கல்பொருசிறுநுரை - 50
பகுதி நான்கு : அலைமீள்கை – 33
தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது? ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து வருகிறது. அதை அஞ்சி வேறேதோ செய்துகொண்டிருக்கிறேன். அதை தடுப்பதற்கான சிறுசிறு முயற்சிகள். உருண்டுவரும் ஒரு பெரும்பாறைக்குக் கீழே சிறுசிறு பாறைகளை எடுத்துக்கொடுப்பதுபோல. அதனால் அதை தடுக்க இயலாது. அதன் எடையே அதன் ஆற்றல். அதன் ஊழ் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது.
அது மிக அருகே வந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். என் புலன்கள் அனைத்தும் இழுபட்டு நின்றிருந்தன. நான் அரசுசூழ்தல் பணிகள் அனைத்திலும் இறங்கியது என் சலிப்பான அன்றாடத்தை விசைப்படுத்திக் கொள்வதற்காக. ஆனால் அத்தருணத்தில் எளிய மாற்றமில்லாத அமைதியான அன்றாடத்திற்கு ஏங்கினேன். சற்றே சலிப்பு வருகிறது என்பதற்காக இல்லத்தில் தீ வைத்துவிட்ட வீணன் நான் என்று உணர்ந்தேன். நான் உணர்ந்ததெல்லாம் உடனடியாகக் கிளம்பி என் மைந்தர்களுடன் சென்று அமரவேண்டும் என்னும் விழைவை மட்டுமே. அனைத்தையும் அகற்றிவிட்டு அவர்களுடன் கூவி ஆர்ப்பரித்து விளையாடவேண்டும்.
படியிறங்கி கீழே வந்தேன். என்னை அணுகிய வீரனொருவன் தலைவணங்கி “கணிகர் தங்களை சந்திக்க விழைந்தார். தங்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்” என்றான். “இப்போதா?” என்றேன். “ஆம்” என்றான். “இப்போதுதானே சந்தித்தேன் அவரை?” என்றேன். “அவர் இப்போது தன் குடிலுக்கு சென்றுவிட்டார். தாங்கள் அங்கு செல்ல வேண்டுமென்று விழைகிறார்” என்றான். “அவர் எந்நிலையில் இருக்கிறார்?” என்றேன். “வழக்கம்போலத்தான்” என்றான். “அவர் என்ன உசாவினார்?” என்றேன். அவன் சற்று எண்ணிநோக்கி “நகரின் அழிவுகளைப்பற்றி பொதுவாக” என்றான்.
நான் “நன்று” என்ற பின்னர் என் ஆடையை அள்ளி சுற்றிக்கொண்டு இடைநாழியினூடாக விரைந்து அரண்மனை முற்றத்திற்குச் சென்று புரவியில் ஏறி அரண்மனை வளாகத்தை சுற்றிக்கொண்டு கணிகரின் குடிலை அடைந்தேன். கணிகர் வழக்கம்போல் தன் குடிலுக்குள் தர்ப்பை மேல் தன் ஒடிந்த உடலைக் கிடத்தி அமர்ந்திருந்தார். இனிய புன்னகையுடன் என்னை அருகணைந்து அமரும்படி சொன்னார். நான் பதறிக்கொண்டிருந்தேன். அமர்ந்ததும் என் உள்ளம் அடைந்த சிறு ஆறுதல் வியப்பூட்டியது. நான் அமர்ந்ததும் “நன்று” என்று அவரே தொடங்கினார். நான் அவர் எதை எண்ணுகிறார் என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே “நன்று, அவ்வாறுதான் அதை செய்யவேண்டும்” என்றார்.
அவர் எதை கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. என் நாவை பிடுங்க முயற்சிக்கிறாரா? எனில் அவரே கூறட்டும் என்று நான் காத்திருந்தேன். “சுஃபானுவுக்கும் ஃபானுவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்காமல் இது முன்னகராது. ஃபானு இன்றி சுஃபானு ஆற்றலற்றவர். சுஃபானுவின் சொல்லின்றி ஃபானுவால் செயல்பட இயலாது. அவர்கள் பிரிக்கப்பட்டாக வேண்டும். ஐயத்தின் விதை ஒன்று முன்னரே இருக்கும். ஏனெனில் சுஃபானு இன்றி தன்னால் செயல்பட இயலாது என்று ஃபானு அறிந்திருக்கிறார். அந்த ஐயத்தின் விதையை சற்றே தூண்டிவிடுவதே நீ செய்தது. நன்று” என்றார்.
