கிராதம் - 76
[ 26 ]
வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது.
பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என அப்போது உணர்ந்தான். எவருமறியாத இடங்களின் முழுத்தனிமையில் சென்றுகொண்டிருக்கும்போதுகூட விழியறியா நோக்குகளால் சூழப்பட்டிருந்தான் என்று அறிந்திருந்தான். அணிகொண்டு மேடையிலெழுந்த நடிகனின் தன்னிலை அவனில் நிறைந்தது. சூழ்ந்திருந்த விழிகள் பெருகி திசைவளைவு என்றாயின.
புன்னகையுடன் அனைவரையும் நோக்கி கைகூப்பினான். அவர்கள் அவனுக்கு வாழ்த்துரைக்கவோ வணங்கவோ செய்யவில்லை. விழிகள் திகைப்புடன் பதைப்புடன் நோக்கி அமைந்திருந்தன. அவர்கள் முந்தையநாளிரவே அங்கு வந்து கூடியிருந்தார்கள் என்பதை நனைந்து சொட்டிக்கொண்டிருந்த மென்மயிராடைகள் காட்டின. பலர் உடல்நடுங்கிக்கொண்டிருந்தனர். இரவில் அவர்கள் மூட்டிய அனல்பள்ளங்கள் அணைந்து புகைவிட்டுக்கொண்டிருந்தன. கடுங்குளிரில் அங்கே அவனுக்காக அவர்கள் காத்திருக்கையில் அவன் உள்ளே கம்பளியின் கனலுக்குள் உடல்சுருட்டி கருக்குழவி எனப் படுத்து துயின்றுகொண்டிருந்தான்.
கனவுக்குள் அவன் அப்பெருவலையில் ஆடிக்கொண்டிருந்தான். நடனமிடுகிறதா உயிர்தப்பத் துடிக்கிறதா அப்பூச்சி? அளியது, சிறியது. ஆனால் துடிநடனமிட்டு முடிவதுதான் எத்தனை சிறப்பானது! அகல்சுடரும் அவிநெருப்பும் கொண்டுள்ள பேறு அது. காலையில் முதற்சங்கின் ஒலி கேட்டபோது அவன் பிறைநிலவணிந்த புரிவேணி பறக்க அனலேந்திய ஒருகையும் வேலேந்திய மறுகையுமாக ஊழ்நடனமிட்டுக்கொண்டிருந்தான். ஊழியொலியெனச் சங்கு. நெருப்பொலியும் அறியாநகைப்பொலியும் எழுந்தமைந்த ஆழத்து இருள்.
எழுந்து அமர்ந்து தன்னை தொட்டுத்தொட்டு தொகுத்துக்கொண்டான். இரண்டு கின்னரஜன்யப் பெண்கள் அகன்ற மரக்குடைவுக் கலத்தில் கொதிக்கும் நீருடன் வந்தனர். அதில் மரவுரியை முக்கி ஆவியெழ உடலை துடைத்துக்கொண்டான். அவர்கள் அளித்த ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றென அணிந்துகொண்டான். உடல்கொண்ட அனலுக்கு அத்தனை காப்பு என எண்ணி புன்னகைத்தான். ஒரு பெண் சிரித்தபடி “உங்களை எண்ணி இங்கே அவள் காத்திருப்பதாக சொல்லச் சொன்னாள்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்தான். “அவள் தவத்தால் நீங்கள் வெல்வீர்கள்” என்றாள் இன்னொருத்தி. “வெல்வது அவளே” என்றான் அர்ஜுனன்.
அவள் சிரித்தபோது இன்னொருத்தியும் இணைந்துகொண்டாள். அச்சிரிப்பையா கேட்டேன்? உடனொலித்த முழவு எது? வெளியே முழவொலிகள். மானுடக்குரலிணைந்த முழக்கம். “வெளியே யார்?” என்றான். “குலத்தார்… நீங்கள் செல்லவிருப்பதை அறிந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்.”
முந்தையநாள் முதுபூசகர் எழுந்து வந்து அவன் கின்னரர்நாட்டுக்கு செல்லவிருப்பதைச் சொன்னபோது குலத்தலைவரும் குடிமூத்தாரும் முதலில் பொருள்கொள்ளவில்லை. “இவரை விட்டுவிடலாமென்கிறீர்களா, பூசகரே?” என்றார் குடிமூத்தார் ஒருவர்.
