கல்பொருசிறுநுரை - 79

பகுதி ஏழு : நீர்புகுதல் – 8

நான் பலராமரின் அறைக்குச் சென்றபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிறைந்திருந்தனர். ஏவலன் என் வருகையை அறிவித்து எனக்கு நுழைவொப்புதல் அளித்தான். நான் உள்ளே சென்று பலராமரை வணங்கினேன். படைத்தலைவர்கள் எந்தத் தொடர்பும் இல்லாமல் தங்களுக்குள் மாறி மாறி பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. பலராமர் எந்த சொற்களையும் செவி மடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

நான் நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்து “என்ன?” என்று கேட்டபோது என் சொற்களையும் அவர் கேட்கப்போவதில்லை என்று தோன்றியது. நான் முகமனுரைத்த பின் “இது நமது வெற்றி என்றே நாம் கொள்ள வேண்டும், அரசே” என்று சொன்னேன். “இந்தச் சிறு போரில் நாம் அடைந்த வெற்றி ஒரு தொடக்கமாக இருக்கவேண்டும். மதுரா இதுவரை அடைந்த தோல்விகளில் இருந்து வெளிவந்து முதல் வெற்றியை அடைந்துள்ளது. திருமகளுக்கு ஓர் இயல்புண்டு, திரு இருக்கும் இடத்திலேயே திரு மீண்டும் செல்வாள். வெற்றிமகள் வெற்றிமகளை சேர்வாள். வெற்றிமகளை செல்வமகள் தேடிவருவாள்” என்றேன்.

பலராமர் என்னிடம் “மதுராவின் குடிகள் எப்படி உணர்கிறார்கள்?” என்றார். நான் தயங்கி “அவர்கள் வெற்றியை இன்னமும் முழுதுணரவில்லை, ஆனால் உணரவைக்க முடியும்” என்றவுடன் அவர் கைநீட்டி தடுத்து அருகிருந்த படைத்தலைவரிடம் “விக்ரமரே, கூறுக!” என்றார். படைத்தலைவர் என்னிடம் “மக்கள் மீண்டும் உளச்சோர்வுக்குள் சென்றுவிட்டார்கள். எவ்வகையிலோ அவர்கள் இந்தச் செயலை விரும்பவில்லை. இது ஒரு தீய தொடக்கம் என்றே நினைக்கிறார்கள்” என்றார். “தீய தொடக்கம் என்றால்?” என்று நான் சீறினேன். “வெற்றி எவ்வண்ணம் தீய தொடக்கமாகும்?” என்றேன்.

அவர் “அவர்கள் அதை வெற்றி என்று நினைக்கவில்லை. ஆசிரியர் கையால் மாணவர் கொலையுண்டிருக்கிறார் என்றே நினைக்கிறார்கள்” என்றார். “இது போர்” என்று நான் சொன்னேன். “ஆமாம், ஆனால் அவர்கள் எவரும் இதை போர் என்று நினைத்திருக்கவில்லை. இதை ஒரு இனிய விளையாட்டாக எண்ணியிருந்தார்கள் என்று தோன்றுகிறது. நகரெங்கும் துயர் நிறைந்திருக்கிறது. பலர் அழுதுகொண்டும் உரக்க பழி சாற்றி கூவிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.

நான் என் சினத்தை அடக்கிக்கொண்டு “எவரை பழி சாற்றுகிறார்கள்?” என்றேன். அவர் விழி தாழ்த்தி “நம் அரசரை” என்றார். “இதில் அரசர் செய்த பிழை என்ன? அவரைச் சிறுமை செய்து அவைமுன் நின்று எதிர்த்தவனை அரசர் என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள்?” என்றேன். “அவர் விதர்ப்பரை சிறைப்பிடித்திருக்க வேண்டும் என்கிறார்கள். பொறுத்தருளி திருப்பி அவருடைய நாட்டுக்கே அனுப்பியிருக்க வேண்டும் என்கிறார்கள். அது எளிய செயல் என்றும் நினைத்தால் செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இது கொலைப்பழி விழுந்த நிலம் என்று பலர் கூறுவதை கேட்டேன்” என்றார்.

