கிராதம் - 79
[ 32 ]
வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த ‘பணிக சிவம்’ என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது அவன் உடல்.
பின்னர் அறுபட்ட நாணொலியுடன் அவன் அகம் விடுபட்டது. இடக்கை மட்டும் இழுபட்டுத் துடித்தது. மூக்கில் தசைபொசுங்கும் வாடை. வாயில் குருதி நிறைந்திருந்தது. அவன் செங்கோழையைத் துப்பியபடி இடக்கையை ஊன்றி எழுந்தான். நெஞ்சில் உதைபட்டவன்போல பின்னால் சரிந்து விழுந்தான். கண்களை மூடி குருதியலைகளைக் கண்டபடி சற்றுநேரம் இருந்தான். அவை மெல்ல அடங்கியபின் மீண்டும் எழுந்தான். நிலம் சரிந்திருப்பதுபோலத் தோன்றியது. இருமுறை தள்ளாடி நிலைகொள்ள முயன்றபின் மீண்டும் விழுந்தான்.
மூன்றாம் முறை எழுந்து கைகளை சற்று விரித்து விழிகளை தொலைவில் இருந்த பாறை ஒன்றில் நட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். ஒரு வலுவான சரடுபோல அந்நோக்கு அவனை நிலைநிறுத்தியது. கடிபட்ட நாக்கு அதற்குள் வீங்கத் தொடங்கியிருந்தது. தலைமுடி உச்சியில் கொத்தாக கருகிச் சுருண்டு புகைந்துகொண்டிருந்தது. தொட்டு நோக்கியபோது சுருண்ட முடி பிசின் என ஒட்டியது கையில். அந்தப் பொசுங்கல்வாடை உடல்குமட்டி அதிரச்செய்தது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மீண்டும் மீண்டும் நெஞ்சை நிரப்பி ஒழித்தான்.
சற்றே நிலைமீண்டபின்னர் காற்றை பற்றிக்கொள்பவன்போல தள்ளாடி நடந்து ஆற்றை அணுகி ஆவியெழ ஓடிக்கொண்டிருந்த சிற்றோடை ஒன்றில் குனிந்து நீர் அள்ளி குடித்தான். நீருக்கான தவிப்பே உடலுள் நிறைந்திருப்பதை அது செல்லும்போது உணரமுடிந்தது. நீர் உள்ளே சென்றதும் நனைந்தமைந்த உட்தசைகள் மீண்டும் தலைசுற்றச் செய்தன. கண்களை மூடி உள்ளோடிய செங்குமிழ்களின் சுழற்சியை நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து மீண்டும் நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொண்டான்.
எழுந்தபோது விழிதெளிந்திருந்தது. உடல் இயல்புமீண்டு கால்கள் மண்ணைக் கவ்வி நின்றன. பெருமூச்சுடன் விண்ணை நோக்கினான். அவனை குளவியெனக் கொட்டிவிட்டு அந்தக் கருமுகில் அகன்று சென்றிருந்தது. அதன் சிறகுகள் மெல்ல விரிந்திருந்தன. அதன் கருமைக்குள் இரு சிறுமின்னல்கள் சீறித்துடித்து அடங்கின. அவன் தன் அடிவயிற்று வலியென பசியை உணர்ந்தான். அது பசியென சித்தம் அறிந்ததுமே உடலெங்கும் பசி பரவியது. கைவிரல்கள் நடுங்கலாயின. சூழிடமெல்லாம் உணவுக்காகத் துழாவியது விழி. மணம் கூர்ந்தது மூக்கு. ஒலி தேடியது செவி. நா ஊறி சுவைகொண்டது.
தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு மெல்லிய காலடிகளுடன் நடந்தான். நாலைந்து காலடிகளுக்குள்ளாகவே அவனுள் உறைந்த வேட்டைக்காரன் எழுந்தான். அடிமேல் அடி பூனைப்பாதமென பதிந்தது. அவனைத் தொட்ட இலைகள் ஓசையிலாது நிமிர்ந்தன. அவன் மூச்சு அவன் செவிக்கே கேளாதபடி ஒலித்தது. அவன் ஒரு பன்றியின் மணத்தை அடைந்தான். சிலகணங்கள் அசைவிலாது நின்று அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். பின்னர் குனிந்து முற்றிலும் நாணல்புதருக்குள் உடல் மறைத்து நாணல்கள் உலையாமல் நீரோடை செல்வதுபோல மென்மையாகப்பிளந்து முன்னால் சென்றான்.
