கல்பொருசிறுநுரை - 68
பகுதி ஆறு : படைப்புல் – 12
பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக!”
இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் பழகியிருந்தனர். வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது அங்கு வந்த சில நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிட்டது. பின்னர் ஒவ்வொருநாளும் அதில் புதிய பொருட்கள் சேர்க்கப்பட்டன. சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.
பின்னர் கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் எரியும் அனற்துளி போன்ற கடும்மது வாற்றி எடுக்கப்பட்டது. ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான மது ஒன்று அரிதாக சிலரால் அருந்தப்பட்டது. பின்னர்தான் பிரஃபாச க்ஷேத்ரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்.
இளவேனில் தொடங்கியதும் அந்த நாணல் பூக்கத் தொடங்கியது. ஓயாது தளிர்விட்டுக்கொண்டே இருக்கும் நாணல் அது. சில நாட்களாகவே அவற்றில் தளிர் எழாமை கண்டு இளையோர் முதியோரிடம் உசாவினர். தளிர் எழவில்லை எனில் மலர் எழப்போகிறது என்றனர் மூத்தோர். சதுப்பின் உள்ளிருந்து சிறிய கூரிய துளைகள் உருவாகி வந்து வாய் திறந்தன. அவை என்ன என்று நோக்கிய இளையோர் சிறு நாணல்களை உள்ளே விட்டு வெளியே எடுத்தனர். அவை சிறுவண்டுகள். முட்டையிலிருந்து வெளிவந்து சிறகுகொண்டு மெல்ல எழுந்து கொண்டிருந்தன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது அந்த நாணல் என்று பின்னர் மூத்தவர் வகுத்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை பொரித்து வெளிவருபவை அந்த வண்டுகள்.
அந்நாணலை அவர்கள் கூர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தனர். அவர்களின் இல்லங்கள் அந்த நாணலால் அமைந்தவை. அந்த நிலமே அந்நாணலால் மூடப்பட்டு அமைந்தது. அவர்களின் இல்லங்களின் பெட்டிகள், கலங்கள், பீடங்கள் நாணலே. நாணல் நாரால் சிறந்த மரவுரி ஆடைகளை நெய்து அணிந்தனர். அந்நாணலில் நிகழும் ஒவ்வொரு சிறு மாற்றத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். நாணல் இலைகளின் பல்லாயிரம் பச்சை உடைவாட்களுக்கு நடுவிலிருந்து உயரமான கொடித்தூண்போல தண்டு எழுந்தது. அதில் வெள்ளியாலான மாபெரும் செண்டுபோல் மலர்கள் தோன்றின. தூய வெண்ணிற மலர்கள்.
அவற்றில் தேன் குடிப்பதற்கென்று அதுவரை அந்நிலத்தில் தோன்றியிராத பலநூறாயிரம் வண்டுகள் வந்தன. மின்னும் மணியுடல் கொண்டவை. குருதித்துளி போன்றவை. விழிகளென சிறகுகள் விரிந்த பட்டாம்பூச்சிகள். சில பட்டாம்பூச்சிகள் உள்ளங்கையளவு பெரிய சிறகுகள் கொண்டிருந்தன. அந்த மலர்களுக்காகவே பிறந்து அதன்பொருட்டே தவம் செய்து அங்கு வந்தவை அவை. தொலைவிலிருந்து நோக்கியபோது அப்பால் அலைகொண்ட கடல் அருகணைந்து நுரை எழுப்பி நின்றிருப்பதாகவே தோன்றச்செய்தது. அதற்கு மேலெழுந்த சிற்றுயிர்கள் அலைமேல் துமிகளென, துளிகளென சுழன்றன. காற்று நாணல் இலைகளை கொப்பளிக்கச் செய்து கடலலைபோல் ஓசையெழுப்பியது.
