கிராதம் - 74

[ 22 ]

பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர்.

கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய கற்கள். ஆனால் அவற்றை மதிப்பற்றவை என்று சொல்லி விலக்கினால் அவர்கள் அதைப்போன்றவைதான் என எண்ணி அருமணிகளையும் வீசிவிடக்கூடும் என்பதனால் எல்லா கற்களையும் ஒரே விலைக்கு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் வணிகர். அவர்களின் ஈட்டல்கள் அருமணிகளில் மட்டுமே இருந்தன. ஒரு அருமணி நூறு எளியகற்களுக்கான இழப்பை ஈடுசெய்தது.

அருமணிகள் கிடைத்ததும் அவற்றை பாலில் இட்டு பால்நிறம் மாறுவதைக்கொண்டும், சிறுபேழைக்குள் இட்டு மூடி துளைவழியாக நோக்கி உள்ளே ஒளி எஞ்சுவதைக்கொண்டும் ஒளியோட்டத்தை மதிப்பிட்டனர். சிறிய மரப்பெட்டிக்குள் அவற்றை வைத்து ஊசித்துளைவழியாகச் செல்லும் ஒற்றை ஒளிக்கீற்றை அதன்மேல் வீழ்த்தி பிறிதொரு துளைமேல் விழிகளை அழுத்திவைத்து நோக்கி அவற்றின் உள்நீரோட்டத்தை கணித்தனர். பூனைக்கண்போல எருமையின் உள்விழிபோல பனித்துளிபோல அனல்பொறிபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்  வண்ணங்கள் கொண்ட மணிகள்.

மலையேறிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பீதர்குழுக்கள் அனைத்துக்குமே அருமணிகள் வாய்த்தன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே தெய்வவிழிகளைப்போன்ற மணிகள் அமைந்தன. “அருமணியின் மதிப்பு என்பது அதைப்போன்ற பிறிதொன்றில்லை என்பதனால் உருவாவதே. தெய்வத்தன்மை என்பது பிறிதொன்றிலாமை மட்டுமே” என்று பாணன் சொன்னான். “அரியசொல்போல” என்று முதியபீதர் சேர்த்துக்கொண்டார். “சொல்வதற்குரிய தருணத்தில் சொல்வதற்குரிய முறையில் சொல்லப்பட்ட சொல் முடிவின்மையை ஒளியென தன்னுள் சுருட்டிக்கொண்டது. அது கூழாங்கற்கள் நடுவே அருமணி.”

சிறந்த கல் கிடைத்த பீதர்குழு அதை அறிவிக்கும்பொருட்டு தங்கள் சிறுகடைக்குமேல் அனலுமிழும் முதலைநாகத்தின் கொடி ஒன்றை பறக்கவிட்டது. அதைக்கண்டதும் வணிகக்குழுக்களில் பாராட்டொலிகள் எழுந்தன. சிறுவணிகர்கள் வந்து அந்த அருமணிகொண்டவனிடம் தங்களுக்கு அவன் அன்றைய உணவையும் குடியையும் அளிக்கவேண்டும் என கோரினர். அவனைச் சூழ்ந்துநின்று அவன் குலத்தையும் வணிகக்குழுவையும் வாழ்த்தி கூவினர். பாணர் அந்த அருமணியைப்பற்றி அப்போதே கவிதை புனையத்தொடங்கினர். அதன் கதைகளை அவர்கள் காற்றினூடாக மொழியில் அள்ளி எடுத்து வைத்தனர்.