தொலைவில் பன்றியின் சூர் எழுந்தது. ஆண்பன்றி எனத் தெளிந்தான். தேற்றையால் மண்ணைக் கிளறி முன்னங்காலால் கிண்டி கிழங்குகளை உண்டுகொண்டிருந்தது. அவன் அருகே சென்று அம்புதொடும் தொலைவை அடைந்ததும் ஒரு நாணல்கதிர்கூட அசையாமல் அம்பை எடுத்தான். நாணொலி எழாது இழுத்து அம்பைச்செருகி குறிநோக்கி அதன் இடதுவிழியில் தொடுத்தான். அம்பு சென்று தைத்ததும் பன்றி முடிசிலிர்க்க ஒருகணம் அதிர்ந்து நின்றது. பின் உறுமல் ஒலியுடன் குழறியபடி திரும்பி அவனை நோக்கியே பாய்ந்து வந்தது.
அஞ்சி பின்காலெடுக்காமல் அதன் மேல் வைத்தவிழியசையாமல் அவன் அடுத்த அம்பை எய்ததும் அதையும் ஏற்றுக்கொண்டு விழுந்து வந்தவிசை முடியாமல் உருண்டு அணுகியது. அதன் மேல் மேலுமிரு அம்புகள் இருப்பதை அவன் கண்டான். இன்னொரு அம்பை நாணேற்றி நிமிர்ந்தபோது உள்ளுணர்வால் தன்மேல் முன்னரே ஓர் அம்பு கூர்கொண்டிருப்பதை உணர்ந்தான். அவன் அம்புக்கு நேர் எதிரே ஒரு காட்டாளன் பன்றிக்கு மறுபக்கம் நாணல்களுக்குள் இருந்து எழுந்து நின்றிருந்தான். அவன் அம்பின் கூரிலிருந்த நீலம் அது நஞ்சென்பதைக் காட்டியது.
இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளால் நோக்கியபடி அசைவற்று நின்றனர். அவர்களின் விழிகளும் ஒன்றோடொன்று தொட்டுநின்றன. இருவருக்கும் நடுவே இருந்த வெளி அஞ்சி சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி போல அசைவற்றிருந்தது. அர்ஜுனனின் தோளில் ஒரு நாணல்பூ தொட்டுச்செல்ல அவன் அறியாது சற்று தோளசைத்தான். அவ்வசைவு காட்டாளனிலும் ஏற்பட்டது. கணங்களாக ஓடிச்சென்ற அத்தருணத்தின் ஒரு புள்ளியில் தன்னை அறுத்துக்கொண்டு தோள்தளர்ந்து அர்ஜுனன் தன் வில்லைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டான். காட்டாளனும் வில்தாழ்த்திவிட்டு இயல்பானான்.
காட்டாளன் அர்ஜுனனைவிட அரைமடங்கு உயரமும் அதற்கேற்ப பருமனும் கொண்டிருந்தான். அர்ஜுனனின் தலையளவு இருந்தன அவன் தோள்தசை உருளைகள். வேங்கைத்தூர் என சேற்றில் புதைந்திருந்தன நரம்பு புடைத்த கால்கள். உடலெங்கும் சாம்பல் பூசி இடையில் புலித்தோல் அணிந்திருந்தான். செஞ்சடைக் கற்றைகளை சுருட்டிக் கட்டி அதில் பன்றித் தேற்றையை பிறைநிலவென அணிந்திருந்தான். நெற்றியில் மூன்றாம் நீள்விழி செந்தழல் எனத் தெரிந்தது.
“யார் நீ?” என இருவரும் ஒரே குரலில் கேட்டனர். குரல்கள் முட்டிக்கொண்டதை உணர்ந்து தயங்கி அர்ஜுனன் “யார் நீ?” என்றான். அவன் புன்னகைத்து “நீ யார்? இது என் நிலம்” என்றான். “நான் அஸ்தினபுரியின் குருகுலத்துப் பாண்டுவின் மைந்தனாகிய அர்ஜுனன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் யுதிஷ்டிரனின் இளையோன்” என்றான். “நான் காட்டாளன். கரியவன் என்பதனால் காளன்” என்று அவன் சொன்னான். அகன்ற கரிய முகத்தில் வெண்பற்கள் மின்ன ஒரு புன்னகை வந்துசென்றது.