மது செய்து விற்கும் அடுமனையாளன் ஒருவன் அந்த மலரின் சாறு மேலும் கள்மயக்கு கொண்டதென்பதை கண்டுபிடித்தான். யானைகள் அந்த மலரை உண்பதற்காகவே நெடுந்தொலைவிலிருந்து தேடிவந்தன. பிரஃபாச க்ஷேத்ரத்தில் சதுப்புநிலம் முழுக்க யாதவர்களின் குடிகள் அமைந்துவிட்டிருந்தமையால் அவை நெடுந்தொலைவிலேயே கடலோரமாக இறங்கி மணல்விளிம்பினூடாகவே நாணல்குவையை அடைந்து அம்மலரை உண்டன. நாணல் புதருக்குள் கால்விரித்து நீந்திச் சென்று துதிக்கையால் அம்மலர்களைப் பற்றி கீழே தாழ்த்தி அவை உண்டன. அவை உண்டு சென்ற மிச்சங்களை உண்ண எருமைகளும் பன்றிகளும் முட்டி மோதின.
அவன் ஒரு சிறு காவல்மேடையில் நின்று பார்த்தபோது யானை முதல் கண்ணுக்குத் தெரியா சிற்றுயிர் வரை அனைத்துமே அந்த நாணல் மலரை உண்பதற்கு முட்டித் ததும்பிக்கொண்டிருப்பதை கண்டான். அதன் பின்னரே அது ஓர் அரிய பொருளென்று அவன் கண்டுகொண்டான். அந்த மலரை பறித்துக் கொண்டுவந்து அரைத்து சாறெடுத்து வடிகட்டி முதலில் தான் வளர்க்கும் முயல்களுக்கு கொடுத்தான். அக்கணமே அவை உயிர் துறந்தன. அது கொடுநஞ்சென்று அறிந்த பின்னர் மேலும் நீர்க்கவைத்து அவற்றுக்கு அளித்தான். ஏழுமுறை நீர்க்கவைத்தபோது அது முயல்களை பித்தாக்கியது.
அவை நிலத்திலிருந்து சுருள்வில்லால் இயக்கப்பட்டவைபோல் எழுந்து குதித்தன. ஓடிச்சென்று சுவர்களில் முட்டி சுருண்டு விழுந்தன. ஒன்றையொன்று கடித்துக் குதறின. உடல்கவ்விக்கொண்டு புரண்டன. அவன் அச்சாறை நூறு முயல்களுக்கு அளித்தான். தன் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது தோட்டமெங்கும் பந்துகள்போல் எழுந்து எழுந்து துள்ளிக்கொண்டிருந்த முயல்களைக் கண்டு திகைதான். அவை சிறகு கொண்டவைபோல வானில் எழ முயன்றன. அவற்றின் விழிகள் விரிந்து முத்துக்கள்போல் தெரிந்தன.
ஓடிச்சென்று தன்னுடன் பணியாற்றுபவனிடம் இரு கைகளையும் விரித்து “கண்டுகொண்டேன்! பெருங்களிப்பை அளிக்கும் அருமருந்தொன்றை கண்டுகொண்டேன்! மதுக்களில் இது அரசன். இந்திரனுக்கு நிகரானவன்!” என்றான். அவர்கள் திகைப்புடன் “என்ன?” என்றனர். அந்த நஞ்சில் ஒரு துளியை தொட்டு ஒருவனின் நாக்குக்கு அடியில் வைத்தான். சற்று நேரத்திலேயே அவன் விழிகள் பெரிதாக நாக்குழற வாய்கோணலாகி சிரித்து கைநீட்டி பொருளில்லாத சொற்கள் பேசி சுழன்று ஆடத்தொடங்கினான். மற்றவர்கள் திகைப்புடன் அவனை பார்த்தனர்.
