கிராதம் - 18
[ 24 ]
அர்ஜுனன் மலைகள் இடப்பக்கம் நிரைவகுத்த பாதையில் தென்றிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் ஓடிவந்த முதிய அந்தணன் ஒருவன் உரத்த குரலில் “இளைய பாண்டவரே, தங்களை நாடி வந்தேன். தங்களுக்காகவே வந்தேன்” என்றான். அர்ஜுனன் நின்று “யார் நீங்கள்?” என்றான். மூச்சிரைக்க அணுகி “என் பெயர் ஜாதவேதன். வேதம் புரக்கும் தொல்குடியில் பிறந்தவன். என் ஒன்பதாவது மைந்தனை தென்றிசையரசனுக்கு பறிகொடுத்துவிட்டு வாழ்வை முடிக்கக் கிளம்பியவன்” என்றான். “நான் உங்கள் வில்லுக்கு அடைக்கலம். என்னை துறக்காதீர், பாண்டவரே.”
அர்ஜுனன் “உம்” என்றபடி காண்டீபத்தை கைமாற்றிக்கொண்டான். “இனி வாழ்வில்லை என மலையேறும்பொருட்டு இவ்வழி சென்றேன். இங்கு நீங்கள் இருப்பதை அவ்வூர் இளையோன் ஒருவன் கூவியதிலிருந்து அறிந்தேன். அங்கு சென்றபோது நீங்கள் ஊர் நீங்கிவிட்டீர்கள். உயிரைச் சுமந்து பின்னால் ஓடிவந்தேன்” என்று அவன் சொன்னான். “என் நல்லூழ், நான் விழைந்தவரை கண்டுவிட்டேன். தெய்வங்கள் என்னுடன் உள்ளன.”
சொல்லும்படி அர்ஜுனன் கையசைத்தான். அவன் “நான் வாழவேண்டுமா என்பது தங்கள் கையிலேயே உள்ளது, இளவரசே” என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்று அர்ஜுனன் கேட்டான். “சாண்டில்ய குலக்குழுவைச்சேர்ந்த சாமவைதிகன் நான். உத்தர கூர்ஜரத்தில் வறண்ட மலைநிலத்தில் பீதாக்ரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த எந்தை வேதமொன்றே முதலறம் எனக்கொண்டிருந்தார். நூறு மாணவர்கள் அவரிடம் அழியாச்சொல் கற்றனர். வைரங்களின் கூர்மையுடன் அவரில் வேதச்சொல் விளங்கியமையால் வஜ்ரகண்டன் என்று அழைக்கப்பட்டார். வேதமன்றி பிறதெய்வமறியாது வாழ்ந்தார்.”
நூறு பசுக்களைப் பேணி நெய்யும் பாலும் கொண்டு வேதச்சொல்லை எரியாக்கியவர் எந்தை. பெரும்பஞ்சம் எழுந்து நூறுபசுக்களும் பசித்து நோய்கொண்டு இறந்தன. எஞ்சியது ஒரு வெண்பசு. அதற்கு கற்றாழையை வெயிலில் வாட்டி உணவளித்தனர். மானுடர் கொட்டிக்கிழங்கை புளிச்செடி இலையுடன் சேர்த்து வேகச்செய்து ஒருநாள் விட்டு ஒருநாள் உண்டு உயிர்வாழ்ந்தனர். ஆயினும் பால்கொண்டு வேள்வி செய்வதை நிறுத்தவில்லை. வேள்விக்குளத்தில் துளி நெய்யேனும் விடாது எரியணைய ஒப்பவில்லை.
ஒருநாள் எந்தை வேள்விக்கு பால் கொள்ள பசுவை அணுகினார். அதன் அகிடில் ஐந்துபிடிப் பால் மட்டுமே இருந்தது. புல்லின்றி பசித்துத் தளர்ந்திருந்தது பசு. பாலில் ஊறிய கற்றாழை நச்சால் நோயுற்று விழுந்துவிட்டிருந்தது அதன் கன்று. தொழுவக்காவலன் கைகூப்பி “அந்தணரே, இத்தருணத்தில் கன்றுக்குப் பால்விடுவதே முறை என்று சொன்னான். கன்று பிழைக்காதென்பது உறுதி என்றாலும் அது இறுதியாக விழையும் பால்சுவையை அதற்களிக்கவேண்டியதே அறம்” என்றான்.
எந்தை ஐயமற்ற உள்ளம் கொண்டவர். வேதமறிந்தது முதல் ஒருநாளும் வேள்விச்செயலுக்கு பிந்தாதவர். அவ்வூரில் பிறிதெங்கும் பால் இல்லை என்னும் நிலையை அறிந்திருந்தார். வேள்விக்கு பசுவை பலிகொடுப்பதும் இருந்தது முன்பு. வேள்வியே முதன்மையானது, என் கடன் அதுவே என்று உரைத்து அப்பாலைக் கறந்து கொடுக்கச்சொல்லி பெற்றுக்கொண்டு சென்று தன் வேள்விச்செயலை நிறைவேற்றினார்.
