ளே விரல்செலுத்தி இளங்கமுகுப்பாளைபோல் வெளுத்த உட்தோலை மடித்துப்புரட்டி சுருட்டி எடுத்து அகற்றி குடலும் நுரைக்குலைகளும் விலக்கி கீற்றுகளாக ஊன்கிழித்து உள்ளே உப்புமிளகுஇஞ்சிச் சாந்தை பூசி முக்காலிகளில் தொங்கவிட்டு கீழே அனல்மூட்டி சுடத்தொடங்கினர். வேகும் ஊனின் இனிய மணம் ஊரைச் சூழ்ந்தது.
உருகிச் சொட்டிய ஊன்நெய் எரிபட்டு அனலாகிச் சுடர்ந்து துளிகளாக விழுந்து விறகுக்குவைமேல் எழுந்த தழல்நாவுகளை துள்ளித் தழைந்து எழுந்து ஆடச்செய்தது. பொசுங்கி நெய்யூறி சிவந்து அருகி கருகி விரிசல் படர்ந்து உணவென ஆயிற்று ஊன். காய் ஒன்று கனிவதுபோலிருந்தது அது.
சூழ்ந்து அமர்ந்து அனலை நோக்கிக்கொண்டிருந்தனர் காலர்கள். அர்ஜுனன் அவர்கள் நடுவே சிறு கல்லொன்றில் கால் மடித்து அமர்ந்திருந்தான். அனலன்றி பிற ஒளியேதும் அங்கிருக்கவில்லை. விண்ணை முகில் மூடி இருந்ததனால்போலும், மீன்களென ஏதும் வானில் எழவில்லை. சீர்வட்டமென சுற்றியிருந்த மலைநிரை அலைகள் வானின் மங்கிய ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் இருளுக்குள் நிழல்செறிந்த வடிவுகளெனத் தெரிந்தன.
தொலைவிலிருந்து காட்டின் இரவொலிகள் எழுந்து வந்து ஊரையும் காடென்றே எண்ணவைத்தன. அறுபடாத சீவிடுகளின் ஓசையின் சரடில் கோக்கப்பட்ட காட்டுஆடுகளின் கனைப்பு, கூகைக் குழறல், தொலைவில் வேங்கையொன்றின் உறுமல், அதைக் கேட்டெழுந்த களிறுகளின் ஓசைத்தொடர். மிக அருகே மான்கூட்டம் ஒன்று புதர்களில் சுள்ளிகள் ஒடிய நடந்தது. அனலிருப்பதனால் வேங்கை அணுகாதென்று அறிந்த மான்கூட்டங்கள் புதர்களுக்குள் சீறலோசை எழுப்பியபடி நின்று அவர்களை நோக்கின. விழிதிருப்பி வருகையில் ஒரு மானின் அனல் மின்னும் விழிகளை அவன் நோக்கினான்.
சேறுபூசி அருகமைத்த குழிசிக்குள் விறகுகள் எரிகொண்டு வெடித்து செம்பொறி சிதறின. அவற்றில் ஊறிய அரக்கு எரிந்தபடி பின்னால் வந்தது. அதைத் துரத்தியபடி செந்தழல் உடன் வழிந்தது. சூழ்ந்திருந்தோர் எத்தனை பேரென்று அவ்விருளில் அறியக்கூடவில்லை. சிற்றில்களில் இருந்து மேலும் மேலும் என வந்து ஓசையின்றி பின்னால் அமர்ந்துகொண்டனர். கல்லணிகலன்கள் குலுங்கியதாலும் அமரும் மூச்சொலிகளாலுமே அவர்கள் வந்தமர்வதை உணரமுடிந்தது. ஒளியில் தெரிந்த முகங்களனைத்தும் ஒற்றை உணர்வுகொண்டிருந்தன. சடைத்திரிக் குழல் கொண்ட அன்னையர். வலக்கொண்டை சரிந்த கன்னியர். பிடரியில் சடைக்கற்றை பரவிய இளையோர். அனல்படர்ந்த தாடியுடன் முதியோர். அனைத்து விழிகளிலும் நெருப்பு தெரிந்தது.
