கல்பொருசிறுநுரை - 85

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 4

மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு இமையமலையிலிருந்து தரையிறங்கும் இடத்தில் அமைந்தது தன் சிற்றூர் என்று சொன்னார். மாகத குலத்தவர். என்னைப்போலவே இக்கதைகளில் தானும் சிக்கிக்கொண்டவர். கதையில் படிந்து, கதையென்று தானுமாகி, அதன் கருவி என்று தன்னை அளித்து, அதனால் இயக்கப்படுபவராக அலைந்துகொண்டிருந்தவர்.

தண்டகாரண்யத்தில் நீரூற்று ஒன்றின் அருகே எழுந்துநின்றிருந்த ஆலமரத்தின் அடியில் அந்தியில் சருகுகூட்டி தீயிட்டு அமர்ந்திருந்த அவர் அருகே நானும் அமர்ந்திருந்தேன். குளிர் சுற்றிக்கொண்டிருந்தது, அணுகவில்லை. அனலுக்கு விழிப்புகொண்ட பறவைகள் தலைக்குமேல் ஓசையிட்டன. சௌம்யர் அப்பத்திற்கான மாவு பிசைந்துகொண்டிருந்தார். நான் அவரிடம் “சௌம்யரே, நீங்கள் இளைய யாதவரை பார்த்தீரா?” என்று கேட்டேன். “ஆம், பார்த்தேன். அங்கிருந்துதான் கிளம்பி வந்துகொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

“அவரை பார்த்ததில் எதை உணர்ந்தீர்?” என்று நான் கேட்டேன். “இன்னும் ஏழு நாட்களில் அவர் விண்புகுவார். மாகதர்களின் காலக்கணக்குகள் பிறழ்வதில்லை” என்றார். “எவ்வண்ணம் நீங்கள் இந்நிமித்தம் உரைக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அவர் “முன்னோர்களின் வழி, சொல்கொண்டு உளத்துடன் விளையாடுவது, கணக்கு கொண்டு சொல்லுடன் விளையாடுவது” என்றார். “கணக்கை கைதொட்டு அறியவே களம். தொடும் கைகளினூடாக உள்ளம் கடந்த ஆழம் உலகை அறிகிறது.”

வடபுலத்து மாகதர்களுக்கு அவர்களுக்குரிய நிமித்தமுறைகள் உள்ளன. பன்னிரு இலைகளைப் பறித்து மண்ணில் வைத்து ஒன்றில் கையூன்றி ஊழ்கத்திலாழ்ந்து இலைகளை தொட்டுத் தொட்டு கை செலுத்தி விழி திறக்கையில் அமைந்திருக்கும் கையிலிருந்து அந்தக் கணிப்பை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அது கணிப்பல்ல, அவர்கள் உள்ளத்திலிருந்து எழும் ஓர் கனவுதான். அக்கனவை மீட்டவே அப்பன்னிரு இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். பாலைநிலமெனில் பன்னிரு கற்களை, இல்லங்களுக்குள் எனில் பன்னிரு பொருட்களை.

பன்னிரண்டு என்று என் உள்ளத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். பன்னிரு களங்களை பன்னிரு முறைகளில் தொட்டு இணைகையில் உருவாகும் முடிவின்மையே ஊழின் களம். ஆனால் அது அறுதியாக பன்னிரண்டுக்கு கட்டுப்பட்டது என்பதனால் கைதொட்டுவிடவும் இயல்வது. “எவ்வண்ணமும் பகுத்துக்கொள்ளலாம். பன்னிரண்டு என்பது தொல்மூதாதையரின் எண், அவ்வளவுதான்” என்று அவர் சொன்னார்.

“ஆகவே எங்கள் கணக்குகளின்படி பன்னிரண்டு வகையான கதைகளே இப்புவியில் உள்ளன. பன்னிரண்டு வகையான தத்துவங்கள், பன்னிரண்டு வகையான உணர்ச்சிகள், பன்னிரண்டு வகையான மெய்மைகள். கதைகளினூடாக கதைகளைத் தொட்டு நான் செல்கிறேன். அறிந்த கதைகளிலிருந்து அறியாக் கதை எவ்வாறு எழ முடியும் என்று உணர்கிறேன். இங்கு நிகழ்ந்தவை அனைத்தும் கதையென்றால் நிகழ்பவையும் கதையே. இன்றுள்ளவை நேற்றைய நிகழ்வுகள். இன்றைய நிகழ்வுகள் நாளைய கதைகள். நாளைய நிகழ்வுகள் இன்றைய கதைகளும் இன்றைய நிகழ்வுகள் நேற்றைய கதைகளும் என பின்னால் செல்லவும் கூடும்” என்று அவர் கூறினார்.

