கிராதம் - 3

[ 5 ]

இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக வைத்துக்கொண்டனர்.

அத்ரி மாமுனிவரின் கொடிவழியில் வந்த நூற்றெட்டாவது அத்ரி சௌகந்திகத்தில் குருநிலை அமைத்து மாணவர்களுடன் வேதச்சொல் ஓம்பினார். அவரது அறத்துணைவி அனசூயை அவரைப் பேணினாள். பசுங்கோபுரங்களென எழுந்த தேவதாருக்களால் குளிர்ந்த அக்காட்டில் அத்ரி விளைவித்த மெய்மையை நாடி முனிவர்கள் வந்து குடிலமைத்துக்கொண்டே இருந்தனர். நிகரற்ற அறிவர்களாகிய நூற்றெட்டு முனிவர்களால் அக்காடு பொலிந்தது.

அவர்களும் மாணவர்களும் ஓதும் வேதச்சொல் இரவும் பகலும் ஒருகணமும் ஒழியாதொலிக்கவே அங்கு தீயதென்று ஒன்று தங்காதாயிற்று. வேதம் கேட்டு வளர்ந்த தேவதாருக்கள் பிறிதெங்கும் இல்லாத நறுமணம் கொண்டிருந்தன. அங்கு முளைத்த பிறசெடிகளின் வேர்களும் தேவதாருக்களுடன் பின்னி சாறு உறிஞ்சி நல்மணம் கொண்டன. அவற்றின் கனியுண்ட கிளிகளின் சிறகுகளிலும் மணம் கமழ்ந்தது. அனைத்து ஒலிகளும் வேதமென்றே எழுந்த அக்காட்டை வேதவனம் என்றனர் முனிவர்.

வேதம் கனிந்த சித்தம் கொண்டிருந்த அத்ரி முனிவர் அரணிக்கட்டைகள் இன்றி தன் சொல்லினாலேயே அனலெழுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். அவர் சொற்கள் நுண்ணொலி நிறைந்த விண்கனிந்து நேராக எழுபவை என்றனர் அறிஞர். வேதச்சொல்லவை ஒன்றில் அவர் ஒப்புமை சொல்லும்போது பறக்கும் முதலைகளின் சிறகுகள் என்று ஒரு வரி வந்தது. அங்கிருந்த அவைமுனிவர் எழுவர் அக்கணமே எழுந்து “முதலைகள் பறப்பதில்லை, அவற்றுக்கு சிறகுமில்லை” என்றனர். திகைத்த அத்ரி தான் சொன்னதென்ன என்று அருகமைந்த  மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் அதைச் சொன்னதும் திகைத்து அமர்ந்தார்.

தன்னுள் தானறியாது கரந்தமைந்த ஆணவமே சொல்லென நாநழுவி விழுந்தது என்று உணர்ந்தார் அத்ரி. ஆனால் அந்த அவையில் தலைதாழ்த்தி சொல்லெனும் முடிவிலிக்கு முன் சித்தம் கொண்டாகவேண்டிய அடக்கத்தைச் சொல்ல அவரால் இயலவில்லை. “நான் சொன்னது உண்மை, பறக்கும் முதலை இங்குள்ளது” என்றார். “எனில் அதைக் காட்டுக எங்களுக்கு. அதுவரை உங்கள் சொல்லில் எழுந்த மெய்மை அனைத்தும் ஐயத்தால் தடுத்துவைக்கப்படட்டும்” என்றனர் முனிவர். “அவ்வாறே ஆகுக!” என்று அத்ரி எழுந்துகொண்டார்.

நிலையழிந்து குடில்மீண்ட அவரிடம் “ஆணவமற்ற அறிவை தாங்கள் அடைவதற்கான தருணம் இதுவென்றே கொள்க!” என்று அனசூயை  சொன்னாள். “ஆணவம் கொள்பவர் புவியனைத்துக்கும் எதிராக எழுகிறார். தெய்வங்கள் அனைத்தையும்  அறைகூவுகிறார். மும்முதல்தெய்வங்களேயானாலும் ஆணவம் வென்றதே இல்லை.” அத்ரி அவளை தன் கையால் விலக்கி “நான் கற்றவை என் நாவில் எழவில்லை என்றால் அந்நாவை அறுத்தெறிவேன். நான் வெல்கையில் வென்றவை வேதங்கள். அவைமுன் நாணுகையில் நாணுபவையும் அவையே” என்றார்.

