கிராதம் - 29
[ 3 ]
இருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து விட்டிருந்தான். கதிர் சரியத்தொடங்கியதுமே மலையுச்சிகளில் இருந்து குளிர் ஓசையின்றி இறங்கி ஊரை மூடிச் சூழ்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியதும் அர்ஜுனன் தோலாடைகளை இறுக்கி அணிந்து தலை உறையை போர்த்திக்கொண்டான்.
இருளெழத் தொடங்கியதும் ஓசைகள் மேலும் ஆழம் கொண்டன. அவ்வூரார் இருளிலேயே நோக்குதுலங்கப் பழகிவிட்டிருந்தனர். இளையோர் ஐவர் விறகுகளைக் கொண்டு வந்து கூம்பாகக் குவித்து தீ எழுப்பினர். அதைச் சூழ்ந்து உடல்குறுக்கி அமர்ந்து தழலில் காட்டிச்சுட்ட மலைக்கிழங்குகளையும் பொறிவைத்து பிடிக்கப்பட்ட சிற்றுயிர்களையும் பறவைகளையும் ஏவலரும் பிறரும் உணடனர்.
அனைத்துச் சிறு விலங்குகளும் அவர்களுக்கு உணவாக இருந்தன. மலைகளில் எலிகளும் கீரிகளும் உடும்புகளுமே பெரும்பாலும் கிடைத்தன. சுடுவதன்றி வேறு சமையல்முறைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. “முயல்கள் இல்லையா?” என்று அர்ஜுனன் ஒருவனிடம் கேட்டான். “இங்கில்லை. நெடுந்தூரம் சென்றால் மலைச்சரிவு இன்னும் சற்று பசுமை கொண்டிருக்கும். அங்கு முயல்கள் உண்டு. ஆனால் அங்கு செல்ல பன்னிரண்டு நாட்களாகும்” என்றான் ஒருவன்.
இருள் அடரும் தோறும் குளிரும் கூடிவந்தது. அனைவரும் உடல்களை தோலாடைக்குள் ஒடுக்கிக் கொண்டு நெருப்பை மேலும் மேலும் அணுகி அமர்ந்தனர். குடில்களுக்குள் எவற்றிலும் விளக்குகள் இல்லை. அங்கு இல்லங்களில் விளக்கேற்றும் வழக்கமே இல்லை. குடில்களுக்குள் மதுவும் அகிபீனாவும் மயக்கேற்ற களிகொண்ட வணிகர் குழறிப்பேசியும் வெடித்துச்சிரித்தும் ஓசையிட்டனர். அவர்களுடன் சிரித்தும் கொஞ்சியும் குலவினர் பெண்டிர்.
அவர்களின் ஆண்களெல்லாம் முற்றத்தில்தான் இருந்தனர். துள்ளும் ஓசையில் விரைந்த சொற்களுடன் பேசிக்கொண்டனர். அவர்கள் வணிகர்களின் வரவால் உளக்கிளர்ச்சி அடைந்திருப்பது தெரிந்தது. அகிபீனாக் களியை சிறு உருளைகளாக வாயில் அதக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மயக்குகொண்டு நாக்குழறினர். அனல் அவிந்ததும் அதைச் சூழ்ந்து படுத்து ஒவ்வொருவராக துயிலத்தொடங்கினர்.
குறட்டை ஓசைகளைக் கேட்டபடி அர்ஜுனன் முழங்காலில் கைகட்டி விண்மீனை நோக்கியபடி அமர்ந்திருந்தான். வான் முழுக்க அதிர்வொளிப்புள்ளிகள் செறிந்து பரவியிருந்தன. சற்றும் முகில்களே இல்லை என்று அதற்குப்பொருள். ஆனால் மழை உண்டு என்று பிங்கல முதியவர் அழுத்தி பலமுறை கூறியிருந்தார். அவர்களின் குலத்து இளையோர்கூட அதை நம்பவில்லை. வணிகர்கள் அவர் சொன்னதை தட்டவில்லை.
