கிராதம் - 56
[ 17 ]
“நெடுங்காலத்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர் மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா, பருப்பொருள் அனைத்துக்குமே புடவிநெசவின் மாறா மூன்றியல்புகள் உண்டு என அறிந்திருப்பாய். நிலையியல்பு, செயலியல்பு, நிகர்நிலையியல்பு என்பவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிரப்பி நிலைகொண்டு பின் கலைந்து இவையனைத்தையும் செயல்நிலைகொள்ளச் செய்பவை” என்றார் சனாதனர்.
“பிரம்மத்தின் மூன்று நிலைகள் இவை. பிரம்மமே இவற்றினூடாகத்தான் இயக்கம்கொண்டு தன்னை தான் அறிகிறது. செயலென்னும் மாயையை நிகழ்த்துகிறது. அலைகளினூடாக ஆழம் தன்னை நிகழ்த்தி தானென்று அறிவதுபோல. எனவே அதை திரிகுண சமன்வயம் என்கின்றனர் சாங்கியர்” என்று சனந்தனர் சொன்னார். சனத்குமாரர் “முதல்நிலையில் மண் முற்றிலும் நிலையியல்பு கொண்டிருந்தது. அதை வெல்ல புவிநிகழ்ந்தவர்கள் அசுரர். தேவர்கள் மலர்சூடிய கிளைகள் என்றால் அசுரர் மண்ணிலாழ்ந்த வேர்கள். அவர்கள் ஒருவரின்றி ஒருவர் நிலைகொள்ள முடியாதவர்கள் என்றுணர்க!” என்றார்.
தேவருலகத்தின் தவச்சோலை ஒன்றில் என்றுமுள தொன்மை, எக்காலமும் அழிவின்மை, குன்றா இனிமை, வளரா இளமை என்னும் வேதத்தின் இயல்புகள் நான்கும் மைந்தர்களாக எழுந்த இளமுனிவர் அருகே கைகூப்பி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அப்பால் கங்கை ஒளியுடனும் குளிருடனும் பெருகிச் சென்றுகொண்டிருந்தது. நான்கு முனிவர்களும் வாழ்ந்த சிறிய புற்குடில்களில் அணிகொண்ட குழலில் அகில்மணம் இருப்பதுபோல வேள்விப்புகை எஞ்சியிருந்தது. அங்கிருந்த மயில்கழுத்துகளின் வளைவில், மான்விழிகளின் மின்னில், கிளிகளின் சிறகுவண்ணங்களில், மரங்களின் தளிர்மென்மையில் வேதம் திகழ்ந்தது. நால்வரும் கல்விச்சாலையிலிருந்து கரந்து ஓடி சோலையாடிக்கொண்டிருக்கும் இளமைந்தர் போலிருந்தனர். இளமைக்குரிய விழிச்சிரிப்பும் இளமையேயான உடற்துள்ளலும் கொண்டிருந்தனர். நால்வரும் ஆடிப்பாவைகள் என தெரிந்தனர். ஒருவர் சொல்லை பிறரும் விழிகளால் சொல்வதுபோலிருந்தது.
சனாதனர் சொன்னார் “நிலையியல்பு கொண்டதாகவே இவ்விசும்பு பல்லாயிரம் யுகங்கள் நீடித்தது. தன் நெறிகளின்படி அது தனக்குள் தான் நிறைந்து அமர்ந்திருந்தது. பின்னர் பிரம்மனின் உள்ளத்திலிருந்து மரீசி, அங்கிரஸ், அத்ரி, கிருது, புலஹர், புலஸ்தியர், கசியபர் என்னும் பிரஜாபதிகள் எழுந்தனர். அவர்களிடமிருந்து உருவாயின உலகுகள் அனைத்தையும் நிறைக்கும் விண்ணவரும் மண்ணவரும் ஆழுலகோருமான முடிவிலா இருப்புகள். மண்மேல் புழுக்களும் பூச்சிகளும் விலங்குகளும் பறவைகளும் உருவாயின. ஆயினும் மண்ணின் நிலையியல்பு மாறவில்லை. ஒரு கல்லை இடமாற்றுவதற்குக்கூட அவற்றால் இயலவில்லை. அதைக்கண்டு சீற்றம்கொண்ட கசியபரின் உள்ளத்தின் விசையிலிருந்து அசுரர் உருவாயினர்.”
“வெறிகொண்ட செயலூக்கமே அவர்களின் அடிப்படை இயல்பு. விடாய்மிக்கு நீர்தேடும் பாலைஓநாய்போல, பசிகொண்டு இரையைத் துரத்தும் சிம்மம்போல, மதம்கொண்டு பாறையில் தலைமோதும் களிறுபோல எப்போதும் இருப்பது அவர்களின் வழக்கம். கரைப்பாறைமேல் அலையலையென வந்து மோதி தலையுடைந்துச் சிதறி அழியும் அலைகளைப்போல அவர்கள் அசைவிலியாக காலத்திலமைந்திருந்த முதலியற்கைமேல் முட்டினர். அர்ஜுனா, அங்கே ஒரு பாறை பிளக்கப்பட்டிருக்கிறது என்றால் அதன்பொருட்டு ஆயிரம் அசுரர் குருதி சிந்தியிருக்கிறார்கள் என்று பொருள். ஒரு குகைச்சித்திரம் செதுக்கப்பட்டிருக்கிறதென்றால் அதன்பொருட்டு நூறாண்டுகாலம் தவமியற்றப்பட்டிருக்கிறது என்று பொருள்” என்றார் சனாதனர்.