“இவர் சென்றுவிட்டாரென்றால் அவளை என்ன செய்வது? உடன் அனுப்புவதா?” என்றார் குலத்தலைவர். பூசகர் “இவர் மலையேறி கின்னரநாட்டுக்கு செல்கிறார். அங்கே அவர்களை நேர்கண்டு ஒப்புதல்பெற்று திரும்புகிறார்” என்றார். சிலகணங்களுக்குப் பின்னரே அவர்களுக்கு உளம்தெளிந்து “மேலேயா? மேலே செல்வதென்றால்…” என்றார் குலத்தலைவர். “இவர் செல்வார்” என்றார் பூசகர். சற்றுநேரம் நோக்கி நின்றபின் “அவ்வாறே ஆகுக!” என்றார் குலத்தலைவர். திரும்பி நடக்கையில் மெல்ல அச்சொல் அனைவருக்கும் பரவி முழு அமைதி அவர்களை வளைத்து அழுத்திப்பிணைத்தது. அவர்களின் காலடியோசைகள்மட்டும் ஒலித்தன. அவளும் அவனும் மட்டுமே அந்நிரையில் இயல்பான முகமலர்வுடன் நடந்தனர்.
இல்லமுகப்பை அடைந்ததும் குலத்தலைவர் “பூசகரின் ஆணை அது என்றால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை, வீரரே. எங்களை ஆளும் கின்னரமூதாதையரின் சொற்களைக் கேட்கும் நேர்ச்செவி கொண்டவர் அவர் மட்டுமே” என்றார். “அவரிலெழுந்து கின்னரர் ஆணையிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களை வரவழைக்க விழைகிறார்கள் என்றே பொருள். யாரறிவார்? அளிகொண்டிருக்கலாம், அருள்வதற்காக இருக்கலாம்” என்றார் இன்னொருவர். “தெய்வங்களை நாம் அளக்கவியலாது” என்றார் இன்னொருவர். அர்ஜுனன் “நான் நாளை காலையிலேயே கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு அவளை திரும்பியும் நோக்காமல் குடிலுக்குள் சென்றான்.
கைகூப்பியபடி அவன் முற்றத்திலிறங்கியபோது அவர்கள் பிளந்து வழிவிட்டனர். அவன் நடக்கத் தொடங்கியபோது முணுமுணுப்புகளினாலான முழக்கம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் ஊரின் வடஎல்லையை அடைந்தபோது தன்னைத் தொடர்ந்து இளையவர் சிலர் வந்துகொண்டிருப்பதை செவிகளால் அறிந்தான். கின்னரஜன்யநாட்டின் எல்லை என குறிக்கப்பட்டிருந்த மலைப்பாறையில் பள்ளச்செதுக்கு ஓவியமாக கின்னரன் ஒருவன் கைவேலுடன் நின்றிருக்கும் சிலை இருந்தது. அவன் அதை அணுகி ஒரு கணம் நோக்கிவிட்டு கடந்துசென்றான்.
அப்பால் மலைச்சரிவில் கரியபாறைஎன மலைஎருது ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. அவன் காலடிகளைக் கேட்டதும் அது தலைதூக்கி நோக்கியது. அதன் உடலெங்கும் தொங்கிய கரியமுடியில் பனிமணிகள் சிறிய காய்கள்போல தொங்கிக்கிடந்தன. அவன் அருகணையக் கண்டதும் அது தலையைத் தாழ்த்தி விழிகளை உருட்டி துருத்தி என மூச்சுவிட்டது. முன்காலால் ஈரமண்ணை கிளறியது. அர்ஜுனன் அதை நோக்கியபடி நடந்து அணுகியபோது அப்பெரிய உடலில் எதிர்பார்க்கமுடியாத விரைவுடன் திரும்பிப் பாய்ந்து மலைச்சரிவில் மேலேறிச் சென்றது. அதன் கால்பட்ட உருளைக்கற்கள் உருண்டு கீழே வந்தன. கிளறப்பட்ட மண் புண்போலத் தெரிந்தது. சேற்றின் புதுமணம் எழுந்தது.
