கல்பொருசிறுநுரை - 78

பகுதி ஏழு : நீர்புகுதல் – 7

ருக்மியும் பலராமரும் நாற்களத்தின் இரு பக்கங்களிலும் எதிரெதிராக அமர்ந்ததுமே உண்மையில் ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஆட்டத்தின் பகுதிகளே. அவர்கள் பெரிய அணிகளையும் ஆடைகளையும் களைந்து ஏவலரிடம் அளித்துவிட்டு இயல்புநிலை அடைந்தனர். நிஷதன் பலராமருக்கு வாய்மணம் சுருட்டி கொடுத்தார். அவர் அதை வாங்கி வாயிலிட்டு மென்றபடி புன்னகையுடன் ருக்மியை பார்த்தார்.

ருக்மி அங்கு அமர்ந்து களத்தை பார்ப்பது வரை இருந்த நம்பிக்கையையும் திளைப்பையும் இழந்து உள்ளூர அஞ்சிவிட்டதுபோல் அவர் முகம் பதற்றத்தை காட்டியது. நாற்களப் பலகையின் விளிம்பில் இரு கைகளையும் பற்றியபடி குனிந்து கால்களை பார்த்துக்கொண்டிருந்தார். ருக்மியின் களத்துணைவனாக அவருடைய படைத்தலைவன் சந்திரசேனன் அமர்ந்தான். நிமித்திகன் என் ஆணைக்காக காத்திருந்தான். அவர்கள் இயல்படைய நான் காத்திருந்தேன். அவை அவர்களை நோக்கியபடி ஓசையின்றி இருந்தது.

இருவருடைய களத்துணைவர்களும் நாற்களத்தில் கருக்களை சீராக நகர்த்தி வைத்தனர். தேர்யானைபுரவிகாலாள் படைகளும் அரசனும் அரசியும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஏவலர்களும் காவலர்களும் நிரைகொண்டனர். அவர்கள் தாங்கள் அறியாத களத்தில், தங்களால் ஆடப்படாத ஆட்டத்திற்காக ஒருக்கமாயினர். அந்த ஆடல் பகடை இல்லாதது. முழுக்க முழுக்க சூழ்திறனால் ஆடப்படுவது. நான் கைகாட்டினேன். நிமித்திகன் மேடையேறி சங்கை ஊதியதும் பலராமர் கைகாட்டினார். “தொடங்குக!” என்றார்.

போருக்கு அறைகூவப்பட்டவர் என்பதனால் முதல் ஆடலுக்கான உரிமை ருக்மிக்கு இருந்தது. ருக்மி கருக்களின் மீது கண்கள் தொட்டுத் தொட்டு நகர பதறியபடி அமர்ந்திருந்தார். முதல் கருவை நகர்த்துவது பற்றிய முடிவை அவரால் எடுக்க முடியவில்லை. அப்போதே அவ்வாட்டத்தில் எவர் தோற்கப்போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெளிவாக தெரிந்துவிட்டிருந்தது. ருக்மியின் பதறும் விரல்கள் ஒவ்வொரு காயாக வண்ணத்துப்பூச்சி மலர்களில் என பட்டு பதறி எழுந்து சென்றன. எவரோ ஏளனமாக மெல்ல முனகினர்.

பின்னர் ருக்மி ஒரு காயை முன்னால் நீக்கினார். அது அமைச்சன். எந்த வகையிலும் அவ்வாட்டத்தை அது தொடங்கி வைப்பதல்ல. பலராமர் சற்று குழம்பியபின் தானும் ஒரு காயை நகர்த்தினார், அது ருக்மியின் நகர்வுக்கு இணையான நகர்வு மட்டுமே. ஆட்டம் தொடங்கவில்லை. எவரும் எவரையும் குறி வைக்கவில்லை. ருக்மி செந்நிறம் பூசப்பட்ட நீண்ட மீசையையும் தாடியையும் கையால் உருவிக்கொண்டிருந்தார். தனக்குத்தானே தலையசைத்த பின்னர் இன்னொரு காயை நகர்த்தினார். அதுவும் எவ்வகையிலும் ஒரு சூழ்கையை அமைக்கவில்லை. பலராமர் பிறிதொரு காயை நகர்த்தினார்.

