கிராதம் - 38

[ 4 ]

பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு  கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து முகம் குனித்து ஆழ இழுத்தார் பிச்சாண்டவர். நெஞ்சு நிறைத்த புகையை உடலெங்கும் பரவவிட்டு மேலும் மேலுமென உடல் குறுக்கி ஒடுங்கினார். சடைப்புரிகள் சரிந்துவிழுந்து நிழலுடன் ஆடி முகம் மறைக்க அமர்ந்த பிச்சாடனரின் இருபக்கமும் அமர்ந்து அந்தணரும் சூதனும் கதையாடினர்.

பிரசாந்தர் “சொல்க சூதரே, நீங்கள் அந்த மலைச்சிற்றூருக்குள்  கண்ட விருத்திரன் யார்? எவ்வண்ணம் அவர்களின் குலத்தலைவன் ஆனான்? அவனை ஈன்றவர் யார்? இந்திரன் அவனை வென்ற கதை எது?” என்றார். பிரசண்டன் “அவர்கள் சொன்ன கதையை நான் இன்று சொல்லமுடியாது. அக்கதையை அன்று என்னுள் இருந்த ஒரு கதைசொல்லி உள்வாங்கினான். அந்தணரே, சூதனுள்   கதைகள் விதைகளெனச் சென்று விழுகின்றன. அக்கதையை நான் நூறு சந்தைகளில் பாடியிருப்பேன். அது ஒரு கவிஞர் நாவில் விழுந்து என்னிடமே மீண்டு வந்தது. விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை நான் சந்தை ஒன்றில் சூக்தன் என்னும் சூதன் பாடக்கேட்டேன்” என்றான்.

“கதை நின்றுகொண்டிருப்பதில்லை. அது நீரோடை, பேராறு, அலைகடல். கதைக்குள் கதைமாந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்கள் ஒவ்வொன்றும் உரசிக்கொண்டிருக்கின்றன” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் “கதையில் எது வளர்கிறதோ அதுவே உண்மை என்று எனது ஆசிரியர் சொன்னதுண்டு. சூதர் சொல்லில் மெய்யே வளரும் என்று எண்ணுகின்றேன்” என்றார். “வளர்வதேதும் மெய்யே என்று கொள்வதன்றி மானுடருக்கு வேறுவழியில்லை” என்றான் பிரசண்டன்.

அந்தணரே, நான் கண்ட அந்த மலைக்குகைக்குள் வளைந்து எழுந்த மென்பாறைச்  சுவர்ப்பரப்பில்  கூரிய கற்களால் அடித்து கீறி வடுவாக்கி வரையப்பட்ட ஈராளுயர ஓவியமாக நின்றிருந்தான் விருத்திரன். நீர்ப்பாசி படிந்த அச்சுவரில் அவ்வோவியத்தை காண்பதற்கு விழி பழகவேண்டும். பள்ளக்கோடுகளென செல்லும் அவ்வோவியத்தின் மீது விழிகள் பரவி துழாவி வடிவொன்றை அள்ள முயல்கின்றன. நழுவி மேலும் விழைவு கொண்டு தவிக்கும் ஒரு கணத்தில் மின்னென அம்முகம் தெரிகிறது. அதன்பின் அம்முகமன்றி பிறிதொன்று தெரிவதில்லை.

தொல்முகம் அது.  நாமறிந்த மரங்கள் முளைத்திருக்கவில்லை. நாம் காணும் நகரங்களும் விதைகளுக்குள் இருந்தன. யாரறிவார்? அன்று  மலைகள்கூட சிறியவையாக இருந்திருக்கும். நதிகள் இவ்வண்ணம் திரண்டிருக்காது. யார் முகம் அது? இங்கு எழுந்த அனைத்தையும் கண்டு திகைத்து நின்றிருக்கும் மூதாதை முகம். இல்லை, இங்கெல்லாம் நிறைந்துபெருகியிருக்கும் தன் முகம் கண்டு புன்னகைத்து நிற்கும் தந்தைமுகம். விரிந்த தோள்களில் மலர்கள். சடைத்திரிகள் தொங்கிய பிடரி. ஒரு கையில் வாள். பிறிதொன்றில் அமுதகலம். விரிந்த அருள்விழிகள். இதழ்களின் இருபுறமும் எழுந்த வளைதேற்றைகள்.

