கல்பொருசிறுநுரை - 62

பகுதி ஆறு : படைப்புல் – 6

தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன்.

ஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து கண்ணீர்விட்டு நடனமாடினார். அருகணைந்து அனைவரையும் தழுவிக்கொண்டார். இளையோரை முத்தமிட்டார். படைத்தலைவர்களை தோளைப் பிடித்து உலுக்கினார். நெடுநேரம் அந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. பின்னர் ஃபானு “கிளம்புவோம். அதற்குரிய ஒருக்கங்கள் நடக்கட்டும். வண்டிகள் கட்டப்படட்டும். கூடாரங்கள் சுருட்டப்படட்டும்!” என்றார்.

படைத்தலைவர்கள் பிரிந்து சென்று ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்க அங்கிருந்த அலைக்கொந்தளிப்பு அடங்கி ஒவ்வொருவரும் அவரவர் பணிகளுக்கு சென்றார்கள். புரவிகளுக்கு சேணங்கள் பூட்டப்பட்டன. மூத்தவர் ஃபானு கவிழ்த்திட்ட மரக்கலம் ஒன்றில் அமர்ந்தார். அவர் அருகே வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்?” என்றார் சுருதன்.

ஃபானு எரிச்சலுடன் “அதை எவரும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே. இத்தனை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவது கருவூலம் அன்றி வேறென்ன?” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்?” என்றார். ஃபானு “எவர்?” என்றார். “எவராயினும்… இக்கருவூலம் பேரரசு ஒன்றின் ஐம்பதாண்டுக்கால செல்வம். இதற்கிணையான ஒன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார் சுருதன்.

ஃபானு திகைத்துவிட்டார். சுருதன் அதை பயன்படுத்திக்கொண்டு மேலே சென்றார். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது. அது கூர்ஜரத்துக்கு மிக அருகே இருக்கிறது” என்றார். ஃபானுமான் சினத்துடன் “கூர்ஜரம் நொறுங்கிக் கிடக்கிறது. நம்மைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை” என்றான். “சிந்து தாக்கலாம், சிந்துவை உறுதியான மன்னனொருவன் ஆளத்தொடங்கியிருக்கிறான்” என்றார் சுருதன். “நமக்கு அஸ்தினபுரியின் உதவி இருக்கிறது” என்றார் ஃபானு. “ஆம், ஆனால் அவர்கள் மிக மிகத் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் சுருதன்.

ஃபானு அவ்வண்ணம் சுவற்றுடன் அழுத்தப்பட்டதனால் சீற்றம்கொண்டார். “அஞ்சி அஞ்சி வாழ்வதில் பொருளில்லை. நமது படைக்கலங்கள் இன்னும் தாழவில்லை. நம்மிடம் பெருவீரர் இருவர் உள்ளனர். சாத்யகியும் கிருதவர்மனும் நம்முடன் இருக்கிறார்கள் என்ற செய்திக்குப் பிறகு எவரும் நம்மை எதிர்க்கப் போவதில்லை” என்றார். சுருதன் மேலும் சொல்லத் தொடங்க “உனக்கு அச்சமிருந்தால் நீ வரவேண்டாம். இங்கே பாலையில் கிடப்பதைவிட செல்வது மேல்… என் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் ஃபானு. சுருதன் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.

“மூத்தவரே, ஆணை என்ன? என்ன செய்வது?” என்று ஃபானுமான் கேட்டான். “கிளம்ப வேண்டியதுதான்” என்றார் ஃபானு. “விதர்ப்பத்தின் ருக்மி நம்முடன் வந்து சேர்ந்துகொள்வதாக செய்தி வந்திருக்கிறது” என்றான் ஃபானுமான். “அவரை கிளம்பி பிரபாச க்ஷேத்ரத்திற்கு வரச்சொல். நாம் அங்கு சென்றுகொண்டிருக்கிறோம். இங்கு இனி எவருக்குமாக நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஃபானு. “அவர் நமக்காக வந்து கொண்டிருந்தார். நகர் சரிந்த செய்தி அறிந்ததும் படைகளை நிறுத்திவிட்டு நம் தூதுக்காக காத்திருந்தார்” என்றார் பிரஃபானு.

