கல்பொருசிறுநுரை - 71
பகுதி ஆறு : படைப்புல் – 15
தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில் கூறி முடிப்பதே உகந்ததாக இருக்கும். எனினும் எண்ணி எண்ணி எடுத்து, சொல் சொல்லெனக் கோத்து, அதை நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நூறு முறை ஆயிரம் முறை என் உள்ளத்தில் அக்காட்சிகளை மீண்டும் விரித்துக்கொண்டேன். இங்கு தேடிவரும் இந்நீண்ட பயணத்தில் என் உள்ளத்தில் நிகழ்ந்தது அது மட்டுமே.
ஆனால் இன்றுகூட அங்கே என்ன நடந்தது என்று என்னால் சொல்லிவிடமுடியாது. அந்த நாணல்மது எங்கள் அனைவரையும் முற்றிலும் நிலையழியச் செய்திருந்தது. காட்சிகள் உடைந்து உடைந்து இணைந்து மீண்டும் சிதறின. கடந்தகாலக் காட்சிகளும் கற்பனைகளும் நிகழ்வுகளினூடாக கலந்தன. தந்தையே, அங்கே நீங்கள் இருப்பதுபோல நான் கண்டேன். அன்னையரும் மைந்தரும் இருப்பதுபோல கண்டேன். தேவர்களும் தெய்வங்களும் ஊடே அலைவதுபோல கண்டேன். எவர் எவரை கொன்றனர் என்று என்னால் இப்போதும் நினைவுகூர முடியவில்லை. நினைவுகள் என எழுவன அந்த மாபெரும் பித்துவெளியிலிருந்தே ஊறிக்கொப்பளித்து அணைகின்றன.
சாத்யகியின் தலை துண்டாகி கீழே விழுந்ததை கண்டேன். கையில் குருதி சொட்டும் வாளுடன் நின்ற கிருதவர்மன் அதை தலைக்குமேல் தூக்கி கூச்சலிட்டார். “கொல்லுங்கள். நம்மை இழிவு செய்த ஒவ்வொருவரையும் கொன்று அழியுங்கள். அந்தகர்களின் கூட்டத்தை கொன்று அழியுங்கள்.” நான் தலைசுழல குமட்டி வாயுமிழ்ந்தேன். கையூன்றி கண்ணீர் வழிய தலைதூக்கி பார்த்தேன். கையில் வாளுடன் நின்றிருந்தவர் சாத்யகி. கீழே துண்டான தலையுடன் கிருதவர்மன் கிடந்தார். கிருதவர்மனின் கால்கள்தான் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்தன.
அவரைச் சூழ்ந்து எட்டு கைகள் கொண்ட கவந்த உடலும் அதன்மேல் இளிக்கும் வாயில் வெண்பற்கள் நிறைந்த தலையும் கொண்ட சிலந்தி வடிவமான பாதாளதேவர்கள் நால்வர் சுற்றிவந்து நடனமிட்டனர். அவர்களின் நிழல்கள் தனியாக நாகங்கள்போல நெளிந்தன. வௌவால்கள்போல தலையை கீழே தாழ்த்தி கரிய சிறகுகள் கொண்ட இருட்தேவர்கள் காற்றில் சுற்றிப்பறந்தனர். தரையெல்லாம் புழுக்கள். அவற்றின்மேல் துள்ளித் துள்ளிச் சுழன்றன நெளியும் வால்கள் கொண்ட தவளைமுகமான கீழுலகத்து இருப்புகள்.
சூழ்ந்திருந்த அனைவரும் முதலில் அதுவும் ஓர் இளிவரல் நடிப்பென்பதுபோல் சிரிப்புறைந்த வாயுடன் செயலற்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூத்தவர் ஃபானுவின் அருகே பெரிய வெண்புழுக்கள்போல நெளியும் எட்டு கைகளுடன் ஒரு பெண் நின்று அவரை வருடிக்கொண்டிருந்தாள். பிரத்யும்னனின் மேல் சிவந்த சீழ்போல வழியும் உடல்கொண்ட ஒரு பெண் துவண்டு கிடந்தாள். எங்கள் நடுவே கரிய ஓடை ஒன்று சுழித்தோடியது. அது உருவமில்லாமல் நெளிந்துகொண்டே சென்ற முடிவிலாத ஒரு புழு.