இந்நாள்வரை இங்கு நிறுவப்பட்ட எந்தப் பேராலயத்திலும் நாம் அம்முகத்தை கண்டதில்லை. என் மைந்தரென சுற்றும் பெருகியிருக்கும் இன்முகம். என் மூதாதையர் என தெற்கில் பெருகியிருக்கும் கிராத முகம். நான் என் கனவால் அதை கண்டுகொண்டேன். அதிலிருந்தேன். விருத்திரன் என்ற சொல்லை என் சித்தம் தொட்டெடுத்ததே  பின்னர்தான். பந்தம் கொளுத்திவைத்து பச்சையூன் படைத்து மூதாதையை வழிபட்டனர் அவர்கள். மைந்தர்களை அவர் காலடியில் கிடத்தி வணங்கி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு பந்தத்தையாக அணைத்து இருளுக்குள் அவரை அமைத்துவிட்டு  வணங்கி புறம்காட்டாமல் வெளியேறினர். “தந்தையே, மூத்தவரே, விருத்திரனே,  மீண்டும் எங்கள் இளமைந்தருடன் வருகிறோம். எங்கள் குலம் பெருகட்டும். எங்கள் உணவு செழிக்கட்டும். எங்கள் சொற்களில் கனிவு நிறைந்திருக்கட்டும். எங்கள் அம்புகளில் கூர் திகழட்டும். அருள்க!”  என்றார் முதுபூசகர் கபாலர். அப்போதுதான் அச்சொல் என்னுள் உறைத்தது. விருத்திரனா? தொல்கதைகள் சொல்லும் அசுரர்தலைவனா?

திரும்பும்போது கேட்டேன் “என்ன சொன்னீர், விருத்திரனா?” கபாலர் “ஆம், எங்கள் குலம் அவரால்தான் விருத்திர குலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார். என்னுள் அலையென வந்தடித்த பலநூறு கதைகளிலிருந்து நான் விடுபட நெடுநேரமாகியது. வழுக்கும் பாறைகளினூடாக கொடிபற்றி இறங்கி மீண்டும் குகை இல்லங்களுக்கு வந்து குளிர்ந்த பாறையொன்றில் அமர்ந்து நீரருந்தினோம். என்னருகே கபாலர் படுத்துக்கொண்டார்.

விருத்திரன் வாழ்ந்த கதையை அப்பூசகரிடம் நான் கேட்டேன். அவர்களின் தொல்கதையை அவர் சொன்னார். “இப்புவி உளிஓயா பெருந்தச்சன் ஒருவனால் கற்பாறையில் செதுக்கப்பட்டது, பாடகரே. அவனே மலைகளையும் தாழ்வரைகளையும் ஆறுகளையும் நிலவிரிவுகளையும் உருவாக்கியவன். அலைக்கும் கடல்களை அமைத்தவன். அவனை தச்சன் என்று வழிபட்டனர் என் முன்னோர். அந்த முதற்சிற்பி தன் வடிவில் படைத்தவனே பெருந்தச்சனாகிய விஸ்வகன். அவனே இங்கு எழுந்துவரும் ஒவ்வொன்றையும் படைப்பவன். தன்கூட்டை தன்னைச்சுற்றி கட்டிக்கொள்ளும் புழுவென இவையனைத்துக்கும் அடியில் அவன் குடியிருக்கிறான். அவன் மைந்தன் கர்மகன். அவனிடமிருந்தே எங்கள் குடி எழுந்தது.”

பிரசாந்தர் சற்று உளஎழுச்சி கொண்டு கையூன்றி “விஸ்வகர்மன்! அவர்கள் வழிபடுவது விஸ்வகர்மனை” என்றார். “விஸ்வகர்மனை அசுரன் என்றும் அவர் பெற்ற நான்கு மைந்தர்களை மகாருத்ரர்கள் என்றும் பராசரரின் புராணமாலிகை சொல்கிறது.” பிரசண்டன் “கதைகளை கதைகளைக்கொண்டே அறியமுடியும், அந்தணரே. கதைகள் கதைகளுக்கு மட்டுமே பொருள்சேர்க்கின்றன” என்று புன்னகையுடன் சொன்னான்.

