கல்பொருசிறுநுரை - 45
பகுதி நான்கு : அலைமீள்கை – 28
பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.”
பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே!” என்றார். ஃபானு தயங்கியபடி எழுந்துகொண்டார். அவர்கள் அருகிருந்த சிற்றறைக்குள் சென்றனர். வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். நான் அந்த எண்ணம் கணிகருடையது என்பதை உணர்ந்தேன். அதனால் என்ன பயன்? பிரத்யும்னனிடம் தனக்கு அணுக்கம் உள்ளது என்று ஃபானு நம்புவதற்கு மட்டுமே அது வழிவகுக்கும். எவ்வகையிலும் அது பயனளிக்காது. அரசர்கள் தனியுணர்வுகளால் கட்டப்பட்டவர்கள் அல்ல. அவர்களை கட்டுப்படுத்தும் தனியுணர்வு என்றால் அவர்களின் ஆணவம் மட்டுமே. அதை ஃபானு தொட்டுப் பேசப்போவதில்லை.
தனியறையிலிருந்து பிரத்யும்னன்தான் முதலில் வெளிவந்தார். கதவு திறந்து அவர் உள்ளே வந்த ஓசையிலேயே உள்ளிருந்த அனைவரும் அவரை பார்த்தனர். அக்கணத்திலேயே அனைத்தும் முடிவாகிவிட்டன. அனைத்து முகங்களும் கூர்கொண்டன. பிரத்யும்னன் “மாதுலர் ருக்மி இதற்கு மறுமொழி கூறவேண்டும்” என்றார். நான் என்னுள் ஒரு குளிர்ந்த தொடுகையை உணர்ந்தேன். அவையிலிருந்த அனைவருமே ஓசையற்றிருந்தனர். “அவரை நாம் பிடித்து வருவோம். இந்த அவையில் நிறுத்துவோம். நிகழ்ந்தவற்றுக்கு அவரிடம் விளக்கம் கேட்போம்” என்று பிரத்யும்னன் கூறினார்.
ஃபானு “உடனே ஒரு போர் தேவையில்லை. நமது தூதுக்குழு ஒன்று செல்லட்டும். அங்கு நிகழ்ந்தது என்ன என்று அவரிடம் கேட்டு அறியட்டும்” என்றார். “இல்லை. இது நாங்கள் தீர்த்துக்கொள்ளவேண்டிய கணக்கு. மூத்தவரே, என் இளையோரில் ஒருவன் இவ்வண்ணம் ஒரு செய்தியுடன் அங்கு சென்றதென்பது எனக்கு திகைப்பளிக்கிறது. இது நானறிந்து நிகழ்ந்ததல்ல. சுதேஷ்ணன் விசாருவை அனுப்பியதை நான் அறிவேன். ஆனால் அது வேறொன்றுக்காக.”
“முன்பு எங்களுக்கான படை ஒன்றை திரட்டும் பொருட்டு நாங்கள் மாதுலர் ருக்மிக்கு ஒரு செல்வத்தை அளித்தோம். இப்போது அது தேவையில்லை என்ற நிலை வந்துள்ளமையால் அச்செல்வத்தை திரும்பப் பெறும்பொருட்டு உரிய கணக்கை உரைப்பதற்காக இளையவனை அனுப்பியிருக்கிறான் சுதேஷ்ணன். அவ்வண்ணமே எனக்கு சொல்லப்பட்டது. அவன் கொல்லப்பட்ட செய்தி எனக்கு உரைக்கப்படவில்லை. பெரும்பாலும் அச்செல்வத்தை திரும்பக் கேட்டதன் பொருட்டான பூசலில் இளையோன் கொல்லப்பட்டிருக்கலாம்.”
“ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவன் மாதுலர் ருக்மியின் மகளை மணந்தவன். அல்லது அவருக்கு அங்கே உள் எதிரிகள் இருக்கலாம். அவரை நம்மிடம் சிக்கவிடுவதற்காக எவராவது இதை செய்திருக்கலாம். எதுவாயினும் ஒரு பொதுஅவையில் வைத்து இது உசாவப்படவேண்டும். உரிய முறையில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என்றார். மூத்தவர் ஃபானு அமைதி இழந்தவர்போல “இதை நாம் நமது மூத்தவருக்கு விட்டுவிடுவோம். கிருதவர்மனும் சாத்யகியும் இணைந்து இதை உசாவட்டும். ருக்மிக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சொல்லாடல் நிகழட்டும். என்ன நிகழ்ந்ததென்று பார்ப்போம்” என்றார்.
பிரத்யும்னன் உரக்க “இறந்தவன் என் இளையோன். ஆகவே நான் வெறும் ஒரு சொல்லாடலில் இங்கு நிறுத்தினேன் என்றால் அவனுக்கு இயற்றவேண்டிய கடமையை ஒழிந்தவனாவேன். அனைத்துக்கும் மேலாக அவன் எனது ஆணையில்லாமல் அவரை பார்க்கச்சென்று கொல்லப்பட்டிருக்கிறான். அதை முழுதாக உசாவாமல் அப்படியே விடுவேனாயின் அதில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்றுதான் மக்கள் உள்ளத்தில் பதியும். இதை முழுக்க உசாவித் தீர்க்கவேண்டியது எனது பொறுப்பு” என்றார். ஃபானு “எதுவாயினும் எண்பதின்மரும் சேர்ந்து செய்வதே முறையாகும். நீ தனித்து செய்வது…” என்றார்.
“இல்லை, இதை நானே தனித்துச் செய்யவேண்டும், அதுவே முறை. எண்பதின்மரில் பிற அன்னையரின் மைந்தர் எவர் இதற்குள் வந்தாலும் அதுவே ஷத்ரியரிடையே பிளவை உருவாக்கலாம். இறந்தவன் ஷத்ரிய அன்னையின் மைந்தன். ஷத்ரியர்கள் இதற்கு கணக்கு தீர்ப்பார்கள்” என்று சொல்லி தலைவணங்கி அவையிலிருந்து வெளியே சென்றார்.
அவருடன் சாருவும் சாரகுப்தனும் வந்து அப்பால் நின்றிருந்தனர். அவர்களும் அவருடன் சென்றனர். மூத்தவர் ஃபானுவும் சுஃபானுவும் ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் ஃபானுமானும் சந்திரஃபானுவும் அவர்கள் வெளியே செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் சுஃபானு “நாம் அறியவேண்டியது ஒன்றே. எண்பதின்மரும் அமர்ந்திருந்த ஒரு அவையில் எடுத்த ஒரு முடிவுக்கு எதிராக தன் மாதுலருக்கு ஒருவன் தூதனுப்பியிருக்கிறான் என்றால் அவன் யார்? பிரத்யும்னனை மீறி அதை அனுப்பியவர் சுதேஷ்ணன் எனில் அங்கே பிரத்யும்னனுக்கு நிகரான விசையாக சுதேஷ்ணன் இருக்கிறாரா?” என்றார்.
“அவர் இங்கு அவையில் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆனால் அங்கு அனைத்து முடிவுகளையும் அவர் எடுக்கிறார். இவ்வண்ணம் ஒருவரை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு எண்பதின்மரின் ஒற்றுமையைப்பற்றி பேசுவது?” என்று ஃபானுமான் சொன்னான். “நீங்கள் முடிசூட்டப்பட்ட பின்னர் இதேபோல மறுசொல் எழுமென்றால் எவர் அதை ஆளமுடியும்? மீண்டும் குடிப்பூசலே எழும்” என்றார் பிரஃபானு. “முடிவுகளை நோக்கி உடனே நாம் தாவவேண்டியதில்லை” என்று சந்திரஃபானு கூறினார்.