கன்று விழிகள் வழிய தலைசாய்த்துக் கிடந்து மூச்சிழுத்தது. நாக்கு நீண்டு வெளியே சரிய வால் குழைந்து புரள வயிறு விம்மி விம்மி அமைய இறுதியாக ‘அன்னையே’ என்று அழைத்து உயிர்விட்டது. கன்றின் இறப்பைக் கண்டு அன்னை பெருமூச்சு விட்டபடி தலை தாழ்த்தி நின்றது. அதன் கண் பழுத்து நீர் வழிந்தது. உணவும் நீரும் மறுத்து மூன்றுநாள் நின்று நான்காம் நாள் விழுந்து மூச்சிளைத்து விழிவறண்டு இறந்தது. இறப்பதற்கு முந்தைய கணம் அதன் அகிடுகளிலிருந்து பால் சுரந்து வழிந்தது. அது செங்குருதித்துளியாகி சொட்டி நின்று உறைந்தது.
அன்று வேள்வியில் கையில் அனல்கரண்டியுடன் இருந்த எந்தையின் முன் அழலுக்குள் இருந்து எமன் எழுந்து வந்தான். கரிய உடலும் நீலமணிவிழிகளும் கொண்டிருந்த அவனை அறிந்து எந்தை கைகூப்பினார். “வைதிகனே, அன்பில்லாச் சடங்கு என்பது தெய்வங்களுக்கு எதிரானது என்று நீ உணர்ந்திருக்கவில்லை. மைந்தர்துயர் என்ன என்று நீயும் உன் குடியினரும் அறிவீர்கள்” என்று தீச்சொல்லிட்டு அமைந்தான். எந்தை அஞ்சி எழுந்து ஓடிவந்து தன் ஏழு மைந்தரை அள்ளி மார்போடணைத்தபடி கதறி அழுதார்.
எந்தை தன் வேததெய்வங்களை அழைத்து கூவினார். அவர் முன் காற்றில் எழுந்த அனலோன் “நீ ஆற்றியது இழிசெயலே. அச்செயலால் இறப்பிற்கிறைவனின் சொல்லுக்கு பொருள் அளித்தாய். நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றான். “நான் என் வேள்விச்செயலில் ஒரு பிழையும் ஆற்றவில்லை” என்றார் எந்தை. “பிழையற்றது உயிரற்றது. உயிர்கள் உகந்தபடி பிழைகொள்ளவே உருக்கொண்டு வந்துள்ளன. அளியின்பொருட்டும் அறத்தின்பொருட்டும் வளையாதவன் மானுடன் அல்ல” என்றான் அனலோன்.
எந்தையின் ஏழு மைந்தரில் அறுவரும் அவ்வருடமே நோய்கொண்டும் நாகம் கடித்தும் மலையிலிருந்து விழுந்தும் யானையால் முட்டப்பட்டும் உயிரிழந்தனர். நான் ஒருவனே எஞ்சினேன். ஒவ்வொரு இறப்புக்கும் எந்தை துயர் இரட்டிப்பாகி நைந்து உளமுடைந்து பித்தனாகி கற்ற சொல்லனைத்தும் மறந்து மைந்தர் பெயரை மட்டும் சொல்லிச் சொல்லி கண்ணீர்விட்டபடி இறந்தார். அவருக்கு நீர்க்கடன் செய்தபின் மைந்தர்துயரை அஞ்சி எனக்கு மணவுறவே இல்லை என்று நான் முடிவுசெய்தேன்.
ஏழாண்டுகாலம் தனியனாக வேள்விச்செயலாற்றி வாழ்ந்தேன். ஒருமுறை நான் அரசனொருவனுக்காக மைந்தர்விழைவு வேள்வி இயற்ற அரணிக்கட்டையை உரசியபோது நெருப்பெழவில்லை. பன்னிரண்டு முறையும் நெருப்பெழாமையால் என்னை பழியன் என்று எழுந்து விலகும்படி ஆணையிட்டார் வேள்வித்தலைவர். நான் பழிநிகர் செய்து மீளும்படி என் குலம் கூறியது.
நிமித்திகரை அழைத்து குறிச்சொல் கேட்டேன். எந்தையர் நிரை என் மேல் முனிந்திருப்பதைச் சொன்னார்கள். அவர்களுக்கு என் வாழ்க்கைக்குப்பின் நீரும் அன்னமும் அளிக்கப்படாதென அவர்கள் அஞ்சுவதாக அறிந்தேன். மைந்தரின் முதற்கடன் நீத்தாருக்கே. அதைச் செய்யாதவன் தெய்வம் விருந்து உறவு தான் என பிற நால்வருக்கும் நன்னயம் செய்ய ஒண்ணாதான் என்றனர் நிமித்திகர். நான் கைகூப்பி தந்தையரே, உங்களுக்காக அப்பெருந்துயரை நான் ஏற்கிறேன் என்று சொன்னேன்.
