கிராதம் - 77
[ 28 ]
அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில் ஆழ்ந்த வலியை உணர்ந்தான். முனகியபடி படுத்துக்கொண்டபோது விழிகளுக்குள் அலையலையாக குருதியின் ஓட்டத்தை கண்டான். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். அவன் படுத்திருந்த மென்மயிர்ப் படுக்கை அலைபாயும் நீர்ப்பரப்பெனத் தோன்றியது.
அவனுடைய முனகலை அவனே கேட்டான். மெல்ல எழுந்து அவனருகே வந்து குனிந்த முகத்திலிருந்து பிறிதொரு முனகல் எழுந்தது. “யார்?” என்று அவன் அஞ்சிய குரலில் கேட்டான். “நான் பூசகன். அஞ்சவேண்டியதில்லை, இளைய பாண்டவனே” என்றார் பூசகர். “உன்னை நான் மீட்டு இங்கே கொண்டுவந்தேன்.” அர்ஜுனன் கண்களை மூடி எண்ணங்களால் காலங்களை தொட்டுவிட முயன்றான். சலித்து சோர்ந்து பெருமூச்சுடன் ஓய்ந்தான். “எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றான்.
“உன்னை அவர்கள் கொண்டுவந்து இவ்வூர் எல்லையில் போட்டுவிட்டு சென்றிருந்தனர். கடும் காய்ச்சல் கண்டிருந்தது. உடலெங்கும் காயங்கள் சீழ்கொண்டிருந்தன” என்று அவர் சொன்னார். “புண்கள் ஆற இன்னும் நாட்களாகும். ஆனால் உயிர்பிழைத்துவிட்டாய்.” அர்ஜுனன் கண்களை மூடியபடி “ஆம், நான் எளிதில் சாகமாட்டேன்” என்றான். அவர் “நீ மீண்டு வருவாய் என நான் எண்ணவில்லை. உன்னை மேலே அனுப்பியபோதிருந்த நம்பிக்கை நீ சென்றகணமே முற்றிலும் அழிந்தது” என்றார்.
அர்ஜுனன் “நான் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை” என்றான். “ஆம், அவர்களின் வேதம் வல்லமை மிக்கது. அது நம் சொற்கள்மேல் படர்ந்து அனைத்தையும் தான் இணைத்துக்கொண்டுவிடுகிறது. நம்முடன் நாமே போர்புரியும்படி செய்கிறது” என்றபடி அவர் அருகே பீடத்தில் அமர்ந்தார். “அதை மகாநாராயணம் என்கிறார்கள்.” அவன் திடுக்கிட்டு போர்வையை விலக்கிவிட்டு எழுந்தமர்ந்து “என்ன சொன்னீர்கள்?” என்றான். “அவர்களின் தெய்வம் ஏந்திய படைக்கலம் அது” என்றார் பூசகர். “உன்னை உளமயக்குக்கு ஆளாக்கினேன். நிகழ்ந்ததை எல்லாம் உன் சொற்களினூடாக அறிந்துகொண்டேன். நீ சென்ற அக்குகை சுக்லபிலம் எனப்படுகிறது. அதற்குள் உறையும் தெய்வத்தை நீ எதிர்கொண்டாய்.”
அவன் அச்சொல்லை வறண்ட உதடுகளால் உச்சரித்தபடி தலையைச் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். அவன் விழியோரம் வழிந்த நீர் கன்னங்களில் இறங்கியது. மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டு அவர் மீண்டும் அருகே குனிந்தார். “நீ தோற்கவில்லை, இளையவனே. பெருந்தெய்வம் ஏந்திவந்த படைக்கலத்தின் முன்புகூட நிமிர்ந்து நின்றிருக்கிறாய். உன்னை ஆட்டுவிக்கும் ஊழ் பெரிது.” அர்ஜுனன் ஆம் என தலையசைத்தான். “நீ எஞ்சியிருப்பது எதனால் என நான் எண்ணி எண்ணி வியக்கிறேன். நானறியா பெருநோக்கம் ஒன்று இருக்கலாம்.”
அர்ஜுனன் தன் காய்ச்சலை காதுகளில் உணர்ந்துகொண்டு அசைவிலாது கிடந்தான். கைகால்களில் இனிய தளர்வும் கண்களில் அனல்பட்ட எரிதலும் இருந்தன. மூச்சு மூக்குத்துளைகளை வறளச்செய்தது. ஆனால் வாயில் எச்சில் கசந்தது. “நான் இங்கிருப்பதை அவள் அறிவாளா?” என்றான். அவர் “இல்லை, இவ்வூரில் எவரும் அறியவில்லை” என்றார். அவன் பெருமூச்சுடன் “நன்று” என்றான். “பால் அருந்துகிறாயா?” என்றார் பூசகர். “தேவையில்லை… என் நா சுவையிழந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.