மறுநாள் காலை அவரிடம் ஏன் மழை வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். தெய்வங்கள் பொய்ப்பதில்லை. நாளை என்று தெய்வங்கள் சொன்னது அதற்கு அடுத்த நாளைத்தான் என்று சொல்லக்கூடும். அவரது நம்பிக்கை மாறாது. மானுடத்தை சற்றும் கருதாது பேருருக்கொண்டு சூழ்ந்த அமைதிமலைகளை, நெடுந்தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் விசைகொண்டகாற்றை, அனல் சுமந்த புழுதிஅலைகளை நம்பி வாழும் இச்சிறு வாழ்க்கையில் தெய்வங்களே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவற்றை நம்பாமல் வேறுவழியில்லை.
அறிய முடியாதவற்றை நம்பி வாழ்வதில் அழகு ஒன்று உள்ளது என்று அவன் நினைத்துக் கொண்டான். அறிதலுக்கான பெருந்தவிப்பிலிருந்து அது விடுதலை. அறிய விழைபவர்கள் வாழுமிடத்திலிருந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். சித்தம் அமைந்த இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் மேலும் மேலும் என நகர்ந்துகொண்டே இருக்கிறது. நம்பிக்கையே நிலைக்க வைக்கிறது. அமையச் செய்கிறது. பிறிதிலாது துய்க்க வைக்கிறது. எஞ்சாது கடந்து போகச் சொல்கிறது.
விண்மீன்களை அவன் விழியிமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் நடுக்கம் கூடி வருவது போலத் தோன்றியது. கண்காணா சரடொன்றில் தொற்றியபடி அவை இறங்கி இறங்கி மிக அருகே வருவது போலிருந்தது. பின்பு அவன் தன் கனவுக்குள் விண்மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான்.
விண்மீன்கள் அவனைச் சுற்றி அதிர்ந்து கொண்டிருந்தன. கை நீட்டினால் ஒவ்வொரு விண்மீனையாக பற்றி எடுத்து விழிமுன் கொண்டு வந்து உறுத்து நோக்கலாம் என்பது போல இரு விண்மீன்கள் அதிர்வதை அவன் கேட்டான். அதிர்வதை எப்படி கேட்க முடியும் என்று அவன் சித்தம் வியந்தபோது அது தவளைக் குரல் என்று தெளிந்தான். தவளைக்குரலா? கங்கைக்கரையிலா இருக்கிறோம்? புரவியை எங்கு கட்டினோம்?
கங்கைப்பெருக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவன் உடலை நடுங்க வைத்தது. ஆடையை எடுக்க கைநீட்டி அவ்வசைவிலேயே விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தபோது தொலைவிலிருந்து வந்து அறைந்து இரு குடில்களுக்கு இடையே பீரிட்டு வந்த காற்றில் அனல் உயிர்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. செம்பொறிகள் எழுந்து மறுதிசை நோக்கி பெருகிச் சென்றன. குடில்களின் கூரைகள் எழுந்து படபடத்தன. தவளைக்குரல்களை அவன் தெளிவாகக் கேட்டான். நெடுந்தொலைவிலென ஒரு முறையும் மிக அருகிலென மறுமுறையும். ஒற்றை ஓசையென ஒலித்து பின் தனித்தனி குரல்களாக மாறிச்சூழ்ந்தன.
அண்ணாந்து வானைப் பார்த்தபோது ஒரு விண்மீன்கூட இல்லையென்பதை உணர்ந்தான். படுத்திருந்தவர்களை எழுப்ப வேண்டுமென்று தோன்றியது. மறுகணம் தவிர்த்து புன்னகையுடன் கைகட்டியபடி நோக்கி நின்றான். ஒரு மின்னலில் அனைவரும் படுத்திருந்த காட்சி துடிதுடித்து அணைந்தது. இருண்ட வானில் விழியொளி அதிர்ந்தது. மறுகணம் தெற்குச்சரிவு இடியோசை எழுப்பியது. மீண்டும் ஒரு மின்னல் அதிர்ந்து வான் நிறைத்திருந்த பெருமுகில் மலைகளை நடுநடுங்க காட்டிச் சென்றது.