கற்பாறையின் தண்மைமேல் முதுகமைத்து மல்லாந்து படுத்து வானை நோக்கியபடி கபாலர் சொன்னா “மண்ணுக்குள் புதைந்த சிறுவிதைகளிலிருந்து எழுந்தவை, ஒவ்வொரு கணமும் மண்பிளந்து எழுந்துகொண்டே இருக்கின்ற கோடானுகோடி மரங்களும் செடிகளும். பல்லாயிரம் கோடி துளைகளிலிருந்து விதை கொண்டு வெளிவருகின்றன சிற்றுயிர்கள். இருண்ட வளைகளிலிருந்து மின்னும் கண்களுடன் சுருண்டெழுந்து வருகின்றன நாகங்கள். நாம் நின்றிருக்கும் இம்மண்ணுக்கு அடியில் அனைத்தையும் முளைத்தெழச்செய்யும் பெரும்பரப்பு ஒன்றுள்ளது.”

முதலில் உள்ளது சமூலம். அதை விதைகளினாலான உலகம் என்றனர் என் முன்னோர். அவ்வுலகுக்கு அடியில் சிற்றுயிர் முட்டைகள் செழித்த ஆழுலகொன்று உள்ளது. அதை தாதம் என்றனர். அதற்கும் அடியில் உள்ளது பெருநாகங்கள் பின்னிய பிறிதொரு உலகு. அதை ஜாதம் என்றனர்.  பாடகரே, அதற்கும் அடியில் உள்ளது இப்பெரும்பாறைகளுக்கும் மலைகளுக்கும் ஆணிவேரென்றான ஓர் உலகம். அதன் பெயர் பீஜம். அவ்வுலகுக்கும் அடியில் உள்ள ரேதம் என்னும் உலகில் வாழ்கிறார்கள் மண்மறைந்த நம் மூதாதையர்.

அவர்கள் சென்றடைவது முதுதாதை ஒருவனின் மடியை. அனலுருவ உடல்கொண்ட அவனை விஸ்வகன் என்கின்றனர். அவ்வுலகு ரேதம். அவன் மண்விரிவின் ஆழத்தை முழுக்க நிரப்பும் பேருடலன். அவன் அருகே அவனுடன் நிகரென உடல் பின்னிப் படுத்திருக்கிறாள் மூதன்னையாகிய ஜலை. நீரே உடலென்றானவள். அவர்களுக்கு அடியிலிருப்பது அனலம். தீயும் நீரும் ஒன்றென அலையடிக்கும் முடிவிலி அது. அதன் மேற்பரப்பே அன்னையும் தாதையும் கொண்ட மஞ்சம்.

முதலன்னையும் முதுதந்தையும் பிரிக்கமுடியாத உடலிணைவில் என்றுமுள்ளனர். அவர்கள் பிரியாமலிருப்பதனால் அடியிலுள்ள அனல் வேலியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தழுவலில் ஒருகணம் நெகிழ்வு விழுந்தால் அனல் பொங்கி எழுந்து உலகை மூடும். அன்னை தன் விரிந்த அல்குலால் தந்தையின் எழுந்த குறியை தழுவி இணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாக சாறு என அவள் வயிற்றுக்குள் சென்று குருதியில் கலந்துகொண்டே இருக்கிறது. அவள் உடலின் வியர்வைத்துளைகள் அனைத்தும் கருவாய்களென திறக்க அவற்றிலிருந்து தெய்வங்களும் தந்தையரும் அன்னையரும் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.

பாடகரே, அறிக! ஒவ்வொரு கணமும் ஓராயிரம் கோடி தெய்வங்கள் அவளிடமிருந்து மண்ணுக்கு எழுந்து வருகின்றன. அவற்றின் வடிவங்களும் முடிவற்றவை. ஈயென எறும்பென கொசுவென குளவியென பாம்பென பல்லியென மானென குரங்கென களிறென சிம்மமென தெய்வங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அன்னை வாயிலிருந்து பிறந்த பெரும் குமிழி ஒன்று மேலெழுந்து வந்தது. மண்ணில் காலூன்றி தோள்பெருத்த தந்தை என எழுந்ததும் அவன் குனிந்து ஆழத்தை நோக்கி தன் அன்னையிடம் கேட்டான் “அன்னையே, நான் செய்யவேண்டியதென்ன?”

