கல்பொருசிறுநுரை - 41
பகுதி நான்கு : அலைமீள்கை – 24
தந்தையே, நான் அந்தத் தருணத்திற்காக எவ்வகையிலும் ஒருங்கியிருக்கவில்லை. நுண்ணிய சூழ்ச்சிகளை ஒருக்கி, சொல்தொகுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைப்போன்ற நேரடியான அடியை எதிர்கொள்ள முடியாது. என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தத்தளித்தபோது தோன்றியது, அதை நேரடியாகவே எதிர்கொள்ளவேண்டும் என்று. “எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளவேண்டியவர்கள் நாங்கள் எண்பதின்மர். எங்களுக்குள் வேறுபாடென ஏதுமில்லை. இப்போது அவ்வேறுபாட்டைச் சொல்ல முற்படுபவர் எங்களுக்குள் பிரிவை உருவாக்க எண்ணுபவர் என்றே பொருள்படுவர்” என்றேன்.
“நான் என் மகள்களை அங்கே அரசியராக அனுப்பியிருக்கிறேன்” என்று ருக்மி சொன்னார். “அவர்களின் நலனை நான் நோக்கவேண்டும். அத்துடன் என் மருகர்களின் நலனையும் நாடவேண்டும். அனைத்திற்கும் மேலாக என் நாட்டுநலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.” அவரால் எளிய நேரடித்தாக்குதல்களை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்று தெரிந்தது. ஆகவே எதிரியை எளிய நேரடிச் சொல்லாடலுக்கு இழுக்கிறார். அவரை நான் என் வழக்கமான சொற்பெருக்கால் திணறச் செய்திருக்கவேண்டும். ஆனால் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். மேலும் செய்வதற்கொன்றும் இல்லை.
“நான் கூறுவது இதுதான், ருக்மிணியின் மைந்தர்களுக்கு, குறிப்பாக பிரத்யும்னனுக்கு, அவர்களுக்கென தனி நிலமோ பிறிதொன்றோ சொல்லுறுதி அளிக்கப்பட்டுள்ளதா?” என்றார் ருக்மி. “அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நாங்கள் எண்பதின்மரும் எங்களுக்குள் முடிவெடுத்து பகிர்ந்துகொள்வது, அதில் பிறர் இடம்பெற வேண்டியதில்லை” என்றேன். சில கணங்களுக்குப் பின் “இது பிரத்யும்னனின் சொல்லும்கூட என்று என்னால் எப்படி நம்ப முடியும்?” என்றார். நான் மறுமொழி சொல்வதற்குள் “பிரத்யும்னனிடமிருந்து எனக்கு ஒரு நேரடிச்சொல் வேண்டும்” என்றார்.
அதை நான் முன்னரே கணித்திருந்தேன் என்பது எனக்கே என்னைப்பற்றிய நிறைவை அளித்தது. “விதர்ப்பரே, நான் பிரத்யும்னனின் சொல்லுடன்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்றபின் எனது கணையாழியை எடுத்துக் காட்டினேன். அவர் அதை வாங்கி பார்த்தார். “ஆம், இது ருக்மிணியின் கணையாழி” என்றார். “சுதேஷ்ணனிடமிருந்து எனக்கு கிடைத்தது, அவருக்கான தனிமுத்திரை அந்த வைரத்திற்குள்ளேயே பொறிக்கப்பட்டுள்ளது. சுதேஷ்ணன் இச்சொல்லை உரைக்கும் உரிமையை அளித்து என்னை அனுப்பியிருக்கிறார். முடிசூட்டிக்கொண்ட பின்னர் பிரத்யும்னனுக்கு தென்னிலத்தை முழுதாக அளிப்பதாக ஃபானு உறுதி அளித்திருக்கிறார். ஆகவே ஃபானுவுக்கு தன் முற்றாதரவை பிரத்யும்னன் அளிக்கிறார்” என்றேன். “தென்னிலமெனில்?” என்றார். “விதர்ப்பமும் அவந்தியும் உட்பட அனைத்து நிலங்களையும் ஆள்பவராக பிரத்யும்னன் மாறவிருக்கிறார்” என்று நான் சொன்னேன்.