ஆட்டம் தொடங்காமலேயே நகர்ந்து கொண்டிருந்தது. சூழ்ந்திருந்த அரசர்கள் ஆவலுடனும் நாணேறிய வில்லின் இறுக்கத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும் மாறிமாறி யானைகளையும் குதிரைகளையும் நகர்த்திக்கொண்டிருந்தனர். அது உண்மையில் மொத்தப் படையையும் சற்று முன்னகர்த்தி வைப்பதாகவே இருந்தது. பலராமர் எண்ணியிராக் கணத்தில் இரு படைத்தலைவர்கள் நடுவே இருந்த அரசனை முன்னே கொண்டு சென்று ருக்மியின் அரசியை வீழ்த்தினார்.

ருக்மி திகைத்தவர்போல இரு கைகளையும் மேலே தூக்கினார், அவருக்கு ஏதோ நெறியின்மை இழைக்கப்பட்டதுபோல. பலராமரின் ஆடல்முறை என்ன என்று எனக்கு எப்போதும் தெளிவாக தெரிந்திருந்தது. அவர் நுண்ணிய சூழ்ச்சிகளை இயற்றுபவரல்ல. முழுச் சூழ்கையையும் நினைவில் வைத்துக்கொண்டு அதில் ஒரு பகுதியாக ஒவ்வொரு கருநகர்வையும் நகர்த்துவது அவரால் இயல்வதும் அல்ல. முழுப் படையையும் ஒற்றைக்காய் என்று எண்ணி விசைகொண்டு எடைகொண்டு முழுமையாகத் தாக்குவது அவருடைய வழக்கம். உருண்டு வரும் மலைச்சரிவுப் பெரும்பாறையின் பயணம்.

எதிர்த்து நின்றிருக்கும் ஆடல் அவருடையது என நான் அறிந்திருந்தேன். ஆடல் தொடங்கியபின் ஏதோ ஓர் இடத்தில் அவர் தாக்கத் தொடங்கினால் அங்கேயே தாக்கித் தாக்கி முன்னகர்ந்து ஊடுருவி உள்ளே சென்றுவிடுவார். அவ்வழிமுறை பெரும்பாலான ஆடல்களில் அவருக்கு வெற்றியை அளித்தது. நாற்களம் ஆடுவதில் அந்த முழுமுனைவு எவ்வகையிலும் உகந்தது அல்ல. அது கரவின் ஆட்டம். தன் ஆடல்முறையை அவ்வண்ணம் முன்வைப்பது எதிரியை வரவேற்பதுதான்.

ஆனால் அவருடைய இயல்புக்கு அது ஒத்துவந்தது. அவ்வண்ணமே நெடுங்காலம் விளையாடி விளையாடி அதற்குரிய வழிமுறைகளும் உளநிலைகளும் வாய்த்திருந்தன. கதையின் விசையையும் எடையையும் மட்டுமே நம்பி போரிடுபவர் அவர். மற்போரில் தோள்வல்லமையை மட்டுமே நம்புபவர். அது மதயானையின் வழி என்று நாற்களமாடலில் குறிப்பிடப்பட்டது. பெருவண்டு சிலந்தி வலையை அறுத்துச் செல்வதுபோல என்று அதை முன்பொரு சூதன் பாடியிருந்தான்.

அவருடைய ஆடலைப்பற்றி நன்கறிந்திருந்த போதிலும்கூட அதற்கெதிரான ஒரு சூழ்கையை அமைக்க ருக்மியால் இயலவில்லை. அதற்கெதிரான மிகச் சிறந்த சூழ்கை என்பது அவருக்கெதிரான வலையை அமைப்பதல்ல. அவருக்கெதிராக நிகர்விசையை செலுத்த எவராலும் முடியாது. அவரது விசையை எதையும் தாக்காமல் திசையழிந்து உழல வைப்பதுதான் நல்ல சூழ்கை. மதயானை எதையும் முட்டுவதற்கு இலக்கு கிடைக்காமல் மத்தகம் உலைய களத்தில் சுற்றியலைய வேண்டும். அது பொறுமை இழக்கவேண்டும். எஞ்சிய முழு விசையையும் எங்கேனும் தாக்கி வீணடிக்க வேண்டும்.