சற்றே எரிச்சலுடன் “என்னை நீ அறிந்திருக்கலாம். நான் வில்விஜயன். நூறு களம் கண்டவன். நூறு பரணிகளால் பாடப்பட்டவன். என்றுமிருக்கும் சூதர்மொழிகளின் பாட்டுடைத்தலைவன். இமையசைவதற்குள் தலையறுத்து வீழ்த்தும் வல்லமை கொண்டவன்” என்றான் அர்ஜுனன். “என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் மனைவியால் நன்கறியப்பட்டவன். பங்காளிகளால் வெறுக்கப்படுபவன். நீ எண்ணுவதை முன்னரே அறியும் திறன்கொண்டவன்” என்றான் காளன். அவன் முகத்தில் மீண்டும் அந்த வெண்சிரிப்பு விரிந்தது.
அவன் தன்னை கேலிசெய்வது அப்போதுதான் அர்ஜுனனுக்குப் புரிந்தது. காட்டாளர்கள் கேலிசெய்வார்கள் என்னும் எண்ணமே தன்னுள் ஏன் எழவில்லை என அவன் உள்ளம் ஓர் எல்லையில் விலகி நின்று வியக்க மறுஎல்லையில் பழுத்த உலோகத்தில் நீர் விழுந்ததுபோல சுரீலென சினம் மூண்டது. அவன் கை அம்பை நாடுவதற்குள் காட்டாளன் அம்புபூட்டி வில்தூக்கிவிட்டிருந்தான். அர்ஜுனனின் கை தழைந்தது. “நன்று, நீயும் கலையறிந்தவன் என ஏற்கிறேன்” என்றான். “இந்தப் பன்றி உணவின்பொருட்டு நான் வேட்டையாடியது. வேட்டைநெறிகளின்படி இது எனக்குரியது.”
காளன் புன்னகையுடன் “வேட்டைநெறிகளின்படி வேட்டைப்பொருள் ஷத்ரியருக்குரியது என்று உரைக்கிறாயா?” என்றான். மீண்டும் தலைக்கேறிய சினத்தை மெல்ல அடக்கி “இல்லை, இதன்மேல் முதலில் விழுந்த அம்பு என்னுடையது என்பதனால்” என்றான். “இளவரசே, இதன்மேல் முதலில் பதிந்த அம்பு என்னுடையது என்றே நான் சொல்கிறேன்” என்றான் காளன். கைசுட்டி “நோக்குக! இப்பன்றி என் அம்புபட்டு திகைத்துநின்று பின் உன்னை நோக்கிப்பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் பற்களைக் கடித்தபடி “என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பு அதனுடலில் இருக்கவில்லை” என்றான். “ஆம், அதையேதான் நான் சொல்வேன். என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பை நான் பார்க்கவில்லை” என்றான் காளன்.
அர்ஜுனன் “என் அம்புபட்டு பன்றி என்னை நோக்கி சினந்து வந்தது. தாக்குதல் வந்த திசைக்கே பாய்வது பன்றிகளின் இயல்பு” என்றான். காளன் தலையை அசைத்து “இல்லை, என் அம்புபட்டு அதன் வலக்கண் நோக்கிழந்தது. எனவேதான் இடக்கண் காட்டிய திசைநோக்கி அது பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் கையை வீசி அவனைத் தவிர்த்து “இச்சொல்லாடலுக்கு முடிவிருக்கப்போவதில்லை. பார், பன்றி என் திசைக்கு வந்துள்ளது” என்றான். “அதை அங்கே செலுத்தியவன் நான்” என்றான் காளன்.
அர்ஜுனன் சினத்தை அடக்க கையிலிருந்த அம்பை சிலமுறை உருட்டினான். அருகே சென்று அந்தப் பன்றியை நோக்கி குனிந்து அதன் முகத்தைப் பார்த்தான். அதன் இருவிழிகளிலும் அம்புகள் தைத்திருந்தன. இரு விலாக்களிலும் அம்புகள் ஒரே ஆழத்தில் இறங்கி நின்றிருந்தன. குருதி நிலைத்து உறுதிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் அதை நன்கு நோக்கியும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. காளன் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான். அந்த நிகழ்வே ஓர் பகடிநாடகமெனத் தோன்றியது ஒருகணம்.
பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அர்ஜுனன் ஏறிட்டு நோக்கி “சரி, காட்டாளனே இதை நான் உனக்கு அளிக்கிறேன். இன்னொன்றை நான் வேட்டையாடிக்கொள்கிறேன். இதை நீர்தெளித்து நான் அளிக்க நீ கொடையென பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். காளன் சிரித்து “நன்று, நான் வென்றதை ஏன் கொடையெனப் பெறவேண்டும்? இளவரசே, இதை நான் தோளில் ஏற்றிக்கொண்டு வெற்றிக்குரலுடன் மட்டுமே என் குடிக்குச் செல்வேன்” என்றான். அர்ஜுனன் நெற்றிப்பொட்டு துடிப்பதை உணர்ந்தான். விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “உனக்கு வேண்டியது என்ன, பன்றிதானே?” என்றான்.
