கிராதம் - 44

[ 16 ]

பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள் சிதல் நிரைகளைக் கடந்து அவ்வொரு கணத்துளியில் முன் நின்றன. ஏனெனில் அலையெழுந்து மோதிச் சிதறி கொந்தளித்து மீண்டும் எழுந்து கொண்டிருந்தபோதும் கடல்ஆழம் அதை அறியாது இருண்ட மோனத்தில் தன்னுள் தான் நிறைந்த ஊழ்கத்தில் இருந்தது. மறுபக்கம் நுரை பெருகுவதுபோல் எழுந்து கடலுக்கு நிகர்நின்ற போதிலும் புற்றுகளின் ஆழத்தில் உயிர்வெள்ளம் கொப்பளித்து அலைசுழித்துக் கொண்டிருந்தது.

அக்கணத்துளி பெருகி கனவறிந்து பின் கருத்தறிந்து இறுதியில் கண்ணறியும் வகையில் உருக்கொண்டது. அதைக் கண்டதுமே சிதல்கள் சீற்றம்கொண்டு மேலும் பெருகின. அலைகளோ மேலும் அமைதி கொண்டன. வெறிகொண்டவை எழுந்து பின் அமைகின்றன. அமைதிகொள்வன  மெல்ல வளர்ந்து நிறைகின்றன. அலைமேல் அலையென கடல்கள் வளர்ந்தன. அலைகளென எழுந்த புற்றுகள் சினம்கொண்டு வீங்கின.

புற்றுச்சுவர்களின் முகப்புகள் கரைந்து இடிந்து கடலுக்குள் விழுவதை நாளும் கௌமாரன் பார்த்துக்கொண்டிருந்தான். அது ஒவ்வொருநாளும் நிகழ்வது. இழந்தது மீண்டும் பெருகி எழுவதையே அவன் அந்நாள்வரை அறிந்திருந்தான்.  ஆயினும் தொண்ணூற்றொன்பது கோட்டைகள் சூழ்ந்த பெருநகரில் அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்தபடி சொல்லென ஆகும்போது பொருளிழக்கும் அச்சத்துடன் அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

அக்கோட்டைச்சுற்றை ஒரு விராடவடிவனின் பருவுடல் என்று கவிஞர் சொன்னார்கள். அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என அவை ஐந்து பெருஞ்சுற்றுகள். முதலில் இருந்த அன்னம் செவி, மூக்கு, விழி, நாக்கு, தோல் என ஐந்து. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என பிராணம் ஐந்து. மனம் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம், பூர்ணம் என ஐந்து. ஸ்தவிரம், ருஜு, ஆலயம் என விஞ்ஞானம் மூன்று. தத்பரம், பரம் என ஆனந்தம் இரண்டு. இருபது வட்டங்களுக்குப் பின்னர் எழுபத்திரண்டு நாடிகளின் வளையங்கள். பின்னர் காலம், நியதி, கலை, வித்யை, ராகம், புருஷன் என்னும் வளையங்களுக்குப் பின் மாயாவளையம். அதற்குள் இருந்தது ஏழு அடுக்குகள் கொண்ட விருத்திரனின் மாளிகை.

மூலம், சுவாதிட்டம், மணிபூரம், அநாகதம், விசுத்தி, என்னும் ஐந்து நிலைகளில் முறையே ஏவலர், சூதர், காவலர், கருவூலர், அமைச்சர் ஆகியோர் குடியிருந்தனர். ஆஞ்ஞை என்னும் ஆறாம் தளத்தில் விருத்திரனின் இருப்பிடம். ஏழாம் நிலையில் உச்சியில் இருந்த சகஸ்ரத்திலிருந்து அவன் விண்ணில் எழுந்தான். முகில்களைத் தொட்டு பறந்து இந்திரபுரியை அடைந்தான். உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.