உச்சிப்பொழுது கடந்ததுமே மலைகளின்மேல் முகில்திரை சரிந்து இருண்டு மூடியது. குளிர்ந்த ஊசிகள் போன்ற நீர்த்துளிகள் காற்றில் வந்து அறைந்தன. கடைகளை மூடிவிட்டு தோல்கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை வைத்துக்கொண்டு சூழ்ந்தமர்ந்து கிழங்குகளையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி தேறல் அருந்தினர். அதன்பின் அருமணிகளைப்பற்றியே பேசினர். அப்படியே விழுந்து துயின்று கனவுகண்டு எழுந்தமர்ந்து உளறி உடல்நடுங்கினர். “அருமணிகளுக்குக் காவலாக இரு தேவர்கள் உள்ளனர். பகற்காவலன் விழித்திருக்கையில் நமக்கு இனிய எண்ணங்களை அளிக்கிறான். இரவுக்காவலன் துயிலில்வந்து கொடுந்தோற்றம் காட்டி அச்சுறுத்துகிறான்” என்றனர் பாணர்.

அருமணிகளை கடல்வரை கொண்டுசென்று சேர்ப்பது பெரும்பாடு. அவர்களிடம் அருமணி இருக்குமென்பதை அனைவரும் அறிந்திருப்பர். வில்லவர்கள் சூழ சென்றாலும்கூட வழியெங்கிலும் கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சரளமரத்தின் சிறுகொட்டையில் துளையிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அகற்றிவிட்டு அதில் அருமணிகளை இட்டு பசையிட்டு ஒட்டி பணியாட்களைக்கொண்டு விழுங்கச்செய்வார்கள். ஒவ்வொருநாளும் அவன் மலத்திலிருந்து அதை திரும்ப எடுத்து கழுவி இன்னொரு கொட்டைக்குள் இட்டு மீண்டும் விழுங்கச்செய்வார்கள்.

அருமணி எந்த ஏவலனின் குடலுக்குள் இருக்கிறதென அவ்வணிகக்குழுவிலேயே பிற ஏவலருக்கு தெரிந்திருக்காது. பிறரிடம் சொல்லாமலிருப்பதே அந்த ஏவலனின் உயிருக்கும் உறுதியளிப்பதென்பதனால் அவனும் பகிர்ந்துகொள்வதில்லை. வணிகக்குழுக்களைத் தாக்கும் கொள்ளையர் அவர்கள் அனைவரையும் கொன்று அத்தனைபேர் வயிற்றையும் கிழித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பெருவாய் என வயிறு திறந்து கிடக்கும் பிணங்களை அவர்களனைவருமே செல்லும் வழிகளில் கண்டிருந்தனர்.

அவ்விதை எவ்விதமேனும் திறந்தால் தன் உடலுறுப்புகளை வைரக்கூர் வெட்டிச்செல்லுமென்றும் குருதிவார விழுந்து இறக்கவேண்டியிருக்குமென்றும் அதை விழுங்கியவன் அறிந்திருப்பான். தன்னை பாம்பு உறையும் புற்று என்றும் வாளிடப்பட்ட உறை என்றும் உணர்வான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை காணமுடியும். அவன் சொல்லடங்கி தனித்திருப்பான். தன் உடலை எடைகொண்டதைப்போல கொண்டுசெல்வான். தன்னை ஓர் அரும்பொருளென ஒருகணமும் நச்சுத்துளியென மறுகணமும் உணர்ந்துகொண்டிருப்பான். கனவுகண்டு எழுந்தமர்வான். நடுங்கி அதிர்ந்து மெல்ல அமைந்தபின் இருளுக்குள் நெஞ்சைத்தொட்டு புன்னகை செய்வான்.

தன் உடலில் இருந்து அருமணி வெளியே சென்ற முதற்கணம் ஆறுதலடைவான். சற்றுநேரத்திலேயே தனிமைகொண்டு பதைக்கத் தொடங்குவான். அதை மீண்டும் விழுங்கும்வரை தன்மேல் சூழும் பொருளின்மையை அவனால் தாளமுடிவதில்லை. மீண்டும் அது தன் வயிற்றை அடைந்ததும் முகத்தில் நிறைவு தெரிய நீள்மூச்சுவிட்டு அமைவான். “சுடர் ஏற்றப்படும்போதே அகல். திரியணைந்தபின் அகலில் குடியேறும் மூத்தவளின் வெறுமை” என்று அதை ஒரு பாணன் சொன்னான்.

