கிராதம் - 49
[ 5 ]
இந்திரகீலமலையை அர்ஜுனன் தன்னந்தனியாகவே சென்றடைந்தான். பீதர்நாட்டுக் கலங்கள் அவர்களின் கடற்பாதையிலேயே வழிபிரிந்தன. பாய்புடைத்து காற்றில் பறந்துசென்றுகொண்டிருந்த பெருங்கலங்களை கடலுக்குள் நிறுத்தமுடியாதென்பதனால் விரைவுகுறையாமலேயே கலவிலாவில் கட்டப்பட்டிருந்த மென்மரத்தாலான படகை கயிற்றை அவிழ்த்து கீழிறக்கினர். அர்ஜுனன் வீயிடம் விடைபெற்றுக்கொண்டு கயிற்றினூடாக அதில் இறங்கி அமர்ந்தான்.
கடலைக் கிழித்த கலத்தின் மூக்கு உருவாக்கிய பேரலையில் அவன் படகு எழுந்தமைந்தது. கயிறு அறுக்கப்பட்டதும் அர்ஜுனனின் படகு அலைமேல் ஏறி அமைந்து விலகிச்சென்றது. அவன் அதன் பாயை இழுத்து விரித்தான். சுக்கானைப்பற்றி பாயின் கோணத்தை திருப்பியதும் கிளையிலிருந்து எழும் சிறுபறவைபோல அது கடல்விரிவில் சென்றது. சற்றுநேரத்திலேயே கலம் விலகிச்சென்றது. கலமுகப்பில் நின்ற வீ அவனை நோக்கிக்கொண்டிருந்தார்.
அலைகளில் அவன் படகு ஊசலாடியது. ஆனால் இருமுறை வடங்களைப்பற்றி அவன் இழுத்ததுமே அது தலைவனை அறிந்த கூர்மதிப் புரவி என பணிந்தது. வீ புன்னகையுடன் திரும்பி தன் அருகே வந்து நின்றிருந்த குலப்பாடகனிடம் “வீரர்களுக்கு இவ்வுலகு போதவில்லை பாடகரே, அவர்களுக்காகவே தெய்வங்கள் மேலும்மேலுமென உலகங்களை உருவாக்குகின்றன” என்றார். அவன் முழுமையாக நோக்கிலிருந்து மறைந்ததும் “அவர் வெல்வார் என்பதில் ஐயமில்லை. அவர்கள் வெல்வதற்காகவே தெய்வங்கள் காத்திருக்கின்றன” என்றார்.
அர்ஜுனன் இருநாட்கள் கடலலைமேல் சென்றபின் தொலைவில் எழுந்துதெரிந்த கரிய பாறைமுகடுகளைக் கண்டான். அவற்றில் அலைமோதி வெள்ளிதழ் மலர்களை விரியவைத்துக்கொண்டிருந்தது கடல். அணுகும்தோறும் அவை பெரிதாகி தலைக்குமேல் எழுந்தன. அவற்றின் மடம்புகளில் அலைநீர் பால்நுரையென வழிந்தது. பாறைகள் அவனை நோக்கி பல்காட்டி நகைத்தாடுவதுபோல தோன்றியது. ஏளனப் புன்னகை கொண்டிருப்பதுபோலத் தோன்றிய அவை அணுக அணுக வெறியுடன் சிரித்துச் சுழன்று வந்தன.
அவனை அள்ளி அள்ளிச் சுழற்றிய நீலப்பரப்பு பாறைகளிலிருந்து விலக்க முயல்வதுபோல் தோன்றியது. அவன் பாயைத் திருப்பி காற்றை நெறிப்படுத்தி கரைநோக்கியே செல்லக்கண்டு பொறுமையிழந்து அள்ளித்தூக்கி அருகிருந்த பெரும்பாறையில் ஓங்கி அறைய முயன்றது. பாயைத் திருப்பி காற்றை அதன்மேல் ஏவி அவன் அப்பாறையை தவிர்த்தான். மேலும் மேலும் அவனை பாறைகளை நோக்கி வீசிய கடலை ஏமாற்றி இரு பாறைகள் நடுவே புகுந்தான்.