நான் “மூத்தவரே” என்றேன். “கூறு” என்றார் ஃபானு. “இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறது” என்றேன். ஃபானு என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முகம் மலர்ந்து “அது புகழ்பெற்ற நிலமாக இருக்கலாம். நமது மூதாதையர் அங்கிருந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே, பிறிதொன்று” என்றேன். ”நீ புதிய ஐயங்கள் எதையும் எழுப்ப வேண்டியதில்லை. கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இங்கிருந்து நாம் கிளம்பும் செய்தியை சென்று சொல்” என்றார். தலைவணங்கி “ஆணை!” என்றேன்.

உளச்சோர்வுடன் நான் கிருதவர்மனை சந்திக்கச் சென்றேன். அவர்கள் இருவரும் துவாரகையிலிருந்து கருவூலம் ஏற்றிய வண்டிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் நடத்திவந்த காவலர்படை கருவூலத்தைச் சூழ்ந்திருக்க அவர்கள் தங்கள் தனிப்பட்ட காவலர்படையுடன் பெருந்திரளுக்கு சற்று அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார் என்று அனைவரும் அறிந்திருந்தமையால் அவர்களை அரசருக்கு நிகராகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் அரசுநடத்தலில் நேரடியாக தலையிடக்கூடாது என்று எண்ணினர்.

நான் சாத்யகியின் படைகளை அணுகியபோது அவருடைய முதற்காவலன் என்னை நோக்கி வந்து வணங்கினான். என்னிடம் என் அலுவல் ஏது என்று வினவினான். “நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை” என்றேன். “அவர்களிருவரும் இன்று காலைதான் பாலையில் வேட்டைக்கு சென்றார்கள்” என்றான். “வேட்டைக்கா? இப்பொழுதா?” என்றேன். “ஆம், தனிப் புரவிகளில் சென்றார்கள்” என்றான்.

பாலையில் சில நாட்களாக வேட்டை உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம். வேட்டைக்கென வில்லவர்களை இரவுகளில் பாலையில் அனுப்பி முயல்களையும் பாலைவனப் புல்வெளியில் வளரும் சிறிய மறிமான்களையும் கொண்டுவந்தோம். பொதுமக்களுக்கு பாலை நிலக்கழுதைகளும் பறவைகளும் கூட உணவாயின. துவாரகையில் இருந்து காலொடிந்தும் உடல் புண்பட்டும் வெளியே வந்த புரவிகளை உண்ணலாம் என்று சாம்பனின் அணுக்கரான அசுரகுலத்தவர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு குதிரையை உண்ட பின் நம்மிடம் இசைந்திருக்கும் குதிரைகளை ஆளமுடியாது, அவை முரண்கொள்ளும் என்றார் அமைச்சர் ஸ்ரீகரர்.

நான் அவர்களுக்காகக் காத்து அங்கேயே பாலையின் ஒரு சிறு மணல் மேட்டில் அமர்ந்திருந்தேன். அத்தனைக்கு அப்பாலும் அவர்கள் இருவரும் விளையாட விரும்புவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன. வேட்டை விலங்குகள் எத்தனை வளர்ந்தாலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. போர்வீரர்கள் விளையாடாமல் இருக்க முடியாது. துரத்தாமல், வெல்லாமல் அமைய முடியாது.

தொலைவில் அவர்கள் இருவரும் வருவதை கண்டேன். ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது. அவர்களின் புரவிகளுக்கு இருபுறமும் முயல்கள் சேர்த்து கட்டப்பட்டு தொங்கின. காற்றில் நீந்தி அருகணைந்து புரவியிலிருந்து இறங்கினர். நூறு முயல்களுக்கு மேல் அவர்களிடம் இருந்தன. அவர்களை அணுகிய ஏவலரிடம் அம்முயல்களை அளித்துவிட்டு என்னை பார்த்தனர்.