அங்கே விரிக்கப்பட்டிருந்த நாணல் கம்பளத்திலிருந்தே அவை எழுகின்றன என்பதை கண்டேன். நாணலில் அந்த உருவங்களை பின்னி வரைந்திருந்தார்கள். அவை புடைத்தெழுந்து உயிர்கொண்டன. எனில் எவரோ அவற்றை வேண்டுமென்றே படைத்திருக்கிறார்கள். ஆனால் அவை நீர்ப்பாவைகள்போல உருமாறிக்கொண்டும் இருந்தன. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் துண்டுகளாக பிரிந்தும் அவை வெவ்வேறு வடிவங்களாயின. உயிர்கொண்டு எழுந்து சீறின, சினந்து வால் நெளிந்தன.
மணலில் விழுந்து அந்த உடல் துடித்து கைகளும் கால்களும் இழுத்துக்கொள்வதைக் கண்டு எந்த ஓசையும் எழவில்லை. பின்னர் எவரோ வெறிகொண்டு அலறி ஓடிவந்து அவ்விசையிலேயே முன்னால் விழுந்து “ரிஷபவனத்து மூதாதையே! எந்தையே!” என்று கூவினார்கள். எனில் அது சாத்யகிதான். ஆனால் அப்பால் பலர் “அந்தகர் கொல்லப்பட்டார்! அந்தக மூதாதையை விருஷ்ணிகள் கொன்றுவிட்டார்கள்!” என்று ஓலமிட்டனர். அந்தகர்களின் குடித்தலைவர்கள் ஓடிவந்து அப்பிணத்தின் கால்களை பற்றிக்கொண்டனர். “எந்தையே! எந்தையே!” என்று கூச்சலிட்டார்கள்.
மறுகணம் அனைவருக்குள்ளும் அந்தச் செய்தி சென்றடைந்தது. ஒவ்வொருவரும் அலறிக்கூச்சலிடத் தொடங்கினர். எங்கோ எவரோ “அந்தகக் குடி மூத்தார் கிருதவர்மன் கொல்லப்பட்டார்! விருஷ்ணிகளால் அந்தகர் கொல்லப்பட்டார்!” என்று கூச்சலிட்டனர். ஃபானுமான் பாய்ந்து சுஃபானுவுக்கும் ஃபானுவுக்கும் மீதாக தாவி வந்து “கொல்லுங்கள்! விருஷ்ணிகள் அனைவரையும் கொல்லுங்கள்! எந்தை குருதி வீழ்ந்த இந்த மண்ணை அந்தக் குருதி கொண்டு கழுவுவோம்! எழுக! எழுக! எழுக! அந்தகப் படை எழுக!” என்று கூவினான்.
ஃபானு தவிப்புடன் “இளையோனே! இளையோனே!” என்று கூவுவதற்குள் சாத்யகி தன் வாளைச் சுழற்றியபடி முன்னால் பாய்ந்தார். ஃபானுமானும் ஸ்ரீபானுவும் சாத்யகியை வெட்ட முயன்றனர். சாத்யகி அவர்களை வாளால் தடுத்தார். அதற்குள் அப்பகுதியில் போர் தொடங்கிவிட்டிருந்தது. விருஷ்ணிகுலத் தலைவர் ஒருவர் “எழுக! விருஷ்ணிகளின் படை எழுக!” என்று கூவினார். சாம்பன் “கொல்லுங்கள்! கொல்லுங்கள்!” என்று கூவியபடி தன் கையிலிருந்த நீண்ட நாணல்தண்டு வேலைச் சுழற்றியபடி கூட்டத்தின் நடுவே பாய்ந்தார். அவரை கிருதவர்மன் எதிர்கொண்டார். அவர்கள் நாணல்தண்டுகளை வேல்களாகச் சுழற்றி போரிட்டனர்.
