கிராதம் - 25
[ 5 ]
தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை. “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார்.
குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து தொடங்கி நுரை பெருகுவதுபோல் பெருகி பேருருவம் கொண்டு நின்றிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தனர். வடதிசையில் அவன் பெருநகர் உள்ளது என்பதற்கப்பால் அவர் எவரும் அவனை கண்டதில்லை. பசித்து துயில்பவனின் கனவில் உணவுக்குவையென, இளம் கன்னியின் கனவில் பொற்குவியலென, இல்லறத்தான் கனவில் ஏழடுக்கு மாளிகையென, அரசனின் கனவில் நிறைகருவூலம் என தன்னை உருமாற்றிக் காட்டிக்கொண்டே இருக்கும் மாயன் அவன் என்றனர்.
தேடி அலைந்து சலித்து வடதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிற்றோடைக்கரையில் தன் கையால் மூங்கில் வெட்டிக் கட்டிய சிறு குடிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த முதிய அந்தணரை அவன் கண்டான். அவன் களைத்திருந்தான். இரவு தங்குவதற்குரிய மரத்தடியை தேடிக்கொண்டிருந்தான். அக்குடில் அவனை முகம் மலரச்செய்தது. அருகணைந்து குடில்முன் அமர்ந்து மாலைவெயிலணைவதை நோக்கி நின்றிருந்த அவருக்கு வணக்கம் சொன்னான். “வருக!” என்று அவர் புன்னகையுடன் அழைத்தார்.
“களைத்துளேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த வழிப்போக்கன். போர்க்குலத்தான்” என்று அர்ஜுனன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “இன்று இரவுணவுக்கென அமுது சமைத்துள்ளேன். அதை இரண்டென பகுத்து நாம் உண்போம். விருந்தால் அது இனிமைகொள்ளவேண்டும் என இன்றைய நெறிவகுத்தோன் எனக்கு அருளியிருக்கிறான்” என்று சொல்லி அந்தணர் தன் இல்லத்திற்குள் சென்று உணவை கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அதைப்பகிர்ந்து இருவரும் உண்டனர்.
“என் பெயர் சௌம்யன். இக்குடிலில் தனிமையில் வேதம் ஓதி ஊழ்கம் பயின்று வாழ்கிறேன்” என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நிலவு எழும் நாள் இன்று. காடு கனவு கொள்ளத்தொடங்கும் பொழுது. சொல்லாடிக் களித்திருக்க ஓர் அயலவன் வந்திருப்பது நல்லூழே” என்றார் அந்தணர். “வராதிருந்தால்….?” என்று அர்ஜுனன் குறும்பாகக் கேட்டான். “தனிமை அதற்கிணையாகவே இனிது” என்றார் அந்தணர் நகைத்தபடி.
உணவுண்டபின் குடில் முற்றத்தில் ஈச்சை ஓலைப்பாயை விரித்து நிலவு நோக்கி இருவரும் படுத்திருந்தனர். “தாங்கள் இங்கு வேறு என்ன செய்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஒன்றும் செய்வதில்லை. உவகை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தேன். இவ்வோடைக்கரையில் இக்குறுங்காட்டைக் கண்டதும் இதுவே அவ்விடம் என்று தெளிந்து இங்கு குடில்கட்டி தங்கினேன். இங்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகின்றன. ஒருநாள் சேர்த்ததை மறுநாளுக்கு கொண்டு செல்வதில்லை. உணவும் நினைவும்” என்றார் சௌம்யர்.
“ஒவ்வொரு நாளும் அன்று புதிதெனப் பிறந்தெழுகிறேன். என்னுடன் சூரியனும் எழுகிறான். விலங்குகள் பறவைகள் புட்கள் பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னைப்போல் பிறவிகொள்கின்றன. எங்களுக்குரிய அனைத்தும் இக்காட்டில் நிறைந்துள்ளன. நாளில் கொண்ட எதுவும் நினைவில் எஞ்சாது இங்கு வந்து படுக்கிறேன். தலைக்கு மேல் விண்மீன்களென விரிந்துள்ளது பெருவெளி. என் கையில் எதுவும் இல்லை என்பதனால் அவ்விரிவு என்னுடையதாகிறது” என்றார்.