“நீ தச்சன். உன் கைகளில் இருந்து பிறிதொரு உலகு முளைப்பதாக!” என்று அன்னை சொன்னாள். அவனுக்கு கர்மகன் என்று பெயரிட்டான் தந்தை. கர்மகன் நிலத்தை வயல்களென்றாக்கினான். ஆறுகளை ஏரிகளாக்கினான். குகைகளை இல்லங்களாக மாற்றினான். கால்தடங்களை சாலைகளாக்கினான். எரியை அடுப்பிலும் நீரை கலத்திலும் நிற்கும்படி செய்தான். கல்லை தெய்வமாக்கினான்.

அவன் கைகள் பெருகிக்கொண்டிருந்தன. துயிலிலும் அவன் கைகள் பணியாற்றிக்கொண்டிருந்தன. நான்கு பக்கமும் பதினெட்டு கைகள் எழுந்ததும் அவனால் படுத்துறங்க முடியாமலாகியது. தன் கைகளை பகிர்ந்தளிக்கும்பொருட்டு அவன் மைந்தர்களைப் பெற எண்ணினான். தனக்குரிய துணைவியைத் தேடி அவன்  காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் யா என்னும் காட்டுமகளைக் கண்டான். அவள் உடலில் நூறு பேற்றுவாய்கள் விரிந்திருந்தன. இவளே என்று முடிவுசெய்து அவளை அணுகி “நீ மைந்தரால் நிறைவாய்” என்றான்.

முதல் தச்சனுக்கு யா என்னும் அன்னையில் ஆயிரத்தெட்டு மைந்தர் பிறந்தனர். அவர்களில் முதல்வர் நால்வர். முதல் மைந்தன் நான்கு கைகளில் உளியும் கூடமும் முழக்கோலும் சரடும் கொண்டு பிறந்தான். “தந்தையே, நான் யார்?” என்றான். “அஜைகபாத் என்று நீ அறியப்படுவாய். நீ கற்சிற்பி. பாறைகள் உன் கைக்கு நெகிழும்” என்றான் தந்தை. நான்கு கைகளுடன் உளியும் கூடமும் துருத்தியும் அனலூதியும் கொண்டு எழுந்தான் இரண்டாமவன். “தந்தையே, நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். “நீ கொல்லன். உன்னை அஹிர்புத்ன்யன் என்பர். நீ படைக்கலங்களை இயற்றுக!” என்றான் தந்தை.

மூன்றாமவன் வணங்கி நின்றான். அவன் கைகளில் துலாவும் ஊதுகுழாயும் கிடுக்கியும் சிற்றுளியும் இருந்தன. “நீ த்வஷ்டா. உன் கனவுகளை பொன்னில் எழுப்புக!” என்றான் தந்தை. இறுதியாக நான்கு கைகளும் அனலென உருகிப்பறக்க வந்த மைந்தனிடம் “நீ ருத்ரன். அனலே உன் ஊடகம். வேள்விக்குளங்களை அமைத்து கணமொரு சிற்பமென சமைப்பாயாக!” என்றான் கர்மகன்.

பாடகரே, நான்கு தச்சர்களால் உருவானவை மண்ணில் எழுந்ததே மானுடம் கொண்ட செல்வங்கள் அனைத்தும். அவர்கள் கோட்டை சூழ் நகரங்களை செய்தார்கள். கொடியென சாலைகள் நெளிந்தன அங்கு. கூரை கவிழ்ந்த மாடங்கள் அமைந்தன. பொற்சூடிய அரண்மனைகள் எழுந்தன. முட்களும் உகிர்களும் அலகுகளும் படைக்கலங்களாக மாறின. நான்கு திசைகளையும் நால்வர் ஆண்டனர். கிழக்கே பொற்தச்சன் த்வஷ்டா நின்றான். மேற்கே இரும்புத்தச்சன் அஹிர்புத்ன்யன் இருந்தான். வடக்கை ஆண்டவன் கல்தச்சனாகிய அஜைகபாத். மூதாதையர் எரிந்தணையும் தெற்கில் வாழ்ந்தான் ருத்ரன்.