இறுதியில் தளர்ந்து அதுவே எங்கேனும் சிக்கிக்கொள்கையில் அதை சூழ்ந்துகொள்ளலாம். அல்லது தன்னைத் தானே சிதறடித்துக்கொண்டு அவருடைய சூழ்கை வெறும் நாற்கள கருக்களாக மட்டுமே மாறும்போது தனித்தனியாக தாக்கி வெல்லலாம். மிகக் குறைவானவர்களே பலராமரை வென்றிருக்கிறார்கள். இளையவர், சகுனி, யுதிஷ்டிரர். ஆனால் அவர்கள் எல்லாருமே மிக மிக எளிதாக அவரை வென்றார்கள். வெல்லும் போதும் தோற்கும் போதும் அவர் ஆடலை மிக விரைவாக முடித்தார்.

ருக்மியால் எந்த வகையிலும் அவரை எதிர்கொள்ள முடியவில்லை. தொடக்கத்திலிருந்தே அந்த ஆடல் ஒருபக்கம் ஓங்கி ஒருபக்கம் மேலும் மேலும் தணிந்து செல்வதாக இருந்தது. பலராமரின் அரசரும் அரசியும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்து ருக்மியின் அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும் ஓர் எல்லைக்கு கொண்டு சென்று அறைந்து அகற்றினார்கள். அப்படியே திரும்பி மறுஎல்லைக்குச் சென்று அவருடைய அரசனை அகற்றினார்கள். ருக்மி உடைந்து உடைந்து சரியும் கோட்டைபோல பின்னடைந்து சிதறினார்.

ருக்மி மிச்சமின்றி தோற்றதும் அனைத்துக் கருக்களையும் அவ்வண்ணம் வைத்துவிட்டு புன்னகையுடன் இரு கைகளையும் தூக்கினார் பலராமர். அவையிலிருந்து எவரும் வியப்பொலியும் வாழ்த்தொலியும் எழுப்பவில்லை. சிலர் சலிப்புடனும் சிலர் எரிச்சலுடனும் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தனர். மெல்லிய பேச்சொலிகள் கேட்டன. நிமித்திகன் அறிவிப்புமேடையேறி கழியைச் சுழற்றி கொம்பூதி முதற்சுற்றில் பலராமர் வென்றிருப்பதை அறிவித்தான். மீண்டும் கொம்போசை எழுந்தது, அடுத்த ஆடல் தொடங்கியது.

இரண்டாவது சுற்றிலும் பலராமரே தொடக்கத்திலிருந்து வென்றுகொண்டிருந்தார். ருக்மியை அனைத்து திசைகளிலிருந்தும் முட்டி கொண்டு சென்று ஒரு மூலையில் நிறுத்தி அறைந்து வெளியே வீசினார். ஒரு நாழிகைக்குள் அந்த ஆட்டம் முடிந்தது. நிமித்திகன் மேடையேறி பலராமரின் வெற்றியை அறிவித்தான். ருக்மியின் முகம் சிவந்து பழுத்து கண்கள் நீர்மை கொண்டிருந்தன. பற்களை இறுகக் கடித்து, தன் கைகளை விரித்து நோக்கிக்கொண்டிருந்தார்.