“அரசே, குடிகள் ஏற்கெனவே உளச்சோர்வில் இருந்தார்கள். அவர்கள் சற்றே வெளிவந்தபோது இந்நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மீண்டும் உளச்சோர்வுக்குள் சென்றுவிட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இங்கே நிகழ்ந்த போரில் எந்த நெறியும் முறையும் மீறப்படவில்லை. ஆகவே குடிகளின் சோர்வு பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை” என்றேன். “அதை நாம் சொன்னால் போதாது, நம் குடிகளுக்கு தெரியவேண்டும்” என்றார் பலராமர். “அங்கிருந்த அரசர்கள் ஏற்றுக்கொண்டார்கள்” என்றேன். “அவைச்சான்று அவர்கள். நெறி நிலைகொள்வது அவர்களின் சொல்லில். நூல்கள் நினைவுறப்போவது அவர்களின் முடிவை.”

“அரசர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் எப்போதும் வலிமையானவர்களுடன் நின்றிருப்பவர்கள். நாம் பாரதவர்ஷத்தை ஆளும் ஆற்றலுடன் ஓங்கி நின்றிருக்கும் குலம் என்று அவர்கள் அறிவார்கள். விதர்ப்பத்தின் ருக்மி மேல் ஒவ்வாமை இல்லாத அரசர்களும் கிடையாது. ஆனால் குடிகள் ஏற்க வேண்டும். அவர்களின் உளச்சான்று முன் நாம் நிமிர்ந்து நிற்கவேண்டும். நான் அவர்களின் அரசன், அதை மீறி நம் மீதே குடிகள் பழி சொல்கிறார்கள் என்பது உண்மை” என்றார் பலராமர். “அவர்கள் சொல்வதில் ஒரு பொருள் உள்ளது என்றே உணர்கிறேன்.”

“என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் சலிப்புடன் கேட்டேன். “ஆசிரியன் தந்தைக்கு நிகரானவன். அந்த அவையில் நிஷதன் இதேபோல் நடந்திருந்தால் அவனை நான் இவ்வண்ணம் கொன்றிருப்பேனா?” என்றார் பலராமர். “கொல்லவேண்டும், கொன்றிருப்பீர்கள்” என்றேன். “இல்லை, கொல்லமாட்டேன். நன்றாகத் தெரியும், கொல்லமாட்டேன். அவன் உடலை தொட்டதுமே என் கை தயங்கியிருக்கும். ஆனால் இவன் உடலை தொட்டபோது தயங்கவில்லை.”

“இவன் உடலை எத்தனை முறை தொட்டிருப்பேன். இளமைந்தனாக என்னிடம் கதை பயில வந்தான். அன்று அவன் தோளைத் தொட்டு நிமிர்த்து காலைப் பிடித்து முன்னால் வைத்து எப்படி களத்தில் நிலைநிற்பது என்று சொல்லிக்கொடுத்தேன். என் உடனேயே இருந்தான். என்னிடம் கதையும் மற்போரும் பயின்றான். என்னுடன் மற்போரிட்ட ஒவ்வொருவரையும் நூறு முறை ஆயிரம் முறை தழுவியிருப்பேன். இன்று என் கையால் அவனை கொல்லும்படி ஆகிவிட்டது.”

“ஆசிரியர் கையால் மாணவனைக் கொல்வதென்பது மைந்தர் கொலைக்கு நிகரானதே. இப்போது உணர்கிறேன், பீஷ்மரும் துரோணரும் கிருபரும் ஏன் அர்ஜுனனை கொல்லவில்லை என்று. அவர்களால் கொன்றிருக்க முடியும். ஐயமறத் தெரிகிறது, கொன்றிருக்க முடியும். மாணவன் எழுந்து வந்து தன்முன் நிற்கும்போது ஆசிரியன் உளம் கனிந்துவிடுகிறான். இளமைந்தனாக அவனை பார்த்த கணங்கள், அவனை மடியிலேற்றி அமரவைத்து சொல்லளித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அவன் அவருடைய எதிர்காலம். மைந்தனைவிட மாணவனே நம்மை நினைத்திருக்கப்போகிறவன். ஆசிரியரால் மாணவனை கொல்ல இயலாது. ஆசிரியர்கள் மாணவர்கள் முன் விரும்பித் தோற்கிறார்கள். எப்போதும் அதுவே நிகழ்கிறது.”

