கிராதம் - 59
[ 22 ]
அர்ஜுனன் வெளியே சென்றதுமே மாதலியை பார்த்தான். அவன் நடை தயங்கியது. மாதலி இயல்பாக அவனருகே வந்து “வருக!” என்றான். அவனிடம் தன் அறைக்கு மீள விரும்புவதாகச் சொல்ல எண்ணினான் அர்ஜுனன். ஆனால் அதை அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று தயங்கினான். அவன் “நீ சொன்னவற்றை நான் புரிந்துகொள்கிறேன். நீ பிறிதொன்றை சொல்லமுடியாது” என்றான். அவனை நோக்கி சொல்கொள்வதற்குள் சிரித்தபடி “இந்திரகீலத்திற்கு ஏறி வரும் வழியில் நீ சந்தித்த யட்சியும் நானே” என்றான் மாதலி.
அர்ஜுனன் திகைப்புடன் “நீங்கள்…” என்றதும் அவன் புன்னகைத்து “இங்குள்ளது ஒரே உள்ளம்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “என் உள்ளத்தை எண்ணி நான் வியந்துகொண்டிருக்கிறேன், தந்தையே. என்னால் என் தோழரை விலக்கி எண்ணவே முடியவில்லை. அவர் என்னில் ஒரு பகுதி. அதை நானே ஒவ்வொரு தருணத்திலும் வியப்புடன் அறிந்துகொண்டிருக்கையில் பிறரிடம் சொல்லிப் புரியவைப்பது எளிதல்ல. முக்காலமும் பதினான்குலகமும் அறிந்த தேவர்தலைவரிடம்கூட” என்றான்.
மாதலி நகைத்து “அவரும் அறிவார். ஆனாலும் அவர் சொல்லியாகவேண்டும் என விரும்புகிறார்” என்றான். மேலும் சிரித்து “மைந்தனுக்கு என ஓர் உள்ளமும் ஆளுமையும் இருக்கலாகும் என்பதைப்போல தந்தையரால் ஏற்கமுடியாதது பிறிதில்லை. வளர்ந்தெழும் மைந்தரைக் கண்டு தந்தையின் உள்ளம் தாவித்தழுவ முனைகிறது. மறுகணமே தயங்கி பின்னடைகிறது. ஏனென்றால் அவருக்குள் வாழும் அழியாத ஒன்று அவர் என்னும் அக்கூட்டை உதறி அக்கணமே புத்தம்புதிய கூண்டில் குடியேற விழைவதை அவர் அறிகிறார். அவரை அச்சுறுத்துவது அவ்விழைவுதான்” என்றான்.
அர்ஜுனன் “நான் என்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன், தந்தையே” என்றான். “ஏன் என்னால் இளைய யாதவரை விட்டு அகலமுடியவில்லை? அவருடைய ஆழம் எனக்கு தெரியும். ஒவ்வொருநாளும் கடலலைமேல் ஆடுபவர்கள் உள்ளூர ஆழியென்றால் என்னவென்றும் அறிந்திருப்பார்கள். முடிவிலியென அதை அறிந்திருப்பதே நுரைமட்டுமே என அலைகளை எண்ணி அவர்கள் மகிழ்வுகொண்டாடச் செய்கிறது. ஒவ்வொன்றிலும் முடிவிலியை அறிந்து அவ்வறிதலை ஒத்திப்போட்டு அன்றாட கணங்களில் திளைப்பது மானுட உள்ளத்தின் விந்தைகளில் ஒன்று.” அவன் அந்த ஒப்புமை வழியாக தன் சொற்களை கண்டுகொண்டான். அதையே விரித்து கருத்துக்களாக ஆக்கினான்.