[ 5 ]

“பிரதீகம் என்னும் சிற்றூரில் ஒரு சந்தையில் நான் நின்றிருக்கையில் அங்கு இளம்சூதன் ஒருவன் பாடிய பாடலைக் கேட்டு வியந்து அருகணைந்தேன்” என்றான் பிரசண்டன்.  “அவன் என் சொற்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். சென்று நின்று செவிகொடுத்தபோது கேட்டேன், அவை என் சொற்களல்ல. என் சொற்கள் ஒன்று நூறென முளைத்து காவியமாகிவிட்டிருந்தன.”

“குப்த சந்திரசூடர் என்னும் கவிஞர் யாத்த விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை அன்றுதான் நான் முதல்முறையாகக் கேட்டேன். பன்னிரண்டு பாதங்களிலாக நூற்றிருபது பாடல்கள் கொண்டது அது. விருத்திராசுரனின் மும்மூதாதையரின் கதையிலிருந்து தொடங்கி அவன் விண்மேவியது வரை பாடியது. அதை விழிமின்ன கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தொல்குடி அசுரர் என்று கண்டேன். அவர்கள் அதற்கு தங்கள் மடிச்சீலையில் எஞ்சும் நாணயங்களைக்கூட கொடுப்பார்கள். எனவே அக்கதை ஒருபோதும் அழியாதென்று தெளிந்தேன்.”

“அன்று பாடிக்கொண்டிருந்தவன் பெயர் குணதன். அவனை அன்றிரவு அந்தியில் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையிலிருந்த விடுதியில் சந்தித்தேன். அக்காவியத்தை எனக்காக முழுமையாகப் பாடும்படி சொல்லி நினைவில் நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுநிலவு. ஆற்றுநீர் மின்னிக்கொண்டிருந்தது. தென்றலை ஒளியலைகளாக பார்த்துக்கொண்டிருந்தேன். முழுநிலவின் ஒளியில் தன் மைந்தரின் படைப்புலகை நோக்கி உவகைமயக்கில் இருந்த கர்மகனின் தோற்றத்தை அவன் பாடினான்” என்றான் பிரசண்டன்.

“நான் நான் என மானுடன் தருக்கி எழும் தருணங்கள் இரண்டு. தன் கலை கண்டு நெஞ்சு எழுகையில். தன் மைந்தர் செயல் கண்டு வயிறு மலர்கையில். இரண்டும் நிகழ்ந்தன கர்மகனுக்கு அப்போது. நான்கு கைகளையும் விரித்து நான்கு மைந்தரையும் நெஞ்சோடணைத்து விழிநனைந்தான். விம்மி விம்மி எழும் உள்ளத்தால் நிலைகொள்ளாது தவித்தான். உச்சகணங்களை நிற்க இடமில்லாது ஊசிக்கூர்களாகப் படைத்த தெய்வங்கள் மானுடனுடன் விளையாடுகின்றன” என்று குணதன் பாடினான்.

ஒளியலைகளாக தன்னைச் சூழ்ந்த தெய்வங்களை நோக்கி கர்மகன் கேட்டான் “தெய்வங்களே சொல்க, இப்புவியில் நிகரற்றவன் யார்?” தெய்வங்கள் அமைதிகொண்டிருந்தன. “சொல்க, யார்?” என்று அவன் கூவினான். தெய்வங்களின் ஒலியெழாதிருக்கவே “காண்பீர்கள். மாற்றுச்சொல் இல்லாது நீங்களே ஏற்பீர்கள்” என்றான்.

பெருந்தச்சனாகிய கர்மகன் தன் மைந்தரிடம் “உங்களில் முதல்வர் எவர் என்றறிய விழைகிறேன், மைந்தர்களே. உங்களால் இயன்ற உச்சங்களை சமைத்து அளியுங்கள்” என்றான். “ஆணை” என்று நான்கு மைந்தரும் அவனைப் பணிந்தனர். “அறிக, அவை தெய்வங்கள் அஞ்சும் முழுமை கொண்டிருக்கவேண்டும். அம்முழுமைக்குமேல் ஒன்று எண்ணற்கும் அரிதாக இருக்கவேண்டும்.” மைந்தர் “அவ்வாறே” என்றனர். “படிப்படியாக வெல்வது மானுடர் வழக்கம். தன்னை எரித்து பெருகியெழுவதே ஆசுரம். அவ்வழியே உங்களுக்கு” என்றான் கர்மகன்.