அதன்பின் நான் மணம்கொண்டேன். கௌண்டின்ய குலக்குழுவின் மகளாகிய என் மனைவியிடம் என் குலத்தின் மீதுள்ள தீச்சொல்லை நான் சொல்லவில்லை. முதல் மைந்தன் பொற்துளி என வந்து என் கைகளில் விழுந்தபோது கடுந்துயரில் என் நெஞ்சு குழைந்தது. என் விழிநீர் அவன் மேல் விழுந்தது. என்ன என்ன என்று என் மனைவி கேட்டாள். உவகை என்று நான் சொன்னேன். ஆம் ஆம் என அவள் கண்ணீர்விட்டாள். அழுதபடி நான் பேற்றறை விட்டு வெளியே ஓடினேன்.
பன்னிரண்டாம் நாளில் பால் விக்கி என் மகன் இறந்தான். கன்றிழந்த பசுவின் துயரை அன்று கண்டேன். என் மனைவியின் முலைகளிலிருந்து பால் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. மண்ணில் அவள் அதை பீய்ச்சிவிட்டபோது உடன் விழித்துளிகளும் உதிர்ந்தன. மண்ணில் நூறு வாய்கள் திறந்து புதைக்கப்பட்ட மைந்தர்கள் அந்த அமுதை உண்பதாகத் தோன்றியது. பித்துப்பிடித்தவன்போல நான் அலைந்தேன். தெய்வங்கள் முன் சென்று நின்று நெஞ்சில் அறைந்து அழுதேன். விழுந்து தலையால் மண்ணில் அடித்து மன்றாடினேன்.
பிறிதொரு மைந்தன் தேவையில்லை என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் மெலிந்து உருக்குலைந்த என் மனைவியைக் கண்டதும் இன்னொரு குழவியால் மட்டுமே அவளை மீட்கமுடியும் என்று உணர்ந்தேன். எனக்கும் அந்த விழைவு உள்ளில் எழுந்து வளர்ந்தது. முதற்குழவியே மாற்றுருக்கொண்டு மீண்டுவரும் என நினைத்தேன். மெல்ல அவ்வெண்ணம் வலுப்பெற்றது. அது மீண்டால் போதும் அனைத்தையும் மறந்துவிடுவேன் என எண்ணினேன். போதிய மைந்தர்துயரை அடைந்துவிட்டேன். என் தெய்வங்கள் என்னை கைவிடமாட்டார்கள்.
அவள் மீண்டும் கருவுற்றாள். ஒவ்வொருநாளும் உவகை வளர்ந்தது. அதன் நிழல் என பலமடங்கு நீளத்துடன் அச்சம் உடன் எழுந்தது. அந்த அலைக்கழிப்பு முன்பிருந்த பெருந்துயரைவிட மும்மடங்கு பெரிய கொடுமை. என் மனைவி மெல்ல மலர்ந்து உவகையில் எழுந்து கொழுந்துவிட்டு ஆடக்கண்டேன். அவளைப் பார்க்கையில் என் உள்ளம் அழிந்தது. பெரும்பிழை ஆற்றியிருக்கிறேன் என்று எண்ணி எண்ணி கலுழ்ந்தேன்.
மைந்தன் அதே முகத்துடன் அதே துடிப்புடன் பிறந்தான். அவனை கையால் தொடவும் என்னால் முடியவில்லை. “நம் மைந்தன். நம்மை விட்டுச்சென்றவன். நம் பிழைபொறுத்து மீண்டு வந்துவிட்டான்” என்று என் மனைவி கண்ணீருடன் கூவினாள். நான் அழுதபடியே சென்று என் குடித்தெய்வத்தின் காலடியில் படுத்துவிட்டேன்.
என் மனைவி பித்துகொண்டவளாக ஆனாள். குழவியை கையிலிருந்து இறக்கவே மறுத்தாள். “கையிலேயே வைத்திருக்கக்கூடாது, அன்னையே. குழந்தை உடல் தேம்பிப்போய்விடும்” என்றாள் மருத்துவச்சி. கீழே வைத்தால் எவரோ குழவியை கொண்டுசென்றுவிடுவார்கள் என்று அவள் அஞ்சியதுபோல் தோன்றியது. தன் உடலுடன் இணைந்த ஒன்றாகவே அவள் அதைச் சூடியிருந்தாள்.
மூன்றாம் மாதம் ஒரு காய்ச்சலில் குழந்தை மறைந்தது. தொட்டிலில் குழந்தையைத் துயிலவிட்டு அருகே அவள் துயின்றாள். இரவில் ஒரு கரிய குழல் பறக்கும் பெண்மணி உள்ளே வந்து குழந்தையை எடுப்பதுபோல கனவுகண்டாள். அவளை நோக்கி அலறியபடி கைநீட்டி எழுந்தபோது அவள் விழிகள் அனலென எரியக்கண்டாள். எழுந்தமர்ந்து குழந்தையை நோக்கியபோது அது மேலிருந்து விழுந்ததுபோல கிடந்தது. எடுத்து நோக்கியபோது அதன் தலை முன்பக்கம் சரிந்தது.