அதன்பின் அலைவீச்சு குறைந்தது. பாறைகளைத் தவிர்த்தும் ஒளிந்தும் அவன் முன்னேசென்று இறுதியாக எழுந்துவந்த பெரிய பாறை ஒன்றை அணுகினான். அவன் பாயைச் சுருக்குவதற்குள் வந்த பேரலை ஒன்று படகைத் தூக்கி அப்பாறைமேல் அறைந்தது. அவன் பாய்ந்து அலைமேல் குதித்து விலகினான். படகு சிம்புகளாகச் சிதறி நீரலைவில் மிதந்து ஆடியது. அவன் மீண்டுமெழுந்த அலையொன்றில் ஏறிச்சென்று பாறையின் நீள்மூக்கு நுனியை பற்றிக்கொண்டான்.
நீர் அவனை விட்டொழிந்த விசைக்கு கைகளை முறுகப்பற்றி அசையாமல் அமைந்து தப்பினான். அடுத்த அலை எழுவதற்குள் பாறைமுகப்பு மேல் தாவி ஏறிக்கொண்டான். அவன் கால்களை வந்து அறைந்து மீண்டது பேரலையின் நுரை. வெள்ளிக்கழலென நுரை வளைத்த கணுக்கால்களுடன் பாறைமேல் நடந்து சென்றான். பாறைகளாலான கடல்வளைவை தாவியும் நடுவே நீரில்பாய்ந்து நீந்தி பிறிதொரு பாறைமேல் பற்றி ஏறியும் கடந்துசென்றான்.
பின்னர் அவன் பச்சைக்குவைகளென எழுந்து நின்றிருந்த மலைகளைக் கண்டான். சுண்ணமலைகள் என பசுமைக்குள் தெரிந்த பாறைகள் காட்டின. தொங்கி வழிந்து சொட்டி நின்றது காடு. அவன் கரையை அடைந்து பாறைகளில் ஒட்டிநின்றிருந்த சிப்பிகளைப் பிடித்து பிளந்து வெறும் ஊனை உண்டான். மேலும் சிப்பிகளை அள்ளி தன் மேலாடையில் கட்டி எடுத்துக்கொண்டு அப்பசுமலைகளை நோக்கி நடந்தான். அவற்றிலிருந்து ஓடி கடல்நோக்கி வந்த சிற்றோடை ஒன்றின் நீர் தூயதாக இருந்தது. அதை அள்ளி அருந்திவிட்டு அந்த மலைநோக்கிச் சென்றான்.
மலைகளில் உண்ணத்தக்க கனிகளும் சிற்றுயிர்களும் நிறைந்திருந்தன. மானுடவிழியால் நோக்கப்படாத காடு என்று அதன் திமிர்ப்பே சுட்டியது. தொங்கும்காடுகளை கடந்துசென்றபோது மலைகள் சூழ்ந்த கடல்குடா ஒன்றை கண்டான். அதன் வட்டக்கரையில் அலை இதழிதழாக விரிந்து படிந்துகொண்டிருந்தது. அதன் மையம் முழுமையாகவே வெண்ணிற இருளால் மூடப்பட்டிருந்தது. அதற்குள் அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கும் ஒலியை கேட்டான். முகில்களுக்குமேல் பச்சைமுகிலென நின்றிருந்தது இந்திரகீலமலை.
அவன் குனிந்து கீழே கூர்ந்து நோக்கினான். அது மண்ணை தொட்டிருக்கவில்லை. நீர்ப்பொழிவுதான் கடல்மேல் கால்களை ஊன்றியிருந்தது. அக்காட்சியால் விழியும் சித்தமும் கட்டப்பட்டவனாக அவன் நோக்கிக்கொண்டு நின்றான். அவன் உடல் காய்ந்து உப்பரிக்கலாயிற்று. கடற்காற்றில் உலர்ந்த முடியும் தாடியும் பறந்து அலையடித்தன. இந்திரகீலம் பறந்து அகல்வதுபோல் தோன்றியது. அது விழிமயக்கா என அவன் இமைகொட்டி மீண்டும் நோக்கினான். வான்வழியாக வெண்பறவைகள் வந்து அதில் செறிந்திருந்த மரங்களின் மேல் அமைந்தும் எழுந்து பறந்தும் வானில் சுழன்றமைய மலையில் இருந்து வெண்புகை எழுவதுபோல் தோன்றியது.