“இது போதும்! இனி வேறெந்த மதுவும் இங்கு வடிக்க வேண்டியதில்லை!” என்றான் முதிய அடுமனையாளன். “ஆம், இது ஒன்றே போதும்!” என்றனர் பிறர். “இப்போது இதை நாம் வெளியே கொண்டுவரவேண்டியதில்லை. இன்னும் நாணல் முழுமையாக பூக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் தண்டுகள் மேலெழுந்துகொண்டே இருக்கின்றன. முழுநிலவு எழும் நாளில் இங்கு இளவேனில் விழவு எழும். கொண்டாடப்படாவிட்டாலும் இளவேனிலில் இங்குள்ள அனைவருக்கும் இதன் சாறு வடித்த இனிய மது வழங்கப்படும். இளவேனிலை அவர்கள் கொண்டாடுவார்கள்” என்றான் முதியோன்.
“அவர்கள் இப்புவியுடன் தங்களைக் கட்டியிருக்கும் எடையென்பதை இழப்பார்கள். இங்கு தங்கள் வாழ்வை பிணைத்திருக்கும் உறவென்பதை மறப்பார்கள். அனைத்து நினைவுகளுக்கும் தடையாக இருக்கும் நெறியென்பதை துறப்பார்கள். தேவர்களுக்குரிய களியாட்டு மட்டுமே இங்கு எஞ்சியிருக்கும்” என்று அவன் சொன்னான். “ஆம், தேவமது! தேவமது!” என்று பிறர் கூவினார்கள். அவர்கள் ஒரு சிறு குழுவென ஆனார்கள். எவருமறியாமல் அந்த மதுவைக் காய்ச்சி வாற்றி சேர்த்து வைப்பது என்று முடிவு செய்த்னர்.
அதன்பின் நாணல்பூக்களை தின்பதற்கு வரும் யானைகளையும் பன்றிகளையும் விரட்டும் பொருட்டு முழவுகளுடன் கடல்நீர் எல்லையிலும் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இரவும் பகலும் முழவுகள் முழங்கி அவ்விலங்குகளை துரத்திக்கொண்டே இருந்தன. காற்றிலேயே சுழன்று முழவை அடிக்கும் காற்றாடியுடன் இணைக்கப்பட்ட சுழற்கோல்களை ஒருவன் கண்டுபிடித்தான். அதன்பின் நாணல்வெளி உறுமிக்கொண்டே இருந்தது. நாணல் மலர்கொண்டு எழுந்ததும் தெப்பங்களில் சென்று அவற்றை வெட்டிச் சேர்த்து கொண்டுவந்தனர். மர உரலில் இட்டு இடித்து பிழிந்து சாறெடுத்தனர். ஏழு முறை நீர்க்கவைத்து மலர்த்தேனும் கரும்புச்சாறும் கலந்து இனிமையாக்கினர். அரித்து தூய்மை செய்தனர். மரத்தாலான பெருங்குடுவைகளில் ஊற்றி நொதிக்க வைத்தனர்.
இளவேனிலுக்கு முன்னரே பெண்டிர் ஒவ்வொருவரும் அதற்காக அரிய உணவுகளை ஒருக்கி வைத்திருந்தனர். இன்கனிகளை உலரச்செய்து தேனிலிட்டு ஊறவைத்தனர். உலரவைக்கப்பட்ட ஊனும் பருப்புகளும் மூங்கில்குழாய்களுக்குள் இட்டு இறுக மூடப்பட்டன. இன்கிழங்குகள், வெல்லப்பொடியிட்டு நெய்யுடன் உருட்டப்பட்ட இன்னுருளைகள் என பல நாட்கள் இடைவெளியே இல்லாமல் உண்டு தீர்ப்பதற்கான உணவு ஒருங்கியிருந்தது.
இசைக்கலைஞர்கள் தங்கள் முழவுகளையும் யாழ்களையும் ஒருக்கினர். அங்கு வந்து சில நாட்களிலேயே சூதர்கள் அந்த மூங்கிலின் தண்டைப்போல் சிறந்த புல்லாங்குழல் இல்லை என்பதை கண்டுகொண்டனர். இயல்பிலேயே அது புல்லாங்குழலாக மாறும் தன்மை கொண்டிருந்தது. அதை துளைத்த வண்டுகளால் அதற்குள் சென்ற காற்று இசையாக மாறியது. மறுபுறம் கடல் இருந்தமையால் ஓயாத காற்றில் அந்நாணல் குவையிலிருந்து எப்பொழுதும் பல ஆயிரம் புல்லாங்குழல்கள் எழுப்பும் இசை ஒன்றெனத் திரண்டும் பல நூறெனப் பிரிந்தும் ஆடிச்சுழன்று ஒன்றிணைந்தும் கேட்டுக்கொண்டிருக்கும்.