நெருப்பை அன்றி பிற எதையும் எவரும் நோக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். அருமணிக்குவை நோக்கும் கருமியின் மெய்மறந்த நிலைபோலும், பேரழகுப் பாவையொருத்தி மேடையேறி நின்றாடுவதை நோக்கும் காமுகனின் உவகைபோலும், கொலைக்கலம் ஏந்தி எழுந்த அறியா தெய்வம் ஒன்றைக்கண்டு அஞ்சிச் சொல்லழிந்ததுபோலும் நோக்கிச் சமைந்த விழிகள். நெருப்பு சீறிச்சுழன்று நாபறக்க துள்ளி அமைந்து எழுந்து தழைந்தாடியது. கழுகென இறகு விரித்தது. அரவென கழுத்து நீட்டியது. பசுவென நா துழாவியது.
திறந்த குங்குமச்சிமிழ்போல் அனல் அள்ளி நிறைத்து திறந்திருந்த விழிகளை மாறி மாறி நோக்கிச் சுழன்ற அவன் பார்வை குடிமூத்தார் மூவரில் அமைந்தது. சடையன் இரு கைகளையும் நெஞ்சில் கோத்தபடி அமர்ந்து அனலை நோக்கிக் கொண்டிருந்தார். பிசிறி நின்ற சடையின் உதிரி முடிகள் அனல் எனத் தெரிந்தன. பேயன் இருகைகளிலும் தலையை தாங்கியிருக்க முழங்கால்மடிப்பில் முகம் வைத்து அமர்ந்திருந்தார் எரியன். நாளும் எரியோம்புபவர்கள்போலத் தோன்றவில்லை அவர்களின் முகம். அன்று முதல்முறையாக பொன்னொளி கொண்டெழுந்த தேவனை நோக்குபவர்கள் எனத் தெரிந்தனர்.
காளன் நெருப்புக்கு வலப்பக்கம் கால் மடித்து முழங்கால்கள்மேல் கைவைத்து அமர்ந்திருந்தான். அவனருகே கொம்பன் அமர்ந்திருக்க இடப்பக்கம் காளி தன் மடியில் குமரனுடன் அமர்ந்திருந்தாள். கொம்பன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை முன்னால் நீட்டி கனிந்த ஊனை மூக்கால் தொடவிழைபவன் போலிருந்தான். இளையவன் இருகைகளையும் வாய்க்குள் விட்டு அடிநிரம்பாச் சிறுபாதங்கள் சுருங்க கட்டைவிரலை சுழித்துக் கொண்டிருந்தான்.
ஊன் வெந்து சுவைமணம் எழுந்ததும் அறிந்த தெய்வம் ஒன்று அறியாவெளியிலிருந்து பெருகி நேரில் தோன்றியதென அர்ஜுனன் உணர்ந்தான். அடுமடையர் சேர்ந்து வெந்த ஊன் விலங்குகளை கணுக்கொழுவால் பற்றி அனலில் இருந்து விலக்கி எடுத்து தூக்கி இயல்பாகச் சுழற்றி தரையில் பரப்பப்பட்டிருந்த பாக்குமட்டைப் பாய்களில் வைத்தனர். வன்பால் நிலத்தில் முதல்மழை என வெம்மைஎழுந்த ஊனில் கொதிக்கும்நெய் சிறுகுமிழியுடன் வற்றிக்கொண்டிருந்தது. சொட்டிய ஊன்நெய் பாளைவரிகளில் தயங்கி வழிந்தது.
ஊன் அனைத்தும் இறக்கப்பட்டதும் கிழங்குகளையும் காய்களையும் பச்சைநாணலில் இறுக்கமாகக் கோத்து அனலில் காட்டி, சுழற்றிச் சுட்டு எடுத்து வாழை இலைமேல் பரப்பினர். காய்ச்சில் பெருங்கிழங்குகள் வெந்து வெண்புன்னகையென வெடித்திருந்தன. கருணைக்கிழங்கு கறைமணம் எழ தோல் வழண்டிருந்தது. முக்கிழங்கும் நனைகிழங்கும் கொடிக்கிழங்கும் வள்ளிக்கிழங்கும் கலந்து ஒன்றென மணத்தன. ஒவ்வொரு காயும் ஒரு வகையில் வெந்து சுருங்கியது. வழுதுணங்காய் பசுந்தோல் வழண்டது. மாங்காயின் கடுந்தோல் அதுங்கியிருந்தது. கோவைக்காய் கருகியிருந்தது.