முகில்களுக்கு அப்பால் பின்காலைச்சூரியன் எழுந்ததும் அவை வெள்ளிச்சிறகுகளாக மாறின. அப்போதுதான் அவன் மலையின் மணிமுடி என வளைந்து நின்றிருந்த வான்வில்லை நோக்கினான். அது மழைவில் போல் கரையவில்லை. ஏழுவண்ண உலோகங்களால் கட்டப்பட்ட அணித்தோரணவளைவுபோல அவ்வண்ணமே நின்றது. அவன் அதை நோக்கியபடியே அருகிருந்த மலை ஒன்றின் மேல் மரங்களை பற்றிக்கொண்டு ஏறிச்சென்றான். மேலும் மேலுமெனச் சென்று உச்சியில் நின்றபோது முகில்களுக்கு அப்பால் மிதந்து நின்றிருந்தது இந்திரகீலம்.
அதை அணுகும் வழியென எதுவும் தென்படவில்லை. அவன் மலைவிளிம்பில் சென்று நின்று கையெட்டும் தொலைவுக்கு அப்பால் நின்றாடிய மலையை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் மரங்களனைத்தும் தளிர்கொண்டு தழைத்திருந்தன. இலைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நோக்கமுடியும் அண்மை. ஆனால் கீழே நோக்கியபோது பாறைகள் செறிந்த கடல் அலைவிரிய நெளிந்துகொண்டிருப்பதைத்தான் பார்க்கமுடிந்தது. அவன் மீண்டும் அந்த மலையிலேயே சுற்றிவந்தான். களைத்துப்போய் உச்சிமலைப்பாறை ஒன்றில் படுத்து விழிமூடினான்.
இமைகள் வெயிலொளியில் குருதிப்பரப்பென தெரிந்தன. அவனுக்குள்ளும் ஒளிநிறைந்திருந்தது. அவன் குருதியொளியில் சென்றுகொண்டிருந்தான். எவரோ அழைப்பதுபோலத் தோன்றி விழித்தெழுந்தான். மிக அண்மையில் நின்றிருந்தது இந்திரகீலம். விழிப்பெழுந்த மறுகணமே எம்பிப் பாய்ந்து அதன் மரச்செறிவின்மேல் சென்றுவிழுந்தான். அவன் தயங்குவான் என எண்ணி நின்றிருந்த மலை திகைத்துவிலகுவதற்குள் அவன் அதன் மரக்கிளைகளை பற்றிக்கொண்டான். மிரண்ட புரவிபோல இந்திரகீலம் அவனை உதற முயன்றது. காற்றில் கழுகுபோல சிறகடித்து துள்ளிச்சுழன்றது. மேலும் கீழும் ஆடியும் விரிந்து சுருங்கியும் அவனை வீழ்த்த முயன்று பின் மெல்ல அடங்கியது.
அவன் மரங்களினூடாக பாறை ஒன்றின் மேல் இறங்கினான். வெண்சுண்ணமலை. அதன் பாறைகள் பளிங்குபோல் ஒளிகொண்டிருந்தன. இளமழை அதன் இடுக்குகள் வழியாக நீரோடைகளை பாய்ந்து இழியச்செய்தது. இலைகள் அனைத்தும் ததும்பி சொட்டிக்கொண்டிருந்தன. நீரின் ஒளியால் காடு நிழலின்றி பொலிந்தது. அவன் பாறைகள் வழியாக மேலேறிச்சென்று மரங்களின் செறிவைக் கடந்து மென்புல்வெளி பரவிய மலைக்குவடுகளை அடைந்தான்.
சிலிர்த்த புரவியின் உடலென ஒளிகொண்டிருந்தது அந்நிலம். அதற்குமேல் பச்சைப்பாசிப்பரப்பு படிந்த பளிங்குப்பரப்பாலான முகடுகள் வந்தன. அவற்றின்மேல் எழுந்து வளைந்திருந்த வான்வில்லை கையால் தொட்டுவிடமுடியுமெனத் தோன்றியது. அங்கே மானுடர் எவரும் வந்திருக்கமுடியாதென்று அவன் அறிந்தான். தேவரோ தெய்வங்களோ அங்குள்ளனவா என்று விழிசெவிமெய்மூக்கு கூர்ந்தபடி நடந்தான்.