இரவெல்லாம் அவர் தன் குடிலுக்குள் தனக்குள் பேசியபடி உலவிக்கொண்டிருந்தார். உடலுள் எழுந்த புண் என வலித்தது உள்ளம். விடிகையில் முடிவுகொண்டிருந்தார். அன்றே வேள்விக்கூடத்தில் புகுந்து எரியெழுப்பினார். ஐவகை அவியும் நெய்யும் அளித்து வேதச்சொல்கொண்டு தென்றிசையில் வாழும்  மேதாதேவியை அழைத்தார். “வாலறிவையே, இங்கு எழுக! இந்த அவைமுன் வந்து என் சொல்லுக்கு பொருளென்றாகுக!” என்றார்.

பிரம்மனின் மைந்தர் தட்சப் பிரஜாபதிக்கு பிரசூதி என்னும் துணைவியில் பிறந்தவள் மேதை. அவள் தென்னிசை ஆளும் தர்மதேவனை மணந்தாள். சொல்லில் எழும் மெய்மைக்குக் காவலென அமைந்தவள். எட்டு கைகளில் மலரும் மின்கதிரும் அமுதும் விழிமணிமாலையும் ஏடும் எழுத்தாணியும்  அஞ்சலும் அருளலுமென அமர்ந்தவள். அவர் உள்விழிமுன் தோன்றி “முனிவரே, முடிவற்ற நெளிவுகொண்ட நாவே சொல்லுக்கு முதல் எதிரி என்றுணர்க! பொருள்கடந்து மொழிகடந்து முடிவிலா ஆழம்வரை செல்வது  நாவென அமைந்த நாகம். அதை பணிக! அவையொன்றில் தலைவணங்குவதனால் எவரும் பெருமையிழப்பதில்லை. பணிந்த அவைகள் வழியாகவே வென்று செல்கின்றது அறிவு” என்றாள்.

சினந்து சிவந்த அத்ரி தன் இடக்கையால் தர்ப்பையை எடுத்து வலக்கையை நீட்டி அவியெடுத்து தன் முன் எரிந்த வேள்வித்தீ நோக்கி நீட்டியபடி சொன்னார். “நானறிந்த வேதமெல்லாம் இங்கு திரள்க! என் சொல் பொய்யாகுமென்றால் வேதம் பிழைபடுக!” அனலில் அவியிட்டு அவர் ஆணையிட்டார். “மேதாதேவியே, என் அவியை உண்க! என் வேதச்சொல் கொள்க! நால்வேதம் அறிந்தவனாக இங்கமர்ந்து ஆணையிடுகிறேன். என் சொல்லுக்கு அரணாக எழுந்துவருக!”

அவர் முன் நின்று மேதாதேவி பதைத்தாள். “பிழைக்கு ஆணையென்று தெய்வம் வந்து நிற்கமுடியாது. அது பொய்மையை நிலைநிறுத்துவதென்றே ஆகும்.” அத்ரி  “வேதத்தின் ஆணைக்கு தெய்வங்கள் கட்டுப்பட்டாகவேண்டும். இயலாதென்றால் சொல்க! என் சொல்லனைத்தையும் உதறி இந்த அவைவிட்டு எழுந்து செல்கிறேன்” என்றார். “முனிவரே அறிக, கலைமகளைக் கூடி எந்தை பிரம்மன் படைத்த இப்புவியில் இல்லை உங்கள் சொல்லில் எழுந்த உயிர்” என்றாள் மேதை.

“அவ்வாறென்றால் என் சொல்லில் உறையும் மெய்மையாகிய உன்னைப் புணர்ந்து பிரம்மன் படைக்கட்டும் அதை” என்றார் அத்ரி. “என்ன சொல்கிறீர்கள், முனிவரே? அவர் என் தந்தைக்குத் தந்தை. நான் அவள் மகள்” என்று அவள் கூவினாள். “நான் எதையும் அறியவேண்டியதில்லை. பிழைத்த சொல் சூடி இந்த அவை விட்டு எழமாட்டேன்” என்று கூவினார் அத்ரி.

தன் முன் எழுந்த அனலில் நெய்யும் அவியும் சொரிந்து வேள்வி செய்தார். தன் மூலாதாரத்திலிருந்து வேதச்சொல்  எடுத்து அனலோம்பினார். நீலச்சுடர் எழுந்து நாவாடியது. சுவாதிஷ்டானத்திலிருந்து எழுந்த சொல் செஞ்சுடர் கொண்டது. மணிபூரகத்தின் சுடர் மஞ்சளாக பெருகி எழுந்தது. அனாகதத்தின் சுடர் பச்சையொளி கொண்டிருந்தது. விசுத்தியின் சுடர் பொன்னிறம் பெற்றிருந்தது. ஆக்ஞையின் சுடர் வெண்ணிறமாக அசைவற்று நின்றது. சகஸ்ரத்தின் சுடரை எழுப்ப அவர் தன் நெற்றிமேல் தர்ப்பையை வைத்தபோது அனலில் எழுந்த பிரம்மன் “ஆகுக!” என்று சொல்லளித்தார்.

