கிராதம் - 40
[ 8 ]
பிரம்மகபாலத்தின் மழைசூழ்ந்த குகையறைக்குள் இருந்து பிரசண்டன் சொன்னான் “மும்முகன் பிறந்த கதையை நான் விருத்திரர்களின் தொல்லூரில் கேட்டேன். அந்தணரே, அங்கே காட்டுக்குள் அமைந்த பாறையொன்றின்மேல் மூன்று பெருங்கற்களை மூன்று திசைநோக்கி முதுகிணைய நிறுத்திவைத்து விழிகளும் வாயும் வரைந்து அவர்கள் வழிபடுகிறார்கள். மும்முகனின் ஒரு முகம் கனிந்த தந்தை. அதன் காலடியில் மலரும் நீரும் மாவுணவும் படைத்து வழிபட்டனர். இரண்டாவது முகத்தின் அடியில் கள்ளும் குருதியும் படைத்தனர். மூன்றாம் முகத்தின் முன்பு ஊழ்கநுண்சொல்லன்றி எதையும் படைப்பதில்லை.”
“முதல் முகத்தை முழுநிலவிலும் இரண்டாம் முகத்தை கருநிலவிலும் வழிபட்டனர். மூன்றாம் முகத்தை ஆண்டுக்கொருமுறை இளவேனில் தொடங்கும் நாளில் பூசகர் மட்டுமே சென்று வணங்கினர்” என்றான் பிரசண்டன். “மும்முகனின் கதையை எனக்கு கபாலர் சொன்னார். இடிந்தழிந்த மகாவீரியத்திலிருந்து ஒரு சிறுகல்லை எடுத்துவரச் சொன்னான் த்வஷ்டா. அதை கொண்டுசென்று காட்டுக்குள் நட்டான். ஒவ்வொரு நாளும் அதனருகே அமர்ந்து விழிநீர் சிந்தி அழுதான். அவனுடைய கண்ணீர்பட்டு அக்கல் முளைத்தது. பேருருவம் கொண்டு ஒரு மலையென எழுந்து வளர்ந்தது. மூன்றுமுகம் கொண்டு எழுந்து நின்றிருந்த அந்த மலையை த்வஷ்டா தன் முதற்றாதையின் மண்வடிவமென எண்ணினான். அதற்கு விஸ்வரூபன் என்று பெயரிட்டான்.”
மும்முகம் கொண்ட மலையைப்பற்றி தொல்லசுரர்குடியின் பாடகர்கள் பாடியலைந்தனர். அதைக் கேட்டு அசுரர்குடியினர் ஒவ்வொரு கோடையிலும் இருமுடிகட்டு சுமந்து அங்கே வந்துசேர்ந்தனர். ஒருமுடிச்சில் உணவும் உடையும். மறுமுடிச்சில் மலைவடிவனுக்கான பூசனைப்பொருட்கள். பதினெட்டு நாட்கள் காடுகளுக்குள் ஓடைக்கரையிலும் பாறையுச்சியிலும் தங்கி வறண்ட ஓடையின் நீர்வழிந்த தடம்கொண்ட பாறைகளினூடாக ஏறி மேலே சென்று அவனை நோக்கினர். அசுரர்களில் ஹிரண்யர்கள் அவன் தந்தைமுகத்தை மட்டுமே காணமுடிந்தது. அவன் சினமுகத்தைக் கண்டனர் மகிடர். அவன் நுண்முகத்தைக் காணும் வழி மேலும் அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்திருந்த சண்டர் என்னும் குடிக்கு மட்டுமே இருந்தது.
மும்முகப் பெருமலை தொல்குடிகள் அளித்த பலிகொடைகளைப் பெற்று பேருருவம் கொண்டு வளர்ந்தது. அதன் முடிகள் எழுந்து முகில்களை தொட்டன. அதன் குளிர்ந்த முடியிலிருந்து நூற்றெட்டு அருவிகள் பொழிந்தன. அவை ஒழுகிய பாதைகளிலெல்லாம் அசுரர்களின் ஊர்கள் எழுந்தன. அந்நீரை உண்டு அவர்களின் குடிகள் செழித்தன. தந்தைமுகத்தைக் கண்ட அசுரர்கள் வேளாண்தொழில் செய்து செழித்தனர். சினமுகம் கண்டவர் வேட்டுவராயினர். நுண்முகம் கண்டவர்களோ அருங்காட்டுக்குள் வாழ்ந்தனர். அவர்கள் மட்டுமே பிற இருகுலங்களுக்கும் முதன்மைப்பூசகர் என்று கருதப்பட்டனர்.