“இல்லை, கொடைகொள்ளும் இடத்தில் நான் என்றுமிருந்ததில்லை. ஏற்பது என் வில்லுக்கும் குலத்திற்கும் இகழ்ச்சி” என்றான் காளன். அர்ஜுனன் ஏறிட்டு நோக்கியபோது பரிவுதோன்ற புன்னகைத்து “நீ பசித்திருக்கிறாய் என்றால் கூறு, இதை நான் உனக்கு கொடையென்று அளிக்கிறேன். பொழுதிருள்வதற்குள் நூறு பன்றிகளை வேட்டையாட என்னால் இயலும்” என்றான். அர்ஜுனன் முகம்சீறிச் சுளிக்க பற்களைக் கடித்தபடி “சேறுநாறும் காட்டாளனிடம் இரந்துண்டு வாழ்வேன் என நினைத்தாயா? நான் அரசமகன்” என்றான். “ஆம், அரசர்கள் சேறுநாறும் மக்களிடம் கொள்ளையடித்து உண்ணலாம் என்றே நெறியுள்ளது” என்றான் காளன்.
“இனி உன்னிடம் பேசிப்பயனில்லை” என்ற அர்ஜுனன் எதிர்பாராதபடி அம்பொன்றை அவன்மேல் எய்தான். அது சென்று எய்தும் முன்னரே காளனின் அம்பால் இரண்டாக முறிக்கப்பட்டது. காளனின் அம்பு வந்து அர்ஜுனனின் தோளுரசிச் சென்றது. அவன் சினந்து எய்த அம்பை காளன் கிளம்பும்போதே முறித்தான். மீண்டும் எழுந்த அம்பை நாண் தொடும் முன்னரே தெறிக்கவைத்தான். அடுத்த அம்பை அவன் தொடுவதற்குள்ளே அது அம்பறாத்தூணியிலிருந்து பறந்தது. அவன் பின்னங்காலெடுத்துவைத்து நாணலுக்குள் அமிழ்ந்து ஒளிந்துகொண்டு மூச்சிரைத்தான்.
“சினம்” என சொல்லிக்கொண்டான். சினம் கைவிரல்களில் துடித்தது. உதடுகளில் நெளிந்தது. சினத்தை வெல். கடந்துசெல். இந்த ஆட்டத்தை பார்த்தனை ஆடவிட்டு நீ உள்ளே தனித்திரு. ஒவ்வொரு விரலையாக மெல்ல மெல்ல விடுவித்தான். மூச்சை இழுத்து சீராக விட்டான். அவன் அம்புகளுக்கு இலக்காகும் வெளியில் மிக இயல்பாக நின்று தன் தோளில் வந்தமைந்த கொசுவை அடித்தான். வில்லால் முதுகை சொறிந்துகொண்டான். குனிந்து பன்றியை நோக்கி அதன் விழியில் குத்தியிருந்த அம்பை மெல்ல அசைத்தான்.
அத்தனை தன்னம்பிக்கையுடனிருக்கிறான் என்றால் அவனால் இயலும். அவன் நோக்கிழந்திருக்கிறான் என எண்ணி அம்பெய்தால் அக்கணமே அவன் அதை வெல்வான். அச்செயல்வழி மீண்டும் தன்னை சீண்டுவான். இப்போது தேவை அவனை நிலைகுலையச் செய்யும் ஓர் அடி. ஒரு துளிக்குருதி. அவன் மீள்வதற்குள் அதை அளித்தாகவேண்டும். அவன் கை மெல்ல சென்று அம்பைத் தொட்டது. மீண்டுமொரு பாழ் அம்பா? இல்லை. இது வென்றபின் எளிய அம்புகளே போதும். முதல் அடி வென்றேயாகவேண்டும்.