ருக்மி திகைத்தவர் போலிருந்தார். என்னிடம் எதையோ பேச விரும்புபவர்போல. அவருடைய முகம் பதற்றத்தை காட்டிக்கொண்டிருந்தது. குழம்பியவர்போல தத்தளிப்பவர்போல. கூரிய அறிவுத்திறன் கொண்டவரல்ல என்று நான் முன்னரே அறிந்திருந்தேன். ஆகவே அவருடைய அந்தத் தத்தளிப்பு அரசியல் சூழ்ச்சியினால் அல்ல, அவரால் ஆளமுடியாத ஒன்றை தொட்டுவிட்டதனால் என்று தோன்றியது. கண்கள் சுருக்கி தாடியில் விரலோட்டியபடி “இந்தக் கணையாழி தங்களுக்கு எப்போது தரப்பட்டது?” என்றார். நான் ஒருகணம் தயங்கி “கிளம்பும்போது” என்றேன். “கிளம்பும்போதென்றால்?” என்றார்.
“துவாரகையிலிருந்து இங்கு வருவதற்காக நான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போது பிரத்யும்னன் என்னை சந்திப்பதற்காக தன் ஏவலனை அனுப்பியிருந்தார். ஏவலனுடன் நான் சென்றபோது அங்கு தனியறையில் இருந்தவர் சுதேஷ்ணன். அவரிடம் தலைவணங்கி இப்பயணத்தை நான் செய்யவிருப்பதாக சொன்னேன். அவர் மாதுலர் ருக்மி நேரில் கேட்கக்கூடும், மூத்தவர் ஃபானுவை அரசுசூட முடிவெடுத்திருப்பது உண்மையா என்று. அவரிடம் நாங்கள் ஏற்கெனவே விரிவாக பேசியிருப்பதனால் அத்தனை எளிதாக இச்செய்தியை அவர் நம்பியிருக்க வாய்ப்பில்லை என்றார். குழம்பிய நிலையில் இருப்பார். பொதுவாக உச்சகணங்களில் திரிபுகளும் மிகும் என்பதனால் எதையும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதே நன்று என்று ஷத்ரியர் எண்ணுவதுண்டு என்றார்” என்று நான் சொன்னேன்.
சுதேஷ்ணன் கூறும் நிலையை நான் புரிந்துகொண்டேன். “ஆனால் நாம் அவையில் பேசியதும் எண்பதின்மரும் கூடி முடிவெடுத்ததும் எவ்வண்ணமோ ஒற்றர்களினூடாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது” என்றேன். “ஆனால் அப்போதுகூட அது நாங்கள் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி கருதி அவ்வாறு நடித்துக்கொண்டிருக்கலாம் என்றே அவர் எண்ணுவார். ஏனெனில் நாங்கள் விரிவான படைநகர்வையே திட்டமிட்டிருந்தோம். ஓரிரு நாட்களுக்குள் அவந்தியின் படைகளுடன் துவாரகைக்குள் வந்து முடிகொண்டு மூத்தவர் பிரத்யும்னனை அரசணையச் செய்ய வாய்ப்புண்டென்றே எண்ணியிருந்தோம்” என்றார் சுதேஷ்ணன்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆகவே இது அறுதி முடிவுதான் என்பதை மாதுலர் ருக்மிக்கு உறுதியாக சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் உன்னிடம் கேட்கக்கூடியது ஒன்றாகவே இருக்கும். படைகள் இங்கு இதற்கு மேலே இருக்கவேண்டுமா திரும்பிச்செல்ல வேண்டுமா என்று. நாம் அதற்கான சொல்லையே அவருக்கு உரைக்கவேண்டும்” என்றார் சுதேஷ்ணன். “நான் என்ன சொல்லவேண்டும், மூத்தவரே?” என்று அவரிடம் கேட்டேன்.