என் மனைவி பல மாதங்கள் எங்கிருக்கிறாள் என்றே தெரியாமலிருந்தாள். நான் என் வீட்டிலிருந்த அத்தனை தெய்வங்களையும் உடைத்து வீசினேன். ஆலயக்கருவறைகளில் வெறித்து அமர்ந்திருந்த வீண்சிலைகளை நோக்கி கற்களை எடுத்து எறிந்தேன். என்னை பித்தன் என எண்ணி பல இடங்களில் பிடித்து கட்டிவைத்து அடித்தனர்.
மீண்டும் சில மாதங்களில் மைந்தனுக்கான விழைவு கூடியது. வெளியூர் நிமித்திகர் ஒருவர் என் முகம்நோக்கி குறித்து நான் மைந்தரைப் பெற்றாகவேண்டும் என்றார். மறுமுறை நீண்ட வாழ்வுள்ள மைந்தன் பிறப்பான் என்று நம்பிக்கையும் அளித்தார். அவர் சொன்ன வேள்விச்செயல்களை இயற்றினேன். அவர் அளித்த நுண்சொல்லை பன்னிரண்டு லட்சம் முறை உருவிட்டேன்.
ஆனால் என் மனைவி மைந்தரைப் பெற மறுத்துவிட்டாள். “இனி இல்லை, இனி பெற்று மறலிக்கு கொடுப்பதில்லை. பிறந்து உலகறியாது இறக்கும் மைந்தரின் பழியெல்லாம் என் விழைவினால்தான்” என்றாள். அவளிடம் பேசி மன்றாடினேன். அழுது புலம்பினேன். அவள் இளகவில்லை. “இனியில்லை… இனியில்லை” என்றே சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவளுக்குள் இருந்து கனவொன்று முளைத்தது. அதில் வந்த இளமைந்தன் தவழ்ந்து ஒரு படியிலிருந்து கீழிறங்கத் தவித்தான். விழித்துக்கொண்டு அவள் சிரிப்பும் அழுகையுமாக என்னை நோக்கி ஓடிவந்தாள். “நம் மைந்தன்… நான் இப்போது கண்டேன். அவன் மண்ணுக்கு கிளம்பிவிட்டான். இறக்கிவிடுவதொன்றே நம் பணி. அது நம் கடன்” என்றாள்.
அம்மைந்தன் பிறந்து ஒரு வயதுவரை வாழ்ந்தான். கண்தெளிந்து முகம்நோக்கி சிரித்தான். வாய்வழிய அம்மா என்று குதலைச்சொல் சொன்னான். எப்போதும் வாய்குவித்து பாலருந்த விழைந்தான். பசி கண்டதுமே கைகளை அறைந்து முட்டிசுருட்டி அசைத்து முகம் சிவந்து கதறி அழுதான். அவன் பால்குடிக்கையில் அவ்வொலி கேட்டு பதைப்புடன் அமர்ந்திருப்பேன். உலகை உண்ணுகிறான். அப்பெரும்பசி வாழ்வாசை அல்லவா? அந்த விழைவு அவனை வாழச்செய்யாதா?
அவன் கவிழ்ந்தான். கையால் தரையை தட்டியபடி தவழத்துடித்தான். காலம் முந்தியே தவழலானான். ஒரு கையை ஊன்றி வாயில் எச்சில் வழிந்து மார்பை நனைக்க ஊ ஊ ஊ என ஓசையிட்டபடி அரைமணி ஒலிக்க தண்டை இழுபட்டோசையிட இல்லத்தை சுற்றிவந்தான். காகத்தை கைசுட்டி கா என்றான். பூனையைச் சுட்டி ஞா என்றான். என் காலடியோசை கேட்டதுமே கைவீசி ந்தை ந்தை என்று குதித்தான்.
ஒவ்வொரு கணமும் அவன் மேல் ஒளிவிழியும் உளவிழியும் தொடுத்து உடனிருந்தாள் அவன் அன்னை. ஒருநாள் அடுப்பிலிட்ட அன்னத்தை எடுக்க அவள் அடுமனைக்குள் நுழைந்த கணம் அவன் எம்பி குடிநீர் பிடித்து வைத்திருந்த கலத்திற்குள் குப்புற விழுந்தான். அவள் திரும்பி வந்தபோது மைந்தனைக் காணவில்லை. இயல்பாக எழுந்த அச்சத்தால் அவள் வெளியே ஓடிச்சென்று முற்றத்திலும் சாலையிலும் தேடினாள். திரும்பி வந்து உள்ளே நுழைந்தபோதுதான் கலத்திற்குமேல் இரு கால்களைக் கண்டாள்.