மின்னல்களின் கொடிபடர்வு. இடியோசை உருண்டு செல்ல மின்கதிரால் விரிசல் விட்டது வானம். இடி செவி ரீங்கரிக்க மீண்டும் வலுத்து ஒலித்தது. அச்சிற்றூரின் அனைத்து கூழாங்கற்களும் ஒளிபெற அனைத்து புற்கூரை பிசிறுகளும் பொன்னொளி கொண்டெரிய மின்காட்சி தெரிந்து மறைந்தது. மீண்டும் ஒரு இடியில் துயின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாய்ந்து எழுந்தனர். ஒருவன் “இடி!” என்றான். வாகுகன் புரண்டு படுத்து. “முரசு” என்றான்.
மின்னல் அனைத்துப் பகுதிகளையும் ஒளியால் நிரப்பி விழியை முற்றிலும் பறித்துச் சென்றது. செம்மை குருதியென குமிழிகளென இமைக்குள் அதிர செவிகள் முற்றிலும் அடைந்து தலைக்குள் உலோக ரீங்காரம் நிறையும்படி பேரிடி எழுந்தது. வாகுகன் பாய்ந்தெழுந்து “என்ன? எங்கு?” என்றான். “மழை வருகிறது” என்றான் அர்ஜுனன். “இங்கா? மழையா?” என்று அவன் கேட்டான். மின்னல்கள் அதிர்ந்து அதிர்ந்து முகில் கணங்களைக் காட்டியதைப்பார்த்துவிட்டு எழுந்து நின்று கைவிரித்துச் சுழன்று “முற்றிலும் வான் நிறைந்துள்ளது, வீரரே!” என்றான்.
“ஆம்” என்றான் அர்ஜுனன். “இத்தனை விரைவாகவா முகில் வந்து நிறையமுடியும்?” என்றான் வாகுகன். “அந்தப் பிங்கல முதியவர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு மழை வான் வழியாக தவழ்ந்து வருவதில்லை.. மலைகளினூடாக வந்து உச்சிப்பிளவுகள் வழியாக பிதுங்கி ஒழுகுகிறது” என்றான் அர்ஜுனன்.
இடியோசையும் மின்னல்களும் எழுந்து சூழ ஆடைபறக்க குழல் சிதறி அலைபாய நின்றிருந்தபோது நெடுந்தொலைவிலிருந்து வெந்த புழுதியின் மணத்துடன் காற்று வந்து சுழன்று சென்றது. அதில் சருகுத் திவலைகளும் புழுதியும் இருந்தன. “ஈரப்புழுதி” என்றான் வாகுகன். “அங்கே மழை இறங்கிவிட்டது” என்றான் பிறிதொருவன். “மழை! மழை!” என கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் பிறர். அகிபீனாவின் மயக்கிலிருந்து எழுந்து “யார்?” என்றும் “என்ன?” என்றும் சிலர் கூவினர்.