“முழுக்க அறிந்தபின்னரே மீன்கொள்ளவும் கடலோடவும் ஆழியிலிறங்க வேண்டுமென்று எவரும் எண்ணுவதில்லை. அதை துடுப்புகளால் கிளறவும் பாய்விரித்து அதன்மேல் தாவவும் தயங்குவதில்லை. அதன் அச்சுறுத்தும் ஆழம் அறியப்பட முடியாதென்பதனாலேயே கணம் கோடிமடங்கெனப் பெருகிக்கொண்டிருப்பது. ஆனால் ஒருமுறை கைகூப்பி வணங்கிவிட்டு அதன்மேல் பாய்கின்றனர் மானுடர். ஏனென்றால் அத்தனை பெரிய ஒன்று அது பெரியதென்பதனாலேயே எளியவர்கள்மேல் அளிகொண்டிருக்கவேண்டும், காத்தருளவேண்டும். அவ்வாறு நம்புவதன்றி மானுடருக்கு வேறு வழியில்லை.”
“தந்தையே, சற்றுமுன் நான் வரவிருக்கும் பேரழிவை கண்முன் கண்டேன். என் உள்ளுறைந்த அனைத்தும் பதறி எழுந்தன. இறந்திறந்து எழுந்தேன். இனி நான் அடைவதற்கொன்றுமில்லை. ஆம், பேரழிவு. ஆறாத்துயர். அழியாப்பழி. இறுதியில் மாற்றிலாத வெறுமை. பிறிதொன்றுமில்லை. ஆனால் மறுகணம் என் உள்ளம் எண்ணியது, அதை அவர் அறியமாட்டாரா? தான் ஓட்டும் பசு அடுத்தகணம் வைக்கப்போகும் காலடியை முன்பே அறிபவர் அவர் என்கிறார்கள். இதை அறிந்தே ஆற்றுகிறார் என்றால் அவருக்கு அதற்குரிய நோக்கங்கள் உள்ளன. அதை நான் எப்படி அறியமுடியும்?”
“அவரளவே ஆகாமல் அவர் அறிந்ததை நான் முற்றறிய இயலாது. எறும்பும் பருந்தும் உலகைப்பற்றி உரையாடிக்கொள்ள முடியுமா என்ன?” என்றான் அர்ஜுனன். “அவர் என் அரசன். அரசனின் எண்ணங்களை ஆராயும் பொறுப்பு படைவீரனுக்கில்லை. வில்லேந்தி செருகளம் சென்று கொன்று நின்று மடிவதொன்றே அவன் கடன். அதை மட்டுமே நான் செய்யவிருக்கிறேன்.”
சொல்லச்சொல்ல அவன் இயல்பானான். முகம் தெளிய குரல் நேர்பட “சென்று என் தந்தையிடம் சொல்லுங்கள். அவர் காலடிகளை என் சித்தத்தில் சூடியிருக்கிறேன். ஆனால் இளைய யாதவருக்குரியது இப்பிறவி. அதை இளைய யாதவரே மறுத்தால்கூட நான் மாறமுடியாது” என்றான். மாதலி புன்னகை புரிந்தான். அதைக்கண்டு அர்ஜுனனும் புன்னகைகொண்டான். “ஆம், முதுசெவிலியர் கூற்று ஒன்றுண்டு. ஆடை என்றால் அகலலாம். தோளில் எழுதிய தொய்யில் என்றால் அழியலாம். பச்சை குத்தப்பட்ட ஓவியம் சிதையில் தானும் எரியும்.”
மீண்டும் விழிகள் கூர்மைகொள்ள “தந்தையே, சற்று முன் ஒன்றை உணர்ந்தேன். ஒரு பொருந்தா எண்ணத்திவலையென வந்துசென்றது அது. உண்மைகள் அவ்வண்ணமே நம்மை எண்ணியிராப்பொழுதில் ஏதென அறியாது தொட்டுச்செல்லும் போலும். அவரை நான் ஒருநிலையிலும் பிரியமுடியாதென்று என் ஆழம் முதலில் உணர்ந்தது நான் அவருடன் போரிட்டபோது” என்றான் அர்ஜுனன். “அப்போரை நான் எனக்குள் நிகழ்த்துவது என்றே என் அகம் உணர்ந்தது. என்னருகே எழுந்த அவர் விழிகள் என் விழிகளென்று திடுக்கிட்டேன். அவர் எழுந்தகன்றபோது அர்ஜுனன் விழுந்துகிடப்பதை இளைய யாதவர் என நின்று நான் கண்டேன்.”