அவன் அம்பைத் தொட்டு யமன் அளித்த அமுதச்சொல்லை மும்முறை சொன்னான். அந்நுண்சொல்லின் நெறிகளுக்கேற்ப அவன் கட்டைவிரல் வளைந்து சுட்டுவிரல் நீண்டது. தண்டபாசம் அவன் கையில் நெகிழ்ந்து உருக்கொள்வதை உணர்ந்தான். இரைகவ்வும் தவளையென எழுந்து அதே விரைவில் அதைத் தொடுத்தான். உறுமலுடன் பாய்ந்து நாகமென வளைந்து காளனை அணுகியது அது. அவன் உடல் குழைந்து வளைந்தெழ அவன் முன் வந்து நெஞ்சுநோக்கிச் சென்றது. பின்காலிட்டு விலகி தன் அம்பால் அதை முறித்து வீழ்த்தினான் காளன்.
அனைத்துக் கட்டுகளும் அகல பெருங்கூச்சலுடன் எழுந்து அந்தர்த்தானையின் நுண்சொல்லை உரைத்து அம்பை எய்தான். அவன் பற்களனைத்தும் ஒளிரும் சிரிப்புடன் சிறிய அம்பொன்றால் அதை முறித்தான். அவன் விடுத்த அம்பொன்று வந்து அர்ஜுனனின் தோளில் தைத்தது. அந்த விசையில் நிலையழிய பிறிதொரு அம்பு வந்து அவன் தொடையை துளைத்து நின்றாடியது. அவன் மல்லாந்து விழுந்து அதே விசையில் கால்களை உதைத்து புதர்களுக்குள் தன்னை முழுமையாக இழுத்துக்கொண்டான். அவன் உள்ளங்காலில் காளனின் அம்பு வந்து தொட்டது.
தான் அழுதுகொண்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். பற்களைக் கிட்டித்து, முகம் இழுபட, விழிநீர் தாடிமயிர்தொகையில் வழிய விம்மினான். அவ்வொலி கேட்டதுமே தன்னிழிவுகொண்டு சினம் மிஞ்ச தலையை அசைத்தான். கைகள் பதைத்துக்கொண்டிருந்தன. உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. என்ன நிகழ்கிறது? இவன் யார்? புவியிலொருவன் இப்படி இருக்கக்கூடுமா? அங்கே நகரங்களில் வில்வேதமென்று ஓதப்படுபவை, வாழ்நாளெல்லாம் படைத்து கற்கப்படுபவை அனைத்தும் வீணென்றாகும் ஒரு இடம் புவியிலிருக்கலாகுமா? வேதமுதன்மைகொண்ட தெய்வங்களின் நுண்சொல் அமைந்த வாளிகளும் விளையாட்டென்றாவது ஒரு காட்டாளனின் வில் முன்னரா?
வாருணவாளியை எடுத்தபோது அவனுக்கே நம்பிக்கை இருக்கவில்லை. கைகள் நடுங்குவதை உணர்ந்து தன் விழிகளை மூடி உள்விழியை நெற்றிக்குவியத்தில் நிறுத்தி ஒவ்வொரு கணமாக நுண்சொல்லை தன் உளம்வழியாக கடந்துசெல்லவிட்டான். இலைசெறிந்த மரத்திலிருந்து நீர் சொட்டுவதைப்போல அவனுள் அச்சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது. இலைமேல் இலைசொட்டி இலைகள் ஒளிர்ந்தசைய தன்னுள் அலைகளெழுந்து அறைவதை உணர்ந்தான். பேரலையொன்று வந்து பாறைகளை அறைந்து வெண்சிறகென எழுந்து சிதறி அமைந்தகணம் எழுந்து அவ்வாளியை ஏவினான்.
அலையென எழுந்து ஓசைபொங்கச் சென்று அவனை அடைந்த அதை அவன் அம்பு முறித்த அந்தக் கணத்தை ஆயிரம் மடங்கு நீட்டிப்பரப்பி அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கைசென்று அம்பெடுத்து நாணுக்களிக்க நாண் விம்மியமைந்து அதை ஏவ கிளையுதைத்தெழும் புள் என அம்பு காற்றிலெழுந்து சென்று வருணபாசத்தைக் கவ்வி சற்றே குதறி முறித்து தானும் சரிந்து புல்லில் விழுந்தது. அமைந்து மீண்டும் நிமிர்ந்த புல்லின் வெண்பூக்குலை சிலிர்த்தது.
அவன் எழுந்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்புமாக நின்றான். எதிரே காளன் கரும்பாறைமேல் சிறகுகோட்டி அமர்ந்த வெண்கொக்குநிரைபோல பற்கள் தெரியும் சிரிப்பெழுந்த முகத்துடன் நின்றான். “நாம் போரிட்டுவிட்டோம் என எண்ணுகிறேன், இளவரசே. நீ மாபெரும் வில்லவன் என அறிந்துகொண்டேன். பன்றியை நான் எடுத்துச்செல்கிறேன். அன்றி நீ அதை விழைகிறாய் என்றால் உனக்கே கொடையளிக்கிறேன்” என்றான்.