மைந்தர் ஆணைபெற்றுக் கிளம்பினர்.  கற்தச்சனாகிய அஜைகபாத் ஒரு யானை வடிவம் கொண்டு துதிக்கைதூக்கிப் பிளிறியபடி காட்டுக்குள் புகுந்தான். அவனுடைய பிளிறல் கேட்டு பதினெட்டாயிரம் காட்டுயானைகள் துதிசுழற்றி சின்னம் விளித்து அவனைப் பணிந்தன. அந்த யானைகளை அழைத்துவந்து மலைப்பாறைகளை உருட்டி அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். இரையைச் சுற்றி இறுக்கிய மலைப்பாம்புபோல மகாவீர்யம் என்னும் மலையை ஏழுமுறை சுற்றியிருந்தது அந்தக் கோட்டை.

இரும்புக்கொல்லனாகிய அஹிர்புத்ன்யன் ஒரு செங்கழுகாக மாறி பறவைக்குலங்களை அறைகூவினான். வேழாம்பலின் அலகுகள் வாள்களாயின. பருந்துகளின் அலகுகள் வேல்களாயின. கழுகுகளின் உகிர்கள் அம்புகளாயின. அந்தப் பெருங்கோட்டை வெல்லமுடியாத படைக்கலங்களால் நிறைந்தது.

அனைத்து உலோகங்களும் முனைகொண்டமையால் அது முள்செறிந்த மலையுச்சி மரம்போலவும் சினந்த முள்ளம்பன்றிபோலவும் சீறி நின்றது. தெய்வங்களும் அதை அணுக அஞ்சி வளைந்து பறந்தன. அதற்குள் புகுந்த காற்று பல்லாயிரம் சீறல்களாக கிழிபட்டது. அங்கு நீட்டிநின்றிருந்த கூர்களில் ஒளி நீர்த்துளியெனச் சொட்டி நின்றது. அவற்றின் நிழல்களால் நிலம் நாளும் மும்முறை சீவித் தூய்மையாக்கப்பட்டது. அக்கோட்டைக்குள் பறவைகள் நுழையவில்லை. பூச்சிகளும் அங்கு செல்ல அஞ்சின.

த்வஷ்டா ஒரு மாபெரும் தவளை வடிவை எடுத்தான். கங்கை ஆறு காலையிளவெயிலில் பொன்னிறமாக ஓடும் கணத்தில் நீருக்குள் குதித்து மூழ்கி வாயைக் குவித்து ஊதி நுரையெழுப்பலானான். அந்நுரைக்குமிழிகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து பெருமாளிகையென்றாயின. தன்னைத்தானே பெருக்கிக்கொண்டமையால் அம்மாளிகை முழுமுதல்தெய்வத்தின் உள்ளத்தில் வாழ்ந்த அந்த முதல்மாளிகையைப்போலவே தானும் அமைந்தது.

படைப்பின் குறை என்பது படைப்பாளியின் எல்லை. தன்னைத்தான் உருவாக்கும் படைப்பு படைப்பவனிடமிருந்து விடுதலைகொண்டுவிடுகிறது. சூதரே, அனைத்து வடிவங்களும் தங்கள் முழுமையை சென்றடையும் உள்விருப்பாலேயே செயலூக்கம் கொள்கின்றன. முழுமை முழுமை எனத்துடிக்கும் வடிவங்களையே நாம் கலை எனக்கொள்கிறோம்.

அணிமாளிகை விண்முட்ட குவிந்து உயர்ந்து பதினெட்டாயிரம் முகடுகளுடன் இருபத்தெட்டாயிரம் உப்பரிகைகளுடன் முப்பத்தெட்டாயிரம் பலகணிகளுடன் நின்றது. அதன் அழகைக்காண தெய்வங்கள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்து நெரித்தனர். தெற்கே கடல்சூழ்ந்த நிலங்களில் இருந்தும் வடக்கே பனிசூழ்ந்த உச்சிகளில் இருந்தும் மேற்கே பெரும்பாலைகளில் இருந்தும் கிழக்கே எழுந்த பசுங்காட்டுவெளிகளில் இருந்தும் பன்னிரண்டாயிரத்துஎட்டு பழங்குலங்களைச் சேர்ந்தவர்களும் தேடி வந்தனர். அவர்களின் பாணர்கள் அதை பாடல்களாகப் பாடினர்.