நான் அக்கணம் என்னை மிகமிகக் கசந்தேன். என் முகத்திலும் ஒரு கோணலாக அந்தக் கசப்பு வெளிப்பட்டது. “இப்பொழுதில் அங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிகழ்வது எதுவும் உகந்ததாக இருக்காது” என்றார் கணிகர். “அந்தணரே, நான் குழம்பியிருக்கிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அச்சத்தில், பதற்றத்தில் என்ன செய்ய இயலுமோ அதை செய்துகொண்டிருக்கிறேன்” என்றேன். “இனி எவ்வாறாயினும் நாம் செயல்புரிந்தே ஆகவேண்டும். ஒவ்வொன்றும் முழு விசையுடன் தொடங்கிவிட்டது. இனி வினையில்லாமல் இருப்பது நம்மை ஒப்புக்கொடுப்பதே. நாம் செய்யக்கூடுவனவற்றின் உச்சத்தை பிறிதொன்று கருதாமல் செய்தாகவேண்டும்” என்றார் கணிகர்.
“நோக்குக, எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்தில் அனைத்தும் உடைந்து கரிந்து விழுந்து நிலையழிவதுபோல தோன்றும்! ஆனால் தீயை மட்டும் கூர்ந்து பார்த்தால் தீயின் விழைவுக்கேற்ப ஒவ்வொன்றும் தன்னை அளித்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம். ஒரு யானை மரத்தை கிளையொடித்து உண்கிறது, யானையை நம்மால் பார்க்க இயலாது என்றால் அந்த மரம் எப்படி தெரியும்? நெருப்பு எழும் கட்டடம் அவ்வாறுதான். அதில் ஒவ்வொன்றும் உடைந்து சரிந்து விழுவதனூடாக தீ மேலும் ஓங்கியே எரியும். தீக்கு படியமைக்கின்றன பொருட்கள். மடிந்து நொறுங்கி தீக்கு உணவாகின்றன. அதுதான் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீ இயற்றுவது தீயின் விழைவை” என்றார் கணிகர்.
“அங்கு என்ன நிகழ்கிறது?” என்று நான் கேட்டேன். “அங்கு நிகழ்வதனைத்தையும் நான் அறிந்துகொண்டிருக்கிறேன். துவாரகை அச்சத்திலும் பதற்றத்திலும் உழன்றுகொண்டிருக்கிறது. சிற்பிகள் எவரையேனும் அழைத்துவர ஒரு குழு சென்றிருக்கிறது. ஆனால் இந்நகரை உருவாக்கிய சிற்பிகளில் எவரும் இந்நகரத்திற்குள் இல்லை” என்றார் கணிகர். “சுதேஷ்ணனை ஆதரிக்கும் தன் இளையோரை உடனடியாக தேடிப்பிடித்து கொன்றுவிடும்படி பிரத்யும்னன் ஆணையிட்டிருக்கிறார். ருக்மிணி தேவிக்கு இதுவரை செய்தி சொல்லப்படவில்லை. அன்னை என்ன கூறப்போகிறார் என்று தெரியவில்லை.”
“அநிருத்தன் பிரத்யும்னனின் செயல்களை ஏற்கவில்லை. அவ்வாறு தந்தை தன் உடன்பிறந்தவரை கொல்வது பெரும்பிழை என்று அவர் கூறுகிறார். தந்தைக்கும் மைந்தனுக்குமிடையே கடும்பூசல் ஒன்று இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிரத்யும்னனின் செயலை அநிருத்தன் ஏற்கவில்லை என்பதே ஷத்ரியர்களின் விசையை குறைத்துவிட்டது. நான் கூறியதுபோல துவாரகையில் இந்தப் பேரழிவு நிகழ்ந்ததே உடன்பிறந்தார் கொலை நிகழ்ந்து, அக்குருதி நகரில் விழுந்தமையால்தான் என்ற செய்தி நகர் முழுக்க பரவிவிட்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இறந்த மைந்தருக்காக யாதவர்கள் கதறி அழுகிறார்கள்.”