அருமணி சுமப்பவர்களை முத்துச்சிப்பிகள் என்றழைத்தனர். சூக்திகர்களுக்கு வணிகக்குழுக்களில் பெருமதிப்பிருந்தது. மணியை கையளித்ததும் அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ஆனால் கைநிறையப்பெற்ற பொற்காசுகளை பொருளற்ற ஓடுகளாகவே அவர்களால் காணமுடியும். அந்த ஆண்டுமுழுக்க அவர்கள் தாங்கள் சூக்திகர்களாக இருந்தோம் என்பதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அருமணி தங்களுக்குள் இருந்தபோது உயர்ந்த எண்ணங்களுக்கு ஆளானதாகவும் தெய்வங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் சொல்வார்கள். நாளடைவில் அதை அவர்களே நம்பத் தொடங்குவார்கள். உயர்ந்த எண்ணங்களால் உள்ளம்நிறையப்பெற்று மேலெழுவார்கள். ஓர் அருமணி இருந்த இடத்தை நிரப்ப எத்தனை அரியவை தேவை என எண்ணி வியப்பார்கள்.

ஆனால் கின்னரஜன்யர்களுக்கு அவை பொருளற்றவை என்றே தோன்றின. கின்னரர்களிடமிருந்து அவற்றைப்பெற்று சிறிய குலுக்கைகளில்போட்டு கூரைமேல் கட்டிவைத்தனர். அவை நஞ்சு என்றும் குழவியர் கையில் கிடைக்கலாகாதென்றும் அவர்கள் எண்ணியமையால் எப்போதும் இல்லங்களின் முகப்பில் உத்தரங்கள் எழுந்துசந்தித்த கூம்பின் உச்சியில் கணுமூங்கில் சாற்றிவைத்து ஏறிச்சென்று எடுக்கும் உயரத்திலேயே வைத்திருந்தனர். அவற்றை அவர்களுக்குள் எவரும் திருடுவதில்லை என்பதனால் கண்காணிப்பு இருப்பதுமில்லை. அர்ஜுனன் ஊரினூடாக தோளில் காவடியில் நீர்க்குடுவைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு அனல் அளித்த பெண் திண்ணையிலிருந்து எட்டிநோக்கி கைதட்டி அழைத்து “குறிமரமே, ஒருகணம் இங்கு வருக!” என்றாள்.

அவன் அருகே  சென்றபோது அவள் பாறைமுகடுவளைவில் மலைத்தேன்கூடு என தொங்கிய உறியை சுட்டிக்காட்டி “அந்தக் குலுக்கையை எடுத்துத்தர இயலுமா?” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க!” என்றான்.

KIRATHAM_EPI_74

அவள் “எப்படி அத்தனை கூர்மையாக எறியமுடிந்தது?” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி?” என அவள் மீண்டும் கேட்டாள். “படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.” அவன் திரும்பிச்செல்ல முயன்றபோது அவள் அக்குலுக்கையை தரையில் கொட்டினாள். அதில் ஒளிவிடும் மலரிதழ்கள்போல நீலமும் பச்சையும் சிவப்பும் நீர்மையுமாக வண்ணம் மின்னும் அருமணிகள் பரவின. அவள் அவற்றிலிருந்து கைப்பிடி அள்ளி “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

“எனக்கா?” என்றான். “நான் செய்தது சிறிய பணி, இளையவளே.” அவள் கன்னங்கள் குழியச் சிரித்து “இவற்றின்பொருட்டு அல்லவா இத்தனை மலையேறி வருகிறீர்கள். உங்களுக்கு அளிக்கவேண்டுமென நினைத்தேன்” என்றாள். “நன்று, நான் இதை ஏற்கப்போவதில்லை. எனக்கு பொருட்களில் நாட்டமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பொருளுக்கில்லை என்றால் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள். “ஓர் இடத்திற்கு நான் செல்வது முந்தைய இடத்திலிருந்து விலகும்பொருட்டு மட்டுமே” என்றான் அர்ஜுனன்.