“நீங்கள் இலை தொட்டு அறிந்ததென்ன?” என்று நான் கேட்டேன். “இளைய யாதவர் விண்புகுவார். அவருக்கு நிகழவிருப்பது வீரனுக்குரிய இறப்பல்ல, யோகியருக்குரிய இறப்பல்ல, பெருந்தந்தையருக்குரிய இறப்பும் அல்ல. அது எளியோருக்கும் சிறியோருக்குமான இறப்பு. இறப்பின் பொருளின்மையை அனைத்து கோணங்களிலும் வெளிப்படுத்தும் ஓர் இறப்பு” என்று அவர் கூறினார். “அவரை கதைகள் ஒரு நீலக்கொண்டை வானம்பாடி என்றே சொல்கின்றன. மின்னும் உடலும் இனிய இசையும் அழகிய கண்களும் எங்கும் நிலைகொள்ளா இயல்பும் கொண்டது. பறவைகளுக்குரிய இறப்பே அவருக்கும்” என்றார்.

நான் அதிர்ச்சியுடன் “ஏன்?” என்றேன். “அதை எவரும் அறியமுடியாது. ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாக அதை எண்ணி எண்ணி வியப்பார்கள்” என்று அவர் சொன்னார். “ஏன்?” என்று நான் மீண்டும் திகைப்புடன் கேட்டேன். “ஏனெனில் ஒவ்வொரு செயலிலும் எல்லையில்லாத உட்பொருட்களை இயற்றி அறியமுடியாமையின் எல்லை வரை கொண்டு சென்றவர் அவர்” என்றார். “அதனால் என்ன?” என்று நான் மீண்டும் கேட்டேன். “அது அவ்வண்ணமே. தெய்வங்கள் மனிதனை நோக்கி புன்னகைக்கின்றன. தெய்வங்களை நோக்கி தெய்வங்களே வாய்விட்டு சிரிக்கின்றன” என்று அவர் கூறினார்.

நான் நெடுநேரம் அதை எண்ணிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். சுள்ளிகளை மேலும் சேர்த்து தீ பெருக்கி அதில் கோதுமை மாவை வாட்டி ஒருவகை அப்பமாக்கிய சௌம்யர் அதை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை எனக்களித்து “நலம் நிறைக, அன்னம் நிறைவடைக!” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டு “மாகதரே, அவ்வண்ணம் ஒரு பொருளிலா நிகழ்வு நடப்பதற்கு முன்நீட்சி என்றோ ஏது என்றோ ஒன்று இங்குண்டா?” என்றேன். “விளைவுகள் அனைத்தும் முன்நிகழ்வுகள் கொண்டவை. அனைத்துக்கும் முன்நீட்சி உண்டு என்பதனால் அவை நீண்டு நீண்டு முடிவிலி வரை செல்கின்றன.”

“மாகதரே கூறுக, இந்நிகழ்வுக்கான முன் நிகழ்வென்ன?” என்று நான் கேட்டேன். அவர் அங்கேயே பன்னிரு கூழாங்கற்களை அடுக்கி விரித்து கைதொட்டு ஊழ்கத்திலாழ்ந்து விழித்து தொட்ட கல்லை நோக்கி கணித்து ஒரு கதையை சொன்னார்.

முன்பு ஆசுரநிலத்தில் ஹிரண்யவாகா ஆற்றின் கரையில் அமைந்த ஹிரண்யபதம் என்னும் நாட்டை நிஷாதகுலத்தவனாகிய கருடகுலத்து ஹிரண்யதனுஸ் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் துணைவி சுவர்ணை. அவர்களின் மைந்தனாகப் பிறந்த பெருவில்லவனின் பெயர் ஏகலவ்யன் என்று மாகதர் சொல்லத்தொடங்கினார். அவனுக்கு முற்பிறப்பின் தொடர்ச்சியென விற்கலை வந்தது. அவன் குடியில் அவனுக்கு நிகரான வில்லவர் எவரும் எழுந்ததில்லை. அவனை அவர்கள் தங்கள் தொல்மூதாதையான ஹிரண்யகசிபுவின் மறுவடிவம் என வழிபட்டார்கள்.