புற்றுப்பெருங்கோட்டைகள் கரைந்திடிந்து அலைகளுக்குள் விழும் ஓசை அவன் அறையிலிருக்கையில் நாய் நீர்குடிக்கும் ஒலிபோல் கேட்டது. உப்பரிகையில் நின்று விழிகூர்ந்தால் முதலை இரைபற்றுவதுபோல ஆகியது. எழுந்துசென்று இருளில் நின்று நோக்கியபோது வளைந்து வளைந்து வந்த நாகங்களுக்கு முன் நிரைவகுத்து முடிவிலாது சென்று நின்றிருக்கும் தவளைக்குலம் எனத் தோன்றின புற்றுக்கோட்டைகள்.

துயில்கையிலும் அவ்வோசையை அவன் கேட்டான். அவன் கனவுக்குள் குருதி எழ கரிய உருவங்கள் மண்ணறைந்து விழுந்து புதைந்து ஆழத்தில் வேர்ப்பரப்பாகி கிடந்தன. தன் குலத்து மூதாதையரின் இமையாவிழிகளை நோக்கியபடி துயிலுக்குள் அவன் விழித்துக் கிடந்தான். எழுந்ததுமே ஓடிவந்து உப்பரிகையில் நின்று நோக்குகையில் புற்றுக்குவைகளில் ஓரிரண்டு குறைந்திருப்பதைக் கண்டு நெஞ்சு பதைத்தான். எண்ணித்தொலையாதவை புற்றுகள் என்று அறிந்திருந்தும் எண்ணாமலிருக்க முடியவில்லை உள்ளத்தால். எண்ணி எண்ணிச் சலிக்கையில் புற்றுகள் குறைந்துள்ளன என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

புற்றுறை குலத்தலைவரை மீண்டும் மீண்டும் அழைத்து “என்ன நிகழ்கிறது?” என்று கேட்டான். “எங்கள் ஆற்றல் நூறுமடங்கு பெருகியிருக்கிறது, அரசே” என்றார் முதற்தலைவர். “புற்றுகள் குறைகின்றனவா?” என்றான். “இல்லை, இருமடங்கு கூடியிருக்கின்றன” என்றார் இரண்டாம்தலைவர். “உங்கள் ஐயம் அது” என்றார் மூன்றாம்தலைவர். “தலைவர்களே, ஐயம் என ஒன்று ஏன் எழுகிறது? என் உள்ளிருந்து அந்த ஐயத்தை எழுப்புவது எது?” என்றான். “அது உங்கள் ஆற்றலின்மையே” என்றார் நான்காம்தலைவர். அப்போது முதிய தலைவர் ஒருவர் மெல்ல அசைந்து முனகினார். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் கௌமாரன்.

“எங்கள் குலம் நூறெனப் பெருகுகிறது. அது உண்மை, ஆனால் அலைகளின் விசையோ நூற்றியொருமுறை பெருகியிருக்கிறது” என்றார் அவர். புற்றிகர் அமைதியாயினர். ஒருவர் “நாளையே அவ்விடைவெளியை வெல்வோம்” என்றார். “இளையோரே, அவ்விடைவெளியை உருவாக்கியது எது? இத்தனை நிகர்நிலையாற்றல்களின் நடுவே அவ்விடைவெளி உருவாகிறதென்றால் அது எளிய மீறல் அல்ல. அணுதோறும் ஆயிரம் புவி சென்றமைந்த எடைகொண்டது அது. அதைக் கடப்பது எளிதல்ல” என்றார் முதியவர். “வெல்வோம், வெல்வோம்” என்று அவர்கள் கூவினர். “நாம் தொடக்கம் முதலே எழுவிசை கொண்டிருக்கிறோம். இத்தனை விசையெழுந்த பின்னரும் எப்படி அந்த சிறுமாத்திரை இடைவெளி விழுந்தது?” என்றார் முதியவர்.