அவள் ஒருகணம் கழித்து சிரித்து “மிகச்சரியான சொற்களை எடுக்கிறீர்கள்” என்றாள். மீண்டும் சிரித்து “எண்ணவே வியப்பாக இருக்கிறது, இப்படியன்றி வேறு எப்படியும் இதை சொல்லிவிடமுடியாது” என்றாள். அர்ஜுனன் “நான் சொல்வலன் என்று சொல்லமாட்டேன். ஆனால் எந்தப் படைக்கலத்தையும் முழுதுறக் கற்பவன் சித்தமும் சொல்லும் கூர்கொள்ளப்பெறுகிறான்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். அவனிடம் பேசமட்டுமே அவள் விழைகிறாள் என்பதை விழிகள் காட்டின. முகம் அவன் காதல்மொழி சொல்லக்கேட்பவள்போல மலர்ந்திருந்தது. கண்களில் சிரிப்பென தவிப்பென ஓர் ஒளி அலையடித்தது.

“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” ஏன் அதை அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என அவன் வியந்தான். அறியா மலைமகள். அவளிடம் ஏன் மதிப்பை ஈட்ட விழைகிறேன்? இல்லை, இத்தருணத்தை திசைதிருப்ப விரும்புகிறேன். இச்சொற்கள் வழியாக இப்போது இருவர் நடுவே நுரைகொண்டெழும் விழைவை மூடிப்போர்த்திவிட முனைகிறேன்.

“ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “வெண்ணை திரட்டுகையில் கலங்கி நுரைகொள்வது உள்ளம். திரண்டுவருவது உள்ளறிந்த ஒரு மெய்.” அவன் அவளை வியப்புடன் நோக்கினான். அவளை சற்றுமுன் எளிய மலைமகள் என அவன் கருதியதை எண்ணிக்கொண்டான். அப்படியல்ல என்று அவன் உள்ளூர அறிவான். இல்லையென்றால் அவன் அவள் முன் தன் திறனை காட்டியிருக்கமாட்டான். கணுமுளைமேல் ஏறி அக்குலுக்கையை எடுத்தளித்தபின் விலகிச்சென்றிருப்பான். அவள் அவனை அழைத்த குரலின் முதல்துளியிலேயே அவளை அறிந்திருக்கமாட்டான்.

“நன்று” என அவன் முழுமையாக தன்னை பின்னிழுத்துக்கொண்டான். “படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்.” அவன் தலைவணங்கி தன் காவடியை தோளிலேற்றிக்கொண்டான். அவள் மேலும் பேசவிழைபவள்போல அவனுக்குப் பின்னால் வந்தாள். அவள் கைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடுவதைக் கண்டதும் அவன் நெஞ்சு மீட்டப்பட்டது. விழிகளை விலக்கி “வருகிறேன்” என்றான்.

“இந்தக் கற்களை இவர்கள் எதற்காக பெற்றுச்செல்கிறார்கள்?” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்?” என்றாள். “இவை அணிகலன்கள்” என்றான். அவள் “எங்கள் பாணர் பிறிதொன்று சொன்னார். இவை தெய்வங்களின் விழிகள். இவற்றை அவர்கள் நெற்றியில் சூடும்போது பிறிதொரு நோக்கு கொள்கிறார்கள்” என்றாள். அர்ஜுனன் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றான். அவள் மேலும் தொடர்ந்தபடி “அவர்கள் அதன்பின் கின்னரரை காணமுடியும். அவர்களிடம் பேசமுடியும்” என்றாள்.

“ஏன், இந்த அருமணிகள் உங்களுக்கும் விழியாகலாமே?” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே? எங்களுக்கு இவ்விழிகள் தேவையில்லை. எங்கள் விழிகள் இந்தக் கற்களைவிட அரியவை.” அவன் அறியாமல் அவளுடைய பச்சைநிறக் கண்களை நோக்கியபின் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்களுக்கும் இவ்விழிகள் தேவையில்லை. நான் உங்கள் விழிகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை மற்றவர்களின் விழிகளைப்போன்றவை அல்ல. அவை பச்சைநீல வண்ணம் கொண்டிருக்கவில்லை. கன்னங்கரிய மணிக்கல் போலிருக்கின்றன. அவற்றின் ஒளி ஆழமானது.”