“உண்மையில் இந்த அவையில் தன் குடியுணர்ச்சியை பிரத்யும்னன் வெளிப்படுத்தியது பிழை…” “இல்லை அது இயல்பானது” என்றான் ஃபானுமான். “அவர் சொல்லெண்ணிப் பேசியிருந்தால் நான் ஐயுற்றிருப்பேன்.” ஃபானு சலிப்புடன் “நான் மீண்டும் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். எதுவாயினும் எண்ணிச் செய்வோம்” என்றார். நீள்மூச்சுடன் “நேற்று இந்த அவையில் ஒரு முழுமை எட்டப்பட்டது. அனைத்து எதிர்த்தரப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. விழைந்தன அனைத்தும் கையெட்டும் தொலைவிலிருந்தன. இன்று அகன்றுவிட்டிருக்கின்றன. இந்தப் பூசலை நான் வளர்த்தால் இதுவே நம்மை முற்றாகப் பிளந்து தோற்கடிக்கும். நமது விசையை விதர்ப்பத்தையும் அவந்தியையும் பகையாக்கி அவர்களிடம் போர்புரிய இன்று செலவிட இயலாது” என்றார்.
“அவ்வாறல்ல” என்று சுஃபானு சொன்னார். “நம்மை எதிர்த்த முதல் எதிரியையே பிறர் எண்ணி அஞ்சும்படியாக நசுக்குவதென்பது ஒரு போர்முறை. அவர்களை நாம் நயந்து அஞ்சி உடன் வைத்துக்கொண்டோம் எனில் இனி இவ்வாறே பிறரும் நடந்துகொள்வார்கள். இரண்டு செய்யவேண்டியுள்ளன. நம் இளையோரில் ஒருவன் கொலைக்கு நாம் ருக்மியை பழிவாங்க வேண்டும். அவர் நிகர்க்குருதி கொடுத்தேயாகவேண்டும். அதற்கப்பால் ஒன்றுண்டு. இந்த உள்ளிருந்து பிளக்கும் சூழ்ச்சியை செய்தவர் எவர் என்பதை கண்டுபிடித்து அவர் நமது எண்பதின்மரில் ஒருவராயினும் களையெடுக்கப்படவேண்டும்.”
“களையெடுத்தலைப் பற்றி இப்போது பேசவேண்டாம். மீண்டும் மீண்டும் பிளவையும் பிழைகளையும் பற்றி பேசவேண்டாம்” என்று ஃபானு சொன்னார். சுஃபானு “இல்லை மூத்தவரே, சில தருணங்கள் தேவைப்படும். இனி சூழ்ச்சிகள் ஏற்கப்படமாட்டாது என்று எண்பதின்மர் ஒவ்வொருவருக்கும் சொல்லியாகவேண்டும்” என்றார். ஃபானு “எண்பதின்மர் என்ற சொல்லை சொல்லிச் சொல்லி பழகிவிட்டோம். இன்று இதோ ஒருவன் இல்லை” என்றார். “தீங்கிழைப்போர், விலகி நிற்போர் அனைவருமே இல்லாமலாகட்டும். எஞ்சியோர் காத்து நிற்கட்டும் இந்த முடியை” என்று சுஃபானு சொன்னார்.
“நாம் சுதேஷ்ணனை அழைத்து இந்த அவையில் நிறுத்தி அந்தத் தூதன் எவ்வாறு சென்றான் என்று உசாவியாகவேண்டும்” என்று ஃபானுமான் சொன்னான். “ஆம், சுதேஷ்ணன் மறுமொழி கூறியாகவேண்டும்” என்று ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் சந்திரஃபானுவும் கூறினார்கள். “பொறுங்கள். அம்முடிவை எடுத்தது சுதேஷ்ணனா என்று இன்னும் நமக்கு தெரியாது. அதற்குள் நாம் முடிவுகளை எட்ட வேண்டியதில்லை. சுதேஷ்ணனை இந்த அவையில் அமர்த்தி உசாவச்செய்வதற்கு நாம் இன்னும் முடிசூடிக்கொள்ளவும் இல்லை” என்று ஃபானு கூறினார். “முடிசூடும் முடிவை எடுத்தாகிவிட்டது. எவரும் முடிசூடவில்லை எனில் எவர் உசாவுவது?” என்றார் சுஃபானு.