பிற இருமுகங்களையும் அறிந்திருந்தனர் சண்டர்குடிப் பூசகர். அறம்பிழைத்த வேட்டுவரை அருட்தந்தையிடம் அனுப்பி பன்னிருநாட்கள் உணவொழித்து நோன்புகொண்டு மீளச்செய்தனர். அறம் கடந்த வேளிரை கொடுந்தந்தையிடம் சென்று குருதிசிந்தி பிழைபொறுக்கக் கோரி மீளவைத்தனர். இரு தந்தையருக்கும் அப்பால் இருவரின் குடிகளையும் நோக்கியபடி ஊழ்கத்தில் இருந்தான் இருள்தந்தை. அவன் விழிகளுக்கு முன் தழைத்து செறிந்து அணுகமுடியாத மந்தணம் இருளெனச் சூழ்ந்து கிடந்தது பெருங்காடு.
அங்கிருந்துதான் கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டு உயிர்கள் வந்தன. கொலைமதவேழங்கள் அங்கே பிடிகளுடன் புணர்ந்து குட்டிகளை ஈன்றன. புலிகளும் சிம்மங்களும் அதன் வாயில் திறந்து ஒளிரும் விழிகளுடன் வளையெயிறும் கூருகிருமாக வந்து எச்சரித்துச் சென்றன. இரவில் அங்கிருந்து குளிர்ந்த மூலிகைத்தென்றல் வீசி நோயுற்ற உடல்களை ஆற்றியது. எப்போதும் மழைதிகழும் அந்த வானையே அவர்களால் பார்க்கமுடிந்தது. அங்கே எழும் இடியோசையையும் களிறோசையையுமே அதன் குரலென அவர்கள் அறிந்திருந்தனர்.
ஒவ்வொரு நாளும் வளர்ந்த மும்முகனின் புகழ் விண்ணை அடைந்தது. அவன் குளிர்முடியை நோக்க விண்ணவர் வந்துசெல்வதை தேவர்க்கரசன் அறிந்தான். “இக்கணமே அதை அழிக்கிறேன்” என்று அவன் கிளம்பினான். மலைமேல் முகிலில் தோன்றி தன் மின்படைக்கலத்தை செலுத்தினான். பன்னிரண்டாயிரம் முறை மின்னல்கள் மலையைத் தாக்கின. திசைமறைத்த பெருமுகம் புன்னகையும் சிரிப்புமாக மின்னி மின்னி அணைந்ததே ஒழிய ஒரு சிறுபாறைகூட அதிலிருந்து உதிரவில்லை.
அசுரர்களின் குடிகளில் மக்கள் ஒரு மாதம் தொடர்ந்து இரவிலும் பகலிலும் மலைமுடிமேல் சுழன்றடித்த மின்னல்களைக் கண்டனர். “இந்திரன் எழுந்துவிட்டான்” என்று பூசகர்கள் அஞ்சிக்கூவினர். தங்கள் முற்றங்களில் சோரும் பெருமழைக்கு தலையில் காமணங்களைப் போட்டு உடல்குறுக்கி நின்று அவர்கள் அந்தப் போரை நோக்கினர். முகில்முழக்கமாக இந்திரன் போர்க்குரலெழுப்பினான். அடர்காட்டுக்குள் அவ்வொலியை எதிரொலியாக எழுப்பி மறுமொழி அளித்தான் மும்முகன்.
இறுதியில் சோர்ந்து இந்திரன் திரும்பியபோது முகில்பரப்பு விரிசலிட்டு வான்புன்னகை எழுந்தது. காடெங்கும் இலைகளில் ஒளிநகை விரிந்தது. காற்று சுழன்றடிக்க காடு கூச்சலிட்டது. பறவைகள் வானிலெழுந்து சிறகுலைத்து நீர்த்துளி சிதறின. அசுரகுடிகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி துளிவிழுந்த சேற்றுமுற்றங்களில் கூத்தாடினர். கொம்பும் குழலும் விளித்து வெற்றியறைந்தனர். இன்னுணவும் கள்ளும் உண்டு களியாடினர். “வெல்லற்கரியவன் குன்றுமுகன்” என்றனர் பூசகர்.