“ஆம், ஆனால் தொண்டைக்கு பால் தேவையிருக்கும்” என்றபடி அவர் எலும்புகள் ஒலிக்க மூச்சால் உடலை உந்தி எழுந்துசென்று அருகிருந்த அனலில் சிறுசெம்புக்குடுவையை வைத்து வெம்மையூட்டி அதிலிருந்த பாலை மூங்கில்குவளையில் ஊற்றி எடுத்துவந்தார். “நேற்றுவரை உனக்கு சிறு குழாய் வழியாக உணவூட்டினேன். இது மூலிகைப்பால். உடலுறுப்புகள் அனைத்தையும் நனைத்து உயிரூட்டுவது” என்றார். அர்ஜுனன் கைகளை ஊன்றி விலா எலும்புகள்மேல் மிகக்கூரிய வலியை உணர்ந்தபடி எழுந்தமர்ந்து அதை வாங்கி அருந்தினான்.
நாவில் பால் பட்டதுமே உடல் குமட்டியது. ஒவ்வாத எதையோ வாயில் கொண்டதுபோல. ஆனால் தொண்டை இனிதாக அந்த எரிதலை பெற்றுக்கொண்டது. வயிற்றிலிருந்த அனல் அது சென்று படிந்ததும் அணைந்தது. சிலகணங்களில் குருதியெங்கும் இளவெம்மையாக அது ஓடிநிறைவதை உணரமுடிந்தது. “உப்பும் இனிப்பும் கலந்த பால்” என்று அவர் சொன்னார். “மறுபிறப்படைந்துவிட்டிருக்கிறாய். பாலே அமுது” என புன்னகைத்தபோது கூழாங்கற்பற்கள் தெரிந்தன. தலை ஆடியது. “நான் உன்னை மீட்டதை தெய்வங்களுக்கு சொன்ன மறுமொழி என்றே எடுத்துக்கொள்கிறேன்” என்றபடி குவளையை திரும்பக்கொண்டுசென்று வைத்தார்.
“நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “திசைவென்று நான் அடைந்த படைக்கலங்களனைத்தும் பொருளற்றவை என இப்போது உணர்கிறேன்.” அவர் புன்னகைத்து “எப்போதும் ஒரு படைக்கலம் அப்பால் இருந்துகொண்டிருக்கும்” என்றார். “அதன் பொருளென்ன என்று எனக்குப் புரியவில்லை” என்றான். அவன் சொல்வதென்ன என்று அவர் உணர்ந்து புன்னகைத்து “அங்கிருந்துதானே இப்பயணம் தொடங்கியது?” என்றார். அவன் திகைப்புடன் அவரை நோக்கினான். “அவ்வண்ணமென்றால் நான் தேடுவதை இன்னமும் அடையவில்லை அல்லவா?” என்றான். அவர் “ஆம்” என்றார்.
அவன் பெருமூச்சுடன் உடலை தளர்த்தினான். அவனுள் எழுந்த எண்ணங்களைத் தொடர்ந்துசென்று சில சொற்களை எடுக்க முயன்றான். ஆனால் நழுவி நழுவிச் சென்றன அவை. அவற்றை தேடிச்செல்லும்தோறும் அவன் தன்னிலை அழிந்துகொண்டிருந்தது. தன் குறட்டையொலியை கேட்டுக்கொண்டு அவன் விழித்தான். வாய் ஒழுகியிருந்தது. “துயின்றேனா?” என்றான். கணப்பருகே உடலைச் சுருட்டிப் படுத்திருந்த அவர் “ஆம், சற்றுநேரம்” என்றார். “உடல் இத்தனை சோர்வை அறிந்ததே இல்லை” என்றான். “இறந்துபிறக்காமல் மெய்யான எதையும் அறிந்துவிடமுடியாது, பாண்டவனே” என்றார் பூசகர்.
“நான் இருந்தாகவேண்டுமா?” என்றான். “ஆம், இல்லையேல் நீ எஞ்சியிருக்கமாட்டாய்” என்றார். “ஏன்?” என்றான். “நீ வெல்வாய்” என்றார். அவன் சிலகணங்களுக்குப்பின் “நான் இனி அறியவேண்டியதென்ன, பூசகரே?” என்றான். “அறியேன். இவை நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஏதோ ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றார். “இல்லை, நாம் அவ்வாறு எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “மகாநாராயணம் இன்று இறுதியானது. நிகரான பிறிதொன்று நாளை எழலாம். இன்று இதுவே இவையனைத்தையும் ஆள்கிறது.”