அர்ஜுனன் நீள்மூச்சுடன் “ஆம், விடுபடுவதே பேரின்பம். அதை என்னால் உணரமுடிகிறது” என்றான். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று சௌம்யர் கேட்டார். “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா?” என்றான். சௌம்யர் இயல்பாக “அவனை முழு வடிவில் நான் கண்டுள்ளேன்” என்றார்.
அர்ஜுனன் திகைப்புடன் “தாங்களா…?” என்றான். “ஆம். அயோத்திநாட்டில் அஸ்வினிபுரம் என்னும் நகரில் வாழ்ந்திருந்த பெருவைதிகனின் மைந்தனாக நான் பிறந்தேன். எந்தை வேள்விச்செயல் தேர்ந்தவர். அரசர்களுக்கு உலகியல்நலன் நாடும் பெருவேள்விகளை நிகழ்த்தி வைப்பவர். ஆநிரையும் பொற்கிழிகளும் கூலக்குவைகளுமாக இல்லம்திரும்பும் தந்தையையே நான் இளமைமுதல் கண்டு வளர்ந்தேன். நான் பிறந்தது செல்வத்தின் நடுவே. பொன்னளைந்து வளர்ந்தேன். பொன்னை அறிந்தவன் பொன்னை மட்டுமே அறிந்திருப்பான். பிற அனைத்தும் பொன்னாலேயே அவனுக்குப் பொருள்படும். நானும் அவ்வண்ணமே இருந்தேன்.”
வேதம் என்பது சொல்லுக்கு நூறு பொன்னின் எடை கொண்டது என்று எந்தை என்னிடம் சொன்னார். அதுவே எனை வேதம் கற்கத்தூண்டியது. கற்கக் கற்க வேதம் விரிந்தது. பொன்குவிகிறது என்றே என் உள்ளம் மகிழ்ந்தது. பொன்னென்பதனால் நான் ஒருதுளியையும் வீணாக்கவில்லை. பிறிதெதையும் பொருட்படுத்தவுமில்லை. இளமை முதிர்வதற்குள் நான் வேதம் முழுதறிந்து நால்வகைக்கூற்றும் தேர்ந்தவனாக ஆனேன்.
எந்தை மறைந்தபின் நானும் என் வைதிகர்குலத்தின் முதல் வைதிகனானேன். வேள்விச் சாலைகளிலிருந்து வேள்விச்சாலைகளுக்கு சென்றேன். ஈட்டிக் குவித்து என் இல்லத்தை பொன்னால் நிறைத்து வைத்திருந்தேன். பொன் அளையும் நாகொண்டவன் என ஆணவம் கொண்டிருந்தேன். என்னைக் காணவருபவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு, பொன்கறக்கும் பசுவே என் வேதம் என்று.
அன்றொரு நாள் பெருவேள்வி ஒன்றில் முதன்மை தலைவனாக அமர்ந்தேன். வேதச் சொல்லெடுத்து எரியோம்பிக்கொண்டிருக்கையில் அதில் ஒரு சொல் என் நாவில் எழவில்லை என்பதை அறிந்தேன். உடனோதியவர்கள் அச்சொல்லை ஓதி முன் சென்றுவிட்டிருந்தனர். நான் அச்சொல்லையே மீண்டும் அச்சத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அவ்வரி வந்தது, அச்சொல் என் நாவிலெழாது நழுவிச்சென்றது. என் உளவியளையாட்டா அது? நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா? நான் அதை கூர்வதனால் உள்ளம் என்னுடன் ஆடி மாயம் காட்டுகிறதா?