“அது அவர்களின் தரப்பும் நமது தரப்பும் இணைந்து செய்யவேண்டியது. நமது நம்பிக்கையை பெறவேண்டியது அவர்களின் பொறுப்பு” என்றார் ஃபானு. “அவர்கள் உசாவப்போவதில்லை. இந்த அவையில் பிரத்யும்னன் பேசியதிலிருந்து ஒன்று தெரிகிறது. அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார். இந்த அவையில் அனைத்தும் வெளிப்படும்போது அவர் திகைத்து ஒரு நிலைப்பாடு எடுக்கிறார். அவருக்கு தெரியாமல் இல்லை” என்றார் சந்திரஃபானு. “இல்லை, அவருடைய விழிநீர் உண்மையானது” என்றார் பிரஃபானு. “அவர் அரசியல்சூழக் கற்றவர்” என்றான் ஃபானுமான். “நாம் எப்படி அனைவரையும் ஐயுறத் தொடங்கினோம்?” என்றார் ஸ்வரஃபானு.
ஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள் சீற்றமும் பதற்றமுமாக. பின்னர் ஒன்றை கண்டுகொண்டேன். ஒவ்வொருவரிலும் ஒரு சிறு வஞ்சம் இருக்கிறது. எண்பதின்மரின் ஒற்றுமைக்கு எதிராக சற்றேனும் உளம் கூட்டாத ஒருவரும் இல்லை. ஆகவே அந்த அவையில் ஒவ்வொருவரும் மிகையாக தங்களை வெளிப்படுத்தினர். தங்களை நோக்கி வந்த ஐயங்களுக்கு மறுமொழி என்பது சீற்றத்துடன், காழ்ப்புடன் பிறரை சுட்டுவது என்று புரிந்துகொண்டனர். அனைத்து வெறுப்புகளுக்கும் இலக்காக அங்கு சுதேஷ்ணன் நின்றிருந்தார்.
நான் எண்ணி வியந்தது என்னவென்றால் நான் அந்த கொலையைச் செய்தவன் என்னும் நிலையில் இருந்து முற்றாக விலகிவிட்டேன். அதை வேறெவரோ செய்தார்கள் என ஆழமாக நம்பிவிட்டிருந்தேன். அதை செய்தவர்கள்மேல் வஞ்சம்கூட கொள்ளத் தொடங்கியிருந்தேன்.
அவையை விட்டு வெளியே செல்கையில் நான் கணிகருடன் செல்ல விரும்பினேன். ஏவலனிடம் “கணிகர் எங்கே?” என்றேன். கணிகர் மூத்தவர் ஃபானுவுடன் தனியறையிலிருந்து சொல்லாடிக்கொண்டிருப்பதாக அவன் கூறினான். அச்செய்தி என்னை திடுக்கிடச் செய்தது. கணிகர் ஃபானுவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மறுகணம் அவ்வாறு செல்லுமிடமெல்லாம் நான் உடனிருக்க இயலாது என்று தெரிந்துகொண்டேன். என்னை தவிர்ப்பது எப்படி என்றும் அவருக்கு தெரிந்திருக்கும்.