“ஆம், இந்த யுகத்தின் வேதம் அது” என்றார் அவர். “ஆனால் அடிமுடியறியவொண்ணா ஒன்றின் ஓர் உருவம் மட்டுமே அது. ஒவ்வொன்றையும் தொட்டு நாம் சென்றறியும் பிறிதொன்று உள்ளது. அனைத்துமான ஒன்று.” அவன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “ஆழ்ந்து சென்றறியலாகும். அகன்றுசென்று தொட்டுவிடலுமாகும். அது அங்குள்ளது என்பதில் ஐயமே இல்லை” என்றார் பூசகர். “அதை எங்கு சென்று தேடுவது? எவ்வண்ணம் அறிவது?” என்றான் அர்ஜுனன்.
அவர் அவனை தன் வெண்பனித் திவலைபோன்ற விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் விரல்கள் அசையத் தொடங்குவதை அவன் கண்டான். அவை வலைபின்னும் சிலந்தியின் கால்கள் போன்று நடுங்கி அதிர்ந்தன. அவற்றில் அந்த மென்சரடை காணமுடிந்தது. அவன் அவரை கூர்ந்து நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சில் எழுந்தமைந்த மார்புக்குள் காற்றின் அழுத்தம் வலியளித்தது. அவருடைய விரல்கள் விரிந்து நெளிய தன்னையும் இணைத்துக்கொண்டு அந்த வலை நெசவுகொள்வதை அறிந்தான். அவர் விழிகள் வெறித்து அசைவிழந்தன. உதடுகளின் நடுக்கத்திற்கு அப்பாலிருந்தென உறுமலொன்று எழுந்தது.
“சொல்க…” என்று அவர் எவரிடமோ கேட்டார். “சொல்க, என்ன செய்யவேண்டும்? இவன் செல்லவேண்டியது எங்கு? சொல்க! ஆழ்ந்தவரே, மறைந்தவரே, அங்கிருப்பவரே, அறிந்தவர் நீங்கள். சொல்க! எங்கள் வழியென்ன?” அக்குரல் மன்றாடியது. “சொல்க, முற்றிலும் வென்றவர்களுக்கும் முழுதாகத் தோற்றவர்களுக்கும் மெய்யறியும் வல்லமை உண்டு என்பர் மூத்தோர். சொல்க! எந்தையே, சொல்க!”
அறையை வெள்ளிவலைச்சரடுகள் முற்றிலுமாக மூடிவிட்டன என அவன் கண்டான். அசைவற்றவனாக அவன் நோக்கிக்கிடந்தான். அவன் எண்ணங்கள் அதிர்வுகளாக அந்த வலையை அடைந்தன. எண்ணங்களை பார்க்கமுடிந்தது. விரல் நீட்டினால் அவ்வெண்ணங்களை தொட்டறியமுடியும். எண்ணங்களை சீண்டி மீட்டமுடியும். சரடின் மறுமுனையில் அவன் பிறிதொன்றை அறிந்தான். பிற எண்ணம் ஒன்று. குரலல்ல, மொழியுமல்ல. எண்ணமென்றே அவனை அடைந்தது. உள்ளமென அவனுள் நிகழ்ந்தது, ஆனால் பிறிதாகவே இருந்தது.
“பேரனல்.” அவன் அவ்வெண்ணம் செந்நிறத்தில் எரிவதைக் கண்டான். நெருப்பாலான நீள்சரடு ஒன்றின் அதிர்வு. “அடியிலி, முடியிலி.” அவன் வேறெங்கோ அதை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் மெல்லிய வலிப்பொன்று அவன்மேல் படர்ந்தது. தன் வலக்கால் துடிப்பதைத்தான் அவன் உணர்ந்தான். அதை அடக்கமுயல்கையிலேயே வாய் கோட்டிக்கொண்டது. வலக்கை இழுத்து வளைந்தது. பார்வை மங்கலாகி அனைத்தும் ஊசலாடின. நினைவின் இறுதிக்கரைவில் அவன் அனல் என்னும் சொல்லில் நின்றிருந்தான். மீண்டும் விழித்தபோது அனல் என்னும் சொல்லில் எழுந்திருந்தான். அவனுக்குமேல் பூசகர் குனிந்து நோக்கிக்கொண்டிருந்தார்.
