கல்பொருசிறுநுரை - 52

பகுதி நான்கு : அலைமீள்கை – 35

பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அதன் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே முன்புறம் மேலெழுந்திருந்தமையால் நான் பின்புறம் நோக்கி விழுந்தேன்.

ஆனால் காற்றில் எழுந்து பறந்து செல்வதாகவே எனக்கு தோன்றியது. ஓசையில்லாமல் மிதந்து சென்று மரக்கலத்தின் பின்புறம் இருந்த பலகைப்பரப்பில் அறைபட்டு கீழே உதிர்ந்து எழுந்தேன். என்னைச் சூழ்ந்து சிறுவண்டுகள்போல எனது படைவீரர்கள் வந்து பொழிந்தனர். பலர் அச்சத்துடன் அலறிக்கொண்டிருந்தனர். என் மேல் சிலர் விழுந்தனர். குவிந்தவர்களால் மேலும் விழுந்தவர்கள் அடிபடாமல் தப்பினர். அலறல்களும் கூச்சல்களும் எழுந்திருக்கலாம். ஆனால் காற்றின் ஓசையில் எதுவும் காதில் விழவில்லை. அனைவரும் சிலைகளைப்போல திகைத்து விழித்த முகமும் திறந்த வாய்களும் கொண்டிருந்தனர்.

புரண்டெழுந்தவர்கள் ஓடிச்சென்று மரக்கலத்தின் விளிம்பைப் பற்றி ஏறி அப்பால் கடலில் குதித்தனர். அது சாவுக்குச் செல்வதென்பதை நான் அறிந்திருந்தேன். அப்பெரும் மரக்கலம் உடைந்து மூழ்கத்தொடங்கும்போது நீரை சற்றே விலக்கி விரிவட்டநிரையை உருவாக்கும். அதை நம்பலாகாது. கலம் மூழ்கியதுமே விரிவட்டம் பலமடங்கு விசையுடன் சுருங்கும். அது திறந்த வாய் மூடுவதுதான். அடங்காப் பசி கொண்டது ஆழி. அதன் வயிறு காலப் பெரும்பிலம். விசையுடன் உள்ளிழுக்கும் அப்பெரும் சுழியிலிருந்து நீந்துபவர்கள் எவரும் தப்ப இயலாது.

மரக்கலம் உடைந்து மூழ்கத் தொடங்குகையில் சிறிய விசைப்படகொன்றை எடுத்துக்கொண்டு உரிய முறையில் நீர்ச்சுழிகளை கணித்து கடலில் இறங்கி பாய்விரித்து அகன்று செல்பவர்கள் மட்டுமே தப்ப முடியும். ஆனால் படைவீரர்களில் பெரும்பகுதியினர் அவ்வாறே குதித்து கடலில் மாய்வார்கள் எனில் எஞ்சியவர்கள் படகை எடுத்துக்கொண்டு தப்புவது எளிதாக இருக்கும் என்று நான் எண்ணினேன். அவர்கள் சிற்றுயிர்கள். எவ்வண்ணமேனும் சாகப்போகிறவர்கள். ஆழிச்சாவு போர்ச்சாவைவிட இனியது. ஆழம் இனியது.

நான் விழுந்த இடத்திலிருந்த மரச்சட்டம் ஒன்றை இறுகப்பற்றியபடி, கலத்தின் ஊசலாட்டத்தில் என் உடலை நிலைநிறுத்திக்கொண்டு சூழ நிகழ்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஓரிருவர் கடலில் குதித்து நீந்தத் தொடங்கியதுமே மற்றவர்களும் ஓடிச்சென்று கடலில் பாயத் தொடங்கினர். எவரும் எதையும் எண்ணவில்லை. அத்தருணத்தில் மந்தை விலங்குகள் என்று மானுடர் மாறிவிடுகிறார்கள். எண்ணத்தால் அல்ல உடலாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டுவிடுகின்றன. சில கணங்களிலேயே என்னைச் சூழ்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கடலில் பாய்ந்துவிட்டார்கள்.