நான் கணிகரை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஆடல் அவ்வண்ணம்தான் முடியும். பலராமரை எவ்வண்ணமும் நாற்களத்திலோ கதைக்களத்திலோ எதிர்கொள்ள ருக்மியால் இயலாது. நாற்களமாடலில் ருக்மி தோற்று யாதவர்களுக்குரிய செல்வம் யாதவர்களுக்கே வந்து சேரும் என்றுதான் ருக்மிணி அதை சொல்லியிருக்கவும் கூடும். எனில் கணிகர் அதிலென்ன செய்தார்? ஆட்டத்தை ஏன் இங்கு கொண்டு வந்தார்? எந்த வகையான எண்ணங்களை விதைத்து அவர் ருக்மியை மதுராவுக்கு அனுப்பினார்?

என் எண்ணம் முழுக்க அங்கிலாத கணிகரை சுற்றி சென்று கொண்டிருந்தது. அங்கு அவர் மட்டும்தான் இருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பிரஃபாச க்ஷேத்ரம் அழிந்தபோது அங்கிருந்து அவர் எவ்வாறு அகன்றார்? தன்னை ஏன் மலைமேல் கொண்டுவைக்கச் சொன்னார்? அங்கே அவரை மீட்டுக்கொண்டு செல்ல வேறெவரையேனும் ஏற்பாடு செய்திருந்தாரா? பிரஃபாச க்ஷேத்ரம் அன்று அழியுமென்று அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். முன்னரே ருக்மியிடம் வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

எனில் அவர் ருக்மியை அழிப்பதற்கே எண்ணியிருக்கிறார். ஒருகணத்தில் திரை விலகியதுபோல் அனைத்தும் தெளிவாக தெரிந்தது. ருக்மி அங்கு உயிர்விடப் போகிறார். ஐயமே இல்லை, இது அவர் கொலைக்களம். ஆனால் எவ்வண்ணம்? அதை அறிய ஊழை கடந்து செல்லவேண்டும். அதை நோக்கும் அகக்கண் கணிகருக்கு உண்டு. அவர் எல்லையற்ற இருட்டை நோக்கும் விழிக்கூர் கொண்டவர்.

அதன் பின் ருக்மியின் முகத்தை பார்த்தபோது என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு தெரிந்தது, வந்து இறங்கிய கணமே ருக்மியின் ஆணவம் மிகப் பெரிதாக ஊதிப்பெருக்கப்பட்டது. அவை நுழைந்தபோது மேலும் பெருகியது. அந்த உச்சத்திலிருந்து இழிவுமிக்க தோல்வியின் கீழ்ப்படிகளில் சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அனைத்து தற்கட்டுகளும் நிலை மீறும். இழிந்த எதையோ இயற்றப்போகிறார். விளைவாக பலராமர் கையால் அவர் இறக்கவிருக்கிறார்.

ருக்மியின் அரசன் அறைபட்டு களத்திலிருந்து வெளியேறினான். அடுத்த நகர்வில் அரசியும் அதற்கு அடுத்த நகர்வில் படைத்தலைவரும் வெளியேறினார்கள். அமைச்சன் மேல் கையை வைத்தபடி ருக்மி நடுங்கினார். ஒரு சுற்றில்கூட ஒரு காயில்கூட வெற்றியை அறியாத கீழ்மை மிக்க தோல்வி. அவர் உள்ளே என்ன நிகழ்கிறது? என் உள்ளம் முள்முனையில் திகழ்ந்தது. ஒரு சரடு அங்கே முறுகுகிறது. முறுகி முறுகி அது வெடித்து முறிய முடிவெடுக்கிறது. சற்றும் எண்ணியிராக் கணத்தில் கருக்களை கையால் தட்டி வீசிவிட்டு எழுந்து உரத்த குரலில் ருக்மி கூச்சலிட்டார். “இந்தக் களம் நீங்கள் வெல்லும் பொருட்டு பொய்யாக அமைக்கப்பட்டது! இக்களத்தில் அனைத்தும் வஞ்சம்!”