அவ்வரி வந்தது, அச்சொல்லுக்கு முந்தைய சொல் துல்லியமான ஓசையுடன் நிகழ்ந்தது. அச்சொல் இல்லையென நடித்து அதற்கு மறுசொல் என் நாவில் ஒலித்துச்சென்றது. அந்தவேள்வியில் நூறுமுறை அச்சொல் வந்தது, ஒருமுறைகூட என் நாவில் அது அமரவில்லை. வேள்விமுடிந்து எழுந்து சென்றபோது நான் பித்தனைப்போலிருந்தேன். பிறர் என் உள்ளம் கொண்ட குழப்பத்தை அறியவில்லை. நான் மட்டுமே அறிந்த ஒன்று அது என்பது முதலில் என்னை ஆறுதல்கொள்ளச் செய்தது. பின்னர் அதுவே என்னை பதற்றத்துக்குள்ளாக்கியது.
அச்சொல்லை மட்டுமே என் சித்தம் தொட்டு அளைந்துகொண்டிருந்தது. அச்சொல்லை என் உள்ளத்தால் பற்ற முடிந்தது. புரட்டிப்புரட்டி அதன் அத்தனை ஒலியமைவையும் பொருளமைவையும் காணமுடிந்தது. வேண்டுமென்றே அதை சொல்ல முயன்றேன். அச்சொல் மட்டும் நாவில் வந்தது. வேதவரியென சொல்கையில் மட்டும் அது நாவில் நிகழவில்லை.
மிகமிக அஞ்சிவிட்டேன். அது ஏதோ தேவனின் தீச்சொல். அல்லது உளநோயின் தொடக்கம். அதை எண்ணவேண்டாம், அதை விட்டு விலகிச்செல்வதே நன்று. ஆனால் விலகமுயலும்தோறும் அணுகினேன். அச்சொல்லை அன்றி வேறெதையும் எண்ணாதவனாக ஆனேன். அச்சொல் அறியாப்பேய்த்தெய்வம் போல அச்சமூட்டும் பேருருக்கொண்டு என்னைச்சூழ்ந்தது. இரவுகளில் துயிலிழந்தேன். பகலில் முற்றிலும் தனித்திருந்தேன்.
என் விழிகள் மாறுபட்டன. முகம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. என் மனையாட்டி என்னிடம் மீளமீளக் கேட்டாள் “என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எதையாவது அஞ்சுகிறீர்களா? எதையேனும் எண்ணி வருந்துகிறீர்களா?” ஓசையற்ற அசைவாக என் உதடுகளில் அச்சொல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனக்கு பீடைகூடிவிட்டது என்றனர் முதியவர். உள்ளச்சிதைவு என்றனர் தோழர். என் மனைவி கதறி அழுதபடி “என்ன ஆயிற்று உங்களுக்கு? மீண்டுவாருங்கள். நம் குழந்தைகளை என்ணுங்கள்” என்று என்னை உலுக்கினாள்.
என் செல்வம் துணைநின்றது. முதுவைதிகர் எழுவர் என்னை நடுவே இருத்தி வேள்விசெய்து அவியும் பலியும் அளித்து என்னில் கூடிய தெய்வத்தை விரட்டமுயன்றனர். புறக்காட்டிலிருந்து பூசகனை வரவழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர். குறவப்பூசகன் வந்து தீயாட்டும் தெய்யாட்டும் நிகழ்த்தினான். மருத்துவர் பலர் வந்து நெல்லிக்காய் தளமும் வில்வதளமும் வைத்து என் சித்தத்தை குளிர்விக்க முயன்றனர். ஒவ்வொன்றும் பிறிதெங்கோ நிகழ அச்சொல்லில் அமைந்திருந்தது என் சித்தம்.
நான் என்னை நோக்கிக்கொண்டிருந்தேன். கற்ற அனைத்தும் முழுமையாக நினைவிலிருந்தன. அவ்வொரு சொல் மட்டும்தான் நாவை அறியவில்லை. ஏன்? ஏன்? ஏன்? யார் விளையாடுவது என்னுடன்? அது ஓர் அறைகூவல். ஒரு இளிவரல். என் முன் அமர்ந்து முதிய நிமித்திகர் ஒருவர் சோழிபரப்பி வினாக்களம் அமைத்து உசாவிக்கொண்டிருந்தார். கையை ஓங்கி அறைந்தபடி நான் எழுந்தேன். “போதும்!” என்று கூவினேன். என்னைத்தடுத்த அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு என் ஊரிலிருந்து வெளியேறினேன்.