அதை வெட்டி துளையிட்டு மீட்டிய முதல் சூதன் புல்லாங்குழலில் ஒருபோதும் கேட்டிருக்காத ஆழ் முழக்கம் கொண்ட இசையொன்றை எழுப்பினான். அதன்பின் எளிய புற்குழல்களை ஊத எவருமே விரும்பவில்லை. அக்குழலுக்குள் நிறைப்பதற்குத் தேவையான மூச்சுக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். மூச்சை தொகுத்து உள்ளே வழங்குவதற்கான சிறு குழாய்களை கண்டுபிடித்தனர். ஊதுவாயில் மெழுகால் வாய்ப்பொருத்து செய்து ஊதினால் மூச்சு சிதறாமல் நிற்குமென்று கண்டுபிடித்தனர். பலநூறு புல்லாங்குழல்கள் அந்த இளவேனில் விழாவுக்காக ஒருங்கின.
நாணல்களை வெவ்வேறு தடிமனில் நீளமாக வெட்டி அடுக்கி உருவாக்கப்பட்ட இசைக்கலன்கள் அவர்களுக்கு செவிக்கினியவையாக இருந்தன. சிட்டுக்குருவிச் சிலைப்புமுதல் கூகைக் குழறல்வரை அதில் ஒலியாக எழுந்தது. உலோக ஒலியும் முழவொலியும் உருவாகியது. அவற்றை வேறொரு நாணல் தலையால் விரைந்து தட்டி உருவாக்கப்பட்ட இசை கொஞ்சியது, துள்ளி ஓடியது, சிரித்தது.
வணிகர்கள் புறநீர் பெருக்கினூடாகச் சென்ற மென்மரக்குடைவுப் படகுகளில் சிந்துவை அடைந்து அதனூடாக தேவபாலபுரம் சென்று அங்கிருந்த அயல் வணிகரிடம் புதிய ஆடைகளையும் அருமணிகளையும் வாங்கி வந்தனர். பிரஃபாச க்ஷேத்ரத்தில் சந்தைகள் அமையவில்லை. “நம்மிடம் இருக்கும் கருவூலத்திற்குக் காப்பு என்பது இந்நிலத்திற்குள் வேறெவரும் வராமலிருப்பதே” என்று ஃபானு அறிவுறுத்தினார். “விற்கவேண்டியற்றை நாம் கொண்டுசென்று விற்போம். வாங்குவன நமக்கு கைமாறப்படட்டும். இது அயலவர் கால்படாமல் நிலைகொள்ளும் கன்னி நிலமே ஆகுக!”
பிரஃபாச க்ஷேத்ரத்தில் அகிடுபெருத்த மோட்டெருமைகளின் பாலில் இருந்து திரண்டுவரும் மஞ்சள் பொற்துகள்போல் ஒளி விடும் தூய நெய்க்கு அதற்குள்ளாகவே தேவபாலபுரத்தில் பெருவிருப்பம் இருந்தது. விளிம்புபொருத்தி உருக்கி ஒட்டப்பட்ட நூறு நெய்க்கலங்களை இருபுறமும் நிகரெடையில் கட்டி நீருக்குள் போட்டு முட்டைகளை உடலெங்கும் ஏந்தி வரும் மீன்போல தேவபாலபுரத்தை நோக்கி செல்லும் பிரஃபாச க்ஷேத்ரத்தின் படகுகளைக் காத்து அங்கே வணிகர்கள் நின்றிருந்தனர். தொலைவிலேயே திரண்டு வரும் படகு நிரைகளைக் கண்டு அவர்கள் கொடிகளை வீசியும் கொம்புகளை ஊதியும் “எங்களிடம் வருக! எங்களிடம் வருக!” என்று கூவினர். பொற்காசுகளை கையில் அள்ளி மேலே தூக்கிப்போட்டு பிடித்து “இங்கே! இங்கே!” என்று ஆர்ப்பரித்தனர்.