“ஷத்ரியர்களில் ஒரு சாரார் பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் ருக்மியிடமிருந்து ஏதேனும் செய்தி வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் கணிகர். “இதைப்போல துவாரகை எப்போதும் இருந்ததில்லை. இது கொந்தளிப்பு அல்ல, உழுதிட்ட புது மண்ணின் கிளர்வு. இது விதை ஊன்றுவதற்கு உகந்தது.” நான் “மற்ற மைந்தர்கள் என்ன செய்கிறார்கள்?” என்றேன். “நான் அறிந்தவரை சாம்பனும் தன் படைகளை தொகுத்துக்கொண்டு நிகழ்வன என்ன என்று பார்க்கலாம் என்று காத்திருக்கிறார். இப்போதைக்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. இந்த மோதல்களினூடாக ஏதேனும் ஒன்று திரண்டு வரட்டும் என்றே அவர் நினைக்கிறார்” என்றார் கணிகர்.
“அவர்களின் அரசியின் ஆணையே அங்கே முதன்மையானது. அவர் முன்னரே சொல்லியிருந்தார், இது ஒருபோதும் ஒருங்கிணையாத ஒரு கூட்டு என்று. ஃபானு முடிசூடப்போவதில்லை, அவ்வாறு நிமித்திகர் கூற்றே இல்லை, ஆகவே சாம்பன் இன்று எதுவும் செய்யாமல் காத்திருப்பது ஒன்றே இயற்றக்கூடுவது என்று அவர் கருதுகிறார். சாம்பனும் அதன்பொருட்டே இப்போது காத்திருக்கிறார்” என்றார். “பிற மைந்தர்கள் இப்போது தங்கள் நிலைபாடுகளை அறிவித்து எவரேனும் ஒரு தரப்பினருடன் சென்று சேர்ந்துகொள்ள வேண்டியதில்லை. முழுக்க முழுக்க இது பிரத்யும்னனுக்கும் ஃபானுவுக்குமான போராக முடியட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.”
நான் பெருமூச்சுவிட்டேன். புன்னகைத்து கணிகர் சொன்னார் “சுதேஷ்ணனுக்கும் சுஃபானுவுக்கும் நல்லுறவு இருந்ததாக நீ சொன்னது நன்று. ஃபானுவின் ஐயம் தன் மேல் திரும்புவதை உணர்ந்து சுஃபானு செய்யக்கூடுவது நேராகச் சென்று பிரத்யும்னனிடம் சேர்ந்துகொள்வதுதான். ஆனால் பிரத்யும்னன் இந்நேரம் சுஃபானு சுதேஷ்ணனுடன் சேர்ந்து தனக்கெதிராக சூழ்ச்சி செய்தார் என்ற செய்தியை அறிந்திருப்பார். ஆகவே அவர் அங்கு செல்ல இயலாது.” நான் “எனில் அவர் என்ன செய்யக்கூடும்?” என்று கேட்டேன்.
“அவர் செய்யக்கூடுவது ஒன்றே. உன்னை சிறைபிடிக்கலாம். உன்னை கொண்டுசென்று மூத்தவர் முன் நிறுத்தி உன் நாவிலேயே நீ செய்ததென்ன என்று சொல்லச் செய்யலாம்” என்றார் கணிகர். “அது எப்படி?” என்று நான் பதறினேன். “முடியும். உனது மிகமிக நொய்மையான ஓர் இடம் அவர் கையில் இருக்கிறது. உனது மைந்தரும் துணைவியும் இங்கு இருக்கிறார்கள்.” பதறிப்போனவனாக நான் எழுந்துவிட்டேன். அலறலாக “கணிகரே!” என்றேன். “இங்கு அவர்களை வைத்திருந்திருக்கக் கூடாது. அப்போதே அதை நான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உனக்கு அவர்கள் தேவைப்படுகிறார்களோ என்று தோன்றியது.”