நான் தலைவணங்கி “நூறு முயல்களா? அத்தனை அம்புகளுடன் சென்றீர்களா?” என்றேன். “இங்கே நாணல்கள் மிகக் கூர்மையானவை” என்று கிருதவர்மன் சொன்னார். “சரியாக ஏவினால் முயலின் இதயத்தில் பாய்ந்துவிடுவன.” சாத்யகி “சொல்க!” என்றார். நான் “மூத்தவர் ஃபானு இங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது” என்றேன்.

கிருதவர்மன் வியப்புடன் “ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதா? எப்போது? எதையும் உசாவவில்லையே?” என்றார். சாத்யகி “எங்கே செல்வதற்கு?” என்றார். “நேற்று மாலை நான் அவனிடம் பேசினேனே” என்றார் கிருதவர்மன். “இம்முடிவு சற்றுமுன்னர் எடுக்கப்பட்டது” என்றேன்.

“என்ன நடந்தது?” என்று சாத்யகி கேட்டார். “அவர் சற்றுமுன் நிமித்திகரை அழைத்து எங்கு செல்லக்கூடும் என்று கேட்டார். அவர்கள் கூறியதும் அக்கணமே ஆணை பிறப்பித்துவிட்டார்” என்றேன். சாத்யகி “அறிவிலி!” என்றார். “அந்நிமித்திகரின் வடிவில் எவர் வேண்டுமானாலும் வந்து அந்த எண்ணத்தை சொல்லமுடியும். ஒவ்வொன்றுக்கும் குலமூத்தார், நிமித்திகர், படைத்தலைவர், அமைச்சர், குடித்தலைவர் என்ற ஐந்து தரப்பினரின் சொல் கேட்காமல் அரசன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஐம்பேராயம் தலைக்கொள்ளலே அவன் கடன்” என்றார்.

கிருதவர்மன் “அவன் பல தருணங்களில் வெறும் உணர்ச்சிகளால் இயங்கும் யாதவர் போலவே இருக்கிறான்” என்றார். சாத்யகி “அவர் எப்போதும் அப்படித்தான்” என்றார். “எங்கு செல்கிறான்?” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்?” என்றார். “இத்தனை தெளிவாக எந்த நிமித்திகரும் கூறுவதில்லை.”

“அவர்கள் தரையில் களம் வரைத்து கவடி நிரப்பி கணித்து கூறினார்கள்” என்றேன். “திசை மட்டும் சொன்னார்களா இடத்தையும் சேர்த்துச் சொன்னார்களா?” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா?” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்?” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்?” என்றார்.

நான் ”தெரியவில்லை, தந்தையே” என்றேன். “அறிவிலி, அவர்கள் முன்னரே அதை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபின் அதை நெடுநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இங்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்தபின் அவர்கள் எதையும் கணிக்கவில்லை” என்றார் கிருதவர்மன். எனக்கு உடனே அது உண்மை என்று தெரிந்தது. “ஆம், அவ்வாறுதான் இருக்கவேண்டும்” என்றேன். பின்னர் அச்சத்துடன் “அவர்கள் ஒற்றர்களா?” என்று கேட்டேன்.

“ஒற்றர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றர்கள் நிமித்திகர்களாக வருவதும் இல்லை. இவர்கள் எளிய தெருநிமித்திகர்கள். அரசருக்கு நூல் நவின்று சொல்லும் தகுதி உடையவர்கள் அல்ல. அவர்களை அழைத்து குறிகேட்டபோது உடனடியாக நெஞ்சிலிருப்பதை சொன்னார்கள். அவர்களின் அந்த எண்ணம் துவாரகையின் குடிகளுக்கு ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அது உடனே இவர்களின் நெஞ்சில் எழ அவ்வண்ணமே சொல்லியிருக்கிறார்கள்.”