[ 6 ]
முதலில் அவன் அறிந்தது மணத்தை. மலர்மணமென தோன்றியது. மலருக்கு இல்லாத உயிரின் வீச்சு அதிலிருந்தது என்று பின்னர் உணர்ந்தான். புனுகா கஸ்தூரியா கோரோசனையா என்று பின்னர் ஐயுற்றான். அவையனைத்திலும் நுண்மையாகக் கலந்திருக்கும் குருதிமணம் அதில் இருக்கவில்லை. பின்னர் அவன் யாழொலியை கேட்டான். குழல் அதனுடன் கலந்ததை உணர்ந்தான். சலங்கைகளா சிறுமணியா? அவன் விழி அறிவதற்குள்ளாகவே உடல் அருகமைவை உணர்ந்தது. அவன் அவளை நோக்கியபோது மிக அருகே நின்றிருந்தாள். “எங்ஙனம் இங்கே வந்தீர், இளையவரே?” என்றாள். “இங்கே மானுடர் வர ஒப்புதலில்லை, அறியமாட்டீரா?”
அர்ஜுனன் அவளை நோக்கி விழிசலிக்காமல் நின்றான். ஒவ்வொரு கணுவிலும் மலர்மட்டுமே நிறைந்த மரக்கொம்புபோல அழகொன்றேயான உடல்கொண்டிருந்தாள். செம்மலர் நிற உடலில் மூச்சிலெழுந்த மாமுலைகள் மேல் மணிமாலை துவண்டது. அவன் நோக்கை அறிந்ததும் அவள் இதழ்களில் சிறுநகை வந்துசென்றது. தன் நோக்கைச் சரித்து மெல்ல முகம் சிவந்து “ஆனால் உங்களை இங்கு கண்டதில் நான் உவகையே கொள்கிறேன். இந்நிலத்தின் காவல்யட்சி நான். என் பெயர் வாமை. இக்கணம்வரை ஆண் என எவரையும் நோக்காதவள்” என்றாள்.
பின்னர் உதடுகளைக் கடித்து நாணம் கொண்டு மெல்ல உடல் துவண்டு “அழகு என்பது காமத்தின் உடல்வெளிப்பாடு. அணிகொள்ளுதலோ விழைவை கொண்டாடுதல். அழகுக்கு அணிகொண்டு ஆயிரமாண்டுகாலம் இங்கே காத்திருப்பதன் துயரை நான் சொல்லி புரியவைக்கமுடியாது” என்றாள். அவனை தன் சிவந்த விழிகளால் நோக்கி “நன்று, இதற்காகத்தான் அக்காத்திருப்பு என்றால் அது ஒரு தவமே. தவமுதிர்வே தவத்தை பொருள்கொண்டதாக்குகிறது” என்றாள்.
அர்ஜுனன் “நான் எந்தையை பார்க்கும்பொருட்டு இங்கே வந்தேன்” என்றான். “உங்களை அங்கே வழிகாட்டி அழைத்துச்செல்கிறேன். தேவர்களுக்கு அரசர் இங்கு எப்போதேனும்தான் வருவார். அவர் வருவதற்காக ஒவ்வொருநாளும் மலர்பூத்து மணம்கொண்டு காத்துநின்றிருக்கிறது இந்த மலை” என்றாள் யட்சி. அவன் முன்னால் செல்ல அவள் பின்னால் வந்தபடி “நாம் காதல்கொண்டாடும்பொருட்டே இது இவ்வண்ணம் நின்றுள்ளது என்றே எனக்குப்படுகிறது” என்றாள். “நீங்கள் என் அழகில் மயங்கியிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். எப்பெண்ணும் உணர்ந்துகொள்வது ஆண்விழிகளின் காமம்.”
அவன் “ஆம், நான் உன் அழகால் பித்தாகியிருக்கிறேன் என்பது உண்மை” என்றான். துயர்மிக்க மென்சிரிப்புடன் “ஆனால் உளம் பொருந்தாது உடல்பொருந்தும் காமம் என்பது தன்னிழிவை எஞ்சவைப்பது. உறவுக்குப்பின் ஆணை தனிமையில் உணரச்செய்வது. நிறையாக்காமம் பேரழகையும் உளம்கசப்பதாக ஆக்கிக்காட்டும்” என்றான் அர்ஜுனன். “மானுடனாகிய என் உளம் தேவர்தேவியாகிய உனக்குத் தெரியுமா என்று ஐயுறுகிறேன்” என்றான். “எவர் சொன்னது? ஆண்களின் உள்ளத்தை மலருக்குள் தேனை அறியும் வண்டென உணர்பவள் நான். உங்கள் உள்ளத்தின் அனைத்து அசைவுகளையும் இக்காட்டின் அசைவுகள்போல கண்டுகொண்டிருக்கிறேன்” என்றாள்.