“விடாய்” என்று அவன் சொன்னான். அவர் எழுந்துசென்று பாலைச் சூடாக்கி குவளையில் கொண்டுவந்து அவன் கடைவாயைத் திறந்து ஊட்டினார். அதைப் பற்ற அவன் கையை தூக்கமுயன்றபோதுதான் கை அருகே ஒரு அடிபட்ட நாகமெனக் கிடந்து நெளிவதைக் கண்டான். “கை கை” என்றபோது கடைவாயில் பால் வழிந்தது. “நரம்புகள் இழுபட்டுள்ளன, இளவரசே. சீராக சிலநாட்களாகும்” என்றார் அவர். அவன் தன் உடலே எண்ணங்களுக்குத் தொடர்பின்றி கிடப்பதை உணர்ந்தான். “ஆனால் உடல் துடிக்கிறது. அது நன்று. உள்ளத்தை உந்தி அதற்குள் செலுத்திக்கொண்டே இரு. அது உயிர்கொள்ளும்” என்றார் அவர்.
அர்ஜுனன் தலையை அசைத்து கண்களை மூடிக்கொண்டான். அவனில் கண்ணீர் வழியத் தொடங்கியது. “காய்ச்சல் நின்றிருக்கிறது. புண்கள் ஆறத் தொடங்குகின்றன என்று பொருள்” என்றார் பூசகர். “முன்பென என் கை செயல்கொள்ளுமா?” என்றான். “கை என்பது சித்தத்தின் கருவி” என்றார் பூசகர். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ ஆற்றவேண்டியவை பல உள்ளன, இளவரசே” என்று பூசகர் சொன்னார். “நேற்று நான் அறிந்தவை அனைத்தையும் உன்னிடம் சொல்லவேண்டும்.”
அர்ஜுனன் “நான் நேற்று கண்டது…” என தொடங்கினான். “அதுவே அங்கிருப்பது. என்றுமுள்ளது. ஆக்கமோ அழிவோ அற்றது. முழுமுதலானது. அதை அனலென்றால் சைவர். புனலென்றால் வைணவர். ஆற்றலென்றால் அன்னைநெறியர்” என்றார் பூசகர். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “நான் பெற்றது ஒன்று. இப்போது சொல்வது அதை மொழியென்றாக்குவது” என்று பூசகர் சொன்னார். “இப்பகுப்புகளுக்கு என்ன பொருளென்று அறியேன். ஆனால் இப்பகுப்புகளினூடாக அன்றி நாம் எதையும் அறியமுடிவதில்லை. அலைகளாகவன்றி கடலை எவர் காணமுடியும்?”
“அழியா அனலை அறிய முயன்ற இருவரால் தோன்றியவை வேதங்கள் என்றறிக! தொல்வேதங்களனைத்தும் பிரம்மனிலிருந்து எழுந்தவை. நாகவேதமும் அசுரவேதமும் மற்றும் இம்மண்ணிலுள்ள அனைத்து நிஷாதவேதங்களும் பிரம்மனால் உருவாக்கப்பட்டவை. அவற்றைக் கறந்தெடுத்த சாறென்றமைந்த வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் என்னும் பிற வேதங்களனைத்தும் பிரம்மஜன்யம் என்றே அழைக்கப்படுகின்றன” என்று பூசகர் சொன்னார். “விண்ணளாவ விரிந்தெழுந்து அறிந்தவை. முடிவின்மைக்கு நிகராக ஒரு சொல்லை வைத்தவை. அனலுக்கு மாற்றென மலரை வைத்தவை. அவற்றை கவிதைகள் என்கின்றனர் கற்றோர்.”
“இளையோனே, அவையனைத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தது மகாநாராயணவேதம். ஆழ்ந்து சென்று அறிந்த நுண்சொல் அது. முடிவின்மையை ஓர் ஒலியென்றாக்கிக்கொண்டது. அனலின் அடியிலிக்கு நிகரென நுண்சொல்லில் எழும் ஒலியின்மையை முன்வைத்தது” என்றார் பூசகர். “நீ மகாநாராயணத்தால் வெல்லப்பட்டாய். உன்னுள் இருந்து பெருகி எழுந்து உன்னைச் சூழ்ந்தது. உன் எதிரியென வந்து உன்னை வென்றது.”
அர்ஜுனன் “அதற்கும் அப்பால் அமைந்துள்ளது என்ன?” என்றான். “அது வேதம் கடந்தது” என்று அவர் சொன்னார். “வேதக்கனி அது என்கின்றனர். கனியென்று எழுவதே முன்பு அதன் விதையென்றும் இருந்தது. சென்று அதை அடைக! அதை அடையாமல் வேதமென எழுந்த எதையும் வென்று கடக்கவியலாது.” அர்ஜுனன் விழிகள் மட்டுமென்றாகி அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “அதை பாசுபதம் என்கின்றனர்” என்று அவர் சொன்னார்.