மிகச் சிறிய கலம் அது. அதில் ஒரு குழந்தை விழுந்து இறந்தது என்றால் எவரும் நம்பமுடியாது. அக்கலம் சற்று சரிந்திருந்தால் அவன் கால்களை மேலும் உதைத்திருந்தால் வாழ்ந்திருப்பான். நான் அவனுடைய விரைத்த உடலையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். மாற்றமில்லா நெறி என இப்புடவியைச் சூழ்ந்திருப்பது மறலியின் சரடு ஒன்றே என்று அன்று அறிந்தேன்.
விழிநீர் ஓய்ந்து என் மனைவி சொல்லெடுக்கத் தொடங்கியபோது அவளிடம் சொன்னேன், என் குடிமேல் விழுந்த தீச்சொல் அது என. “இனி நமக்கு மைந்தர் தேவையில்லை. என்னுடன் எழுக! காடுசேர்ந்து தவம்செய்து இப்பிறவியை நிறைவுசெய்வோம்” என்றேன். “என் பழிக்கு உன் மடியை இழுக்கடையச்செய்தவன் நான். என்னை நீ என்ன முனிந்தாலும் தகும்” என்று அழுதேன்.
நான் எண்ணியதற்கு மாறாக அவள் கடும்சினத்துடன் கண்களில் விழிநீர் எரிய எழுந்தாள். “அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் கருவறைகொண்டு பிறந்தவள் என்பதனாலேயே பெற்றுக்குவிக்க வேண்டியவள் நான். அனைத்தையும் மறலி கொண்டுசென்றாலும் சரி என் வயிறு ஒழியும்வரை பெற்றிடுவேன்” என்றாள்.
“என்ன சொல்கிறாய் நீ? சித்தம் கலங்கிவிட்டதா உனக்கு?” என்றேன். “நூறு மைந்தரைப் பெற்று இங்கு பரப்புகிறேன். தின்று நிறையட்டும் தென்றிசைத்தெய்வம். என் குருதி வற்றி சேறாகட்டும். உடல் மட்கி அழியட்டும். நான் இருக்கும்வரை பெற்றுக்கொண்டுதான் இருப்பேன்” என்று கூவினாள். அவளை எதிர்கொண்டு நோக்கவே என்னால் இயலவில்லை. மானுடரில் வாழும் தெய்வம் மானுடத்தைக் கிழித்து வெளிவந்து நின்றாடும் சில தருணங்களுண்டு என அப்போது அறிந்தேன்.
அதன்பின் அவள் பெற்றுக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் நான் எண்ணி எண்ணி ஏங்கினேன். ஒவ்வொரு இறப்பின்போதும் உளமுடைந்து அழிந்தேன். மீண்டும் நம்பிக்கை முளைத்தெழ மைந்தனுக்காக காத்திருந்தேன். அந்த ஏக்கத்திலிருந்து என்னால் விடுபடவே முடியாதென்று அறிந்து அதன்பொருட்டே உளமுருகி அழுதேன்.
ஆனால் அவள் அவ்வுணர்ச்சிகளை கடந்துவிட்டிருந்தாள். அவள் கண்களை நோக்கும் எவரும் விழிதாழ்த்தி அஞ்சி விலகிவிடுவர். அவள் சொல்லெடுப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் குரலையே நான் மறந்தேன். வெறியாட்டெழுந்த தெய்வமென உடல்மீறிய ஆற்றலுடன் இல்லப்பணிகளை ஆற்றுவாள். எஞ்சியபொழுதில் தொடுவான் நோக்கியபடி ஊன்சிலை என அமர்ந்திருப்பாள்.
அவள் கருவறை ஆணையிடும் நாளில் இரவில் பசித்த ஓநாய் இரைதேடிவருவதுபோல் என்னிடம் கைகளையும் கால்களையும் ஊன்றி புரண்டு வருவாள். என் உடலை ஆட்கொண்டு கருவைப்பெற்று மீள்வாள். அப்போதும் பேசுவதில்லை. ஆணையிடும் உறுமல்கள். அடைந்தபின் மீண்டுமொரு உறுமல். என் உயிர் உண்டு செல்லும் கொலைத்தெய்வம் போலிருந்தாள்.
ஒவ்வொரு முறை மைந்தன் எழுகையிலும் பேராவலுடன் கண்ணீர் வார சென்று கையிலெடுப்பேன். அருகே அவள் வெறித்த பேய்விழிப் பார்வையுடன் படுத்திருப்பாள். “நம் மைந்தன்… இவன் வாழ்வான்… இவன் வாழ்வான். தெய்வங்கள் இம்முறை கனியும்” என்பேன். சொல் அவளைச் சென்று சேர்வதே இல்லை. குழந்தையை கையிலெடுப்பதில்லை. கொஞ்சி முத்தமிடுவதுமில்லை. ஆனால் முலைப்பால் பெருகிக்கொண்டிருந்தது. குழந்தையின் வாய் நிறைத்து முகம் நனைத்து சேக்கைப்பரப்பில் நனைந்து பரவும் ஊற்றுப்பெருக்கு அது.