தந்தையே, அந்தக் குடிக்களியாட்டு ஓய்ந்த பின் மாலையில் அங்கே வில்விளையாட்டும் வேல்விளையாட்டும் நடைபெறுவதாக இருந்தது. லோகநாசிகையின் நாணல்தண்டு எளிதில் ஒடியாததும் விசைமிக்கதுமான வில்கழி. அதன் சிறுதண்டுகள் அம்புகள். அவற்றை அங்கே குவித்து வைத்திருந்தனர். எவரோ ஓடிச்சென்று அக்குவியலில் இருந்து வில் ஒன்றை எடுத்தனர். உடனே குவிந்திருந்த விற்கள் மேல் பாய்ந்து ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் எவருமே விழிப்புள்ளம் கொண்டிருக்கவில்லை. “கொல்லுங்கள்! அந்தகர்களை கொல்லுங்கள்!” என்று அந்தகர்களே கூவிக்கொண்டிருந்தனர். “பேயுருவங்கள்! பேய்கள் நுழைந்துவிட்டன. கொல்லுங்கள் பேய்களை!” என்று சிலர் கூவினர்.
அவர்களுக்குள் இருந்தே அனைத்தும் தோன்றின. அந்தகர்களுக்கும் போஜர்களுக்கும் ஹேகயர்களுக்கும் விருஷ்ணிகளுக்கும் இடையே நீடுநாட்களாக நொதித்த வஞ்சம் அவர்களின் எதிரிகளை உருவாக்கியது. அந்த வஞ்சம் அச்சமென்றும் ஐயமென்றும் வெறுப்பென்றும் ஆகி இறுகி உருவான தெய்வங்கள் பேருருக்கொண்டன. அவை “கொல்! கொல்! கொல்!” என அறைகூவின. எதிரி என எழுந்து வந்து கண்முன் நின்றன.
ஒவ்வொருவரும் செவிவரை இழுத்து அம்புகளை தொடுத்தனர். அம்புகளை இழுப்பதில் தெரிகிறது உள்ளத்தின் விசை. வெறிகொண்டவர்களே அப்படி அம்புகளை இழுக்கமுடியும். சினமும் வஞ்சமும் மட்டுமே அந்த வெறியை உருவாக்க முடியும். சிலர் உடைவாட்களால் நாணலை வெட்டி அங்கேயே இணைத்து வில்லென ஆக்கிகொண்டனர். அம்புகள் என நாணல்கள் பறக்கத்தொடங்கின. அவற்றின் விசையும் விரைவும் வியப்படைய வைத்தன. பெரும்பாலும் அவை குறிதவறவில்லை. அங்கு எவரும் கவசங்கள் அணிந்திருக்கவில்லை என்பதனால் அவை நெஞ்சிலும் விலாவிலும் புதைந்து மறுபக்கம் வரை பாய்ந்து நின்று வால் துடித்தன.
தந்தையே, அந்த நாணல் அம்புகளை இப்போது கூற்றென நினைவுகூர்கிறேன். அவற்றின் மேல்நுனியில் இருந்த புல்லிலைகள் சிறகென அமைந்து அவற்றுக்கு விசை கூட்டின. அவற்றின் எடை குறைவுமின்றி மிகையுமின்றி மிகச் சரியாக அமைந்திருந்தது. அவற்றின் கீழ்முனையை ஒரே வீச்சில் சரித்து வெட்டினால் கூரிய அம்பு அமைந்தது. அது உலோகம்போல் இறுகி எடைகொண்டிருந்தது. கீழே எடைமிகுந்து வால்நுனியில் எடையில்லாமலிருந்தமையால் காற்றை அலகால் கிழித்து பறக்கும் பறவை என அவை சென்றன. எந்த திசைதிரும்பலும் இன்றி காற்றில் மிதந்து சென்று இலக்கடைந்தன. உள்ளே நுழைந்து குருதி உண்டன.