மாதலி “நீங்கள் ஒன்றே” என்றான். “உன் தந்தைக்கு நீ எதையும் உரைக்கவேண்டியதில்லை. அவர் அறியாத எதையும் நீ எப்போதுமே எண்ணியதில்லை.” அர்ஜுனன் அவனை நோக்கி “ஆனால் அவரிடமும் என் மூத்தவரிடமும் சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை” என்றான். “நீ அவைபுகுந்து உணர்ந்ததை சொல்லலாம், மைந்தா” என்றான் மாதலி. “இல்லை, அவையில் நான் அவரை எதிர்த்தேன் என்றாகக்கூடாது” என்ற அர்ஜுனன் “என்னை என் அரண்மனைக்கே கொண்டுசெல்லுங்கள், தந்தையே” என்றான்.
மாதலி “இத்தருணத்தில் அவையை நீ மறுப்பதே மேலும் மீறலென பொருள் கொள்ளப்படும்” என்றான். “இல்லை, நான் அவையை சந்திக்க விழையவில்லை. என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சியிருக்கவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னிடம் இப்போது சொன்ன இதே சொற்களை அவர் அவையில் சொல்வாரென்றால் நான் நேர்நின்று எதிர்ச்சொல் எடுக்க நேரும். நான் இப்படியே பழிகொண்ட மைந்தனாக புவிமீள்கிறேன். அதுவே என் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!”
மாதலி “மைந்தர் ஏதேனும் ஒரு தருணத்தில் தந்தையை எதிர்த்து நின்றாகவேண்டும். அக்கணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக கண்டடைகிறார்கள். அது இந்த அவையில் நிகழட்டும். நீ எடுக்கும் சொல்லென்ன என்பதும் அவர் வைக்கும் எதிர்ச்சொல் என்ன என்பதும் அத்தருணத்திலேயே இருவருக்குள் இருந்தும் உருவாகி எழுந்துவரும். அதற்கு முந்தைய கணம் வரை எத்தனை எண்ணினாலும் அவற்றை அறியமுடியாது. அது நிகழ்ந்தபின் இருவருமே விடுதலை அடைவீர்கள்” என்றான்.
ஒருகணம் அர்ஜுனன் உடல் தத்தளிக்க நின்றான். பின்னர் தேர்த்தட்டில் ஏறி அமர்ந்து “என்னை அழைத்துச்செல்லுங்கள், தந்தையே” என்றான். மாதலி மாறாபுன்னகையுடன் “நன்று” என்றபின் தேர்த்தட்டில் ஏறிக்கொண்டான். புரவிகள் உயிர்ப்படைந்து குளம்புகள் நீந்த அமராவதியின் தெருக்களினூடாக பாய்ந்தோடின. அவன் ஒழுகும் மாளிகைகளை நோக்கி விழிவிரித்து உடல்தளர்ந்து அமர்ந்திருந்தான். மாதலி அதன்மேல் ஒரு சொல்லும் சொல்லவில்லை.
மாளிகை வந்ததும் மாதலி கடிவாளங்களை இழுத்தான். புரவிகள் செருக்கடித்து உடல் நெளித்து நின்றன. அர்ஜுனன் இறங்கி “விடை, தந்தையே” என்றான். “நன்று” என்றான் மாதலி. “நான் உடனே கிளம்புகிறேன். இனி ஒருகணமும் இங்கிருக்க விழையவில்லை. தந்தையிடம் சொல்லிவிடுங்கள்” என்றபின் அவன் மாளிகைக்குள் நடந்தான்.
[ 23 ]
அர்ஜுனன் மாளிகையைவிட்டு வெளியே வந்ததும் முகமுற்றத்தில் மயிலிருக்கை கொண்ட பொற்தேர் வந்து நிற்பதைக் கண்டான். முதல்படியிலேயே தயங்கி நின்றான். பீடத்தில் அமர்ந்திருந்த ஊர்வசி எழுந்து அவனை நோக்கி புன்னகை செய்தபடி ஆடையை கையால் பற்றி ஒதுக்கி படிகளில் கால்வைத்து இறங்கினாள். குழலைத் தள்ளி பின்னாலிட்ட அசைவில் மயில் எனச் சொடுக்கி நிமிர்ந்த தலையுடன் அவனை நோக்கி வந்தாள். விரித்திட்ட குழல்கற்றைகள் தோளில் அலையடித்தன.