இலைகளிலும் பாய்களிலும் உணவைப் பரப்பியதும் அடுமடையன் சென்று சடையன் முன் நின்று தலைவணங்கி “அன்னம் ஒருங்கிவிட்டது, மூத்தவரே” என்றான். அவர் தன் முப்பிரிவேலை அவன் தலைமேல் தொட்டு வாழ்த்தினார். சடையன் காளனை நோக்கி கைகாட்ட அவன் எழுந்து அனலை மும்முறை வணங்கிவிட்டு தன் கையிலிருந்த கத்தியால் வெந்து விரிந்திருந்த பன்றியின் தொடையொன்றை வெட்டி தனித்தெடுத்தான். அதை மூன்றாகப் பங்கிட்டு குடிமூத்தார் மூவர் முன் வாழையிலையில் படைத்தான். பின்னர் காளி எழுந்து ஊனையும் கிழங்குகளையும் அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தாள்.
நீரிலிட்ட பொரி பரவுவதுபோல அன்னம் அத்திரளில் பிரித்து பகிரப்பட்டு ஓசையின்றி விரிவதை அர்ஜுனன் கண்டான். எவரும் கேட்கவில்லை. எவரும் விலக்கவுமில்லை. கிழங்கும் காய்களும் ஊனும் அவர்கள் முன் வாழை இலையில் படைக்கப்பட்டு முடிந்ததும் சடையன் முதல் பிடி ஊனை எடுத்து “மூதாதையரே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் இட்டார். பேயன் “வாழ்பவர்களே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் அன்னம் இட்டார். எரியன் “என்றுமிருப்பவர்களே, உங்களுக்கு” என்று கூறியபடி அனலூட்டினார்.
அங்கிருந்த அனைவரும் “ஆம். அன்னையரே, உங்களுக்கு. தந்தையரே, உங்களுக்கு” என்று உரைத்தபடி ஒரு சிறு உணவுத்துண்டை எடுத்து அனலில் இட்டனர். அனைவரும் சடையனையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் உண்ணத் தொடங்கியதும் தாங்களும் உண்ணலாயினர்.
மழைத்துளி சேற்றில் விழும் ஓசைபோல் உணவு மெல்லப்படும் மெல்லிய ஓசை மட்டும் அர்ஜுனனை சூழ்ந்திருந்தது. அவ்வப்போது சில மூச்சுகள், சில உதடோசைகள். சில குழவிகள் சிணுங்கின. சில மைந்தர் மென்குரலில் அன்னையிடம் ஏதோ சொல்லினர். கொம்பன் இருகைகளாலும் பன்றித்தொடையை எடுத்து ஓநாய்க்குட்டியென மிகுவிரைவுடன் உண்பதை அர்ஜுனன் ஆர்வத்துடன் நோக்கினான். விழிதிருப்பியபோது காளியின் விழிகளைக் கண்டு புன்னகைத்தான். உண்டு முடித்ததுமே முழந்தாளிட்டு கை நீட்டி இன்னொரு மான் தொடையை கொம்பன் அவனே எடுத்துக்கொண்டு அர்ஜுனனை நோக்கி நாணப்புன்னகை செய்தான்.
உண்ணுதல் ஒரு வேள்வியென அங்கு நிகழ்வதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அனவருக்கும் உணவளித்த நிறைவுடன் நடுவே மெல்ல ஆடி நின்றிருந்தது அனல். உண்ணும் ஒலிகள் மெல்ல விரைவழிந்து ஓயும் மழையின் இறுதிச் சொட்டுகளென ஒலிக்கலாயின. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு மூச்சொலிகள் கேட்டன. பின்னர் ஒலிகள் அனைத்தும் அமைய ஒரு சிறு குழந்தை ஏப்பம்விட்ட ஒலி இனிய பறவையின் குரலென இருளில் ஒலித்தது. அர்ஜுனன் திரும்பி அக்குழவியை நோக்க விழி சுழற்றினான். மீண்டும் ஓர் ஏப்பம் ஒலித்தது. முதிய அன்னையொருத்தியின் நிறைவு அது. பின்னர் ஏப்ப ஒலிகள் இருளுக்குள் தொடர்ந்து எழுந்தன.