செல்லும்வழியிலேயே என் ஆடைகளை அணிகலன்களை அடையாளங்களை களைந்தேன். என் உள்ளக் கொந்தளிப்பு அமைய ஏழுநாட்களாயின. அப்போது கங்கைக்கரைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கிருந்து மேலும் வடக்காக கிளம்பிச்சென்றேன். எதைத் தேடி கிளம்பினேன் எங்கு செல்கிறேன் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சிலதருணங்களில் நம்மிடமிருந்து விலக நாம் நாமறிந்த அனைத்திலிருந்தும் தப்பி ஓடுகிறோம்.
வீரரே, உண்மையில் அது மிகச்சிறந்த ஒருவழி. நாம் என்பது நம்மைச்சூழ்ந்திருப்பவையே. ஊர், குலம், உறவு, மனை, செல்வம், ஆடைகள், அணிகள், பெயர்… அவற்றிலிருந்து நம்மை உருவி வெளியே எடுக்கும்போது நாம் அறிகிறோம் நாம் அவை அல்ல என்று. அந்த விடுதலையை அடைய துறந்தேகுவதைப்போல சிறந்த வழி பிறிதில்லை.
நூறுநாட்கள் வடதிசைநோக்கி சென்றேன். ஒரு அன்னசாலையில் ‘குபேரன்’ என்னும் சொல் காதில் விழுந்ததும் என் அகம் கொப்பளித்தெழுந்தது. என் உள்ளம் அனைத்தையும் உதறித்தெளிந்து அடுத்த அடியெடுத்துவைக்க உதவும் சொல்லுக்காக காத்திருந்தமையால் அச்சொல் அப்படி பொருள்கொண்டது. நான் உசாவவேண்டியது அவனிடம்தான். அவனைத்தான் அதுகாறும் நான் வழிபட்டிருந்தேன். வேதச்சொல்லை எனக்கு மீட்டளிக்கவேண்டியவன் அவன். வேதமாகி என்னுள் நிறைந்தவன்.
குபேரதீர்த்தம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார்கள் அவ்வழிப்போக்கர்கள். அப்படி ஒரு சுனை உண்மையில் உண்டா அது சூதர்களின் தொல்கதை மட்டும்தானா என்பதுதான் அவர்களின் சொல்லாடலாக இருந்தது. அது வடபுலத்தில் எங்கோ மலைமடிப்புக்குள் உள்ளது. அதில் பொன்னே நீரென ஊறும். அதைச்சூழ்ந்து பொன்மலைகள் அமைந்திருக்கும். பொன்னாலான கூழாங்கற்களும் சேறும் சூழ்ந்த அச்சுனைக்கு சுற்றிலும் செழித்திருப்பதும் பொன்நாணலும் பொற்செடிகளும்தான். பொற்பாறைகளில் படிந்திருப்பதும் பொற்பாசியே.
உரக்கநகைத்து ஒருவன் சொன்னான் “காசில்லாமல் பசித்திருந்த எவனோ ஒருவனின் கனவில் வந்த இடம் அது.” ஆனால் நான் அப்படி ஓர் இடமுள்ளது என உறுதிகொண்டேன். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொல்கதைகளில் இருந்து சொன்ன வழியடையாளங்களை உளம்கொண்டு மேலே நடக்கலானேன். முந்நூறுநாட்கள் ஒவ்வொரு வழிக்குறியாகத் தேடிக் கண்டடைந்து சென்றேன்.