சாத்யகி “ஆம், இதை நான் முன்னரும் கேட்டிருக்கிறேன்” என்றார். “துவாரகையின் மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா? அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா?” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம்? எந்த ஒரு முடிவுக்கும் மக்களில் ஒரு சாரார் ஐயம் தெரிவிப்பார்கள். ஒரு சாரார் மறுப்பு தெரிவிப்பார்கள். பெரும்பான்மை உணர்வுகள் எழுந்த பிறகு மெல்ல மெல்லத்தான் ஒற்றை உணர்வு உருவாகும். பெரும்பான்மை நோக்கியே எஞ்சியவர்கள் வந்து சேர்வார்கள். இது விந்தையாக உள்ளதே.”

நானும் அதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஒரு முடிவு கூறப்பட்ட உடனே அத்தனை பேரும் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அனைவரும் அந்த முடிவை நோக்கி முன்னரே வந்திருக்கிறார்கள். அதை அரசர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அரசர் இப்போது மக்களுக்கு ஆணையிடவில்லை. மக்கள் அரசருக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆக இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்றார் சாத்யகி. “ஆம், முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளையாவது நாம் எண்ணவேண்டும்” என்று கிருதவர்மன் கூறினார்.

“அத்தனை பேர் உள்ளத்திலும் திரண்டெழுந்து அப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது? இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது? இது எங்கிருந்து கிளம்பி வந்தது?” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்? எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன?” என்று திரும்பி கேட்டார்.

“அந்தகரே, இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்பது இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தீய நிகழ்வின் முதிர்வுப்புள்ளி” என்றார் சாத்யகி. “முன்பு விஸ்வாமித்ரர் இங்கு வந்தபோது அவருடைய தீச்சொல் இந்நகர் மேல் விழுந்தது நினைவிருக்கும்.” நான் “ஆம்” என்றேன். “அதைப்பற்றி நானும் அறிந்திருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “அதன்பின் சாம்பன் தொடர்ந்து கொடுங்கனவுகளை கண்டுகொண்டிருந்தார். ஊன்தடி ஒன்று தன் உடலில் இருந்து பிறந்ததாகவும், அது நாளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும், தன் குருதியை பாலென அது அருந்துவதாகவும் சொன்னார். அதற்கு பிழைநிகர் என்ன செய்வது, எவ்வண்ணம் ஆற்றி ஒழிப்பதெனத் தெரியாமல் அமைச்சர்கள் திகைத்தனர்.”

‘பல பூசனைகளுக்கும் சடங்குகளுக்கும் பின் வேறு நிமித்திகர்களிடம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிமித்திகர் எழுவர் அவை கூடி, களம் வரைந்து, கல் பரப்பி, தெய்வங்களிடம் உசாவி ஒரு மறுமொழி உரைத்தனர். அதன்படி ஒரு பிழைநிகர் செய்யப்பட்டது” என்றார் சாத்யகி. நான் “அவர்கள் துவாரகையின் நிமித்திகர்கள் அல்ல. துவாரகையின் நிமித்திகர்கள் முனிவரின் தீச்சொல்லுக்கு மாற்றே இல்லை என்றே கூறினர். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது என்றே அறிவுறுத்தினர். மூத்தவர் சுருதன் சினந்து அவர்களை அறைந்தார். சாம்பன் அவர்களை அரியணையில் இருந்து எழுந்து வந்து ஓங்கி உதைத்து வீழ்த்தினார்” என்றேன். “அதன் பிறகு அசுர குலத்தைச் சேர்ந்த நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். அவர்களே இந்தப் பிழைநிகர்ச் செயலை கூறினர்.”