“என் மைந்தர்கள்!” என்று நாம் விம்மிவிட்டேன். “பிற யாதவ மைந்தர்களின் அரசியரும் மைந்தர் ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையர் ஊர்களில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். உனது மைந்தர்களும் அரசியும் அவ்வாறல்ல. நான் சுஃபானுவின் இடத்திலிருந்தால் இந்நேரம் ஒரு படைப்பிரிவை அனுப்பி உன் மைந்தரையும் அரசியையும் சிறைபிடிப்பேன். உன்னை என்னை வந்து பார்க்கச் சொல்வேன். நீ எங்கு ஒளிந்தாலும் வேட்டையாடி கைப்பற்றுவேன்.”
நான் “கணிகரே” என்று கூவினேன். “என் மைந்தர், கணிகரே. என் மைந்தர்.” “இப்போதே அவர்களின் சூழ்கை என்னவாக இருக்கும் என்று கணிக்க முடிந்தது நன்று. உன் மைந்தர் இப்போது நலமாகவே இருக்கிறார்கள். உடனே அவர்களை காக்கும் செயல்களை செய்யமுடியும். அஞ்சவேண்டாம். ஆனால் அஞ்சவேண்டியது ருக்மியை. இங்கே நிகழ்வனவற்றுக்கான தொடக்கம் அவர் அறிந்தது. அவர் பொய் சொல்லாதவர் என்ற எண்ணம் இங்கே அனைவருக்கும் உள்ளது. நான் ஃபானுவாகவோ பிரத்யும்னனாகவோ இருந்தால் உடனடியாக ருக்மிக்கு ஓலை ஒன்றை அனுப்பி என்ன நிகழ்ந்தது என்ற விளக்கத்தை பெறுவேன்” என்றார் கணிகர்.
“ருக்மி அவ்விளக்கத்துடன் முன் வருவாரா?” என்றேன். “சுதேஷ்ணன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்ததுமே ருக்மி நிலையழிந்திருப்பார். ஷத்ரியர்கள் தங்களுக்குள் பூசலிடுகிறார்கள் என்று தெரிந்ததும் அவரால் அங்கு அமைந்திருக்க இயலாது. அவர் இங்கு கிளம்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிளம்பி வருக என்று ஒருவர் அழைத்தால் கிளம்பி வருவார்.” நான் கைகளை கூப்பி நெஞ்சில் வைத்திருந்தேன். இறந்தவன் போன்ற குரலில் “படையுடனா?” என்றேன். “படையுடன் வரமாட்டார். அதற்கான பொழுதில்லை. நேரடியாக வருவார். பிரத்யும்னனிடம் தானே பேசுவதற்காக வருவார். பிரத்யும்னன் அவரிடம் பேசுவார்.”
கணிகர் புன்னகைத்து “இத்தருணத்தில் சுஃபானுவைப் போன்ற ஒருவர் செய்யக்கூடுவது பிரத்யும்னனின் அழைப்பு என்ற பெயரில் ஒரு செய்தியை ருக்மிக்கு அனுப்புவதல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். உடனே உரத்த குரலில் “கணிகரே, அதை செய்துவிட்டீரா? அந்த எண்ணத்தை சுஃபானுவுக்கு அளித்துவிட்டீரா?” என்றேன். “இல்லை. அவருடைய தூதன் என்னிடம் வருவான். நான் அதை சொல்லாமலிருக்க முடியாது. ஏனென்றால் அது என் கடமை. ஆனால் உன் மேல் உள்ள பற்றினால் உடனே உன்னை வரச்சொன்னேன்.”
“அவ்வண்ணம் ஓர் ஓலை சென்றால் அதை ருக்மி தட்டமாட்டார்” என்றார் கணிகர். ”உண்மையில் ருக்மி கிளம்பி வந்துகொண்டிருக்கிறார். அச்செய்தியை நீ அறிந்தாகவேண்டும்.” நான் “ருக்மியா? இங்கு வருகிறாரா?” என்றேன். “ஆம்” என்றார். “ஏற்கெனவே பிரத்யும்னனின் தரப்பில் இருந்தும் அநிருத்தனின் தரப்பில் இருந்தும் ருக்மி இங்கு வந்தாகவேண்டும் என்ற செய்தியை அங்கு அனுப்பியிருக்கிறார்கள்.” நான் “ருக்மி இங்கு வந்துவிட்டால் என்ன நிகழும்?” என்று கேட்டேன். “நிகழ்வதற்கு எல்லையே இல்லை. ருக்மி வந்து அவை நின்று பேசத்தொடங்கினால் முதலில் கழுவேறப் போவது நீயாகவே இருப்பாய்” என்றார் கணிகர்.