ஹிரண்யதனுஸ் மகதத்திற்கு கப்பம் கட்டும் நிஷாத அரசர்களில் ஒருவர். நிஷாத குடியில் ‘நிலைகொள்க!’ எனும் ஆணையே வீரர்களில் திகழ்கிறது. ‘வென்று செல்க, விரிக!’ என்ற ஆணை அவர்களில் எழுவதில்லை. அந்த ஆணை எழுந்த உள்ளம் கொண்டவன் ஏகலவ்யன். விற்கலைகளில் தேர்ந்த ஆசிரியர் ஒருவரை தேரும் பொருட்டு அவன் சூதர்களிடமும் நிமித்திகர்களிடமும் உசாவினான். அவர்கள் துரோணரின் பெயரை கூறினார்கள். இளைய பாண்டவன் அர்ஜுனனும் பெருவில்லவனாகிய அஸ்வத்தாமனும் வில் பயிலும் களம் அது என்றனர்.

அங்கு செல்வதற்காக தந்தையிடம் விடைபெற்று ஏகலவ்யன் கிளம்பினான். அஸ்தினபுரியை அடைந்து துரோணரின் குருநிலைக்குச் சென்று உரிய காணிக்கைகளுடன் அவர் முன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்று கோரினான். ஆனால் தான் அஸ்தினபுரி அரசர்களுக்கு கட்டுப்பட்ட ஆசிரியர் என்றும், ஷத்ரியர்களுக்கு மட்டுமே விற்கலை அளிக்கவேண்டும் என்பது தனது நெறி என்றும் துரோணர் கூறினார்.

துரோணர் “நிஷாதனே, திறன் ஒவ்வொன்றும் கடன் நூறு கொண்டதே. ஷத்ரியர்கள் படைக்கலம் ஏந்துபவர்கள் என்பதனால் அவர்களுக்குரிய நெறிகளும் வரையறைகளும் நூல்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்நெறிகளை ஏற்று அவ்வரையறைகளுக்குள் நிற்கும் வஞ்சினத்தை எடுத்துக்கொண்ட ஷத்ரியர்களுக்கே போர்க்கலை அளிக்கப்படவேண்டும். அவர்களை ஆளவும் வழிகாட்டவும் தண்டிக்கவும் வலுவான அரசு தேவை. இல்லையேல் வேங்கப்புலிக் கூட்டத்தை ஊருக்குள் உலவவிட்டதுபோல அழிவே மிகும். நிஷாதனாகிய உன்னுடைய குலநெறிகளும் அரசுமுறைகளும் வேறு. ஆகவே நான் உனக்கு கற்பிக்க இயலாது” என்றார்.

“நீ வேடன். விற்கலை தேர்ந்த வேடன் காட்டுவிலங்குகளை முற்றழித்துவிடக்கூடும். உன் குடி பல்லாயிரம் வேடர் குடிகளில் ஒன்று. முதன்மை விற்கலை பயின்றால் நீ பிற குடிகளை அழிக்கக்கூடும். பேரரசென திரண்டு எழுந்து ஷத்ரிய அரசுகளை வெல்லக்கூடும். வேதங்களுக்கு கட்டுப்படாத உனது வில் வேத எதிர்ப்பை கைக்கொள்ளக் கூடும். உபவேதங்களில் ஒன்றாகிய தனுர்வித்தையை வேத மறுப்பாளனுக்கு கற்றுக்கொடுக்கலாகாது என்பது அதன் முதல்நெறி என்று அறிக!” என்று துரோணர் சொன்னார்.

அவன் மீண்டும் மன்றாடி நின்றான். “நால்வேதத்தை ஏற்பாய் என்று இங்கே நிலம்தொட்டு ஆணையிடு, உனக்கு கலையளிக்கிறேன்” என்றார். “நான் என் குடிக்கும் குடிகாக்கும் அசுரவேதத்திற்கும் கட்டுப்பட்டவன், பிறிதொன்றை ஏற்கவியலாது” என்றான் ஏகலவ்யன். “எனில் நீ அசுரகுருவிடமே விற்கலை பயிலவேண்டும். சுக்ராச்சாரியாரின் கொடிவழி வந்த ஆசிரியர்களை தேடிச்செல்க!” என்றார் துரோணர். “நான் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லளிக்கிறேன்” என்றான் ஏகலவ்யன். “நான் உன் வேதத்தைவிட உயர்ந்தவனா?” என்றார் துரோணர். “மண்ணில் புழுக்கள் என நாங்கள் எங்கள் வேதத்தில் முளைத்து அதில் திகழ்ந்து அதில் முடிபவர்கள்” என்றான். “எனில் நான் மற்றொன்று சொல்ல இயலாது” என்றார் துரோணர்.