அவன் தனக்குப் பின்னால் இளையவர் சிலர் ஓடிவருவதைக் கேட்டு நின்றான். மூச்சிரைக்க வந்து அவன் முன் நின்ற நால்வரில் முதல்வன் “நாங்களும் வருகிறோம், இளவரசே” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “போதும் இந்த அடிமைவாழ்வு… அறுத்துக்கொண்டு சென்றாகவேண்டும் இந்த எல்லைகளை…” என்று இன்னொருவன் சொன்னான். “நீங்கள் போரிடச் செல்கிறீர்கள் என நாங்கள் அறிவோம்… நீங்கள் எங்களுக்காக தனிமையில் இறந்தால் அந்தப் பழியிலிருந்து நாங்கள் விடுபட முடியாது. உடன்வருகிறோம், உடன்மடியவும் சித்தமாக உள்ளோம்” என்றான் ஒருவன்.
“நான் போரிடச் செல்கிறேன் என எப்படி அறிந்தீர்கள்?” என்றான் அர்ஜுனன். “நேற்று என் கனவில் அப்போரை நான் கண்டேன்” என்றான் முதல்வன். “நான் அதை இவர்களிடம் சொன்னேன். இவர்களும் அக்கனவை வேறுவகையில் கண்டிருக்கிறார்கள்.” இன்னொருவன் “வேறுபலரும் அதே கனவை கண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அது என் போர்” என்றான் அர்ஜுனன். “இல்லை, அது எங்களுக்கான போர். அதுவும் எங்கள் கனவில் வந்தது…” என்றான் முதல்வன். “அவர்கள் உங்களுக்காக அங்கே காத்து நின்றிருப்பதைக் கண்டோம்…”
அர்ஜுனன் புன்னகையுடன் அவன் தோளில் கைகளை வைத்தான். “நன்று. நான் எனக்கிடப்பட்ட பணியை நிறைவேற்றுகிறேன். நீங்கள் எண்ணுவதுபோல நான் தோற்பவன் அல்ல. திசைவென்றவன், தேவர் அருள்கொண்டவன். வென்று மீள்கிறேன்.” ஒருவன் “மீளா அடிமைத்தனமென்றால் என்னவென்று இன்று அறிந்தோம்” என்றான். “முன்பு எப்போதோ உடல்பின்னி ஒன்றென வாழ்ந்தோம் என்கின்றன கதைகள். ஆனால் அன்று அனைவரும் ஒற்றைப்பெருந்திரளாக இருந்தோம். இன்று ஒவ்வொருவருக்கும் அகமென ஒன்று உருவாகியிருக்கிறது. அருமணியென ஒளிவிடும் பெருநஞ்சு. அதைச் சுமந்தலைகிறோம்.”
“இரக்கமற்ற தலைவனுக்குத் தேரோட்டும் பாகன் எங்கள் உள்ளம்” என்றான் இன்னொருவன். “உள்ளமும் உள்ளாழமும் முரண்படுவதன் பெரும்பதைப்பையே இங்கே வாழ்வென கொண்டிருக்கிறோம். இளமையில் திமிறித்துடித்து தவித்து இயலாமையை உணர்ந்து அடங்குவதையே இங்கே அமைதி என்று அறிகிறோம். இனியும் தாளமுடியாது. அதற்கெதிரான போரில் ஒரு துளிக் குருதியேனும் சிந்தினோம் என்றாகட்டும்” என்றான். “இது எனக்கிடப்பட்ட போர். இதில் நான் எவரையும் உடன்சேர்க்கவியலாது. அனைத்துப் போர்களும் கல்விகள்தான் எனக்கு. என் மெய்மையைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன். மீண்டுவந்து பார்ப்போம்” என்றபின் அர்ஜுனன் நடந்தான்.
மலையடுக்குகள் மேலெழுந்து வந்து திசைமறைத்தபடியே இருந்தன. பின்னர் அவன் குவைமடிப்புகளில் வெண்பனி விழுந்து வேல்முனை வடிவில் நீண்டிருப்பதைக் கண்டான். விழுந்த மேலாடை என, வெண்ணிற ஆட்டின் முகம் என பனியின் வடிவுகள். வானில் கட்டிய வெண்பட்டுத் தோரணம் என பனிமுகடுகளின் நிரை தெரியலாயிற்று. குளிரை முதலில் காற்றென பின் நீரென பின் இரும்பென உணரலானான். குளிரில் சொற்களும் நடுங்கி உறைந்துவிடுவதை ‘நாரை’ என்னும் ஒற்றைச்சொல் நெடுநேரம் உள்ளே நின்றுகொண்டிருப்பதிலிருந்து உணர்ந்தான். நாரை என்று சொல்லிக்கொண்டபோது அச்சொல் அசைந்தது. பனிமலை என நகர்ந்து நாரை என்றே நின்றது. நாரை என எதை சொல்கிறேன்? வெண்ணிற நாரை. இந்த மலை ஒரு பெருநாரை. நாரைக்கூட்டம்.