ஒவ்வொருவரும் பிறிதொருவரை கொன்று கொண்டிருந்தனர். பிரத்யும்னன் பாய்ந்து சாரகுப்தனின் மேலேறி சுஃபானுவை வெட்டி வீழ்த்தினார். சாம்பனும் அவருடைய இளையவர்கள் சகஸ்ரஜித்தும் சதாஜித்தும் ஃபானுவை எதிர்த்தனர். ஃபானுவை அவர்கள் அம்புகளால் அறைந்துகொண்டே இருந்தனர். உடலெங்கும் அம்புகள் நின்றிருக்க அவர் முடிசிலிர்த்த இலைப்புழுபோல கிடந்து நெளிந்தார். கிருதவர்மனை பிரத்யும்னனும் சந்திரஃபானுவும் சூழ்ந்துகொண்டார்கள். அவர் நிலத்தில் விழுந்து துடித்தபோது சாத்யகியாக தெரிந்தார்.
தந்தையே, அங்கு நிகழ்ந்த அருங்கொலையை எவ்வகையிலும் என்னால் விளக்க முடியாது. எல்லா கொலைகளுமே பொருளற்றவை. ஆனால் பொருளின்மையன்றி வேறேதும் இல்லாத கொலை அது. சாம்பன் தன் இளையோரை தானே கொன்றார். சித்ரகேதுவையும் வசுமானையும் கழுத்தரிந்து கொன்ற பின் அவர் வெடித்துச் சிரிப்பதை நான் கண்டேன். பிரஃபானு தன் இளையோன் ஸ்வரஃபானுவை அம்பால் கொன்றார். கொன்றபடியே இருந்தனர். இறந்து விழுந்தபடியே இருந்தனர்.
விழுந்த உடல்களை எட்டி உதைத்தனர். அவர்களின் நெஞ்சிலும் கன்ணிலும் நாணல்வேல்களால் குத்தினர். உடல்களில் மிதித்து நின்று வெறிநடனமிட்டனர். தந்தையே, சிலர் தங்கள் உடன்பிறந்தாரின் குருதியை அள்ளி முகமெங்கும் பூசி சிரித்து வெறிகொண்டாடுவதை கண்டேன். சிலர் குருதியை அள்ளி அள்ளி குடிப்பதை கண்டேன். பிரகோஷன் தன் நேர் இளையோனும் இணைபிரியாது உடனிருந்தவனுமான காத்ரவானின் தலையை தலைமுடியைப் பற்றி தூக்கியபடி சிரித்துத் தாண்டவமாடுவதை கண்டேன்.
ஒவ்வொருவரும் குருதியை விரும்பினார்கள். ஒவ்வொருவரும் சாகவும் விரும்பினர் என்று பட்டது. அங்கே எவருமே கவசங்கள் அணிந்திருக்கவில்லை. எவருமே தங்களை நோக்கி வரும் படைக்கலங்களை தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை. அதற்கு முயலக்கூட அவர்களால் இயலவில்லை. எளிய பூச்சிகள்போல செத்து நிலம்பதிந்தனர். அவர்கள் மேல் கால்கள் மிதித்துச் சென்றபோது இளித்த வாயில் நிலைத்த நகைப்புடன் ஆம் ஆம் என தலையசைத்தனர்.
நான் மட்டும் வேறெங்கோ இருந்தேன். “வேண்டாம்! வேண்டாம்!” என்று கூவிக்கொண்டிருந்தேன். “பிரத்யும்னரே, வேண்டாம்! அநிருத்தா, விலகுக!” என் குரல் அங்கே எழுந்த ஓலங்களில் குமிழியென ஓசையில்லாமல் வெடித்தழிந்தது. நான் அங்கிருந்து விலகி ஓடி காவல்மாடம் ஒன்றின் மேல் ஏறி அங்கிருந்த அறிவிப்பு முரசை வெறிகொண்டவனாக அறைந்தேன். “அமைக! அமைக! அசைவழிக!” என்று முரசு ஒலி எழுப்பியது. “அடங்குக… அணிசேர்க!” என்று அது குமுறியது. நான் கண்ணீருடன் முரசை அறைந்துகொண்டிருந்தேன். ஆனால் ஒருவர் கூட அதை கேட்கவில்லை.