அப்போது மரக்கலத்தின் முகப்பு துவாரகையின் படித்துறைமேல் அறைந்த ஓசை வானில் இடித்தொடர்கள் என எழுந்தது. நொறுங்கல் ஓசை. அது பல்லாயிரம் கற்பரப்புகள், மரப்பரப்புகள் உடைபடும் ஓசைகளின் தொகுதி. வானம் பிளவுபடுகையில் அவ்வோசை எழக்கூடும். அல்லது இது வானுக்கு ஒரு சிறு முட்டை ஓடு நெரிபடும் ஓசைமட்டுமே. அந்த ஓசை ஏன் அத்தனை ஆழமானதாக இருக்கிறது? எவ்வெவ்வகையிலோ அந்த ஓசையை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மானுடர் தவறவேவிடாத ஓசைகளில் ஒன்று நொறுங்கலோசை.

என்னைச் சூழ்ந்திருந்த அனைத்தும் அதிர்ந்தன. மேலிருந்து ஒரு பாய்மரம் பாயை கட்டிய பெருந்தூணுடன் முறிந்து சரிந்து என் தலைக்குமேல் வந்து அங்கிருந்த மரத்தாலான அறையடுக்குகள் மேல் விழுந்து நொறுங்கி அசைவிழந்தது. அதிலிருந்து பாய் என் தலைக்குமேல் வந்து பொழிந்து அலையலையாக வளைந்து வானம் இறங்கியதுபோல் ஆகி தொங்கி நின்றது. அது நன்று என்று எனக்கு தோன்றியது. அதற்குமேல் விழும் அனைத்தையும் அது தாங்கிக்கொள்ளும். மீண்டும் ஒரு முறிவோசை. நான் பிரித்தறிய முடியாத பேரொலிகளின் நிரை. கண்ணை மூடி அம்மரக்கலம் துறைமேடையை அறைந்த ஒரு கணத்தை நான் பார்த்ததை மீண்டும் ஓட்டிக்கொண்டேன். ஒருகணம் மட்டும்தான் அது. ஆனால் அத்துறைமேடை நொறுங்கி கற்கள் உடைந்து மரக்கலம் உள்ளே நுழைவதை என்னால் காண முடிந்தது.

துவாரகையின் இரு பெரும் குன்றுகளில் எழுந்த அதிர்வை என் கைவிரல்களில் அறிந்தேன். ஒவ்வொரு கட்டடமும் நிலைகுலைந்து சரியத் தொடங்கியதை என் அகத்தே கண்டேன். அதன்பெரும் நுழைவாயில் சற்றே அசைந்து ஒருபுறமாக சரிந்தது. அங்கு கண் மூடி அமர்ந்து அந்நுழைவாயில் வலப்பக்கமாக உடைந்து விழுவதை நேரிலெனக் கண்டேன். என் மேல் மரக்கலத்தின் பாய்மரத்தூண்கள், கூரைப்பலகைகள் ஒன்றன் மேல் ஒன்றென விழுந்துகொண்டே இருந்தன. ஒன்று விழ அதனிடையில் பிறிதொன்று முறிய இடியோசைகளும் முறியும் ஓசைகளும் தொடர்ந்து எழுந்தன. என் மீது விழுந்த முதல் பெரும் தூண் முறிந்து மேலும் சரிந்தது. ஒருகணம் என்னுள் அகம் திகைத்து அது என்னை அழுத்திவிடக்கூடும் என்று தோன்றியது.