“விதர்ப்பத்தின் படைகளுடன் உடனடியாக திரும்பிச்செல்லவேண்டும் என்று அவரிடம் சொன்னால் அது ஏதோ சூழ்ச்சி என்றே கருதப்படும். படைகள் அங்கிருக்கட்டும். ஃபானு துவாரகையில் முடிசூட்டிக்கொண்ட பின்னர் படிப்படியாக படைகள் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் போதும். அங்கு படைகள் இருப்பது ஒருவகையில் துவாரகைக்கு நன்றும் கூட. ஃபானு முடிசூட்டிக்கொண்டதை ஒவ்வாத பிற ஷத்ரியர்கள் எவரும் துவாரகைமேல் படைகொண்டு வருவதைப்பற்றி எண்ணாமலிருக்கக் கூடும்” என்றார் சுதேஷ்ணன்.
“ஆம்” என்று நான் சொன்னேன். சுதேஷ்ணன் “மாதுலர் ருக்மி உன்னிடம் ஏதேனும் சான்று கேட்கக்கூடும்” என்றார். “ஆம், அதற்காகவே நான் முயன்றேன். ஓர் ஓலை எனக்குக் கிடைத்தால் நன்று” என்று நான் சொன்னேன். சுதேஷ்ணன் “ஓலை அரசாணைப்படி எழுதப்படுவது. முறையான அரசாணை பிறப்பிக்கப்படும் வரை ஃபானு அன்றி வேறொருவர் ஓலை எழுதுவதில் பொருளில்லை. பிரத்யும்னனிடம் ஓலை வாங்கலாம். ஆனால் அது தனிப்பட்ட ஓலையாக அமையும். எதன்பொருட்டு என்றாலும் ஃபானுவை அரசராக்க முடிவெடுத்த பின்னர் அவரை கலந்துகொள்ளாமல் பிரத்யும்னன் தன்னுடைய மாதுலருக்கு அவ்வாறு ஒரு ஓலை அனுப்புவது முறையா என்றும் தெரியவில்லை” என்றார்.
அதன் பின்னர் இந்த கணையாழியை நீட்டினார். “ஆகவே இந்தக் கணையாழியை உனக்கு அளிக்கிறேன். இதை மாதுலரிடம் காட்டுக! இது நெடுங்காலம் முன் அவரால் எனக்கு அளிக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். உன் சொற்களுக்கு மதிப்பு வரும். என் சொற்களே உன்னுடையவை என்று அவர் நம்ப ஏதுவாகும்” என்றார். அவ்வாறுதான் இதை பெற்றேன் என்றேன். சீராக சொல்லிவிட்டேன், ஆனால் மிக எளிமையான ஒரு காட்சியாக அதை சொன்னேன். ருக்மியைப் போன்றவர்களுக்கு விரிவாக ஆனால் எளிமையாக சொல்லவேண்டும். நாம் பேசும்போதே அவர்கள் தங்களுக்குள் எண்ணம் சூழ்ந்துகொண்டும் இருப்பார்கள்.
பெருமூச்சுடன் “உங்களிடம் எப்படி கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கணையாழிக்குப் பிறகு நம்பாமல் தயங்குவதிலும் பொருளில்லை. எதையாவது முடிவுசெய்தாக வேண்டும்” என்று ருக்மி சொன்னார். “யாதவ மைந்தரே, பிரத்யும்னனின் தூதரென ஒருவர் முன்னரே இங்கு வந்திருக்கிறார்.” என் உள்ளம் அதிர்ந்தாலும் நான் அதை அடக்கிக்கொண்டேன். “எவர்?” என்று நான் கேட்டேன். என் உள்ளம் படபடப்பதை விழிகள் காட்டின. ஆனால் அதை காணும் அளவுக்கு ருக்மி கூரியவர் அல்ல. “ருக்மிணியின் மைந்தரில் இளையவர், என் மகளை மணந்தவர்” என்றபின் “அவரை தாங்கள் சந்திக்கலாம்” என்று திரும்பி அப்பால் நின்ற ஏவலனை நோக்கி தாழ்ந்த குரலில் ஆணையிட்டார்.