ஏகலவ்யன் உளம்சோராமல் அக்குருநிலையின் தொலைவில் நின்ற ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து துரோணர் தன் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகளை அகன்றிருந்து கண்டு உளம்பதித்துக் கொண்டான். பின்னர் தானே அதை செய்து பயின்று தேர்ந்தவனானான். அவன் அர்ஜுனனுக்கு நிகரான வில் திறனை அடைந்துவிட்டான் என்று சொல் பரவியது. துரோணர் அவனை தேடிச்சென்றார். “உன் ஆசிரியர் யார்?” என்று கேட்டார். “நீங்களே. உங்களிடமே விற்தொழிலை கற்றுக்கொண்டேன்” என்று அவன் கூறினான்.

“எனில் எனக்கு ஆசிரியக்கொடை அளி” என்று அவர் கேட்டார். “எதுவும் கோருக!” என்று அவன் சொன்னான். “உனது கட்டைவிரல் வேண்டும்” என்று துரோணர் கேட்டார். அக்கணமே அதை வெட்டி அவன் ஆசிரியக்கொடை என அளித்தான். ஏகலவ்யனின் அன்னை சுவர்ணை மைந்தனின் துண்டான விரலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக் கொண்டாள். “வெட்டுண்ட என் மைந்தனின் பொருட்டு” என்று கூவி அவள் துரோணருக்கும் அஸ்தினபுரிக்கும் தீச்சொல்லிட்டாள். அச்சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அக்கணமே தன் சங்கரிந்து விழுந்து உயிர்விட்டாள்.

“எந்த மைந்தனுக்காக நீர் இதை செய்தீரோ அந்த மைந்தனுக்காக புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். எந்த மாணவனுக்காக இப்பழியை ஆற்றினீரோ அந்த மாணவனின் வில்திறத்தாலேயே நீர் இறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது. வாழையடி வாழையாக வரும் தலைமுறைகளின் எள்ளும் நீரும் உமக்கு கிடைக்காது. உமது மைந்தன் சொற்களாலேயே நீர் பழிக்கப்படுவீர்” என்றாள் சுவர்ணை.

அவ்வண்ணமே துரோணர் தன் மைந்தனின் விழிமுன் தான் மைந்தனுக்கு மேலாக எண்ணிய மாணவனாலேயே கொல்லப்பட்டார். அவர் மைந்தன் சாவில்லாதவன் ஆனான், ஆகவே தலைமுறைகளென நீளும் நீர்க்கொடை பெறாதவராக ஆனார் துரோணர். அஸ்தினபுரியின் மைந்தர்கள் அனைவரும் களம்பட்டனர். எஞ்சிய ஒருவனோ வில் தொட ஆற்றல் இல்லாத வீண்பிறவியென அமைந்தான்.

சௌம்யர் தொடர்ந்து சொன்னார். குறைபட்ட கைகொண்ட ஏகலவ்யன் தன் குடிக்கு தலைமகன் என்றானான். தன் அன்னை சுவர்ணையின் நவகண்டச்சிலை முன் நின்று “இன்று முதல் இக்குலத்தின் அரசன் நான். அசுரகுலமாகிய நாம் மலரோ இலையோ கிளையோ தடியோ அல்ல, நாம் வேர். பறவையோ மிருகமோ மீனோ பாம்போ அல்ல. என்றுமழியாத புழுக்கள். இதோ என் ஆணை, இன்று முதல் நமது வில்வேதம் நான்கு விரல் கொண்டது. நம் குலத்துக்கு நானே குருநாதனுமாவேன்” என்றான்.

அவ்விரல் குறைந்த நிலையில் கடும்பயிற்சி எடுத்து மீண்டும் பெருவில்லவன் என்று மாறினான். வில்லவர்கள் என்று தன் குடியில் ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டான். அவர்கள் அனைவருமே வலக்கையின் கட்டை விரலை அகற்றிக்கொண்டனர். நான்கு விரல் அம்பெடுத்துத் தொடுக்கும் ஒரு கலை அது. சதுராங்குலி வித்தை என்றே அது அறியப்படலாயிற்று. அவ்வில்லவர்கள் ஒரே நாணில் ஏழு அம்புகளை தொடுக்கும் சப்தசரம் என்னும் விற்திறன் கொண்டவர்கள். நிகரற்ற பொறுமை கொண்டவர்கள். நிலத்தோடு நிலம் படிந்து படுத்து அந்நிலையிலேயே அம்பெய்யும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மறு அம்பெய்து வீழ்த்துவது எளிதல்ல.