என் உடல் நடுங்கத்தொடங்கியது தலையை பற்றிக்கொண்டு அமர்ந்தேன். “ருக்மி இங்கு வருவதை தடுப்பதற்கு ஒரு வழியுண்டு. நான் கூறாமல் உனக்கு இது தோன்றப்போவதில்லை” என்றார் கணிகர். “கூறுக!” என்றேன். சலிப்புடன் “இப்போது யார் என்னிடம் என்ன கூறினாலும் செய்யும் நிலையிலிருக்கிறேன்” என்றேன். “பதற்றம் வேண்டாம். நீ கிட்டத்தட்ட பிரத்யும்னனின் படையினரிடம் சிக்கிக்கொண்ட ஒரு தருணம் நிகழ்ந்ததே, அப்போது எவ்வாறு தப்பினாய்?” என்றார் கணிகர். “இந்த நிலநடுக்க நிகழ்வால்” என்றேன். “ஆம், தெய்வத்தின் ஒரு கை உள்ளே வந்தது. மீண்டும் தெய்வத்தின் கை உள்ளே வரட்டும்” என்றார்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “ருக்மி நகருக்குள் நுழைகையில் இங்கு ஒவ்வொன்றும் அமைந்துவிட்டிருக்கும். இப்போதே படைத்தலைவர்களை நகர் முனைகளுக்கு அனுப்பி ஒவ்வொரு சந்தியிலும் படைகளை நிறுத்தி துவாரகையின் கொந்தளிப்பை அடக்கத் தொடங்கிவிட்டார்கள். சிற்பிகள் வந்து நகர் ஒழுங்காக இருக்கிறது என்று அறிக்கையிட்டு அது முச்சந்திகள் ஒவ்வொன்றிலும் படிக்கப்படுமென்றால் நாளை புலரிக்குள் நகர் அடங்கிவிடும். ஒவ்வொருவரும் தங்கள் அறைகளுக்குள் இருக்கையில் பூசல் நிகழாது.”
“பிரத்யும்னனும் சாம்பனும் ஃபானுவும் சுஃபானுவும் காத்திருப்பார்கள். ருக்மி நகர்நுழைந்தார் என்றால் அவரை அவைக்கு கூட்டிக்கொண்டு வருவார்கள். அவையில் ஒரு சொல்லாடல் நிகழும். ருக்மி நிகழ்ந்ததென்ன என்று கூறினால் அதன் பிறகு…” என்று கணிகர் சொல்ல நான் இடைமறித்து “அவ்வாறு அவர் கூறினால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை” என்று நான் நலிந்த குரலில் சொன்னேன். “ஒன்று அவர் விழிகளில் ஒரு நேர்மை இருக்கும். அவர் சொல்சூழ்பவர் அல்ல, அரசுசூழ்தலை அறிந்தவரும் அல்ல என்பதை அனைவரும் அறிவார்கள். ஆகவே அவர் சொல் ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார் கணிகர்.
“இன்னொன்றும் உண்டு. நிகழ்ந்தது கடந்துசெல்லட்டும், ஒவ்வொன்றையும் மீண்டும் தொடங்குவோம் என்றே உள்ளத்தின் ஆழத்தில் அனைவரும் எண்ணுகிறார்கள். ஆகவே அனைவரும் தாங்கள் நம்ப விரும்புவதையே நம்புவார்கள். அதற்குமேல் ஒருவேளை நிகழ்ந்ததென்ன என்பதற்கான சில சான்றுகளை ருக்மி கொண்டுவரக்கூடும். அவரும் தன் சொல்லை மட்டுமே நம்பி இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அமைச்சர்களை உடனழைத்து வரலாம். அந்தணர் ஒருவர் வந்து தன் நா தொட்டு உரைத்தாரென்றால் பிறகென்ன?”