குழவியர் இறக்கையிலும் அவள் அதே வெறிவிழிகளுடன் அப்பால் இருந்தாள். ஊன் துண்டென குளிர்ந்துகிடக்கும் மகவை தாதியர் கொண்டுசெல்கையில் விழிதிருப்பி நோக்குவதுமில்லை. ஆனால் அன்றே முலை வறண்டுவிடும். அடுத்த கருநிலவுநாளிலேயே அவள் பிறப்பறை அழைப்பு கொள்ளும்.
எட்டாவது மைந்தன் இறந்தபோது நான் உடலோய்ந்திருந்தேன். நடைப்பிணமென்று வேள்வித்தொழிலுக்குச் சென்று மீண்டேன். பரத்வாஜ குருநிலையில் பெருவேள்வி ஒன்றுக்கு சென்றிருந்தேன். வேள்விக்குப்பின் அன்னம் பகிர்கையில் எனக்கும் அளித்த பரத்வாஜர் “நன்மைந்தர் பெற்று நிறைவு கொள்வதற்காக!” என்றார். நான் கையை இழுத்துக்கொண்டேன். “என்ன?” என்று அவர் விழிசுருக்கி கேட்டார். “தங்கள் சொல் பொய்க்கலாகாது. ஊழின்நெறிப்படி என் மைந்தர் வாழ்வதில்லை” என்றேன்.
மறுசொல் கேட்காமல் அவர் சொன்னார் “நான் உளம்நிறைந்து சொல்லும் வாழ்த்து. வேதம் ஓதிக் கனிந்த நாவால் உரைக்கப்படுவது. வேதம் மெய்யே. உண்ணுக இந்த அவியுணவை! உன் மைந்தன் பிறந்து நூறாண்டு வாழ்வான்.” நான் அதை வாங்கி உண்டேன். அதன்பின்னரே என் கதையை சொன்னேன். “ஆம், ஆவின் பழி பெரும்பழியே. ஆனால் தன்னலம் மறந்து வேதமோதிய அந்தணன் மூன்று தெய்வங்களுக்கும் ஆணையிட முடியும். இது என் ஆணை” என்று அவர் சொன்னார்.
அம்முறை என் மைந்தன் வாழ்வான் என்றே எண்ணினேன். மைந்தர் பிறந்து என் கையில் நெளிந்தபோதெல்லாம் அவ்வுயிர்நெளிவை என் உடல் அச்சத்துடன் ஏற்று அகவிதிர்ப்பு கொள்வதுண்டு. அம்முறை அவன் அசைவுகள் என்னில் உவகைப்பெருக்கை நிறைத்தன. எந்தையரின் உடலில் ஓடிய உயிர். என் உடலாகி நின்றிருப்பது. என்னிலிருந்து எரிந்து இதில் பற்றிக்கொண்டுவிட்டிருக்கிறது. இது காலத்தைக் கடந்துசெல்லும். நான் எண்ணியிருக்கவும் இயலாத எதிர்காலத்தில் என் முகம்கொண்ட மைந்தரில் எண்ணமென உணர்வென மெய்மையென நின்றிருக்கும்.
அன்று நான் அடைந்த உளநெகிழ்வே என் வாழ்வின் உச்சம். கண்ணீர்வழிந்து குழவிமேல் சொட்டிக்கொண்டே இருந்தது. விம்மி விம்மி அழுதபடி குழவியின் செந்நிறக்கால்களில் முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். அப்பால் என் மனைவி சிலைச்செதுக்கு போன்ற விழிகளுடன் என்னை நோக்கிக்கிடந்தாள். அவள் முலைகளிலிருந்து வெண்ணிறநூல்கள் போல முலைப்பால் ஊறி பீரிட்டு வளைந்து சொட்டியது. அதன் இனிய ஊன்மணம் அப்பேற்றறையை நிறைத்திருந்தது.
ஏழு மாதம் அம்மைந்தனை நெஞ்சிலிட்டு வளர்த்தேன். அச்சமோ பதற்றமோ இல்லாமல் ஒரு மைந்தனை கையிலெடுப்பதன் கொண்டாட்டத்தில் நாள் என குடியென குலமென ஊர் என ஏதுமில்லாதிருந்தேன். அன்றுவரை நான் மைந்தரை தொட்டதே இல்லையென்று அப்போதுதான் அறிந்தேன். நான் முன்பு அறிந்ததெல்லாம் என் அச்சத்தை மட்டுமே. அச்சத்தால் அவனை என் உடலின் உறுப்பென்றே உணர்ந்தேன். அச்சமின்மையால் அவன் பிறிதொரு உடலென உயிரென ஆத்மா என இருந்தான். கையளவே இருந்த சின்னஞ்சிறு உடலுக்குள் ஒரு முழுமானுடனை உணர்வதென்பதே குழந்தையை கொஞ்சியறிதல்.