ஆற்றாமையும் கண்ணீருமாக தன் அரண்மனையில் ஒடுங்கிக்கிடந்தான் இந்திரன். இந்திராணியாலும் அவனை தேற்றமுடியவில்லை. தேவர்கள் நாரதரைத் தேடி அழைத்துவந்தனர். அவனைத் தேடிவந்த நாரதரிடம் “தோற்று திரும்பினேன், நாரதரே. ஒவ்வொருமுறை தோற்கையிலும் என் அரியணையின் கால் ஒன்று புதைகிறது. ஏழு தோல்விகளுக்குப்பின் நான் இந்திரனென அமையமுடியாது என்பது நெறி. அரியணை என்றும் இருக்கும். அமராவதியும் இருக்கும். இங்குள்ள செல்வமனைத்தும் இவ்வண்ணமே இருக்கும். இந்திராணியும் மாற்றமின்றி நீடிப்பாள். நான் ஒருவனே மறைவேன். இன்மையுள் கரைவேன்” என்றான்.
“போரின் ஒரு தருணத்தில் அப்பேருருவனை வெல்ல என்னால் ஆகாது என்ற எண்ணம் எழுந்துவிட்டது. என் மின்படைகள் அவனை வெண்ணிறஇறகென வருடிச் செல்வதையே கண்டேன். அதிரும் ஒளியில் அவன் முகத்தில் எழுந்த பெரும்புன்னகை என்னுள் ஆழத்தில் உறைந்த ஒன்றை அதிர வைத்தது. அது நான் என்னைப்பற்றி என் கனவுகளில் மட்டுமே உணர்ந்த ஓர் உண்மை. இசைமுனிவரே, நான் ஒரு துலாமுள்ளன்றி வேறல்ல. அசுரரும் தேவருமென பிரிந்து பிறிதொன்று ஆடும் களத்தில் நான் ஓர் அடையாளம் மட்டுமே.”
“கை தளர்ந்த மறுகணமே கால் பின்னடைந்தது. என் அச்சத்தை ஐராவதம் உணர்ந்ததும் அது திரும்பி ஓடியது” என்றான் இந்திரன். “எப்படைக்கலமும் இனி என்னை சினந்தெழச் செய்யாதென்று உணர்ந்தேன். நான் மறையும் தருணம் அணுகிவருகிறது.” நாரதர் புன்னகைத்து “இந்திரனே, மகாவீரியத்தை நீ வென்றது எப்படி?” என்றார். “வஞ்சத்தால், இரக்கமற்ற பெருவிசையால்” என்றான். “ஆம், நுண்கலையை எப்போதும் வெல்வது குருட்டுப்பெருவிசையே. கலையை அழிப்பது காட்டாளருக்கே எளிது. கலை தன்னை அறிபவனின் விரிவை தன் பாதையெனக்கொண்டு எழுவது. நுண்மைகொண்டவனில் அது நுண்மை. கனவுநிறைந்தவனில் அது கனவு. அரசே, தெய்வங்களில் அது தெய்வத்தன்மை. வீணரிடமும் வெறிகொண்டவரிடமும் அது வீண்” என்றார் நாரதர்.
“மலர்பூத்த மரத்தை மோதும் மலைவேழமெனச் சென்று நீ மகாவீரியத்தை அழித்தாய். அதுவே முறை. பிறிதெவ்வகையிலும் அதை வெல்ல முடியாது. ஒலி கேளாதவனே யாழை உடைக்கமுடியும். விழியில்லாதவன் மட்டுமே ஓவியத்தை அழிக்கிறான். சுவை உணராதவனே தேன் கலத்தை கவிழ்க்கும் ஆற்றல்கொண்டவன்” என்றார் நாரதர். “உன்னை வெல்ல எழுந்த கலையை உணராத மூடனாகச்சென்று வென்றாய். அதுவே போர்வீரனின் வழி. அதன்பின் அந்நகரை உன் நகருக்குள் அமைத்துக்கொண்டாய். அதுவே அரசர்களின் வழி.”
இந்திரன் நீள்மூச்சுவிட்டான். “இங்கு உன்னை அறைகூவி நிற்பது பொருளில்லாப் பேருரு. இதன் மடம்புகளிலும் முகடுகளிலும் கரவுகளிலும் சரிவுகளிலும் ஒழுங்கென்று ஒன்றுமில்லை. இதில் உள்ளவை அனைத்தும் விசை என்ற பொருள்மட்டுமே கொண்டவை. அரசே, பெருமலையின் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிற்பத்துக்கு எதிரானது. அதன் ஒவ்வொரு இருப்பிலும் கலையின் மறுப்பு திகழ்கிறது” என்றார் நாரதர். “கலை தன்னைத் திறந்துவைத்து தன்னை அணுகுபவனுக்காக காத்திருக்கிறது. கலைப்பொருளில் முழுமை கூடுவது அதை அறிந்து உணர்பவன் உடனுறைகையில் மட்டுமே. அதன்முன் அதை மறுத்து நின்றிருந்தபோது நீ அதன் முழுமையை சிதைத்தாய். அதை வென்றாய்.”