“விழைவே அசுரரின் முதலியல்பு. அவ்விழைவு மூன்று முகம் கொண்டது. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வென்று தன் உடைமையென்றாக்கிக்கொள்ளும் திருஷ்ணை. தன்னை முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் ஆஸக்தி. அறிந்துகொள்வதற்கான ஜிக்ஞாஸை. மூன்று முனைகளில் அவர்கள் அதை பெருக்கிக்கொண்டனர். வீரத்தால், பாலின்பத்தால், தவத்தால் அவர்களில் எழுந்தனர் மண்ணையும் விண்ணையும் முழுதாண்ட பேரரசர்கள். ஒன்றுநூறெனப் பெருகும் பெருந்தந்தையர். ஒற்றைச்சொல்லில் பிரம்மத்தை திறந்தெடுத்த முனிவர். அவர்கள் தங்களை கூர்படுத்தி கூர்படுத்திச் சென்று வேதத்தை தொட்டனர்” என்றார் சனந்தனர்.
“வேதமென்பது புவியை தன் உள்ளங்கையில் ஏந்தி குனிந்து நின்றிருக்கும் நெடுவிசும்பின் எண்ணப்பெருக்கு. அண்ணாந்து நோக்கும் ஒரு சிறுபுழு தன் சித்தத்தை பெருக்கி நீட்டி கூர்ந்து குனிந்துநோக்கும் மானுடனின் விழியை சந்தித்து அவர்கள் புன்னகை பரிமாறிக்கொள்வது போன்றது அந்நிகழ்வு. அக்கணமே அது புழுவல்லாதாகிறது. வேதத்தை அறிந்த அசுரமுனிவர் உள்ளத்தில் மொழி உருவாகியது. மொழி உரையாடலாகியது. கல்லில் கனலென அவர்களுக்குள் இருந்த வேதம் உரசிப்பொறியாகி எரிவடிவுகொண்டு எழுந்தது” என்று சனத்குமாரர் சொன்னார்.
“மரம்கனிந்த மலர்த்தேன்போல மொழி கனிந்து இனிக்கும் நுனியே வேதம் என்கின்றன காவியங்கள்” என்றான் அர்ஜுனன். சனகர் புன்னகைத்து “ஆம், அதுவும் மெய்யே. ஆனால் அது அனைத்தையும் மொழியென்றே அறியும் கவிஞர் உணர்ந்தது. மொழி உருவான பின் அதில் மெய்மை அமைந்து வேதம் பிறப்பதில்லை. வேதமே விதை. அது உள்ளமென்றாகி பிற உள்ளத்தை நாடுகையில் மொழியை உருவாக்கிக்கொள்கிறது. முளையாகி தளிராகி எழுந்த விதை கொடிச்சுருளை நீட்டி நீட்டித் தவித்து பற்றிக்கொள்வதுபோல. வேதம் அனல்துளிபோல. அது பரவ விரும்புகிறது. பற்றிக்கொண்டு எழ முனைகிறது. அதன் தவிப்பே மொழி என்க!” என்றார். சனாதனர் “மொழி என்பது ஒற்றைச் சொல்லே. அச்சொல்லின் முடிவில் நிறைவின்மையை உணர்ந்து எழுகிறது அடுத்த சொல். அதிலிருந்து அடுத்த சொல் என பெருகிப்பெருகி அது சொல்வெளியென்றாகிறது” என்றார்.
“ஆகவேதான் ஒரு சொல்லை விளக்குவதற்காக பிற அத்தனை சொற்களும் எழுந்து சூழ்கின்றன” என்றார் சனந்தனர். “இளைய பாண்டவனே, மொழி என்பதுதான் என்ன? உரைக்கவும் உணர்த்தவும் கொள்ளும் முடிவிலா தவிப்பு அல்லவா அது? ஒவ்வொரு கணமும் பொருள் வளர்வது சொல். ஒவ்வொரு முறையும் புதிதெனப் பிறப்பது. ஒருபோதும் சொல்லி நிறைவறியாதது. மொழிக்குள் அமைந்து ஒவ்வொரு சொல்லிலும் எழுந்து துள்ளி அலைத்து தவித்துக்கொண்டிருப்பது என்ன? தளிர்நுனிகளனைத்திலும் துடிப்பது, வேர்முனைகள் அனைத்திலும் நெளிவது விதையினுள் எழுந்த விழைவே அல்லவா?” என்று சனத்குமாரர் கேட்டார்.