அதை நான் எவ்வண்ணமோ எதிர்பார்த்திருந்தபோதிலும் கூட அத்தருணத்தில் என்னை திடுக்கிடச் செய்தது. பலராமர் அத்தனை நேரடியான சிறுமைப்படுத்தலை வாழ்நாளில் ஒருபோதும் எதிர்கொண்டவர் அல்ல. சொல்கூட எழாமல் நடுங்கியபடி “என்ன சொல்கிறாய்? ருக்மி, என்ன இது?” என்று கைநீட்டினார். “இக்களத்தில் ஆடிய கருக்கள் திரும்ப வருகின்றன. நீங்கள் ஆடிய கருக்களை உங்கள் மைந்தன் எடுத்து மீண்டும் அருகே வைக்கிறான். அவற்றை திரும்ப எடுத்து ஆடுகிறீர்கள்” என்று ருக்மி கூவினார்.

“இது சூது, இது கீழ்மை… நிகரில்லாத சிறுமை. அவையில் இத்தனை அரசர்கள் பார்த்துக்கொண்டிருக்க இது நிகழ்ந்தது என்பது கீழ்மையிலும் கீழ்மை! இதையா யாதவ மரபென்கிறீர்கள்? இதையா யாதவரின் அன்னையரின் பெண்டிரின் கற்புக்கும் நெறியாக்குவீர்கள்? இதை நம்பியா இங்கு என்னை அழைத்து வந்தீர்கள்?” என்று ருக்மி கூவினார். உடல் நடுங்க எழுந்து உரத்த குரலில் “வாயை மூடு, அறிவிலி!” என்று பலராமர் கூவினார். “இனி ஒரு சொல் உரைத்தால் உன்னை கொல்வேன்!”

“இது கீழ்மை என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது. சூழ்ச்சி செய்து என்னை வரவழைத்தீர்கள். கீழ்மையான சூழ்ச்சி ஒன்றில்லையேல் இங்கு என்னை வரவழைத்திருக்கமாட்டீர்கள்… என்னிடம் சொன்னார்கள் யாதவர் சூழ்ச்சிசெய்வார்கள் என்று. யாதவரின் கீழ்மையால்தான் அவர்களின் நகரங்கள் அழிந்தன என்றார்கள். தெய்வங்களுக்கே சினமூட்டும் சிறுமைசெய்த குலம் இது!” என்றார் ருக்மி. “என்னை சிறுமை செய்கிறாய். இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன்!” என்று பலராமர் நடுங்கி தாழ்ந்த குரலில் சொன்னார். அவரால் பேசவே முடியவில்லை.

ருக்மி அவரை நோக்கித் திரும்பி காறித்துப்பினார். “இத்தனை அரசர்கள் முன் நான்தான் சிறுமை செய்யப்படுகிறேன்” என்றார். “இதுநாள் வரை உங்களை உயர்ந்தவர் என்று நினைத்திருந்தேன். ஆசிரியன் என்று அடிபணிந்திருந்தேன். இப்போது தெரிகிறது, கள்வனும் கீழ்மகனுமான ஒருவனின் தமையன் அதைவிடக் கள்வனாகவும் கீழ்மகனாகவுமே இருக்க இயலும் என்று” என்று கைநீட்டி வெறுப்புடன் கூச்சலிட்டார்.

பலராமர் “கீழ்மகனே!” என்று கூவியபடி வலக் கையால் ஓங்கி சூதுக்களத்தை அறைந்தார். அப்பலகை பிளந்து கீழே விழுந்து முன்னால் காய்கள் சிதறின. அவர் ருக்மியை தோளிலும் கழுத்திலும் பற்றித் தூக்கி அப்பால் வீசினார். அவர் நிலத்திலிருந்து காற்றிலெழுந்து சென்று தரையில் உடல் அறைபட விழுந்து, புரண்டெழுந்து அருகே இருந்த தூணொன்றைப் பிடுங்கி அதைக்கொண்டு பலராமரை அறைய வந்தார். “கீழ்மகனே! வஞ்சகனே! சிறுமதியனே!” என்று பித்தன்போல கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். அவர்மேல் ஏதோ தெய்வம் குடியேறியதுபோல் தோன்றியது.