பெருமூச்சுவிட்டபடி அவன் அவளை நோக்கி நின்றான். அவனை அணுகி “அவைக்களத்திற்கு செல்கிறீர்களா?” என்றபின் திரும்பி “தேர் எங்கே?” என்றாள். “வரச்சொன்னேன்” என்றான். அவன் கண்களைப் பார்த்ததுமே அவள் புரிந்துகொண்டாள். “கிளம்புகிறீர்களா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றாள். முகம் ஏமாற்றத்தை காட்டியது. “இங்கு எந்தை அருள்கொள்ள வந்தேன். சந்தித்து வணங்கிவிட்டேன்.”
அவள் “இன்று உங்களுக்காக அவைகூடுவதாக அல்லவா அறிந்தேன்?” என்றாள். அவன் சீற்றத்துடன் “அறிந்தாய் அல்லவா? பிறகென்ன?” என்றான். அவள் அவன் கண்களை நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் நோக்கை விலக்கி “நான் கலந்துகொள்வதாக இல்லை. புவிமீள்கிறேன்” என்றான். அவள் “அது நன்றல்ல. உங்கள் தந்தையை நீங்கள் உதறக்கூடாது” என்றாள். “நீ அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான் அர்ஜுனன்.
“நன்று, நான் ஒன்றும் சொல்லவில்லை” என்றாள். கனிந்த புன்னகை விரிய “சற்றுநேரம் நான் தங்களுடன் பேசமுடியும் அல்லவா?” என்றாள். அர்ஜுனன் அவளுடைய அந்தச் சிரிப்பால் உளமடங்கினான். ஒரே கணத்தில் சிறுமியாகவும் அன்னையாகவும் மூதன்னையாகவும் ஆகும் வல்லமைகொண்டவர்கள் பெண்கள் என நினைத்துக்கொண்டான். புன்னகையுடன் “சற்றுநேரம்தான், நெடுநேரம் அல்ல” என்றான்.
அவள் சிறுமியென்றாகி “நான் உங்களிடம் ஒன்றை காட்டும்பொருட்டு வந்தேன்… அதை காட்டவேண்டும் என்று நேற்றுதான் தோன்றியது…” என்று சிரித்தாள். “காட்டட்டுமா?” என்று சொன்னபோது அவள் உடலில் எழுந்த துள்ளலைக்கண்டு மெல்லிய ஏளனத்துடன் “சரி” என்றான். “இங்கே காட்டமுடியாது. இது பிறர் பார்க்குமிடம். நாம் தனியறைக்கு செல்வோம்” என்றாள். அவன் கையைப்பற்றியபடி “வருக!” என்றாள். அவன் நடை தயங்க அவளே அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.
அவர்கள் இடைநாழிக்குச் சென்றதும் அவள் “நாம் அங்கே செல்வோம்” என்று அவன் கையைப்பற்றி கூடம் நோக்கி சென்றாள். பின்னர் நின்று “வேண்டாம்… இங்கும் கந்தர்வர்களின் நோக்கு இருக்கும்… வருக!” என இழுத்துக்கொண்டு சிறிய அறைக்குள் சென்றாள். “அமருங்கள், இளைய பாண்டவரே” என அவள் தோளில் கையை வைத்து அழுத்தி பீடத்தில் அமரச்செய்தாள். அவள் மேலாடை நழுவி வாழையிலைக் குருத்தின் நடுஓடைபோன்ற மென்மையுடன் இளமுலைகளின் இடைவெளி தெரிந்தது.