“மொழியென்றாகிய வேதம் கருவறை புகுந்த பார்த்திவப் பரமாணுபோல புவியில் விழுந்த உயிர்த்துளி. ‘நான் வளர்க! நான் பெருகுக! நானே ஆகுக!’ என்றே அதுவும் தவம்செய்கிறது. அந்தத் துளி அசுரர்களை ஒற்றைப்பேருடலாக்கியது. பல்லாயிரம் கைகளும் கால்களும் கொண்ட விராடவடிவன் ஆயிரக்கணக்கான புரவிகளை ஒன்றாக்கி அவற்றின் மேலேறி போர்க்களம் செல்வதுபோல அவர்களின் குலங்கள் மேல் அது நின்றது. அசுரர் என்று ஒரு திரள் இல்லை, ஆசுரம் என்னும் எழுச்சியே உள்ளது” என்று சனந்தனர் சொன்னார். “அசுரவேதம் அசுரரின் நாவுகளில் அமைந்து அவர்களின் குருதியை ஒன்றாக்கியது. அவர்களின் நோக்கிலெழுந்து முகில்களையும் மலைமுடிகளையும் ஆறுகளையும் நிலவிரிவையும் கடல்களையும் அள்ளத்துடித்தது. அவர்களின் படைக்கலங்களில் தோன்றி குருதிகொள்ளத் துடித்தது. அடங்காது திமிறிய புரவி அவர்களால் வென்று கடிவாளமிடப்பட்டது. நஞ்சும் அமுதுமெனக் கலந்து நின்றிருந்த அன்னம் அவர்களால்தான் சமைக்கப்பட்டது” என்றார் சனாதனர்.
“இளைய பாண்டவனே, படைப்பில் இருவிசைகளை அறிந்துகொள். ஒன்று தன்வாலை தான்விழுங்கி தன்னுள் சுருண்டு சுழன்றுகொண்டிருக்கும் அன்னம். இன்னொன்று அதில் ஊடுருவி அதன் சுருள்களைந்து எழச்செய்யும் அறிவு. அன்னமும் அறிவும் சக்தியும் சிவமும் கொள்ளும் இரு தோற்றங்களே. விண்ணிலும் மண்ணிலுமுள்ள இருப்புகள் அனைத்தும் முதன்மைப்பிரஜாபதியாகிய தட்சனில் இருந்து உருவானவை. மாநாக வடிவினனாகிய அவனே அன்னரூபன். அதிதி, திதி, தனு, அரிஷ்டிரை, சுரசை, கசை, சுரபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு, முனி என்னும் பதின்மூன்று நாகினியரில் இருந்தே அசுரரும் தேவரும் நாகரும் மானுடரும் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் பிறந்து விண்ணையும் மண்ணையும் நிறைத்தனர். அம்மகளிரை மணந்த முதல் பிரஜாபதியாகிய கசியபரின் உள்ளே எண்ணமென எண்ணும் வாய்ப்பென உறைந்தவையே அவர்களில் அன்னம்சூடி உயிருருக்கொண்டு எழுந்தன” என்றார் சனகர்.
“அதிதியில் இருந்து ஆதித்யர்கள் பிறந்தனர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களில் இருந்து ஆதித்யகுலம் தொடங்கியது. அதிதியிலிருந்து எழுந்த இரண்டாவது பெருங்குலத்தோர் வசுக்கள் எனப்பட்டனர். அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்னும் எட்டு வசுக்கள் விண்ணை ஆள்கின்றனர். திதியில் இருந்து தைத்யர்கள் பிறந்தனர். ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் பிறந்தது தைத்யகுலத்திலேயே. தனுவிலிருந்து தானவர்கள் பிறந்தனர். அவர்கள் விருத்திரனை முதல் தந்தையாகக் கொண்டவர்கள். சுரபியிலிருந்து பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர். வினதை கருடனைப் பெற்றாள். கத்ரு பெற்றவை பெருநாகங்கள்” என்றார் சனத்குமாரர்.
“ஒன்று அறிக, ஆதித்யர்களும் தைத்யர்களும் தானவர்களும் உடன்பிறந்தோர். முன்பு ஆதித்யர்களும் அசுரர்கள் என்றே அறியப்பட்டனர். ஏனென்றால் ஆசுரம் என்னும் முதலியல்பே அவர்களை இயக்கிய வல்லமை. இந்திரனும் வருணனும் மித்ரனும் அசுரர்களே” என்று சனகர் தொடர்ந்தார். “அசுரர்களின் உள்ளத்தில் வேதம் எழுந்ததும் அது தன்னியல்பால் கனியலாயிற்று. மொழியை அது சமைத்தது. அதை ஊர்தியெனக்கொண்டு உள்ளங்கள் தோறும் விரிந்தது. வேதம் முனிவர்களை உருவாக்கியது. முனிவர்கள் வேதத்தைப் புரக்க வேள்விகளை இயற்றினர்” என்றார் சனந்தனர்.