ககனப்பெருவெளியில் மேதையைப் புணர்ந்து பிரம்மன் நிகருலகு ஒன்றைப் படைத்தார். அவருள் இருந்து ஆழ்கனவுகளை எழுப்பினாள் மேதை. அவை பருவுருக்கொண்ட உலகில் பல்லிகள் பேருருக்கொண்டு நிலமதிர நடந்தன. கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வௌவால்கள் கூவியபடி வானில் மிதந்தன. தந்தம் வளைந்த பேருருவ யானைகள் வெண்கரடித்தோல் கொண்டிருந்தன. கால்பெற்று நடந்தன நாகங்கள். ஆமைகள் இடியோசை எழுப்பி வேட்டையாடின. சிறகு கொண்டன முதலைகள். அவற்றிலொன்று மரக்கூட்டத்திலிருந்து சிறுகிளை வழியாக இறங்கி சௌகந்திகக் காட்டுக்குள் வந்து இளவெயில் காய்ந்து கண்சொக்கி அமர்ந்திருந்தது.

அதை முதலில் கண்டவன் அவரை எதிர்த்து எழுந்த முனிவர்களில் முதலாமவராகிய கருணரின் மாணவன். அவன் ஓடிச்சென்று தன் ஆசிரியரிடம் சொல்ல அவர் திகைத்தபடி ஓடி வெளியே வந்தார். அங்கே அதற்குள் முனிவர்களும் மாணவர்களும் கூடியிருந்தார்கள். கருணர் அருகே சென்று அந்த முதலையைப் பார்த்தார். நான்கடி நீள உடலும் நீண்ட செதில்வாலும் முட்புதர்ச்செடியின் வேரடிபோல மண்ணில் பதிந்த கால்களும் கொண்ட முதலை இளம்பனையின் ஓலைபோன்ற தோல்சிறகுகளை விரித்து வெயில் ஊடுருவவிட்டு பற்கள் நிரைவகுத்த வாயைத் திறந்து அசையாது அமர்ந்திருந்தது.

அது விழிமயக்கா ஏதேனும் சூழ்ச்சியா என்று கருணர் ஐயம் கொண்டார். ஆனால் அதை அணுகும் துணிவும் அவருக்கு எழவில்லை. செய்தியறிந்து அங்கே வந்த அத்ரி முதலையை நோக்கிச்சென்று அதன் தலையைத் தொட்டு “எழுந்து செல்க!” என்றார். அது செதில்கள் சிலிர்த்தெழ விழிப்புகொண்டு எழுந்து விழிகளை மூடிய தோலிமைகளை தாழ்த்தியது. முரசுத்தோலில் கோலிழுபட்டதுபோல பெருங்குரலில் கரைந்தபடி சிறகடுக்கை விரித்து அடித்து வாலை ஊன்றி காற்றில் எழுந்தது. அதன் சிறகடிப்போசை முறங்களை ஓங்கி வீசியதுபோல் ஒலித்தது. அக்காற்றேற்று சிறுவர்களின் முடியிழைகள் பறந்தன. காற்றில் ஏறி அருகிருந்த மரக்கூட்டங்களுக்குள் புகுந்து மறைந்தது.

கருணர் திரும்பி இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து “எந்தையே, ஆசிரியரே!” என்று கூவியபடி அத்ரியின் காலடிகளில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஐயம்கொண்ட அத்தனை முனிவர்களும் அவர் முன் விழுந்து கண்ணீருடன் மாப்பிரந்தனர். அவர்களின் தலைக்குமேல் தன் கைகளை வைத்து “வேதச்சொல் என்றும் மாற்றில்லாதது” என்றார் அத்ரி. பின்னர் தன் குடில்நோக்கி நடந்தார்.

குடிலில் அவருக்கு கால்கழுவ நீர் கொண்டுவந்த அனசூயையிடம் பெருமிதம் எழ “என் சொல்லில் இருந்து எழுந்து வந்தது அந்தப் பறக்கும் முதலை” என்றார். அவள் அவர் விழிகளை நேர்நோக்கி “பிழைபட்ட சொல்லுக்காக தன்னை பிழையாக்கிக்கொண்டிருக்கிறது புவி” என்றாள். சினத்துடன் அவளை ஏறிட்டு நோக்கிய அத்ரி ஏதோ சொல்ல நாவெடுத்தபின் அதை அடக்கி தலைகுனிந்து கடந்து சென்றார்.