அனைத்தையும் மறந்த பெருங்கூச்சலுடன் அர்ஜுனன் வஜ்ரத்தை எடுத்து அவன் மேல் ஏவினான். சிம்மத்தின் உறுமலென அது சென்ற ஒலி கேட்டது. காளனின் அம்பு அதை வழியிலேயே தடுத்தது. பிறிதொரு அம்பு அதை திசைதிருப்பியது. மூன்றாம் அம்பு அதைச் சுழற்றி நிறுத்த அவன் கையால் அதைப்பற்றி அதன் முனையை நோக்கினான். விழிதூக்கி அவனை நோக்கி “எளிய அம்புதான்… ஏன் இத்தனை ஆற்றல் இதற்கு?” என்றான். அதை வீசிநோக்கியபின் “அம்பில் ஏதுமில்லை… அதை ஏவுகையில் நீ சொல்லும் நுண்சொல்லில் உள்ளது இதன் விந்தை” என்றான்.
அர்ஜுனன் வில்லைத் தளரவிட்டு நின்றான். அனைத்தும் கனவென்றாகுமென அவனுள் இருந்த சிறுவன் விழைந்தான். காளன் மகாவஜ்ரத்தை தூக்கிப்போட்டு பிடித்து “எளிய மூங்கிலம்பு… அது எப்படி இத்தனை பேரொலி எழுப்பியது? இடியெழுகிறதென்றே எண்ணினேன். மின்னலை நோக்கினேன்” என்றான். “இதைச் சொல்கையில் உனது விரல் அதற்கேற்ப அறியாது வளைகிறதுபோலும்.” அதை கீழே போட்டுவிட்டு “நான் பன்றியுடன் செல்லப்போகிறேன்… நீ விரும்பினால் இப்போதுகூட இதை பெறமுடியும்” என்றான்.
அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நன்று, முடித்துவிட்டுப் போ” என்றான். காளன் புரியாமல் “போராடல் முடிந்துவிட்டதே” என்றான். “என்னை கொல். அதுவே போரின் முறை” என்றான் அர்ஜுனன். “இல்லை ஷத்ரியனே, நான் உண்ணாத உயிரை கொன்றதே இல்லை” என்றான் கிராதன். கைவீசி “திரும்பிச் செல்க…” என்றபடி குனிந்து பன்றியின் காலைப் பற்றினான். நெஞ்சில் கையால் அறைந்தபடி “அடேய், நீ என்மேல் சிறிதளவேனும் மதிப்புகாட்ட விழைந்தால் என்னைக் கொல்” என்று அர்ஜுனன் கூவினான். “மதிப்புகாட்டும்பொருட்டு கொல்வதா? மண்ணவர் நெறிகளே எனக்கு விளங்கவில்லை” என்றான் காளன்.
“மூடா” என வீரிட்டபடி அர்ஜுனன் தன் வில்லை அவன் மேல் வீசினான். “கொல் என்னை… கொன்று செல் என்னை!” அவன் “என்ன சொல்கிறாய், ஷத்ரியனே? உன்னை நான் ஏன் கொல்லவேண்டும்? நீ என் உணவல்ல. என்னை கொல்லப்போகிறவனும் அல்ல” என்றான். “இழிமகனே, காடனே, கொல் என்னை… நீ ஆண்மகன் என்றால் என்னைக் கொல்” என்று கூவியபடி அர்ஜுனன் கீழே கிடந்த கற்களை எடுத்து அவன் மேல் எறிந்தான். புகைபோல உடல் வளைத்து அவன் அக்கற்களை ஒழிந்தான்.
மூச்சிரைக்க அர்ஜுனன் நின்றான். கண்ணீர் வழிய “சிறுமை செய்யாதே… நான் என் உயிரை பறித்துக்கொள்ளும்படி ஆக்காதே… கொல் என்னை” என்றான். “நான் இதுவரை மானுடரை கொன்றதில்லை, ஷத்ரியனே” என்றான் காளன். “உன்னுடன் விளையாடவே வந்தேன்… ஆடல் முடிந்துவிட்டது. நீ விழைந்தால் நாம் நெஞ்சுசேர தோள்தழுவுவோம்” என்று கைகளை விரித்தான். “தோள்தொடுவதா? உன்னிடமா? உன் இழிந்த கையால் இறந்தாலும் எனக்கு விண்ணுலகுண்டு. உன்னை நிகரென நினைத்துத் தழுவினால் நானே விண்ணுலகை விழையமாட்டேன்… நீ செய்யக்கூடுவதொன்றே. கொல் என்னை….” என்று அர்ஜுனன் குனிந்து தன் தொடையிலிருந்த அம்பை பிழுதெடுத்தான். “இப்போதே என்னைக் கொல். இல்லையேல் என் கழுத்துநரம்பை அறுத்து உன் முன் குருதிசோர விழுவேன்.”