நான் திகைத்து அமர்ந்திருந்தேன். “நீ அங்கு பேசும்போது அவையில் அந்தணர் எவர் இருந்தார்கள்?” என்றார் கணிகர். “இருந்தார்கள். ஆனால் அவர்கள் எதுவும் சொல்லவில்லை” என்றேன். “அந்தணர் ஒருவர் இருந்தாரல்லவா? உன் சொற்களை தன் காதால் கேட்டாரல்லவா?” என்றார் கணிகர். “ஆம்” என்றேன். “அந்த அந்தணருடன்தான் ருக்மி இங்கு வருவார். அவர் சொல்லுக்கு மேல் ஐயம் எழாது.” நான் விம்மிவிட்டேன். என் முகத்தை கைகளில் வைத்து குனிந்து அமர்ந்திருந்தேன்.
கணிகர் “ஒவ்வொரு பாறையிலும் உள்நுழைய வழியிருக்கும். நாகங்கள் அதை அறியும்” என்றார். “நான் என்ன செய்யவேண்டும், கணிகரே? கூறுக!” என்றேன். “ஒன்று செய்யலாம். ருக்மி நகர்நுழைவதற்குள் இந்நகர் இரண்டாவது நிலப்பிளவை அடையலாம். இங்குள்ள அனைத்து கட்டடங்களும் உலுக்கப்படவேண்டும். நகருக்குள் கடல்நீர் நுழையுமெனில் அதுவும் நன்று. இங்குள்ள குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி கூச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். நகரை இவ்வண்ணமே கைவிட்டுவிட்டுச் செல்வதா இங்கு தொடரமுடியுமா என்ற ஐயம் ஒவ்வொருவருக்கும் எழவேண்டும். அப்போது எவர் எவருக்கு வஞ்சம் இழைத்தார் என்பது ஒரு பொருட்டாக இருக்காது. அரச மைந்தரைக்கூட எவரும் நோக்கப்போவதில்லை” என்றர் கணிகர்.
“அத்தகைய பெரும் அழிவொன்றில் நீ எளிதில் தப்ப முடியும்… அது ஒன்றே இன்று உன்னை காப்பது” என்று கணிகர் சொன்னார். “அவ்வாறு ஒரு அழிவு இங்கே நிகழ்ந்தாக வேண்டும்.” நான் “அது எவ்வண்ணம்…” என்றேன். “அதை நான் சொல்கிறேன்” என்றார் கணிகர். நான் உடைந்து அழுதபடி “எனது மைந்தர், எனது துணைவி!” என்றேன். “ஆம், உடனடியாக செய்யவேண்டியது உன் பாதுகாவலரில் ஒரு சிலரை அழைத்து உன் மனைவியையும் குழந்தைகளையும் கிளம்பி கடல் வழியாக சிந்துவிற்குச் சென்று அங்கிருந்து தங்கள் ஊருக்கு அனுப்பிவிடுவது. அதை முதலில் செய்க! அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறியக்கூடாது.”
“அவர்களை துவாரகையினர் துரத்திச் சென்று பிடித்துவிடலாம். அது மிக எளிதானது. பெண்களும் குழந்தைகளும் அத்தனை விரைவாக செல்லமுடியாது. துவாரகையின் உளவு அமைப்பும் மிக விரிவானது. செல்லும் இடம் அனைத்தும் காவல்படைகள் இருக்கின்றன” என்றார் கணிகர். “ஆனால் அவர்கள் கிளம்பியபிறகு இங்கு பெரும் உடைவொன்று நிகழ்ந்து ஒவ்வொன்றும் நிலையழியுமெனில் அவர்களை துரத்தவோ பிடிக்கவோ இங்கு எவருக்கும் வாய்ப்பிருக்காது. துவாரகை நிலைமீள நெடுங்காலமாகும். அனைவரும் உன்னை மறந்துவிடுவார்கள்” என்றார்.
நான் நீள்மூச்சுடன் “இவை எப்படி நிகழும்? நான் என்ன செய்வது அதற்கு?” என்றேன். “தெய்வங்களை கட்டவிழ்த்து விடுக!” என்றார். “தெய்வங்களை…” என்று சொல்லி நான் அவரை பார்க்க “இந்நகரின் அமைப்பில் பெரிய பிழையொன்று உள்ளது. இந்த கருடனின் நீள் அலகு என அங்கிருக்கும் மாபெரும் துறைமேடை துவாரகை அமைந்ததுள்ள இரு பெரும் அடித்தளப் பாறைகளுக்கு நடுவே ஓர் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளின் அனைத்து அடிகளையும் அந்தத் துறைமேடை வாங்கிக்கொள்வதால்தான் துவாரகை வலுவாக அமைந்திருக்கிறது” என்றார்.