பலராமர் பாய்ந்து சென்று அவர் அடிவயிற்றை காலால் எற்றினார். அப்படியே துள்ளி எழுந்து அவர் நெஞ்சில் ஓங்கி உதைத்தார். பின் அவரை இரு கைகளாலும் தூக்கி அவர் முதுகெலும்பை தன் கால் மூட்டில் ஓங்கி அறைந்து உடைத்தார். அவரது துடிக்கும் உடலைத் தூக்கி அப்பாலிட்டார். ருக்மி ஓசை எதையும் எழுப்பவில்லை. அவர் ஒரு கையும் ஒரு காலும் ஓரிரு முறை இழுத்துக்கொண்டு அசைவிழந்தன.

“என்னை சிறுமை செய்த இக்கீழ்மகனை கொன்றிருக்கிறேன். எவருக்கேனும் மாற்றுச் சொல்லிருக்கிறதா? உள்ளதா மாற்றுச்சொல்? சொல்மாறு இருப்பவர் எழுக! அவருடன் இந்தக் களத்திலேயே போர்புரிந்து பூசலை தீர்த்துக் கொள்கிறேன்!” என்று பலராமர் அறைகூவினார். திரண்ட வெண்ணிறக் கைகளை மேலே தூக்கி “என்னை எதிர்ப்பவர் எவராயினும் மற்போருக்கு எழுக! அன்றி கதைப்போருக்கு வருக…” என்று கூவியபடி சுற்றிச்சுற்றி அவையை பார்த்தார்.

மகதன் “அரசே, அவன் கூறியது இழிசொல். நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். அவன் கூறியதுபோல எந்தக் கருவும் திரும்ப வைக்கப்படவில்லை. ஆகவே இப்போருக்கு அறைகூவியவன் அவன்தான். முதலில் படைக்கலம் எடுத்தவனும் அவனே. ஆகவே அவன் கொல்லப்படுவது போர்முறைகளுக்கு உகந்ததே” என்றார். “ஆம், அது முறையானதே” என்று கோசலன் சொன்னார். பிற அரசர்களும் கைதூக்கி “ஆம், முறையானதே இச்செயல்!” என்றனர்.

பலராமர் ஒருகணம் திரும்பி தரையில் உடல் உடைந்து சுருண்டு குழந்தைபோல் கிடந்த ருக்மியை பார்த்தார். அவருடைய கைகால்கள் தளர்ந்தன. சற்று பின்னடைந்து மூங்கில் தூணொன்றை பற்றி நின்றார். தலையை அசைத்து “அறிவிலி! அறிவிலி!” என்றார். வாயில் ஏதோ ஊறியதுபோல காறித் துப்பிக்கொண்டு “சிறுமகன்! சிறுமகன்!” என்றார். அவரை அணுகி அவரது மேலாடையை அளிக்க வந்த ஏவலனை புறங்கையால் தட்டி அப்பாலிட்டார். துப்பியபடியே அவையிலிருந்து வெளியே சென்றார்.

நான் நிமித்திகனிடம் அவை கலைகிறது என்று அறிவிக்கலாம் என்று செய்கையால் சொன்னேன். அவன் மேடையேறி “அவையோரே, குடித்தலைவர்களே, அரசர்களே, இந்த அவையில் இப்போது நாற்களமாடல் முடிவுக்கு வருகிறது. இதில் மதுராவின் பலராமர் வென்றிருக்கிறார், விதர்ப்பத்தின் ருக்மி தோல்வியடைந்திருக்கிறார். திகழ்க நெறிகள்! ஓங்குக தொல்மூதாதையர் புகழ்! செழிக்கட்டும் பாரதவர்ஷம்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அறிவித்தான்.