நான் பின்னர் புன்னகையுடன் மரக்கலத்தின் அளவிற்கு நான் எத்தனை சிறியவன் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு சிற்றெறும்புபோல. அதன் பெரும் தூண்களும் பாய்களும் பலகைகளும் என்னை அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. முழந்தாளிட்டு தவழ்ந்து எழுந்து முறிந்து சரிந்து கிடந்த படிகளினூடாக சென்றேன். இன்னொரு பெரும் முறிவோசை. மரக்கலம் திடுக்கிட்டது. அதன் தீப உடல் நேர் பாதியாக உடைந்து பின்பகுதி பின்பக்கமாக சாய்ந்தது. ஆகவே நான் எவ்வகையிலும் முன்னகர முடியவில்லை. என் தலைக்கு மேலென உடைந்த மரச்சிம்புகள் நிறைந்திருந்தன. அதில் எதில் தொற்றி ஏறினாலும் தொங்கிக்கிடக்கும் உணர்வையே அடைந்தேன்.

அம்மரக்கலத்தின் அமைப்பை என் உள்ளத்தில் கொண்டுவந்து என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொண்டேன். அது இரண்டாக பிளந்து பிளந்தபோதிருந்த சிம்புகள் அனைத்தும் கீழே வந்து படிந்து எடைகொண்டு அதன் பின்பகுதி கூர்முனை நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கிறது. அது கூரென்பதனாலேயே நீரை விலக்கும். எடையென்பதனாலேயே விரைந்து உள்ளே செல்லும். இன்னும் அரைநாழிகை நேரம்கூட அது நீர் மேல் இருக்க வாய்ப்பில்லை. பலகைகளையும் தூண்களையும் பற்றிக்கொண்டு தொங்கி ஆடிச் சென்றுகொண்டிருந்தேன்.

ஓரிருவர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர். அவர்களும் வெவ்வேறு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தனர். ஒருவன் “இளவரசே…” என்றபடி என்னை தொட வந்தான். அவன் தோளில் அடிபட்டிருந்தது. அவனை நான் துணை கூட்ட இயலாது. “இளவரசே! இளவரசே!” என்று சொன்னபடி கைநீட்டி என்னை நோக்கி வந்தான். என் உடைவாளை உருவி அவன் கழுத்தை வெட்டினேன். என்னை நோக்கி எழவிருந்த இன்னொருவன் அதைக் கண்டு திகைத்து அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். குருதி சொட்டிய உடைவாளை ஆடையில் துடைத்தபடி நான் மேலும் நுழைந்து சென்றேன்.

முன்பு நான் சென்ற படிகள், நான் அறிந்த அறைகள் ஒவ்வொன்றும் இடம் மாறியிருந்தன. படிகள் கூரையிலிருந்து தலைகீழாகத் தொங்கின. பொருட்கள் அனைத்தும் மிக ஆழத்தில் கிணற்றுக்குள் என விழுந்துகொண்டிருந்தன. ஆழத்தில் குவிந்து கிடந்த உடைவுகள் மேல் மேலும் மேலும் உடைந்த பலகைப்பொருட்கள் சென்று விழுந்துகொண்டிருந்தன. நான் சரிந்து கிடந்த ஒரு தூணினூடாகச் சென்று பாயொன்றைப் பற்றி முன்னகர்ந்தேன்.

பெருங்கலத்தின் விலாவில் படகு பொருத்தி கட்டப்பட்டிருக்கும், அன்னைச் சிலந்தி மேல் குஞ்சுகள்போல. அம்மரக்கலத்திலேயே ஐநூறு சிறுபடகுகள் இணைக்கப்பட்டிருக்கும். மரக்கலம் எவ்வகையிலேனும் பழுதடையுமெனில் அதிலுள்ள முழுப் படைவீரர்களும் கிளம்பிச்செல்லும் அளவுக்கு பெரியவை அவை. மென்மரத்தாலானவை. எனவே எப்புயலிலும் மூழ்காதவை. மூழ்கினாலும் மிதக்கும் தன்மைகொண்டவை. வடத்தில் தொங்கி இறங்கி என் கையிலிருந்த வாளால் அவற்றைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டினேன்.

