கிராதம் - 42
[ 12 ]
பொன்வண்டென உருக்கொண்டு அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டின் நடுவே ஆயிரத்தெட்டு கிளைகளுடன் நின்றிருந்த பிரபாவம் என்னும் ஆலமரத்தின் உச்சியில் இருந்த ஆழ்ந்த பொந்தை தன் வாழிடமாகக் கொண்டான். அவனுடன் பணி செய்ய வந்த நூற்றெட்டு தேவர்கள் சிறு வண்டுகளாகவும் பொற்சிறைத் தேனீக்களாகவும் உடனிருந்தனர். தேனீக்கள் காடெங்கிலும் சென்று பூங்கொடியும் தேனும் கொண்டு வந்து அவனுக்குப் படைத்தன. வண்டுகள் அவனைச் சூழ்ந்திருந்து சிறகதிர இசைமீட்டின.
பொந்துக்குள் ஆழத்தில் செறிந்திருந்த இருளில் அவன் தன்னை படிய வைத்துக்கொண்டான். உள்ளே ஒளிவரும் பொந்துகள் அனைத்தையும் அரக்கு வைத்து மூடச்செய்தான். தேன்மெழுகால் கட்டிய சிறுகுழியில் நறவல் தேக்கி அதனுள் மூழ்கி தன்னைமறந்து கிடந்தான். நாள் மடிந்து பொழுது கடப்பதை அவன் அறியவில்லை. காலம் செல்வதை அவனிடம் எவ்வண்ணம் சொல்வதென்று தேவர்கள் எண்ணி எண்ணி தயங்கினர். அவனோ மது மயக்கிலிருந்து ஒருகணமும் மீண்டு வரவும் இல்லை. ஆயிரம் ஆண்டுகாலம் அவ்வண்ணம் சென்றது.
எவரும் அறியாது மறைந்த இந்திரனைத் தேடி நாரதர் யாழிசை ஒலிக்கும் கருவண்டென காடுகளிலும் ஊர்களிலும் நகர்களிலும் அலைந்தார். பல்லாண்டுகாலம் அவ்வண்ணம் செல்லுகையில் இரவின் இருளுக்குள் சில தேனீக்கள் தேன்தேடி அலைவதையும் மலர்தோறும் அமர்ந்தெழுந்து சுழலுவதையும் கண்டார். அவற்றில் ஒன்றை அணுகி “யார் நீங்கள்? அந்திக்குப்பின் தேனீக்கள் தேன்நாடிப் பறப்பதில்லை” என்றார். “நாங்கள் இந்திரனின் அணுக்கர்கள். அவர் எப்போதும் மதுவில் ஆட விழைகிறார்” என்றன. “எங்கிருக்கிறார்?” என்றார் நாரதர். “இக்காட்டில் ஒரு பொந்துக்குள்” என்ற தேவர்கள் அவரை அழைத்துச்சென்றனர்.
மறுநாள் புலரியில் நாரதர் இந்திரன் வாழ்ந்த அப்பொந்துக்கு வந்தார். அதைச் சூழ்ந்து பொன்னிற மலர்கள் மலர்ந்து நறுமணம் சூழ்ந்திருந்தது. இருளுக்குள் தேன்குழிக்குள் மூழ்கி அசைவற்று கிடந்த இந்திரனைக் கண்டார். அவர் வருகையை அவன் அறியவில்லை. தேவர்களை அழைத்து “இப்பொந்தை மூடியிருக்கும் அனைத்து அரக்கையும் அகற்றுக!” என்றார். தேவர்கள் “அரசரின் ஆணை அது” என்றனர். “அரசரின்பொருட்டு இது என் ஆணை” என்றார் நாரதர்.
“அரசரிடம் ஆணை பெற்று செய்கிறோம்” என்றபின் ஒரு தேவன் “நாரதரின் ஆணையை நிறைவேற்றலாமா, அரசே?” என்றான். தேனில் ஊறி செயலற்ற சித்தம் கொண்டிருந்த இந்திரன் “ஆம்” என்று ரீங்கரித்தான். வண்டுகள் எழுந்து அப்பொந்தை மூடியிருந்த மெழுகனைத்தையும் தள்ளி வெளிவிட்டன. கதிரொளி சாய்ந்து பொந்துக்குள் விழுந்தது. இந்திரன் மிதந்திருந்த தேன் ஒளி கொண்டது. கண்கள் கூச விழித்தெழுந்து “யார்? என்ன நிகழ்கிறது?” என்ற அவன் கூவினான்.