அவன் தலைவணங்கி வெளியே சென்றான். அத்தருணத்தில் நான் என்னை மீண்டும் தொகுத்துக்கொள்ளத் தொடங்கினேன். பிரத்யும்னனிடமிருந்து எவ்வாறு ஒரு தூது வரமுடியும்? இரண்டு வாய்ப்புதான் உள்ளது. ஒன்று பிரத்யும்னனே ஃபானுவின் தலைமையை உள்ளூர ஏற்காமல் அன்று உண்டாட்டு அவையில் நடித்திருக்கலாம். அச்செய்தியை ருக்மியிடம் கூறுவதற்காக தன் இளையோரில் எவரையாவது எவருக்கும் தெரியாமல் இங்கு அனுப்பியிருக்கலாம். அல்லது பிரத்யும்னனின் தம்பிகளில் ஒருவர் தானாக முடிவெடுத்து இங்கு வந்திருக்கலாம். அன்றி பிரத்யும்னனின் தம்பியரில் ஒருசிலர் கூட்டமைவாக முடிவெடுத்து முரண்கொண்டிருக்கலாம். ஆம், அவ்வாறுதான் வாய்ப்பு.
ஆனால் எவருடைய கூட்டமைப்பு அது? எதன் பொருட்டு அங்கு வந்திருக்கிறார்கள்? என் உள்ளம் தொட்டுத் தொட்டுத் தவித்து இறுதி முடிவுக்கே வந்தது. அது பிரத்யும்னனுக்கு எதிரான ஒரு சூழ்ச்சிதான். அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்பதை மீண்டும் தொகுத்துக்கொண்டேன். ‘பிரத்யும்னன் ஃபானுவை ஏற்றுக்கொண்டால்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஃபானுவுக்கு எதிராக முடிசூடி அமர விழைகிறோம். அதற்கு ருக்மியின் உதவி கிடைத்தால் நன்று.’ ஆம், அதைத்தான் கூறவிருக்கிறார்கள், பிறிதொன்றல்ல. அது ஒரு சூழ்ச்சி. அதில் நான் எடுக்கவேண்டிய நிலையே இப்போது முன் நிற்கிறது.
நான் உறுதி கொண்டபோது அவைக்குள் இளையவன் விசாரு வந்தான். என்னைப் பார்த்ததும் குழம்பியபடி ருக்மிக்கும் எனக்கும் தலைவணங்கினான். “அமர்க!” என்று அவர் கூறியதும் என் முன்னால் இருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். ருக்மி “இப்போது இரண்டு தூதுகள் வந்துள்ளன. ஒருவர் வந்தது பிறிதொருவருக்கு தெரியவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றார். “ஆம், நான் வருவது அவனுக்கு தெரியும். எவர் சொல்லுடன் என்று தெரியாது” என்றேன். “நேற்று உண்டாட்டறையில் எடுக்கப்பட்ட முடிவின்படி நான் வந்தேன். ஆனால் என் நோக்கம் வேறு. இவர் பிறிதொரு தனி முடிவின்படி வந்திருக்கிறார் போலும்” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் உடல் பதறிக்கொண்டிருந்தது.
“உங்கள் தூதுகள் முரண்படுகின்றன. என்னை குழப்புவது அதுதான்” என்றார் ருக்மி. அத்தருணத்தில் அதை கடப்பதற்கான சூழ்ச்சியை என் உள்ளம் சென்றடைந்தது. ஒரு தெய்வம்போல எழுந்து என் முன் நின்றது. முன்னர் நான் எண்ணியிராதது. அக்கணத்தில் அது தோன்றியமையாலேயே நான் அதற்கு முற்றாக ஆட்பட்டேன். மற்றொன்று எண்ணாதவன் ஆனேன். ஆனால் அது அத்தருணத்தை கடப்பதற்கான எளிய சூழ்ச்சி மட்டுமே. மிகமிக எளியது, சிறுமைகொண்டது. ஆனால் அப்போது அது தெரியவில்லை. அவ்வண்ணம் ஓர் எண்ணம் எழுந்ததே ஊழ் என இப்போது எண்ணுகிறேன்.