“நீரே சொல்லும்” என்றனர் குலத்தோர். “நாம் கொண்டுள்ள எழுவிசையே சுமையா என்ன? நீர் அதன் ஆழத்தில் அசையா நிலைவிசைகொண்டுள்ளதா என்ன?” என்றார் முதியவர். “நோக்குக முதியவரே, நாங்கள் வெல்வோம்” என்றார் இளைய குலத்தலைவர் ஒருவர். “மைந்தா, அவ்விடைவெளி எங்கள் ஆற்றலின்மையாலோ அவர்களின் ஆற்றலாலோ உருவானதல்ல. மாற்றமுடியாத ஊழொன்றால் நடுவே செருகப்பட்டது” என்றார் முதியவர். அவர்கள் அமைதிகொண்டனர். அவையின் பின்நிரையில் அசைவெழுந்தது. விழியில்லாத முதுகுலத்தலைவர் மெல்ல செருமினார். அவரை அவர்கள் நோக்கினர். முதுமையால் புற்றுக்குள் செயலற்று அமைந்த அவரை நால்வர் சுமந்து அவைக்கு கொண்டுவருவது வழக்கம்.

“இன்றுவரை நான் இங்கேதும் சொன்னதில்லை. இன்று சொல்ல விழைகிறேன். அசுரரே, புவி தோன்றிய முதற்கணம் முதல் நாம் இங்கு இருக்கிறோம். அன்னத்தை உண்டு மண்ணில் உப்பாக ஆக்குகிறோம். மண்ணை மீண்டும் அன்னமாக்குகின்றன புற்கள். புல்லும் சிதலும் இணைந்துருவாக்கிய நெசவு இப்புவி என்பார் நூலோர். எங்கேனும் புல் அழிந்து சிதல் மேலேறிய காலமுண்டா? எப்போதேனும் சிதல் ஒருகணம் முன்சென்று முந்தியுள்ளதா?” என்றார். அவர்கள் நோக்காடிக்கொண்டனர்.

“நாம் அழிப்பவர்கள். ஆக்கத்திற்கு அரைக்கணம் பின்னரே நாம் செல்ல முடியும். அந்நெறியையே இவர்கள் ஊழென்று இங்குரைக்கிறார்கள்” என்றார் முதியவர். சற்று எரிச்சலுடன் “என்ன சொல்கிறீர்கள்? இக்கோட்டை அழியுமா?” என்று கௌமாரன் கேட்டான். “ஐயமே வேண்டியதில்லை. இப்புவியில் கோடானுகோடி ஆண்டுகளாக கட்டப்பட்ட அனைத்து சிதல்புற்றுகளும் அழிந்துள்ளன. அழிந்தாகவேண்டும். உயிரை நாங்கள் வெல்ல வேண்டுமென்றால் அந்த ஆணை விண்வெளியில் ஆதித்யர்களை அள்ளி விளையாடும் பிரம்மத்திடம் இருந்து வரவேண்டும்” என்றார் முதியவர்.

அவை சொல்லின்றி கலைந்தது. ஒவ்வொருவரும் அச்சொற்களின் எடையை உணர்ந்தனர். ஏனென்றால் அவர்கள் அதை முற்றாக முன்னர் அறிந்திருந்தனர். அவ்வுண்மைக்கு எதிராகவே அவர்கள் கிளர்ந்தெழுந்தனர். மாற்றவியலாத ஒன்றுக்கு எதிராகவே அத்தனை கொந்தளிப்பு எழமுடியுமென அவர்கள் உணர்ந்தனர். அவைநீங்கிய அக்கணமே அவர்களனைவரும்  ஒன்றாக  விடுதலை உணர்வை அடைந்தனர். இனி கணம்தோறும் முழு உயிராலும் கொப்பளிக்கவேண்டியதில்லை. இனி தன்னைப்பெருக்க தன் உயிர்த்துளி ஒவ்வொன்றையும் நுரைக்கவைக்க வேண்டியதில்லை.

ஆனால் அந்த விடுதலையுணர்வால் அவர்கள் தோல்வியை ஏற்க சித்தமானார்கள். அங்கிருந்து செல்லும்போதே தோற்றழிந்தபின் தங்கள் குலங்கள் எவ்வாறு மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் சிறுதுளையொன்றினூடாக கசிந்து வெளிவந்து மீண்டும் தழைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். தோல்வியை பலமுறை உள்ளூர அடைந்தபின் அது நிகழ்வதற்காக பொறுமையிழந்து காத்திருக்கலானார்கள்.