ஒரு படகு சரிந்து ஒற்றைக் கயிறில் தொங்கியது. தொற்றி அதிலேறி அமர்ந்த பின் அதன் இறுதிக் கயிறை வெட்டினேன். படகு சரிந்து, பின்னர் காற்றில் நெற்று உதிர்வதுபோல் கீழே மிக ஆழத்தில் நீல அலைகொண்டிருந்த கடலை நோக்கி சென்று, நீரில் அறைந்து அசைவிழந்து, பின்பு அலைகளில் மேலெழுந்து தன் அலைவில் தானே சற்று சுழன்றது. நான் அதன் குறுக்குச்சட்டத்தை இறுகப் பற்றியிருந்ததனால் அவ்விசையில் தூக்கி வீசப்படாமல் இருந்தேன்.

என்னை நிலைநிறுத்திக்கொண்டதும் அதன் விளிம்பில் பொருத்தப்பட்டிருந்த துடுப்புகளை உருவி இரு பக்கமும் வளையங்களில் பொருத்தி நீட்டினேன். எழுந்து காலால் மரக்கலத்தை உந்தி அதிலிருந்து விலக்கி துடுப்பால் பிறிதொருபுறம் தள்ளி மேலும் விலக்கி வெறிகொண்டு துழாவத் தொடங்கினேன். அதில் பாய்மரம் இல்லை என்று முதலில் தோன்றியது. பின்னர் பாய்மரம் அதில் ஒன்றுள் ஒன்று என செருகப்பட்ட மூங்கில்களாக படிந்திருப்பதை கண்டேன். அருகிலிருந்த கயிற்றை இழுத்தபோது பாய்மரம் பாயுடன் மேலெழுந்தது. அக்கணமே பாய் காற்றை ஏற்று உப்பியது. சுக்கானை இழுத்து பாயை உரிய முறையில் திருப்பி காற்றை எனக்கு உகந்த திசையில் விசை அளிப்பதாக ஆக்கினேன்.

மூழ்கிக்கொண்டிருந்த மரக்கலத்தில் இருந்தெழுந்த அலையும் எனக்கு விலகிச்செல்ல உதவியது. எழுந்து பின் அமைந்து மீண்டும் அலைகளில் விழுந்து மீண்டும் ஆழ அமிழ்ந்து சென்றுகொண்டிருந்தேன். அத்தருணத்தில் துவாரகை நோக்கி செல்லலாகாது என்று அறிந்திருந்தேன். துவாரகைக்கு மரக்கலங்களை அள்ளிக் கொண்டு வரும் கடல் நீரோட்டம் அது. ஆறெனக் கொண்டால் நூறு சிந்துவுக்கு நிகரானது. அது துவாரகையின் துறைமேடையால் தடுக்கப்பட்டு வளைத்து மறுபுறம் செல்லும் நீரோட்டமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலேறியே பெரும்மரக்கலங்கள் கடலுக்குள் செல்வது வழக்கம்.

அந்த நீரோட்டத்தை நான் அடைந்துவிட்டேன் எனில் பீதர் மரக்கலம் மூழ்கும்போது நான் அதிலிருந்து தப்பிவிடுவேன். நான் கண்ணை மூடிக்கொண்டு பிறிதொரு எண்ணமின்றி கைகள் மட்டுமே சித்தமென செயல்பட துழாவிக்கொண்டிருந்தேன். பின்னர் நெடும்பொழுது ஆயிற்றோ என்று திரும்பிப் பார்த்தபோது அப்பால் உடைந்த மரக்கலத்தின் ஒரு பாதி மெல்ல அமிழ்ந்துகொண்டிருப்பதையே கண்டேன். அதற்குள் நீர் நிரம்ப உள்ளிருந்து சாளரங்களினூடாகவும் விரிசலினூடாகவும் நீர் பீறிட்டு வெளியேவந்து மீண்டும் கடலில் கொட்டிக்கொண்டிருந்தது.