“விதர்ப்பத்தின் அரசே, இளையோன் வந்ததும் நான் வந்ததும் ஒன்றை சொல்வதற்காகவே. நான் இதுவரை சொன்னது எதன்பொருட்டு நான் முறைமைசார்ந்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதற்கு. இனிமேல் சொல்லப்போவதே இக்கணையாழியை அளித்தவர் மெய்யாக எனக்கு சொன்னது. அதனால்தான் கணையாழியை அவர் எனக்கு அளித்தார்” என்று நான் சொன்னேன். “துவாரகையின் மணிமுடியை ஷத்ரியர்கள் சூடவேண்டும், அதற்கு தாங்கள் உதவ வேண்டும். ஃபானுவின் முடிசூடுகையை தூய ஷத்ரியக் குருதி கொண்டவர்களாகிய ருக்மிணியின் மைந்தர் ஏற்கவில்லை என்று கூறுவதற்காகவே நான் வந்துள்ளேன். அவனும் அதற்காகவே வந்துள்ளான்.”
“அரசே, பிரத்யும்னன் மிகையுணர்வுகளுக்கு ஆட்பட்டு ஃபானுவின் முடிகொள்கையை ஆதரித்திருக்கிறார். அதை அந்த அவையில் பிற மைந்தர் எதிர்க்க முடியவில்லை. ஆனால் அவர்களால் அதை ஏற்க முடியாது. விதர்ப்பம் ஷத்ரியர்களே துவாரகையின் அரியணையில் அமரவேண்டும் என்று எண்ணுமென்றால் சுதேஷ்ணன் அதை ஆதரிப்பார். அவர் தலைமையில் இளையோர் பலர் இருக்கிறார்கள். அவர்களும் தங்களுடன் இருப்பார்கள். அச்செய்தியுடன்தான் இளையோன் இங்கு வந்திருக்க வேண்டும். அச்செய்தியை மறுபடியும் உறுதிப்படுத்தும் கணையாழியை நான் கொண்டு வந்தேன். இருமுனை செய்தி என்று இதை கொள்க! இதற்குள் முரண்பாடு ஏதுமில்லை” என்றேன்.
அத்தருணத்தை மிகச் சிறப்பாகக் கடந்துவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நானே எனக்குள் புன்னகைத்துக்கொண்டேன். தந்தையே, மதிசூழ்கையில் ஈடுபடுபவர்கள் தங்கள் மதிசூழ்கையைப்பற்றி மகிழத்தொடங்கும்போது பிழை செய்யத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு மதிசூழ்கைக்குப் பின்னரும் ஐயமும் குழப்பமும் கொண்டு அவர்கள் பிழைகளை எண்ணி எண்ணி நோக்கி அடையும் ஐயமும் பதற்றமும் பிழைநோக்கும் எஞ்சும் வரை மட்டுமே மதிசூழ்கையாளர்களாக திகழக்கூடும். சற்றே மகிழ்பவர்கள் வைக்கும் அடி பிழைக்கும். அத்தருணத்தில் அவ்வாறு நிகழ்ந்தது.
ருக்மி எழுந்து “ஆனால் இவ்விரு தூதுகளும் மாறுபடுகின்றன. மருகன் விசாரு வந்து என்னிடம் கூறியது எண்பதின்மரும் ஒரே முகம்கொண்டு ஃபானுவை ஆதரிக்கிறார்கள் என்றுதான். ஃபானுவின் தூதராக தாங்கள் வருவீர்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. என் மருகன் வந்து என்னிடம் பேசினாலொழிய ஏற்கமாட்டேன் என்பதற்காக அவனை அனுப்பியிருக்கிறார்கள். எவ்வண்ணம் பிறிதொரு எண்ணத்தை சுதேஷ்ணன் தங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்?” என்றார்.