[ 29 ]
நாற்பத்தெட்டு நாட்களாயிற்று அர்ஜுனன் மீண்டும் தன் உடல் திரும்ப. அவன் கிடந்த அந்த கல்சிற்றறை உண்மையில் தன் சிறு கல்லில்லத்தின் அடியில் பல்லாண்டுகளாக பூசகரால் தோண்டி உருவாக்கப்பட்ட வளை. அது அங்கிருப்பதை அக்குடிகள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதனுள் கூட்டுப்புழு என அர்ஜுனன் வளர்ந்து உருமாறிக்கொண்டிருந்தான். அவர் அளித்த பச்சிலைச்சாறும் வேர்ப்பொடிகளும் அவன் உடலனலை ஓம்பின. புண்பட்ட பழைய உடல் உயிரிழந்து கருகி சருகுப்பரப்பாகி உரிந்து அகன்றது. உள்ளிருந்து புதிய தளிருடல் எழுந்து வந்தது.
ஒவ்வொருநாளும் அவன் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். முதலில் இருந்த அச்சங்களும் ஐயங்களும் துயரும் மெல்ல அகன்றன. கொந்தளிப்புகள் அமைதிகொண்டன. பின்னர் நாளெல்லாம் ஒரு சொல்லும் நாவிலெழாமலானான். உள்ளே ஓடிக்கொண்டிருந்த சொற்பெருக்கும் தேய்ந்திற்று ஓய்ந்தது. அமைதி காலத்தை இல்லாமலாக்கியது. காலமென்பது உள்ளும் புறமும் ஓடும் சொற்களே என்றறிந்தபின் விழிப்பா துயிலா என்றறியாத நிலையில் இருப்புணர்வொன்றாக மட்டுமே எஞ்சி தனியறைச் சுடர் என அசைவிழந்து நின்றிருந்தான்.
அவன் உடல் தேறி எழுந்து உடலுக்கு நீர்விட்டு பூசகர் அளித்த ஆடையை அணிந்துகொண்டபோதுதான் மீண்டும் சொற்தளத்திற்கு வந்தான். முந்தையநாள் இரவு பூசகர் அவன் உடலில் நூறு நரம்புமுடிச்சுகளில் ஊசிகளால் மெல்ல குத்தி நோக்கியபின் “நரம்புகள் இறுக்கம்கொண்டுவிட்டன, பாண்டவனே. நீ மீண்டுவிட்டாய்” என்றார். “மீண்டும் எழும் உடல் பிறந்தெழுந்த குழவிக்குரியதென உயிர்நனைந்து துடித்திருக்கிறது. இன்று நீ இளைஞனைப்போல் சென்று களம்நிற்க முடியும்.” அவன் சொற்களுக்கு அப்பாலிருந்தான். அவர் சொன்னதைக் கேட்ட உள்ளம் வேறெங்கோ இருந்தது.
மறுநாள் அவனை ஆடைகளைந்து அமரச்செய்து கொதிக்கும் மருந்திலை நீரைவிட்டு நீராட்டினார். அவன் எழுந்ததும் வேர்ச்சாறு கலந்த பாலை அருந்தும்படி நீட்டினார். அவன் முதல்முறையாக ஒரு சொல்லை அடைந்தான். “அனல்.” அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அவர் “ஆம், அனலெழுந்துள்ளது. நீ உடல்சிறந்துள்ளாய், பாண்டவனே” என்றார். அவன் “நான் கிளம்பியாகவேண்டும்” என்று சொன்னான். “ஆம், அனல்தேடிச் செல்லவேண்டும் என்பதற்காகவே உயிர்கொண்டிருக்கிறாய். இன்றே கிளம்புக!” என்றார் பூசகர்.
மலைச்சிற்றூர்கள் முழுதடங்கிவிட்டிருந்தன. குனிந்து நோக்கினால் கால்கள் தெரியாதபடி வெண்பனி மூடியிருந்தமையால் முகிலில் நீந்திச்சென்றுகொண்டிருக்கும் உணர்வே எழுந்தது. அவன் ஊரைக்கடந்து வெளியே சென்றதை எவரும் பார்க்கவில்லை. பார்வதியின் இல்லத்தைக் கடந்துசென்றபோது அதன் மூடிய சாளரங்களுக்கு அப்பால் அவள் நோக்கு கூர்கொண்டிருப்பதான உணர்வை அவன் அடைந்தான். அவன் காலடிகள் பனிக்குள் நீரில் இலைவிழும் மெல்லொலியுடன் கேட்டன. மிக அப்பால் ஒரு கூரை சொட்டும் ஒலி கேட்டது. மலையிடுக்குகளில் காற்று ஊதிச்செல்லும் முழக்கம் எழுந்து அமைந்தது.
