கல்பொருசிறுநுரை - 37

பகுதி நான்கு : அலைமீள்கை – 20

தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை நினைவூட்டின. அதனுடன் இணைந்த உணர்வுகளை எழுப்பின. அதைவிட உண்டாட்டுக்கு வந்தமரும் குடித்தலைவர்களை அவை மகிழ்வித்தன.

குடித்தலைவர்கள் உண்டாட்டில் தடுமாறினார்கள், சொல்திணறினார்கள். அவர்கள் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் ஒருவரோடொருவர் மோதவும் உளம் பயின்றவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தரப்பில் இணைந்ததே அவர்கள் அஞ்சி வெறுத்த எவரோ மறுதரப்பில் சேர்ந்தமையால்தான். அல்லது சேரக்கூடும் என்னும் ஐயத்தால். நான் ஒன்றை கண்டிருக்கிறேன், ஆட்சியின் மையத்தில் நிகழும் சிறு முரண்பாடுகூட ஆதரவாளர்களிடம் பெருகி எழுகிறது. சிற்பியின் கோலில் எழும் துளிக்கோணல் மாளிகையில் நூறென ஆயிரமென பெருகுவதைப்போல. எளிய படைவீரர்கள்கூட கடுமையான காழ்ப்புகளை வளர்த்துக்கொள்வதுண்டு. ஒருவரை ஒருவர் கண்டாலே கொல்ல முயல்வதுண்டு. பல்லாண்டுகளாக துவாரகையில் உருவாகிவிட்டிருந்த பகைமை நகரை கீழே விழுந்த பளிங்கு என ஒற்றை அமைப்புக்குள் பல துண்டுகளாக உடைத்துவிட்டிருந்தது. அதன் வடிவமே விரிசல்களாகத் தெரிந்தது.

சபைகளில் தங்கள் மறுகுலத்தவரை, குடியெதிரிகளை சந்தித்தவர்கள் எப்படி எதை பேசுவதென்று அறியாமல் திகைத்தனர். அவர்கள் அதை அஞ்சி பலமுறை அழைத்த பின்னரே உண்டாட்டுகளுக்கு வந்தனர். ஆனால் மிக எளிதாக அச்சிக்கலை அவை கடந்துசென்றது. முன்னரே அவ்வண்ணம் முரண்கொண்டு, அவைக்கு வந்து, தழுவிக்கொண்டு பகைமீண்டவர்கள் அவர்களை வரவேற்று அவர்களின் பகைமையை நகையாட்டாக மாற்றி ஒருவரோடொருவர் இணைத்து வைத்தார்கள். அதற்கேற்ப அனைத்தையும் இளிவரலாக ஆக்கி நகைத்துக்கொண்டிருந்தனர் யாதவ மைந்தர். சிரிக்கத் தொடங்கினால் அனைத்தையும் கடக்கமுடியும். ஒருவர் தன் அச்சத்தையும் பகைமையையுமே சிரிப்பாக ஆக்கிக்கொள்ள முடியும்.

ஒரு கட்டத்தில் குடித்தலைவர்கள் அனைவருமே உண்டாட்டில் அமரத்தொடங்கினர். வணிகர்கள், படைத்தலைவர்கள் என அனைவரும் வந்தமைய அவை துவாரகையின் பொலிவுக் காலகட்டத்தில் உங்கள் அவை இருந்தவண்ணமே ஆகியது. முழுதமைந்த அவை. மகிழ்வே உருவான முகங்கள். ஒவ்வொருவருக்கும் அத்தகைய எதிர்பார்ப்பும் கனவும் இருந்திருக்கும். அதை மீண்டும் நடிக்கையிலேயே அதுவாக ஆகிவிட்டிருந்தனர். ஆனால் தந்தையே, அது வெறும் கானல். கொடுநோயாளி எண்ணியிராதபோது நோய் நீங்கி நலம் பெற்று எழுந்துவிட்டதாக கனவு காண்பார். முதுமையில் சாவை நெருங்குபவர் குழந்தைப்பருவத்திற்கு ஒரு மெய்வெளித் தோற்றத்தினூடாக திரும்பிச் செல்வார். எரியறையில் சிக்கிக்கொண்டவர் உடல் உருகி மறைந்துகொண்டிருக்கையில் அரைக்கணம் தண்மை வந்து தழுவிக்கொள்வதைப்போல் உணர்வார். அதுதான், பிறிதொன்றுமில்லை. மிகக் குறுகிய கூரிய அலை அது.