பாட்டில் அந்த மாளிகை நெய்யுண்ட எரியென மேலும் வளர்ந்தது. அதைப் பாடியவர்களெல்லாம் அதில் ஒரு மாடத்தைக் கட்டினர். அதைக் கேட்டவர்களெல்லாம் ஓர் உப்பரிகையை இணைத்தனர். நினைவுகூர்ந்தவர்களெல்லாம் ஒரு பலகணியை திறந்தனர். பெருகிப்பெருகிச் சென்ற மாளிகை விண்முகில்கள் நடுவே பொன்னிற ஒளியுடன் எழுந்து நின்றது. மழைமுகில்கள் அதில் முதுகுரசிக்கொண்டன. அவை அதன் தண்மையால் எடைபெற்று அங்கேயே நின்றமையால் தேங்கிக் குளிர்ந்து சுனையென்றாயின. சுனையின் அடிப்படலம் கிழிய மழையெனப் பொழிந்தன. அதன் பொன்மாடங்கள் மேல் எப்போதும் மழை பொழிந்துகொண்டிருந்தது. அதன் கூரைமடிப்புகளிலிருந்து அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன.

சிறந்தவை தங்கள் இருப்பாலேயே அறைகூவலென்றாகின்றன.  விண்ணுலாவியாகிய நாரதர் ஒருநாள் முகில்களினூடாகச் செல்லும்போது கூட்டம்கூட்டமாக அசுரதெய்வங்கள் செல்வதைக் கண்டார். “எங்கு செல்கிறீர்கள், தெய்வங்களே? உங்களை ஆளும் பெருந்தெய்வமொன்று மீண்டும் எழுந்துள்ளதா?” என்றார். “ஆம், அத்தெய்வத்தின் மாளிகை எழுந்துள்ளது அங்கே” என்றார்கள் அவர்கள்.

அவர் மேலும் செல்லும்போது கந்தர்வர்கள் ஒளிரும் மணிமுடிகளும் வெண்சிறகுகளுமாக வண்ணத்துப்பூச்சிகளின் பெருக்கென சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். “எங்கு செல்கிறீர்கள், கந்தர்வர்களே?” என்றார். “பேரழகு எங்களை ஈர்க்கிறது. பிறிதெங்கும் நிலைக்கமுடியவில்லை” என்றனர்.

மேலும் செல்லும்போது கின்னரர்கள் செல்வதைக் கண்டார். “அழகிய பொருட்களில் இசை நிறைந்துள்ளது, நாரதரே” என்றனர். மேலும் சென்றபோது வித்யாதரர்களைக் கண்டார். “மெய்மை என்பது முழுமை. முழுமையே அழகென விழிகளால் அறியப்படுகிறது” என்றனர்.

இறுதியாக அவர் தேவர்களைக் கண்டார். அவர்கள் பித்தெழுந்த விழிகளுடன் விண்ணில் ஒளிக்கீற்றுகளாக வழிந்து சென்றுகொண்டிருந்தனர். “எங்கு செல்கிறீர்கள், தேவர்களே?” என்றார். “நாங்கள் வெற்றியை நாடுபவர்கள். உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல் கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்ட வெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது. அதை ஒருவன் அடைந்துள்ளான். அவனைக் காணச்செல்கிறோம்” என்றனர்.