“ஆனால் நான் கொன்றிருக்கிறேன்…. மைந்தர்கொலை புரிந்த தந்தை என இங்கே அமர்ந்திருக்கிறேன். பழிகொண்டவனாக உணர்கிறேன். என் குடிகள் பழிப்பது இயல்பே” என்றார் பலராமர். நான் “இந்த உளச்சோர்விலிருந்து நீங்கள் வெளிவந்தே ஆகவேண்டும். இப்போது நீங்கள் சொல்வது அனைத்தும் நெறி சார்ந்ததோ, முறை சார்ந்ததோ, அறம் சார்ந்ததோ அல்ல. வெறும் உளச்சோர்வு மட்டுமே. சில நாட்களில் இச்சோர்விலிருந்து வெளியே செல்வீர்கள். இந்நகரிலிருந்து வெளிச்செல்வது அதற்கு உதவும். இந்நகர் மீண்டும் தன் சோர்வுடன் வாழட்டும். சில நாட்களுக்குப் பின்பு ஏதோ ஒரு திருவிழாவினூடாக இது மீண்டு வரும், ஏனென்றால் மானுடத்திரள் அனைத்திலிருந்தும் மீண்டு வந்தாகவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணை” என்றேன்.

நான் திரும்பி படைத்தலைவரிடம் “அரசரிடம் தெரிவிக்கவேண்டியவை மட்டுமே அரசரிடம் தெரிவிக்கப்படவேண்டும். அரசுசூழ்தல் என்பதன் முதல் நெறி அனைத்தையும் அரசர் முன் வைத்து பேசவேண்டியதில்லை என்பது” என்றேன். அவர் திகைத்து “ஆம்” என்றார். முணுமுணுப்பாக “பொறுத்தருளவேண்டும்” என்றார். என் முகத்தைக் கண்டு ஒவ்வொருவரும் தங்களுக்குள் என பார்த்தபடி பின்னடைந்தனர். “ஆம், அதைத்தான் நான் சொன்னேன்” என்றான் ஒருவன். “வெளியே செல்க!” என்று அவர்களிடம் சொன்ன பின் “தாங்கள் ஓய்வெடுங்கள், அரசே” என்று தலைவணங்கினேன்.

படைத்தலைவர்களும் அமைச்சர்களும் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். பலராமர் என்னிடம் “மெய்யாகவே சொல்லுங்கள், இது பழி அல்லவா?” என்றார். “இல்லை” என்று நான் உறுதியான குரலில் சொன்னேன். “இளைய யாதவர் ஏகலவ்யனை கொன்றதுபோல் ஒரு நிகழ்வு இது. அதற்கப்பால் ஒன்றுமில்லை.” பலராமர் “இது பிழையல்ல, முறையே என்று நானே ஆயிரம் முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன். ஆயினும் என் உள்ளம் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மீள மீள அவ்வாறல்ல அவ்வாறல்ல என்று அது சொல்லிக்கொண்டிருக்கிறது” என்றார்.

“மது அருந்துங்கள், ஓய்வெடுங்கள்” என்றபின் தலைவணங்கி நான் வெளியே வந்தேன். ஏவலனிடம் “அவர் விரும்பும் கடுமதுவை மட்டிலாது அளியுங்கள். நன்கு ஓய்வெடுக்கட்டும், நீடு துயிலட்டும்” என்றேன். சற்று அப்பால் என்னை காத்து நின்ற படைத்தலைவர்களிடம் சென்று “நகரம் என்ன எண்ணுகிறது என்பதை இப்போது அவரிடம் சொன்னவர் யார்?” என்றேன். “அவர்தான் கேட்டார்” என்றார். “அவர் கேட்கலாம். அதைச் சொல்ல முடிவெடுத்தவர் எவர்? இத்தகைய முடிவை அமைச்சர் எடுக்கவேண்டும், படைத்தலைவர் எவ்வாறு எடுக்கலாம்?” என்றேன்.