குபேரதீர்த்தத்திற்கு தவமுனிவர் அன்றி பிறர் செல்லமுடியாதென்றே இறுதியாக எனக்கு வழி சொன்ன முனிவர் சொன்னார். “நான் செல்வதே ஒரு தவம். சென்றடையாது உயிர்வாழமாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். என் உடல் நலிந்தது. சடை அடர்ந்து கண்களில் பித்து நிறைந்தது. பிறிதொரு எண்ணமும் அற்றவனாக சென்றுகொண்டே இருந்தேன். இறுதியில் அந்த சுனையை சென்றடைந்தேன்.
பொன்மயமான அதன் கரையிலமர்ந்து தவம்செய்தேன். பதினெட்டுநாள் பிறிதொன்றிலாது என்னுள் மூழ்கினேன். என்னுள் இருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்த்தேன். அந்த ஒற்றைச் சொல் மட்டும் எஞ்சியிருக்க அதுவே நான் என்றாகி அமர்ந்திருந்தேன். அச்சொல் முதலில் ஒரு வினாவாக இருந்தது. அதன்மேல் மோதிமோதி என் சித்தம் அதை ஒரு விடையென ஆக்கிக்கொண்டது.
விழிக்குள் பொன்னொளி சூழக்கண்டு இமைதிறந்தேன். பொன்னுடல் ஒளிவிடத் தோன்றிய குபேரனை முழுமையாகக் கண்டேன். பொன்னுடல் கொண்ட மானுடன் ஒருவனை அவன் ஊர்தியாக்கியிருந்தான். வீரரே, அந்த மானுடன் நான். என் இளமைத்தோற்றம் அது. குபேரனின் ஊர்தி மானுடனே என அறிந்திருப்பீர். ஒவ்வொருவரும் தங்கள் வடிவில் காணும் மானுடன் அவன்.
குழந்தையின் கொழுத்த குற்றுடல். இடுங்கிய சிறுகண்கள். பொற்கதாயுதம். மறுகையில் பொன்னூறும் கலம். கீழ்க்கையில் தாமரை. “என்ன விழைகிறாய்?” என்று திருந்தாக்கிளவியில் கேட்டான். “எந்தையே, நான் வேதச்சொல் ஒன்றை மறந்தேன். அது என் நாவிலெழவேண்டும்” என்றேன். “என்னிடம் செல்வத்தையே கோருவார்கள். வேதச்சொல்லை எவரும் கேட்டதில்லை” என்று அவன் சொன்னான். தந்தைக்கு விடைசொல்லும் மைந்தன்போல தடுமாறினான்.
“எனக்கு வேதமே செல்வம். வேதம் அழிந்தால் நான் முற்றழிவேன். அந்த ஒற்றைவேதச்சொல் அழியும் என்றால் முழுவேதத்தையும் நான் இழக்கலாகும். அந்த வேதச்சொல்லை மட்டுமே வேண்டுகிறேன்” என்றேன். “நான் அச்சொல்லை மீட்டளிக்க இயலாது” என்று அவன் சொன்னான். சீற்றத்துடன் “பிறிதொன்றும் வேண்டேன். நீ எழுந்தருளியும் எனக்குக் கனிய உனக்கு ஆற்றலில்லை என்றே கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.
அவன் “என்னிடம் உள்ளது அளவிலாச் செல்வம். ஆனால் செல்வம் மட்டுமே உள்ளது” என்றான். “அச்செல்வத்தில் இச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டு எனக்கு அளி” என்றேன். “அச்செல்வத்தைப்பெற்று அமைக!” என்றான். “செல்வத்தைப் பெரிதென எண்ணியிருந்தால் நான் கிளம்பியிருக்கவே மாட்டேன். உன் செல்வத்தைக்கொண்டு அச்சொல்லை மீட்டெடுத்த வாக்தேவியிடமிருந்து வாங்கி எனக்கு அளி” என்றேன்.
“ஆம், அதைச்செய்கிறேன்” என்று அவன் விழிமூடினான். அவனருகே அவனைப்போன்றே தோன்றிய மூன்று குபேரபுரியின் ஏவலர் தோன்றினர் “வாக்தேவியை அணுகி என் செல்வத்தில் அச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டுவருக!” என்றான். அதன்பின் என்னை நோக்கி புன்னகைத்து “என்னிடம் உள்ளது குன்றாப்பெருஞ்செல்வம். இப்புடவியையே நான் வாங்கமுடியும்” என்றான். குழந்தைமை பேதைமையாக ஆகும் சிரிப்பு அது என எனக்குப்பட்டது.