இன்னும் சற்று பொழுதுதான். அது மூழ்கத்தொடங்கிவிட்ட பின்னர் எழும் சுழலிலிருந்து எவரும் தப்ப முடியாது. அப்பகுதியெங்கும் நீரில் பாய்ந்தவர்கள் வெவ்வேறு மரக்கட்டைகளையும் பலகைகளையும் பற்றிக்கொண்டு நீந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் உண்ணப்போகும் வாய் இன்னும் சற்று நேரத்தில் திறக்கும். ஆழத்தின் வாய். நீலநிறமான வாய். ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக மரக்கலங்களை இழுத்து உண்டுகொண்டிருக்கும் பெரும்பசி. இப்பெருங்கலத்தையும் அள்ளி தன்னுள் வைத்திருக்கும்.

நான் உந்தி உந்தி படகை முன்னெடுத்தேன். பிறகு என் படகுக்குக் கீழே நீரின் ஓட்டம் செயல்படுவதை பார்த்தேன். அத்தருணத்தில் பிறந்த உவகையை எண்ண எண்ண வியப்படைந்தேன். என்ன நிகழ்கிறதென்றே தெரியாதவை மானுடனின் உணர்வுகள். என்னைச் சுற்றி பித்தெழுந்து ஒவ்வொன்றும் நடந்துகொண்டிருந்தன. நானோ ஒரு சிறு தப்பித்தலுக்காக வெறிக்கூச்சலிடும் அளவுக்கு உவகையை அடைகிறேன்.

என் மைந்தர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மூத்தவர் ஃபானுவால் தேடிப் பிடிக்கப்படுவார்கள் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது. அவர்களை பிரத்யும்னனும் பிடிக்கக்கூடும். இங்கிருந்து நான் தப்பினாலும் இந்தப் படகில் தேவபாலபுரம் வரை செல்ல இயலாது. துவாரகையின் வலப்பக்கம் விலகி அமைந்திருக்கும் சிறிய படகுத்துறைமேடைகளில் ஒன்றை அணைந்து அங்கிருந்து புரவியில் ஏறி நகரை விட்டு செல்லவேண்டும். அதற்கான வாய்ப்புகள் உண்டா என்றே தெரியவில்லை. ஆயினும் தப்பிவிட்டேன் என்ற உணர்வில் என் உடலெங்கும் திளைப்பு ஏறியது.

கூச்சலிட்டு நகைத்தபடி துடுப்பை போட்டேன். நீரோட்டம் என்னை அள்ளிக்கொண்டதும் படகிலிருந்து கையை எடுத்து துடுப்பை மடிமேல் பிடித்தபடி மல்லாந்து அமர்ந்து கண்மூடி மூச்சுவாங்கத் தொடங்கினேன். என் காதுகளில் காற்று கிழிபட்டோடுவதை உணர்ந்தேன். நீரோட்டம் என் படகை தூண்டிலால் சுண்டி இழுத்து பறக்க வைத்தது. பாய் புடைத்து கிழிபடும்போல் தோன்றியது. கரை உருக்கி நீட்டப்பட்டதுபோல் உருவழிந்த மண்கோடாக அப்பால் தெரிந்தது.

பின்னர் பெருமூச்சுடன் தன்னுணர்வடைந்து எழுந்தமர்ந்து திரும்பிப் பார்த்தபோது பீதர் நாட்டுக் கலம் அங்கில்லை என்பதை கண்டேன். அங்கு மாபெரும் நீர்ச்சுழிப்பொன்று இருந்தது. சுற்றி மிதந்துகொண்டிருந்த அனைத்துப் பொருட்களையும் இழுத்து சரடென்றாக்கி சுருட்டி மையப்புள்ளிக்குள் கொண்டுசென்று கொண்டிருந்ததது. மேலே துவாரகையின் மாளிகைகள் அனைத்தும் சரிந்து கிடந்தன. அதன் பெருவாயில் அங்கில்லை. அங்கே துவாரகை இல்லை என்பது கண்களை திகைக்கச் செய்யவில்லை. ஏனென்றால் அதை பலமுறை கற்பனையில் நிகழ்த்திவிட்டிருந்தேன்.