“இது முழுமைகூடிய இருப்பு. தன்முன் இருக்கும் எவரையும் இது அறிவதில்லை. எவரும் இதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. எதைக்கொண்டும் இதை மறைக்கவோ திரிக்கவோ இயலாது. எச்சொல்லாலும் இதை விளக்கவோ விரிக்கவோ இயலாது. பொருண்மையின் நெகிழ்வற்ற அறியாமையைச் சூடி நின்றிருக்கிறது மும்முக மாமலை. இதை வெல்ல உன் குருட்டுவிசை உதவாது என்று அறிக!” என்று நாரதர் சொன்னார். “கலையை இழந்த சிற்பியின் கட்டற்ற வஞ்சப்பெருக்கு பொருண்மை கொண்டெழுந்தது இம்மலை.”
“இதன் விழியின்மை முன் உன் மின்னொளி செல்லாது. இதன் செவியின்மை முன் உன் இடி ஒலிக்காது. இதன் அசைவின்மை முன் உன் ஆற்றல் இயங்காது” என்றார் நாரதர். “இதை நான் வெல்வது எப்படி?” என்றான் இந்திரன். நாரதர் அவன் தோளில் கைவைத்து “வெல்லும் வழி ஒன்றே” என்றார். “இவ்வசைவின்மையை கலை அசைவுள்ளதாக்கும். இவ்விழியின்மையை கலை ஒளி அறிவதாக ஆக்கும். இச்செவியின்மையில் கலை இசை நிறைக்கும். உன் அரசவையின் பெருந்தச்சனை அங்கு அனுப்பு. வானிடிக்கு கரையாத மலை கலைஞனின் சிற்றுளிக்கு நெகிழ்வதை நீ காண்பாய்.”
முகம் மலர்ந்த இந்திரன் “ஆம், அவ்வாறே!” என்றான். தனது அரசவையின் முதன்மை சிற்பியாகிய காம்யகனை அழைத்து “மும்முகனை வென்று வருக!” என்று ஆணையிட்டான். காம்யகன் ஆயிரம் கைகள் விரித்தெழும் வல்லமை கொண்டவன். “தேவசிற்பியே, சென்று அவனை ஒரு சிற்பமாக்குக! பகைகண்டு அஞ்சும் கண்ணும் படைக்கலத்திற்கு முன்நிற்கும் உடலும் அவனில் எழுவதாக!” என்றார் நாரதர்.
காம்யகன் ஆயிரம் கைகளில் உளிகளும் கூடங்களும் அளவுகோல்களும் அளவைக் கயிறுகளும் நீர்நிகரிகளும் கொண்டு எழுந்து மண்ணிறங்கி மும்முகன் முன் சென்று நின்றான். அவன் நோக்கு தன்மேல் பட்டதுமே மும்முகன் மகிழ்ந்து குனிந்து நோக்கினான். “உன்னை மூடியிருக்கும் பொருளின்மையை செதுக்கி எடுப்பேன். உன்னுள் உறங்கும் பொருள் துலங்கச்செய்வேன்” என்றான் காம்யகன். “நீ என் கைகளுக்கும் கருவிகளுக்கும் முன் வெறும் முதற்பொருள் மட்டுமே.”
அவன் முன் சிறு மைந்தனென மகிழ்ந்து வளைந்து நின்றான் பேருருவன். அவன் காலடியில் இருந்த பாறை ஒன்றில் சிற்றுளியை வைத்து மெல்ல தட்டி கல்நுனியை உடைத்து வீசினான் சிற்பி. “உன்னிலிருந்து விலகிச்செல்லும் இந்தக் கற்சில்லைப் பார். பொருளற்றது என நீயே காண்பாய். பொருள்கொண்ட ஒன்றிலிருந்து பொருளின்மை எப்படி விலகிச்செல்லமுடியும்? அப்படியென்றால் அது உன்னுடையதல்ல என்றே பொருள்” என்றான் சிற்பி. செதுக்கிச் செதுக்கி அப்பாறையை சுட்டுவிரல் நகமென்றாக்கினான்.