அவர்கள் வரக்காணாதபோது “எங்கு சென்றார்கள்?” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்?” என இரைச்சலிட்டான். அவர்கள் வரக்கண்டு “அதோ வருகிறார்கள்” என்றான். “வாங்கிவந்துவிட்டார்கள்” என்று சிரித்தான். அவர்கள் அருகணைந்து தலைவணங்கி “அரசே, சொல்லரசி அச்சொல்லை ஒரு துலாவின் தட்டில் வைத்தாள். மறுதட்டில் இணையான செல்வத்தை வைத்து எடுத்துச்செல்லுங்கள் என்றாள். நாங்கள் பொற்குவை ஒன்றை வைத்தோம். பொன்மலை ஒன்றை வைத்தோம். பொன்மலைகளை அள்ளி அள்ளி வைத்தோம்” என்றான் ஒருவன்.
“அரசே, நம் கருவூலத்தையே வைத்தோம். நம் நகரை நம் உலகையே வைத்தோம். அச்சொல் அசையவே இல்லை. வாக்தேவி நகைத்து மூடர்களே உங்கள் அரசனும் நீங்களும் அமர்ந்தாலும்கூட நிகராகாது என்றாள்” என்றான் இன்னொருவன். குபேரன் திகைத்து என்னை நோக்கி “நீ யார்? ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய்?” என்று சீறினான். “அரசே, வேதச்சொல்லுக்கு இணையாகும் ஏதும் நம்மிடம் இல்லை என்று அவ்வன்னை சொன்ன போது வானம் இடிசூழ்ந்து ஆம் ஆம் என்றது” என்றான் மூன்றாமவன். ”நான் அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என குபேரன் அழுதான்.
நான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடி “நான் அழுவேன்… நான் அழுவேன்… அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.
என்ன அதெல்லாம் என்று எனக்குப்புரியவில்லை. குபேரதீர்த்தத்தில் இருந்து நான் திரும்பினேன். திரும்பும் வழியில் என் எண்ண அலைகள் ஓய்ந்திருப்பதை, நான் எடையற்றவனாக இருப்பதை உணர்ந்தேன். சிரிக்கத் தொடங்கினேன். சிரித்து சிரித்து மண்ணில் விழுந்து எழுந்து மீண்டும் சிரித்தேன். சிரிப்புடன் சிற்றூர்களை கடந்து சென்றேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவர்களை அறியாமல் சிரிக்கலாயினர்.
அச்சிரிப்பினூடாக என் நா மறந்த அச்சொல் மீண்டு வந்தது. அவ்வேதவரியை சொன்னேன். சொல் அமைந்திருந்தது. உண்மையா என நானே வியந்து மீண்டும் மீண்டும் சொன்னேன். அச்சொல் அங்குதான் இருந்தது. ஒன்றுமே நிகழாததுபோல. அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல. அதை மீண்டும் மீண்டும் சொன்னபடி நான் அழுதேன்.
“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது?” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றார் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”
[ 6 ]
அர்ஜுனன் நூறு நாட்கள் நடந்து குபேரதீர்த்தத்தை சென்றடைந்தான். ஏழுமலைமுடிகள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை முதல் வழிக்குறி. சிம்மவாய் எனத் திறந்த குகை என்பது அடுத்தது. முதலைமுதுகுபோன்ற பாறைநிரை பிறகு. பூதங்களின் பாலம் தொடர்ந்து வந்தது. நெருப்பாக நீர் வழியும் பேரருவி பின்னர். சிரிக்கும் மலை அதற்கு அப்பால். வெண்பனி உருகி வழியும் முடி பின்னர். அதன்பின் அவன் குபேரதீர்த்தத்தை தொலைவிலேயே கண்டான்.