“இங்கு எப்போதுமே முறைமைகள் எதுவுமே பேணப்படுவதில்லை. அரசரின் அவை நாங்கள் விளையாட்டாக எதையும் பேசுமிடமாகவே எப்போதும் இருந்துள்ளது. பொழுதுபோகாதபோதுகூட நாங்கள் இங்கே வந்து இயல்பாக பேசிக்கொண்டிருப்போம்” என்றார் படைத்தலைவர். “அது இயல்பான நிலையில். அவருடைய பேருள்ளம் அது. இன்று உளம் கலங்கியிருக்கும் இத்தகைய நிலையில் அவரிடம் எதை சொல்லவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியவர் அமைச்சர் மட்டுமே” என்றேன்.

“அவர் உளம் கலங்கியிருப்பது எங்களுக்கு தெரியவில்லை” என்றார் படைத்தலைவர். “தெரியவில்லை என்றால் நீங்கள் எப்படி அவரிடம் உரையாடலாம்? அவர் உளம் கலங்கி இருப்பது கூட தெரியாதவர்கள் எப்படி அவரிடம் நட்பாக இருக்கலாம்?” என்றேன். அவர் “பொறுத்தருள்க, அவர் இத்தனை தூரம் உளம் சோர்ந்து போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார். “அவரே கேட்டார். நகர்மக்கள் என்ன நினைக்கிறார்கள், குடிகளிடம் நிலவும் உணர்வென்ன என்று” என்று மீண்டும் படைத்தலைவர் சொன்னார். “அரசரிடம் உண்மை உரைப்பது இன்றியமையாதது என்று எண்ணினோம்” என்றார் இன்னொருவர்.

“அறிவிலிகள்!” என்றபின் நான் கீழே வந்தேன். சிற்றமைச்சர்களை என் அறைக்கு வரவழைத்து ருக்மியின் உடலை விதர்ப்பத்திற்கு கொண்டுசெல்வதற்கான ஒருக்கங்களை செய்வதற்கு ஆணையிட்டேன். ஏற்கெனவே அவருடைய உடலை மருத்துவர்கள் தேன் தடவி பதமிட்டு நீண்ட மரப்பேழைக்குள் வைத்து மூடி படகில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் என்று சிற்றமைச்சர் காதரர் சொன்னார். ஒற்றர்தலைவர் சம்பகன் “அவர்கள் இன்னும் அரைநாழிகைப்பொழுதில் கிளம்பிச்செல்வார்கள்” என்றார். “ஒருக்கங்கள் என்று பெரிதாக ஏதுமில்லை. தங்கள் நாட்டுக்கு செய்தி அனுப்பிவிட்டார்கள்.”

ஒற்றரான கஜராஜன் “அமைச்சரே, ஒவ்வாத செய்தி ஒன்று உண்டு. நமது குடிகள் திரளாக கிளம்பிச்சென்று அவருக்கு வீர வணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள். விதர்ப்பத்தின் படகுகள் நின்றிருக்கும் இடத்தில் மதுராவின் மக்கள்திரள் செறிந்திருக்கிறது” என்றார். “என்ன இது?” என்று நான் கேட்டேன். “அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. எவ்வண்ணம் அரசருக்கு எதிராக மக்கள் கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. அவர்களில் சிலர் பலராமருக்கு எதிராக முழக்கமும் இடுகிறார்கள். ருக்மி ஆடலில் வென்றார் என்றும் அதை சூழ்ச்சியால் பலராமர் முறியடித்தமையால் அவர் எதிர்த்து குரல் எழுப்பினாரென்றும் அதன்பொருட்டே அவர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார் கஜராஜன்.