குனிந்து தன் காலை நோக்கிய மும்முகன் திகைத்து “எங்கிருந்தது இது?” என்றான். “உன்னுள். நீயல்லாத அனைத்தையும் விலக்குகையில் நீ மீள்வாய்” என்றான் காம்யகன். “ஆம், விலக்குக!” என்றான் மும்முகன். அவன் தலைமேல் கூடுகட்டியிருந்த பறவைகள் கூவின. மூதாதைமுகம் கொண்ட தலைமேல் வாழ்ந்த கௌதாரிகள் “எந்தையே, எண்ணித் துணிக! தன்னை பிறிதொன்றாக ஆக்குவது இறப்பேயாகும்” என்று கூவின. முனிந்த முகம்கொண்ட தலைமேலிருந்த சிட்டுக்குருவிகள் “முகம்கொண்டபின் நீங்கள் முடிவிலியை தலைசூட முடியாது, தந்தையே” என்று சிலம்பியபடி எழுந்துபறந்து சுழன்றன. சொல்லின்மையில் அமைந்த மலையில் வாழ்ந்த மைனாக்கள் “தாதையே, விழிகொண்டபின் ஒளியின்மையை நோக்கமுடியாதவர் ஆவீர்” என்றன.
ஆனால் தன்னைத்தான் நோக்கி உவகையிலாடி நின்றது மலை. கல்திரை விலக்கி எழும் அந்த உருவம் தன்னுள் ஒளிந்திருந்தது என்று எண்ணியது. “மலையரே, அது அச்சிற்பியின் உள்ளத்திலுள்ள உருவம்” என்றன கௌதாரிகள். “அவன் அகற்றுவனவற்றில் எஞ்சுவதைக்கொண்டே நீர் அவனை வெல்லமுடியும்” என்றன சிட்டுக்குருவிகள். “பேருருவரே கேளுங்கள், உருவின்மையே தெய்வங்கள் விரும்பும் உருவம்” என்றன மைனாக்கள். எச்சொல்லையும் அவன் செவிகொள்ளவில்லை. சிற்பி முதுமரத்தைக் கொத்தும் மரங்கொத்திபோல கற்பாறைகளில் தொற்றி ஏறி செதுக்கினான். அவன் கோரும் வகையிலெல்லாம் வளைந்து திரும்பி உதவியது மும்முகம்.
முற்றுருக்கொண்டு மும்முகன் எழுந்தபோது சிற்பி திரும்பி “அரசே, இதோ என் பணி முடிந்தது” என்றான். விண்ணில் ஐராவதம் தோன்றியது. அதிலிருந்த இந்திரன் தன் மின்படையைச் சுழற்றி மும்முகனை மூன்றாகப் பிளந்து வீழ்த்தினான். அவன் தலைகளை வெட்டி அகற்றினான் காம்யகன். மழையிரவின் இருளுக்குள் இடியோசை கேட்டு குடில்களுக்குள் இருந்த அசுரகுடிகள் எழுந்தோடி வந்து நோக்கினர். மின்னல்கள் வெட்டி அணைந்துகொண்டிருந்தன. பூசகன் ஒருவன் கைசுட்டி “அதோ” என்றான். மறுமின்னலில் அவன் சுட்டியதென்ன என்று அவர்கள் கண்டுகொண்டனர். அங்கே பேருருவ முகம் மறைந்துவிட்டிருந்தது.
மறுநாள் விடிந்தபோது அவர்கள் அது விழிமயக்கல்ல என்று உறுதிகொண்டனர். கூட்டம்கூட்டமாக கண்ணீர்விட்டுக் கதறியபடியும் முழவுமீட்டி மும்முகனின் கதையைப் பாடியபடியும் அவர்கள் காட்டுக்குள் புகுந்து மும்முகனின் அடிநிலத்தை சென்றடைந்தனர். அங்கே பெருமுகமென அவர்கள் அன்றுவரை கண்டிருந்த தோற்றம் பாறைக்குவியலென சிதைந்து பரந்திருப்பதைக் கண்டனர். அதனருகே அமர்ந்து கண்ணீர்விட்டனர். மலரும் ஊன்படையலும் அளித்து மண்விழுந்த மூத்தோனை வணங்கி தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர்.
மும்முகனின் முதற்தலையிலிருந்து எழுந்த கௌதாரிகள் தொல்வேதச் சொல்லுரைத்து காட்டை நிறைத்தன. களிமயக்கின் முகத்திலிருந்து எழுந்த சிட்டுக்குருவிகள் விழைவின் பாடல்களை பாடின. ஊழ்கமுகத்திலிருந்து எழுந்த மைனாக்கள் நுண்சொற்களை உரைத்தன. அவற்றைக் கலந்து அவர்கள் உருவாக்கிய பாடலின் சொற்களில் மும்முகன் வாழ்ந்தான்.