நாரைகள் அவனைச் சூழ்ந்து சிறகுகோட்டி அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவற்றின் கூரலகுகளின் முனையை மெல்லிய தன்னுணர்வாக அறியமுடிந்தது. ஒரு சிறு கலைவில் அவை சிறகுவிரித்து எழுந்து பறந்து வானை மூடிவிடக்கூடும். அவற்றின் குரல் உறையிலிருந்து வாளை உருவுவதுபோல, முரசுத்தோலை கோல்வருடிச்செல்வதுபோல செம்புக்கலம் இழுபடுவதுபோல செவிதுளைக்க ஒலிக்கக்கூடும். வெண்நாரைகள் குளிர்ந்திருந்தன. வெண்நாரைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மெல்லிய உறுமல். ஓநாய். அல்லது யானை. இது வெள்ளை யானை. வயிறதிரும் உட்பிளிறல்.
அவன் கண்ணெதிரே பெரிய பனிமலை ஒன்றின் விலா அசைந்து ஆடையென மெல்ல நழுவி கீழிறங்கத் தொடங்கியது. அதன் கீழெல்லையில் வெண்நுரையலை ஆடைநுனியென நெளிந்து வளைந்தெழுந்தது. ஒருகணம் உள்நடுங்கியபின்னரே அது மிக அப்பாலிருக்கிறதென்பதும் அதற்கும் தனக்கும் நடுவே பெரும்பள்ளமொன்று கீழிறங்கிச் செல்கிறதென்பதும் சித்தத்தை வந்தடைந்தன. வெண்ணிற அருவியென இறங்கியது பனிப்படுகை. கீழே எங்கோ காற்று அறைபட்டுப் பொங்கி மேலெழுந்து வந்து அவனை மூடி அதிரச்செய்து கடந்துசென்றது. மலைமுகடுகள் எங்கெங்கோ ஓலமிட்டுக்கொண்டிருந்தன.
அவன் நெடுநேரம் சென்றுகொண்டிருந்தான். அது ஒரு கணத்தின் உள்சுழல்விரிவுதான் என்றும் தோன்றியது. அமர்ந்து ஓய்வெடுத்தான். தன் ஆடைகளையே கூடாரமாகக் கொண்டு உள்ளே ஒடுங்கிக்கொண்டபோது நத்தை என உணர்ந்தான். முதற்சில நாட்கள் கையிலிருந்த சுடப்பட்ட உலர்ந்த ஊனையே மென்று உண்டான். பின்னர் வரையாடு ஒன்றை வீழ்த்தி அதை சுட்டு உண்டான். மீண்டும் மீண்டும் சென்றுகொண்டே இருந்தான். பதினேழு நாட்களுக்குப்பின் அவன் மலையுச்சியில் முதல் கின்னரனைக் கண்டான்.
அவன் அங்கே ஒரு சிறிய அசைவெனத் தோன்றினான். அங்கிருந்து வந்த முதல் அம்பை அர்ஜுனனின் உடல் இயல்பாகத் தவிர்த்தது. மேலும் மேலுமென வந்த அம்புகளை பாறையொன்றுக்குப்பின் மறைந்து தவிர்த்தான். மலைவிளிம்பில் மேலும் நான்கு கின்னரர் தோன்றினர். அவன் அம்புபட்டு ஒருவன் கீழே விழுந்தான். மேலும் ஒருவன் திரும்புவதற்குள் விழுந்தான். மீண்டும் ஒருவன் தலைதோன்றியதுமே விழுந்ததும் அவர்கள் புரிந்துகொண்டனர். பின்னர் நெடுநேரம் அங்கே அசைவு தெரியவில்லை.
பின்னர் முழவோசை எழத்தொடங்கியது. அதன் மொழியை அர்ஜுனன் புரிந்துகொண்டான். மூன்று அம்புகளை நேர்மேலே எழுப்பினான். அவற்றின் மொழியை அவர்கள் புரிந்துகொண்டதும் மலைவிளிம்பில் வெண்ணிறமான தலையணி அணிந்த கின்னர முதியவன் ஒருவன் தோன்றினான். கைகளை விரித்து ஆட்டி அவனை வரவேற்றான். அர்ஜுனன் எழுந்து மீட்டுக் கைவீசினான். அங்கிருந்து கின்னரர்கள் நீண்ட சரடு ஒன்றில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அவனை நோக்கி வரலாயினர்.