அவன் அருகே வந்த நாரதர் “பொழுதுவிடிந்துவிட்டது, அரசே” என்றார். “நான் துயில் முடிக்கவில்லை” என்று அவன் சொன்னான். “மூடா, இன்னும் ஒரு பொழுது நீ துயின்றால் பின்னர் அமராவதியை அசுரரிடமிருந்து மீட்கவே இயலாது” என்றார் நாரதர். அவர் நாரதர் என்பதை உணர்ந்த இந்திரன் மெல்ல துயில்கலைந்து தேன்குழம்பின் விளிம்பில் நீந்தி வந்து அரக்கை பற்றிக்கொண்டு அமர்ந்தான். “என்ன செய்யவிருக்கிறாய்?” என்று நாரதர் கேட்டார். “செய்வதற்கொன்றுமில்லை. இவ்வினிமையிலேயே இருந்துவிட விழைகிறேன்” என்றான்.
“இது இனிமையல்ல. செயலின்மையின் இனிமை ஒரு போதும் முழுமையாவதில்லை. செயலற்றவனைச் சூழும் ஆழுலகத்து தெய்வங்கள் அவனை முழுதும் இனித்திருக்க விடுவதில்லை. விழித்திருப்பவனின் இனிமை மட்டுமே தெய்வங்களுக்குரியது” என்றார் நாரதர். அவர் கைகாட்ட தேவர்கள் இந்திரனைப்பற்றி இழுத்து மேலே கொண்டு வந்தனர். துளைகள் வழியாக வந்த ஒளியில் அவன் சிறகுகள் காய்ந்தன. அவன் உணர்கொம்புகள் சுருள் அவிழ்ந்தன. அவன் கால்கள் தேன்பிசுக்கிலிருந்து பிரிந்து எழுந்தன. இமைகள் மேலேற அவன் சூழலை நோக்கினான். “ஆம், நெடுநாட்களாகிறது” என்று பெருமூச்சுவிட்டான்.
அவன் அருகே அமர்ந்து நாரதர் சொன்னார் “உன் கடன் அமராவதியை மீட்பது. இந்திரனே, மண் முழுக்க வேள்விக்களங்களில் உனக்காகவே அவியளிக்கப்படுகிறது. அவற்றை உண்டு மண்ணிலும் விண்ணிலும் அசுரர்கள் தழைத்து எழுகிறார்கள். பயிருக்கு அளித்த நீர் களைக்குச் செல்வதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அந்தணர். கொடிய நோய் என விருத்திரன் விண்ணுலகையும் வியனுலகையும் ஆள்கிறான்.”
“தேவருலகு என்பது என்ன? அது அரசன் தன் கருவூலத்தில் வைத்திருக்கும் பொன்போன்றது. அது அங்கு இருக்கும்வரையே அங்காடிகளில் வணிகம் திகழும். பயணிகள் புலம் கடக்க முடியும். இந்திரனே, சான்றோர் சொல் திகழ்வதும், மகளிர் கற்பு வாழ்வதும், நூலோர் சொல் வளர்வதும், வேதியர் அனல் அணையாதிருப்பதும் அப்பொன்னாலேயே. இன்று அது களவு போகிறது. மண்ணில் ஒவ்வொருநாளும் அறம் குன்றுவதையும் கண்டபின்னரே உன்னைத் தேடி கிளம்பினேன். இது உன் பிறவிக்கடன்.”
“அரசனே, கடமையிலிருந்து தப்பி ஓடுபவர்கள் தீராப்பழி கொள்ளுகிறார்கள். பழி நிழல்போல, நாம் அதை உதறினாலும் நம்மை அது விடாது. நாம் அறியாது நம்முடனேயே இருக்கும். சித்தத்தின் அத்தனை சொற்களாலும் நாம் கொண்ட பழியை விலக்கலாம். அச்சொற்கள் ஊறிவரும் ஆழ்சுனை ஒன்றுண்டு. அங்கு நஞ்சென அது கலந்திருக்கும். பழி விலக்கி ஆண்மை கொள். அதுவன்றி நீ கொள்ளும் விடுதலை பிறிதொன்றில்லை” என்றார் நாரதர்.