பிரஃபாச க்ஷேத்ரத்திலிருந்து கொண்டு வரப்படும் புற்சாறு கொண்ட மதுவுக்கும் அங்கே பெருமதிப்பு இருந்தது. பீதர்களும் யவனர்களும் அவற்றை விரும்பி வாங்கினார்கள். பெரிய கொப்பரைக் காய்களுக்குள் அடைக்கப்பட்டு களிமண் மூடியிட்டு இறுக்கி அவை கொண்டுவரப்பட்டன. யவன வணிகர்கள் அவற்றை வாங்கி தூய்மைப்படுத்தி படிகப்புட்டிகளில் மீண்டும் அடைத்து தங்கள் நாட்டுக்கு கொண்டுசென்றனர். செல்லும் வழியிலெல்லாம் சிற்றூர்களில் அவை மும்மடங்கு நான்மடங்கு ஏழுமடங்கு பன்னிரு மடங்கு விலைவைத்து வாங்கப்பட்டன.
தேவபாலபுரத்திலிருந்து சென்ற செல்வம் பிரஃபாச க்ஷேத்ரத்தில் புதிய இல்லங்களாகியது. ஆழ ஊன்றிய மரக்கால்களின் மேல் ஏழு அடுக்கு மாளிகைகள் எழுந்தன. அவை மென்மரத்தட்டிகளால் சுவரிடப்பட்டவை. நாணல் தாள்களால் கூரையிடப்பட்டவை. உள்ளே பீதர்நாட்டுப் பட்டு திரைச்சீலைகளும் பட்டு விரிக்கப்பட்ட மெத்தை பதிந்த பீடங்களும் மஞ்சங்களும் கொண்டிருந்தன. அனைத்து அறைகளிலும் இடைவிடாது தூபம் எரிந்துகொண்டிருந்தது. அங்கேயே தூபத்திற்கான பொருளை உருவாக்கினர். பிரஃபாச தரு என்றும் லோகநாசிகை என்றும் அழைக்கப்பட்ட அப்புல்லின் இலைகளை நிழலில் காயவைத்து தூபமிடுவதே நறுமணமாகியது.
அது மூக்குச் சவ்வை சற்றே எரிக்கும் மணம் கொண்டிருந்தது. புதியவர்கள் அதை முகர்ந்தால் தும்மல்கொண்டு விழிநீர் வார்ப்பார்கள். யாதவர்களுக்கு அது இயல்பான மணமாக மாறியிருந்தது. அவர்களின் கன்றுகளுக்கு மேல் அத்தைலத்தை பூசி காட்டுக்கு அனுப்பினார்கள். தொழுவங்களில் புகையெழுப்பினார்கள். யாதவர்களின் மணம் என்று அது வெளியே கருதப்பட்டது.
இளவேனில் ஐந்தாம் நிலவன்று விழவு என்று மூத்தவர் ஃபானுவின் அறிவிப்பு எழுந்ததும் பிரஃபாச க்ஷேத்ரம் வாழ்த்தொலிகளால் கொந்தளித்தது. களிவெறிகொண்ட மக்கள் தெருக்களில் கைவிரித்தபடி ஓடினார்கள். கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். பிறர் கூடி ஒருவரை காற்றில் மேலே எறிந்து பிடித்தார்கள். தரையிலிட்டு புரட்டினார்கள். ஆடைகளை கழற்றிவிட்டு ஓடவைத்தனர். பின்னர் அது பூசலாகியது. கைக்குக் கிடைத்த பொருட்களைக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கட்டிப்புரண்டு புழுதியில் விழுந்தெழுந்து சண்டையிட்டனர். மீண்டும் சிரித்து அதை களியாட்டென மாற்றிக்கொண்டனர்.