குட்டைமரங்களின் இலைத்தொகை சலசலக்க அவன் திரும்பி நோக்கினான். தழைப்புக்கு அப்பாலிருந்து கரியநிறமும் செஞ்சாந்துப் பொட்டிட்ட பெரிய வட்டமுகமும் கொண்ட பெண் ஒருத்தி இடையில் மலர்சூடிய குழல்முடித்து ஆடையின்றி அமர்ந்திருந்த இளமைந்தனுடன் தோன்றினாள். அவள் அணிந்த மான்தோலாடையைப் பற்றியபடி பெருவயிறனாகிய மூத்தவன் கையில் பாதியுண்ட கனியொன்றுடன் நின்றான். இரு சிறுவரும் ஆவலுடன் அர்ஜுனனை நோக்கினர். “இங்கிருக்கிறீரா? எத்தனை நேரம்?” என்றவள் அர்ஜுனனை நோக்கி “யார் இவன்? முன்பு வந்த பீலிமுடியர் போலிருக்கிறான்?” என்றாள். கணவன் அளவுக்கே அவளும் உயரமிருந்தாள். பெருமுலைகளுக்குமேல் வெண்கல்மாலை கரும்பாறைமேல் அருவியெனக் குழைந்தது.
கண்களில் புன்னகையுடன் “அவனுடன் நான் போரிட்டேன்” என்றான் காளன். “அவனிடமா? உமக்கென்ன அறிவில்லையா? இளமைந்தர்போல விழிகொண்டிருக்கிறான், அவனிடமா போரிடுவீர்?” என்று அவள் சினந்தபின் அவனை நோக்கி “பித்தர்… நீ பொருட்படுத்தவேண்டியதில்லை, மைந்தா” என்றாள். “அவன் அந்த அம்புக்கூரால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளப்போவதாக சொல்கிறான். நான் அது கூடாது என்றேன்” என்றான் காளன். “தன் கழுத்தையா? எதற்கு?” என்றாள் அவள். “என்னிடம் தோற்றுவிட்டான். தோற்றபின் உயிர்துறப்பது அவன் குடியினரின் வழக்கமாம்.”
சீற்றம்கொண்டு திரும்பி “என்ன சொல்கிறாய்? அறிவே இல்லையா உனக்கு? போடு அதை கீழே” என்று கையை ஓங்கியபடி அதட்டிக்கொண்டு அவள் அர்ஜுனன் அருகே வந்தாள். அவன் “நான்…” என்று ஏதோ சொல்ல “போடச்சொன்னேன், கீழே போடு” என்றாள். அவன் கீழே போட்டுவிட்டு “நான் இவரிடம் போரில்…” என காளனைச் சுட்டி சொல்லவர “அவர் பித்தர். பித்தரிடம் எவராவது போரிடமுடியுமா? நீ அழகிய இளையவன்போலிருக்கிறாய்…” என்றபின் திரும்பி “வரவர என்ன செய்கிறீர் என்றே தெரியவில்லை உமக்கு” என்றாள். காளன் தலைதூக்கி வாய்திறந்து உரக்கச் சிரித்தபடி அர்ஜுனனிடம் “இவள் என் மனைவி. காளி என்று அழைப்பேன். சீற்றம் மிக்கவள்…” என்றான்.
காளி அர்ஜுனனிடம் “இளையவனே, எதற்காக போர்? உனக்கு என்ன வேண்டும்? இந்தப் பன்றியா? இதோ, எடுத்துக்கொள். வேண்டுமென்றால் இந்தக் காட்டிலுள்ள அத்தனை பன்றிகளையும் உனக்கு இவரை வேட்டையாடித் தரச்சொல்கிறேன். இதற்கா பூசல்?” என்றாள். “அதை நான் முன்னரே அவனுக்கு கொடுத்தேன். மறுத்துவிட்டான்” என்றான் காளன். அவள் அவனிடம் “நீர் வாயை மூடும்…” என சீறிவிட்டு “நான் கொடுக்கிறேன் உனக்கு. நீ கொண்டுசென்று உண்க, மைந்தா! இது என் கொடை” என்றாள். அவன் சிறுவன்போல சரி என தலையசைத்தான்.