“அவ்வண்ணமென்றால் சொல், என் உள்ளம் நிறைந்துள்ள பெண் வடிவு எது?” என்றான் அர்ஜுனன். “உன் உள்ளத்தை நான் அறியவும் அவ்விடை உதவும் என எண்ணுகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னான். அவள் “ஆணென்பது அணுதொறும் உடலில் நிறையும் பருவத்தில் உங்களை அறிபவள் நான். இளமைக்காதலி அறிந்த ஆணை எவருமறிவதில்லை” என்றாள். அவன் தலையசைத்து நீள்மூச்செறிந்து “எவரேனும் அறிந்துகொள்ளவேண்டும் என்றே எல்லா மந்தணங்களும் ஒளிந்து காத்துள்ளன” என்றான்.
அவள் புன்னகைத்து “ஐவரும் காதல்கொண்டுள்ள பெண், பாஞ்சாலத்து அரசி, திரௌபதி” என்றாள். “ஆம், அவள்மேல் நான் மாளாக்காதல் கொண்டவனே. ஆனால் அவளை விடவும் ஒருத்தி இருக்கிறாள்” என்றான் அர்ஜுனன் நடந்தபடி. “உங்கள் தோழரின் பிறவடிவள். யாதவ அரசி, சுபத்திரை” என்றாள் யட்சி பின்னால் வந்துகொண்டே.
“ஆம், அவள்மேல் நான் கொண்டுள்ளது காதலையும் கடந்த அன்பு” என்றான் அர்ஜுனன். “மூன்றாம் முறை நீ விடைசொல்லவில்லை என்றால் நின்றுவிடு!” அவள் தயங்கி நின்றாள். அவன் முன்னால் செல்ல இடைமணியும் சிலம்பும் கழுத்தணிந்த முத்தாரமும் ஒலிக்க அவன் பின்னால் ஓடிவந்தாள். மூச்சிரைக்க கன்னியருக்குரிய இன்மழலைமொழியில் “உங்கள் அன்னை குந்தி. ஆம், அவளாகவே இருக்கமுடியும். காதல்பெண்களில் அன்னையைத் தேடுவது ஆண்களின் இயல்பு” என்றாள். அவன் புன்னகையுடன் “இல்லை… இல்லையென்று இந்த மலர்மரம் சான்று” என்றான். ஆம் என்று மலர்மரம் கிளையசைத்தது.
அவன் கடந்துசெல்ல ஓங்கி எழுந்த யட்சி பதினெட்டு கைகளும் துறுவிழிகளும் திறந்த வாயுமாக நின்று நூறு சிம்மங்களின் குரலில் அலறினாள். மரங்களை அறைந்து குலுங்க வைத்தாள். கற்பாறைகளை காலால் மிதித்துப் பிளந்தாள். அவன் திரும்பிப்பார்க்கவில்லை. “திரும்பிப்பார்… ஒருகணம் திரும்பிப்பார்” என அவள் நெஞ்சில் அறைந்தபடி கூச்சலிட்டாள். அவன் அருகே நின்ற பாறைகளில் வெடிப்போசையுடன் அறைந்தாள். அவள் நிழலெழுந்து அவன் மேல் விழுந்தது.
திரும்பாமல் அவன் கடந்துசென்றபோது மெல்லிய விம்மலோசை கேட்டது. “நில்லுங்கள், என் விழைவு மெய்யானது. இனி அது நிறைவுறப்போவதே இல்லை” என்றாள் அவள். அவன் அவ்வெல்லை கடக்கையில் “நலமுணப்படாது துறக்கப்பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்” என்றாள். அழுகையொலி தேய்ந்து மறையும்வரை அவன் இறுகிய உடலசைவுகளுடன் நடந்து பின்பு மெல்ல எளிதானான்.