“ஆம்” என்று சொல்லி இந்திரன் உடைந்து அழுதான். “தோல்வியின் தருணமொன்றை எவ்வண்ணம் எதிர்கொள்வதென எனக்கு தெரிந்திருக்கவில்லை. வெற்றியை மட்டுமே பயின்றிருக்கிறேன்.” நாரதர் கனிந்து அவனை தொட்டார். “துயர்களை விட்டு விலகுவதே மிகச்சிறந்த வழி. இழிவுகளைக் கடந்து செல்வது அதனிலும் நன்று. ஆனால் தோல்விகளைக் கண்டு விலகுபவன் மேலும் தோல்விகொள்கிறான்” என்றார் நாரதர். உளம் கரைந்து விம்மி அழுது விசும்பி ஓய்ந்தான் இந்திரன். “கடந்ததை எண்ணவேண்டாம். ஆவதை நோக்குக!” என்றார் நாரதர்.
“சொல்க, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இந்திரன் கேட்டான். “உன் நச்சுக் கொடுக்கு உயிர் பெறட்டும். சிறகுகளில் ஆற்றல் பெருகட்டும். கண்களில் கனல்துளி வந்தமையட்டும். இந்திரனென எழு! எதன்பொருட்டு பிறந்தாயோ அதை ஆற்று” என்றார் நாரதர். “அவ்வண்ணமே” என்று இந்திரன் சொன்னான். “புலரட்டும், என் படைக்கலங்களை சூடுகிறேன். பொருதி நின்று என் கடன்முடிக்கிறேன். இனி சோர்வில்லை.”
ஆனால் அன்று கடந்து மறுநாள் காலையில் நாரதரை வரவேற்ற தேவர்கள் விழிதாழ்த்தி அவர் முன்னிருந்து ஒழிந்தனர். “என்னவாயிற்று?” என்றார் நாரதர். “அரசர் மீண்டும் மதுவுக்குள் மூழ்கியிருக்கிறார்” என்றனர் தேவர். உள்ளே மீண்டும் நிறைக்கப்பட்ட மதுக்குளத்திற்குள் விழுந்து சிறகுகள் ஊறி கால்கள் செயலற்று மிதந்துகிடந்தான் இந்திரன். சினத்துடன் “அதை உடையுங்கள்” என்றார் நாரதர். மதுக்குழியை தேவர்கள் உடைக்க ஒழிந்தொழிந்து செல்லும் மதுவையும் அறியாது மிதந்துகிடந்தவன் கால்தொட்டு மது ஒழிந்த தரையை அறிந்ததும் விழித்து “என்ன?” என்றான்.
குழியின் பின்னால் தவழ்ந்து கரையேற முயன்று வழுக்கி மீண்டும் விழுந்து உருண்டெழுந்துகொண்டிருந்தவன் விண்ணரசன் என்பதை எண்ணுகையில் நாரதர் நீள்மூச்செறிந்தார். “எழுக, தேவர்க்கரசே!” என்றார். மங்கலாக புன்னகைத்தபடி குழறிய குரலில் “தேன் இனிது. தேனாடல் அதனினும் இனிது” என்று இந்திரன் சொன்னான். “எழுக! நீ வெல்ல வேண்டியது அமராவதி” என்றார் நாரதர். அவன் மெல்ல கையூன்றி நிமிர்ந்து “இப்போது நான் அமராவதியில்தான் இருந்தேன்” என்றான். “பன்னிரு கோடி பொன்மாடங்கள் கொண்ட பெருநகர். ஒளிச்சிறகுகளுடன் தேவர்கள். செல்வங்களுக்கெல்லாம் தலையாயவை செறிந்த கருவூலம். வெண்ணிற யானை. பொற்கொம்புள்ள பசு. புலரிகதிரென அரியணை. பேரழகுகொண்ட துணைவி…”
“அது பொய். அரசே, இது மலர்களில் நிறைந்த நறுந்தேன். வண்டுகளைப் பித்தாக்கும்பொருட்டு தெய்வங்கள் இதை அவற்றின் இதழ்களில் சேர்க்கின்றன. வாழ்நாள் முழுக்க மலரிலிருந்து மலர் தேடி ஒருபோதும் நிறைவுறாது பண்ணிசைத்து பறந்து பறந்து அழிவதே வண்டுகளின் வாழ்வென வகுத்துள்ளது புவி சமைத்த நெறி. பேதைமையை விளம்புவது இது. இதை உண்ணும் ஒவ்வொரு சித்தத்திற்குள்ளும் ஒரு பொன்னுலகு பொலிந்து மறைகிறது” என்றார் நாரதர்.