ஒருகணத்தில் உணர்ந்தேன், அந்தக் கொலையை அங்கு செய்துகொண்டிருந்தது அந்த நாணல்தான். அதுவே அரியணையும் பந்தலும் விரிப்பும் ஆயிற்று. அதுவே கள்ளென்று அனைவரின் உள்ளத்தையும் நிறைத்தது. அதுவே வில்லும் அம்பும் வேலும் என்றாகி அவர்களைக் கொன்று குருதி உண்டது. யாதவக் குடியே அங்கே முற்றாக அழிந்துகொண்டிருந்தது. எழுந்து பொலிந்த நுரைக்குமிழிகள் உடைந்து வற்றி மறைவதுபோல. சுருதன் ஃபானுமானை கொன்றார். அவரை வீரா கொன்றார். அவரை அநிருத்தன் கொன்றான். அநிருத்தனை அவன் தந்தையான பிரத்யும்னனே கொன்றார். பிரத்யும்னனை அவருடைய இளையோனாகிய பரதசாரு கொன்றான்.
முரசின் மேலேயே கோலை விட்டுவிட்டு நான் விழிமலைத்து நோக்கியபோது ஓர் உருமயக்கக் காட்சி எனக் கண்டேன், அந்த நாணல்கள் அனைத்துமே பாம்புகளாகிவிட்டிருந்தன. அம்புகளும் விற்களும் வேல்களும் நாகங்கள். அந்தப் பந்தல்கால்கள் எல்லாமே நாகங்கள். நாகங்கள் பின்னி உருவான பந்தல். நாகங்களால் ஆன அரியணை. நாகங்கள் கொண்டு முடைந்த தரை. அப்பால் நாகங்கள் இலைகளென படமெடுத்துச் செறிந்த காடு. நாகங்கள் சீறிப்பறந்தன. கொத்தி துளைத்தன. நின்று நெளிந்தன. துடித்துத்துடித்து உடல்புகுந்தன. துளைத்து மறுபக்கம் வந்து மண்ணை முத்தமிட்டன.
அப்போது அந்தக் களத்தில் நான் உங்களை கண்டேன், தந்தையே. அந்தப் பூசல்நிலத்தின் மறு எல்லையில் விற்போர் பார்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த நாணல்மேடையில் நீங்கள் அமர்ந்திருந்தீர்கள். உங்களருகே விஸ்வாமித்ரர் இருந்தார். உங்கள் இருவர் முகங்களும் நகைப்பில் என பொலிந்திருந்தன. ஒரு பெருங்களியாட்டை பார்க்கும் உவகையுடன் அந்த கொலைக்கூத்தாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.
தந்தையே, தொல்புகழ்கொண்ட யாதவ நெடுங்குடியில், உங்கள் குருதியில் முளைத்து துவாரகையில் பெருகிய மைந்தர் எண்பதின்மரில் இன்று நான் ஒருவன் மட்டிலுமே உயிருடன் இருக்கிறேன். அங்குள்ள யாதவக்குடி மக்களில் பெண்டிரும் குழ்ந்தைகளும் என மிகச் சிலரே எஞ்சினார்கள். கொலைக்களியாட்டு முடிந்தபோது அங்கே நிலமெங்கும் இடைவெளி இல்லாமல் பரவிக்கிடந்தன உடல்கள். எஞ்சிய ஓரிரு வீரர் இறுதி ஆற்றலையும் தொகுத்து எழுந்து அப்போதும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். உதிரிக் குமிழிகள் வெடிப்பதுபோல ஆங்காங்கே சிலர் எழுந்தனர். அவர்களை வேறு சிலர் வெட்டி வீழ்த்தினர்.