[ 6 ]

கலைமகளைப் புணர்ந்து பிரம்மன் படைத்த புவியில் இல்லாத விந்தைகள் நிறைந்திருந்தன மேதையைப் புணர்ந்து அவன் படைத்த பிறபுவியின் படைப்புகளில். கட்டற்று எழுந்த அவன் கற்பனையால் உருவங்கள் ஒன்றுகலந்தன. குன்றுகளும் யானைகளும் ஒன்றாகி எழுந்தன பேருருவ விலங்குகள். மரங்களும் எருதுகளும் ஊடாடி கொம்புகள் கொண்டன.  சிறகுகொண்டன சிம்மங்கள். சிம்ம முகம் கொண்டன நாகங்கள். நாக உடல்கொண்டு நெளிந்தன புலிகள். நடந்தன மீன்கள்.

தன் படைப்புப்பெருக்கை நோக்க நோக்க பிரம்மன் பெருமிதம் கொண்டான்.  மேலும் மேலுமென படைப்புவெறி பெருக பிற அனைத்தையும் மறந்து அதிலேயே மூழ்கிக்கிடந்தான். அவன் நாவில் சொல்லாகவும் கைவிரல்களில் உருவாகவும் நின்றிருந்தாள் மேதாதேவி. அவர்கள் படைத்த நிகருலகு விரிந்து சென்று விண்ணுலகையும் பாதாளத்தையும் தொட்டது. அங்கு இறப்பென்பதே இருக்கவில்லை. எனவே அதன் எடை ஏழுலகங்களையும் அழுத்தியது. அதன் விரிவு திசைகளை நெளியச் செய்தது.

இறப்பின்றிப் பெருகிய அவ்வுலகின் எடையால் தர்மதேவனின் துலாத்தட்டு நிகரிழந்தது. எருமை ஏறிய தேவன் விண்ணுலகுக்குச் சென்று கலைமகளைக் கண்டு வணங்கி சொன்னான் “அன்னையே, ஆக்கப்பட்டவற்றை அழித்து நிகர்நிலையை நிறுத்துவதே என் தொழில். அறம் வாழ்வது என் துலாக்கோலினால்தான் என்பது தெய்வங்களின் ஆணை. இன்று பெருகிச்செல்லும் அவ்வுலகை அழிக்கும் வழியறியாது திகைக்கிறேன். உருக்கொண்ட ஒவ்வொன்றையும் மொழிசென்று தொட்டாகவேண்டும். பெயர்கொண்ட ஒன்றையே என் பாசவடம் கொண்டு நான் பற்றமுடியும். அங்குள்ள எதையும் இன்னும் மொழியின் பெருவெளி அறியவில்லை. தாங்களே அருளல்வேண்டும்.”

அன்னை தன் தவம் விட்டு எழுந்து சென்று நோக்கியபோது கட்டின்றிப்பெருகி பின்னி முயங்கி தானே தன்னை மேலும் பெருக்கிச் சென்றுகொண்டிருந்த அவ்வுலகின் கனவுக்கொந்தளிப்பைக் கண்டு திகைத்து நின்றாள். கைநீட்டி விலங்குகளைப் பற்றி சுழற்றித் தூக்கி உண்டன பெருமரங்கள். கண்கள் கொண்டிருந்தன மலைப்பாறைகள். யானைகளை தூக்கிச்சென்றன கருவண்டுகள். நண்டுக்கால்களுடன் நிலத்திலறைந்து ஓசையிட்டு நடந்தன பேருருவ எறும்புகள். வகைப்பாடும் தொகைப்பாடும் ஒப்புமையும் வேற்றுமையும் அழிந்தமையால் மொழியை சிதறடித்துவிட்டிருந்தன அவை.

கனவிலென களிவெறியிலென நடமிட்டுக்கொண்டிருந்த தன் கொழுநன் கைபற்றி “நிறுத்துங்கள்! என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அன்னை கூச்சலிட்டாள்.  போதையில் விழிமயங்கியிருந்த அவன் அவளை கேட்கவில்லை. அவனை உலுக்கி அவள் மேலும் கூவினாள். “விழித்தெழுங்கள்! கனவுமீளுங்கள்!”  விழிப்பு கொண்ட பிரம்மன் அவளை நோக்கி “யார் நீ?” என்றான். “உங்கள் சொல்லென அமைந்து உலகங்களை யாப்பவள். உங்கள் துணைவி” என்றாள் சுனைகளின் அரசி.