காளன் ஒரு சிறு மண்குழாயை அனலூட்டி வாய்பொருத்தி ஆழ்ந்து இழுத்தான். மூக்கினூடாக வந்த நீலப்புகை தாடியில் ஊடுருவிப் பரவியது. அவ்வனலை வாங்கி பிறிதொருவன் இழுத்தான். சுழன்றுவந்த அனல் மீண்டும் அவனிடமே வந்தது. இழுக்கையில் முன்னால் குனிந்து புகைவிடுகையில் அண்ணாந்து மீண்டும் குனிந்து என ஒரு தாளம் அவ்வசைவுகளுக்கு இருந்தது. புகை எடைமிக்க சேறுபோல அவர்களை அழுத்தி மூடி ஓசையற்றவர்களாக ஆக்கியது. விழிகள் மட்டும் அதிர்ந்தபடி இருந்தன.
கைகளை ஒன்றுடன் ஒன்று உரசித் துடைத்துக்கொண்டு உடலொடு உடல் தொட்டு பெரிய வட்டமாக அனலைச் சுற்றி அமர்ந்திருந்தனர் காலகுலத்தோர். அவர்களின் தோள்களும் மெல்ல அசைவதை அர்ஜுனன் கண்டான். ஒற்றைச் சரடில் கோக்கப்பட்ட மணிகளென அவை முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தன. பின் கைகள் நெளிந்தும் குழைந்தும் குவிந்து நீண்டும் வளைந்தமைந்தும் விரல்கள் மலர்ந்தும் கூம்பியும் விழிச்சொற்களாயின.
பலநூறு முறை பயின்ற நடனம் என நிகழ்ந்தது அவ்வசைவு. பழுதற்ற பொறிபோல. அவர்களை ஆட்டுவிப்பது எது என அவன் எண்ணியதும் தன்னுடல் அப்பெருக்கில் இணையாததை உணர்ந்தான். அவ்விலக்கம் மூலமே அவ்வசைவை அவன் பார்ப்பதையும் அறிந்தான்.
தன் இடையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அக்கூழாங்கல்லை எடுத்து வலக்கையில் வைத்து பொத்திக்கொண்டான். அதை நெஞ்சோடு சேர்த்து விழிகளை மூடியபடி மெல்ல தன் உடலை அசைக்கலானான். இருபுறமும் தோள்கள் அவனை முட்டின. பின் அத்தொடுகையின் தாளத்தை அவன் உடல் அறிந்தது. அத்தாளம் மட்டுமே அவன் உடலில் அசைவென்றாகியது. அந்தக் கல் எடைகொண்டு அவனைத் தன் ஊசலென ஆக்குவது போலிருந்தது. அவன் மூச்சும் நெஞ்சும் அத்தாளத்தில் அமைந்தன.
காளன் “ஹாம்!” என்று ஒலித்தான். “ஹாம்!” எனும் நுண்சொல் மலையிடுக்கில் காற்றுநுழையும் ஒலியென எழுந்தது. எரிசுழல்வதுபோல் மாறியது. அவர்களின் உதடுகள் அவற்றை உச்சரிக்கவில்லை. அவர்கள் எவரும் அதை அறியவுமில்லை. அச்சொல் திரளென மட்டுமே இருந்த அவர்களிடமிருந்து இயல்பாக எழுந்தது. மீளமீள. முடிவிலாதென எழும் ஓர் ஒலி சித்தத்தை நிறுத்திவிடுகிறது. “ஹும்!” என்னும் அடுத்த நுண்சொல். மீண்டும் மீண்டும். ஊசல். முடிவிலாச் சுழல்.