பின்னர் ஆழ்ந்த அமைதி. அந்த உடற்பரப்பை நான் வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கே உயிர் ஏதேனும் எஞ்சுமா என்று. ஒருவன் தள்ளாடி கையூன்றி எழுந்தான். திகைத்து சுற்றிலும் பார்த்தான். கோணலான உதடுகளுடன் சூழ நோக்கி பின்னர் வெடித்துச் சிரித்தான். அவ்வோசை கேட்டு அப்பால் கிடந்த ஒருவன் எழுந்தான். தன் கையிலிருந்த நாணல்வேலை அவனை நோக்கி வீசிவிட்டு விழுந்து இறந்தான். நாணல் பாய்ந்தவன் மறுபக்கமாக விழுந்தான். மீண்டும் நெடுநேரம். யுகங்களெனக் கழிந்த நேரம்.
மீண்டும் ஒருவன் எழுந்தான். அவன் உடலெங்கும் குருதி. அவன் சுற்றிச் சுற்றி நோக்கினான். தள்ளாடியபடி பிணங்கள் நடுவே நடந்தான். கால்களால் ஒவ்வொருவரையாக உதைத்து அழைத்தான். சுற்றி நோக்கி கூவினான். அலறலோசை எழுந்து அந்தப் பாழ்வெளியை நிறைத்தது. அந்த நிலமே அலறுவது போலிருந்தது. சூழ்ந்திருந்த நாணல்கள் இலையசைத்து உடல்நெளித்து அவனை பார்த்துக்கொண்டிருந்தன. அவன் தலையில் வெறிகொண்டு அறைந்து அறைந்து கூச்சலிட்டான். பின்னர் கீழே கிடந்த அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை கிழித்துக்கொண்டு அப்பிணக்குவியல்களில் விழுந்து அவற்றை அணைத்துக்கொண்டு துடித்து அடங்கினான்.
அவனே இறுதி என ஐயமின்றி தெரிந்தது. அந்தச் சடலங்கள் மாலைவெயிலில் வெறித்த சிரிப்புடன், அசைவிலா குமிழிகள் என துறித்த விழிகளுடன் கைகாலுடல்தலைக் குவியலாக அங்கே கிடந்தன. எஞ்சிய மகளிரும் குழந்தைகளும் முன்னரே அலறி ஓடி தங்கள் இல்லங்களுக்குள் புகுந்துகொண்டுவிட்டிருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஓசையின்றி நடுங்கிக்கொண்டிருந்தனர். முற்றாக ஓசையழிந்ததும் அவர்களில் ஒருத்தி கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவர் அஸ்தினபுரியின் அரசி கிருஷ்ணை என்று கண்டேன். அவிழ்ந்து திரிகளாகத் தொங்கிய குழலை அள்ளிச் சுழற்றி முடிந்து கொண்டையாக ஆக்கியபின் அவர் திரும்பி தன் குடிலுக்குள் ஒளிந்திருந்தவர்களை அழைத்தார்.
உள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர். குழவிகள் அன்னையருடன் ஒட்டிக்கொண்டிருந்தன. சிறுவரும் சிறுமியரும் அன்னையரின் ஆடைகளை பற்றிக்கொண்டு அவர்களின் உடலுக்குள் புக விழைபவர்கள்போல தங்களை ஆடைகளால் மூடிக்கொண்டு அவர்களை நடைபின்னச் செய்தனர். கிருஷ்ணை ஆணையிட அவருடன் வந்த சேடி ஒருத்தி குடிலுக்குள் இருந்து ஒரு சங்கை எடுத்துவந்து ஊதினாள். மீண்டும் மீண்டும் என அந்த ஓசை எழுந்தது. அது ஒரு அன்னைப்பறவையின் அகவல் என கேட்டது.
கதவுகளைத் திறந்து பெண்டிர் வந்துகொண்டே இருந்தனர். அவர்கள் ஓர் அணி என திரண்டனர். கிருஷ்ணை அவர்களுக்கு தலைமைகொண்டார். அவருடைய கையசைவுகளை கொம்பொலியாக மாற்றினாள் சேடி. அவர்கள் அந்த கொலைக்களத்தை நோக்கினர். எவரும் அதை நோக்கி ஓடவில்லை. தங்கள் கொழுநரையோ மைந்தரையோ தேட விழையவில்லை. அந்தத் திரளை அவர்கள் அருவருத்ததுபோல, அங்கிருந்து விலகிச்செல்ல விழைவதுபோலத் தோன்றியது. அவர்களின் நிரை அக்களத்தை முற்றாக விலக்கி அப்பால் வளைந்து சிந்துவின் புறநீர்ப் பரப்பு நோக்கி சென்றது.