“நாரதரே, வெளியே பருவடிவுகொண்டு இருக்கும் பொன்னுலகு அருளும் அனைத்து உவகைகளையும் இந்த மது உருவாக்கும் பொய்யுலகும் அருளுமென்றால் இது எவ்வகையில் குறைவுபட்டது? தேறலை பழிக்காதீர். இனிமை மட்டுமே கொண்ட ஒன்று இப்புவியில் பிறிதொன்றில்லை” என்றான் இந்திரன். “உணவென்றால் அது தெவிட்டியாகவேண்டும். இனிமை மட்டுமே கொண்ட ஒன்றை நாம் உண்பதில்லை. அது நம்மை உண்கிறது. உன்னை இது கரைத்தழிப்பதை நீ உணரவில்லையா?” என்றார். “இனித்து இனித்து கரைந்தழிவதற்கு அப்பால் பிறவிக்கான பொருளேதும் உண்டா?” என்றான் இந்திரன்.
“நீ ஒரு கனவின் துளியென்றால், நீ கொள்வதே பொருள். மூடா, தன்னை உருவென இருப்பென ஆக்கிய ஆற்றலின் ஆணையை மீறும் உரிமை அசுரருக்கோ தேவருக்கோ மானுடருக்கோ தெய்வங்களுக்கோ இல்லை” என்றார் நாரதர். இந்திரன் சோம்பலுடன் உடல்நெளித்து “ஆயிரம் ஆண்டு நான் இவ்வுடலில் எழவேயில்லை. இச்சிறுதுளிக்குள் ஒரு பெரும்பொன்னுலகு எழுந்து விரிந்தது. எண்ணுகையில் இப்புவி ஒரு பொருட்டல்ல என்றே துணிகிறேன்” என்றான்.
சொல்லிப் பயனில்லை என உணர்ந்து நாரதர் சீறியபடி பாய்ந்து சிறகு விரித்து இந்திரனின் தலையில் தன் கொடுக்கால் கொட்டினார். அதன் நச்சு உள்ளே செல்ல பெருவலியில் துடித்து அலறியபடி அவன் செயலிழந்து அமர்ந்தான். தன் கால்களால் அவனைக் கவ்வி தூக்கி எடுத்து வெளியே கொண்டுசென்று காலை வெயிலேற்று வெம்மை கொள்ளத் தொடங்கியிருந்த ஆற்றுமணலில் இட்டார்.
சுடுமணலில் புரண்டு சிறகுகள் பொசுங்க கதறி அழுதபடி தவித்தான் இந்திரன். “எத்தனை மதுவுண்டாலும் இவ்வெம்மையை உன்னால் கடக்க முடியாது. நீ விழையும் அனைத்து மதுவையும் கொண்டுவரச் செய்கிறேன், இவ்வுண்மையை கடந்துசெல் பார்ப்போம்!” என்றார் நாரதர். இந்திரன் தவழ்ந்து சென்று நதியின் விளிம்பை அடைந்து அலைகளில் ஏறி ஆழத்தில் பாய்ந்து மூழ்கி எழுந்து தன் சிறகுகளை உதறிக்கொண்டான். மூழ்கிமூழ்கி குளிர் நீரை உதறி மீண்டபோது அவன் சித்தம் தெளிந்திருந்தது.
அருகே கடந்துசென்ற இலையொன்றைப் பற்றி மேலேறி அமர்ந்தபோது மெல்ல சித்தம் மீண்டுவந்தது. நீள்மூச்சுகள் விட்டபடி சோர்ந்து விழுந்து கைகளை உரசிக்கொண்டான். சிறகுகள் உலர்ந்ததும் எழுந்தமர்ந்து விழிகளை உருட்டியபடி “நான் செய்வதற்கென்ன உள்ளது, நாரதரே?” என்றான். “நீ வென்றெடுப்பதற்கு ஓர் உலகுள்ளது. அதை வென்றேயாக வேண்டிய கடமை உள்ளது” என்றார் நாரதர்.