தன்னைத் தான் சுற்றும் மையத்தின் அசைவிலா அசைவு. “ஹம்!” அனல் முழக்கம். அனல் ரீங்காரம். அனல் வெடிப்பு. “ஹௌம்!” அனைத்தையும் அறைந்து மூடித்தழுவும் அலை. “ஹௌ!” அனைத்தின் மேலும் பொழியுமொரு பெருமழை. “ஹ்ரீம்!” அனைத்தையும் வளைத்தெழும் பசி. அனைத்தையும் நொறுக்கும் “ஸ்ரீம்!” கொஞ்சல் என “ப்ரீம்!” அழைப்பு என “ரீம்!” ஆழ்ந்த அமைதிகொண்ட “க்ரீம்!” சீறி எழும் “ஸூம்!” அனைத்தையும் மூடிநின்றிருக்கும் “ஹோம்!” ஒலிகளின் நீள்பெருக்கு.
“ஆ” என்னும் ஒலியுடன் காளன் எழுந்தான். அவன் கைகள் நாகபடங்கள் என சீறி எழுந்தன. கால்கள் நிலத்தை உதைத்து உதைத்து துடித்தன. உடன் காலர்கள் இருவர் உடுக்கோசையுடன் எழுந்தனர். துடிதுடித்துப் பற்றிப் படர்ந்தேறிய அவ்வொலியில் துள்ளும் தசைகளுடன் காளன் பாய்ந்து கல்பீடம் மீதேறினான். பெருந்துடி தாளத்துடன் இயைந்து அவனைச் சூழ்ந்து நடனமிட்டனர் பன்னிரு காலர். நடுவே அவன் கணமொரு தோற்றம் கொண்டு கண்விரைவை முந்தி நின்றாடினான்.
கையொன்று சொல்ல கால் அதைத் துள்ள கண் அதற்கப்பால் எனச் சுட்ட சொல்தொடா சித்தம்தொடா விசையில் நிகழ்ந்தது ஆடல். இளநகை கொண்டது இதழ். மான் என்றது கை. சினம்கொண்டு சீறியது முகம். மழு என்றது கை. மலர் என்றது. மின்படை என்றது. அமுதென்றது. ஊழித்தீ என்றது. நஞ்சுண்டது. அமுதளித்தது. ஆக்கியது ஒரு கை. அனலேந்தி காத்துநின்றது மறுகை. அருளியது ஒரு கை. அடி பணிக என்று ஆணையிட்டது மறுகை. அங்கு அத்தனை கைகளும் உடல்களும் உரைத்த விழிச்சொற்கள் அனைத்தும் அவன் கைகளில் உடலில் நிகழ்ந்தன.
இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல். சிறகென எழுந்து சுழன்றது சடைத்திரள். தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்க சுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி அவன் விழியிலிருந்து மறைந்தான்.
அர்ஜுனன் அச்சுழலில் தான் கரைவதை உணர்ந்தான். இதோ, இக்கணம், மறுகணம், இது, இக்கணம் என உணர்ந்து சென்று பின்பு அனலைச்சுற்றி மாபெரும் சுழியாகச் சுழன்றுகொண்டிருந்தான். விசைகொண்டெழுந்து அவ்வனலென்றானான். விசும்பின்மேல் வெளிசூடி நின்றான்.
[ 38 ]
“ஏழு முழுநிலவுகளை கைலைத் தாழ்வரையில் வாழ்ந்து கண்டு பாசுபதம் பெற்று பார்த்தன் திரும்பி வந்தான்” என்றான் சண்டன். திருவிடத்தின் தென்னெல்லையாக ஒழுகிய கோதை நீர்ப்பெருக்கின் கரையில் ஒரு நாணல்மேட்டில் அந்தணர் நால்வரும் இளஞ்சூதனும் அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். “முத்துவிளைந்த சிப்பி மேலெழுந்து வருவதுபோல் அவன் வந்தான் என்கின்றது அயோத்தியின் பெருங்கவிஞர் கௌண்டின்யர் அர்ஜுனேந்திரத்தை தொடர்ந்து எழுதிய காவியமான பாசுபதார்ஜுனியம்.”