குடில்களின் கதவுகளைத் திறந்தபடி அச்சிற்றூரின் இளையோர் வெளியே ஓடி வந்தனர். குழந்தைகள் கூச்சலிட்டபடி வெளியே வந்து “மழை மழை மழை” என குதிக்கத் தொடங்கின. தொடர்ந்து ஆடைகளை அள்ளி அணிந்தபடி பெண்களும் வணிகர்களும் வெளியே வந்தனர். அவர்களின் ஆடைகளை இழுத்து உப்பி அதிரச்செய்தது காற்று. குழல்களைச் சுழற்றி பறக்க வைத்தது. முகில்கள் சுடர் கொண்டெரிந்தன. இடியோசையில் முகில்கள் அதிர்வதுபோல விழிமயக்கெழுந்தது
வடமேற்கு மலைகளுக்கு அப்பால் இருந்து எழுந்து பல்லாயிரம் முகில் படிக்கட்டுகளில் உருண்டுருண்டு சென்று கீழ்த்திசையில் உறுமி மறைந்தது பேரிடித்தொடர் ஒன்று. நெடுந்தொலைவில் புரவிக்குளம்படிகள் பெருகி எழுவது போன்ற ஓசையை அர்ஜுனன் கேட்டான். ’புரவிகளா!’ என்று வியந்த மறுகணம் அது மழையெனத் தெளிந்து அவ்வுணர்வால் உடல் சிலிர்க்கப்பெற்றான். மறுகணம் பேரோசையுடன் நிலம் அறைந்து அணுகி ஊரை முழுக்க மூடி கடந்து சென்றது மழை. ஓரிரு கணங்களிலேயே அங்கிருந்த அனைவரும் முழுமையாக நனைந்துவிட்டனர்.
இளைஞன் ஒருவன் இரு கைகளையும் விரித்து தொண்டை அதிரும் கூச்சலுடன் ஓடிச் சுழன்றான். உடனே அங்கிருந்த இளையோரும் பெண்களும் கைகளை விரித்தபடி கூவி ஆர்ப்பரித்து மழையில் சுழன்றாடினர். ஒருவரையொருவர் தழுவியும் சிறுமைந்தரை தூக்கி எறிந்து பற்றியும் களியாடினர். கரைந்து வழிந்தோடிய மென்புழுதியின் சேற்றில் விழுந்து புரண்டனர். சேற்றை அள்ளி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மழை அவர்களின் களியாட்டை தான் வாங்கிக் கொண்டது போல காற்றுடன் கலந்து சுழன்று சுழன்று அடித்தது. வெறி ஒவ்வொரு கணமும் ஏற அவர்கள் கூத்தாடினர்.
மெல்ல ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்குள் எதையோ முனகலாகப் பாடியபடி கைகளை விரித்து தள்ளாடும் கால்களுடன் மெல்ல சுழன்றனர். நிலை தடுமாறி நீரில் விழுந்து சேற்றில் புரண்டு மழையை முகத்திலும் மார்பிலும் வாங்கியபடி துயர் கொண்டவர்கள் போல படுத்தனர். சிலர் அழுதனர். சிலர் தெய்வங்களை நோக்கி மன்றாடினர். சிலர் தங்கள் உள்ளமைந்திருந்த சொற்கள் சிலவற்றை வழிபாடு போல சொல்லிக்கொண்டிருந்தனர்.
இரு கைகளையும் மார்பில் கட்டி, மழையின் அம்புப்பெருக்கை உடல் முழுக்க வாங்கியபடி அர்ஜுனன் அவர்களை நோக்கி நின்றான். கூத்தாடியவர்களுடன் வணிகர்களும் ஏவலர்களும் கலந்துவிட்டிருந்தனர். முதியவர்கள் குழந்தைகள் என ஒருவர்கூட மீதமில்லை. மெல்ல ஒவ்வொருவராக விழுந்து விழுந்து அவன் மட்டும் எஞ்சினான். தன்னைச் சூழ்ந்து உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களை அவன் நோக்கிக் கொண்டு நின்றான். குளிரில் அவன் இடக்கால் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் ஒற்றைச் சொல் ஒன்று இரு பெரும்பாறைகளால் இறுகக் கவ்விப்பற்றப்பட்டிருந்தது.