அவள் குனிந்து ஒற்றைக்கையால் அந்தப் பன்றியைத் தூக்கி அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். அர்ஜுனன் இயல்பாகக் கைநீட்டி அந்தப் பன்றியை வாங்கினான். அவள் பிடிவிட்டதும் எடைதாளாமல் அவன் கையிலிருந்து நழுவி அது கீழே விழுந்தது. “அவரால் தூக்கமுடியவில்லை” என்று மூத்த மைந்தன் சொன்னான். “நானே கொண்டு கொடுத்துவிட்டு வரவா?” காளி “அதெல்லாம் அவரே கொண்டுசெல்வார்… நீ பேசாமல் வா. அங்கேயும் சென்று பாதியைப் பிடுங்கி தின்றுவிட்டு வர நினைக்காதே” என அவன் தலையை தட்டினாள்.
அர்ஜுனன் அவள் முகத்தை நோக்கியபடி உளமழிந்து நின்றான். அவள் விழிகள் முலையூட்டும் அன்னைவிழியென கனிந்திருந்தன. சின்னஞ்சிறு குமிழுதடுகளில் எப்போதுமென ஒரு புன்னகை இருந்தது. அவிழ்ந்த நீள்குழலை அள்ளிச் சுழற்றிமுடிந்தபடி அவள் திரும்பியபோது அவன் அறியாமல் அவர்களை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். அவன் நெஞ்சு கலுழ விம்மி அழுதபடி “இனி நான் வாழ விரும்பவில்லை, அன்னையே” என்றான். அவள் அவனை நோக்கி புருவம் சுளித்து “ஏன்?” என்றாள். “நான் தோற்றுவிட்டேன்… தோல்விக்குப் பின் வாழ்வது என்னால் இயலாது” என்றபோது அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது. உதடுகளை இறுக்கி அவன் தலைகுனிந்தான்.
அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்? அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான். உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள்.
அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். ஒரு மூச்சிலேயே உளம்கொண்ட சுமையெல்லாம் அகன்று எடையிழந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “அவர் காலடியை வணங்கி கல்வியை கேள்” என்றாள் அவள். அவன் காலை நொண்டியபடி எடுத்து முன்னால் வைத்து காளனின் அருகே சென்று வலியுடன் முழந்தாளிட்டு “காலவடிவரே, நான் எளியவன். ஆணவத்தால் ஆட்டிவைக்கப்படும் இழிந்தோன். உம்மிடமுள்ள அறிவையும் திறனையும் எனக்கும் கற்பித்தருளவேண்டும்” என்றான். காளன் உரக்க நகைத்து அவன் தலைமேல் கைவைத்து “எழுக… நான் அவள் ஆணைகளை மீறுவதில்லை…” என்றான்.
மார்பில் எச்சில்கோழை வழிய வாயில் இடக்கையை வளைத்து வைத்து கசக்கி சுவைத்துக்கொண்டிருந்த இளமைந்தன் கைகளை விரித்து “ந்தையே” என்று தாவ “ஆ! வா வா! என் அழகனல்லவா?” என்றபடி வாங்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக்கொண்டான். தந்தையின் மார்பில் இரு கால்களையும் போட்டுக்கொண்டு எம்பி குதித்து “யானை… யானை! பெரீ யானை!” என்றான் இளையவன். மூத்தவன் வந்து அர்ஜுனனின் கைவிரலை இயல்பாக பற்றிக்கொண்டு “பெரிய பன்றி… நாம் அதைக் கொண்டுசெல்வோம்” என்றான். அவனை நோக்கி காளி புன்னகை செய்தாள்.
அர்ஜுனன் “நானே எடுத்துவருகிறேன்” என்றான். காளி “இல்லை, உன் கால்கள் புண்பட்டிருக்கின்றன. அவனே கொண்டுவரட்டும். உணவென்றால் அவன் யானை. எத்தனை எடையையும் சுமப்பான்” என்றாள். “ஆம், பன்றி மிகச்சுவையானது” என்ற மூத்தவன் திரும்பி நோக்கி கைசுட்டி “சிரிக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க பற்கள் தெரிய கிடந்த பன்றி நகைப்பதைப்போல தெரியக்கண்டு தன்னை மீறி சிரித்துவிட்டான்.