அவன் முன் கருநிற உடலும் அலைக்கும் நீள்குழலும் ஒளிரும் வாள்விழிகளுமாக இன்னொரு யட்சி தோன்றினாள். “அவள் சான்றவள் அல்ல. ஆணுள்ளம் அறியாப்பெண் அவனுடன் ஒருபோதும் முற்றிலும் கூடமுடியாது. ஒவ்வொரு கூடலுக்குப் பின்னரும் அவ்விடைவெளி வளர்கிறது. அத்தனை ஐயங்களும் கசப்புகளும் சினங்களும் அவ்விடைவெளியிலேயே தேங்குகின்றன” என்றபடி அவள் அவனருகே வந்தாள். அவள் உடலில் வியர்வையுடன் மதநீரின் ஊன்மணமும் கலந்து அவனை அடைந்தது.
“ஆனால் சொல்லொடு சொல்லென இணையும் பெண் ஆணை விடுதலை செய்கிறாள். ஆடைகளைதல் பெண்ணுக்கு எளிது. ஆடையுடன் அவள் அனைத்தையும் களையலாகும். அகத்தின் ஆடைகளை ஆண்கள் எளிதில் களைவதில்லை” என அவனுக்குமட்டும் என எழுந்த சொற்களால் உரைத்தாள். “ஆம், சொல்லி அறியவைத்தல் இயலாததே ஆணின் அகம் பெண்ணுக்கு. உணராப்பெண்களுக்கு ஆண்களின் எச்சொல்லும் பொருளற்றதே. சொல்லச்சொல்ல அவள் உணராதவள் என்பதையே அவர்கள் உணர்கிறார்கள்” என்றான் அர்ஜுனன்.
“நான் மைந்தரை மடியிலேந்தி கணவனை அறியும் மனைவிபோன்றவள். விதைநோக்கி மரத்தை உணர்வதே உகந்தவழி” என்றாள். அர்ஜுனன் அவளை ஏறிட்டுநோக்கியபின் கடந்துசென்றபடி “நான் என்னுள் தனியன்” என்றான். “இளையவரே, தன் தனிமையை உடைக்காத பெண்ணை ஆணும் தன் ஆணவத்தை வெல்லாத ஆணை பெண்ணும் விரும்பமுடியாது” என்றபடி அவள் பின்னால் வந்தாள். “நில்லுங்கள்! உங்கள் உள்தனிமைவரை நிலத்தை ஊடுருவும் நீரென வந்தமையும் ஆற்றல்கொண்டவள் நான்” என்றாள்.
அவன் திரும்பாமல் நடந்துகொண்டிருந்தான். “ஒருகணநோக்கிலேயே என் உடலை முற்றிலும் நோக்கிவிட்டீர்கள். உடலில் காமம் எஞ்சுவதுவரை உள்ளத்திலும் காமம் எஞ்சுவதே ஆணின் இயல்பு” என்றபடி அவள் உடன்வந்தாள். வளையலோசை குலுங்க ஆடைதிருத்தினாள். “என் பெயர் தட்சிணை. உங்களுக்காகவே இங்கே காத்திருந்தேன். மலர்மென்மைகொண்டவள் மலைப்பாறைகளைப்போல காலம் கடந்து காத்து அமர்ந்திருப்பதன் பெருந்துயரை நீங்கள் அறிவீர்கள்…”
அர்ஜுனன் “ஆம்” என்றான். “நீ சொல், அவளிடம் நான் கேட்ட வினா இது. பிறிதொரு நிகரியின்றி என் நெஞ்சமர்ந்தது எவள் உரு?” என்றான் அர்ஜுனன். அவள் ஒருகணம் எண்ணியபின் “ஆணவம் கொண்ட ஆணுள்ளத்தைக் கரைத்து ஆழத்தில் நின்றிருக்கும் எளியபெண் ஒருத்தி இருப்பாள். முட்பன்றி களிமண்ணில் பதிவதுபோல நீங்கள் பதிந்த இடம் அது. உலூபி” என்றாள். அவன் “ஆம், சற்றேனும் துயர்கொள்கையில் அவளையே நாடிச்செல்கிறது என் உள்ளம்” என்றான். “ஆனால் விஞ்சியிருப்பது பிறிதொரு முகம்.”