[ 13 ]
ஆயிரமாண்டு இந்திரனின் சித்தத்தில் படிந்த தேன்விழுதுகள் அனைத்தையும் கங்கை கழுவி அகற்றியது. சாம்பல் அகன்று அனல் எழுவதுபோல் அவன் தன்னிலை மீண்டான். கரைசேர்ந்து தன் முழு நினைவுடன் அவன் மீண்டான். பொன்னிற உடலும் சுடர்கொண்ட கண்களுமாக நின்று வணங்கி “முனிவர் தலைவரே, என்னை வாழ்த்துக! இதோ, மீண்டு வந்துள்ளேன்” என்றான். தன் உரு மீண்டு அவன் முன் வந்த நாரதர் “உன் தருணம் நெருங்கிவிட்டது. விருத்திரனை நீ வென்றாகவேண்டும். ஆயிரம் ஆண்டு இந்திரன் அரியணையில் அவன் அமர்ந்திருந்தான் என்றால் அவனை மும்மூர்த்திகளும் வாழ்த்தியாக வேண்டுமென்பதே நெறி. மும்மூர்த்திகளின் அருள் பெற்றபின் அவனே இந்த யுகத்தின் இந்திரன் எனப்படுவான்” என்றார்.
“நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் இந்திரன். “அவன் நகரம் அழிக்கப்படவேண்டும். நகர் காக்க அவன் விண்ணுலகிலிருந்து படைகொண்டு எழும்போது அவனைக் கொன்று வெல்ல வேண்டும்” என்று நாரதர் சொன்னார். “ஆம், அது ஒன்றே வழி. ஆனால் அவனை வெல்லும் ஆற்றல் என் படைகளுக்கு இல்லை. என் படைக்கலங்கள் எதனாலும் கணந்தோறும் வளரும் அவன் பெருங்கோட்டைகளை அழிக்கவும் முடிவதில்லை” என்று இந்திரன் சொன்னான். “அப்போரின் அனைத்து செய்திகளையும் நான் அறிந்தேன். எவ்வண்ணம் விருத்திரன் அந்நகரை அமைத்தான் என்பதை உசாவி உணர்ந்தேன்” என்று நாரதர் விளக்கினார்.
த்வஷ்டாவின் மைந்தனாகப் பிறந்தவன் தன் ஏழு வயதில் தந்தையிடம் ஒரு வினாவை கேட்டான். “தந்தையே, வேதங்களில் தலையாயது எது?” அவர் “ரிக்வேதம்” என்றார். “ரிக்வேதத்தில் தலையாயது எது?” என்று அவன் கேட்டான் “நாசதீய சிருஷ்டி கீதம்” என்று அவர் சொன்னார். “சிருஷ்டி கீதத்தில் தலையாயது எது?” என்று அவன் கேட்டான். “அதன் முதல் வரி” என்று அவர் சொன்னார். “முதலில் பொற்கரு எழுந்தது.” மைந்தன் “அம்முதல் வரியில் தலையாயது எது?” என்று கேட்டான். “முதற்சொல், முதல் எனும் சொல்” என்றார் தந்தை. “தந்தையே, அச்சொல் ஒன்றே போதும். ஒரு சொல்லில் இல்லாத வேதம் முழு பாடல்பெருக்கிலும் இருக்க வழியில்லை” என்றபின் தந்தையிடம் விடைபெற்று அவன் கிளம்பிச் சென்றான்.
தெற்கே பெருங்கடல்முனையை சென்றடைந்து வருணனிடம் கேட்டான் “என் குடிமூத்தோனே, ஒரு சொல் மட்டும் என்னில் எஞ்சியிருக்கச் செய்க!” வருணன் தன் அலைப்பரப்பை விலக்கி ஒரு தீவைக் காட்டினான். பிரணவம் என்னும் அந்தத் தீவில் வெண்மணல் மட்டுமே இருந்தது. பறவைகளும் அங்கு செல்லவில்லை. அங்கு சூழ்ந்த அலைகள் அத்தனை ஒலிகளையும் உண்டு ஓங்காரமென்றாக்கின. அங்கு அமர்ந்து அவ்வொரு சொல்லை ஊழ்கப் புள்ளியென நிறுத்தி விருத்திரன் தவம் செய்தான். அவ்வொரு புள்ளியை கோடிமுறை திறந்து அதனுள் எழுந்த முடிவிலியைக் கண்டான். அவன் தந்தையென்றே வடிவுகொண்டு முன்னால் வந்தது அது. “மைந்த, நீ விழைவதென்ன?” என்றது.