அவன் மெல்லிய திணறலொன்றை அடைந்தான். அவளை தவிர்த்துச்செல்ல விரும்பினான். அவள் மேலும் உடன்வந்தபடி “உங்கள் உடலெங்கும் இருக்கும் வடுக்களும் விழிகளைப்போல ஒளிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் நோக்கு இருக்கிறது. நீங்கள் திரும்பிச்செல்லும்போதும் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் விரைந்து காலடிகளை எடுத்துவைத்தான். அவள் அவனுடன் வந்தபடி “விண்ணவர்க்கரசன் உடலெங்கும் விழிகொண்டவன் என்கிறார்கள். அவரை எண்ணாமல் உங்களை நோக்கமுடியவில்லை” என்றாள். அவன் எவரேனும் நோக்குகிறார்களா என விழியோட்டினான். எங்கும் முகங்கள், ஆனால் எவையும் நோக்கவில்லை.

“கண்ணோட்டமில்லா கண்கள் புண்கள் என்கின்றனர். புண்கள் கண்களாகுமென்றால் நீங்கள் கனிந்திருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் “புண்களினூடாக மானுடரை நோக்க கற்றுக்கொண்டேன்” என்றான். “ஆம், அப்படித்தான் நானும் எண்ணினேன்” என அவள் உவகையுடன் மெல்ல குதித்தபடி சொன்னாள். அவள் அணிந்திருந்த கல்மணிமாலைகள் கூடவே ஒலித்து பிறிதொரு சிரிப்பொலியெனக் கேட்டன.

“நீங்கள் என் குடில் வழியாகச் செல்வதை நோக்குவேன். உங்கள் விழிகளெல்லாம் என்னை நோக்குவதைக் காண்பேன்” என்றாள். பின்னர் சிரித்தபடி “இங்குள்ள அத்தனை பெண்களும் உங்களைத்தான் நோக்குகிறார்கள் என்று அறிவீர்களா?” என்றாள். “பெண்களை நான் கடந்துவந்துவிட்டேன், இளையவளே” என்றபின் அர்ஜுனன் தன் கூடாரம் நோக்கி சென்றான். அவள் அங்கேயே நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்நோக்கை அவன் தன் உடலால் கண்டான். மலைமகள்களுக்கு அச்சமும் நாணமும் மடமும் பயிற்றுவிக்கப்படவில்லை. அவையில்லாத இடத்தில் வெற்றுடல்போல் வெறும்வேட்கையே எழுந்து நின்றது. ஆனால் அது உளவிலக்களிக்கவில்லை. தூயதென இயல்பானதெனத் தோன்றியது. அதன்முன் அணிச்சொற்களும் முறைமைகளும் பொருந்தா ஆடைகளெனப்பட்டன.

[ 23 ]

அர்ஜுனன் கூடாரத்திற்குள் வேட்டையாடிக் கொணர்ந்த பறவைகளை சிறகு களைந்துகொண்டிருந்தபோது முதியபீதர் உள்ளே வந்தார். சிறகுபோன்ற கைகள் கொண்ட ஆடையை அணைத்துக்கொண்டு அவனருகே அமர்ந்தார். அவன் அப்போதுதான் அவரைக்கண்டு வணங்கினான். அவர் அவனை சுருங்கிய கண்களால் நோக்கி “நீங்கள் பேசிக்கொண்டு வருவதை கண்டேன்” என்றார். அவர் சொல்வதென்ன என அவன் உடனே புரிந்துகொண்டான். பேசாமல் தலையசைத்தான்.