ஏளனத்துடன் சிரித்து “நீயா? உன் சொல் தவழும், நடக்கும் இடங்களில் பறப்பது இவள் கற்பனை. இனி இவளே என் துணைவி” என்று சொல்லி தன் கைகளை அசைத்துக்காட்டினான் பிரம்மன். அவனருகே களிவெறியில் சிவந்த விழிகளுடன் எங்கிருக்கிறோமென்றறியாது ஆடிக்கொண்டிருந்த மேதாதேவியை நோக்கி “நில்… இழிமகளே நில்!” என்று சொல்லன்னை கூவினாள். அவள் அக்குரலை கேட்கவேயில்லை. அவள் குழல்பற்றிச் சுழற்றி நிறுத்தி “கீழ்மகளே, இது நெறியல்ல என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் கலையரசி.

“நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லை” என்றாள் மேதை. “இவை எங்கள் ஆக்கங்கள். நிகரற்றவை, அழிவற்றவை.” அவள் தள்ளாடியபடி பிரம்மனை பற்றிக்கொண்டு “நாம் ஏன் வீண்சொல்லாடி பொழுது களைகிறோம்? இது நம் ஆடல்… வருக!” என்றாள். “ஆம், இதுவே நாம் தெய்வமாகும் தருணம்” என்ற பிரம்மன் திரும்பி தன் துணைவியிடம் “அகல்க! தன் உச்சத்தைக் கண்ட எவரும் மீண்டு வருவதில்லை. பறக்கத் தொடங்கியபின் கால்கள் சிறுக்கின்றன பறவைகளுக்கு. விலகிச்செல்! இப்படைப்புக் களியாட்டத்திற்கு முன் பிறிதென்று ஏதுமில்லை” என்றான்.

“அறிந்துதான் பேசுகிறீர்களா? ஆக்கல் புரத்தல் அழித்தல் என்றாகி நின்ற மூன்று பெருநிலைகளில் தொடக்கம் மட்டுமே நீங்கள். மூன்று விசைகளால் முற்றிலும் நிகர்செய்யப்பட்டது இப்பிரபஞ்சம்” என்றாள் வெண்மலரில் அமர்ந்தவள். “இப்படைப்புகளை அழிக்க எவராலும் இயலாது. இவை தங்களைத் தாங்களே புரப்பவை. எனவே இங்கு முழுமுதலோன் நான் மட்டுமே. அவர்கள் அங்குள்ள எல்லைகொண்ட சிற்றுலகங்களை ஆள்க! நான் ஆள்வது கட்டற்ற இப்படைப்புப் பெருவெளியை” என்றான் பிரம்மன்.

துயருற்றவளாக அன்னை கயிலை முடியேறிச் சென்றாள். அவளை யமனும் தொடர்ந்தான். அங்கே வெள்ளிப்பனிமலை முடி என வடிவுகொண்டு ஊழ்கத்திலிருந்த முதற்பெரும்சிவத்தின் முன்சென்று நின்று கைகூப்பி விழிநீர் விட்டாள். “உலகு காக்க எழுக, இறைவா!” என்று முறையிட்டாள். “அழிப்பவனே, அறம்புரக்க விழிசூடுக!” என்றான் யமன். பனிப்பரப்பு உருகி உடைந்து பேரோசையுடன் சரிவுகளில் அலைசுருண்டு இறங்கிச்சென்றது. பலநூறு பனிச்சரிவுகளால் மலைமடிப்புகள் இடியென முழங்கின. பொன்னுருகும் ஒளியுடன் அவன் முகம் வானிலெழுந்தது.

அன்னையும் காலனும் நிகழ்ந்ததை சொன்னார்கள். “இக்கணமே பிரம்மனை இங்கு அழைத்து வருக!” என்று செந்தழல்வண்ணன் ஆணையிட்டான். அவ்வாணையை ஏற்று நந்திதேவர் சென்று பிரம்மனை அழைத்து வீணே மீண்டார். “இறையுருவே, யார் அச்சிவன் என்று கேட்கிறார் பிரம்மன். அவர் திளைக்கும் அவ்வுலகில் தெய்வம் பிறிதில்லை என்கிறார்” என்றார். சினம் கொண்டபோது அவன்  எரிசூடிய பெருமலையென்றானான். அனல்கொண்டு சிவந்த அவன் உடலில் இருந்து உருகிய பனிப்பாளங்கள் பேராறுகளாகச் சரிவிறங்கி பல்லாயிரம் அருவிகளென்றாகின. அவை சென்றடைந்தபோது ஏழ்கடல்களும் அலைகொண்டு கொந்தளித்தன.