விதர்ப்பத்தின் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் சேர்ந்து ருக்மியின் உடலைத் தூக்கி கைகால்களை நன்றாக நீட்டி மல்லாந்து படுக்க வைத்தார்கள். இழுபட்டு சுளிப்புகொண்ட முகத்துடன் அவர் கிடந்தார். இளிவரலுடன் எதையோ சொல்லிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. ஒருகணம் அவர் முகத்தை பார்த்த பின் நான் திரும்பிக்கொண்டேன். விதர்ப்பத்தின் அமைச்சரிடம் “அமைச்சரே, இங்குள்ள சிற்றமைச்சர்கள் உங்களுக்கு வேண்டியவற்றை செய்வார்கள். உரிய முறையில் விதர்ப்பத்தின் அரசரின் உடலை நீங்கள் எடுத்துக்கொண்டு செல்லலாம்” என்றேன்.

“நீங்களே சான்று, இங்குள்ள நெறிகளை மீறி அரசரை போருக்கு அறைகூவியவர் அவர். சிறுமைச் சொற்களை எதிர்கொள்ள அரசருக்கு இருக்கும் ஒரே வழி போரே. ஆகவே அவர் தன் சாவை ஈட்டிக்கொண்டிருக்கிறார்” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “இங்கே ஷத்ரிய அரசர்கள் அவையென அமைந்து முடிவெடுத்து உரைத்த பின் அதற்கு விதர்ப்பம் மாற்றுரைக்க இயலாது. மாற்றென எதுவும் உண்டெனில் அதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் எங்கள் இளவரசர்கள்” என்றார் படைத்தலைவர். “ஆகுக!” என்று நான் தலைவணங்கினேன்.

அவைக்களத்தில் இருந்து அரசர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். ஏவலருக்கான வாயில் வழியாக நான் வெளியே சென்று புதுக் காற்றில் நின்று என் உடலில் வியர்வையை ஆற்றிக்கொண்டேன். என்னை அணுகிய சிற்றமைச்சர் சாமர் “சூரசேனர் தளர்ந்து விழுந்துவிட்டார். அவரை அரண்மனைக்கு அனுப்பிவிட்டேன். வசுதேவருக்கும் நெஞ்சுக்களைப்பு. அவரையும் அரண்மனைக்கு அனுப்பிவிட்டேன்” என்றார்.

“அரசர்களில் எவர் இன்று கிளம்புகிறார்கள் என்று உசாவுக!” என்றேன். “பெரும்பாலும் அனைவருமே நாளையோ மறுநாளோ கிளம்புவதாகவே சொன்னார்கள்” என்றார். “அது இந்த ஆடல் இங்கே முறையாக நிறைவுற்றிருந்தால். இன்றும் நாளையும் இங்கே ஆடலும் உண்டாட்டும் ஒருக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய சூழலில் அரசர்கள் இங்கே தங்க விரும்பமாட்டார்கள்” என்றேன். “ஆமாம், அவ்வண்ணம்தான் தோன்றுகிறது” என்றார். “கிளம்புபவர்கள் அனைவருக்கும் உரியன செய்யப்படவேண்டும். நான் வருகிறேன். அதுவரை பொறுப்பேற்று நிகழ்த்துக!” என்றேன்.

அவர் சென்றதும் உல்முகன் என்னை நோக்கி வந்தார். தணிந்த குரலில் “அமைச்சரே” என்றார். “கூறுக!” என்றேன். “ருக்மி கூறியது உண்மை. நாற்களத்தில் காய் மாற்றி வைக்கப்பட்டது” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்றேன். “அதை நான் பார்த்தேன்!” என்றார். “என்ன உளறுகிறீர்?” என்று கூவினேன். “ஒருமுறை… மெய்யாகவே அந்தக் காய் ஒருமுறை மீண்டும் வைக்கப்பட்டது” என்றார். நான் மூச்சொலியாக “யார்?” என்றேன்.

“அருகே அமர்ந்த உதவியாளராகிய மூத்தவர் நிஷதனின் கை அவ்வாறு செய்தது. அதை அவர் வேண்டுமென்றே செய்தாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வெளியே சென்ற காய் மீண்டும் களத்திற்கு வந்தது. அதை ருக்மி கண்டார். ஆனால் தந்தை தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்ததனால் சற்று பிந்திதான் அது அவர் கண்ணில் இருந்து உள்ளத்திற்குச் சென்றது. அவர் அதை கூறும்போது பலமுறை கருநீக்கங்களும் ஆடலும் முன்னகர்ந்துவிட்டிருந்தன” என்றார் உல்முகன்.