“நான் உன்னிடம் எச்சரித்தேன்” என்றார் அவர். “நான் அத்துமீறவில்லை” என்றான் அவன். “எல்லைகள் மீறப்பட்டுவிட்டன. அதை நெடுந்தொலைவிலேயே எவரும் காணமுடியும்” என்றார். “ஆண்கள்கூட மறைத்துக்கொள்ளமுடியும். பெண்களின் உடல் அனைத்தையும் காட்டுவது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இல்லை, இம்முறை தெளிவாகவே நீ யார் என அவளுக்குக் காட்டினாய்” என்று அவர் சொன்னார். அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன்றி வேறல்ல அது.”

“இங்கு எவரும் நீ யாரென அறிந்திருக்கவில்லை, நான் அறிவேன். மும்முறை நான் கங்கையினூடாக பயணம்செய்திருக்கிறேன்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “ஏன் இக்கோலத்தில் இருக்கிறாய் என நான் அறியேன். ஆனால் நீ எங்கும் உன்னை ஒளித்துக்கொள்ள முடியாது. விண்ணவனாகிய உன் தந்தையின் பெருவிழைவை உடல் முழுக்க கொண்டவன் நீ. உன் விழிகளைக் கண்ட பெண்கள் அக்கணமே அனல்கொள்வார்கள்” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லும் இன்றியே அந்தப் பெண் அதை அறிந்துகொண்டிருப்பாள் என நான் உணர்ந்தேன்.”

“ஆம், அவள் கூரியவள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, அக்குலத்திலேயே கூரியவள்தான் உன்னை நோக்கி வருவாள். வான்நாரைகளில் விசைமிக்கதே முதலில் பறக்கும்” என்று அவர் சொன்னார். “அவளில் எழுவது இக்குடியின் எல்லைகளை மீறவிரும்பும் ஒன்று. அது அவள் குருதியில் நுரைக்கிறது. அது மிகமெல்லிய விழைவாக தன்னை வெளிப்படுத்தினால் இனிய நகையாகவும் அழகிய சொல்லாகவும் எழலாம். ஆனால் உள்ளே இருப்பது காலப்பெருக்கை நிகழ்த்தும் விசை. அதையே ஆற்றலன்னை என வழிபடுகின்றனர். அவளுக்கு கை ஆயிரம். நா பல்லாயிரம். விழி பலப்பல ஆயிரம். பெருங்கடல் அலை என வந்து உன்னை அவள் இழுத்துச் சுருட்டிச் சென்றுவிடுவாள்.”

அர்ஜுனன் “ஆம், அவளுடைய விழைவை நான் உணர்கிறேன்” என்றான். “பெண்கள் அனைவரிலும் விழைவு இருக்கும். ஆனால் அவை அஞ்சி கட்டுக்குள் நின்றிருக்கும். அவர்களில் ஆற்றல்மிக்கவளே பெருவிழைவை அடைவாள். அவளை அக்கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடுக்கவும் முடியாது” என்றார் பீதர். “மீறத்துணிபவள் மீறும் தகுதிகொண்டவள் என்பதை ஒவ்வொருமுறையும் காண்கிறேன், இளைய பாண்டவனே.”

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நான் அதை விரும்பவில்லை” என்றான். “நாங்களும் விரும்பவில்லை” என்றார் அவர். “நீ அதை வென்றுசெல்லக்கூடும். அதைப்போன்ற பலவற்றைக் கண்டவனாக இருப்பாய். ஆனால் நாங்கள் இங்கே நெடுங்காலமாக அமைத்துள்ள இந்த வணிகவலை அறுபடும். மீண்டும் அதை நெய்து சீரமைக்க நெடுங்காலமாகும்.” அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க! கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு!” என்றார். “அவ்வண்ணமே” என்று அர்ஜுனன் எழுந்து தன் வில்லம்பை எடுத்துக்கொண்டான்.