[ 4 ]
மறுநாள் கதிர் எழவே இல்லை. மலைகளுக்கு அப்பால் இருந்து ஒளிமட்டும் கசிந்து மழைத்தாரைகளினூடாக பரவியது. மழையலையுடன் இணைந்து குடில்கள் நிழல்கள் போல் ஆடின. மழைக்குள் விழுந்தவர்கள் அப்படியே துயில் கொள்பவர்கள் போல, ஊழ்கத்தில் உடல் உதிர்த்தவர்கள் போல முழுநாளும் அசையாது கிடப்பதை அர்ஜுனன் வியப்புடன் கண்டான். அவன் கால்கள் குளிரில் நடுங்கி இறுகி முழங்கால் தசை உருண்டு வலிகொண்டு நின்றது. தாடை அசைவிழந்து ஒட்டிக்கொண்டது. பற்கள் உரசி அரைபட்டன. ஆயினும் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கு அவனால் இயலவில்லை.
இரவிலேயே வணிகர்கள் மட்டும் குடில்களுக்குள் சென்று ஆடைகளைக் களைந்து உடல் துடைத்துக் கொண்டனர். சிலர் உள்ளேயே கற்செதுக்குக் கலங்களில் நெருப்பிட்டு அமர்ந்தனர். இப்போது தணியும், இதோ அலை இறங்குகிறது, இதோ ஓசை மயங்குகிறது என்று பலமுறை மாயம் காட்டி மீண்டும் மீண்டும் எழுந்து பெய்துகொண்டே இருந்தது மழை. உச்சிப் பொழுதுக்கு முன்னரே கதிரொளி மறைந்து மீண்டும் முற்றிருளாகியது. மீண்டும் இருள் வந்து மூடிக்கொண்டது
எண்ணியிராத தருணத்தில் மழை ஓயத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே தெற்கிலிருந்து வந்த காற்று மழையை திரைச்சீலையென சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது. மீண்டும் வந்த காற்றில் துளிச்சிதர்கள் இருந்தன. மீண்டும் வீசிய காற்றில் தொலைதூரத்துப் புழுதி வெந்த மணம் இருந்தது. கூரைகள் நீரைச்சொட்டி உதறி எழுந்து மீண்டும் பறக்கலாயின. வானில் விண்மீன்கள் சில மெல்ல பிதுங்கி எழுந்து வந்தன.
இரவு முழுக்க தெற்கிலிருந்து அலையலையென காற்று வந்து ஊரைச்சூழ்ந்து சுழன்று கடந்து சென்றது. மழையில் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக விழித்து கையூன்றி தவழ்ந்தபடி குடில்களுக்குள் சென்றனர். அங்கே ஈரத்துணியுடனே படுத்து துயிலலாயினர். சிலர் மண்ணில் முகம் புதைத்து நெஞ்சுகலுழ்ந்தவர்கள் போல அழுதபடி ஏதோ முனகினர். சிலர் கைகூப்பியபடி மல்லாந்துகிடந்து அரற்றிக்கொண்டிருந்தனர்.
அர்ஜுனன் அருகிருந்த குடிலொன்றுக்குள் நுழைந்து தன் தோலாடையை அகற்றி மரவுரி அணிந்துகொண்டான். குடில் நடுவே இரும்பு யானத்தில் அனல் வைத்து அதைச்சூழ்ந்து வணிகர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவன் சற்று இடம் விட்டு “அமருங்கள், வீரரே!” என்றான். அர்ஜுனன் அமர்ந்து கைகளை அனல் மேல் நீட்டி அவ்வெம்மையை உடல் முழுக்க வாங்கி நிரப்பிக்கொண்டான். குருதியில் வெம்மை படர்ந்து செல்லச் செல்ல அவன் உடல் சிலிர்த்தபடியே இருந்தது.
குளிருக்கு வெம்மையையும் வெம்மையில் குளிரையும் உணர்வதுபோல் உடலறியும் பேரின்பம் பிறிதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். உடல் அறியும் இன்பதுன்பங்களே புறவயமானவை. மறுக்கமுடியாதவை. ஆகவே அவை மட்டுமே இன்பங்களும் துன்பங்களும். பிற அனைத்தும் உளமயக்குகள். ஆம். அகிபீனா இழுத்தால் என்ன? வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா? முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா? இல்லை, இது காற்று.