எரிகொண்ட அவன் உடலில் இருந்து நீராவி பெருகிஎழுந்து முகில்களாகி வெண்குடையெனக் கவிந்தது. நெற்றிவிழி திறந்தது. அதிலிருந்து உருகிய செம்பாறைக்குழம்பெழுந்து பெருகியது. அவ்வனல்துளியிலிருந்து உருக்கொண்டு எழுந்தான் காலபைரவன். அனல் குளிர்ந்து கரியுடல் கொண்ட அவன் விழிகளிரண்டும் சுடரென எரிந்தன. அவனைத் தொடர்ந்து வந்தது கரிய நாய். அதன் விழிகள் எரிமீன்களென புகையின் இருளில் தெரிந்தன.

“ஆணையிடுக!” என்றது பைரவசிவம். “அழைத்து வருக படைப்போனை!” என்றது முதற்சிவம். இடியோசைகளும் மின்னல்களும் தொடர பைரவசிவம் பிரம்ம உலகுக்குச் சென்றது. அங்கு வெறிகொண்டாடி நின்றிருந்த பிரம்மனை நோக்கி “முழுமுதல் படைப்போன் விழியிலிருந்து எழுந்த அவன் வடிவோன் வந்துள்ளேன். நோக்குக!” என முழங்கியது. பிரம்மன் நோக்கிழந்து மயங்கிய விழியும் உதடுகளில் பெருகிய நகையுமாக மேதாதேவியுடன் நடமிட்டுக்கொண்டிருந்தான். அவன் தோளைப்பற்றி “நில், வா என்னுடன்! இது படைப்பிறைவனின் ஆணை!” என்ற பைரவனிடம் கால்தள்ளாட நின்று “யார் படைப்போன்? இங்கு நானன்றி பிறனில்லை” என்றான் பிரம்மன்.

KIRATHAM_EPI_3

இடியோசை என முகில்களில் முழங்கிய உறுமலுடன் பைரவசிவம் தன் வலக்கையின் சுட்டுவிரலை நீட்டியது. அங்கொரு அனல்பெருந்தூண் அடியிலி திறந்து  எழுந்து விண் கடந்து சென்றது. அதன் வெங்கனலில் அக்கணமே பிரம்மன் உருவாக்கிய பிறவுலகு எரிந்து சாம்பலாகியது. அடுத்த கணம் வீசிய பெரும்புயல்காற்றில் அச்சாம்பலும் பறந்தகல கனவென மறைந்தன அங்கிருந்தவை அனைத்தும். அவை அமைந்திருந்த காலமும் அலைநெளிந்து மறைந்தது.

திடுக்கிட்டு விழித்து அண்ணாந்து நோக்கிய பிரம்மன் மாபெரும் குடையென புகைசூடி நின்ற அனல்தூணைக் கண்டு அஞ்சி அலறியபடி உடலொடுக்கி அமர்ந்தான். “நெறியிலியே, நீ மீறியவை மீண்டும் மீறப்படக்கூடாதவை” என்று கூவியபடி பைரவசிவம் தன் சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் குவித்து நகமுனையால் மலர்கொய்வதுபோல பிரம்மனின் தலைகொய்து மீண்டது.

தன் கணவன் தலையுடன் மீண்ட பைரவசிவத்தைக் கண்டு அலறியபடி ஓடிவந்த கலைமகள் நெஞ்சிலறைந்து அழுதாள். “இறைவா, படைப்பென்று இல்லையேல் புவனம் அழியும். அருள்க!” என்றாள். “தேவி, படைக்கப்பட்டவை அனைத்தும் மொழியிலுள்ளன. அப்படைப்பிலுள்ளான் படைத்தவன். உன்னிலிருந்து அவனை மீட்டுக்கொள்க!” என்றது முதற்பெரும்சிவம். தேவி கண்மூடி தன்னுள் நிறைந்த கலையில் இருந்து வெண்ணிற ஒளியாக பிரம்மனை மீட்டெடுத்தாள்.

நான்முகமும் அறிவிழியும் அமுதும் மின்னலும் ஏடும் மலரும் கொண்டு தோன்றிய பிரம்மன் வணங்கி “என்ன நிகழ்ந்ததென்றே அறிகிலேன், அண்ணலே. என்னை மீறிச்சென்று பிறிதொன்றாகி நின்றேன்” என்றான். “ஆம், படைப்பென்பதே ஒரு பிழைபாடுதான். பிழைக்குள் பிழையென சில நிகழ்வதுண்டு. தன்னை தான் மீறாது படைப்பு உயிர்கொள்வதில்லை. நிகழ்ந்தவை நினைவாக நீடிக்கட்டும். அவை இனிவரும் படைப்புக்குள் நுண்வடிவில் குடிகொள்வதாக!” என்றது சிவம்.