[ 17 ]

புற்றுக்குலங்களின் அவை முடிந்த அன்றே சகஸ்ரத்தில் ஏறி தன்னை நுண்ணுருவாக்கி  பறந்து விண் ஏகி இந்திரபுரியை அடைந்தான் கௌமாரன். அமராவதியின் பெருவாயிலுக்குள் நுழைந்தபோது அங்கே இன்மதுவின் மணமே நிறைந்திருக்கக் கண்டான். அத்தனை பூக்களிலும் கள் வழிந்தது. அத்தனை வண்டுகளும் குழலும் யாழுமென இசைத்து தரையில் விழுந்து சிறகதிரச் சுழன்றன. மது மயக்கில் அமராவதியின் மாளிகைத்தூண்களும் சுவர்களும் நெளிவதாகத் தோன்றியது அவனுக்கு. களிவெறிகொண்டு சிரித்தும் கூச்சலிட்டும் அலைந்தனர் தேவர்கள். அவர்களுடன் காமத்திலாடி கண் சிவந்து கொந்தளித்துக் கொண்டிருந்தனர் அரம்பையர்.

அவனைக் கண்டதும் கள்மயக்கில் காலாடிக்கொண்டிருந்த தேவன் ஒருவன் அணுகி வந்தான். “நீர் அசுரரா?” என்றான். “ஆம்” என்றான் கௌமாரன். “இல்லை, நீர் தேவர். நான் அசுரன்” என்றான். குழறியபடி நகைத்து “தேவனாக முன்னால் இருந்தேன். கடமையைச் சுமந்தவன் தேவன். கட்டுக்குள் வாழ்பவன் அவன். கடமைகளற்றவன் அசுரன். கட்டற்றவன் அசுரன். எங்களை விடுதலை செய்தவர் அசுரேந்திரர் விருத்திரர்…” என்றான். மதுக்கிண்ணத்தை தூக்கிக் காட்டி “நான் உண்பது என் விழைவை. இதுநாள்வரை இதை என் மூலாதாரத்தில் ஒரு துளி நஞ்சென தேக்கி வைத்திருந்தேன். இதோ, அது விடுதலைகொண்டு வளர்கிறது” என்றான்.

முகவாயிலினூடாக இந்திரனின் அரண்மனைக்குள் சென்றான் கௌமாரன். அங்கு தன்னை எதிர்கொண்ட அமைச்சரிடம் “விருத்திரேந்திரரைக் காணவந்தேன். உடனே சொல்லளிக்க வேண்டும்” என்றான். “எவரும் தன்னைக் காணலாகாதென்ற ஆணையிட்டு களியாட்டுக்குச் சென்றிருக்கிறார் அரசர்” என்றார் அமைச்சர். “சென்று நெடுங்காலம் ஆகிறது.” பொறுமையை பேணியபடி கௌமாரன் “நான் இப்போதே கண்டாகவேண்டும்” என்றான். “அரசரின் உறுதியான ஆணை அது. மீற என்னால் இயலாது” என்று அமைச்சர் சொன்னார். ஒருகணம் எண்ணி நின்றபின் அவரை தள்ளி வீழ்த்திவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அதன் பன்னிரண்டாவது உப்பரிகையை அடைந்தான்.

அந்த உப்பரிகையே ஒரு மலர்வனமாக ஆக்கப்பட்டிருந்தது. அங்கு சிறு குளிர்ச்சுனைகள் மான்விழிகளென ஒளிகொண்டிருந்தன. பொன்வண்டுகளென்றான தேவர்கள் யாழிசை மீட்டினர். அனைத்து மலர்களும் ஒரு திசை நோக்கி திரும்பி இருக்கக்கண்டு அங்கு சென்றான். மூன்று சுனைகளால் சூழப்பட்ட சிறு மலர்ச்சோலை ஒன்றில் அல்லியிதழ்கள் சேர்த்து அமைத்த மஞ்சத்தில் ரம்பையும் ஊர்வசியும் திலோத்தமையும் அருகிருக்க கள் மயக்கில் காமத்திலாடிய களைப்பில் விழிமயங்கி இருந்த விருத்திரனை கண்டான்.