ஊரெல்லையில் அவன் மூச்சொலியை கேட்டான். பின்னர் பனிப்பரப்பில் ஒரு கரியதீற்றல் என அந்தக் காட்டெருதைக் கண்டான். மேலும் அணுகியபோது அதன் விழிகளை அருகிலெனக் கண்டான். அது மூச்சு சீறி தலைதாழ்த்தியது. கழுத்தின் மயிர்த்தோகைகள் நிலம் தொட்டு அசைந்தன. பெருந்திமில் தலையென எழுந்து நின்றது. அவன் அஞ்சாது நெருங்கிச்செல்ல அது மேலும் ஓர் அடி முன்னால் எடுத்துவைத்தது. அவன் அருகே சென்று அதன் நெற்றியில் கைவைத்தான். திமில் சிலிர்க்க காதுகள் தழைய அது மீண்டும் மூச்சொலித்தது. அவன் அதன் விலாவை வருடியபடி கடந்துசென்றான்.
அவனை நோக்கியபடி அது பின்னால் நின்றது. மெல்லிய குரலில் “க்ரம்?” என்று கேட்டது. அவன் திரும்பி நோக்கியபோது தலையை அசைத்தது. அவன் அதன் விழிகளை நோக்கியபடி நின்றான். அது அவனருகே திமில் அசைய நடந்துவந்து காதுகள் உடுக்கின் சரடுமுழைபோல ஆடி அடித்துக்கொள்ள தலையை ஆட்டியபின் தும்மல்போல் ஓர் ஒலி எழுப்பியது. மீண்டும் முரசுத்தோலில் கோல் தொட்டதுபோல “க்ரம்?” என்றது. அவன் அதை நோக்கிக்கொண்டு நின்றான்.
கால்களை எளிதாக எடுத்துவைத்து எடைமிக்க உடலை மேலேற்றி அது சரிவில் சென்றது. அவன் அதைத் தொடர்ந்து சென்றான். அது அவன் தொடர்வதை அறிந்திருந்தது. அவன் களைப்புடன் நின்றபோது அப்பால் அதுவும் தயங்கி நின்றது. கீழே கிடந்த கற்களை எடுத்து வாய்க்குள் போட்டு பல்படாமல் குதப்பிவிட்டு உமிழ்ந்தது. மீண்டும் நடந்தபோது அவன் தொடர்கிறான் என்பதை உறுதிசெய்துகொண்டது.
அன்று மாலை அது சென்றடைந்த சிறிய மலைப்பொந்துக்குள் அவன் ஒடுங்கிக்கொண்டான். தன்னிடமிருந்த உலர் உணவை உண்டு அங்கே படிந்திருந்த பனிப்படலத்தை உடைத்து நீராக்கி அருந்தினான். அது மூன்றுகாலில் நின்றபடியே தலைதாழ்த்தி விழிசொக்கித் துயின்றது. துயிலிலும் அதன் செவிகள் ஓசைக்கேற்ப அசைந்துகொண்டிருந்தன உடல் சிலிர்ப்பும் விதிர்ப்பும் கொண்டது. மூச்சொலியுடன் விழித்து கால்மாற்றி நின்றது. காலையில் அதன் ஒலிகேட்டு அவன் விழித்துக்கொண்டான். அது கிளம்பியபோது உடன் கிளம்பினான்.
ஒரு வினாவும் இன்றி அந்த ஏற்பு நிகழ்ந்ததை அவன் எண்ணி வியப்பு கொள்வதற்கே மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தன. கிளம்பும்போது எங்கு செல்கிறோம் என அவன் திட்டமிட்டிருக்கவில்லை. மீண்டும் கின்னரர் உலகம் என்றே எண்ணியிருந்தான் என பின்னர்தான் உணர்ந்தான். எங்கிருந்தோ ஓர் அழைப்பு வரும் என அவன் உள்ளம் சொன்னது. “செல்க, அது உன்னை அழைத்துக்கொள்ளட்டும்” என்றுதான் பூசகரும் சொல்லியிருந்தார். ஆகவேதான் தெளிவான அவ்வழைப்பு வியப்பை அளிக்கவில்லை.
ஏழு நாட்கள் அவன் அவ்வெருதுடன் நடந்தான். அது களைப்படையவில்லை. பனித்துகள்களையும் குற்றிச்செடிகளின் சிறிய காய்களையும் அன்றி எதையும் உணவாகக் கொள்ளவில்லை. அவன் ஏழாம்நாள் தங்கியிருந்த பாறைப்பிளவுக்குள் மென்மணல்குழிக்குள் மலைக்கிழங்குபோல ஆழ்துயிலில் இருந்த பனிக்கீரி ஒன்றைப்பிடித்து கல்லுரசி நெருப்பிட்டு சுட்டு உண்டான். அவற்றைப் பிடிக்கும் முறையை அடைந்ததும் தயக்கமில்லாது சென்றுகொண்டே இருந்தான்.