[ 27 ]
அர்ஜுனனை அவர்கள் மலைப்பிளவு ஒன்றுக்குள் அழைத்துச்சென்றனர். அதன் முகப்பை பார்ப்பதுவரை நெடிதுயர்ந்த மலை விலா நோக்கி செல்வதாகவே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு குன்றைச் சுற்றிக்கொண்டு அப்பால் சென்று அந்தத் திறந்த வாயைக் கண்டபோது அதைப்போல ஒரு கோட்டையை கண்டதே இல்லை என உணர்ந்தான். உள்ளே சென்றபோது குளிர் எண்ணியிராதபடி குறையத் தொடங்கியது. உலைமுகம் என நீராவி வந்து முகத்திலறைய மெல்லிய வியர்வை பொடித்தெழலாயிற்று.
வெண்ணிறக் கோட்டையெனச் சூழ்ந்திருந்த பனிமலைகளின் நடுவே பச்சைக் குறுமரங்கள் செறிந்த சோலை தெரிந்தது. அங்கிருந்து நுரைகிளம்புவதுபோல வெண்மயிராடை அணிந்த மக்கள் கிளம்பி அவர்களை நோக்கி வந்தனர். இடையிலிருந்த குழந்தைகளும் பருத்திப்பூக்கள்போல தெரிந்தன. சிறிய வட்டமுகங்களில் ஒட்டிவைக்கப்பட்ட பச்சைமணிக் கண்கள். மொட்டுபோன்ற உதடுகள். விழிகளிலெல்லாம் அச்சமும் வியப்பும்தான் இருந்தது. அவன் திரும்பி நோக்கியபோது குழந்தைகள் அலறியபடி அன்னையரை பற்றிக்கொண்டன. பெண்கள் மூச்சொலியுடன் பின்னால் சென்றனர். அவர்கள் அனைவரும் அவன் தோளுக்குக் கீழே நின்றிருக்கும் உயரம் கொண்டிருந்தனர். பெண்கள் அவன் இடையளவே இருந்தனர்.
அவனை அவர்களின் ஆலயமாகத் தெரிந்த குகை ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அதன் வாய்முகப்பில் அமைந்திருந்த பலிபீடத்தருகே கொண்டுசென்று நிறுத்தினர். அப்பால் கருங்கல்லால் ஆன மிகச்சிறிய இருக்கை. சோலைக்குள் அமைந்திருந்த உயரமற்ற கல்குடில்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் அவர்களுக்குப் பின்னால் கூடிநின்று அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர். முழவோசையும் மணியோசையும் தொலைவிலென கேட்டன. பின் நேர்முன்னாலிருந்த மலையின் மடிப்பிலிருந்து எழுந்தன. பின்னர் குகைக்குள் ஆழத்தில் அதன் மாற்றொலி எழுந்தது.
அவன் அப்பால் கின்னரர்களின் தலைவர் தன்னவர் சூழ வருவதைக் கண்டான். அவனுடன் வந்தவர்கள் மீட்டிய முழவும் எழுப்பிய மணியும் ஓசையிலா அசைவாக இருக்க சூழ்ந்த மலைகள் கார்வையுடன் அவ்வொலியை சுழற்றி நிறைத்துக்கொண்டிருந்தன. தலைவர் வெண்மயிராடை அணிந்து தலைக்குமேல் மூன்றடுக்காக உயர்ந்த வெண்மயிர் முடிசூடி கையில் வளைகோலுடன் வந்தார். அவருடைய தாடி இடைவரை வெண்ணிற அலைகளாகத் தொங்கியது. வெண்குழல்கள் தோளில் சரிந்திருந்தன. அணுகுந்தோறும் அவை அவர் அணிந்திருப்பவை எனத் தெரிந்தது. அவர்கள் ஒரு சடங்கென நடந்து அவன் நின்றிருந்த குகைமுகப்பை அடைந்தனர்.