புறநீர்ப் பரப்பில் வணிகப்படகுகள் சிற்றலைகளில் ஆடி நின்றிருந்தன. கிருஷ்ணை ஆணையிட அவர்கள் சீராக அவற்றில் ஏறிக்கொண்டனர். அனைவரும் ஏறிக்கொண்டதும் படகுகள் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டன. நீரிலேறி துடுப்புகளால் அலைதுழாவி அகன்று சென்றன. அவை வாத்துக்கூட்டம் என சென்று மறைவதை காவல்மாடத்தில் உடல் ஓய்ந்து விழிநீரும் வற்றி நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் சென்ற பின்னர் நான் மெல்ல இறங்கி கீழே வந்தேன்.
நான் எண்ணியதுபோல அனைவரும் செத்துவிட்டிருக்கவில்லை. ஆழ்ந்த புண்பட்டவர்கள் பலர் எஞ்சிய உயிருடன் முனகிக்கொண்டிருந்தார்கள். நான் “யார் இருக்கிறீர்கள்? யார் எழும்நிலையில் இருக்கிறீர்கள்?” என்று கூவியபடி ஒரு கழியை ஊன்றி பிணங்கள் நடுவே உலவினேன். ஆனால் புண்பட்டவர்கள் கள்ளில் மயங்கி இருந்ததனால் தலை தூக்கி மறுமொழி உரைக்கும் நிலையில் இல்லை.
அந்த நாணல்மது ஒவ்வொருவருக்கும் குருதியை இளகச்செய்திருந்ததனால் சிறிய புண்ணே நிலைக்காத குருதிப்பெருக்கை உருவாக்கி அவர்களை உயிரிழக்கச் செய்துகொண்டிருந்தது. குருதி வழிய வழிய அவர்கள் நினைவு குழம்பினர். சித்தம் மயங்கியதும் உயிர்வாழ வேண்டுமென்ற வேட்கையையும் இழந்தனர். மேலும் குருதி வழிந்து மேலும் நினைவழிய வேண்டுமென்றே அவர்கள் விரும்புவதுபோல தெரிந்தது. அவர்களின் விழிகள் கனவிலென மயங்கியிருந்தன. பலர் முகங்கள் இனிய புன்னகையால் ததும்பிக்கொண்டிருந்தன.
ஒருவர்கூட தன்னை காப்பாற்றும்படி கோரவில்லை. ஒருவர்கூட தன் உயிரை காத்துக்கொள்ள எழுந்தோடவோ தவழ்ந்து அகலவோ முயலவில்லை. கண்ணுக்குத் தெரியாத தெய்வமொன்றுக்கு தன்னை பலியென அளிப்பவர்கள்போல் அந்த நிலத்தை அடைத்தபடி கிடந்தனர். அங்கே காலமே பருவடிவென்றாகிச் சூழ்ந்ததுபோல, ஒவ்வொருவரும் தங்களை அதில் மூழ்கடித்து மறைய விரும்புவதுபோல தோன்றியது.
அங்கே எழுந்துகொண்டிருந்த விலங்குகளின் ஓசையை அதன் பின்னரே நான் கேட்டேன். வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று கொட்டில்களிலும் தொழுவங்களிலும் இருந்த அனைத்து காளைகளையும் பசுக்களையும் எருமைகளையும் புரவிகளையும் அத்திரிகளையும் கட்டறுத்துவிட்டேன். யானைகளின் சங்கிலிகளை விடுவித்தேன். அவை உறுமிக்கொண்டும் கூவிக்கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்நிலத்திலிருந்து எரியனலிலிருந்து பறவைகள் அகல்வதுபோல் ஓடி அகன்றன.