“இந்திரன் மும்முகனை வென்ற கதையை ஒளிரும் ஆற்றங்கரையில் இளஞ்சூதனாகிய குணதன் சொல்லக்கேட்டேன். நிலவலைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்” என்றான் பிரசண்டன். “அவன் பாடிமுடித்ததும் நான் விருத்திரர்களின் மலைக்குடியில் என்னிடம் முதற்பூசகன் சொன்ன கதையை சொன்னேன். இருகதைகளும் நீர்ப்பரப்பில் இரு நெற்றுகள்போல மிதந்துசென்றன. அணுகி அகன்று மீண்டும் அணுகி அவை செல்வதை உணர்ந்தபோது நான் அலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். அவனும் அதை எண்ணி அக்கணத்தில் அலைகள் என்று சொன்னான்.”
“திரிசிரஸை இந்திரன் வென்ற கதையை நான் பிறிதொரு வடிவில் கேட்டுள்ளேன்” என்றார் பிரசாந்தர். “த்வஷ்டாவின் மைந்தராக அசுரகுலமகள் வாகாவின் வயிற்றில் பிறந்து தன் தவத்தால் முழுமைகொண்டு இந்திரநிலை தேடிய முனிவர் அவர். ஒரு தலையால் வேதமும் மறு தலையால் ஊழ்கமும் பயின்றார். மூன்றாவது தலையை களிமயக்குக்கு அளித்திருந்தார். ஒவ்வொரு கணமும் வைதிகரும் ஊழ்கப்படிவரும் எதிர்கொண்டு போராடும் விழைவனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தலைக்கு அளித்தமையால் அவர் வேதம் தூய்மைகொண்டது. ஊழ்கம் முழுமைகொண்டது.”
“இந்திரன் படைக்கலத்துடன் எழுந்துவந்து அவரை வென்றபோது வேதமுகத்திலிருந்து மரங்கள் பற்றி எரியும் அனலெழுந்தது. களிமயக்கின் முகத்திலிருந்து நீர்நிலைகள் சுருண்டெழும் புயலெழுந்தது. ஊழ்கமுகத்திலிருந்து மலைகளை நுரைக்குமிழிகளென உடைக்கும் ஓங்காரம் எழுந்தது. இந்திரன் அஞ்சி ஓடி தன் அமராவதியில் ஒளிந்துகொண்டான். நாரதர் அவனிடம் சொன்னார், திரிசிரஸின் வெற்றி அவரது ஒரு முகம் பிறிதொன்றுக்குத் தெரியாதென்பதே. இந்திரன் வெண்முகிலொன்றை மாபெரும் ஆடியென்றாக்கினான். அதில் களிமுகத்தை வேதமுகத்திற்குக் காட்டினான். வேதமுகத்தை ஊழ்கமுகத்திற்குக் காட்டினான். ஊழ்கமுகத்தை களிமுகம் கண்டது.”
“களிமுகம் கண்ட வேதமுகம் தன் கரந்துறைந்த விழைவைக் கண்டறிந்து சொல்தவறியது. வேதம் பிழைக்கவே அதன் ஆற்றல் அழிந்தது. வேதமுகம் கண்ட ஊழ்கமுகத்தின் அமைதிக்குள் அறிவின் வினா எழுந்தது. ஊழ்கம் கலைந்தது. ஊழ்கமுகம் கண்ட விழைவுமுகம் தன்னுள் உறைந்த பிறிதொன்று களியாட்டை அறிவதேயில்லை என்று உணர்ந்து திகைத்தமைந்தது. மும்முகமும் செயலிழக்க அத்தருணத்தில் இந்திரன் அவற்றை மூன்றென வகுந்திட்டான்.”
“அத்தலைகளை தேவசிற்பி ஒருவன் வெட்டிக்கொண்டுசென்றான். அமராவதியின் மூன்று வாயில்களையும் அம்முகங்கள் அணிசெய்தன. ஒரு வாயில் இளங்காலையில் வேதமோதும்படி அமரர்களை அழைத்தது. மற்றொன்று அந்தியில் கொண்டாடி மகிழும்படி கூவியது. பிறிதொன்று இரவின் அமைதியில் முழுதடங்கி உள்ளுணரும்படி சொன்னது” என்றார் பிரசாந்தர்.
[ 9 ]
கைமுழவை மீட்டி மெல்ல நடனமிட்டுச் சுழன்று நின்ற சண்டன் சொன்னான் “அமராவதிக்குள் நுழையும் வேதியர் களிமயக்கில் நின்றிருக்கும் முகத்தினூடாகவே செல்லவேண்டும் என்று நெறியுள்ளது. விழைவாடுபவர் ஊழ்கப்படிவரின் முகத்தினூடாக நுழையவேண்டும். வணிகர்களே, ஊழ்கப்படிவர் நுழைந்தால் வேதமுகம்கொண்ட வாயிலே காட்டப்படும்.” கைகளால் விரைந்து தாளமிட்டு நிறுத்தி “ஏனென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் விழைந்தவற்றின் வடிவில்தான் விழைவுக்கரசின் அணிநகருள் புகமுடியும். இழந்ததென்ன என்று அறிந்தாலே விழைந்தது என்ன என்று அறிவதுதான் அல்லவா?” என்றான்.