அறிவிப்பின்போது தொடங்கிய அந்தக் களிவெறி எழுந்தெழுந்து சென்று அன்றிரவு குடி கொண்டாட்டத்தில் முடிந்தது. பின்னர் விழவுநாள் வரை குடியும் களிப்பும் துயிலும் விழிப்புமென நாட்கள் சென்றன. முந்தையநாள் முன்னிரவிலேயே அனைவரும் இல்லங்களுக்குள் விழுந்து தூங்கினர். நள்ளிரவில் நான் எழுந்து மாளிகை முகப்பில் நின்று பார்த்தபோது பந்தங்கள் எரியும் பிரஃபாச க்ஷேத்ரத்தில் யாதவக் குடியிருப்பு முழுக்க விலங்குகளின் செருக்கடிப்போசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. குடிகளில் ஒருவர் கூட விழித்திருக்கவில்லை.
என்னருகே நின்றிருந்த மூத்தவர் சுருதன் “துயின்றுகொண்டிருக்கிறார்கள். நாளை முற்புலரி எழுகையில் இளவேனில் விழா தொடங்கும். அத்தனை யாதவரும் முழுதணிகோலத்தில் தெருவிலிறங்கி கொண்டாடுவார்கள்” என்றார். “அது எவ்வண்ணம் என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் எப்போது எழுவார்கள்? எப்போது அணி செய்துகொள்வார்கள்?” என்றேன். “இந்நிலத்தில் வண்டுகள் துயின்றுகொண்டிருப்பதைப்போல. அவற்றுக்குச் சிறகு முளைத்துக்கொண்டே இருக்கிறது” என்றார் சுருதன். “ஐந்தாம் நிலவு என்பது மானுடர் வகுப்பது அல்ல. அதை வகுப்பது நிலவு. நாம் மட்டுமல்ல இங்குள்ள அனைத்து உயிர்களும் அதை அறியும்.”
என் உளம் எழுந்தெழுந்து அமைந்துகொண்டிருந்தமையால் நான் அன்றிரவு தூங்கவில்லை. மஞ்சத்தில் வெறுமனே விழித்து படுத்திருந்தேன். தொலைவில் முரசொலி எழுந்தது. நான் எழுந்து வெளிவந்து பார்த்தபோது விடிவெள்ளியை கண்டேன். முரசொலி எழுவதற்குள்ளாகவே கடலலை ஒன்று பொங்கி எழுந்ததுபோல் யாதவக் குடிகளில் இருந்து மக்கள் விழித்தெழுந்த ஓசை முழங்கியது. அனைத்து இல்லங்களிலும் புது விளக்குகள் முளைத்தன. விளக்குகள் இருளில் அங்குமிங்கும் மிதந்தலையத் தொடங்கின. பிரஃபாச க்ஷேத்ரம் எங்கும் எரிபற்றி படர்வதுபோல் விளக்கொளி பெருகியது. அங்கு மட்டும் ஒரு புலரி எழுந்ததுபோல. விளக்கொளியில் எழுந்த நிழல்கள் பல்லாயிரம் பூதங்கள் அங்கு இறங்கிவிட்டதுபோல தோன்றச் செய்தன.
வானம் ஒளிகொண்டு முகில்கள் நிறம்மாறி புலரிவெளிச்சம் நகர் மேல் பரவியபோது மிதக்கும் கற்பலகைப் பாதைகள் அனைத்திலும் பட்டிலும் பொன்னணி செய்த பருத்தியிலும் அணியாடைகள், மென்துகில்கள், முகிலாடைகள் அணிந்த யாதவர்கள் நிறைந்திருப்பதை கண்டேன். விந்தையென ஒன்று நிகழ்ந்தது. சதுப்பில் பல்லாயிரம் பல்லாயிரம் சிறிய விழிகள் என துளைகள் திறந்தன. ஒளிரும் சிறகுகள் கொண்ட பட்டாம்பூச்சிகள் மேலெழுந்தன. பொன்னிறச் சிறகு கொண்டவை. குருதிச்செந்நிறச் சிறகு கொண்டவை. விழிகள் மலர்ந்த சிறகுகள் கொண்டவை. அவை பெருகிப்பெருகி இளவெயில் ஊறிப் பெருகியிருந்த வானை முற்றாகவே நிறைத்தன. வண்ணங்களால் கண்குருடாக முடியும் என்று அன்று கண்டேன்.