நாரதர் அமராவதிக்குச் சென்று அங்கே வைஜயந்தத்தில் இந்திராணியுடன் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்தார். அவனைச் சூழ்ந்திருந்தன முழுமைகொண்டவை அனைத்தும். நீர்மலர்களில் தாமரை. கிளைமலர்களில் பாரிஜாதம். கொடிமலர்களில் முல்லை. பறப்பனவற்றில் செங்கழுகு. தவழ்வனவற்றில் அன்னம். பாடுவனவற்றில் குயில். பேசுவனவற்றில் பசுங்கிளி. ஆடுவனவற்றில் மயில். தாவுவனவற்றில் புள்ளிமான். தயங்குவனவற்றில் வரிப்புலி. முக்கனிகள் காய்த்த மரங்கள். முலைகனிந்த காமதேனு. நிழல் விரித்த கல்பமரம். துதிக்கை அசைத்தபடி ஐராவதம்.

வணங்கி அருகமர்ந்த நாரதர் “முழுமையைத் தோற்கடிப்பது தெய்வங்களின் ஆடல்போலும்” என்று பெருமூச்சுடன் சொன்னார். இந்திரன் வினாவெழுந்த புருவங்களுடன் நோக்க “தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை. மேலுமொரு முழுமையை அவை படைக்கின்றன. முந்தைய முழுமையை குறையென ஆக்கி விளையாடுகின்றன” என்றார்.

அவரை நன்குணர்ந்திருந்த அவன் அவர் சொல்லவருவதை உய்த்தறிந்தான். “சொல்க, இங்கு நீங்கள் கண்ட குறை என்ன?” என்றான் இந்திரன். “நான் காணவில்லை. இங்குள்ள தேவர்கள் காண்கிறார்கள்போலும். மண்ணில் அசுரசிற்பியின் மைந்தர் நால்வர் அமைத்த மகாவீர்யம் என்னும் பெருநகர் அனைத்திலும் முழுமைகொண்டிருக்கிறதென்கிறார்கள். பெருஞ்சிற்பியின் நான்கு மைந்தர்களான ருத்ரர்களில் த்வஷ்டா அமைத்த மணிமாளிகை  விண்முகில்களையே ஆடையென அணிந்து நின்றிருக்கிறது.”

“அங்கு சென்று சூழ்ந்திருக்கின்றன அவர்களின் தெய்வங்கள். உடன் நம் தேவர்களும் நெருக்கியடிக்கிறார்கள். இங்கு வரும்போது பார்த்தேன், இலையுதிர்காலத்து பொன்னிறச் சருகுகள் என தேவர்கள் அமராவதியிலிருந்து உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். இப்பெருநகரின் அனைத்து வீதிகளும் ஒழிந்துகிடக்கின்றன. அமுதமுண்ணவும் இங்கு தேவரில்லாமலாகும் நிலைவருமோ என எண்ணிக்கொண்டேன்” என்றார் இசைமுனிவர்.

வினைமுடித்து நாரதர் கிளம்பும்போது இந்திரன் முகம் சுருங்கி இதழ்கள் இறுகி கைவிரல்களால் வெளியை சுழித்துக்கொண்டிருந்தான். அவர் சென்றபின் வியோமயானம் மீதேறி விண்வழி ஊர்ந்தான். கீழே மண்மகளின் மணிமுடி என எழுந்து நின்ற மாளிகையைக் கண்டான். அவன் உடல் பதறத்தொடங்கியது. யானை மேலிருந்து வழுக்கி விழுபவன்போல தடுமாறினான்.

உடல் எரிய திரும்பி அமராவதிக்கு வந்தான். அவனுக்கு காய்ச்சல் கண்டிருக்கிறதென எண்ணி அவன் தேவி அவனை ஆறுதல்படுத்த வந்தபோது சினந்து கையோங்கி அவளை அடிக்கப்போனான். கொந்தளிப்பு தாளமுடியாமல் சுற்றிச்சுற்றி வந்தான். அருகே வந்து உசாவிய வசிட்டரிடம் நிகழ்ந்ததை சொன்னான். “முதல்வனாக அன்றி நான் இருக்கவியலாதென்பதே என் நெறி. முதன்மை என்பது கணம்தோறும் நூறு குரல்களால் அறைகூவப்படுவது” என்றான். “வெற்றிகளால் ஆனதே என் காலம். இவ்வரியணை முந்தைய கணம் வரை நான் வெல்லப்படவில்லை என்பதன் சான்றுமட்டுமே” என்று உறுமினான். “நான் வென்றாகவேண்டும். எவ்வகையிலாயினும் வென்றாகவேண்டும்” என்றான்.