அவனைக் கண்டதும் எழுந்து ஆடை அள்ளி உடல் மறைத்து விலகிய தேவகன்னியர் சினமும் நாணமும் அச்சமும் கொண்ட விழிகளால் அவனை சரித்து நோக்கினார்கள். விருத்திரனின் கால்களைப்பற்றி உலுக்கி “அரசே, எழுக அரசே!” என்று கௌமாரன் அழைத்தான். ஏழுமுறை அழைத்தபின் மெல்ல விழிதிறந்து கைகளை ஊன்றி எழுந்து “யார்? என்ன நிகழ்கிறது?” என்று விருத்திரன் கேட்டான். “அரசே, நான் கௌமாரன். உங்கள் முதன்மை படைத்தலைவன்” என்றான் கௌமாரன். தலையை உலுக்கி தெளிந்த விருத்திரன் “ஆம், உன்னை நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றபின் நீர் கொண்டுவரச்சொல்லி அள்ளி அள்ளி  தன் தலையை கழுவிக்கொண்டான். முகத்தில் நீரை அள்ளி அள்ளி அறைந்தான்.

சிற்றேப்பத்துடன் “என் குடி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்கிறதல்லவா? குலமூத்தோர் நிறைவுகொண்டுள்ளனர் அல்லவா? மூதன்னையர் குலம் பெருகுவது கண்டு மகிழ்கிறார்களல்லவா?” என்றான். ஒவ்வொருமுறையும் எழும் அந்த வழக்கமான வினாக்கள் கௌமாரனிடம் அப்போது பெருஞ்சினத்தையே எழுப்பின. “அரசே, கீழே தாங்கள் கட்டி எழுப்பிய முதற்பெருநகர் விழுந்துகொண்டிருக்கிறது. வருணனின் படைகளால் நமது கோட்டைகள் சரிகின்றன” என்றான். அதை விருத்திரனின் உள்ளம் உணரவில்லை. “நன்று” என்று இன்னொரு ஏப்பம் விட்டான்.

உரத்த குரலில் “அரசே, புற்றிகபுரி அழியப்போகிறது. வருணனின் படைகள் அதை அழிக்கின்றன” என்றான் கௌமாரன். “யார்?” என்றான் விருத்திரன். “வருணன். அவர் படைகளால் நம் நகர் அழிகிறது” என்றான் கௌமாரன். விருத்திரன் வாய் திறந்திருக்க, கண்கள் நீர்படிந்து சிவந்து பொருளற்ற வெறிப்பு கொண்டிருக்க “என்ன சொல்கிறாய்?” என்றான். மீண்டும் கௌமாரன் அச்செய்தியை கூவிச்சொன்னான்.

மெல்ல புரிந்துகொண்டதும் “என் நகரையா?” என்ற விருத்திரன் உடனே நகைத்து “கணம் வளரும் கோட்டை அது. சரிவது அதன் இயல்பு. மீண்டும் வளர்வதற்கென்றே சரிகிறது அது. இன்னமும் அதை நீ உணரவில்லையா?” என்றான். கௌமாரன் “அரசே, வருணனை நானும் எளியவர் என்றே எண்ணினேன். உங்கள் காலடிகளை பணியும்படி அறிவுறுத்தினேன். அவர் வல்லமையைக் கண்டு இன்று அஞ்சுகிறேன்” என்றான். “அச்சம் தவிர், படைத்தலைவனே! என்னை வெல்ல எவருக்கும் ஊழில்லை” என்றபின் சோம்பலுடன் உடலை நீட்டிப்படுத்து “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. இன்மது கொண்டுவருக!” என்றான். கௌமாரனின் அஞ்சிய முகத்தைகண்டு “படைத்தலைவருக்கும் மது வரட்டும்” என்றான். சீற்றத்துடன் “அரசே!” என்று அவன் கால்களைப்பற்றி உலுக்கினான் கௌமாரன். “வந்து பாருங்கள்! தங்கள் கோட்டை அங்கிருக்கிறதா என்றே ஐயம் கொள்கிறேன்.”