“வேள்வியென மானுடர் இன்று இயற்றுபவை தன்னியல்பாக அன்று செய்யப்பட்ட நற்செயல்களின் சடங்கு வடிவங்களே” என்றார் சனாதனர். “ஒருபோதும் தோற்காமலிருத்தலுக்குரிய விக்ரமம், அனைத்தையும் அடைவதற்குரிய திருஷ்ணம், பெருகிக்கொண்டே இருப்பதற்குரிய கிராந்தம் என அசுர வேள்விகள் மூன்றே. அவற்றை இயற்றி அசுரர் வெற்றிகளையும் செல்வங்களையும் ஈட்டினர். குலம்பெருக்கினர்” என்றார் சனாதனர். சனத்குமாரர் “இன்று மண்ணில் அரசர்கள் இம்மூன்று மறவேள்விகளில் இருந்து எழுந்த வேள்விகள் பலவற்றை இயற்றுகிறார்கள். ராஜசூயமும் அஸ்வமேதமும் விக்ரமம் எனப்படுகின்றன. பொருள்நாடிச் செய்யும் பூதவேள்விகள் திருஷ்ணம் போன்றவை. புத்ரகாமேஷ்டி போன்றவை கிராந்தமரபைச் சேர்ந்தவை” என்றார்.
“வென்று வாழ்ந்து நிலைகொண்டபின்னரும் எஞ்சுவதென்ன என்று அவர்களின் முனிவர்கள் உளம்கூர்ந்தனர். அவர்கள் ஏழுவகை அறவேள்விகளை உருவாக்கினர். அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் ஃபாஜனம், அளித்தவற்றுக்கு நன்றி சொல்லுதல் பிரதிநந்தனம், எடுத்தவை மேலும் வளரவிடுதல் அஃபிஜனனம், அளித்த விண்ணவர்க்கே திருப்பி அளித்தல் நிவேதனம், அறியாதவருக்கும் அன்னமளித்தல் அஃப்யாகதம், சிற்றுயிர்களையும் ஓம்புதல் உபகாரம், இங்கிருப்பவற்றின் ஒழுங்கு குலையாது நுகர்தல் ருதம். இந்த ஏழு தொல்வேள்விகளுக்கு அசுரர்களில் ஒருசாராரான ஆதித்யர்கள் கட்டுப்பட்டனர். ஆகவே அவர்கள் வேள்விக்குரியவர்களாயினர். தைத்யர்களும் தானவர்களும் அறவேள்வியை மீறிச்சென்றவர்கள். வேள்வியிலமர்ந்து அவிகொள்ளத் தொடங்கியதும் ஆதித்யர்கள் ஒளிகொண்டனர். அழிவின்மையை அடைந்தனர். விண்ணாளும் தேவர்களென்றானார்கள். தைத்யர்களும் தானவர்களும் தங்கள் ஆசுரத்தால் முழுக்கக் கட்டுண்டிருந்தனர். எனவே இருண்டு புவியை நிறைத்தனர்” சனகர் சொன்னார்.
“ஆதித்யர்களான அசுரர்களில் மூத்தவர் வருணன். தைத்யர்களும் தானவர்களுமான அசுரர்களில் முதல்வர் விருத்திரன். விருத்திரனை வென்றமையால் இந்திரன் தேவர்குடியில் மூத்தவனென்றானான்” என்றார் சனந்தனர். சனத்குமாரர் “ருதம் கொண்டமைந்த அசுரர்குடி மூத்தவராகிய வருணனே அசுரகுடியின் அறவேள்விகளில் முதல்வர். அவருக்கான வேதம் வாருணம் எனப்பட்டது. வேதமுதல்வனாக இந்திரன் எழுந்தபின் உருவான வேதமுறைமை மாகேந்திரம். குன்றாவிழைவும் வென்றுசெல்லும் வீரமும் அறம்நிற்கும் அமைதியும் கொண்டவனாகிய இந்திரனே அதன் முழுமுதல்தேவன் என அமைந்தான்” என்றார்.
“விருத்திரனின் அழிவுக்குப்பின் அசுரரும் தேவரும் கொண்ட பகைமை ஒவ்வொரு கணமும் என வளர்ந்தது. அசுரருக்கும் தேவருக்கும் உளம்பகுத்து அளித்தவர்களாகிய மானுடர் உருவாகி வந்தனர். மானுடரின் அறவேள்விகளால் தேவர் வளர்ந்தனர். தங்கள் அழியா விழைவின் ஆற்றலால் அசுரர் நிகர்நின்றனர். இன்றுவரை நீளும் அப்போர் இனி என்றும் இவ்வண்ணமே நீடிக்கும் என்பதே நெறி” என்றார் சனத்குமாரர்.
[ 18 ]
“மைந்தரை வளர்க்கும் அன்னை மைந்தர் வளரும்தோறும் தான் மாறுபடுவதுபோல வேதம் மாறிக்கொண்டிருக்கிறது” என்றார் லோமசர். இந்திரனின் மலர்க்காட்டின் கொடிமண்டபத்தில் அவருடன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். “இந்திரனை முதல் தெய்வமாகக் கொண்ட வேதம் மாகேந்திரம் எனப்பட்டது. அதற்கு முன்னாலிருந்த வாருணத்திலிருந்து வேள்விச்சடங்குகளை தான் எடுத்துக்கொண்டது. மாகேந்திர வேள்விகள் அனைத்திலும் முதல் அவி இந்திரனுக்கே அளிக்கப்பட்டது. மானுடர் மண்ணில் செய்த வேள்விகளின் அவி பெருநதிகளாக வந்து சூழ்ந்தமையால் இந்திரபுரி அணையாத ஒளியுடன் திகழ்ந்தது அன்று. இந்திரனுக்கு அப்பால் தெய்வங்களென எவருமிருக்கவில்லை அன்று” என்று லோமசர் சொன்னார்.