அவர்கள் புகழறிந்த மகத மன்னன் ஜராசந்தன் அவர்களை தன் படையில் சேர்த்துக்கொண்டான். ஹிரண்யதனுஸின் மைந்தனாகிய ஏகலவ்யன் ஜராசந்தனின் படையில் முதன்மைப் படைவீரன் ஆனான். அவன் ஜராசந்தனின் தாய் ஜரையுடன் குலமுறை உறவு கொண்டவன். அவனுடைய அத்தைமுறை கொண்டவள் கம்சரின் இரண்டாவது அரசியான பிராப்தி. அஸ்தினபுரிக்கும் யாதவர்களுக்கும் எதிராக ஏகலவ்யனின் சினத்தை தூண்டி நிலைநிறுத்த ஜராசந்தன் முயன்றான். ஆகவே இளைய யாதவரால் கம்சர் கொல்லப்பட்டபோது மதுராவை விட்டு நீங்கிய கம்சரின் அரசியரை வரவேற்க ஜராசந்தன் ஏகலவ்யனை அனுப்பினான். மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் படை நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்கியது.

அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கும்வரை மதுராவை மகதம் தாக்காது என எண்ணியிருந்தார் இளைய யாதவர். ஆகவே யாதவர்கள் படைவல்லமையுடன் இருக்கவில்லை. ஏழு நாட்களில் மதுராவை ஏகலவ்யன் பிடித்துக்கொண்டான். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனைவழியாக தப்பி ஓடி மதுவனத்தை சென்றடைந்தார். ஏகலவ்யன் படைகள் பதினைந்து நாட்கள் மதுராவை சூறையாடின. ஏகலவ்யன் ஆயிரம் படகுகளுடன் இரு துறைமுகங்களையும் அழித்தான். கன்றுகளை எல்லாம் கொன்று அவன் படைகள் உண்டன. மதுராவின் அனைத்து வீடுகளையும் அவன் எரித்தான். அதற்கு மதுராவின் நெய்க்களஞ்சியத்தையே பயன்படுத்திக்கொண்டான்.

ஏழு நாட்கள் மதுரா நின்றெரிந்தது. மதுராவின் தெருக்களில் மக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தமையால் குதிரைகள்கூட நடக்கமுடியாமலாயின. மதுராவின் மண் ரத்தமும் சாம்பலும் கலந்து கருமைகொண்டது. மறுநாள் ஏகலவ்யனின் படைகள் ஆயிரம் படகுகளில் வந்து மதுவனத்தை தாக்கின. கொந்தளிக்கும் யமுனைப்பெருக்கில் அலைபாயும் படகுகளில் இருந்தபடி அம்புகளை எய்து கரையில் நிற்பவர்களின் கண்ணுக்குள் அம்பைச் செலுத்தும் வில்லாளிகள் அவர்கள். அலைபாயும் படகுகளில் நின்ற அவர்களை யாதவர்களின் அம்புகள் ஒன்றுகூட சென்று தொடவில்லை.

அன்று இளைய யாதவர் வடக்கே சாந்தீபனி குருநிலையில் கல்வி கற்கும் பொருட்டு சென்றிருந்தார். மதுராவிலிருந்த பலராமர் எஞ்சிய யாதவர்களைத் திரட்டி அனைத்துக் கன்றுகளையும் சேர்த்துக்கொண்டு மதுவனத்தின் மறுபக்கத்துக்கு காட்டுக்குள் சென்றார். அடர்ந்த காட்டுக்குள் செல்ல யாதவர்கள் கற்றிருக்கவில்லை. அவர்களின் ஆநிரைகளை பசுமையை மீறி கொண்டுசெல்வதும் கடினமாக இருந்தது. குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அவர்கள் காட்டுமரங்கள் நடுவே திணறியும் விழுந்தும் அழுதபடி சென்றனர்.

ஏகலவ்யனின் படையினர் மதுவனத்தில் புகுந்து அத்தனை வீடுகளையும் எரியூட்டினர். அதைக் கண்டு யாதவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். முதியவர்களை மதுவனத்தில் விட்டுவிட்டு வந்திருந்தனர். போர்நெறிப்படி அவர்களை ஏகலவ்யனின் படைகள் ஒன்றும் செய்யாதென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எரியும் வீடுகளுக்குள் தூக்கி வீசிவிட்டன ஏகலவ்யனின் படைகள்.

யமுனைக்கரைக் காட்டைக் கடந்து தெற்குப் பெருநிலத்தின் காடுகளை அடைந்ததும் பலராமர் ஏழு தூதுவர்களை தொடர்ந்து வரும் ஏகலவ்யனிடம் அனுப்பி தீர்வு கோரி மன்றாடினார். யாதவர்களின் இறுதிக் குழந்தையையும் கொன்ற பின்னரே ஹிரண்யபதத்துக்கு மீளவிருப்பதாக ஏகலவ்யன் சொன்னான். தூது சென்றவர்களின் காதுகளையும் மூக்கையும் வெட்டிவிட்டு திருப்பியனுப்பினான். செய்வதறியாது யாதவர்கள் காடுகளுக்குள் திகைத்தனர்.