வெண்தாமரை மலரிதழ் அடுக்குகள் என அவனைச் சூழ்ந்திருந்த பனிமலை முடிகள் மெல்ல கூம்பி அவனை வெளியேற்றின. சிறு கருவண்டென அகன்று பின் திரும்பிநின்று அவை இளவெயிலில் வெளிறி மறைவதை நோக்கினான். அங்கு பெற்றவை அனைத்தும் முன்பு எப்போதோ அறிந்திருந்தவை என்று தோன்றும் விந்தையை எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு அறிதலுக்குப் பின்னரும் அவன் உணர்வது அது, அறிதலெல்லாம் நினைவுகூர்தல் மட்டுமே.
அவன் கண்முன் அந்தி எழுந்துகொண்டிருந்தது. மீண்டும் நின்று திரும்பி வெண்புகை நடுவே அனல் என எழுந்த கைலைமலைமுடியை அவன் நோக்கினான். அதைவிட்டு விழியகற்ற இயலாதவனாக நெடுநேரம் உறைந்திருந்தான். பின் எண்ணம் மின்ன தன் இடையில் இருந்து பாசுபதத்தை எடுத்து நோக்கினான். அவன் கையிலிருந்தது கைலைமுடி.
“இங்கு மட்டுமே இது இருத்தல் தகும். பிறிதெங்கும் அமைய ஒண்ணாது” என எண்ணினான். நீள்மூச்சுடன் புன்னகைத்து “நன்று, முழுமுதன்மை இவ்வண்ணம் எனக்கு வாய்த்தது” என்று தனக்கே உரைத்தபின் அதை வெண்பல்நிரை என எழுந்து ஒரு வான்நகைப்புபோலத் தெரிந்த இமயம் நோக்கி வீசினான். திரும்பாமல் நடந்து மீண்டான்.
மலையடுக்குகள் கடந்து சரிவிறங்கி வருகையில் வெள்ளி நாகமென ஓர் ஆறு வளைந்தோடி நுழைந்து மறைந்த பிலமொன்றைக் கண்டான். அதன் வழுக்கும் பாறைகளுக்குள் நுழைந்து இருண்டு குளிர்ந்த வாய்க்குள் புகுந்து நடந்தான். நூறு வளைவுகளுக்குப் பின் வில்லும் அம்பும் தூளியும் கொண்டு அவன் எழுந்தது கின்னரர்களின் தெய்வக்குகை முகப்பில்.
அது இளம்புலரிவெயில் எழுந்து சிறகுவிரித்து நின்ற நேரம். தங்கள் தெய்வங்களுக்கு பூசனை இட மலரும் நீரும் அன்னமும் கொண்டு அங்கு நின்றிருந்தனர் கின்னரர். காலைச் செவ்வொளியில் கைவில்லுடன் எழுந்து வந்த அவனைக் கண்டதும் குலத்தலைவர் தலைமேல் கைகூப்பி “எந்தையே, தெய்வங்களே!” என்று கூவினார். பூசகரும் பிறரும் அவனை வாழ்த்தி குரலெழுப்பினர். புன்னகையுடன் அவர்களை நோக்கி அருள்மொழி உரைத்தபின் அவன் நடந்து கீழே வந்தான்.
கின்னரஜன்யர்களின் சிற்றூரில் பார்வதி அவனுக்காக நோற்றிருந்தாள். அவன் மீளப்போவதில்லை என்றனர் அவள் குடியினர். தோழியரும் அவனை மறப்பதுவே அவளுக்கு உகந்தது என்றனர். அவள் “முயன்று மறப்பதென்று ஒன்றுண்டா என்ன? மறக்க இயலாதது அவ்வண்ணமே தன்னை நிறுவிக்கொள்கிறது, தோழியரே” என்றாள். “இது என் உடலுக்குள் அமைந்த உள்ளம் என, நான் என்றாகிய பிறிதொன்று. தானின்றி என்னை இருக்க விடாது. இது இவ்வண்ணமே திகழட்டும்” என்றாள்.
இளவேனிலின் முதல்நிலவு நாளில் கின்னரஜன்யர் மலையிறங்கிவரும் தங்கள் தெய்வங்களுக்காக படையல்கள் கொண்டு மலைச்சரிவின் எல்லையென அமைந்த கின்னரப்பாறையருகே கூடிநின்றிருந்தபோது தொலைவில் வெண்பனிமேல் படர்ந்த கதிரொளியில் ஓர் உடல்நிழல் அசைவதைக் கண்டனர். கின்னரர் என்று குலத்தலைவர் கூவினார். கின்னரஜன்யர்களின் குடிநிரைகள் வாழ்த்தொலி எழுப்பினர். பூசகர் மட்டும் இரு கைகளையும் கூப்பியபடி, சுருங்கிய முகமும் நடுங்கும் தலையுமாக காத்திருந்தார்.