விருத்திரன் நகைத்து “எனது பகைவன் இந்திரன் மட்டுமே. அவனோ எங்கு என்றறியாது மறைந்துவிட்டான். இந்திரன் வெல்லமுடியாத என்னை இவ்வேழு உலகிலும் எவரும் வெல்ல முடியாதென்றறிக! மூடா, வருணன் என் குலத்தவர். அசுரர்களின் வெற்றி கண்டு உளம்நிறைபவர். நான் புற்றிகபுரியை அமைத்தபோது அவர் வாழும் ஆழ்கடலுக்குள் சென்று மூத்தவரே வாழ்த்துக என்னை என்று சொல்லி தலைவணங்கி அரிசியும் மலரும் நீரும் பெற்றே வந்தேன். இங்கே இந்திரனை வெல்லவரும்போதும் அவர் சொல் பெற்றேன். அவர் அருளுடனேயே இந்திரன் என்று ஆவேன்” என்றான்.

சொல்லிழந்து நின்ற கௌமாரனின் தோளில் தட்டி “நீ செல்க! உனது எளிய அச்சங்களுக்கு விடையளித்து வீணடிக்க என்னிடம் பொழுதில்லை” என்றபின் களிமயக்குடன் கண்மூடி “கள்ளுண்டவனுக்கும் காமம்கொண்டவனுக்கும் காலம் இமைக்க இமைக்க குறுகி வருவதை நீ அறியமாட்டாய்” என்றான் விருத்திரன். செய்வதறியாது அங்குமிங்கும் நோக்கியபின் கௌமாரன் எழுந்து விலகினான். அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.

“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.

“செல்க! இனியொரு சொல்லும் கேட்க எனக்கு விழைவில்லை” என்றபின் விருத்திரன் புரண்டு படுத்தான். இரு கைகளையும் விரித்து அருகே நின்ற மகளிரை அழைத்து “என்னை தழுவிக்கொள்ளுங்கள். இவ்வினிமை ஒருகணமும் விரிசலிடாமலிருக்கட்டும். அது உங்கள் திறன்” என்றான். இந்திராணி “அரசே, அனைத்தும் அழிந்துகொண்டிருக்கின்றது என்கிறார் படைத்தலைவர். விழித்தெழுக!” என்று கூவினாள். அவன் தோளைத்தொட்டு உலுக்கி “எழுக!” என்றாள். விருத்திரன் “நீ இனியவள்” என அவள் கன்னத்தை வருடினான்.

“இனிமேலும் தயங்கினால் உங்கள் அழிவே” என்று இந்திராணி சொன்னாள். “மீண்டும் மீண்டும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதோ, இறுதிக்கணமே இவர் வடிவில் வந்து நின்றிருக்கிறது. நான் சொல்வதை செவிகொள்ளுங்கள். எழுங்கள்!” என்றாள். அவள் கண்கள் கலங்கி குரல் உடைந்தது. அவன் “நீ நல்லமைச்சர். நல்ல சொற்களை சொல்கிறாய். அது உன் கடமை” என்றான். பின்னர் கௌமாரனிடம் “இந்திராணி என்றாலும் பெண். ஆண்களின் ஆற்றல் அவர்களுக்கு புரிவதே இல்லை” என்றான்.

உடைவாளை உருவி தன் கழுத்தில் வைத்து கௌமாரன் வீறிட்டான் “அரசே, உங்கள் மேல் ஆணை! ஒருகணம் எழுந்து வந்து என்னுடன் நின்று கீழே உங்கள் நகரை நோக்குக! அன்றேல் இக்கணமே சங்கறுத்து உங்கள் காலடியில் விழுவேன்.” சினத்துடன் அவனை சற்றுநேரம் பார்த்தபின் மெல்ல தளர்ந்து “பித்து நிறைந்துவிட்டது உன் உள்ளத்தில். மூடா, உன் மேல் நான் கொண்ட அன்பின்பொருட்டு எழுகிறேன். இவையனைத்தும் உன் வீண் அச்சமென அறிவேன். விருத்திரேந்திரனின் முதன்மைப் படைத்தலைவன் அச்சம்கொண்டான் என்று நான் அன்றி பிறர் அறியலாகாது. வா!” என்று எழுந்து ஆடை சுற்றி தலையணியைச் சூடி நடந்தான்.