அப்போது தன்னந்தனியனாக இளைய யாதவர் அங்கே வந்து சேர்ந்தார். யாதவ குலமே அவரை நோக்கி தந்தைமுன் அஞ்சிய குழவி என கைநீட்டி பாய்ந்தோடியது. இளைய யாதவர் சொன்னார் ‘ஏகலவ்யனை நான் அறிந்துள்ளேன். அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான் என்றால் இறுதிக்குருதித் துளி எஞ்சுவதுவரை அதை நிறைவேற்றவே முயல்வான். மகதம் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விலகிச்செல்வோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்.’ அவ்வண்ணம் அவர்கள் அகன்று சென்று உருவாக்கியதே துவாரகை.

அஸ்தினபுரியின் வளர்ச்சி கண்டு பிரக்ஜ்யோதிஷத்தின் அரசனாகிய பகதத்தன் அச்சமும் பொறாமையும் கொண்டிருந்தான். அந்நகர் மீது படைகொண்டு செல்லவேண்டும் என்று விழைந்தான். ஆனால் அவன் குடிகளும் அவன் பதினெட்டு துணைநாடுகளும் அதற்கு ஒப்பவில்லை. துணைநாடுகளின் படைகொண்டு சென்றாலன்றி அஸ்தினபுரியை வெல்லவும் இயலாது. அவனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய நிமலன் “அவர்களை நாம் படைகொண்டு தாக்க வேண்டுமென்றால் அவர்கள் நம்மை தாக்கவைப்பதே முதலில் செய்யவேண்டியது” என்று கூறினான். “அவர்களுக்கு சினமூட்ட வேண்டும். அவர்களே நம்மை தாக்கினார்கள் எனில் நாம் அவர்களை தாக்குவதும் வெல்வதும் முற்றழிப்பதும் அரசமுறை என்றாகிவிடும்” என்றான்.

பிரக்ஜ்யோதிஷத்தின் படைகள் கங்கையில் செல்லும் அஸ்தினபுரியின் படைகளை தடுக்கலாயின. அஸ்தினபுரியின் வணிகர்களை சிறைப்படுத்தி பொருட்களை கவர்ந்தன. ஓர் எல்லையில் பொறுமையிழந்து கர்ணனின் தலைமையில் அஸ்தினபுரியின் படை பிரக்ஜ்யோதிஷத்தின் படைநிலைகளுக்கு எதிராக எழவிருக்கிறது என்று தெரிந்தது. “கானுறைவு முடிந்து பாண்டவர்கள் மீண்டிருக்கும் பொழுது இது. இத்தருணத்தில் அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு உதவினால் நாம் அழிந்தோம். ” என்றான் நிமலன். “நம்மில் ஒரு கிளை யாதவர்களை தாக்கவேண்டும். அவர்களைக் காக்க அர்ஜுனன் சென்றே ஆகவேண்டும்” என்றான்

பிரக்ஜ்யோதிஷத்தின் ஆணை ஹிரண்யபதத்தின் அரசன் ஏகலவ்யனுக்கு அனுப்பப்பட்டது. ஏகலவ்யனை யாதவர் அதற்கு முன் எட்டு களங்களில் சந்தித்திருந்தனர். இறுதியாக பலராமரின் தலைமையில் எழுந்த மதுராவின் படை ஹிரண்யபதத்தை தாக்கியபோது ஏகலவ்யன் காட்டுக்குள் தப்பியோடியிருந்தான். அந்த வஞ்சினம் அவனில் எரிந்துகொண்டிருந்தது. அவன் தன் பெருவில்லவர் பன்னிரண்டாயிரம் பேரை திரட்டிக்கொண்டு மதுவனத்தை நோக்கி சென்றான். மதுவனத்தின் ஆயர்கள் அஞ்சி ஓடி காடுகளுக்குள் புகுந்தனர். அவர்களின் பசுக்குலங்களை கொன்றழித்தான். மதுவனத்தின் மீது எரி படரவிட்டான்.

அங்கிருந்த ஆயிரம் படகுகளில் அவன் வீரர்கள் மதுரா நோக்கி வந்தனர். அப்போது அங்கு பலராமர் இல்லை. ஏகலவ்யனை ஒடுக்கிவிட்டோம் என நம்பி அவர் தன் திசைப்பயணத்திற்காக வடபுலம் சென்றிருந்தார். மதுராவைத் தாக்கிய ஏகலவ்யன் அதன் கோட்டைகளை உடைத்தான். நகரத்திற்குள் அவன் அம்புகள் நச்சுப்பறவைகளென வந்து விழுந்து உயிர் குடித்தன. மதுரா நகர் எரியூட்டப்பட்டது. அதன் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மதுராவின் ஏழாயிரம் படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.