அமர்ந்தபடியே துயிலத்தொடங்கி கையூன்றி விழுந்து வெறுந்தரையிலேயே ஆழ்ந்துறங்கினான். காலையில் ஊரின் ஓசைகளைக் கேட்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சற்று பிந்தி எழுந்தது. தொடர்பயணங்களில் இட உணர்வு முற்றிலும் அகன்றுவிட்டிருந்தமையால் அவன் அப்போது மிதிலையின் உணவு விடுதி ஒன்றில் துயின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். விழித்துக்கொண்டு தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்று கண்டபின் ஆடை திருத்தி எழுந்து நின்றான்.
குனிந்து குடில் வாயில் வழியாக வெளியே வந்தபோது அங்கு மழை பொழிந்ததன் எந்தத் தடயமும் எஞ்சியிருக்கவில்லை என்று கண்டான். தரையின் ஈரம்கூட காய்ந்துவிட்டிருந்தது. அங்கு வந்தபோது எழுந்து பறந்துகொண்டிருந்த புழுதி பல்லாயிரம் கால்தடங்களும் குளம்புத்தடங்களுமாக படிந்திருப்பதைக் கொண்டே பெய்து நனைந்த மழையை நினைவுகூர முடிந்தது. வான் நிரப்பிச் சென்றுகொண்டிருந்த காற்றில் நீர்த்துளிகள் இல்லை, ஆனால் நீர் என அது மணத்தது.
ஏவலர்கள் பொதிகளைப் பிரித்து அத்திரிகளின் முதுகில் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வும் உணவும் கொண்டு புத்துயிர் பெற்றிருந்த அத்திரிகள் கழுத்து மணியை அசைத்தபடி கடிவாளத்தை மென்று காதுகளைத் திருப்பி ஓசைகளைக் கூர்ந்தன. ஒற்றைக்கால் தூக்கி மூன்றுகாலில் நின்றன. அவற்றின் வால்சுழற்சிகளும் செருக்கடிப்பொலிகளும் பசுஞ்சாண மணமும் சிறுநீர் வீச்சமும் குடில் சூழ்ந்த அந்நடுமுற்றத்தில் நிறைந்திருந்தன.
“நாம் கிளம்புகிறோம், வீரரே!” என்றான் வாகுகன். “நம் வரவு இவர்களுக்கு நல்லூழைக் கொணர்ந்தது என்று சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “இவர்கள் வேளாண்மை செய்வதுண்டா?” என்றான். “இங்கு அவ்வாறு எதையும் செய்ய முடியாது. இங்குள்ள புழுதியும் காற்றும் அப்படிப்பட்டவை. இந்த மழை இவர்களின் முட்காடுகளை தளிர்க்கச் செய்யும். அதை உண்ணும் சிற்றுயிர்கள் பெருகும். இன்னும் பலமாதங்களுக்கு இங்கு ஊனுயிர்களுக்கு குறைவிருக்காது. இவர்கள் இவ்வழிசெல்லும் வணிகர்களையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி வாழ்பவர்கள்.”
ஊரே அமைதியாக இருப்பதைக் கண்டு “அவர்கள் எங்கே?” என்று அர்ஜுனன் கேட்டான். கருணர் “மழை பெய்துவிட்டதால் அவர்கள் பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. இது ஈசல்கள் எழும் பொழுது. அவர்களுக்கு இது அறுவடைக்காலம் போல. வெயிலில் உலரச்செய்து பானைகளில் நிறைத்து மூடியை களிமண் கொண்டு பொருத்தி காற்றிலாது மூடி புதைத்து வைத்தால் நான்குமாதம் வரை இருக்கும். ஈசல்வலைகளுடன் விடிவதற்குள்ளாகவே அனைவரும் காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள்” என்றார்.