“வருக, அரசே! ஒருமுறை கீழே நோக்குங்கள்” என்றபடி கௌமாரன் முன்னால் ஓடினான். “மூடன்” என்றான் விருத்திரன் தேவியிடம். “நம் படைத்தலைவர் அவர். நாம் காணாதவற்றை அவர் காணக்கூடும்” என்று இந்திராணி சொன்னாள். “பார்வையென்பது பார்ப்பவனின் இடத்தாலும் திசையாலும் ஆனது. ஆகவே எந்தப் பார்வையும் தன்னளவில் தனித்ததே. சென்று நோக்குக!” விருத்திரன் நகைத்து “நான் வெல்லற்கரியவன். அதை நான் அறிவேன். நீங்கள் என் வெற்றியில் ஐயம் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு” என்றான்.

அமராவதியிலிருந்து வெளிவந்து அங்கு தெற்கு மூலையிலிருந்த கோட்டைச்சுவர் மேல் ஏறி காவல்மாடத்தில் நின்று கீழே நோக்கினான் விருத்திரன். அக்கணமே எரிசினத்துடன் “என்ன நிகழ்கிறது அங்கே? நான் காண்பது விழிமயக்கா?” என்று கைநீட்டி கூவினான். புற்றுறைக் குலங்களால் சமைக்கப்பட்ட அவன் தொண்ணூற்றொன்பது பெருங்கோட்டைகளில் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. பிற அனைத்தும் விழுந்து கரைந்து மறைய அங்கு வெண்நுரை எழுந்து அலை கொப்பளித்துக்கொண்டிருந்தது.

KIRATHAM_EPI_44

கௌமாரன் சொன்னான் “இன்னும் நெடுநாள் இக்கோட்டை எஞ்சாது, அதை இப்போது உள்ளுணர்கிறேன், அரசே. தங்கள் முதல் நகர் விழுவதென்பது தோல்வியின் தொடக்கம். தங்களை வெல்லலாகும் என்று இந்திரன் தேவர்களுக்கு காட்டிவிட்டால் அதன் பின் உங்கள் முடி நிலைக்காது.” தன் நெஞ்சில் அறைந்து விருத்திரன் கூவினான் “இக்கணமே எழுகிறேன். வருணனை சிறைபற்றி இங்கு என் அரியணைக்காலில் கொண்டு கட்டுகிறேன். மூதாதை என நான் எண்ணியிருந்தவன். என் குலத்து மூத்தவன். வெற்றாணவத்தால் குடிகெடுக்கும் வஞ்சகனானான்.” சினத்தால் மதம்கொண்டு சுற்றிவந்து கூச்சலிட்டான் “அவனை என் காலடியில் வீழ்த்துவேன். அவன் தலையை மிதித்தாடுவேன். இது ஆணை! என் குலமூதாதையர் மேல் ஆணை!”

“பொறுங்கள், அரசே! நான் சினம் மீதூறிச் சொன்ன சொல்லே நம் நகரை அழிக்கிறது. இச்சினம் முதலில் அவருக்கு எப்படி வந்ததென்று பார்ப்போம். நம் குலத்தார் ஒருசொல் சென்று சொன்னால் நம்மில் கனிவு கொள்ளக்கூடும். நிகர் வல்லமை கொண்ட இரு அசுரர் குலத்து அரசர்கள் அவரும் நீங்களும். உங்களை பிரித்து வெல்வது இந்திரனின் சூழ்ச்சி” என்றான் கௌமாரன். “தலைவணங்குவதா? தேவருக்கு வணங்காத தலை பிறிதொரு அசுரன் முன் இறங்குவதா?” என்று விருத்திரன் கூவினான். “வீண்சொல்! போரன்றி வேறேதுமில்லை. எழுக நமது படைகள்!”