அங்கிருந்து ஏகலவ்யன் துவாரகை நோக்கி சென்றான். முடிந்தவரை விரைவில் துவாரகை நோக்கி செல்லவேண்டும் என்றும், துவாரகையிலிருந்து வரும் இளைய யாதவரின் படையை நடுப்பாலையிலேயே சந்திக்கவேண்டும் என்றும், ஏகலவ்யனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. உபப்லாவ்யத்தில் இருந்து அர்ஜுனனை தன்னை துரத்தி வரச்செய்து பாலைநிலத்தில் நெடுந்தொலைவு கொண்டுவந்து சிக்க வைக்கவேண்டும் என்றும் அஸ்தினபுரி தாக்கப்படும் செய்தி கேட்டாலும் பதினெட்டு நாட்கள் அவன் திரும்பிவரலாகாது என்றும் நிமலன் வகுத்திருந்தான்.

ஏகலவ்யனின் படை மதுராவை தாக்குவதை அறிந்து உபப்லாவ்யத்தில் இருந்து படைகளுடன் வந்த அர்ஜுனன் அங்கே எரியூட்டப்பட்ட நகரைக் கண்டு திகைத்தான். ஏகலவ்யன் மதுராவை அழித்துவிட்டு துவாரகை நோக்கி செல்வதை அறிந்து அவர்களை துரத்திச்சென்றான். ஆனால் ஏகலவ்யனை அர்ஜுனன் நெருங்குவதற்குள்ளாகவே இளைய யாதவர் எதிர்கொண்டார். அந்தப் போர் நடுப் பாலையில் நிகழ்ந்தது.

ஏகலவ்யனை எதிர்க்க துவாரகையிலிருந்து படை திரட்டிக்கொண்டு வந்து பாலைவனத்திற்குள் நிலைகொள்வது என்பது துவாரகையை கைவிடுவது போன்றது. கடல்படையெடுப்பாளர்கள் அந்நகரை சுற்றிவந்துகொண்டிருந்த காலம் துவாரகை அன்று அத்தனை எதிரிகளும் சூழ்ந்திருந்த இடர்நிலையில் இருந்தது. படைகளுடன் துவாரகையில் காத்திருந்து ஏகலவ்யனை அருகே வரவிடுவது என்பது துரத்திவரும் அர்ஜுனனை பாலையில் நெடுந்தொலைவு வரச்செய்து சிக்க வைப்பது. ஆகவே இளைய யாதவர் வெறும் நூறுபடைவீரர்களுடன் ஏகலவ்யனை எதிர்க்க கிளம்பினார்.

அவர்கள் பாலைநிலத்தில் கால்களில் அகலமான செயற்கைக்குளம்பு அணிந்த விரைவுப்புரவிகளில் வந்து ஏகலவ்யனின் படைவீரர்களை எதிர்கொண்டனர். இளைய யாதவர் செய்த ஒரு சூழ்ச்சியால் ஏகலவ்யன் பாலைநிலத்தில் சிக்கிக்கொண்டான். பாலைநிலத்தில் வரும் படைகள் நீர் நோக்கவும் திசையறியவும் பறவைகளை கூர்ந்து கணிக்கும் முறைமையை கடைப்பிடிப்பதே வழக்கம். அந்திப்பறவைகள் எத்திசையில் செல்கின்றனவோ அங்குதான் பாலைவனச்சோலைகள் அமைந்திருக்கும். இளைய யாதவர் துவாரகையிலிருந்து பயிற்றுவித்துக் கொண்டு வந்த பறவைகளை ஏகலவ்யனின் படைகளுக்கு குறுக்காக அனுப்பினார். அவை அவன் படைகளை தலைவழியாக கடந்து அப்பால் சென்று விழிமறைந்ததும் மண்ணிலிறங்கி மீண்டும் அங்கிருந்த துவாரகையின் படையினரின் கூண்டுகளுக்குள் சென்று நீரருந்தி உணவுகொண்டன.