நிழலுருவாகத் தொடர்ந்துவந்த மேதாதேவி கண்ணீருடன் கைகூப்பி நின்றாள். “நான் வேதச்சொல்லுக்கு கட்டுப்பட்டவள். வேதமே என் செயலுக்குப் பொறுப்பாகவேண்டும்” என்றாள். “ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும் பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம். கைகூப்பி வணங்கி அவள் தன் இடம் மீண்டாள்.

அனைவரும் சென்றபின் முதற்சிவத்தின் முன் பேருருக்கொண்டு நின்றது பைரவசிவம். அதன் நிழல் வெண்ணிறமாக நீண்டு மடிந்து கிடந்தது. வெருண்டு நாய் முரல பைரவசிவம் திரும்பி நோக்கியபோது துயர்மிக்க விழிகளுடன் பெண்ணுருவம் கொண்டு எழுந்து கைகூப்பி நின்றதைக் கண்டது. “நான் நீங்களியற்றிய கொலையின் பழி. விடாது தொடரும் நெறிகொண்டவள்” என்றாள் அவள். “உங்கள் கையில் இருக்கும் அந்த மண்டை உதிருமிடத்தில் நிலைகொள்வேன்.”

திகைப்புடன் தன் கையிலிருந்த பிரம்மகபாலத்தை நோக்கி அதை கீழே வீச முயன்றது பைரவசிவம். அது விழாமல் கையுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டது. கையை உதறியும் வீசியும் முயன்று தோற்றபின் அண்ணாந்து “இறையே, இக்கபாலத்துடன் நான் என்ன செய்வேன்?” என்று கூவியது.

“நீ செய்ய மறந்தது ஒன்றுண்டு. பிரம்மனின் தலைகொய்யும்போது அவனிருந்த பெருநிலை என்னவென்று அறிந்திருக்கவேண்டும்” என்றது சிவம். “தெய்வங்களை, பிரம்மத்தின் ஆணையை விலக்கும்படி அவனைப் பித்தெடுக்க வைத்த அப்பெருங்களியாட்டுதான் என்ன என்று நீ உற்றிருக்கவேண்டும்.” திகைப்புடன் “ஆம், அவ்விழிகளைத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதிலிருந்த பேருவகையை எங்கும் நான் கண்டதில்லை” என்றது பைரவசிவம்.

“உண்ணும்போதும் புணரும்போதும் கொல்லலாகாதென்றனர். அவ்விரண்டைவிடவும் மேலானதொன்றில் இருந்தவனை நீ கொன்றாய்” என்றது சிவம். “அவ்விரண்டும் ஆகி அவற்றைக் கடந்தும் அமைந்த பெருநிலை அது. அதில் ஒரு துளியையேனும் அறியாது தீராது உன் பழி.” பைரவசிவம் துயர்கொண்டு தலைகுலுக்கி “ஆம், இன்றுணர்கிறேன். இறையே, நான் செய்த பிழையை அறிகிறேன். சொல்க, நான் மீளும் வழியென்ன?” என்றது.

“பிரம்மனின் தலைகொய்கையில் இருவிரல் நகங்களை மட்டும் பயன்படுத்தினாய். அதிலிருந்தது உன் ஆணவம். தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே. அது அழியும் காலம் உன் கபாலம் கழன்றுதிரும்” என்றது சிவம். “அது உதிர்கையில் நீ அறிவாய், பிரம்மன் இருந்த பொங்குநிலையை. அதிலாடுகையில் நீ மீள்வாய்.” உடல்வீங்க விம்மி “எங்கு? நான் என்ன செய்யவேண்டும் அதற்கு?” என்றது பைரவசிவம். “மண்டை என்பது இரப்பதற்கே. இரந்துண்டு நிறையட்டும் உன் வயிறு. நீ நிறைவுகொள்ளும் இடத்தில் இது உதிர்வதாக!” என்றது தொல்சிவம்.

இரந்துண்டு பசிநிறைய இரவலன் உருவில் எழுந்தது பைரவசிவம். கரியநாய் தொடர்ந்துவர நோயில் ஒடுங்கிய உடலும் சூம்பிக்கூம்பிய கைகளும் ஒளிமங்கிய விழிகளுமாக பார்ப்புக்கொலைப் பேய் பெண்ணுருவில் உடன் வர உடும்புத்தோல் கங்காளத்தை மீட்டியபடி தேவர் வாழும் வீதிகளில் திரிந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் மானுடரும்  வாழும் ஏழுலகங்களிலும் இல்லம்தோறும் இரந்துண்டது. சுவைகோடி அறிந்து, உணவுக்குவை கோடி தீர்ந்தபின்னும் அழியாத பெரும்பசியுடன் அலைந்தது. அதன் கங்காளத்தின் ஓசை இடித்தொடர் என முகிலடுக்குகளில் பெருங்காலமாக முழங்கிக்கொண்டிருந்தது.