“ஒருவன் மட்டுமே வருகிறான்” என்று ஒருவர் சொன்னபோது தலைதூக்கி முகம் விரிய நோக்கினார். “வில்லேந்தியவன்” என்றான் ஒருவன். “கின்னரரல்ல. இங்கிருந்து சென்ற இளையவர்” என்று ஓர் இளையோன் கூவினான். “அவர் வருவார் என்று நான் அறிவேன். அவர் வரவில்லை என்றால் தெய்வங்களும் பொருளிழந்துவிடும்.” அவர்கள் அனைவரும் கூர்ந்து நோக்கியபடி முண்டியடித்தனர். “அவரா?” என்று பிறிதொரு குரல் வியந்தது. “அவர்தான்” என்று நூறு குரல்கள் எழுந்தன.
பின்னர் வியப்பு எழுந்தமைந்த அவர்கள் குரல் அழிந்து நோக்கி நின்றனர். மலைச்சரிவில் கரிய எருதொன்று துணைவர அவன் இறங்கி வந்தான். ஊரெல்லைக்கப்பால் எருது நின்று காதுகளை அடித்துக்கொண்டு தலை குலுக்கி முன்காலால் சுரைமாந்தி நின்றது. அவன் புன்னகையுடன் வந்து அவர்கள் முன் நின்றான். குலத்தலைவர் எழுந்த உணர்வுப்பெருக்குடன் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி “வருக, வீரரே! எங்கள் குடி தழைக்கட்டும்! மாவீரர் இங்கு பிறக்கட்டும்!” என்றார்.
அர்ஜுனன் பூசகரை அணுகி அவர் கால்களைத்தொட்டு சென்னி சூடினான். அவன் தோள்களை அள்ளி வளைத்து தன் நெஞ்சோடு சேர்த்து “வென்று மீள்வாய் என்று நான் நன்கறிந்திருந்தேன்” என கண்ணீர் விட்டார். எவரோ ஒருவர் தன் தலையணியைக் கழற்றி வானில் வீசி “இளைய பாண்டவர் வாழ்க! வில்கொள் விஜயன் வாழ்க!” என்று கூவினார். அப்பெருந்திரள் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.
பூசகரும் குலத்தலைவரும் இருபுறமும் அழைத்துச்செல்ல அர்ஜுனன் அச்சிற்றூருக்குள் புகுந்தான். ஊர்மன்றில் சென்றமர்ந்து அவனைச் சூழ்ந்து நின்ற இளையோரிடம் சொன்னான் “இவ்வூரைச் சூழ்ந்த அனைத்து கோட்டைகளும் அகற்றப்படுவதாக! படைக்கலம் கொள்ளுங்கள், அஞ்சி ஒளியாதிருங்கள். சார்ந்திருங்கள், பணியாதெழுங்கள். வென்று செல்லுங்கள், பழி கொள்ளாதீர்கள். என்றும் இவ்வூரின் நெறியென்று இது அமைக!” இளைஞர்கள் கைதூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்று முழங்கினர்.
“கின்னரர், ஊர்ணநாபர் இருவருமே உங்கள் தெய்வங்களென்று அமைக! உங்கள் விண்ணை கின்னரர் ஆள்க! உங்கள் மண்ணை ஊர்ணநாபர் ஆள்க! கிளைகள் தனித்து அசையட்டும். வேர்கள் பின்னி ஒன்றாக இருக்கட்டும். சிறப்புறுக!” என்று அர்ஜுனன் அவர்களை வாழ்த்தினான். “வாழ்க! வாழ்க!” என முதியோர் மலரிட்டு அவன் சொற்களை ஏற்றனர்.