அவள் ஆடைதிருத்தவில்லை. அவனருகே நெருங்கி அமர்ந்தபடி தன் உள்ளங்கையை விரித்தாள். அதில் ஒரு சிறிய கூழாங்கல் இருந்தது. “இது என்ன?” என்றாள். “கூழாங்கல்” என்றான். சிரித்து “இல்லை” என்றாள். அருகணையும்போது எப்போதும் பெண்ணின் தோல்மென்மைதான் ஆணின் சித்தத்தை நிறைக்கிறது. அகலே தெரியும் தோல் பட்டென தளிரென நீர்ப்பரப்பென மென்மையும் ஒளியும் கொண்ட ஒன்று. அருகணையும்போது மென்மயிர்ப்பரவலும் மெய்ப்புகொண்ட புள்ளிகளும் மச்சங்களும் தோல்வரிகளும் கொண்டு மங்கலடைகிறது. ஆனால் அதுவே உயிர்விழைவை கிளர்த்துகிறது. அதன் மென்மணம், ஈரம், அசைவுகள். அனைத்தையும்விட முதன்மையாக அது உணர்வுகளை சொல்லும் முறை. தோல் தன் வண்ணங்களாலேயே நாணுகிறது, தயங்குகிறது, காமம் கொண்டு நெகிழ்கிறது, சிரிக்கிறது, சினக்கிறது.
அவள் “சொல்லுங்கள்!” என்றாள். அவன் மூச்சு வெம்மைகொள்ள “பாம்பின் முட்டை” என்றான். இல்லை என்று அவள் கையை இழுத்து மூடி மீண்டும் திறந்து “நன்றாக பாருங்கள்!” என்றாள். உதடுகள் அண்மைநோக்கில் நுண்சுருக்கங்கள் கொண்டவை. நனைந்த மலர்போல. நீரிலூறிய செம்பட்டுபோல. வெண்பற்களின் கீழ்நுனிகளின் ஈரம். கண்கள் அணிந்த மை சற்றே கரைந்து கீழிமைகளில் படர்ந்திருந்தது. விழிவெண்குமிழில் செந்நிறக்கோடுகள். எந்த மலரின் இதழ் இது?
“சொல்லுங்கள்!” என அவள் அவனுக்கு மட்டுமே என சொன்னாள். கழுத்தில் நீல நரம்பு ஒன்று கிளைகொண்டு இறங்கியது. தோள் எலும்பின்மேல் நீரலை என ஒரு வளைவு. கழுத்தின் கோடுகள் ஏன் மென்மை மென்மை என்கின்றன? “தெரியவில்லை” என்று அவன் சொன்னான். “நீங்கள் நன்கறிந்ததுதான்” என்றாள் அவள். உடல் உடல் உடல். உடலைப்போல முற்றறியமுடியாத ஆழம்கொண்டது பிறிதில்லை. உடலென்றான வடிவுக்குள் இருந்து அந்த ஆழம் தன்னை வெளிப்படுத்த தவித்துக்கொண்டிருக்கிறது. உடல்போல ஈர்ப்பதும் உணர்த்துவதும் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு அணுவும் பொருள்கொண்டது உடல். மானுடமொழி சொல்லிச்சொல்லி கடந்து செல்லாது நின்றிருப்பவை இரண்டே. உடலும் இறையும்.
“என்ன பார்வை? இதைப் பார்த்து சொல்லுங்கள்!” என்றாள். சிணுங்கலாக உடலை உலைத்து “சொல்லுங்கள்!” என்றாள். மரங்களில் மலர் என உடல்களில் கன்னி. கன்னங்களில் மெல்ல இறங்கியிருக்கிறது பூனைமயிர். பின்கழுத்தில் பிசிறியிருக்கிறது. மேல்உதட்டில் நுரையென படர்ந்திருக்கிறது. புருவங்களென நிரைகொண்டிருக்கிறது. ஓவியங்களில் ஒருபோதும் பெண்ணுடலின் தன்னியல்பான கட்டிலாமை வெளிப்பட்டதில்லை. இந்த மயிர்ப்பரவலுக்கு என்ன ஒழுங்கு? இது இளங்கருமுகில். இது முதல்மழை மென்புல். ஓவியங்கள்தான் எத்தனை செயற்கையானவை. கட்டிலாமை. கட்டில்லாமையென்றால் எதன் கட்டு? விழிகளென்றாகி இவ்வுடல்தொட்டு பிறிதொன்றை வனைய நினைக்கும் என் எண்ணத்தின் எல்லை அது. ஏன் அது இத்தளிர்மையிலிருந்து ஓர் ஓவியத்தை அள்ளி எடுக்கிறது?