“கூறுக, என்ன அது?” என்று கிருதவர்மன் கேட்டார். “அக்கனவு ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வண்ணம் ஒரு தீய கனவு வருமெனில் அக்கனவை அவ்வண்ணமே நிகழ்த்தி தீங்கிலாது முடிப்பதே அக்கனவிலிருந்து தப்பும் வழியாக அசுரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இல்லத்தில் பாம்பு வருகிறது என்று கனவு கண்டால் நஞ்சிலாத பாம்பு ஒன்றை இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு அதை பிடித்து திரும்பக் கொண்டு சென்று விட்டுவிட்டால் அந்த வருநிகழ்வில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைப்போல இதற்கும் செய்யலாம் என்றனர்” என்றேன்.

“அவர்களின் சொற்களின்படி ஒரு பூசனைச் சடங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. சாம்பன் கனவில் கண்டவை என்னென்ன என்று விரிவாக உசாவப்பட்டு அவ்வண்ணமே அனைத்தும் ஒருக்கப்பட்டன. அரண்மனையில் பெண்ணுக்குரிய ஆடையை அணிந்து சாம்பன் மஞ்சத்தில் படுத்திருந்தார். அவர் உடலில் வயிற்றுடன் சேர்த்து ஒரு இரும்புத்தடி வைத்து கட்டப்பட்டது. பின்னர் சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிக் கலம் ஒன்று அவர் கால் நடுவே உடைக்கப்பட்டது. மெய்யாகவே அந்த இரும்புத்தடியை அவர் ஈன்று புறந்தருவதுபோல நடித்தனர். குழவியென அதை எடுத்துக்கொண்டு சென்று நீராட்டு, பெயர்சூட்டு முதலிய அனைத்து பிறவிச் சடங்குகளையும் செய்தனர். அச்சடங்கில் நானும் பங்கேற்றேன். என் மைந்தனுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தேன். இனிப்பு தொட்டு நாவில் வைப்பது, மலர் எடுத்து இட்டு வணங்கி வாழ்த்துவது என…”

“அன்னையர் இச்சடங்கு நடந்ததை அறியவில்லை. அரண்மனையில் யாதவ மைந்தர் மட்டுமே அறிய இது நடந்தது. அதன் பிறகு அந்த இரும்புத்தடி இறந்துவிட்டது என அவர்கள் அறிவித்தனர். நாங்கள் அதற்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தோம். நாவில் பால்தொட்டு வைத்தோம். அரிமலரிட்டு வணங்கினோம். ஆடை நீக்கி அதை அவர்கள் ஒரு தொட்டிலில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாம்பன் கேட்டார். அதை கீழே கற்களை நொறுக்கும் இரும்பு உருளைகளுக்கு நடுவே கொடுத்து துண்டு துண்டாக பொடித்து தொலைவில் எங்கேனும் வீசப்போவதாக சொன்னார்கள். அவர்கள் அதை கொண்டுசெல்வதை சாம்பன் நெடுந்தொலைவு வரை பார்த்துக்கொண்டிருந்தார்” என்று நான் சொன்னேன். “மெய்யாகவே சாம்பன் அதன்பின் அக்கனவிலிருந்து விடுபட்டார். அதை மறந்தும்போனார்.”

“அவர்கள் கொண்டு வீசிய நிலம்தான் பிரபாச க்ஷேத்ரம்” என்று சாத்யகி சொன்னார். “தங்களுக்கு எவ்வண்ணம் தெரியும்?” என்று நான் கேட்டேன். “அனைவருக்கும் தெரிந்ததுதான் அது. அங்கு கொண்டு வீசியவர்கள் இங்கு வந்து சொன்னார்கள். சில நாட்களிலேயே துவாரகை முழுக்க பிரபாச க்ஷேத்ரத்தில் அந்த ஊன் தடி வீசப்பட்ட செய்தி தெரிந்துவிட்டது. அங்கு அந்த ஊன்தடியின் பொடிகள் மணலில் விதைகளாக முளைத்து கூரிய இரும்புமுனை கொண்ட புற்களாக செறிந்திருப்பதாக சூதன் ஒருவன் பாடினான். அவை இயற்கையாகவே முளைத்த கூரிய அம்புகள் என்றான். யாதவர்களின் குலத்திற்கு காவலாக அந்த அம்புகளை தெய்வங்கள் படைத்திருப்பதாகவும் அவை மூதாதையரின் வாழ்த்து என யாதவருக்கு வழங்கப்பட்டவை என்றும் சொன்னான்.”