“எந்தையே, என் தந்தைகொண்ட இலக்கு நிறைவேற வேண்டும். அதற்கு எனக்கு மூன்று நற்சொற்கள் தேவை” என்றான். “கேள்” என்றது இறை. “கணந்தோறும் தானாகவே வளரும் ஒரு நகரம் எனக்குத் தேவை” என்று அவன் சொன்னான். “ஆம், அவ்வாறே ஆகுக!” “தந்தையே, என் நகரம் மண்ணிலுள்ள பாறைகளாலோ மரங்களாலோ உலோகங்களாலோ வெல்லப்படலாகாது. மானுடர் இயற்றிய எக்கருவிகளாலும் அது எதிர்க்கப்படலாகாது. விண்ணிலுள்ள தேவர்களோ தெய்வங்களோ மண்ணிலுள்ள மானுடரோ கொண்ட எப்படைக்கலமும் என்னை கொல்லலாகாது” என்று அவன் கேட்டான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது முடிவிலி.
கண்விழித்தெழுந்து தன் தந்தையைத் தேடி வந்தான். “உங்கள் கனவை நிறைவேற்றிய பின்னர் மட்டுமே இனி உங்களை பார்ப்பேன், தந்தையே. நான் வெல்கவென்று அருளுங்கள்” என்றான். “அவ்வாறே” என்று த்வஷ்டா தன் மைந்தனின் தலைதொட்டு வாழ்த்தினார். “விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட மூச்சுலகில் அனல்கொண்ட புயல்காற்றுகளென அலைந்து கொண்டிருக்கின்றனர் உன் தமையர் பலனும் திரிசிரஸும். அவர்களை அனலவித்து அமையவைக்கும் புனலும் அன்னமும் உன் கைகளிலிருந்து விழவேண்டும். இந்திரனை வென்றபின் நீ அதை இயற்றுக!” என்றார். “அவ்வாறே” என்றபின் அவன் கிளம்பிச் சென்றான்.
ஏழு பெருநிலங்களை அவன் கடந்து சென்றான். தானாக வளரும் ஒரு நகரம் தனக்கென அமையுமென்ற சொல்லை கைக்கொண்டு தேடிச் சென்றான். பெரும்பாலையருகே மென்மணல் மீது இரவில் துயில்வதன்பொருட்டு படுத்தபோது அவ்வெண்ணத்தையே நெஞ்சில் நிறைத்து விண்ணை நோக்கிக்கொண்டிருந்தான். அனல் பெருகும், புனலும் பெருகும். அவை அணையும், வற்றும். அணையாத, வற்றாத ஒன்றால் அமைவதே என் கோட்டை என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
துயின்று கண்திறந்தபோது தன்னைச் சுற்றி நூறு பெரும்மண்குவைகள் எழுந்திருப்பதைக் கண்டான். திடுக்கிட்டு நோக்கியபோது அவை அனைத்தும் சிதல் புற்றுகள் என்று தெரிந்தது. ஓரிரவில் இப்பெரும்புற்றுகள் எப்படி எழுந்தன என்று அவன் வியந்தான்.
ஒரு புற்றை சுட்டுவிரலால் உடைத்து அதிலிருந்து வெண்ணிறச் சிற்றுடல்கொண்ட சிதலெறும்பு ஒன்றை எடுத்து சுட்டுவிரலில் வைத்து தன் கண்முன் கொண்டுவந்தான். “சிற்றுயிரே, சொல்க! இப்பெரும் ஆற்றல் எப்படி உனக்கமைந்தது?” என்று அவன் கேட்டான். “நான் சிற்றுயிரல்ல, இப்புவியில் இருக்கும் பேருயிர்களில் ஒன்று. என் முன் மானுடரும் விலங்குகளும் வான்நிறைக்கும் பறவைகளும் சிறுதுளிகளே” என்றது சிதல். “ஏனெனில் இச்சிற்றுடல் அல்ல நான் என்பது. கோடானுகோடி உடல்களில் எரியும் உயிரின் பெருந்தொகை நான்.”