“இது ஒரு விழி” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றான். அவள் கையில் அந்தக் கூழாங்கல் விழியென மின்னத் தொடங்கியது. “எவர் விழி?” என்று அவள் மீண்டும் கேட்டாள். ஓசையின்றி உள்ளங்களே உரையாடிக்கொள்கின்றனவா? தோல்பரப்புகள் விழிகளென்றாகி ஒன்றையொன்று நோக்கி வியந்தமைந்துள்ளனவா? “ம்?” என்றான். “சொல்லுங்கள், எவர் விழி?” விரிந்து சுருங்கின உதடுகள். ஆண் எவனும் பெண் உதடுகளிலிருந்து தப்பியதில்லை. ஏனென்றால் உதடுகள் உடலுக்கு வெளியே தெரியும் உள்ளுடல். பசுங்குருதித் தசை. முத்தமிடும் உதடுகள் இணையும்போது உடல்கள் உருகி ஒன்றாகின்றன. தவித்துத் தேடி கண்டுகொண்டு தழுவிக்கொள்கின்றன நாக்குகள். உடலுக்குள் கரந்த ஒன்றின் ஆறாத்தவிப்பாகிறது நா. நாவும் உதடும் அதன் விடாய் எரியும் மலர்கள். நாகக்குழவிகளாகின்றன விரல்கள். உடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை உடலில் தேடுகின்றன. உடலில் அன்றி அதை எங்கும் தேடவும் இயலாது. உடலென்று தன்னை வெளிப்படுத்தி உடலென்ற அரண்சூடி அமர்ந்திருக்கிறது போலும் அது. அரண்களெல்லாம் வெளிப்பாடுகள் அல்லவா? வெளிப்பாடுகள் அனைத்தும் அரண்களும் அல்லவா?
அவனுள்ளிருந்து அவன் இறங்கி அப்பால் நின்று அக்காட்சியை நோக்கி இருந்தான். இரு உடல்கள் ஒன்றை ஒன்று அணுகிக்கொண்டிருந்தன. இரு நீரோடைகள் என. “இது ஒரு சிறுவனின் விழி” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். “அவனுக்கு ஒரு வயது… அவன் சொல் தெளிந்துகொண்டிருந்தது, விழிக்கூர் மின்னத்தொடங்கியிருந்தது.” அவன் “யார்?” என்றான். “அஸ்தினபுரியின் பாண்டுவின் இளையமகன். விழிச்சுடரோன் என அவனை அழைத்தனர். நோக்கிலேயே வெல்லும் விஜயன்.” அவன் அக்கணமே அவ்விழியை அடையாளம் கண்டான். குனிந்து அவ்விழிகளை முன்பு நோக்கியிருக்கிறேன். அப்போது எவராக இருந்தேன்?
“அவன் நீராடச்சென்றான்” என்று அவள் சொன்னாள். “சேடியரில் ஒருத்தி அவனை தன் இடையில் வைத்திருந்தாள். பெண்டிர் அப்படித்தான், . இளமைந்தரை இடைசூடுவது அவர்களுக்கு உவகையளிப்பது. அது காட்டெரியின் கனல்துளி என அவர்களின் ஆழம் அறியும். காடுண்ணும் பெரும்பசியை கையிலெடுக்க முடிவதன் உளக்கிளர்ச்சியே அவர்களை இயக்குகிறது. குழவியென்றும் காமனென்றும் ஆகும் விழிகளின் முடிவின்மை உள்ளத்தை ஊசிமுனையாக்குகிறது.” அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். “ஆம், நான் அனைத்தையும் காண்கிறேன்” என்றான். அவ்விழிகளையும் அதை நோக்குபவனையும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். எத்தருணம் இது? வாழ்தருணங்கள் ஓரிடத்தில் ஒருகாலத்தில்தான் நிகழ்கின்றன என்று எண்ணுவதுதான் மானுடனின் மாயையா?