ஏழாம் மாதம் அவனுக்கு காய்ச்சல் ஒன்று வந்தது. முன்பெல்லாம் எளிய நீர்க்கோள் என்றாலும் பதறி மருத்துவரிடம் செல்வேன். இரவுபகல் விழித்து அருகமர்ந்திருப்பேன். அவன் வாழ்வான் என்பதில் ஐயமே தோன்றவில்லை. தேனில் மருந்து கரைத்து நாவில் கொடுத்து அவன் சற்று களைத்து துயில்கொண்டபோது நானும் விழியயர்ந்தேன்.
ஓர் எருமையின் முக்காரி கேட்டு கண்விழித்தேன். அறைக்குள் ஒருவன் நின்றிருக்கக் கண்டேன். கரியபேருருவம். கையிலொரு வடச்சுருள். அவன் என் மைந்தனை குனிந்து நோக்கிக்கொண்டிருந்தான். நான் வெறுமனே எவருடையதோ நிகழ்வு என நோக்கி படுத்திருந்தேன். அவன் வெளியே சென்று மறைந்தான். நாய் ஒன்றின் ஊளை எழுந்தது. தொடர்ந்து நாய்கள் ஊளையிட்டன. பறவைகள் கலைந்து பறந்தன.
நான் எழுந்து கைகால்கள் உதறித்தவிக்க என் மைந்தனை நோக்கி ஓடினேன். அவன் முகம் துயில்வதுபோலத்தான் இருந்தது, ஆனால் உயிரில்லை என நோக்கிலேயே தெரிந்தது. நான் உயிரற்ற குழந்தைகளைக் கண்டு பழகிவிட்டிருந்தேன். என் மேல் நோக்கை உணர்ந்து திரும்பி மனைவியை நோக்கினேன். அவள் என் மேல் விழிநட்டுக் கிடந்தாள்.
சிலகணங்கள் எங்கிருந்தேன் என்ன நிகழ்ந்ததென்று என்னால் சொல்லமுடியவில்லை. நினைவறிந்தபோது தெருவிலிறங்கி ஓடிக்கொண்டிருந்தேன். பரத்வாஜ குருநிலையில் சென்று நின்றேன். மூச்சிரைக்க நெஞ்சில் அறைந்தபடி கதறினேன். “ஆசிரியரே, வேதம் பிழைத்தது. என் மைந்தனை மறன் கொண்டுசென்றான்…”
பரத்வாஜர் வெளியே வந்து என்னை நோக்கினார். அழுதபடி அவர் கால்களில் சென்று விழுந்தேன். “என் மகன் மறைந்தான். வேதம் அழிந்தது. இனி நான் பற்ற கொழுகொம்பு இங்கில்லை, ஆசிரியரே” என்றேன். அவர் முகம் உறுதிகொண்டது. “அவன் இறக்கலாகாது. இறந்தால் வேதம் அழிந்தது என்றே பொருள். செல், அவனை மறனுலகிலிருந்து மீட்டுக்கொண்டுவரும் வீரன் ஒருவனை தேடிக் கண்டடை. நாற்பத்தொரு நாட்கள். அவன் உடலை நான் பேணுகிறேன். ஒரு காலச்சுழி அது. அதற்குள் உயிர் மீளமுடியும் என்கின்றன நூல்கள். உன் மைந்தனை வேதம் மீட்டுக்கொண்டுவரும்.”
“அவ்வண்ணம் கொண்டுவரவில்லை என்றால் நான் நாவில் சூடிய வேதம் பொய் என்றே பொருள். அதன் பின் நான் உயிர்வாழமாட்டேன். நாற்பத்தொன்றாம் நாள் நான் சிதைமேல் அமர்வேன். அறிக தெய்வங்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். நான் எழுந்து கண்ணீரைத் துடைத்தபின் அவர் முகத்தை நோக்கினேன். அதிலிருந்த உறுதி எனக்கு நம்பிக்கையளித்தது. அங்கிருந்து இறங்கி ஓடினேன்.
காலனை வெல்பவன் என்று நானறிந்தவர் ஒருவரே. அவரை தேடிச் சென்றேன். நல்லூழாக என் இல்லத்தருகே சப்தஃபலமென்னும் யாதவச்சிற்றூரில்தான் அவர் வாழ்கிறார் என்று அறிந்தேன். அவரது அணுக்கர்கள் நான் அவரைப் பார்க்க ஒப்பவில்லை. அவர் கோட்டைவாயிலில் மூன்றுநாள் நீரும் உணவுமின்றி அமர்ந்தேன். என்னை உள்ளே அழைத்துச்சென்றனர்.
நான் அரண்மனைக்கூடம் ஒன்றுக்கு அழைத்துச்செல்லப்படுவேன் என்றே எண்ணினேன். என்னை புழக்கடையில் இருந்த மரத்தடி ஒன்றுக்கு கொண்டுசென்றனர். அங்கே புழுதியும் சருகும் குவித்திட்டு அதன்மேல் அமர்ந்திருந்தவர் இளைய யாதவர் என்று முதலில் என்னால் உணரக்கூடவில்லை. உணர்ந்ததும் திகைத்து கைகூப்பி நின்றுவிட்டேன். சடைமுடியும் மண்படிந்த மேனியும் வெறிவிழிகளும் கொண்டு சிவப்பித்தரெனத் தெரிந்தார்.