எட்டாவது நாள் புலரியில் ஒரு பெரிய மலைப்பிளவை எருது சென்றடைந்தது. அங்கிருந்து உருளைக்கற்களுடன் மண் பொங்கி அருவியென வழிந்து பெரிய கூம்பாக நின்றது. அதன்மேல் எருது ஏறிச்சென்றபோது கற்கள் உருண்டுருண்டு விழுந்தன. அவன் ஏறியபோது அவனை முட்டித் தெறித்து கீழே சென்றன. அந்தக் கூம்பு ஏறத்தொடங்கியபின்னர்தான் எத்தனை பெரிதென்று தெரிந்தது. துணிக்குவியல்போல அது அவன் ஏறுந்தோறும் தழைந்து கீழே வந்தது. பின்னர் அந்த எருது கால்வைத்த இடங்களில் மட்டுமே தான் காலை வைக்கவேண்டும் என்று கண்டுகொண்டான்.
மேலேறிச்சென்று மலைப்பிளவினூடாக அப்பால் நோக்கியபோது திகைப்புடன் நெஞ்சுவிரிய மூச்சிழுத்துவிட்டான். அங்கே பசுமைதேங்கியதுபோல ஒரு சிறிய சோலை இருந்தது. உயரமில்லாத சோலைமரங்கள் பச்சை நுரைக்குமிழிகள்போல இலைக்குடை சூடி நின்றன. நடுவே ஓடிய சிற்றோடைகளின் இருமருங்கிலும் நாணல்கள் அடர்ந்திருந்தன. சோலையின் மையமாக ஓடிய ஆறு அப்பால் பிறிதொரு மலைப்பிளவின் வழியாக ஊறிவந்து இரையெடுத்த மலைப்பாம்புபோல சற்று பெருத்து மீண்டும் ஒடுங்கி அவன் காலடியில் ஒரு பாறைவெடிப்புக்குள் புகுந்து மறைந்தது. நீர் விழும் ஒலியை கேட்கமுடியவில்லை. ஆனால் காலில் அந்த நீரோடையின் அதிர்வை அறியமுடிந்தது.
எருது கீழே இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அவன் கால்களை எடுத்து வைத்து உடல்நிகர்செய்து மெல்ல கீழிறங்கினான். கீழிறங்குவது மேலும் கடினமாக இருந்தது. இருமுறை வழுக்கி விழுந்து கைகளை ஊன்றி அமர்ந்தான். மேலே நின்றபோது அத்தாழ்வரையின் நெடுந்தொலைவை நீள்விழிக்கோணத்தில் நோக்கியமையால் ஆழம் தெரியவில்லை. அவன் நோக்கிய மரக்கொண்டைகள் புல்பத்தைகள்போல மிகக்கீழே இருந்தவை. இறங்கி செல்லச்செல்ல வியர்வை வழியலாயிற்று.
அந்தச் சிற்றாறும் அதன் கிளையோடைகளும் வெம்மைகொண்டு கொதித்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதிலிருந்து நீராவி புகைபோல தயங்கி எழுந்து வெண்மைகொண்டு காற்றில் பட்டுச்சல்லா போல சுழன்றாடிக்கொண்டிருந்தது. அவன் நடுவே இருமுறை அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு கீழிறங்கினான். அந்தியிருண்ட பின்னரே கீழே சென்று சேர்ந்தான். அங்கிருந்த பாறை ஒன்றில் இளைப்பாறினான். காலையில் எழுந்தபோது எருது அவன் அருகே இல்லை என்பதை அறிந்தான். அதன் குளம்புகளுக்காக தேடியபோது அப்பகுதியெங்கும் பலநூறு குளம்புத்தடங்களை கண்டான்.