‘ஆம், சிதலே என் நகரை அமைக்கும் புவியின்ஆற்றல்’ என்று அவன் எண்ணிக்கொண்டான். “மண்ணுக்குள் வாழும் முதல் மூதாதையின் பெயரால், அவர் மைந்தராகிய த்வஷ்டாவின் பெயரால், மண்ணிலிருந்து எழுந்த அசுரனாகையால் உங்களை பணிந்து கேட்கிறேன், சிற்றுருவரே. எனக்கு அருள் புரிக!” என்று அவன் சொன்னான். “ஆம், நீயும் எங்கள் குலமே” என்றது சிதல். “உன்னை நாங்கள் ஏற்கிறோம். பன்னிரு பெருங்குலங்களாகப் பிரிந்து உன்னை துணைப்போம். ஆனால் எங்கள் அன்னம்பெருக நீ உதவவேண்டும். ஒவ்வொருநாளும் எங்களுக்கு உண்ணக்குறையாது அன்னம் அளித்தாகவேண்டும்.” “ஆம், ஆணை” என்றான் விருத்திரன்.
“சிதல்களின் ஆணை பெற்று அவன் தேடிச் சென்று கண்டடைந்த இடமே புற்றிகபுரி. அங்கு சிதல்புற்றுகள் ஒன்றன்மேல் ஒன்றென மண்ணலை என மலைநிரை என எழுந்து அமைத்த தொண்ணூற்றொன்பது கோட்டைகள் சூழ்ந்தது அவன் நகர். விண்ணோரும் மண்ணோரும் கைகொள்ளும் எப்படைக்கலமும் சிதல்களை அழிக்க முடியாது என்றறிக! ஏனெனில் காலத்தின் அளவுக்கே பெரியவை அவை. காலமே ஆன பிறிதொன்றே அதை வெல்ல முடியும்” என்றார் நாரதர்.
இந்திரன் சோர்வுடன் “நான் என்ன செய்ய முடியும், முனிவரே? அந்நகரை அழிக்க நானறிந்த எவ்விசையாலும் இயலாது என்றல்லவா முதற்தந்தையிடமிருந்து அவன் வரம் பெற்றிருக்கிறான்? முதல் முறையாக மண் விண்ணை முற்றிலும் வெல்கிறது என்றல்லவா அதற்குப் பொருள்?” என்றான்.
“வேந்தனே, மண்ணும் விண்ணும் ஒன்றையொன்று வளர்ப்பவை. மண் அளிக்கும் அவியும் சொல்லும் விண்ணாளும் தேவர்களுக்கானது. தேவர்கள் அளிக்கும் மழையாலும் ஒளியாலும் காற்றாலும் மண் செழிக்கிறது. மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே துலாமுள் என நின்றிருக்கும் அனலே நிகர்நிலையை புரக்கிறது. அந்நிகர்நிலை இன்று அழிந்துள்ளது. விண் சரிந்து மண் எழுந்தால் மண்ணைக் காக்கும் விண்விசைகளும் அழியும். விளைவாக மண்ணும் அழியும்” என்றார் நாரதர். “என்னைத் தேடி வந்து இந்நிகரில் அழிவைச் சொன்னவன் அனலோன். நீ வென்றேயாகவேண்டும். விருத்திரனை வெல்லாது இப்புவி வாழ பிறிதொரு வழியில்லை.”
இந்திரன் தன்னுள் என “ஆம், அவனை வென்றாகவேண்டும்” என்றான். “எவ்வண்ணமேனும் நிகழ்த்தப்படவேண்டுமென உறுதிபூணப்பட்ட ஒரு செயல் நிகழ்ந்தே ஆகும் என்று உணர்க! நீ இழப்பது எதுவென்றாலும் இக்கடனை முடிப்பாய் என்றால் இங்கிருந்தே கிளம்புக!” என்றார் நாரதர். “ஆம், என்னை ஆக்கிய தெய்வங்கள் மேல் ஆணையாக!” என்று இந்திரன் வஞ்சினம் உரைத்தான்.
“நீ வெல்வாய். வெற்றியையே வேதம் அறைகூவுகிறது. வேதமுதல்வனாகிய உன்னை வெற்றிநோக்கி கொண்டுசெல்லும் ஊர்தி அதுவே. ஆயிரம் வேள்விகளில் இக்கணம் முதல் ஒழியாது அவிசொரியப்படும். உன்னை ஊக்கும் வேதச்சொல் ஒரு கணமேனும் ஓயாது முழங்கும். இடியின் தலைவனே, உன் போர்முரசென்றாகுக வேதம்!” என்றார் நாரதர்.