மறுநாள் ஊர்மன்றில் குடிமூத்தார் எழுவர் கூடி பார்வதியை அவனுக்கு கடிமணம் செய்து கையளித்தனர். அவள் கைபற்றி ஏழு அடி வைத்து அனல் முன் நின்று “இவள் என் துணைவியாகுக!” என்று அர்ஜுனன் சொன்னான். “இவளைப் போற்றிய தேவர், காத்த கந்தர்வர், அருளிய தெய்வங்கள் அனைவரும் அறிக, இனிமுதல் இவள் என்னவள். இவளுக்கு தேவரும் கந்தர்வரும் தெய்வங்களும் ஆக நான் திகழ்வேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
அவன் கைபற்றி தலைகுனிந்து நின்ற பார்வதி புன்னகைத்தாள். அவளுக்கு இருபுறமும் நின்ற தோழியர் அவள் உடல் மயிர்ப்புகொண்டு புள்ளிகளாவதைக் கண்டனர். மணம் முடிந்து அவளை தனித்தழைத்துச் செல்கையில் “வென்றுவிட்டாய்” என்றாள் ஒரு தோழி. அவள் “நான் தோற்றதே இல்லை” என்றாள்.
அன்றிரவு மணவறை மென்சேக்கையில் இளவெம்மையுடன் போர்த்தியிருந்த மயிர்த்தோல் போர்வைக்குள் அவளுடன் மெய்தழுவிப் படுத்திருக்கையில் அர்ஜுனன் சொன்னான் “இங்கிருந்து நான் சிலநாட்களில் கிளம்பிச் செல்லப்போகிறேன், இளையோளே. எனக்கு குடிக்கடனும் அரசகடனும் உள்ளன. மீண்டு வருதல் என் கையில் இல்லை. ஆனால் ஊர்ணநாபனின் குலத்திலிருந்து ஒரு சரடு என்றும் என்னுடன் இருக்கும் என அறிவேன்.”
இரு கன்னங்களும் புன்னகையில் குழிய “ஆம், உங்கள் குருதி இங்கு வாழும்” என்றாள் பார்வதி. அவன் தோளை வளைத்து முகத்தருகே தன் முகம் கொண்டு அவள் கேட்டாள் “ஒன்று கேட்பேன், அக்குகைக்குள் ஏன் நுழைந்தீர்கள்?” அர்ஜுனன் சொன்னான் “அதை நான் முன்பு அறிந்திருந்தேன். நூறுமுறை என் கனவில் நான் நுழைந்த வழி அது.” விழிகளில் வினாவுடன் அவள் நோக்கினாள். “உள்ளே சென்று நின்று நான் சொன்னேன் எழுக இளைய யாதவரே. இங்குளேன் நான்!”
அவள் விழிகள் மாறின. “அவரா?” என்றாள். “ஆம், படையெதிர் நின்று என்னை வென்றவர். அவரை போருக்கு அறைகூவினேன். முதலில் அவர் விழிகளில் திகைப்பைக் கண்டேன். அது ஏன் என அக்குகைச்சுவரின் ஈரத்தில் என் உருவம் தெரிந்தபோது அறிந்தேன். நான் சடைமுடித்திரளில் பிறைசூடி முக்கண் முகத்துடன் சிவமென நின்றிருந்தேன். அவர் புன்னகையுடன் இது நிகர்ப்போர். எனவே முடிவிலாதது. இருவரும் தோள்தழுவுதலே உகந்தது என கைகளை விரித்தார்.”
“இருவரும் தழுவி நின்றோம். பின்னர் வெடித்துச் சிரிக்கலானோம். இளமைந்தராக அன்று அஸ்தினபுரியில் கண்ட நாட்களில் ஒருவர் மேல் ஒருவர் கங்கைக்கரைச் சேற்றை வாரி வீசிவிட்டு ஓடிச்சென்று நீரில் பாய்கையில் சிரித்ததுபோல மீண்டும் சிரித்தோம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் அவனைத் தழுவினாள். “ஆம், நீங்கள் சிவம், ஏனென்றால் நான் மலைமகள்” என்றாள். அவன் முகத்தருகே மீண்டும் முகமெழுந்து “அவர் எத்தோற்றத்தில் இருந்தார்?” என்றாள். “பெருகும் முகம் கொண்ட விருத்திரனின் உருவில்” என்றான் அர்ஜுனன்.