அவள் சீற்றத்துடன் பின்னால் வந்து “நில்லுங்கள். இம்முறை பிழைக்காது. இதோ, இந்த பொற்கொம்புக் கலைமான் சான்று” என்று கூவினாள். “கணமும் தயங்காது விட்டுச்செல்லும் உங்களை கணமும் தயங்காமல் விட்டுநின்றவள் ஒருத்தியே. சித்ராங்கதை. ஆணென நிறைந்தவன் பெண்ணென்றாகி அறிந்த ஆணுள்ளம் கொண்டவள். முடிவடையாத ஆடல் வழியாக ஈசனும் அறியாத பெண்ணின் அகத்தைக் காட்டியவள்.” அவன் முன்னால்சென்றபடி “இல்லை” என்றான். ஆம் என்று கலைமான் தலையசைத்தது. அவள் உறுமியபடி “இன்னும் ஒருமுறை. இன்னும் ஒரேமுறை” என்றாள். “ஆம்” என்றான் அவன்.
“அவள் பெயர் மாலினி. அன்னையென வந்தவள். அன்னை கொண்ட விலக்கம் சற்றுமில்லாத அன்னை” என்றாள். “இல்லை” என்றான் அர்ஜுனன். அவள் சினத்துடன் ஓங்கி தன் நெஞ்சை அறைந்தபடி நின்றாள். பிடியானைபோல் பிளிறியபடி அவனை நோக்கி ஒடிவந்தாள். அவன்மேல் குளிர்ந்த காற்றென மோதி நிலையழியச்செய்தாள். “நில்லுங்கள், விட்டுச்செல்லாதீர்கள். நில்லுங்கள்!” என்று கூவினாள். அவன்முன் உடல்தளர்ந்து முலைதூங்கி முகம்சுருங்கிய முதுமகளாக வந்துநின்று வழிமறித்தாள். “இம்முதுமையில் நான் காலமுடிவுவரை இருப்பதா? சொல்லுங்கள்!” என்றாள்.
அவன் மெல்லிய புன்னகையுடன் அவளை கடந்துசென்றான். அவள் விம்மியழுவதை கேட்டான். ஊன்மட்கும் மணம் எழுந்தது. சிதைப்புகை எரிந்தது பின்னர். அவன் நீள்மூச்சுடன் கடந்துசென்றான். எதிரே மாந்தளிர் நிறத்தில் நீண்டகாதுகளில் குழைதொங்கி தோள்தொட்டாட தொய்யில் எழுதிய முலைகளும் தோள்விரிவில் பொன்னகைகளுமாக வந்தவள் அவனை நோக்கி புன்னகைசெய்து “நான் மத்யை. இடமும் வலமும் பொய்யே. முன்செல்பவனுக்கு திசையென்பது முகப்புமட்டுமே” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான்.
அவள் அவனுடன் வந்தபடி “உங்கள் உள்ளறிவதில் அவர்கள் பிழைசெய்தனர். இளைஞனாக உங்களை எண்ணியவள் வாமை. நடுவயதினனாகக் கண்டவள் தட்சிணை. நீங்கள் இன்று முதுமைக்குள் வந்துவிட்டவர். கடந்துவிட்டவர் நினைவில் எஞ்சுவதென்ன என்பதே வினா. அதை நான் அறிகிறேன்” என்றாள். அவன் புன்னகையுடன் “ஆம், முதிய மனைவியே ஆணை முழுதறிகிறாள் என்பார்கள். சொல்க, என் உளம்நின்ற முதன்மைப் பெண்முகம் எது?” என்றான்.
அவள் “முதல்பெண். அவளுக்குப் பெயரென்று உங்கள் உள்ளத்தில் ஏதுமில்லை” என்றாள். “கொழுத்த உடல்கொண்டவள். கரியவள். பரத்தைத்தெருவில் உங்களை வந்து அழைத்து தன் மடியிலெடுத்துக்கொண்டவள்.” சிரித்தபடி “பெண்மணம் பெண்வெம்மை பெண்ணொலி என உங்களுள் பதிந்த முதல்வள்” என்றாள். “உடலளித்தவள். ஒருபொழுதை மட்டுமே பகிர்ந்தவள். ஒருதுளியை மட்டுமே அளித்தவள். அளித்துப் பரந்து உடல்சூழ்ந்தபோதும் தன்னை உள்ளிழுத்து முற்றிலும் ஒளிந்துகொண்டவள். ஒருபோதும் பிறகு எண்ணாதொழிந்தவள்.” அர்ஜுனன் “ஆம், ஒருநாளும் அவளை மறந்ததில்லை. ஆனால் அவளல்ல” என்றான்.