நான் திகைத்துவிட்டேன். “இந்தப் பேச்சுகள் எவ்வாறு பரவுகின்றன, எவர் இதை கொண்டுசெல்கிறார்கள் என்பது புரியவில்லை” என்று கஜராஜன் சொன்னார். “ஆனால் இதைத்தான் எங்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வுகள் மிகையாகிக்கொண்டே செல்கின்றன.” “விதர்ப்பத்தின் ஒற்றர்கள் இதில் ஏதாவது பங்களிப்பாற்றுகிறார்களா?” என்று நான் கேட்டேன். “இல்லை, அவ்வண்ணம் விதர்ப்பத்திற்கு ஒற்றர்கள் எவரும் இங்கிருப்பதாக தெரியவில்லை” என்று காதரர் சொன்னார்.

“விதர்ப்ப மைந்தர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களுடன் வந்தவர்களும் மிகச் சிலர்தான். அவர்களும் இந்தச் சாவினால் பெரிய அளவில் துயருற்றவர்களாக தெரியவில்லை. உண்மையில் அவர்கள் இதை விரும்புகிறார்களோ என்று கூட தோன்றுகிறது. நெடுநாட்களாகவே ருக்மி விதர்ப்பத்திற்கு ஒரு சுமை என்றே ஆகிவிட்டிருக்கிறார். ருக்மியின் இறப்பினால் அவர் மைந்தர்கள் எழுந்து விதர்ப்பத்திற்கு இன்னும் சிறந்த ஆட்சியை அளிக்கக்கூடும். விதர்ப்பர்கள் ருக்மியை எந்த வகையிலும் மதிப்பதாக நான் அறிந்ததே இல்லை” என்று கஜராஜன் சொன்னார்.

ருக்மியின் உடலை கொண்டு செல்லுமிடத்திற்கு நான் நேரில் செல்வதே முறை என்று தோன்றியது. அரசமுறைப்படி அவ்வுடலை அனுப்பிவைக்காமலிருந்தால் அதுவே சூழ்ச்சி என்றும் அறத்தயக்கம் என்றும் அச்சம் என்றும் சொல் பெருக வாய்ப்பளிக்கும். என் மாளிகைக்குச் சென்று உடைமாற்றிக்கொண்டேன். வெளியே வந்து காத்திருந்த சிற்றமைச்சர்களிடம் “நகர்மக்கள் எவரும் படகுத்துறைக்கு செல்லக்கூடாது. ஆனால் இதை அறிவிப்பாகவோ ஆணையாகவோ வெளியிடவேண்டியதில்லை. இயல்பாகவே படைகளை நிறுத்தி மக்கள் திரண்டு செல்வதை தடுத்து படித்துறையை தனிமைப்படுத்துங்கள்” என்று ஆணையிட்டேன். “ருக்மிக்கான அரசமுறைமைகள் செய்யப்படவேண்டும். அதற்கு சிற்றமைச்சர் காதரர் பொறுப்பேற்கட்டும்.”

விரைவுத்தேரில் ஏறி படகுத்துறைக்கு சென்றேன். அங்கே ஒரு மேடையில் ருக்மியின் உடல் சந்தனப் பலகையாலான நீள்பேழையில் வைக்கப்பட்டிருந்தது. தலையருகே விதர்ப்பத்தின் கொடி பறந்தது. ருக்மியுடன் வந்த அமைச்சர்களும் படைவீரர்களும் சூழ நின்றிருந்தனர். விதர்ப்பத்தின் கொடி பறந்த படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. முன்னரே படகுத்துறையில் இருந்த மூன்று கலிங்கப் படகுகள் வெளியேறிய பிறகே விதர்ப்பத்தின் படகு நகரமுடியும் என்பதனால் அவர்கள் காத்திருந்தார்கள். அனைவருமே எரிச்சலுற்றவர்களாக, நிலையழிந்த உடல்மொழி கொண்டவர்களாகத் தோன்றினர்.