நான் வாயால் மூச்சுவிட்டுக்கொண்டு நெஞ்சில் சொல் அடைத்துக்கொள்ள அதைக் கேட்டு நின்றேன். பின்னர் “உங்கள் விழிமயக்காகக் கூட இருக்கலாம்” என்றேன். “மூத்தவரிடம் கேட்டுப் பாருங்கள். தந்தைக்கு அது தெரியாது. அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. மூத்தவர் இதை அறியாது செய்திருக்கலாம். அவர் கைபதறிக் கொண்டிருப்பதை கண்டேன்” என்றார் உல்முகன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே நிஷதன் எங்கள் அருகே வந்தார். தலைகுனிந்து நடுங்கிக்கொண்டு நின்றார் நான் “கூறுக!” என்றேன். “நீங்கள் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருமுறை கரு மாற்றி வைக்கப்பட்டது” என்றார். “எவ்வாறு?” என்றேன். “தெரியவில்லை. நான் ஆட்டத்தில் விழி நட்டிருந்தேன். ஆடவேண்டிய கருவுக்கு பதிலாக ஆடிமுடித்த கருவை வைத்தேன். கைமறதியாக வைத்ததுமே அதை உணர்ந்தேன். பிழை செய்துவிட்டேன் என்று பதறினேன்.”

“ஆனால் தந்தை வெறிகொண்டு தாக்கிக்கொண்டிருந்தார். ஆட்டம் ஏறத்தாழ முடிந்து அனைத்தும் நிறைவடையவிருந்தது. ஆகவே அதை நான் வெளிப்படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று நினைத்தேன். அவையிலும் எவருமே அதை பார்க்கவில்லை. ஆட்டம் எல்லா சுற்றிலும் தந்தையே வெல்லும்படிதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்கருவை மாற்றிவைத்து திரும்ப ஆடினாலும் தந்தைதான் வெல்லப்போகிறார், என்ன மாற்றம் வந்துவிடப் போகிறதென்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்” என்று நிஷதன் தொடர்ந்தார்.

“ருக்மி அதை அறியவில்லை என்று நினைத்தேன். அவர் கண்களிலிருந்து சித்தத்திற்குப் போக அவ்வளவு பிந்துமென்றும் எனக்கு தெரியவில்லை. அமைச்சரே, இப்பிழையை ஆற்றியவன் நான். இதற்கு முழுப் பொறுப்பு நான் மட்டுமே. அதற்காக எந்தப் பிழைநிகர் செய்யவும் நான் ஒருக்கமே” என்றார் நிஷதன். “என்ன நிகழ்ந்தது என்று எங்கும் நான் சொல்கிறேன்… சூழ்ச்சி என்றோ வஞ்சமென்றோ சொல்லப்பட்டாலும் சரி.”

“இதை இப்போது நீங்கள் வெளிப்படுத்த வேண்டியதில்லை. இது மேலும் சிக்கல்களையே உருவாக்கும். இது நம் மூவருக்கும் மட்டுமே இப்போது தெரியும். அவை கலைந்துவிட்ட பிறகு இனி இதை அவர்கள் தரப்பில் எவர் கூறினாலும் இது தோல்வியினால் கூறப்படும் வெற்று அலர் என்றே பொருள்படும்” என்றேன். “ஆனால் ஒன்றுண்டு, இதை எவர் அறிந்தாலும் பலராமர் அறியக்கூடாது. ஒருபோதும் அவர் செவியில் இச்செய்தி சென்று சேரக்கூடாது எனில் நாம் மூவரும் முற்றிலும் நாவடங்க வேண்டும். நான்காவது ஒருவரிடம் இச்சொல் சென்று சேரலாகாது” என்றேன். நிஷதன் ஆம் என்று தலையசைத்தார்.