“லோகநாசிகை என்று அந்தப் புல்லை இங்கே சூதர்கள் சொன்னார்கள். லோகநாஸிகா பிரபோதனம் என்று ஒரு குறுங்காவியம்கூட ஒரு புலவரால் இயற்றப்பட்டது. இங்கு சில நாட்கள் அந்தப் பாடல் புழங்கியது. அவ்வப்போது சிறு பூசைகளிலோ இல்லக்களியாட்டுகளிலோ அந்தப் பாடல் ஒலிக்கிறது” என்றார் சாத்யகி. “தங்கள் மூதாதையரின் படைக்கலங்கள் புற்களாக எழுந்து நிற்கும் நிலம் என்று இம்மக்கள் பிரபாச க்ஷேத்ரத்தை நம்புகிறார்கள். இங்கிருந்து முதலில் சிறுகுழுக்களாக கிளம்பியபோதே ஒரு சிலர் அங்கு செல்லவிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்றுவிட்டால் எவரும் தங்களை தாக்க முடியாதென்றும், மூதாதையரின் புல்முனைப் படைக்கலங்கள் தங்களுக்கு காவல் இருக்கும் என்றும் சொன்னார்கள். அவர்களின் உறுதியான நம்பிக்கை பிறரிடமும் பரவியிருக்கலாம்.”

“அனைவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துவிட்டார்கள். அனைவரின் பொருட்டும் ஃபானு அதை அறிவித்துவிட்டார்” என்று நான் சொன்னேன். “அங்கு செல்ல வேண்டியதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னார். சாத்யகி “ஆனால் இனி ஒரு மறுசொல் எழவியலாது. அரசர் ஒன்று உரைத்த பின்னர் நாம் அதை மாற்றக்கூடாது. மேலும் இன்று ஃபானு அரசரல்ல. அவருக்கு நிலமில்லை, முடியில்லை, அரண்மனையில்லை. நமது நம்பிக்கையால், நம் சொல்லால்தான் அவர் அரசராகிறார். அவரை மறுத்தோமெனில் அவர் அரசராக அல்லாமல் ஆவார். எனில் அரசரில்லாத வெற்று மக்கள்திரளாக இது ஆகும். பின்னர் இதை ஆணையால் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.

கிருதவர்மன் “நான் சொல்வதை அவனிடம் சொல்லியாகவேண்டும்” என்றார். “இனி சொல்லி ஒன்றும் ஆவதில்லை. முதலில் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வோம். அது உகந்ததல்ல என்று அங்கிருந்து பிற நிலங்களுக்கு செல்வோம். இப்போது செய்வதற்குகந்தது அது ஒன்றே” என்றார் சாத்யகி. “இல்லை, இது அழிவுக்குச் செல்லும் பாதை. இதை தடுத்தாகவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். புறப்பாட்டை நிறுத்தியே ஆகவேண்டும்.”

சாத்யகி “பிரபாச க்ஷேத்ரத்தை நோக்கிய யாதவர்களின் பயணம் எவராலும் ஆணையிடப்படவில்லை. உண்மையில் அது யாதவர்களின் உள்ளுறைந்த ஏதோ விசையால் முடிவெடுக்கப்பட்டது. அவ்விசை அவர்களை கொண்டுசெல்கிறது. ஃபானு பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்லவேண்டுமென்ற முடிவை எடுப்பதற்கும் அறிவிப்பதற்கும் யாதவர்களின் தொகைக்குள் வாழ்ந்த அறியாத் தெய்வமொன்றே வழி வகுத்தது என்றே நான் கொள்கிறேன்” என்றார்.