எழுந்து நின்று அந்நிலத்தின்மேல் காலையொளி பரவுவதை நோக்கினான். நீள்வட்டமாக மலைகளால் சூழப்பட்டிருந்தது அத்தாழ்வரை. அங்கே கதிர் எழுவது பிந்தியும் அணைவது முந்தியும் நிகழுமெனத் தெரிந்தது. அங்கிருந்த வெந்நீர் ஆறு குளிரை மிகவும் குறைத்துவிட்டிருந்தது. அந்த மரங்களும் செடிகளும் அவ்வெப்பத்தை உண்டு அங்கு வாழ்பவை என்று தெரிந்தது. குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். மானுடக் காலடிகள் எவையும் தென்படவில்லை. செவிநிறைக்கும்படி பறவைக்குரல்களும் குரங்குகளின் ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆற்றுக்குச் செல்லும் ஓடையொன்றின் வெம்மையெழுந்த நீரை அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்தினான். கனிந்து நின்ற அத்திப்பழங்களை பறித்து உண்டான். அச்சோலையை சுற்றிவந்தான். மரநிழலிலும் புதர்களிலும் எருதுகள் கால்மடித்துக் கிடந்து கண்களைமூடி அசைபோட்டன. புதர்களுக்குள் செவிவிடைத்து விழி உருட்டி நின்றிருந்த மான்கள் அவன் காலடி அணுகியதும் வால் விரைத்து அசைய ஓசை ஒவ்வொன்றுக்கும் சிலிர்த்து ஒற்றை நாண் எய்த அம்புக்கூட்டமென பாய்ந்து மறைந்தன. புதர்களிலிருந்து ஓணான்களும் அரணைகளும் எழுந்து சருகோசையுடன் ஓடின. மரக்கிளைகள் முழுக்க சிறிய கிளிகளின் ஓசை நிறைந்து அவற்றை கிலுகிலுப்பைச் செண்டுகளென்றாக்கியது.
உயிர் நிறைந்திருந்த காடு. மானுடவாழ்வுக்கான ஒரு சிறு அடையாளம்கூட தெரியவில்லை. அவன் மரங்களிலோ பாறைகளிலோ குழூஉக்குறிகள் தெரிகின்றனவா என்று நோக்கினான். பின்னர் குனிந்து கூர்ந்து நோக்கி ஒரு கல்லை எடுத்துப்பார்த்தான். அது வேல்முனை போலிருந்தது. கைகளால் செதுக்கப்பட்டதென்று தெரிந்தது. படைக்கலமாகும் கூர்கற்களை அவன் முன்னரும் கண்டிருந்தான். எச்சரிக்கையுடன் திரும்பி அந்தச் சோலையை விழிகளால் அளந்தான். அதற்குள் மானுடர் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என உறுதிசெய்துகொண்டான்.
ஆற்றங்கரை வரை சென்றபோது அவன் உடல் மயிராடைக்குள் வியர்த்து வழியத் தொடங்கியது. ஆடைகளைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு வெண்ணிறமான சேறுபடிந்த அதன் கரையில் கால்புதைய நடந்து நீரை அணுகினான். கைசுடும் அளவுக்கு கொதித்து குமிழியிட்டது ஆற்றுப்பெருக்கு. அதில் சென்றிணைந்த ஓடைகளின் நீரையே தொடமுடிந்தது. நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டு திரும்பியபோது அவன் பாதிமண்ணில் புதைந்ததாக ஒரு சிவக்குறியை கண்டான்.
இல்லை, விழிமயக்கு, அது மலையாறு உருட்டிவந்த மோழைக்கல் மட்டுமே என சொல்லிக்கொண்டான். ஆனால் அவன் விழிகள் உறுதிசெய்துவிட்டிருந்தன. அருகணைந்து குனிந்து சூழ்ந்திருந்த மண்ணை விலக்கி நோக்கினான். சிவக்குறி பதிந்திருந்த ஆவுடை தெரிந்தது. அதை பெயர்த்தெடுத்த பள்ளத்தில் மண்புழுக்கள் நெளிந்தன. நீர் ஊறி மேலெழுந்து அதை மூடியது. அவன் அதை எடுத்து அருகே நிறுத்தினான். அவன் கையளவே இருந்தது. ஆற்றில் வந்த உருளைக்கல்லை செதுக்கி அமைத்தது. ஆவுடை சீரற்ற வடிவுகொண்டிருந்தது. அதை கல்லால் அடித்தே செதுக்கியதுபோல.
அதை சேறு அகல ஓடைநீரில் கழுவி எடுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த பாறை ஒன்றன் மேல் வைத்தான். கைகளால் மும்முறை அள்ளி அதற்கு நீராட்டு செய்தான். நீலமும் சிவப்பும் மஞ்சளும் என சுற்றிலும் அலர்ந்து நின்றிருந்த மலர்களைக் கொய்து அதன்மேல் இட்டு வணங்கினான். அவன் உள்ளம் பொருளற்ற ஏதோ சொற்களாக இருந்தது. ஒரு சொல்லில் தடுக்கி அவன் திகைத்தான். அனல். உடலுக்குள் ஒரு சொடுக்கலை உணர்ந்தான். தன் ஆடையை முழுமையாக கழற்றி வீசினான். இருகைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி அங்கே நின்று விழிமூடி தன்னுள் அந்த அனலுருவை காணலானான்.