அவன் கடைக்குச் சென்று தன் முதன்மை வணிகரிடம் ஏனென்று விளக்காமல் முதுபீதரின் ஆணையை மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். தன் பொதியைக்கூட எடுத்துக்கொள்ளாமல் மலைப்பாறைகளின் அரணைக் கடந்து அப்பால் சென்றான். அவன் கிளம்பிச் செல்வதை வேறு எவரிடமும் சொல்லவில்லை. மூடுபனி எழத்தொடங்கியிருந்த பிற்பகல். கடைகளை மூடி பொருட்களை எடுத்து தொகுத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.  கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை கொண்டுவைத்துக்கொண்டிருந்தனர் சிலர். அவன் பனித்திரைக்குள் மறைந்தபோது எவரும் நோக்கவில்லை. உருளைக்கற்கள் பரவிய சேற்றுச்சாலையில் அவன் தன் முன் தெரிந்த சில சில எட்டுகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.

சாலை வளைவு ஒன்றைக் கடக்கையில் மிகமெல்லிய ஓசையிலேயே அவன் படைக்கலங்களை கேட்டுவிட்டான். உடல் அசைவற்று நிற்க இடக்கைமட்டும் வில்லை தூக்கியது. “அசையாதே” என ஓர் ஒலி பனிக்கு அப்பால் கேட்டது. பட்டுத்திரையில் ஓவியமென கின்னரஜன்யன் ஒருவன் எழுந்துவந்தான். அவன் விழிகளை அவன் சந்தித்தபின்னரே அவனை மானுடனாக எண்ண முடிந்தது. மேலும் நால்வர் சித்திரமெனத் தோன்றி சிலையென முப்புடைப்பு கொண்டனர். முன்னால் வந்தவன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் “மானுடனே, உன்னை முன்னரே எச்சரித்திருக்கவேண்டும். இங்கு வரும் எவரும் அறிந்தபின்னரே வருவார்கள் என எண்ணியிருந்தோம். பிழையாயிற்று” என்றான்.

அர்ஜுனனின் கண்களையே பிறர் நோக்கி நின்றனர். அவர்களின் கைகளில் கூர்முனை கொண்ட வேல்கள் பாயக்காத்து நின்றிருக்கும் நாகங்களென நீண்டு அசைவற்று நின்றன. “எங்கள் குலமகளிடம் நீ பேசிக்கொண்டிருப்பதை பலர் நோக்கினர். உன்னவர் பலர் வியந்துமிருப்பர். உன் பிணம் இங்கு கிடப்பது அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலென அமையும்” என்றபடி அவன் தன் வேலை தூக்கினான்.

அர்ஜுனனின் விழிகள் வலப்புறம் அசைய அவ்வசைவால் ஈர்க்கப்பட்டு அவன் தோழர்களின் நோக்கு வலப்புறமாக ஒருகணம் சென்று மீள்வதற்குள் அவன் வேல் முனையைப்பற்றி அதை பின்னால் உந்தி அவ்வீரர்தலைவனின் தோளுக்கு கீழிருந்த நரம்புமுடிச்சைத் தாக்கினான். அவன் வலிப்பு கொண்டு கீழே விழுவதை நோக்கி பிறர் கண்கள் சென்று மீள்வதற்குள் அவர்களின் உயிர்நாண் இணைவுகளில் அவன் வேல் முனை பதிந்து மீண்டது. ஈரப்பொதி மண்ணில் பதியும் ஓசையுடன் அவர்கள் விழுந்தனர்.

வலிப்பு கொண்டு வாய்நுரை வழிய கைகால்கள் மண்ணிலிழுபட கிடந்தவர்களை அவர்களின் ஆடைகளாலேயே கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று ஒரு மரத்தடியில் நீண்டுநின்றிருந்த பாறைக்கு அடியில் கிடத்தினான். அவர்களின் தலைவன் நினைவுமீண்டு “உன்னை விடமாட்டோம். உன் தலையை எங்கள் தெய்வங்களுக்கு முன் படைப்போம்” என்றான். பிறரும் நினைவுமீண்டனர். அவர்களின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நின்றான். பின்னர் திரும்பி ஊர் நோக்கி சென்றான்.