வணிகர்கள் உரக்க நகைத்தனர். சிலர் வெள்ளி நாணயங்களை சண்டனை நோக்கி வீச அவன் குனிந்து அவற்றைப் பொறுக்கி தன் மடிச்சீலையில் முடிந்துகொண்டான். “வெள்ளியும் பொன்னும் துள்ளிவருவதைப்போல் அழகிய காட்சியென புவியிலேதும் இல்லை. வணிகர்களே, கங்கைப்பரப்பில் மீன் துள்ளுவதைப்போல் இங்கு செல்வம் துள்ளட்டும். உடனெழுந்து துள்ளும் என் சொல்” என்றான்.
“விருத்திரனை இந்திரன் வென்ற கதையை சொல்லவந்தாய், சூதனே” என்றார் முதிய வணிகர். “ஆம் அக்கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கதைகளுக்குள் கதைகள் புகுந்துகொள்கின்றன. கதைகளிலிருந்து கதைகளை பிரித்தெடுத்து நீட்டுகையில் கதைகளுடன் அவை பின்னிக்கொள்கின்றன. வணிகர்களே, மண்ணுக்கு மேலே கிளையென கொடியென தண்டென பின்னிய கதைகளை நாம் காண்கிறோம். காணா ஆழத்தில் வேரெனப் பின்னிய கதைகளை அறிவதே இல்லை.” முழவை மும்முறை மீட்டி “ஒரு மிடறு இனிய கள் ஒருவேளை அக்கதைகளை மீட்டுக்கொண்டுவரக்கூடும்” என்றான்.
“இது கள்ளருந்தும் தருணம் அல்ல. கதை இருந்தால் சொல்க!” என்றார் முதிய வணிகர். “ஆம், மேலெழுந்த கதைகளைச் சொல்கிறேன். கரந்துறையும் கதைகளை உங்கள் கரந்துறையும் காதுகள் கேட்பதாக!” என்று சொல்லி முழவை மீட்டி மெல்ல ஆடினான் சண்டன். ஜைமினி பைலனிடம் “இவர் சொல்பவை எந்நூலில் உள்ள கதைகளென்றே தெரியவில்லை” என்றான். “நூலில் இடம்பெறப்போகும் கதைகள்” என்றான் பைலன். சுமந்து சிரித்தபடி “நூலில் இருந்து உதிர்ந்த கதைகளும் உண்டு எனத் தோன்றுகிறது” என்றான்.
“மும்முகனின் குருதி ஊறிப்பெருகி ஓர் அலையென எழுந்து விண்ணை அறைந்தது. அமராவதியில் தன் உப்பரிகையில் நின்று நோக்கிய இந்திரன் தொலைவில் அந்திவானம் வழக்கத்தைவிட சிவந்திருப்பதைக் கண்டான். அச்சிவப்பு பெருகிவருவதை உணர்ந்ததும் அச்சம் கொண்டான். அது ஒரு குருதிப்பேரலையென எழுந்து வந்து அமராவதியின் நகர்முகத்தை அறைந்தது. கோட்டையைக் கடந்து தெருக்களை நிறைத்தது. சுழியும் நுரையுமெனப் பெருகி வந்தது” சண்டன் சொன்னான்.
இரு கைகளையும் விரித்து அக்குருதிமுன் நின்று இந்திரன் சொன்னான் “முனிவனைக் கொன்ற பழி என்னைச் சூழ்க! என் நகரை விட்டொழிக!” குருதியில் ஒரு முகம் மூக்கும் வாயும் கொண்டு எழுந்தது. “மூன்று பழிகளால் சூழப்பட்டாய், இந்திரனே. ஊழ்கத்திலமர்ந்த முனிவனைக் கொன்றமையால் நீ பழிகொண்டாய். வேதமோதிய வைதிகனைக் கொன்றமையால் இருமடங்கு பழிகொண்டாய். காமக்களிமயக்கில் இருந்தவனைக் கொன்றமையால் மும்மடங்கு பழிகொண்டாய்.”