இருநீர் பெருநதி கங்கை வளைந்தொழுகிய காசித்துறைக்கு  அது வந்தது. வரணாவும் அஸியும் வந்தணைந்த பிறைவடிவப் படித்துறையில் மூதாதையரை நீரூற்றி வானேற்றும்பொருட்டு அன்னம் அளிக்க அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்று  இரந்தது. கரியபேருடலும் சூலமும் கப்பரையும் கொண்டு கங்காளம் மீட்டிவந்த காட்டுருவனை அருவருத்தும் அஞ்சியும் விலகினர் மானுடர். அவர்கள் இட்ட உணவை அக்கணமே உண்டு கடந்த அவன் அழல்கண்டு திகைத்தனர். அவன் உடல் அணுகியபோது கொதிக்கும் தணல் என காற்று வெம்மைகொண்டதை உணர்ந்தனர். அவன் சென்றவழியில் கல்லுருகி தடம் பதிவதைக் கண்டு மருண்டனர்.

“அவன் யார்? விண்ணுருவன் வடிவாக முடிமன்னர் இருந்தாளும் இந்நகரில் எப்படி வந்தான்?” என்றனர். அவனை நிழல் எனத் தொடர்ந்த நாயை, நோயுருக்கொண்ட பெண்ணைக் கண்டு முகம் சுளித்தனர்.  அங்கே நீர்க்கரைநோக்கி அமைந்திருந்த சிற்றாலயத்திற்குள் ஆழியும் வெண்சங்கும் ஏந்தி  அமர்ந்திருந்த விண்ணவன் அவன் வருகையைக் கண்டான். ஆலயமுகப்பில் வந்து நின்று கங்காளத்தை முழக்கிய பைரவசிவத்தைக் கண்டு சினந்தெழுந்த விஸ்வக்சேனன் தன் தண்டுப்படையை ஓங்கியபடி தாக்கவந்தான். அக்கணமே தன் இடக்கை முப்புரிவேலால் அவன் தலையறுத்து நிலத்திட்டது பைரவசிவம்.

படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்கள் கூவியபடி எழுந்தனர். தலையற்ற உடல்கிடந்து துடிக்க செங்குருதி வழிந்து படியிறங்கியது. அமர்ந்திருந்த பீடத்திலிருந்து புன்னகையுடன் எழுந்த விண்ணவன் தன் படையாழியை எடுத்து வீச அது பைரவசிவத்தின் கழுத்துப்பெருநரம்பை வெட்டியது. துளையூற்றென சீறிப்பெருகிய  குருதி அவன் ஏந்திய கப்பரையில் நிறைந்தது. செவ்விழிகளால் அதை ஒருகணம் நோக்கியபின் ஏந்தி இதழ்சேர்த்து அருந்தினான் இரவலன். அருந்தும்தோறும் விடாய் மேலிட்டு மீண்டும் மீண்டும் உறிஞ்சினான். சுவையறிந்து அவன் உடலே நாவாகித் திளைத்தது.

ஊறி உண்டு மேலும் ஊற மேலும் உண்டு அவன் மேனி ஒளிகொண்டது. கங்காளநாதத்திற்கு இசைய அவன் கால் வைத்து நடமிடலானான். களிவெறி எழுந்து அவன் இடம்நிலை மறந்தான். விழிகளும் கைகளும் கால்களும் தாளத்தில் இசைய அவன் ஆடுவதை அங்கிருந்தோர் அஞ்சி கூடிநின்று நோக்கினர்.  அவன் கையிலிருந்த கபாலம் நிலத்தில் உதிர்ந்தது. முழந்தாளிட்டு மடிந்தமர்ந்த பார்ப்புக்கொலைப் பேய் படிக்கட்டில் பழந்துணியெனப் படிந்தமைந்தது. அவன் கைக்குவிகைகளில் விரல்மலர்கைகளில் ஆக்கமும் அழிவும் புரத்தலும் புரிதலும் எழுந்தமைந்தன. அவன் அருகே கையில் சிறிய வெள்ளித்தட்டுடன் நின்றிருந்த அழகிய முனிவன் புன்னகையுடன் “ஆம்!” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்