அந்நாளில் அசுரர் கோமான் ஹிரண்யன் அசுரப்பெருவேதத்தின் பன்னிரண்டாயிரம் பாதங்களை முழுதுணர்ந்து தெளிந்தான். அந்த வேதம் அவனுக்கு வெற்றியும் குலவிரிவும் புகழுமாகியது. தன்னை இறைவனென அவன் உணர்ந்தான். எனவே அவனை இறைவன் என எண்ணினர் அசுரகுடிகள். வேதமெய்மை படர்ந்த அவன் உடல் பொன்னென்றே ஆகியது. அவன் தேர்ந்தமைத்த பொன்மய வேதம் ஹிரண்யம் என அழைக்கப்பட்டது. தந்தையிடமிருந்தே வேதம் கற்றுத்தெளிந்தான் அவன் மைந்தனாகிய பிரஹலாதன். அதை முழுதும் ஓதி உணர்ந்து தெளிந்தபோது அது குறையுடையது என்று உணர்ந்தான். அக்குறை என்னவென்று அவனால் அறியமுடியவில்லை. அசுரர்களின் ஆசிரியரான சுக்ரரும் அதை அறிந்திருக்கவில்லை. எனவே அதை அறிய நாரதரை தேடிச்சென்றான்.
நாரதர் சொன்னார் “அசுர இளவலே, உன் வேதம் சீறும், பாயும், போரிடும், வெல்லும். கண்மூடி வெறுமனே அமராது. எனவே அசுரர் வென்று அமைந்ததுமே அவர்களின் வேதம் அவர்களை கைவிடத் தொடங்குகிறது. செயலூக்கம் என்பது இயல்புநிலை அல்ல. செயலின்மை என்பதுபோல அதுவுமொரு குறைநிலையே. செய்தடங்குதலே நிறைநிலை. உன் தந்தை குன்றா விசைகொண்டு விண்ணை முட்டிக்கொண்டிருந்தார். அவருக்குரியதாக அமைந்தது அவ்வேதம். நிலைகொண்ட உள்ளத்துடன் உன்னை நோக்கி அமர்ந்த உனக்கு அது உதவாச் சொல்லென்று ஆகியது. செயல் ஒறுத்து நீ அமைதி கொள்கையிலும் தொடர்ந்துவரும் வேதமென்ன என்று உணர்க!”
அத்தகைய வேதம் என்ன என்று அறியும்பொருட்டு வேதமுணர்ந்த தன் தந்தையிடமும் தந்தையின் ஆசிரியரான சுக்ரரிடமும் சுக்ரரின் ஆசிரியரான பிரஹஸ்பதியிடமும் சென்றபின் மீண்டும் நாரதரிடமே வந்தான் பிரஹலாதன். “முனிவரே, உங்கள் வினாவுடன் நான் என் தந்தையிடம் சென்றேன். ஆடாத தீ என்று ஒன்றில்லை என்றார். சுக்ரர் சுழல்கையிலேயே காற்று மூச்சென்றாகிறது என்றார். பிரஹஸ்பதி அசையாத நாக்கு சொல்லெடுப்பதில்லை என்றார். நீங்கள் சொன்ன வேதம் என ஒன்றில்லை என்றே அவர்கள் கூறினர். எனவே உங்களையே அடைக்கலம் புகுகிறேன். அமைதிநிலையில் திகழும் வேதம் என்பது என்ன?” என்றான்.
நாரதர் “இளவலே, கேள்! வீரமும், காமமும், கொடையும் செயலென்று மட்டுமே திகழ்பவை. ஆற்றாவிட்டால் இல்லையென்றாகுபவை. ஆனால் அளியும் அறமும் அருளும் உணர்வென்றும் இயல்பென்றும்கூட உள்ளமைபவை. இயற்றாவிட்டாலும் இருப்பவை. எந்த வேதம் அப்பண்புகளை மட்டும் தான் எனக் கொண்டுள்ளதோ அதுவே நிறைநிலை வேதம்” என்றார். “அவ்வேதம் எங்குள்ளது?” என்றான் பிரஹலாதன். “நீ கற்றறிந்த வேதத்திற்குள்ளேயே அதுவும் அமைந்துள்ளது. மெய்யறிவால் அதைத் தொட்டு மீட்டெடுக்கவேண்டும்” என்றார் நாரதர்.
“முனிவரே, அதைத் திரட்டி எடுக்கும் வழியென்ன என்று சொல்க!” என்றான் பிரஹலாதன். “விழைவென்றும் செயலென்றும் அலை கொந்தளிக்கும் வேதவெளிக்கு அடியில் இருப்பென்றும் இன்மையென்றும் இல்லாது நிறைந்திருக்கும் அமைதி ஒன்றுள்ளது. அனைத்துமாகியும் அனைத்திற்கும் அப்பாற்பட்டும் இருக்கும் ஒன்று. அதைக் குறிக்கும் சொல் ஒன்று. அச்சொல்லைப் பற்றுக! ராணித்தேனீயை எடுத்துச்சென்றால் தேனீக்கூடே உடன் வருவதுபோல மெய்வேதம் அதைத் தொடர்ந்து உன்னுடன் வரும்.”