இப்போது அவர் எதை பேசிக்கொண்டிருப்பார்? உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று ஒரு குறிப்பை அவர் ஃபானுவுக்கு வழங்கக்கூடும். அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று உடனே தோன்றியது. மூத்தவர் ஃபானு எளிமையானவர். எண்பதின்மரில் ஒருவரை நான் என் கையால் கொன்றேன் என்று அவருக்குத் தெரிந்தால் மறுகணமே எழுந்தோடி வந்து அவையைக் கூட்டி என்னை நடுவே நிறுத்தி தலைகொய்யவே ஆணையிடுவார். அல்லது துயரடைந்து நிலத்தில் விழுந்து கதறி அழுது அனைவருக்கும் என் பழி தெரியும்படி செய்வார். அதை உறுதியாக அறிந்திருப்பார் கணிகர். அவர் அங்கு என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் ஒருபோதும் உணர இயலாது. ஆகவே அதைப் பற்றி எண்ணுவதில் பயனில்லை. கணிகருக்கு மேலும் அணுக்கமானவனாக, ஒருபோதும் அவரால் கைவிடப்படாதவனாக மாறுவதே நான் செய்யக்கூடுவது.
நான் என் அறைக்குச் சென்று பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். பின்னர் புரவியை எடுத்து என் மைந்தரை பார்க்கும்பொருட்டு சென்றேன். துவாரகையின் தெருக்களில் பதற்றம் நிறைந்திருப்பதை கண்டேன். பல ஆலயங்களுக்கு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக செறிந்து நின்றனர். கடந்து செல்லும் புரவி ஒவ்வொன்றையும் அவர்கள் கூர்ந்து பார்த்தனர். நான் சென்றபோது அனைத்து விழிகளும் என்மேல் பதிந்திருந்தன. இளையோன் இறந்த செய்தி வந்தடைந்துவிட்டது, நகரில் பரவிவிட்டது என்று தெரிந்தது. அதை ஒரு பிழையான நிமித்தமாகவே அங்குள்ளவர் கொள்வார்கள். வரக்கூடுமென அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒன்றின் முதல் காலடியோசை.
எண்பதின்மரில் ஒருவர் இறப்பது எவ்வளவு பெரிய நிகழ்வென்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. எண்பதின்மரும் ஓர் உடல். ஓர் உறுப்பு குறைபட்டிருக்கிறது எனில் அவ்வுடல் முடமாகிவிட்டதென்றே பொருள். அது ஒரு தொடக்கம் என்று அறியாத எவரும் இங்கில்லை. நான் ஏன் அத்தருணத்தில் அதை செய்தேன். எண்ணி எண்ணி என்னால் எடுக்க இயலவில்லை. நான் செய்தது என் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. வஞ்சமகன் என அவைமுன் நின்றிருக்கும் இழிவிலிருந்து தப்புவதற்காக.
ஆனால் அந்த நிலைக்கு நான் ஏன் சென்றேன்? அதற்கு என் ஆணவமே அடிப்படை விசை. எந்த அவையையும் சொல்லால் தாண்டிவிட முடியுமென்று எண்ணினேன். சொல்கோத்து சொல்கோத்து அனைத்தையும் அமைத்துவிட முடியும் என்று கனவு கண்டேன். எங்கு அந்த ஆணவம் தூண்டப்பட்டது? முதல்முறை அவையில் எழுந்து ஒரு சொல்லை உரைத்தபோது நான் எத்தனை தணிவும் பதற்றமும் கொண்டவனாக இருந்தேன்! எவராயினும் தன்னை உணர்ந்து தருக்கும் சிறுமைக்கு சென்ற பின்னர் பிழைகளை இயற்றாமலிருக்க இயலாது. தோள்வலியில் தருக்குபவன் பழி செய்கிறான். நாவலியில் தருக்குபவன் மும்மடங்கு பழி செய்கிறான்.