அங்கு கூடியிருந்த மதுராவின் மக்கள் “ விதர்ப்பர் வெல்க! ருக்மி வெல்க! புகழூர் செல்க மாவீரர்! நூல்புகழ் கொள்க விதர்ப்பர்!” என்று கூவிக்கொண்டிருந்தனர். எனது கொடி பறந்த தேரைப் பார்த்ததுமே அவர்கள் திரும்பி நின்று என்னை நோக்கி கூவி முழக்கமிட்டனர். அது எனக்கு எதிரான எதிர்ப்புக்குரல் போலிருந்தது. நான் இறங்கி விதர்ப்பத்தின் படைவீரர்களை நோக்கி சென்றேன். அவர்கள் என்னைக் கண்டதும் குழம்பினார்கள். அவர்களது அமைச்சர் என்னைப் பார்த்து தலைவணங்கினார்.

“அரசாணையை அறிவிக்கவே வந்தேன் நான். விதர்ப்பத்தின் அரசர் இங்கிருந்து செல்வதற்கு அரசருக்குரிய எல்லா முறைமைகளும் செய்யப்படும்” என்றேன். அவர் ஆமென்று தலைவணங்கினார். அவர்கள் அனைவருமே குழம்பிக்கொண்டிருந்தார்கள். படகு கரையணைந்தபோது அவர்கள் கலைந்து அதை நோக்கி சென்றார்கள். எதிர்த்திசையிலிருந்து பிறிதொரு தேரில் உல்முகன் வந்திறங்கினார். அவரைக் கண்டதும் ருக்மிக்கான வாழ்த்துக்களில் வெறி கூடியது.

உல்முகன் என்னை நோக்கிவந்து “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? நகரில் படைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து வழிகளும் படைகளால் மூடப்பட்டிருக்கின்றன” என்றார். “மக்கள் திரண்டு இங்கு வரவேண்டாம் என்பதற்காக” என்றேன். “மக்கள் ருக்மிக்கு வணக்கம் தெரிவித்தால் அதிலென்ன பிழை?” என்றார். “எது தேவை என்பதை நான் முடிவு செய்கிறேன்” என்று நான் சலிப்புடன் சொன்னேன். “ருக்மி எல்லை மீறி கொல்லப்பட்டிருக்கிறார் என்பது உண்மை. அதை மக்கள் எவ்வகையிலோ உணர்ந்திருக்கிறார்கள். அதை ஈடுசெய்ய விரும்புகிறார்கள். மதுராவின் மக்கள் இன்னமும் அறம் சார்ந்து உளம் கொண்டிருக்கிறார்கள் என்பது நிறைவளிப்பதுதான்” என்றார்.

“அது வேறுவகையாக விளக்கப்படலாம்” என்று நான் சொன்னேன். உல்முகன் “நான் கிளம்பும்போது நிஷதனை பார்த்தேன். அவரை தந்தை வரச்சொல்லியிருக்கிறார்” என்றார். “யார்?” என்று கேட்டேன். “தந்தை அவரை உடனே பார்க்கவேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.” நான் திகைப்புடன் “ஆனால் அரசர் மது அருந்தி ஓய்வெடுப்பதாகத்தானே சொன்னார்கள்?” என்றேன். “ஆம், மதுவருந்தியிருக்கிறார், நிலையழிந்திருக்கிறார், பீடங்களிலும் தன்னைத்தானே நெஞ்சிலும் அறைந்துகொண்டு அலறி அழுகிறார். ஒவ்வொருவரையும் அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்” என்றார் உல்முகன்.

“நிஷதன் போயிருக்கலாகாது” என்றேன். “அவரை துயில்கொள்ள விட்டிருக்கவேண்டும்.” உல்முகன் “நிஷதனை அழைத்து மூன்று முறை ஏவலர் வந்த பிறகே அவர் சென்றார்” என்றார். “அவர்கள் என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லையே” என்று நான் தலையை உலுக்கினேன். “நிஷதன் உளம் குலைந்திருக்கிறார், அவர் தந்தையிடம் நிகழ்ந்ததை கூறிவிடக்கூடும்” என்றார் உல்முகன். “என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “தந்தையும் அவரும் ஒரே இயல்பு கொண்டவர்கள். அவர்களின் உள்ளத்தில் எந்த மறைசொல்லும் தங்காது. அரச மந்தணங்களைக் கூட அவர்கள் இருவரிடமும் கூறலாகாது என்பது இந்நகரின் வழக்கங்களில் ஒன்று. அதை எந்த அரசரிடம் வேண்டுமென்றாலும் சொல்லிவிடுவார்கள்” என்றார்.