அவள் முகம் சிவந்து “அவ்வண்ணமென்றால் இன்னொருத்தி. சென்றடையும் மறுஎல்லையில் காத்திருப்பவள். எளியசேடி. ஒவ்வொரு கணமும் நினைத்திருப்பவள். உள்ளும் புறமும் எஞ்சுவதும் கடந்ததும் அளித்தவள். எஞ்சாமல் தன்னை உணர்பவள்” என்றாள். “ஆம், அவளும் என்றும் என் நெஞ்சிலிருக்கிறாள். அவளல்ல என இந்த மலை அறியும்.” மலை ஆம் ஆம் ஆம் என எதிரொலித்தது. அவள் முகம் சுருங்கியது. “நீங்கள் என்னை கடந்துசெல்ல முடியாது” என்றாள். “முதுமகள் அறியா ஆணுள்ளம் இருப்பதில்லை.”
“சொல், நான் கொண்ட அம்முகம் எவருடையது?” என்றான். அவள் மேலும் அருகணைந்து அவன் முகத்தை கூர்ந்து நோக்கி “ஆம்” என்றாள். உடனே அச்சத்துடன் விலகி “ஆம், ஆம்” என்றாள். “எம்முகம் அது? நானே அதை இன்னமும் அறிந்திருக்கவில்லை. ஒரே ஒருமுறை அதை கனவில் மட்டுமே கண்டுள்ளேன். அன்று எழுந்த உளப்பெருக்கை மட்டுமே நினைத்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்… அவர்தான்” என்று அவள் சொன்னாள். “கானாடலின்போது ஒருநாள் நீரில் நீங்கள் கண்ட அம்முகம். அதை அலைகள் நெளியச்செய்தன. தேடிச்சலித்து ஓய்ந்தீர்கள். மூன்றாம்நாள் கனவில் அது குவிந்தது.”
அவன் படபடப்புடன் அவளையே நோக்கினான். அவள் முகம் மெல்ல நெகிழ்ந்தது. “கருமுகம். நீளவிழிகள். செவ்விதழ்களில் குறுநகை. அலைகுழலில் மயிற்பீலி சூடி மஞ்சள்பட்டாடை அணிந்து இதழில் குழல்சேர்த்து இசைத்தபடி கடம்பமரத்தடியில் நின்றாள் அவள்.” அவன் நீள்மூச்சுடன் நெகிழ்ந்தான். “ஆம்” என்றான். “அவர்தான் பிறிதெவருமில்லை. இப்பிறவியில் வேறுமுகமென்று ஏதுமில்லை.” அவள் “நீங்கள் விழையும் அம்முகம் கொண்டு எழுந்து உங்களை வெல்லவேண்டுமென்பதே என் ஆணை. அம்முகம் இப்புவியிலெவரும் சூடமுடியாத முகம், இளையவரே” என்றாள். “நன்று, நான் செல்லவேண்டிய வழியேது என்று சொல்” என்றான்.
அவள் அவன் முன் ஆறுவயதுச் சிறுமியென்றாகி நின்றாள். “முதுமகளாகிய மனைவி தன் கணவனுக்கு காட்டவிழையும் தோற்றம் இது” என்றாள். “என்னை கையிலெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயர்மகள் நான்.” அவன் குனிந்து அவளை எடுத்துக்கொண்டான். “நீ கிருஷ்ணையின் முகம் கொண்டிருக்கிறாய்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் பிறக்கவே போவதில்லை” என்று அவள் சொன்னாள். “செல்க, அந்த மலையுச்சிமேல் விண்ணகத்தேர் வந்திறங்கும் இடம் உள்ளது” என்று சுட்டிக்காட்டினாள்.
அவன் அவளை முத்தமிட்டான். “அளியவள்” என்றான். “கிருஷ்ணையைப்போல் துயர்கொண்டவள் எவருமில்லை. தன் பெண்முகம் முளைப்பதை அவள் காணப்போவதே இல்லை.” அவள் புன்னகைசெய்து “அரியணை அமர்தல்போல் தீயூழ் பிறிதில்லை, இளைய பாண்டவரே” என்றாள். முத்தமிட்டு முத்தமிட்டு அச்சிறுமியைக் கொஞ்சியபடி அவளுக்கு மலர்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் சுட்டிக்காட்டி விளையாடியபடி அர்ஜுனன் மலைமேல் ஏறிச்சென்றான்.