அவர்கள் அணுகி வந்ததும் முன்னால் வந்த முதுமகன் ஒருவன் அர்ஜுனனிடம் “அரசரை வணங்குக!” என்றான். அச்சொல் அர்ஜுனனை திகைக்கச் செய்தது. அஸ்தினபுரியின் கிளைமொழி அது. அவன் விழிகளின் திகைப்பை நோக்கி புன்னகைத்தபடி அவன் “உன் உள்ளத்திலிருந்து அம்மொழியை எடுக்கிறேன்” என்றான். அவன் பேசுகிறானா விழிகளால் உணர்த்துகிறானா என அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவன் அரசனை முழந்தாளிட்டு வணங்கினான். அரசர் தன் கோல்சாய்த்து அவனுக்கு வாழ்த்தளித்தார்.
இருவர் சென்று அப்பால் நின்றிருந்த பட்டைக்கற்கள் இரண்டை விலக்கிச் சரித்தனர். அரசனுக்குரிய கல்பீடம் பச்சைநிற ஒளிகொள்ளத்தொடங்கியது. மழைக்காலச் சுனைநீரின் நிறம் மேலும் ஒளிகொண்டு உச்சிவெயில் பட்ட நீரென ஆயிற்று. அவர் அதில் ஏறி அமர்ந்தார். அவர் கையிலிருந்த கோலை ஒருவர் பெற்றுக்கொண்டார். அவருடைய சிறிய விழிகள் அவனை நோக்கி சற்றுநேரம் நிலைத்திருந்தன. அவன் எண்ணிய அனைத்துடனும் அவரும் உடனிருந்தாரென்று உணர்ந்தபோது உள்நடுக்குடன் தன்னை கட்டுப்படுத்தினான். அவர் புன்னகையுடன் “அந்தக் குகைதான்” என்றார்.
அவன் திரும்பி அதைப் பார்த்தான். “அது இங்கு எப்போதும் திறந்திருக்கிறது” என்று கின்னர குலத்து அரசர் சொன்னார். “அது எங்கள் மூதாதையர் வந்த வழி… இந்த மலையுச்சியில் இருந்து விண்ணுக்குச் செல்லும் பாதையும் அதுவே.” அவர் அமர்ந்திருந்த பீடம் இளந்தளிர் என ஒளிகொண்டது. அதன்மேல் அவர் பச்சைப்புழுபோல உடல் மிளிர அமர்ந்திருந்தார். “மானுடனே, நாங்கள் அங்கே விண்ணுருவிலிருக்கிறோம். இது எங்கள் மானுடத்தோற்றம். நீ போரிடவேண்டியது அவர்களிடம்தான்.”
அர்ஜுனன் அவருடைய விழிகளை நோக்கிக்கொண்டு நின்றான். கூர்ந்து நோக்க நோக்க அவை நோக்கு தொடாத தொலைவுக்கு அகன்றுகொண்டிருந்தன. “இங்கிருப்பவை தனிப்பொருட்கள். அவற்றை இணைத்திருக்கும் சரடு சொல் எனும் சொல்லால் சுட்டப்படுவதுமட்டுமே. சொல்பின்னி எழுகின்றது புவி” என்றார். “அங்கு மண்ணில் வாழ்பவர்களிடம் திகழ்வது அவர்களின் சொல். அது வேர்விட்டு முளைத்தெழுந்த அடியாழமே எங்கள் சொல்வெளி. எங்கள் சொல் முளைத்தெழுந்த ஆழம் அக்குகைக்குள் வாழும் சொல்” என்றார்.
“சொல்வெளியை அள்ளி முடிச்சிட்டு அமைத்த மையமே வேதம்” என அவர் தொடர்ந்தார். “அது ஒரு பீடம். அங்கமைகின்றன தெய்வங்கள். அது ஒரு படைக்கலம். அதன் கூரே நெறிகள். வேதத்தை உறுதிசெய்பவர்கள் மொழியை கட்டுகிறார்கள். மொழியை ஆள்பவர்கள் புவியை வெல்கிறார்கள்” என்றார் அவர். அர்ஜுனன் அச்சொற்களை அவருடைய ஒவ்வொரு உதடசைவுடனும் இணைந்து கேட்டபடி நின்றான். “சென்று அதை வென்று வருக… எங்கள் வேதத்தின்மேல் ஒரு சொல் உன்னுடையது அமையும் என்றால்மட்டுமே நீ எங்களை வென்றாயென்று பொருள். சென்று மீள்க!”