என்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. மாலை ஒளி மங்கிக்கொண்டிருந்தபோது என் மைந்தர் வாழ்ந்த அரண்மனைக்கு சென்றேன். களைத்து சலித்துச் சென்று என் அறையில் அமர்ந்திருந்தேன். மைந்தர் என்னை பார்க்க வரும்படி சொல்லியனுப்பினேன். அவர்கள் பாலையில் பந்து விளையாடச் சென்றிருப்பதாக ஏவலன் சொன்னான். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு நீராடி ஆடை மாற்றி அங்கு அமர்ந்திருந்தபோது அவர்கள் ஒவ்வொருவராக வந்தனர். அவர்கள் வரும் ஓசையே சிரிப்பும் கூச்சலுமாக எழுந்தது. மூத்தவன் இளையோரை அதட்டி அமைதியடையச் செய்தான்.
அவர்கள் விளையாடி முடித்து நீராடி வந்திருந்தாலும்கூட உடலெங்கும் இளம் புழுதியின் மணம் இருந்தது. சிறியவன் என்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டு “தந்தையே, இன்று நான் மும்முறை மூத்தவரை வென்றேன்” என்றான். அவன் தலையின் புன்மயிரை வருடியபடி “ஆம், நீ வெல்வாய். நீ அனைவரையும் வெல்வாய்” என்று நான் சொன்னேன். “அவன் வெல்லவில்லை. அவன் இளையவன் என்பதனால் நான் விட்டுக்கொடுத்தேன்” என்றான் மூத்தவன். ”ஆம், இளையோருக்கு விட்டுக்கொடுத்துதானே ஆகவேண்டும்” என்றேன். “நான்தான் விட்டுக்கொடுத்தேன்” என்று இன்னொருவன் சொன்னான். “சரி, இரண்டுபேருமே விட்டுக்கொடுத்தீர்கள்” என்று நான் சொன்னேன். “நானும் விட்டுக்கொடுத்தேன்” என்று அவனுக்கு இளையவன் சொன்னான். “அப்போது யார்தான் வென்றார்கள்?” என்று நான் நகைத்தேன்.
மிக சில கணங்களிலேயே அவர்களுடன் விளையாடத் தொடங்கிவிட்டேன். என் அருகே இருந்த பித்தளை செம்பொன்றை எடுத்து “இந்தப் பந்தை யார் பிடிக்கிறீர்கள் பார்ப்போம்” என்றேன். மூத்தவன் அதை தாவிப்பற்றி பிடித்துக்கொண்டான். “பந்தை பிடிக்கக் கூடாது, தட்டவேண்டும். எவர் கையிலிருந்து நிலம் படுகிறதோ அவர்கள் வெளியேறவேண்டும்” என்று சொல்லி அதை ஒரு ஆடலாக மாற்றிக்கொண்டேன். அறையெங்கும் அந்தச் செம்பு ஒரு சிறு பறவைபோல வெண்கல ஒளியுடன் சுழன்று அலைந்தது. எழுந்து எழுந்து பறந்து சிறியவன் கையிலிருந்து ஓசையுடன் தரையில் விழுந்தது.
“தோற்றுவிட்டான்! தோற்றுவிட்டான்!” என்று மூத்தவன் கூறினான். “இல்லை, அதுவே விழுந்தது!” என்று அவன் சொன்னான். “ஆமாம், அது விழ விரும்பினால் எவரால் தடுக்க முடியும்?” என்று சொல்லி அவனை அருகணைத்தேன். “இல்லை. அவன் தோற்றுவிட்டான், அவன் விலகவேண்டும்” என்றான் மூத்தவன். “அவன் ஏன் விலகவேண்டும்? அவன் இவ்வளவு நேரம் நன்றாக விளையாடினான் அல்லவா?” என்று நான் சொன்னேன். “தந்தையே, நீங்கள் அவனுக்கு ஓரம் சாய்கிறீர்கள். இது முறையல்ல” என்றான் மூத்தவன். “அவன் இளையவன், உங்கள் அனைவராலும் கனிந்து பேணப்படவேண்டியவன்” என்றேன்.