“என்ன?” என்று பன்றி உறுமும் ஒலியில் அவர் கேட்டார். நான் சொல்லத்தொடங்கும்போதே கைநீட்டி “அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என் மைந்தனை உயிர்ப்பிக்கவேண்டும். தாங்கள் தென்றிசைத்தலைவன் நகருக்குச் சென்று அவனை மீட்டுக் கொண்டுவரவேண்டும்” என்றேன். முகம் சுளித்து வெறுப்புடன் “நீர் வேதம் கற்றவர்தானே? வீண்கதை கேட்டு மயங்கிய மூடரைப்போல் பேசுகிறீர். மாண்டவர் மீள்வதா? எங்காவது முன்பு கேட்டிருக்கிறீரா?” என்று சீறினார்.
“ஆம், அரிதே அது. ஆனால் தன்னலமற்ற மாவீரர் ஊழையும் மறலியையும் வெல்லலாகும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றேன். “அது சூதர்களின் கதை. இறந்தவர் மீளமுடியாது. மீளலாகாது. சென்று உன் மைந்தன் உடலை சிதையேற்று. நீராடி நினைப்பொழிந்து மறுசெயல் ஆற்று” என்றார். “என் குடிமேல் விழுந்த தீச்சொல் இது, யாதவரே” என்று சொன்னபோது கண்கலங்கி குரல் உடைய அழுதுவிட்டேன்
“அவ்வண்ணமென்றால் பெற்றுப் பெற்று மறலிக்கு ஊட்டு. காட்டுப்பன்றிகள் அதைத்தான் செய்கின்றன. செல்!” என்றபடி அவர் உரக்க நகைத்தார். “செத்தவர்க்காக அழுகிறாயா? வாழ்வதற்காக அழுகிறாயா? ஊருக்கு முன் உன் அழுகையைக் காட்டி என்ன பயன்? நீயும் செத்து எமனுக்குக் காட்டு அக்கண்ணீரை.” மீண்டும் அந்த வெறிநகைப்பு. உடனே சினமெழ “செல்… இங்கு உன் இழிமுகத்துடன் நின்றால் உன் தலையை அடித்து உடைப்பேன். அடேய், இவனை இழுத்து வெளியே வீசு…” என்றார்.
ஏவலன் அருகே வந்து செல்லும்படி விழிகாட்டினான். “இவன் இடையாடையைக் களைந்து இழுத்துச்செல். ஒன்பது முளைஎழுந்த வேரை ஊரார் காணட்டும்…” தொடையில் அறைந்து நகைத்த அச்சிறுமகனை நோக்கி தீச்சொல்லிட எழுந்த என் நாவை அடக்கினேன். அவரில் அமர்ந்து அச்சொல்லிடும் தெய்வமேதென்று அறிந்திலேன் என சொல்லிக்கொண்டேன்.
அங்கிருந்து கிளம்பும்போது இனி புவியில் எனக்கென படைக்கலமேந்தும் வீரன் என எவருமில்லை என்று எண்ணிக்கொண்டேன். தளர்ந்த காலடிகளுடன் வெளியே நடந்து தெருவுக்கு வந்தேன். மண்சாலையில் அச்சிற்றூரை விட்டு நீங்கினேன். அப்போது சாலையோரத்து வயலொன்றில் புல்லறுத்துக்கொண்டிருந்த முதுமகள் ஒருத்தி நிமிர்ந்து என்னை நோக்கினாள்.
என் அழுகையை அவள் கண்டாள். “ஏன் அழுகிறாய்?” என்றாள். “நான் அடைக்கலமென்று யாதவப் பேரரசரை தேடி வந்தவன். அவரோ புகைசூழ் சுடரென இருண்டிருக்கிறார், அன்னையே” என்றேன். “அவர் இல்லையென்றால் அடுத்துச் செல்லவேண்டிய இடம் பாண்டவக் குடியின் இளையவன் அல்லவா? அங்கு செல்க! அவன் வில் உனக்குத் துணைவரும்” என்றாள்.
“அச்சொற்களை நான் நம்பினேன். ஏன் என்று அறியேன், அது தெய்வக்குரலென்றே என் நெஞ்சு சொன்னது. அங்கிருந்து கிளம்பினேன். உங்களை எங்கு தேடிக் கண்டடைவதென்று அறியாமல் தவித்து காடுகளில் அலைந்து இங்கு வந்தேன். ஆணையிட்ட அந்த தெய்வமே உங்களை என் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதென்று உணர்கிறேன்” என்றான் அந்தணன். அர்ஜுனன் “ஆம்” என்றான்.