தன் அருகே முழந்தாளிட்டு செவிகாட்டி அமர்ந்திருந்த பிரஹலாதனுக்கு கைகளால் இதழ்பொத்தி செவிகளில் அந்த முதற்சொல்லை நாரதர் சொன்னார் “நாராயணா”. மும்முறை அதைச் சொல்லி தன் ஆழத்தில் நிறைத்துக்கொண்டான் பிரஹலாதன். “அசைவற்றது, முழுமைகொண்டது, அனைத்துமானது, நீரென நிறைவது, நிலைகொண்டது, காப்பது, விரிவது என்னும் ஏழு பொருள்கொண்டது இச்சொல். ஊழ்கத்தில் ஏழாயிரம் கோடி பொருள்கொண்டு விரிவது. இது உன்னுடன் இருக்கட்டும்” என நாரதர் வாழ்த்தினார்.
நாராயணா என்னும் ஒற்றைச் சொல்லால் ஹிரண்யவேதத்திலிருந்து பிரஹலாதன் திரட்டிய வேதமே மஹாநாராயணம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வேதத்தை ஓதி உணர்ந்து அவன் ஒளிகொண்டான். தந்தையின் ஒளியைவிட மைந்தனின் ஒளி மிகுந்தபோது அசுரர் அவனை நாடிவந்தனர். அவர்களுக்கு மகாநாராயண வேதத்தை பிரஹலாதன் கற்பித்தான். ஹிரண்யவேதமன்றி பிற வேதம் ஒலிக்கலாலாது தன் நாட்டில் என ஆணையிட்டிருந்தான் ஹிரண்யன். ஒருநாள் வேட்டைக்குச் சென்றபின் புலர்காலையில் காட்டிலிருந்து நகர்திரும்புகையில் காட்டுவிலங்குகள் நிரைநிரையென செல்வதைக் கண்டு வியந்து தேரை நிறுத்தினான். அவை செல்லும் வழியெங்கே என்று நோக்கிவர ஒற்றனை அனுப்பினான்.
ஒற்றன் திரும்பிவந்து நகருக்கு வெளியே ஆற்றங்கரைக் குடிலில் அவன் மைந்தன் பிரஹலாதன் வேதமோதுவதாகவும் அதைக் கேட்கும்பொருட்டே விலங்குகள் செல்வதாகவும் சொன்னான். வேதம் அசுரருக்குரியது, விலங்குகள் எவ்வண்ணம் வேதத்தை அறியமுடியும் என அவன் வியந்தான். தேரைத் திருப்பி மைந்தன் இருந்த குடிலுக்குச் சென்றான். அங்கே மானும் முயலும் புலியும் நரியும் புட்களும் கூடி அவ்வேதத்தைக் கேட்டு நிற்பதைக் கண்டான். மைந்தனிடம் “இது எந்த வேதம்? ஹிரண்யவேதம் அசுரருக்குரியது. அதை பிற உயிர்கள் அறியமுடியாது” என்றான். “வேதம் ஒன்றே. காட்டில் கனிகொய்வதுபோல அதில் இனிய பகுதி ஒன்றை நான் தேர்ந்துகொண்டேன்” என்றான் மைந்தன். “பொய்யாமையும் கொல்லாமையும் விலகாமையும் கொண்ட வேதம் இது. தான் மட்டுமே இருந்தாலும் முழுநிலையிலமைவது.”
சினத்தை அடக்கி “அந்த வேதம் எது?” என்றான் ஹிரண்யன். “நாராயாணா என்னும் சொல்லுடன் வந்திணையும் சொற்களாலான வேதம்” என்றான் பிரஹலாதன். தந்தை சினம் கட்டுமீற ஒற்றை அடியில் அக்குடிலை உடைத்து வீசினான். “இனி அந்த வேதம் இங்கு ஒலிக்கலாகாது” என்றான். “அவ்வேதமே என் நாவில் ஒலிக்கும். மெய்யென்று ஒன்றை அறிந்தபின் பிறிதொன்றைச் சூட ஒருபோதும் ஒப்பேன்” என்றான் பிரஹலாதன். தந்தை மைந்தனை தன் கதையால் அடிக்கப்போனான். “என்னை கொல்லுங்கள். உங்கள் வேதத்தை நீங்களே தோற்கடியுங்கள்” என்றான் பிரஹலாதன். “அவை கூடட்டும். நம் இருவேதங்களும் அவையிலெழட்டும். மெய்மையின் துலா எங்கு சாய்கிறதென்று நோக்குவோம்” என்றான் ஹிரண்யன்.