“இளையவனாக இருக்கலாம், ஆனால் ஆட்டத்தின் நெறிகள் அனைவருக்கும் ஒன்றே” என்றான். “உங்களுக்குள் பூசல் வேண்டியதில்லை. பூசலிடாமல் விளையாட முடியாதா என்ன?” என்றேன். “அனைத்து விளையாடல்களிலும் அவனே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறான். அவன் இளையவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இனி விட்டுக்கொடுக்க முடியாது” என்றான் மூத்தவன். “இளையோர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றேன். “பிறகு எப்போதுதான் நாங்கள் வெல்வது?” என்றான் மூத்தவன்.
“சரி விடு… நாம் மீண்டும் ஒருமுறை விளையாடலாம்” என்று நான் சொன்னேன். மீண்டும் கலம் அறையெங்கும் பறந்தது. வேண்டுமென்றே சற்றே சுழற்றி தவறாக மூத்தவனை நோக்கி அனுப்பினேன். அவன் அதை பிடிப்பதற்குள் அவன் கையிலிருந்து சுழன்று நிலத்தில் விழுந்தது. “வெளியேறுங்கள், மூத்தவரே! வெளியேறுங்கள்!” என்று சிறியவன் சொன்னான். “இல்லை, அது சுழன்றது” என்று அவன் சொன்னான். “இல்லை, வெளியேறித்தான் ஆகவேண்டும்” என்று இளையவன் சொன்னான். “கையிலிருந்து விழுந்தது! கையிலிருந்து விழுந்தது!” என்று அவன் கூவினான்.
“உன் கையிலிருந்து விழுந்தது அல்லவா?” என்றான். “என் கையிலிருந்து விழவில்லை. உங்கள் கையிலிருந்துதான் விழுந்தது. நீங்கள் வெளியேறுங்கள்” என்றான் இளையவன். எண்ணியிராக் கணத்தில் மூத்தவன் வந்து இளையவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இளையவன் அலறி கீழே விழுந்தான். நான் பாய்ந்து எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டேன். “என்ன செய்கிறாய், அறிவிலி?” என்றேன். அவன் வஞ்சத்துடன் “அவன் ஒவ்வொரு முறையும் பிழையாக ஆடுகிறான்” என்றான். “அதற்காக?” என்று கூவினேன். அவன் மேலும் வஞ்சத்துடன் “அவனை நான் கொல்வேன்!” என்றான்.
நான் ஓங்கி மூத்தவனை அறைந்தேன். அவன் வளைந்து நிலத்தில் அமர்ந்து சினம்கொண்ட கண்களால் என்னை பார்த்தான். ஒருகணம் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் நான் நிலைமறந்தேன். ஓங்கி ஓங்கி அவனை அறைந்து கழுத்தைப் பிடித்து சுவரோடு சேர்த்து “உடன்பிறந்தான் மேல் கைவைப்பாயா நீ? என் முன் அதை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டாயா?” என்றேன். அவன் பல்லைக் கடித்து கைகளை முறுக்கி அசையாமல் நின்றான். ஒருகணத்திற்குப் பின் மூச்சை நிறுத்தி கைகளை விட்டேன். “வெளியே செல்லுங்கள்! செல்க வெளியே!” என்று கூவினேன். அவர்கள் பற்களைக் கடித்து சினம்கொண்ட கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெளியே சென்றனர்.
தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தலையை பற்றிக்கொண்டேன். தலையணையில் முகத்தைப் பதித்து உடல் குறுக்கி படுத்தேன். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? ஏதோ என்னைச் சூழ்ந்து வந்தடைகிறது. நான் விழையாத ஒன்று. என்ன நிகழ்கிறது? இங்கு இருக்க இயலாது என்னால். வெளியே வந்து ஏவலனிடம் “புரவி ஒருக்குக, நான் மீண்டும் துவாரகைக்கே செல்கிறேன்!” என்றேன். புரவிகளை ஓய்வுக்கு அனுப்பியிருந்த ஏவலன் திகைத்து “இளவரசே!” என்றான். “ஒருங்குக புரவி! நான் கிளம்ப வேண்டும்” என்றேன். ஓய்வுக்கான ஆடைகளை அணிந்திருந்தேன். மேலாடையை எடுத்து இறுக்கி கச்சையால் சுற்றிக்கொண்டு இறங்கி ஓடிவந்து ஒருங்கி நின்றிருந்த ஒரு புரவியிலேறி அதைத் தட்டி துவாரகையை நோக்கி விரைந்தேன்.