என் படகை நீரோட்டம் மிக விலக்கி ஆழ்கடல் நோக்கி கொண்டு சென்றது. உடனே நான் திசை மாறவில்லை எனில் அது மையப்பெருக்குக்கு கொண்டு செல்லும். நீரின்றி உணவின்றி பெருங்கடலில் சிக்கிக்கொண்டால் நான் திரும்பி வர முடியாமலாகும். ஆகவே அந்நீரோட்டத்தை கணித்தேன். பக்கவாட்டில் துடுப்பை போட்டு அப்பெருக்கின் விளிம்பை நோக்கி படகை செலுத்தினேன்.

அதன் விளிம்பை அங்கிருந்து ஒரு பளிங்குக்கோடென பார்க்க முடிந்தது. அதற்கப்பால் நீர் எதிர்திசை நோக்கி சென்றது. அவ்விளிம்பை அடைந்ததும் இரு கைகளாலும் துடுப்பை ஓங்கிக் குத்தி படகை சற்றே துள்ள வைத்து அவ்வெதிர் ஓட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதன் பின்னர் அதிலும் சிக்கிக்கொள்ளாமல் பக்கவாட்டில் துழாவி துவாரகையில் இருந்து எட்டு கல் தொலைவிலிருந்த சிறிய படகுத்துறை ஒன்றை நோக்கி செலுத்தினேன்.

ஆனால் அங்கிருந்த படகுகள் அனைத்தும் கடலில் எழுந்த அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். அங்கிருந்து நீர் பெருகி வந்து என்னைக் கடந்து ஆழ்கடலுக்குள் சென்று கொண்டிருந்தது. கடல் உள்வாங்குகிறதா? தன்னைத்தானே உள்ளிழுத்துக்கொள்கிறதா? திரும்பிப் பார்த்தபோது நீல நிறத்தில் பளிங்காலான மலை ஒன்றை கண்டேன்.

அது என்னவென்று எனக்கு புரியவில்லை. திகைத்து அதை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அது அசையாமல் அங்கு அவ்வண்ணமே நின்றது. வளைந்து வளைந்து வளைந்து அதன் நீர்ச்சுவர் மேலேறியது. மிகமிக அழகான இளநீல பளிங்குப் பரப்பு. அதன் உச்சியில் வானத்தின் கோடு. எப்போது எழுந்தது அது? ஏன் அங்கு அசையாமல் நிற்கிறது? ஆனால் சில கணங்களுக்குப் பின் அது மிக அணுகி வந்துவிட்டதை உணர்ந்தேன். அவ்வுணர்வை நான் மேலும் அறிவதற்குள் நான் நீர்மலையொன்றின் உச்சியிலிருந்தேன். என் படகுக்குக் கீழே மிக ஆழத்தில் துவாரகையின் படித்துறை தெரிந்தது. தொலைவில் துவாரகையின் இரு குன்றுகளும் மிகச் சிறிதாகத் தெரிந்தன. அங்கு கட்டடங்கள் இடிந்துகொண்டிருப்பதும் மக்களின் குரல்களும் வண்டொலி போன்ற முழக்கமும் கேட்டது.