கௌமாரன் “அரசே, இங்குள்ளவை தேவர் படைகள். அவர்கள் கள்ளுண்டு செயலற்றிருக்கிறார்கள். அங்கு நம் அசுரகுடிகளும் பிறிதொரு நிலையில் இல்லை. படைகொண்டு சென்றாலும்கூட யாரிடம் போர் புரியப்போகிறோம்? அங்கு அலையுருக்கொண்டு எழுந்து வருவதும் நமது குடியல்லவா? நாம் இந்திரனின் கண்முன் போரிட்டு அழியப்போகிறோம். ஆம், நமது அழிவுபோல் அவனுக்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை” என்றான்.

“ஆம்” என்று விருத்திரன் சோர்ந்து அமைந்தான். “பகை, நஞ்சு, நெருப்பு மூன்றும் ஒரு துளியும் எஞ்சலாகாது என்று கற்றிருக்கிறேன். அவனை எஞ்சவிட்டது என் பிழை” என்றான். “இல்லை அரசே, அவனை சிறுதுளியென விட்டிருந்ததே உங்கள் பிழை” என்றான் கௌமாரன். “அவனை தேடிக் கண்டடைந்து பெருக்கியிருக்க வேண்டும். நிகர் எதிரியென உங்கள் முன் அவன் நின்றிருக்கவேண்டும். தேவர்களின் ஆற்றல் நேர்விசை. அசுரர்களோ எதிர்விசை மட்டுமே கொண்டவர்கள். பேருருவப் பகைவனொருவன் இன்றி அசுரர்கள் தன்னை திரட்டிக்கொள்ள முடியாது. சினமின்றி படைக்கலங்கள் ஏந்த முடியாதவர்கள் நாம்” என்றான்.

“அரசே, அசுரர் வெற்றியெல்லாம் அவர்கள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது மட்டும் அமைவதே. இந்திரன் இல்லாததனால் தேவர்குலம் வலுவிழந்தது. எதிரி இல்லாததனால் அசுரர்குலம் வலுவிழந்துள்ளது. தேவர்கள் எழமுடியும். விழைவே அவர்களின் இயல்பு. தேவர்கள் எழுந்து நம்மை வெல்ல வரும்போது மட்டுமே அசுரர் எழுவார்கள். எதிர்ப்பே நம் இயல்பு” என்றான் கௌமாரன். “ஆம்” என்று சோர்ந்து தோள்தாழ்த்தினான் விருத்திரன்.

“இன்னமும் பிந்திவிடவில்லை” என்றாள் இந்திராணி. “உங்கள் வெல்லமுடியாத ஆற்றல் அப்படியே எஞ்சியிருக்கிறது. எழுக! இந்திரனை வென்று மீண்டும் புற்றிகபுரியை அமைத்தால் உங்கள் ஆற்றல் மீண்டும் நிறுவப்படும்…” விருத்திரன் “ஆம்” என்றான். “வேறுவழியில்லை. போர்தான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான். “அரசே, வருணனுடன் நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவரை பகைத்தல் நன்றல்ல” என்றான் கௌமாரன். “நான் எண்ணுவதும் அதுவே” என்றாள் இந்திராணி. “பகைவரைப் பெருக்குவது அறிவுடைமை அல்ல.”

“அப்படியென்றால் நான் வெல்லமுடியாதென்று எண்ணுகிறீர்கள் அல்லவா?” என்றான் விருத்திரன். “நான் அழியக்கூடுமென ஐயுறுகிறீர்கள். அந்த ஐயம் எனக்கில்லை. நான் வெல்வேன். என் முதற்றாதையின் அழியாச்சொல்லே என் படைக்கலம்.” மீண்டும் குனிந்து அவன் நோக்கியபோது ஒரு புற்று எழுந்திருந்தது. “ஆம், அவர்களும் போர்புரிகிறார்கள். அசுரர்களாகிய நாம் ஒருபோதும் தோல்வியை ஏற்பதில்லை” என்றான்.