அர்ஜுனன் முகம் கழுவி வாகுகன் அளித்த ஊன் உணவை உண்டு புறப்படுவதற்கு சித்தமாக வில்லுடன் வந்து நின்றான். “வருணனை வணங்கி கிளம்புவோம். அளியிலாப் பெரும்பாலையை இம்முறை எளிதில் கடப்போம் என்று எண்ணுகிறோம்” என்று கருணர் சொன்னார். “வருணன் சினம் கொண்டவன். அவன் அளி பாலைமழைபோல இனியது” என்றார் ஒரு வணிகர்.
அவர்கள் ஊர் மூலையில் அமைந்திருந்த வருணனின் சிறு பதிட்டை நோக்கி சென்றனர். புலரிக்கு முன்பாகவே ஊனுணவையும் காட்டுமலர்களையும் வருணனுக்குப் படைத்து பூசனை செய்திருந்தனர் ஊர்மக்கள். அவர்கள் வருணனை வணங்கினர். வருணன் காலடியில் இருந்த சிறு கிண்ணத்தில் இருந்து செம்மண் எடுத்து நெற்றியில் அணிந்து அருள் பெற்றனர். அர்ஜுனன் அந்தக் கல்லில் விழித்த விழிகளை நோக்கினான். முந்தைய நாளின் இடிமின்னலும் மழைக்குளிரும் நினைவிலெழுந்தமைந்தன.
“கிளம்புவோம்” என்றார் வணிகத்தலைவர். ஊருக்கு புறம்காட்டாமல் பின்காலடி எடுத்து வைத்து வாயிலினூடாக ஏழு சுவடுகள் பின்சென்று குனிந்து தரைதொட்டு சென்னி சூடி வணங்கி அவர் திரும்பி நடக்க அத்திரிகளும் ஏவலருமாக வணிகர்குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் ஆளில்லாது கைவிடப்பட்ட குருவிக்கூடுகள்போல நின்ற ஊரை இறுதியாக திரும்பிப்பார்த்தான்.
செல்லும் வழி முழுக்க புழுதி அடங்கி, வானம் குளிர்ந்த ஒளி கொண்டு, காற்றில் நீர்த்துளிகள் பரவி, இனிய மண்மணத்துடன் பயணம் இனிதாக இருந்தது. சூதரின் பாடலொன்று தொலைவில் கேட்டது. முன்பே செல்லும் வணிகர் குழுவில் மெலிந்து எலும்புகள் புடைத்த கழுத்தும் சற்றே கூன் கொண்ட முதுகும் தசைகள் இறுகிய வயிறும் கால்களும் கொண்ட முதிய சூதர் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். சீவிடு போல சிற்றுடலிலிருந்து எழும் பெருங்குரல் கொண்டவர். அவர்கள் அக்குழுவை நடைவிசையால் அணுகும்போதெல்லாம் அவர் பாடல் காற்றில் எழுந்து வந்துகொண்டிருந்தது.
வாகுகன் “வருணனைப் பாடுகிறார்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “வருணனின் நகரம் மேற்கே அலையற்ற கடலுக்கு அப்பால் உள்ளது. உப்பால் ஆன கோட்டை சூழ்ந்தது அந்நகர்” என்றான் வாகுகன். “எப்படி தெரியும்?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “ஒவ்வொருமுறை இவ்வழிசெல்லும்போதும் அந்நகர் பற்றி எவரேனும் சொல்கிறார்கள். இன்று மழை பெய்ததனால் வருணனை புகழ்ந்து பாடுகிறார்கள். மழையின்றி புழுதி அனலென சுழன்று கடந்துசெல்லும் பொழுதில் நடக்கும்போது வருணனை வேண்டிப்பாடுகிறோம். வருணனை நினைக்காது இப்பாதையை எவரும் கடக்க முடியாது” என்றான் நிகும்பன்
“வருணனின் பெருநகர் மூன்று பெருங்கோட்டைகளால் ஆனது” என்று கருணர் சொன்னார். “கதிரொளியில் கண் கூசவைக்கும் வெண்மை கொண்ட உப்புக்கோட்டை. அதற்கப்பால் அசைவற்ற நீலநிற நீரால் ஆன பெருங்கோட்டை. அதற்கப்பால் வெண் சங்கும் சிப்பிகளும் சேர்த்தடுக்கிக் கட்டப்பட்ட அரண்மனைக்கோட்டை. அவன் அரண்மனை நீருக்கடியில் அமைந்துள்ளது. நீர்ப்பாசிகளைப் பின்னி கட்டப்பட்டது அது என்று ஒரு கவிஞன் சொன்னான். நீரலைகளுக்கு ஏற்ப நூற்றியெட்டு அடுக்கு கொண்ட பெருமாளிகையில் நெளிந்து கொண்டிருக்கும் அதன் சுவர்கள் வளைவுகள் அனைத்தும் அலைந்தாடும்.”