அவர்கள் திகைத்து அவன் செல்வதை நோக்கிக்கிடந்தனர். தலைவன் கட்டுகளை அவிழ்த்து எழும்பொருட்டு உடலை உந்தி திமிறினான். அவன் எழக்கூடுமென்ற ஐயமே இல்லாதவனாக திரும்பி நோக்காமல் அர்ஜுனன் நடந்தான். அவன் முன் பாதை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது. அவன் காலடியோசை அதில்பட்டு அவன்மேலேயே வந்து பெய்தது. ஊர் எல்லைக்குள் அவன் நுழைந்தபோது தோல்கூடாரங்கள் அந்திமுகில்கள் என உள்ளே எரிந்த அனல் தெரிய சிவந்திருந்தன. வெளியே எவருமிருக்கவில்லை.

அவன் அவள் இல்லத்தை அடைந்து சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் வில்லின் நாணில் ஒரு கல்லைவைத்து அவள் மூடிய சாளரத்தின் கதவின் மேல் எய்தான். மூன்றுமுறை எய்தபோது அக்கதவு திறந்தது. புதரிலிருந்து மலர்க்கழி ஒன்றை அவன் ஒடித்து வைத்திருந்தான். அவள் மார்பில் அந்த மலர்க்கணை சென்று விழுந்தது. திகைத்து பின்னடைந்து அதை எடுத்து நோக்கியபின்  கதவைத் திறந்தபடி சற்றுநேரம்  காத்திருந்தாள். பின்னர் கதவு மூடியது.

பின்கட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ஜுனன் இல்லத்தின் பின்பக்கம் சென்று அவள் வெளியே வந்து சுற்றிலும் பார்ப்பதை கண்டான். பனியிலிருந்து எழுந்து அவள் முன் சென்று நின்றான்.  அவள் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள். கன்னங்களில் குழிவிழ  சிரித்தாள். செந்நிற ஒளியுடன் அவளுக்குப் பின்னால் திறந்திருந்த கதவு அவ்வில்லமும் சிரிப்பதைப்போல தோன்றவைத்தது.

அவன் அருகே சென்றபோது நாணம் கொள்ளவோ விழிகளை விலக்கிக்கொள்ளவோ செய்யவில்லை. அவன் அவளை அணுகி இடையை வளைத்து அவளைப் பற்றி தன் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டு அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி முத்தமிட்டான். அவளை உண்ணவிழைபவன்போல அவளில் புகுந்து திளைப்பவன்போல அவளுடனான தொலைவை தவழ்ந்து தவழ்ந்து கடப்பவன் போல.

அவள் விடுவித்துக்கொண்டு “உள்ளே வருக!” என்றாள். “யார் இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன?” என்று அவள் அவன் காதில் அனல்படிந்த குரலில் சொன்னாள். உள்ளே அனல்சட்டியின் செவ்வொளி பரவியிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் பதிக்கப்பட்டிருந்த மென்மயிர்த் தோல்பரப்பு அவ்வொளியில் அனல்போலத் தெரிந்தது. அவள் அவனை தன் உடலால் வளைத்து கவ்விக்கொண்டாள். காமம் கொதித்த அவள் மூச்சை அவன் செவிகள் உணர்ந்தன. அவள் உருகும் மணத்தை மூக்கு அறிந்தது. மென்மயிர்த்தோல் பரப்பிய மஞ்சத்தில் அவளுடன் அவன் அமர்ந்தான். உடல்களால் ஒருவரை ஒருவர் இறுதிக்கணத்திலென பற்றிக்கொண்டனர்.

பின்னர் நெடுநேரமென உணர்ந்து விழிப்புகொண்டு எழுந்தபோதுதான் அவன் அவள் பெயரை கேட்டான். “பார்வதி” என்று அவள் மறுமொழி சொன்னாள். அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை நோக்கினான். அதிலிருந்த அனல் அணைந்து கனிவு நிறைந்திருந்தது. “நான் யார் என நீ கேட்கவில்லை” என்றான். “பெயரையும் குலத்தையும்  மட்டும்தானே இனி அறியவேண்டியுள்ளது?” என்றாள் அவள்.

வெண்முரசு விவாதங்கள்