நூற்றெட்டு அசுரமுனிவர்களும் ஆயிரத்தெட்டு அசுரகுலத்தலைவர்களும் கூடிய பேரவையில் பன்னிரு நாட்கள் அந்த மெய்யாடல் நிகழ்ந்தது. பெருங்கடல்களை துளித்துளியாக ஆராய்வதுபோல ஹிரண்யமும் மகாநாராயணமும் சொல்தோறும் உசாவப்பட்டன. இறுதியிலொரு சொல்லில் சென்று நின்றது அவ்வுரையாடல். அறிதலென அடைவன எல்லாம் அறிதல் மட்டுமே என்றது மகாநாராயணம். பெயரிட்டு பொருள்கொள்ளப்படும் பொருள் பெயரென பொருளென தன்னை நடிக்கிறது. “எப்படி அது நிகழலாகும்?” எனச் சீறி எழுந்தான் ஹிரண்யன். “சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் காலத்தில் இடத்தில் மாறாமுடிவிலியாக நின்றிருப்பதே பொருள். சொல் அதன்மேல் விழும் ஒளி. இருளிலும் அது அங்குதான் இருக்கும்” என்றான்.
“இருளில் அங்கிருப்பது பொருளென எவர் அறிவார்? எங்கோ எவரோ கொள்ளும் விழியும் ஒளியும்தான் அதை பொருளென்றாக்குகிறது” என்றான் பிரஹலாதன். “இதோ நின்றுள்ளது கற்தூண். இதை சிம்மம் என நான் பெயரிட்டழைத்தால் இது உறுமி உகிரும் எயிறும் கொண்டு எழாது” என்றான் ஹிரண்யன். “தூணென பொருள்கொண்டு சிம்மமென அழைத்தால் அவ்வாறே. உங்கள் முழுஉள்ளத்தாலும் அதை சிம்மமெனக் கொண்டால் அது சிம்மமேயாகும்” என்றான் பிரஹலாதன். “ஆம், இதோ இதை சிம்மமெனக் கொள்கிறேன். எழுக, சிம்மமே!” என்று தன் அசுரவிசைகொண்ட உள்ளத்தால் கூவியபடி கதை சுழற்றி அதை நோக்கி சென்றான் ஹிரண்யன். கற்தூண் சிம்மமென்றாகி எழுந்து உறுமி உகிர்நீட்டி அவனைப் பற்றி குடல் கிழித்து மாலையாக்கிச் சூடியது.
அதன்பின்னர் மகாநாராயணமே வேதக்கூர் என்றாயிற்று. ஆயிரம் வேள்விகளை நிகழ்த்தி பொன்னுடல்கொண்ட பிரஹலாதன் இந்திரன் என உருக்கொண்டு விண்ணிலேறி அமராவதியை வந்தடைந்து அரியணையில் அமர்ந்தான். ஹிரண்யனால் வெல்லப்பட்டு முடியிழந்தபின் மீண்டும் அரியணையைப் பெற்று முடிசூடி கோல்கொண்டு அமர்ந்திருந்த இந்திரன் விலகி ஓடினான். இலையுதிர்க்கும் நீர்த்துளியெனச் சொட்டி அறியாத ஆழங்களுக்குள் சென்று மறைந்தான். ஆயிரமாண்டுகாலம் இருளில் உதிர்ந்த கரிய வைரம் என எவருமறியாமல் கிடந்தான். பின் துயர்செறிந்து எடைமிகுந்து அவ்வெடையால் தன்னை உணர்ந்து எழுந்து மெய்யாசிரியராகிய பிரஹஸ்பதியை அணுகி தான் இழந்தது என்ன என்று கேட்டான். “நானறிந்திலேன். என் மாணவன் அசுரர்களின் ஆசிரியன். அவன் அறிந்திருக்கக்கூடும்” என்றார் பிரஹஸ்பதி.
சுக்ரரிடம் சென்று பணிந்து “அசுரர்களுக்கு ஆசிரியரே, அகத்திருளின் ஆராவிழைவால் நானும் அசுரனே. எனக்கு அருள்க! நான் வெல்வதெப்படி?” என்றான் இந்திரன். சுக்ரர் பிரஹலாதனின் வெற்றியால் சினம் கொண்டிருந்தார். எனவே நிகழ்ந்தது என்ன என அவர் இந்திரனுக்கு சொன்னார். “அசுரமைந்தனிடம் வேதம் விளைந்திருக்கிறது, அரசே. உங்களை அரியணையில் அமர்த்திய வேதம் மாகேந்திரம் எனப்படுகிறது. வான் நிறைக்கும் இடியின் சந்தம் கொண்டது அது. வென்று எழுந்து மூடும் விழைவு மட்டுமேயானது. தன்னை தான் பெருக்கிக் கொள்வது. உண்பது, பிறப்பது, வெல்வது, ஒருபோதும் ஓயாதது.”