பறவைகளின் செலவைக் கண்டு அத்திசையில் பாலைவனச்சோலை இருக்கிறதென்று வழிகாட்டிகள் கணிக்க ஏகலவ்யன் தன் படைகளைத் திருப்பி அங்கே கொண்டுசென்றான். இரவு எழும் வரை சென்றும் சோலையோ நீரோ தென்படாமல் அவன் படைகள் சோர்ந்தன. மறுநாள் புலரியில் அவர்கள் கிளம்பியபோது மீண்டும் அதேபோல பயிற்றுவிக்கப்பட்ட பறவைகள் திசைமாற்றி அழைத்துச்சென்றன. மூன்று நாட்கள் அவ்வண்ணம் திசைமாற்றி பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்ட ஏகலவ்யன் படைகள் தளர்ந்து செயலிழந்து மணலில் உழன்றன.

அவர்களை தான் விரும்பிய இடத்திற்கு இளைய யாதவர் அழைத்து வந்தார். அங்கு உரிய தருணத்திற்காக அவர் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்தது போலவே மணல்புயல் எழுந்து அவர்களை சூழ்ந்துகொண்டபோது அதை திரையென்றாக்கி அதனூடாக இளைய யாதவரின் நூறு வில்லவர்கள் நச்சு தடவிய அம்புகளுடன் ஏகலவ்யனின் படையை சூழ்ந்துகொண்டனர். விழி கட்டப்பட்டவர்களை கொன்று குவிப்பதுதான் அங்கே நிகழ்ந்தது. ஏகலவ்யனின் படைகள் முற்றழிந்தன.

புயல் தணிந்தபோது புண்பட்டு மண்ணில் புதைந்து கிடந்த ஏகலவ்யனை தேடிப்பிடித்து பின்கை கட்டி அழைத்து வந்தனர் இளைய யாதவரின் வீரர்கள். அவர்களுடன் நாற்பத்தெட்டு நிஷாத வீரர்களும் சிறையுண்டனர். ஏகலவ்யன் “நான் பிரக்ஜ்யோதிஷத்தின் படைத்தலைவன். அரசமுறைப்படி போர்புரிய படைகொண்டு வந்தவன். இங்கு நிகழ்ந்தது போரல்ல, சூழ்ச்சி மட்டுமே” என்றான். “எனினும் போர்த்தலைவனுக்குரிய நெறிமுறைகளை நாடுகிறேன். உரிய முறையில் நான் களப்பலியாக வேண்டும். இறுதிச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும்” என்றான்.

இளைய யாதவர் “உன் உடற்குறையை நீ உளக்குறையென்று ஆக்கிக்கொண்டாய். மதுராவிலும் மதுவனத்திலும் நீ செய்தது போரல்ல, உன் வஞ்சத்தை எளியவரிடம் தீர்த்துக்கொண்டாய். இதோ நெறிபிழைத்து தோற்கடிக்கப்பட்டாய் என்று உன் வாயால் சொன்னாய். அது இனிமேல் நீயும் உன் குடியும் நெறிகளை கடைப்பிடிக்க போவதில்லை என்பதற்கான அறிவிப்புதான். நாங்கள் முளைத்தெழும் குலம். தொடர்ந்து வரும் தாக்குதல்களால் எங்கள் இளம்பயிர் அழியலாகாது. எனவே இனி எவரும் எங்கள்மேல் படைகொண்டுவர எண்ணமுடியாதபடி உன் அழிவு நிகழவேண்டும்” என்றார்.

ஏகலவ்யன் “கொல்ல உங்களுக்கு உரிமை உண்டு யாதவரே, நான் மண்புகுவதை தடுக்கும் உரிமை இல்லை” என்றான். இளைய யாதவர் “நீ மண்புகக்கூடாது. மண்ணில் வேரென உறையும் உன் முன்னோருடன் நீ சேர நான் விடமாட்டேன்” என்றார். தன் வாளை உருவி அவன் தலையை வெட்டி வீழ்த்தினார். அந்தத் தலை தனியாக துவாரகைக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. உடல் பாலைநிலத்தில் பறவைகளுக்கு உணவாக அளிக்கப்பட்டது. ஒரு துளியும் மண்ணை அடையவில்லை. அச்செயல்கள் அனைத்தையும் நிஷாத வீரர்கள் பார்க்கும்படி செய்யப்பட்டனர். அவர்கள் அதை சென்று அறிவிக்கவேண்டும் என பாலைநிலத்தைக் கடந்து ஊர்திரும்பச் செய்யப்பட்டனர்.

“அக்கொலை அதற்கு முன் நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சி. அந்நிகழ்வுகள் அதற்கு முன் நிகழ்ந்தவற்றால் மூட்டப்பட்டவை. அது ஒரு நீள்சரடு. ஒருவேளை அதை இங்கு இவ்வண்ணம் முற்றறுத்து நிறுத்த அவர் விழைகிறார் போலும்” என்றார் சௌம்யர்.