அவர் கைகாட்ட அர்ஜுனனின் இருபக்கங்களிலும் நின்றவர்கள் “வருக!” என்றனர். அவன் எழுந்து தன் வில்லுடன் அவர்கள் இட்டுச்சென்ற வழியே நடந்தான். அவனைச் சூழ்ந்திருந்த முகங்கள் அலைநீரில் குமிழிகள் என அசைந்தன. ஒரு சொல்லும் இல்லாத நோக்குகள். அவன் அக்குகை வாயிலை அடைந்ததும் நின்றான். அவர்கள் “செல்க!” என்றபின் திரும்பிச்சென்றனர். எடைகொண்ட கால்களை சித்தத்தால் உந்தி அசைத்து முன்னெடுத்து அவன் உள்ளே நுழைந்தான்.
அக்குகை வெண்பனியாலானது. வெண்பனியாலான இருள் நிறைந்திருந்தது உள்ளே. அவன் காலடிகள் உள்ளிருந்து அவனை நோக்கி அணுகிவருவதைப்போல உணர்ந்தான். அவன் அங்கேயே நிற்க அவனிலிருந்து பிரிந்த பிறிதொன்றென அவன் முன்னால் சென்றான். அவனை ஆடிகள் என சூழ்ந்துகொண்டன பனிக்குகைச் சுவர்கள். முற்றிலும் ஓசையற்றிருந்தது அவ்விடம் என உணர்ந்தபோது அறிந்தான் ஆடியென்றாலும் அவை அவன் பாவையை காட்டவில்லை.
முன்னரே அறிந்த இடம்போல் அது தோற்றம்காட்டுவது எதனால் என்று அவன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு அடிவைப்பையும் முன்னர் பலமுறை செய்திருந்தான். முன்னர் அறிந்த எண்ணங்களையே கொண்டிருந்தான். இந்தக் கணம் இப்படியே நிகழ்ந்திருக்கிறது. இப்படியே அடுத்த கணமென்றாகியிருக்கிறது. இந்த இடம் எது? எங்குள்ளது இந்த ஆழம்? அக்கணம் எதிரே முதல்முறையாக தன் ஆடிப்பாவையை கண்டான். திடுக்கிட்டு அசைவிழந்து நின்ற அவனை நோக்கி அது மெல்ல வந்துகொண்டே இருந்தது.
அது வெளியே அவன் கண்ட கின்னர குலத்தரசர் என அறிந்தான். வெண்ணிறத்தில் வெண்பாவை எனத் தெரிந்த அவ்வசைவை எப்படி நான் என உணர்ந்தேன் என அவன் வியந்தான். “போருக்கெழுக!” என்றது பெருங்குரல் ஒன்று. அவர் கையில் அந்த நீண்ட வளைதடி தோன்றியது. அது சுழன்று தன்மேல் விழுவதற்குள் அவன் காண்டீபத்தை எடுத்து வளைத்து அவர்மேல் அம்பெய்துவிட்டிருந்தான். மறுகணமே அவருடன் அவன் ஒரு போரில் ஈடுபட்டுவிட்டிருந்தான். அவன் செய்த அத்தனை போர்களிலும் வில்லுடன் முற்றிலும் இணைந்து நெளிந்து நடனமிட்ட அவன் உடலுக்குள் விலகி விழிமட்டுமேயாக நோக்கி நின்றிருந்த உள்ளம் அப்போரில் முற்றிலும் ஈடுபட்டு தன்னை அழித்துக்கொண்டிருந்தது.
முதலில் அவ்வுரு கரைந்து எழுந்த துரோணரின் உருவம் கண்டு அவன் திகைத்தான். மறுகணமே அவ்வுருவை யமனின் தண்டாயுதத்தால் அடித்து சிதறடித்தான். மறுகணமே இடப்பக்கம் பெருநகைப்புடன் எழுந்த பீஷ்மரை குபேரனின் அந்தர்த்தானமென்னும் அம்பால் வீழ்த்தினான். அவர் நிலத்தமைவதற்கு முன்னரே பின்னால் ஜயத்ரதன் வில்லுடன் எழுந்தான். வருணனின் பாசவாளியால் அவனை அவன் கொன்றான். இடிபோல நாண் ஒலித்தபடி முன்னால் கர்ணன் தோன்றினான். அர்ஜுனன் வஜ்ரத்தை அம்பாக்கி அவனை உடைத்து வீழ்த்தினான்.