சதசிருங்கத்தின் ஏரியின் நீர்மணம். அலையொளியை அணிந்த கரைமரங்கள் நடனமிட்டன. அவற்றின் நிழல்கள் சிதறிச்சிதறி கரைந்து உருவழிந்து மீண்டன. ஏவல் பெண்களும் முனிவர்மகளிரும் நீந்திச் சிரித்து களித்தாடிக்கொண்டிருந்தனர். உடலுடன் ஒட்டிய ஆடைகள் அவர்களின் அசைவுகளில் இழுபடும் ஒலி. நீர்க்கொப்புளங்கள் ஆடைகளுக்குள் எழுந்தன. வாழைத்தண்டுத் தோள்களில் வழிந்த நீர். முலையிடை மென்னோடைகளில் குவிந்திறங்கிய நீர். ஆடைக்குள் உந்திச்சுழி. “நான் உங்கள் அருகே வந்தேன்” என்றாள். “நீயா?” என்றான். “ஆம், அவளுடலை அப்போதுதான் சூடினேன்.” மென்மணம். தசைமணம். குருதிமணம். அந்த மணத்தை அறியும் ஆழ்விலங்கு. அதன் தனிமை.
“எப்போது?” என்றான். “உங்கள் நோக்கு வந்து அவளைத் தொட்ட அக்கணம்” என்றாள். “நான் உங்கள் அருகே வந்தேன். குனிந்து படிகளில் பித்தளைப்பேழையில் இருந்த ஈஞ்சைப்பட்டையை எடுத்து உடல்தேய்க்கலானேன். ஆடைநெகிழ அதை முலைகளுடன் அழுத்திப் பற்றிக்கொண்டேன். என் உடல் உங்கள் விழிகளால் தீட்டப்பட்ட ஓவியமாக விரிந்து ஒளிகொண்டது. அவ்வுடலை நானே தொட்டுத் தொட்டு அறிந்தேன். செங்குழம்பு பூசினேன். திரும்பி நீரில் பாய்வதற்கு முன் ஒருகணம் உங்கள் விழிகளை நோக்கினேன். கூர்மீசையும் மாறா ஏளனப் புன்னகையும் கொண்ட வில்விஜயனை கண்டுவிட்டேன். நீர்ப்படலம் பிளந்து உள்ளே அமிழ்ந்தபோது என் உடல் விம்மிக்கொண்டிருந்தது. முலைக்கண்கள் கதவுக்குமிழ்களென குளிர்ந்து இறுகியிருந்தன.”
“ஆம்” என்றான். “அவனை நான் இங்கிருந்தே காண்கிறேன். அவன் உடல் விதிர்ப்புகொள்கிறது. குளிர்கொண்டவன்போல ஒடுங்குகிறான். பின் விதும்பி அழத்தொடங்குகிறான். செவிலியன்னை மாலினி அருகே வந்து என்ன என்று கேட்கிறாள். நீர்ப்பரப்பைச் சுட்டிக்காட்டி அவன் அழுகிறான். மூழ்கிய அப்பெண்ணும் எழுந்து முகம் வழிந்த நீரை கூந்தலுடன் விலக்கி விந்தையாக நோக்குகிறாள். அன்னையால் அள்ளப்பட அவள் கொழுத்த தோள்களில் முகம்புதைத்து அவன் விம்மிக்கொண்டிருக்கிறான்.” அவள் “ஆம், நான் அதைப் பார்த்தபடி அருகிருந்த கற்சிலையின் புன்னகையாக இருந்தேன்.”
அவன் “நீரில்… நீரில்…” என்றான். செவிலியன்னை “நீரில் என்ன?” என்றாள். அவன் தோளைத் தட்டியபடி “நீரில் ஒன்றுமில்லை” என்றாள். அகில்சந்தனம் அரைத்த கையுடன் எழுந்து வந்த முதுசெவிலி ஒருத்தி “நீராடுமிடத்தில் கந்தர்வப்பெண்களும் அப்சரஸ்களும் வருவதுண்டு… எவரையாவது பார்த்திருப்பார்” என்றாள். “அதெல்லாமில்லை, யாரோ குதித்ததைக் கண்டு அஞ்சியிருப்பார் இளவரசர்” என்றாள் செவிலி. “கந்தர்வப்பெண்ணைக் காண்பது நன்று… விருந்து தொடங்கிவிட்டது” என்றாள் ஒரு பெண். “போடி” என அவளை செவிலி கண்டித்தாள்.