என்னால் ஒருகணம் எதையுமே எண்ண முடியவில்லை. என்ன நிகழ்கிறது என்று தெரியவில்லை. “அந்தத் தூதின் பொருள் எனக்கு புரியவில்லை” என்றேன். அக்கணம் முழுமையாகவே தோற்றேன். ருக்மி “தெளிவாகவே கூறிவிடுகிறேன். துவாரகையின் கருவூலத்திலிருந்து செல்வத்தை என்னிடம் கொண்டு வந்து அளித்திருந்தார்கள் பிரத்யும்னனும் சுதேஷ்ணனும். அப்பொருளைக்கொண்டே நான் படை திரட்டினேன். அப்பொருளுக்கு இணையான பொருளையோ அல்லது அப்பொருளுக்கு இணையான படையையோ துவாரகைக்கு திருப்பி அளித்துவிடவேண்டும் என்று கூறவே விசாரு வந்தான். அது பிறிதொருவர் அறியாத மந்தணம் என்பதனால்தான் இவனை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார்.
நான் கைகள் தளர்ந்து தொங்க அங்கே நின்றேன். நான் அடைந்த அவை வெற்றிகள் அனைத்தும் அந்த முனைநோக்கி என்னை கொண்டுவந்து சேர்க்கவே என்று அப்போது உணர்ந்தேன். என்னை மீறிய பெருவிசை ஒன்றின் ஆணை அது. என்னை வெல்லச்செய்து, ஆணவம் கொள்ளச்செய்து, மேலும் மேலும் நுண்மை கொள்ள வைத்து அறுதிப்புள்ளியில் சிறு பிழை ஒன்றினூடாக கீழே வீழ்த்தியது அது. மேலே தூக்கி கீழே வீழ்த்த தெய்வங்களுக்கு இருக்கும் விழைவு வியப்பூட்டுவது. அவை மானுடரை வைத்து விளையாடவில்லை. அவை மானுடர்மேல் வஞ்சம் கொண்டிருக்கின்றன.
அத்தருணத்தில் நான் இயற்றிய பிழை என்ன என்று பின்னர் பலமுறை என் நெஞ்சில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ஒன்று தோன்றுகிறது. இன்று இவ்வண்ணம் உணர்கிறேன், என் நாவன்மையில் நான் கொண்ட நம்பிக்கைதான். இப்போது இத்தருணத்தை கடப்போம், இனி எழுவதை எவ்வண்ணமேனும் பேசி வெல்வோம் என்று எண்ணிக்கொண்டேன். மேலும் சில செய்திகளை தெரிந்துகொள்ளவும் பேச்சை தொகுத்துக்கொள்ளவும் எனக்கு பொழுது தேவை, அவ்வளவுதான்.
அந்த எண்ணம்போல் ஆணவம் பிறிதில்லை. நாம் எல்லாவற்றையும் பேசிக்கடந்துவிடலாம் என்று எண்ணுவது மாயை. பேசப்பேச உருமாறாமல் நின்றுகொண்டிருக்கும் சில உண்டு. மலையென எழுந்த மிகப் பெரியவற்றை வென்றிருப்போம். தொடப்படாமல் அணு ஒன்று நம் முன் நின்றிருக்கும். அத்துடன் நாம் ஒரு தருணத்தை கடந்துசெல்ல சொன்ன சொற்கள் முளைத்துப் பெருகி ஒன்று பிறிதொன்றை வளர்த்து பேருருக்கொண்டு பிறிதொரு இடத்தில் நம்மை வழிமறிக்கும். தந்தையே, ருக்மியின் அவையில் நான் அடைந்தது ஊழின் தருணம்.