“வருணன் சிறகுகள்கொண்ட மீன்தேவியராலும் நீருள் பறக்கும் நாகங்களாலும் காக்கப்படுகிறான். நீலவைரங்களால் அடுக்கிக் கட்டப்பட்டது அவன் அரண்மனைக்கூடம். அதற்குள் நீர்மணிகளால் ஆன அரியணையில் அமர்ந்து அவன் புவிநீரை எல்லாம் ஆள்கிறான்.”
“வருணனை சென்று காண்பது எப்படி?” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன்? நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா?” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா?” என்று கேட்டான். “காணச் சென்றுகொண்டிருக்கிறான் போலும்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி.
“இவர்கள் இதை கதையென எண்ணுகிறார்கள் ஆனால் செல்லவும் காணவும் முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்றான் வாகுகன். கருணர் சிரித்துக்கொண்டு “நீராழத்தில் சென்று நீரரமகளிரைக் கவர்ந்து நீர் நாகங்களைக் கடந்து வாய்திறந்து விழுங்க வரும் கவந்தமச்சர்களை வென்று வருணனைக் காணவேண்டும். அப்படி சென்று கண்டு உமக்கு வரப்போவதென்ன?” என்றார். “மெய்மை” என்றான் அர்ஜுனன்.
“அத்தனை தொலைவில்தான் அது இருக்குமா?” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்?” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே! வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன?” என்றார்.
“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”
கருணர் “இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை சொல்லல் என்பது இனிது. அது இங்குள்ள இறுகிய புடவிநெறிகளை மீறிச்செல்லும் கனவு. கல்லை கையில் அள்ளி அருந்தலாம். வானை அள்ளி குடத்தில் நிறைக்கலாம். ஆனால் அது அழகிய சிலந்தி வலை ஒன்றில் நாம் சென்று சிக்கிக்கொள்வது போல. திமிறும்தோறும் மேலும் சூழும். அனைத்துக் கதைகளுக்கும் நடுவே விஷக்கொடுக்குடன் சிலந்தி அமர்ந்திருக்கும். அதற்கு நம் உயிரை அளித்தாக வேண்டும்” என்றார்.
அவனருகே வந்து “கதைகளல்ல வாழ்க்கை. இங்கு இவ்வாறு இருப்பதுதான் இளைஞனே வாழ்க்கை. உவத்தல் அன்றி இப்புவியில் வாழ்வுக்கு பொருளொன்றும் இல்லை. மகிழ்வன்றி மெய்மை என்று ஒன்றில்லை” என்றார். “அவ்வாறு எண்ணுவது பிறிதொரு சிலந்தி வலை” என்று அர்ஜுனன் சொன்னான். கருணர் உரக்க நகைத்து “ஆம், இருக்கலாம்” என்றார். “இளமையிலே நான் இதில் சிக்கிவிட்டேன்.”
“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.
கருணர் திகைப்புடன் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். நிகும்பன் “வருணனிடம் நெளியும் மெய்மையை நெளிந்தபடி அடையுங்கள் வீரரே, அப்போதுதான் அது நிலையான உண்மையாகும்” என்றான். சூழ்ந்திருந்தவர்கள் நகைத்தனர்.