“நான் சூடியிருப்பது அவள் உடல்” என்றாள் ஊர்வசி. “இதுவா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “உங்கள் முதற்கணம். இதை வந்தடைந்தவர் மட்டுமே நிறைவுறுகிறார்.” அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “யாரவள்?” என்றான். “காற்று கங்கையில் பல்லாயிரம்கோடி குமிழிகளாகிறது. மீண்டும் காற்றாகிறது. அது எதுவானாலென்ன?” என்றாள் ஊர்வசி. “இது உங்கள் ஆழத்தில் பொத்தி வைக்கப்பட்டிருந்த உடல். இதுவே உச்சம். இங்கணைவதே முழுமை.” அவன் “ஆம்” என்றான். மூச்சால் விழியால் உடலசைவால் வெம்மையால் “ஆம்” என்றான்.
“நீ ஏன் அன்று என்னை வந்து நோக்கினாய்?” என்றான். அதை ஏன் கேட்கிறேன்? இப்பொருளற்ற வினா வழியாக அத்தருணத்தை நீட்டிக்கொள்கிறேன். வெம்மைமிக்க அடுமனைக்கலத்தில் நீர்விட்டு குளிர்விப்பதுபோல. அவள் “ஒவ்வொருவருக்கும் ஒருத்தி. உங்களுக்கு நான்” என்றாள். “ஏன்?” என்றான். “நான் தொடையிலிருந்து பிறந்தவள்” என்றாள். “மானுட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் பொருளுண்டு. தலை அறிதல். முகம் மகிழ்தல். கைகள் ஆற்றுதல். நெஞ்சு எதிர்கொள்ளல். தோள்கள் சுமத்தல். வயிறு எரிதல். தொடைகள் தாங்குதல். விழைவு தலையென்றாகிறது. ஆற்றல் தோளென்றாகிறது. இளவரசே, ஆணவமே தொடையென்றாகிறது.” அவன் “எவருடைய ஆணவம்?” என்றான். “எவருடையதென்றிலாது எங்கும் நிறைந்திருப்பவை உணர்வுகள். மானுடர்கள் அவற்றை எதிரொளிக்கமட்டுமே செய்கிறார்கள்.”
“ஆணவமா?” என்றான். “ஆம்” என்றாள். “என்ன ஆணவம்?” அவள் புன்னகைத்து “ஆணவத்தில் முதன்மையானது. அனைத்து அறிவுதேடிகளுக்கும் உரியது” என்றாள். அவன் “சொல்” என்றான். “அறிந்துவிடமுடியும் என்னும் ஆணவம்.” அவன் நீள்மூச்செறிந்து “ஆம்” என்றான். “அறிவின் முன் முற்றிலும் தோற்பவன் அறியக்கூடுவனவற்றை முழுதறிந்துவிடுகிறான்” என்றாள். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ அவ்வாணவத்தின் பெண்மையா?” என்றான். “ஏன், தேடலின் பெண்மையென்றாகக் கூடாதா?” என்றாள்.
அவன் கைமேல் அவள் தன் கையை வைத்தாள். முதன்முறையாக அவளைத் தொடுபவன்போல உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான். “நான் உங்களுக்குரியவள். இவ்வுருவும் இவ்வுளமும் முற்றிலும் உங்களுக்காக சமைக்கப்பட்டவை.” அவன் அவள் கைமேல் தன் கையை வைத்தான். அவை நடுங்கிக்கொண்டிருந்தன. “ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்றாள். “அச்சமில்லை” என்றான். “பின்?” என்றாள். “தெரியவில்லை. ஆனால் இந்த அனல் இன்பமளிக்கிறது.” அவன் தோள்மேல் அவள் மென்மையான கன்னம் படிந்தது. விழிதூக்கி அவன் விழிகளுக்குள் நோக்கி “என்னிடம் மட்டுமே நீங்கள் முழுமையான ஆண்” என்றாள்.