“பிரத்யும்னனின் இளையோரிடையே ஒரு சாரார் ஃபானுவுக்கு எதிராக கிளம்புகிறார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. அவர்கள் பதின்மரும் ஒற்றைக்குரல் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் ருக்மி. அப்போது அந்த அவையிலிருந்து வெளியே செல்வதன்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் “தெளிவாக உரைக்கிறேன், அரசே. ஒருவேளை இளையோனுக்கு புரியாமல் இருக்கலாம். மூத்தவர் சுதேஷ்ணன் தான் அரியணை அமரவேண்டும் என்று எண்ணுகிறார். இப்போதல்ல, நெடுங்காலமாகவே அந்த எண்ணம் அவருக்கு உண்டு” என்றேன்.
“அவர் ஃபானுவின் இளையோராகிய எங்களிடம் அதைப்பற்றி பேசியிருக்கிறார். ஃபானுவின் இளையோர்களில் ஒரு சாரார் சுதேஷ்ணன் முடிசூடுவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். சுதேஷ்ணன் முடிசூடுவதென்றால் இரண்டாம் பொறுப்பில் என்னை அமர்த்துவதாக எனக்கு சொல்லுறுதி அளித்திருந்தார், ஆகவே நான் அவரை ஆதரித்தேன். நான் சுதேஷ்ணன் தலைமையில் முடிவிழைபவர்களில் ஒருவன். நான் இங்கு வந்தது சுதேஷ்ணனின் தனிப்பட்ட தூதுடன்தான். அரசே, ஷத்ரியர்கள் துவாரகையில் மணிமுடி சூடி அமரவேண்டுமெனில் அதற்கு ஒற்றை வழிதான் உள்ளது, தாங்கள் சுதேஷ்ணனை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினேன்.
ருக்மி அதை ஏற்பார் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் இயல்புப்படி மேலும் குழப்பத்தை அடைவார். எவரிடமேனும் மேலும் உசாவி மேலும் குழம்பி எவரேனும் சொல்லும் ஒரு முடிவைத்தான் அவர் எடுப்பார். ஆனால் அந்தத் தருணத்தில் அனைத்தையும் ஒருங்குபடுத்தி ஒரு தரப்பாக மாற்றி கடந்துவர என்னால் இயன்றது. கடந்துவிட்டேன் என்றுதான் எண்ணினேன். ருக்மி “நான் சுதேஷ்ணனின் தூதை கருத்தில் கொள்கிறேன். அவந்தியின் அரசனிடம் பேசுகிறேன். முடிந்தால் சுதேஷ்ணனிடம் பிறிதொருமுறை சென்று உசாவுகிறேன். எளிதில் நான் முடிவெடுக்க இயலாது. ஏனென்றால் பிரத்யும்னனும் எனது மகளை மணந்தவனே” என்றார்.
“ஆம், ஆனால் பிரத்யும்னனுக்குப் பிறகு முடிசூடவிருப்பவர் தங்கள் மகளின் வயிற்றில் உதித்தவர் அல்ல. சம்பராசுரரின் மகளின் வயிற்றில் உதித்த அநிருத்தன் என்பதை மறக்கவேண்டியதில்லை என்று உணர்க!” என்றேன். ருக்மியின் விழிகள் மாறின. அவர் தாடியை உருவியபடி “ஆம், அவ்வெண்ணம் எனக்கும் உண்டு” என்றார். “நீங்கள் அதை எண்ணியே ஆகவேண்டும். பிரத்யும்னன் முடிசூடுவது ஷத்ரியர்கள் தலைமை கொள்வது அல்ல. ஷத்ரியர்களினூடாக அசுரர்கள் குருதி தலைமை கொள்வதுதான்” என்றேன். ருக்மி “ஆம், அதை எண்ணி முடிவெடுப்போம். இத்தூது நிறைவடைந்தது என்று கொள்க!” என்றார்.
அவர் எழுந்து செல்வதை பார்த்தபடி நான் நின்றிருந்தேன். என் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. ஒரு முடிவை கண்ணருகே கண்டேன். அங்கே நிகழ்ந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக என்னுள் தொட்டு எடுத்தேன். ஒரு கூரிய குளிர்போல அச்சம் என்னுள் எழுந்தது. என்னை சந்திக்க கணிகர் ஏன் மறுத்தார் என்று உணர்ந்தேன்.