நான் உடனடியாகக் கிளம்பி அரண்மனைக்கு செல்ல விரும்பினேன். ஆனால் அதில் பயனில்லை என்று தோன்றியது. நிஷதன் பலராமரை சந்தித்து உரையாடியிருந்தால் அது இந்நேரம் முடிந்திருக்கும். நான் கிளம்பிச்செல்வதற்குள் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கும். இங்கு வந்துவிட்டு ருக்மியின் உடலை படகிலேற்றுவதற்கு முன் நான் சென்றால் அது பிழையென்றும் ஆகும். ஒன்றும் செய்வதற்கில்லை. அரச முறைமைகளை முடித்துவிட்டுச் செல்வதுதான் ஒரே வழி. அமைதியை காட்டியபடி அங்கு நின்றிருந்தேன். ஆனால் என் அகம் நிலையழிந்து பதறிக்கொண்டிருந்தது. கைகளை உரசிக்கொண்டும் தலையை தடவிக்கொண்டு உடலை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டும் பொறுமையிழந்து நின்றேன்.

மையச்சாலையில் இருந்து மதுராவின் அணிக்காவல்படையினர் நூற்றெண்மர் உடைவாள்களை உருவி ஏந்தியபடி சீர்நடையிட்டு வந்து மூன்று நீள்நிரைகளாக நின்றனர். அவர்களின் முகப்பில் கவசஉடையணிந்த மூன்று வீரர்கள் மதுராவின் கொடிகளுடன் நின்றனர். தொடர்ந்து பன்னிருவர் போர்முரசுகளையும் கொம்புகளையும் ஏந்தி நின்றிருந்தனர். முகப்பில் வெள்ளிக்கோலுடன் படையிசை நடத்துநன் நின்றான். ஆயிரத்தார் படைத்தலைவன் ஒருவன் முழுக்கவச உடையில் முன்னால் வந்து நின்றான்.

விதர்ப்பத்தின் படகு துறைமேடை அருகே வந்து நின்றது. படைத்தலைவன் கையசைக்க கொம்புகளும் முரசுகளும் முழங்கின. உடைவாளை உருவியபடி மதுராவின் படைவீரர்கள் நடந்துவந்து வாள்தாழ்த்தி ருக்மிக்கு வணக்கம் அறிவித்தனர். மதுராவின் கொடி மும்முறை தாழ்த்தப்பட்டு வாழ்த்து அளிக்கப்பட்டது. படைத்தலைவன் நெஞ்சில் கைவைத்து வணங்கி “விதர்ப்ப மன்னர் ருக்மி விண்ணுலகம் எய்துக!” என்று வாழ்த்தினான். பின்னர் அந்தப் படை அவ்வண்ணமே பின்னடி எடுத்து வைத்து விலகிச் சென்றது.

ருக்மியின் உடல் அடங்கிய பேழையை படைவீரர்கள் ஏந்திக்கொண்டு படகுக்கு கொண்டுசென்றனர். குடிகளும் ஏவலரும் “விதர்ப்பர் வெல்க! மாமன்னர் ருக்மி வெல்க!” என்று கண்ணீருடன் கூவி ஆர்ப்பரித்த வாழ்த்தொலிகள் நடுவே ருக்மியின் உடல் படகில் ஏற்றப்பட்டது. பாலத்தினூடாக பிறரும் படகில் ஏறிக்கொண்டனர். ஒவ்வொருவராக படகில் ஏறி உள்ளே அமர்ந்தனர். கலக்காவலன் கொம்போசை எழுப்பினான். துடுப்புகள் வெளிவந்து நீரில் அளைய படகு மெல்ல அசைவுகொண்டு யமுனைக்கு மேல் சென்றது. அதன் மூன்று பாய்களும் விரிந்தபோது விசை கொண்டது. அதைச் சூழ்ந்து காவல் படகுகள் சென்றன.