பனிமலை முடிகள் சூழ்ந்த சிறிய தாழ்வரை அது. மஞ்சு உருகிய நீர் வந்து சேர்ந்து உருவான நீள்வட்ட வடிவான சுனை. நீலநிறத்தில் நீர் தேங்கி வான் தளும்பக் கிடந்தது. அதனருகே வெண்ணிறச் சேற்றுப்பரப்பில் ஒரே ஒரு காலடிமட்டும் சென்று திரும்பிய தடம் உலர்ந்து பளிங்குப்பாறையில் செதுக்கிய சிற்பம் போலாகி தெரிந்தது. அது சௌம்யரின் காலடி என அவன் உய்த்துக்கொண்டான்.
மண் உதிர்ந்த சரிவில் தொற்றி அந்தச் சுனையைநோக்கி இறங்கிச் சென்றான். இருமுறை பிடியுடன் மண் விரிசலிட்டு வர விழுந்து அடுத்த மண்மேட்டைப் பற்றிக்கொண்டு நின்றான். மூச்சிரைக்க இறங்கி அச்சுனை அருகே சென்று நின்றபோது அங்கே முன்னரே வந்திருப்பதாக ஓர் உணர்வுதான் ஏற்பட்டது. அந்த மண் வெண்சுண்ணத்தாலானது. மெல்லிய கந்தகம் கலந்த நீர் எடைகொண்டதாக இருந்தது. அதில் மீன்களோ பிற சிற்றுயிர்களோ இருக்கவில்லை.
அருகே சென்று குனிந்து நோக்கியபோது அச்சுனையின் ஆழம் அச்சுறுத்தியது. அடியிலி என்றே அவன் விழி மயங்கியது. அது ஒரு பெரும் குகையின் வாய். அக்குகை எங்கு செல்லக்கூடும்? மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது? மலைஏறிச்சென்றால் அது அங்குள்ள பனிமுடிகளில் ஒன்றில் சென்று முடியலாம். அல்லது விண் நோக்கி வாய்திறந்திருக்கலாம். வெறும் வெளியை அள்ளி அள்ளி குடித்துக்கொண்டிருக்கலாம்.
அவன் அதனருகே ஒரு பாறையில் அமர்ந்தான். மடியில் கைகளை வைத்து கண்களைத் திறந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தான். மேற்கே சரியத்தொடங்கிய சூரியக்கதிர் கசிந்து பரவி நீரொளி கொண்டிருந்தது வானம். முகில்கள் வெண்நுரைக் குவைகளாக அசைவற்று நின்றன. தொலைவில் மலைமுடிகள் சூடிய பனிப்பாளங்கள் மெல்ல அண்மை கொண்டு விழிகூசும்படி வந்து விரிந்தன. மயங்கிய விழிகளுக்கு முகில்களும் பனிமுடிகளும் ஒன்றெனக் கலந்து காட்சியளித்தன.
அவன் உள்ளம் மெல்ல ஏமாற்றம் கொள்ளத் தொடங்கியது. இது வெறுமொரு சுனைதான். அவன் அதுவரை கண்டிருந்த பல்நூறு சுனைகளில் ஒன்று மட்டுமே. இமயமலைகளுக்குள் அப்படி பல்லாயிரம் பனிச்சுனைகள் உள்ளன. அங்கே செல்வது அரிதென்பதனாலேயே அவை அரிதாகத் தோன்றுகின்றன. அரியவற்றை மேலும் அரிதாக்க எழுகின்றன தொல்கதைகள். விண்ணளாவும் நம்பிக்கைகள். ஆம். எழவேண்டியதுதான். மீள்வதே முறை. ஆனால் அவன் உள்ளம் கொண்டிருருந்த இனிய சோர்வு அவனை அங்கேயே அமரச்செய்தது.
அவன் சற்று துயில்கொண்டிருக்கவேண்டும். விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.
அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால் பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.
அவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை! இதுநாள் வரை எங்கிருந்தது இது?” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”
அவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.