“அந்தத் துறைமேடை உடையவேண்டும். அதன் விரிசலினூடாக கடல்நீர் இரு பாறைகளுக்கு நடுவே வந்தால் துவாரகை இரண்டாக பிளக்கும்” என்றார் கணிகர். “அது எப்படி வரமுடியும்?” என்றேன். “சென்று பார் அங்கே. இப்போது ஒரு பீதர் நாட்டு மரக்கலம் நின்றிருக்கிறது. அதன் அனைத்துப் பாய்களையும் விரியச் செய்யவேண்டும். அது தன் முழு விசையுடன் வந்து மோதுமெனில் அந்தத் துறைமேடை விரிசல்விடும்” என்றார். அப்போதும் நான் புரிந்துகொள்ளவில்லை. “நின்றிருக்கும் கலத்தில் பாய்கள் எவ்வாறு விரியும்?” என்றேன். “அந்தக் கலத்தை எவரேனும் கைப்பற்றவேண்டும். கரையிலிருந்து சில நாழிகைப்பொழுது கடலுள் கொண்டுசெல்ல வேண்டும். அப்பொழுது பெரும்புயலொன்று அடிக்கும்” என்றார் கணிகர்.
“புயலா?” என்றேன். “நோக்குக, இங்கு காற்று அசைவின்றி இருக்கிறது! ஒரு புழுதித்துளிகூட இடம்பெயராமல் இருக்கிறது” கணிகர் சொன்னார். “ஆம்” என்றேன். “அவ்வாறு முற்றிலும் அசைவற்ற நிலை கடலோரமாக அமைவதென்பது பெரும்புயலுக்கான சான்று. கடல்நீர் உள்ளே செல்லத் தொடங்கும். இன்னும் சற்று நேரத்தில் துறைமேடை முற்றாக வெளித்தெரியும். கீழிருக்கும் பெரும்பாலான பாறையடுக்குகள் வெளியே வரும். கடல் உள்வாங்கத் தொடங்கும்போது கப்பல் கடலுக்குள் செல்ல வேண்டும். பல நாழிகைதொலைவு விலகிச் செல்லவேண்டும்.”
“முழு விசையுடன் காற்று துவாரகை நோக்கி வருகையில் அனைத்துப் பாய்களையும் விரித்து ஒரு கப்பல் அந்த அலையில் இருக்குமென்றால் பேரலை வந்து துவாரகையை அறையும்போது அந்தக் கலமும் வந்து படித்துறையை அறையும். படித்துறை விரிசல்விடுமெனில் அப்பேரலையின் நீர் நகருக்குள் புகும்” என்று கணிகர் சொன்னார். “துவாரகை அழியுமா?” என்று நான் கேட்டேன். “அழியக்கூடும். ஆனால் இங்கு மானுடர் தொடர்ந்து வாழமுடியாத நிலை வரும். ஒவ்வொன்றும் சிதறும் என்பதில் ஐயமில்லை.”
“அதை நான் செய்யவேண்டுமா, கணிகரே?” என்றேன். “நீயும் துணைவியும் மைந்தரும் தப்புவதற்கு வேறு வழியில்லை” என்றார் கணிகர். “துவாரகை எந்தை உருவாக்கிய நகர்” என்று நான் துயருடன் சொன்னேன். “அதனாலென்ன? எப்படியும் இந்த நகர் ஆழிப்பேரலையின் அறைதலை தாங்காது. நாம் இதை கைவிடலாம். இதற்கு நிகராக பிறிதொரு நகரை உருவாக்கலாம். அதற்கு துவாரகை என்று பெயரிடலாம்” என்று கணிகர் புன்னகைத்தார். நான் துயருடன் அமர்ந்திருந்தேன். ”இங்கு நிகழும் அனைத்துப் பூசல்களும் நன்மைக்கே என்று கருதுக!” என்று கணிகர் கூறினார்.