தந்தையே, நான் மேலும் ஒருநாள் அங்கிருந்தேன். உணவின்றி நீரின்றி. அதில் ஒருவரேனும் எழுவார்களா என வீணில் எதிர்பார்த்தபடி. நாய்களும் நரிகளும் தேடி வரத்தொடங்கின. வானிலிருந்து கரிய சிற்றலைகள் என சிறகடித்து கழுகுகள் வந்தமர்ந்து எழுந்து பூசலிட்டன. நான் அப்பெருநிலத்தில் ஏழு இடங்களில் அனலிட்டேன். பிரஃபாச க்ஷேத்ரத்தின் நாணல் மாளிகைகள் மிக எளிதாக பற்றி எரியத்தொடங்கின. அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது.
வெம்மையும் அனலும் சூழ என் கண்முன் பிரஃபாச க்ஷேத்ரம் தழல்குளம் என்றாயிற்று. அதன் செவ்வனல்பரப்புக்கு மேல் நீலத்தழல் அலைகொண்டது. வெடித்து வெடித்துச் சீறி தழலுமிழ்ந்தது அந்த சாவுப்பரப்பு. என் உற்றார், உடன்பிறந்தார், குடியினர் அனைவரும் அங்கு எரிந்துகொண்டிருந்தனர். மாபெரும் வேள்வி ஒன்றின் எரிகுளம் என பிரஃபாச க்ஷேத்ரம் விண்கீழ் நின்றிருந்தது. அத்தழலைப் பார்த்தபடி வணங்கினேன்.
நான் ஏன் உயிருடன் எஞ்சியிருக்கிறேன் என்ற திகைப்பை அதன் பிறகுதான் அடைந்தேன். நான் உயிருடனிருப்பதே ஒவ்வாததாகத் தோன்றி திடுக்கிடச் செய்தது. பின்னர் தெளிந்தேன், நான் வாழ்வது இவையனைத்தையும் உங்கள் முன் வந்து உரைப்பதற்காக மட்டுமே. நீங்கள் இவற்றை கணந்தோறும் நிகழும் காட்சி என்று காணவேண்டும் என்பதற்காக. இது நீங்களே வகுத்ததாகக் ட இருக்கலாம். அதன்பொருட்டே இத்தனை நெடுந்தொலைவைக் கடந்து இங்கு வந்தேன். இதோ உரைத்துவிட்டேன்.
காளிந்தியின் மைந்தனாகிய சோமகன் சொன்னான். “தந்தையே, உங்களிடம் பிறிதொன்று எனக்கு கூறுவதற்கில்லை. உங்கள் மைந்தன் என கேட்பதற்கும் பெறுவதற்கும் ஒன்றுமில்லை. பொறுத்தருளும்படி கோரவோ பிழையுணர்ந்துவிட்டேன் என்று உரைக்கவோகூட இன்று நான் தகுதி உடையவன் அல்ல. என் கடன் முடிந்தது.”
அவனுடைய சொற்களை இளைய யாதவர் விழிதழைந்திருக்க கைகள் மடியில் விரல்கோத்துப் படிய அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். கருவறைத்தெய்வம் என, கல் என அங்கிருந்தார். அவருடைய தலையில் அந்தப் பீலிவிழி அவனை நோக்கிக்கொண்டிருந்தது.
அவன் அவரை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றான். முற்றத்தைக் கடந்து, சிறுபாதையினூடாக ஊர்மன்றைக் கடந்து தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் அச்சிற்றூரை நீத்து சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே வளைந்தெழுந்து மேலே செல்லும் பாதையினூடாக மேலேறிச் சென்று மலைமுகட்டில் நின்றான். திரும்பி அந்த ஊரை ஒருகணம் பார்த்தான். தன் இடையில் இருந்த கூரிய குறுங்கத்தி ஒன்றை எடுத்து தன் கழுத்தில் வைத்து விரைந்து இழுத்தான். குருதி இரு செஞ்சரடுகளாக பீறிட்டுப் பொழிய தலை மடிந்து மார்பில் முகம் படிய முன்னால் சரிந்து விழுந்து துடித்து மெல்ல அடங்கினான்.