அனைத்துப் படகுகளும் சென்று மறைவது வரை அங்கு வாழ்த்தொலிகள் எழுந்துகொண்டே இருந்தன. நான் உல்முகனின் தோளைத்தட்டி “செல்வோம்” என்றேன். அப்போது தொலைவில் மதுராவின் கொடி பறந்த அரசத்தேர் நீரலைகள் மேல் நெற்று என வருவதை கண்டேன். “தந்தை!” என்று உல்முகன் சொன்னார். என் நெஞ்சு படபடத்தது. நான் அசைவில்லாமல் நோக்கி நின்றேன். குடிகளின் வாழ்த்தொலிகள் மேலும் வெறிகொண்டன. “விதர்ப்பர் வெல்க! மாமன்னர் ருக்மி வெல்க!” அவை எக்கணமும் பலராமருக்கான பழிச்சொற்களாக உருமாறக்கூடும் என நான் அஞ்சினேன்.

தேர் வந்து நின்று அதிலிருந்து பலராமர் இறங்கி இரு கைகளையும் விரித்தபடி ஓடிவந்தார். அவருக்குப் பின்னால் நிஷதன் ஓடிவந்தார். நான் முன் சென்று “அரசே, என்ன இது?” என்றேன். மது மயக்கில் முகம் சிவந்து, கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய, பலராமர் இரு கைகளையும் தூக்கி அசைத்தபடி உடைந்த குரலில் “எங்கே என் மைந்தன்? எங்கே அவன்? ருக்மி எங்கே?” என்றார். “அரசே, சொல்வதை கேளுங்கள்… குடிகள் சூழ்ந்திருக்கிறார்கள்” என்றேன். “ஸ்ரீகரரே, இந்த அறிவிலி காயை மாற்றி வைத்திருக்கிறான். அறியாமல் செய்தாலும் அது அங்கே நிகழ்ந்தது. அதைப் பார்த்து அவன் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான். அவனை நான் கொன்றுவிட்டேன். பெரும்பழி செய்துவிட்டேன். மைந்தர்கொலை செய்யும் தந்தை என்று ஆகிவிட்டேன். என் மைந்தன் எங்கே?” என்றார் பலராமர்.

“உடல் படகில் சென்றுவிட்டது” என்றேன். “ஐயோ! ஐயோ! ஐயோ!” என்று பலராமர் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவினார். “நான் பழி செய்துவிட்டேன்! கீழ்மகனாகிவிட்டேன்!” என்றபடி அவர் கால் தளர்ந்து நிலத்தில் விழுந்தார். நான் விழிகாட்டி அனைத்துப் படைவீரர்களும் அவரை சூழ்ந்துகொள்ளச் செய்தேன். அவரை தொட்டுத் தூக்கி “அரசே, குடிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “அனைவரும் பார்க்கட்டும். இவ்வுலகமே பார்க்கட்டும். நான் பழி சூழ்ந்தவன். என் கைகளால் வளர்த்த மைந்தனைக் கொன்ற தந்தை நான். கீழ்மகன்! கீழ்மகன்!” என்று அவர் கதறினார்.

“எப்பழி கொண்டேனோ என் நகர்கள் அழிந்தன. என் மைந்தர்கள் மறைந்தனர். இப்பழி இனி எங்கு விளையுமென்றும் தெரியவில்லை. தெய்வங்களே, மூதாதையரே!” என்று அவர் அழுதார். நான் நிஷதனிடமும் உல்முகனிடமும் அவரை தூக்கும்படி கைகாட்டினேன். அவர்கள் இருவரும் அவர் இரு பக்கமும் நின்று கைகளால் தூக்கிக்கொண்டார்கள். அவர்கள் இழுத்துக்கொண்டு செல்ல புலம்பி அழுதபடி அவர் சென்றார்.