“இப்பழிக்கு உன் நகரும் நாடும் கொடியும் முடியும் குலமும் சுற்றமும் குருதியும் போதாது” என்றது குருதிவடிவம். “இப்பெருநகரை நூறுமுறை உண்டாலும் தீராது என் பழி” என்று கூவியது. துயருடன் “அப்பெரும்பழிக்கு நிகரென நான் கொடுப்பதேது?” என்றான் இந்திரன். குருதிகண்டு அங்கே ஓடிவந்த நாரதர் சொன்னார் “இக்கணத்தில் கொடுப்பதென்றால் இந்திரபுரியும் மிகச்சிறிது. ஆனால் எதையும் முடிவிலிவரை நீட்டினால் மிகப்பெரிதே. இப்பழியை காலத்தில் நீட்டிச்செல்க!” குருதிவடிவன் “ஆம், அவ்வாறு என் பழி நிகர்செய்யப்பட்டாலும் நன்றே” என்றான்.
“இந்திரனுக்கென இப்பழியை உயிர்கள் சுமக்கட்டும். அவன் முகிலருளால் வாழ்பவை அனைத்தும் இங்கு வருக!” என்றார் நாரதர். மண்ணிலுள்ள அனைத்துக்கும் தேவருலகில் உள்ள நிகர்வடிவங்கள் வந்து அவர்கள் முன் நிரைவகுத்தன. “இந்திரனை வேண்டி அருள்கொள்வனவற்றில் முதன்மையானவை இவை” என்றார் நாரதர். “நிலம் மழை கொள்கிறது, நீர் மின் கொள்கிறது, மரம் இடி கொள்கிறது, பெண் அவன் ஆண்துளியை கொள்கிறாள். அவர்கள் இப்பழியை ஊழிமுடிவுவரை சுமக்கட்டும்” என்றார்.
“என்பொருட்டு இதை சுமப்பவர்களுக்கு நற்சொல்லொன்றை அளிப்பேன். அப்பழி சுமக்கும் நாள்வரைக்கும் அக்கொடையும் உடனிருக்கும்” என்றான் இந்திரன். “அவ்வாறே ஆகுக!” என்றனர் நிலமும் நீரும் மரமும் மங்கையும். குழிகையில் நிறைக என அருளி அப்பழியை நிலத்திற்கு அளித்தான் இந்திரன். இணைகையில் வளர்க என்று நீர் அப்பழியை சூடிக்கொண்டது. முறிந்தாலும் இறப்பில்லை என்னும் நற்சொல்லுடன் பழிசூடியது மரம். விழைவு அடங்காதெரிக என்னும் வாழ்த்துடன் அதைப் பெற்றாள் பெண். நிலத்தில் களரூற்றாக செங்குழம்பெழுந்து குமிழியிடுவது அப்பழியே. நீரில் குமிழிகளென நுரைகொள்வது அக்குருதி. மரத்தில் அது செவ்வரக்கு. பெண்களில் அது மாதவிடாய்.
“வணிகர்களே, தாதவனம் என்னும் ஊரின் பெருவழிச் சந்திப்பில் நான் பிரசாந்தரைக் கண்டேன். இந்திரன் அவனுக்கு வேள்வியில் பலிகொடுக்கப்படும் பசுவின் தலை காம்யகன் என்னும் தச்சனுக்கு செல்லவேண்டும் என்று அறிவித்ததாக சொன்னார். வேள்வியில் கழுத்துக்குழாய் வெட்டி குருதிசொரிந்து அனலெழுப்பியபின் துண்டுபடுத்தி அகற்றி இலைத்தாலம்மீது பசுவின் தலை வலக்கொம்பு கீழே சரிந்த நிலையில் வைக்கப்படும்போது பொன்னிறச் சிறகுகள் கொண்ட ஈயெனப் பறந்துவந்து அப்பலியை கொள்பவன் அவனே என்றார்” என்று சண்டன் தொடர்ந்தான்.
“பின்னர் குத்ஸிதம் என்னும் மலைக்குடியில் நான் பிரசண்டரைக் கண்டேன்” என்றான் சண்டன். “முதிய சூதர் சடைமுடிக்கற்றைகள் தோளில் சரிய செவ்விழிகளில் கள்ளின் பித்து வெறித்திருக்க என்னிடம் சொன்னார், தொல்குடி அசுரர் தங்கள் குடியிலிருந்த அத்தனை தச்சர்களின் கட்டைவிரல்களையும் வெட்டி வீசினர். அவர்கள் கல்வெட்டி சுவர் எழுப்புவதில்லை என்றும் மரம்வெட்டி கூரைவேய்வதில்லை என்றும் உறுதிகொண்டனர். அதன்பின்னரே உள்காடுகளுக்குள் புகுந்து கற்குகைகளை இல்லங்களாகக் கொள்ளலாயினர்.”