வெற்றிநகைப்புடன் அவன் முன்னால் செல்ல எதிரே வில்லுடன் எழுந்த இளைய யாதவனைக் கண்டு அவன் திகைத்து செயலிழந்தான். கரியவனின் வெறித்த விழிகள் அவனை அறியவில்லை. அம்முகத்திலெழுந்த பெருஞ்சினத்தைக் கண்டு அர்ஜுனன் பின்னடைந்தான். அவனை நோக்கி வந்த அம்பை தடுக்கும்பொருட்டு மண்ணில் விழுந்து புரண்டு எழுந்தான். “யாதவரே…” என்று அவன் கூவினான். “என் முன் நில்… இல்லையேல் தலைகொடுத்து விழு!” என்று கண்ணனின் குரல் ஆணையிட்டது. “இல்லை, இப்பிறப்பில் எவர் முன்னும் தோற்பதில்லை” என்றபடி அர்ஜுனன் அம்புகளை எய்தான்.
அவன் தொடுத்த அம்புகளெல்லாம் சென்று ஆடிப்பாவையிலென கரியோன் மேல் விழுந்து ஓசையுடன் தெறித்தன. போர் மட்டுமே அளிக்கும் பேருவகையுடன் அவன் வெறிகொண்டு நகைத்தபடி அம்புகளைப் பொழிந்தான். இக்கணம் இறப்பேன், இதோ பிறந்தெழுந்தேன். மீண்டும் ஓர் இறப்பு. கணமே வாழ்வென்றாகும் காலப்பெருக்கு. அம்புகளால் ஆன காலம். அம்புகள் சூழ்ந்த வெளி. அம்புகளால் இவனுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன். இந்த அம்புவலையில் சிக்கியிருப்பவன் நான், மறுபக்கம் அவன். அம்புத்தூளி ஒழிந்தது. அருகிருந்த கற்களைப் பெயர்த்து அம்புகளென எய்தான். அவன் ஆடைகள் கிழிந்து அகன்றன. அணிகள் உடைந்தன. உடலெங்கும் தைத்த அம்புகளிலிருந்து குருதி தெறித்து குகைச் சுவர்கள் செந்நிறத் தசைப்பரப்பென்றாயின.
அவன் எதிரே நின்றுபோரிட்ட இளைய யாதவனின் முகம் இருள்நீரில் நீந்தும் மீனென வாய்பிளந்து பல்நிரை காட்டியது. அவன் அம்புகளை உடலெனும் கவசத்தால் ஏற்று ஆமையென குவிந்தெழுந்தது. அம்புகளைத் தொடுத்து பன்றியென உறுமியது. குருதிவெறிகொண்டு சிம்மம் என முழங்கியது. இவன் குறியோன். இவன் அனலோன். இவன் வில்லுடன் எழுந்த ராகவன். இவன் ஆழியிலமைந்தவன். இவன் இருளென சுருண்டு அவனை ஏந்தியவன். இவன் ஜயன், இவன் விஜயன். இருளெனப் பெருகி எண்ணிலாக் கைகளுடன் அவனைச் சூழ்ந்துகொண்டது விண்ணளந்த பேருருவம்.
அவன் போரிட்டபடியே பின்னகர்ந்தான். வில் உடைந்து தெறிக்க படைக்கலமேதுமில்லாமல் வெறுங்கையுடன் குருதிமூடிய வெற்றுடலுடன் நின்று தவித்தான். அவனை கரிய அலையென பெருகியணைந்தது யாதவனின் விண்ணுருவம். கொலைவிழிகள். குருதிச்சுவையூறிய வாயில் கொடுஞ்சிரிப்பு. அறியாத்தவிப்பில் அவன் பாய்ந்து பற்றி கிழிக்கமுற்பட்ட குகைச்சுவரில் ஓர் இடைவெளி விழுந்தது. அதனூடாக அவன் தலைகீழாக பிதுங்கி சிறுகுகைவழியில் வழிந்த சேற்றுநீரினூடாக விரைந்து சென்று எங்கோ விழுந்தான்.
குரல்கள் அவனை சூழ்ந்துகொண்டன. கூச்சல்கள். “விலகுங்கள்! விலகுங்கள்!” எனும் ஒலிகள். அவனுக்கு குளிர்ந்தது. கைகளை மார்புடன் சேர்த்து உடல்சுருட்டி குறுகிக்கொண்டான். விழிதிறக்கமுடியாமல் தலை எடைகொண்டிருந்தது. மென்மையான சூடான குருதிச்சேற்றில் புதைந்துகிடக்க விழைந்தான். அச்சேறு அவன் எண்ணங்களையும் மூடி அவனை தன்னில் அழுந்தவைத்துக்கொண்டது.