“அரசே, ஆயிரம் யுகங்கள் வேள்விகளால் விண்நிறுத்தப்பட்டவர் என்றாலும் நீங்களும் ஆழத்தின் அடியிலியிருளில் ஓர் அசுரரே என உணர்ந்திருக்கிறீர். ஆம், உங்கள் வேதத்தில் ஆசுரம் ஒருபோதும் ஒழிவதில்லை. ஆசுரம் அமைந்த மாகேந்திரத்தை வென்றெழுந்தது தூய ஆசுரமான ஹிரண்யம். அதை தன் பெருக்கிலொரு சிறுதுளியென்றாக்கி எழுந்தது மகாநாராயணம் என்னும் வேதம்” என்றார் சுக்ரர். “பிரஹலாதனிடமிருந்து அதைப் பெறுக! அவ்வேதத்தை நீர் உமதென்றாக்குக! அதுவே வெல்லும் வழி.” இந்திரன் “ஆசிரியரே, நான் அவரை வெல்லமுடியாது. அதற்குரிய படைக்கலங்கள் என்னிடமில்லை” என்றான்.
புன்னகைத்து “உம் படைக்கலம் எப்படியென்றாலும் வெல்லவேண்டுமெனும் முனைப்பே. அதைக் கொள்க!” என்றார் சுக்ரர். “அவன் கொண்டுள்ள மகாநாராயண வேதம் அளி, அறம், அருள் என்னும் முப்பண்புகளின் முழுநிலை. அதைக் கொண்டே அதை வெல்க!” இந்திரன் வணங்கி மீண்டான். ஒரு எளிய அந்தணச்சிறுவனாக மாறி பிரஹலாதன் தவம்செய்துகொண்டிருந்த சிறுகுடில் முன் சென்று நின்று வணங்கினான். “அறிவை கொடையளியுங்கள், ஆசிரியரே” என்றான். அந்தணச்சிறுவனின் எழில் கண்டு பிரஹலாதன் உளம் கனிந்தான். அவனை கூர்ந்தறியும்பொருட்டு “சொல்லுக்குப் பொருளென்றாவது எது?” என்று கேட்டான். “பிறிதொரு சொல்” என்றான் அந்தணச்சிறுவன். “மொழிக்குப் பொருளாவது எது?” என்றான் பிரஹலாதன். “அதன் முதற்சொல்” என்றான் அந்தணச்சிறுவன். “அருகணைக!” என அழைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “நன்று, நீ வெல்க!” என்றான் பிரஹலாதன்.
பன்னிரண்டு ஆண்டுகாலம் பிரஹலாதனின் மாணவனாக அமைந்து மகாநாராயண வேதத்தை இந்திரன் முழுதும் கற்றான். அதன் இறுதிச்சொல்லையும் அவனுக்களித்த பின்னரும் அவன் வணங்கி நிற்கக்கண்டு “சொல்க, மைந்தா!” என்றான் பிரஹலாதன். “நான் முழுமை கொள்ளவேண்டும்” என்றான் இந்திரன். “நீ விழைவதை கேள்!” என்றான் பிரஹலாதன். “இவ்வேதத்தைப் பயின்று நீங்கள் அடைந்த நற்பேறையும் எனக்கே அருளவேண்டும்” என்றான் இந்திரன். அக்கணமே அது இந்திரன் என பிரஹலாதன் அறிந்தான். ஆனால் அவனமைந்த வேதமுழுமை “ஆம், அவ்வாறே ஆகுக!” என அளிக்கவே அவனைச் செலுத்தியது. அவன் உடலில் இருந்து பொன்னிற நிழல் ஒன்று எழுந்து இந்திரனை அடைந்தது. அவன் ஒளியுடன் எழுந்து “நானே இனி விண்முதல்வன்” என்று உரைத்து பேருருவம் கொண்டான்.
“அவ்வாறே ஆகுக!” என்று புன்னகையுடன் பிரஹலாதன் சொன்னான். “ஆனால் நீ எவ்வகையிலும் இவ்வேதத்தின் முதல்வனாக ஆகப்போவதில்லை. அளியும் அறமும் அருளும் நீ கொண்ட விழைவின் கறைகொண்டதாகவே உன்னில் திகழும். உன் உடல் பொன்னொளி கொண்டிருக்கும், உன் இடக்கால் கட்டைவிரல் கரியெனவே எஞ்சும்” என்றான். இந்திரன் “ஆகுக! நான் விண்ணவர்கோன் என்று மீண்டும் முடிகொள்வேன். எதன்பொருட்டும் என் கோலை கைவிடமாட்டேன். விண்ணவனாகிய நாராயணன்பொருட்டும்கூட” என்றான். பின்னர் இந்திரனின் அரியணையில் மீண்டும் அமர்ந்தான்.
“மீண்டும் அரியணை அமர்ந்த இந்திரனுக்கு முதலெதிரி என நின்றது மகாநாராயண வேள்வியே. அதில் தனக்கு அவிமுதன்மை கிடைத்தாகவேண்டும் என்று அவன் விழைந்தான். அதன்பொருட்டு அவன் கிழக்கின் இறைவனாகிய சூரியனை தன்னுடன் இணைத்துக்கொண்டான். பிற திசைத்தேவர்களும் அவனுடன் நின்றனர். எண்திசைத்தேவர்களும் தேவர்க்கிறைவனும் முதன்மைகொண்ட வேதமே மகாவஜ்ரம் என அழைக்கப்பட்டது. மின்னலின் மொழி அது” என்றார் லோமசர்.