துவாரகையை நான் அடையும்போது நகரம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. நான் அறியாமலேயே கடிவாளத்தைப் பிடித்து புரவியை நிறுத்தினேன். நெடுந்தொலைவிலேயே நகரமெங்கும் எழுந்துகொண்டிருந்த ஓசையை கேட்டேன். ஒரு திருவிழாபோல. அல்லது படையெழுச்சியா? பிரத்யும்னன் அதற்குள் கிளம்பிவிட்டாரா என்ன? நான் புரவியைத் தட்டி மேலும் விசைகொண்டு தோரணவாயிலைக் கடந்து நகருக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி புரவியில் வந்த காவலர்தலைவனை நோக்கி நானும் விரைந்து சென்று “என்ன நிகழ்கிறது? படையெழுச்சியா?” என்றேன்.
“இல்லை, நகரம் கலைந்திருக்கிறது. மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். பல இடங்களில் மாளிகைகளை நோக்கி கற்களையும் தடிகளையும் வீசுகிறார்கள். அரசகுடியினர் பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான். ”என்ன நிகழ்ந்தது?” என்றேன். “இளவரசே, சற்றுமுன் பிரத்யும்னனால் சுதேஷ்ணன் கொல்லப்பட்டார்” என்றான். “எப்போது?” என்றபடி நான் கீழிறங்கினேன்.
“என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரியாது. நான் கேட்டு அறிந்தது இது. அவர்கள் தங்கள் சிற்றவையில் ஒருவரை ஒருவர் சந்தித்து உசாவிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இளையவர் விசாருவின் சாவுக்கு எவர் வழிவகுத்தது என்ற அளவில் சொல்லாடல் நிகழ்ந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது சுதேஷ்ணன் பிரத்யும்னனுக்கு எதிராக நெடுங்காலமாக செய்துவந்த பல சூழ்ச்சிகள் வெளிப்பட்டிருக்கின்றன. சீற்றம்கொண்டு சுதேஷ்ணனை நோக்கி பிரத்யும்னன் வாளை உருவியிருக்கிறார். பிரத்யும்னனைக் கொல்ல சுதேஷ்ணன் வாளுடன் பாய்ந்திருக்கிறார். அத்தருணத்தில் அருகே நின்றிருந்த எவரோ சுதேஷ்ணனை பற்றிக்கொண்டிருக்கிறார். பிரத்யும்னன் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்.”
“இது அரசமுறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்றான் காவலர்தலைவன். நான் பதற்றம் மெல்ல வடிய களைப்பு கொண்டவனாக புரவியின் சேணத்தை பற்றிக்கொண்டு நின்றேன். “ஆனால் செய்தி நகருக்குள் பரவிவிட்டிருக்கிறது. நகர மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். நல்லவேளையாக ஷத்ரியர் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள். கொல்லப்பட்டவர் விசாரு என்றதுமே கொன்றவர் யாதவரா என்றுதான் கேட்டனர் இங்குள்ள ஷத்ரியர். யாதவர் கையால் ஷத்ரிய மைந்தர் கொல்லப்பட்டிருந்தால் நகரம் இதற்குள் போர்வெறி கொண்டிருக்கும்.” நான் தளர்ந்தவனாக புரவியில் ஏறி அமர்ந்தேன். பின்னர் அதைத் தட்டி “செல்க!” என்று நகரினூடாக அரண்மனை நோக்கி சென்றேன்.