மறுபடியும் தன்னுணர்வடைந்தபோது என் படகு பறந்ததுபோல் வானிலேயே படித்துறை நோக்கி செல்வதை கண்டேன். பிறிதொரு கணத்தில் நான் துவாரகையின் புறநகர்ப் படித்துறையின் அருகே அமைந்த கல்லால் ஆன கட்டடங்களுக்கு மேல் படகில் பறந்துகொண்டிருந்தேன். என் படகு மரக்கூரையொன்றை சென்று அறைந்தது. அதன் மூக்கு மரப்பலகைகளை உடைத்து உள்ளே இறங்கியது. நான் அதிலிருந்து தெறித்து அப்பால் விழுந்து அக்கூரையிலிருந்து உருண்டு கீழே சரிந்தேன். என் தலைக்கு மேல் நீராலான பெரும் வளைவொன்று மழையென அறைந்து இறங்கியது. மூச்சை நிறுத்தும் மாபெரும் பொழிவு. ஓர் ஏரி அப்படியே கரையுடைந்து சரிந்து மூடுவதுபோல.

பின்வாங்கும் நீரின் நூறுநூறு காட்டாறுகள் சேர்ந்து என்னைப் பற்றி இழுத்து கொண்டுசெல்ல உயிரின் வெறியுடன் நான் அங்கிருந்த மரம் ஒன்றை ஆரப்பற்றிக்கொண்டேன். மரம் வேருடன் பிழுது கொண்டுசெல்லப்பட்டது. பிறிதொரு மரத்தில் சிக்கி அசைவிழந்தது. பிறிதொரு கணத்தில் நான் எழுந்து நின்றபோது என்னைச் சூழ்ந்திருந்த அனைத்து மாளிகைகளும் இடிபட்டுக் கிடப்பதை பார்த்தேன். அனைத்தின் மேலும் மணல் மூடியிருந்தது. நான் வந்த படகு ஆறு அடுக்குகள் கொண்ட மாளிகையின் தலைக்குமேல் கூரையில் பதிந்திருந்தது. கடலில் நின்றிருந்த அனைத்துப் படகுகளும் கரைக்கு வந்து மணலிலும் கூரைகளிலும் பதிந்து கிடந்தன. உடைசல்களும் சிம்புகளும் பரவியிருந்தன. கற்பாளங்களே தூக்கி வீசப்பட்டிருந்தன.

நான் எழுந்து நின்றபோது என் உடைகளெல்லாம் கிழிந்து கிடப்பதை பார்த்தேன். என் வாய்க்குள் மணல் சென்றிருந்தது. கையால் வயிற்றை அமுக்கி உமிழ்ந்தபோது சீழும் மணலுமாக வெளியே கொட்டியது. மூன்று முறை ஓங்கி தும்மியதும் குருதித் துளிகளுடன் மணலும் வெளிவந்தது. குமட்டிக்குமட்டி வாயுமிழ்ந்தேன். மணல் வந்துகொண்டே இருந்தது. உடலுக்குள் அத்தனை மணல் எப்படி சென்றது? எப்படி என் உடைகளை நீர் கிழித்தது? என்னைச் சூழ்ந்து மானுட உடல்கள். நசுங்கியவை, சிதைந்தவை, உடைந்தவை. பெரும்பாலான உடல்களின் வாய் முழுக்க மணல் நிறைந்திருந்தது. சில உடல்களின் கண்களே மணல் நிறைந்த குழிகளாக தெரிந்தன.

என்ன நிகழ்ந்தது என்று உணராது நான் தடுமாறி ஓடி மேலே சென்றேன். கடல் மிக மிக உள்வாங்கியிருப்பதை கண்டேன். படகுத்துறையிலிருந்து மேலும் ஆழ்ந்திறங்கிச் சென்ற கடல்பரப்பில் நீரில் உருவழிந்த பாறைகளின் உருகிய வடிவங்கள் மணல்பரப்பில் பதிந்து கிடந்தன. நெடுந்தொலைவு கடல் விளிம்பு அலையற்று அசைவற்று நின்றது. என்னால் நிற்க முடியவில்லை. எவரோ பிடித்துத் தள்ளுவதுபோல் பின்னால் விழுந்தேன். மீண்டும் எழுந்து நின்றேன். மீண்டும் சரிந்து விழுந்தேன்.