“நான் முற்கூறும் நம்பிக்கைகளை ஏற்பவனல்ல. எனினும் இதில் ஏதோ ஒவ்வாமை இருக்கிறது. பிரபாச க்ஷேத்ரம் உகந்த இடம்தானா என்பதை நாம் முதலில் முன்னோடி ஒற்றர்களைக் கொண்டு நோக்கவேண்டும். அவர்கள் அங்கு நாம் தங்குவதற்கும் பெருகுவதற்கும் வழியிருக்கிறதென்று கூறிய பின்னரே நாம் கிளம்பவேண்டும். இங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்னர் அந்த இடம் பொருத்தமல்ல எனில் மீண்டும் ஒரு நெடும்பயணத்தை நாம் செய்யமுடியாமலாகும். அது அழிவுக்கே வழிவகுக்கும்” என்றார் கிருதவர்மன்.

சாத்யகி “ஆம், ஆனால்…” என்று தொடங்க கிருதவர்மன் இடைமறித்து “ஆம், அங்கிருந்து பிற நாட்டு நிலங்களின் தொலைவு என்ன, எதிரிகள் எளிதில் வந்து தாக்கும் வாய்ப்புண்டா என்றெல்லாம் ஆராய வேண்டும். தகுதியுடைய ஒற்றர்களும் அவர்களுடன் வழிநடத்தும் அரசகுடியினரும் சென்று நோக்கி வந்தாலொழிய இங்கிருந்து கிளம்புவது அறிவின்மை” என்றார். நான் “இத்தருணத்தில் எவரும் அதை மூத்தவர் ஃபானுவிடம் உரைக்க இயலாது” என்றேன். “உரைக்கலாம். அது நமது கூட்டான முடிவாக இருக்குமெனில்” என்று சாத்யகி சொன்னார்.

“நாம் இங்குள்ள மூன்று அரசத் தரப்பினரிடமும் பேசுவோம். நான் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். அவன் இதை ஏற்பான். ஃபானுவைவிட அரசுசூழ்தலில் பழக்கமும் அதில் நம்பிக்கையும் கொண்டவன். அதன்பின் கிருஷ்ணையுடன் பேசுவோம். அதன்பின் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை நமது எண்ணத்துடன் கலந்து ஃபானுவிடம் சொல்வோம்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆனால் எடுத்த முடிவை அரசன் மாற்றலாகாது” என்றார் சாத்யகி. “பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்பப்போவதில்லை என்பதை அவன் அறிவிக்க வேண்டியதில்லை. நற்செய்தி ஒன்றுக்காக காத்திருக்கிறோம் என்று மக்களிடம் கூறலாம்” என்றார் கிருதவர்மன்.

நான் “எனில் நாம் அனைவரும் ருக்மிக்காக காத்திருக்கிறோம், அவர் நமக்கு உரிய பொருட்களுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று மக்களிடம் கூறுவோம். மெய்யாகவே அவர் இங்கு வந்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. மக்களும் அதை அறிவார்கள். அதன்பொருட்டு காத்திருக்கலாம்” என்றேன். “ஆம், அதன்பொருட்டு காத்திருக்கலாமே. அனைத்து வகையிலும் அது உகந்ததே. ருக்மி பொருட்களுடனும் படைகளுடனும் கிளம்பி ஃபானுவை பார்க்க வருகிறார் என்பது ஃபானுவின் நிமிர்வை மேலும் கூட்டுவதுதான். எந்த வகையிலும் அவனுக்கு இழிவல்ல” என்றார் கிருதவர்மன்.

“எவ்வகையிலாயினும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். உடனே இங்கிருந்து கிளம்புவது என்பது அறியா நிலம் ஒன்றிற்குள் நாம் இறங்குவதுபோல. தவளை எங்கும் பாயும். யானை ஏழுமுறை தொட்ட பின்னரே முதல் காலெடுத்து வைக்கும் என்பார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம், முயல்வோம்” என்றார் சாத்யகி.