வண்ணத்துப்பூச்சிச் சிறகுகள் நடுவே பெரிய வண்ணத்துப்பூச்சிகள் என சிறுவர்களும் சிறுமியரும் களித்தனர். அவர்கள் மூங்கில் கூடைகளில் உணவைக் கொண்டுசென்று ஒருவருக்கொருவர் அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பெண்கள் முப்பிரி, ஐம்பிரி குழல்களை தோளுக்கு மேல் விரித்திட்டு அவற்றில் மலர்சூடி, முலைகள் மேல் தொய்யில் எழுதி பறவைகள்போல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். அவர்கள் கால்கள் மண்ணில் படவில்லை என தோன்றியது. காற்றில் புகையென, வண்டுகளென, வண்ண இறகுகளென அவர்கள் தாவிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் கொம்புகளும் மணி ஓசைகளும் எழுந்தன. அவர்கள் கதிரவனையும் இந்திரனையும் வழிபடுகிறார்கள் என்று தெரிந்தது. மூதாதையருக்குரிய உணவுப்படையல்கள் அங்கு நிகழ்ந்தன. இல்லங்களுக்குப் பின்னால் தென்மேற்கு மூலையில் சிறுகற்களாக நிறுவப்பட்டிருந்த மூதாதையருக்கு முன்னால் ஏழு இலைகள் பரப்பி ஊனுணவும் இன்னுணவும் படைத்து வழிபட்டனர்.
நான் புரவியிலேறி பாதையினூடாகச் சென்றபோது எனக்கு முன் வந்த அத்தனை முகங்களும் சிரித்து மலர்ந்திருந்தன. விழிகளில் உவகை ஒளியென ததும்பிக்கொண்டிருந்தது. ஓராண்டுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த நிலம் கடல்கொண்டது என்பதையோ அவர்களில் மூன்றில் ஒருவர் அங்கு இறந்தார்கள் என்பதையோ வரும் வழியில் மீண்டும் மூன்றிலொருவர் மறைந்தார்கள் என்பதையோ அவர்கள் எவருமே எண்ணியிருப்பதுபோல் தெரியவில்லை. ஊழை மனிதன் வெல்வது இக்களியாட்டுகளினூடாகத்தான். தெய்வங்களுக்கு முன் ஓர் அறைகூவல். என்னை நீங்கள் என்ன செய்யமுடியும் என்று மானுடன் ஊழிடமும் தெய்வத்திடமும் கேட்கிறான்.
அவ்வண்ணம் அகன்றிருந்து அவர்களை பார்த்துக்கொண்டிருப்பதே பிழை என்று தோன்றியது. நானும் அவர்களுடன் கலந்திருக்கவேண்டும். நான் மது அருந்த விரும்பினேன். மது ஒன்றே என்னை மறக்கச்செய்து என் எண்ணங்களை அவர்களுடன் முற்றாக கலக்கும் என்று தோன்றியது. புரவியை நிறுத்திவிட்டு அங்கே மது விற்றுக்கொண்டிருந்த ஒருவனிடம் மது கோரினேன். “விற்பனைக்கு அல்ல இளவரசே, இன்று அத்தனை மதுவும் விலையற்றது. விலையை கருவூலத்திலிருந்து முன்னரே அளித்துவிட்டனர்” என்றான். நான் உடல்நிறைய மது அருந்திவிட்டு நகரினூடாகச் சென்றேன். என் புரவியின் கால்கள் நிலம்விட்டு மேலெழத் தொடங்கின.