எஞ்சியிருந்தவர் சாத்யகி மட்டுமே. கிருதவர்மன் வந்துள்ள செய்தி அவருக்கு முன்னரே முறைப்படி அறிவிக்கப்பட்டது. அவர் மறுமொழி எதையும் அளிக்கவில்லை. துவாரகைக்கு வெளியே அமைந்த தன் படையுறைவில் தனித்து அமைந்திருந்தார். அவரையும் அவைக்கு கொண்டுவரவேண்டும் என்று ஃபானு எண்ணினார். ஆனால் அது இயல்வதா என்று தெரியவில்லை. “அவரும் அவையமர்ந்துவிட்டார் என்றால் துவாரகை முற்றாக மீண்டுவிட்டது என்று பொருள்” என்று ஃபானு சொன்னார். “நான் சென்று அழைத்துவருகிறேன். நான் அழைத்தால் அவர் வராமலிருக்கப்போவதில்லை” என்றார் பிரத்யும்னன். ஆனால் அவரை அழைக்க மூத்தவர் மூவரும் செல்வதை அறுதியாக வைத்துக்கொள்வோம், முத்தரப்பு இளையோரும் முதலில் சென்று அழைக்கட்டும் என்று கணிகர் சொன்னபோது அதுவே சிறந்த வழி என ஏற்கப்பட்டது.

யாதவ மைந்தர்களில் ஃபானுமானும் ருக்மிணியன்னையின் மைந்தர்களில் விசாருவும் ஜாம்பவதியன்னையின் மைந்தர்களில் புருஜித்தும் செல்வதென அவை முடிவெடுத்தது. “அவையில் நிகழ்வன அனைத்தையும் அவருக்கு எடுத்துக் கூறுக! யாதவ மைந்தர் அனைவரும் இணைந்துவிட்ட பின்னர் அவர் தனித்திருப்பதென்பது இவ்வொற்றுமைக்கு எதிரானவராக அவர் திகழ்கிறார் என்றுதான் பொருள்படும். குடிகள் அனைவரையும் கூர்ந்து நோக்கிகொண்டிருக்கிறார்கள். பகைவர்கள் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள், பாரதவர்ஷமே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுக!” என்றார் சுஃபானு. அவர்கள் சொல்லவேண்டியவை வகுத்து அளிக்கப்பட்டன. அவர் வருவார் என்று ஓர் எண்ணமும், அவரிடம் தன் மைந்தரின் சாவு குறித்த வஞ்சம் எஞ்சியிருக்கும் என்று மறு எண்ணமும் திகழ்ந்தது.

ஆனால் அவர்கள் அரண்மனை முகப்பிலிருந்து கிளம்பவிருக்கையில் அங்கே கிருதவர்மன் வந்தார். அது முழுக்க முழுக்க தற்செயல்தான். அவர் காலையில் கடலோரமாக உலா சென்றிருந்தார். மித்ரவிந்தையன்னையின் மைந்தனான வஹ்னி அவரிடம் அவர்கள் செல்லவிருப்பதை சொன்னான். அவர் உடனே திரும்பி புரவியில் விரைந்து வந்தார். அவர்கள் கிளம்பவிருக்கையில் முற்றத்தில் புரவி வந்து நின்று அவர் கால் சுழற்றி இறங்கினார். “செய்தி அறிந்தேன், இது அரசமுறைச் செலவாக இருக்கவேண்டியதில்லை. அவர் என் குருதியினர். நானே உடன் வருகிறேன்” என்றார். இளையோர் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர்.

ஃபானுமான் “தந்தையே, தாங்கள் வரலாமா என்று தெரியவில்லை. அது அரசியலில் எவ்விளைவை உருவாக்கும் என உய்த்துணரக் கூடவில்லை” என்றான். “அரசியலை ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலையை நான் கடந்துவிட்டேன். நான் இன்று வேறு ஓர் உலகில் இருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “நான் எவருக்கும் சொல்லளிக்க வேண்டியதில்லை. கிளம்புக!” ஃபானுமான் “நான் மூத்தவர் ஃபானுவிடம் சொல்லுசாவாமல் எழவியலாது” என்றான். ஃபானு அப்போது துயிலறையில் இருந்தார். முந்தையநாள் இரவு நீண்டநேரம் உண்டாட்டில் களித்திருந்தார். ஃபானுமானின் தூதன் அவரை அழைக்க வந்தபோது நான் எதிரே சென்றேன். அவன் என்னிடம் செய்தி சொன்னான். கிருதவர்மனை அழைத்துக்கொண்டு செல்லும்படி நான் ஃபானுமானுக்கு ஆணையிட்டேன்.

செல்லும் வழியெங்கும் ஃபானுமான் தவித்துக்கொண்டுதான் இருந்தான். சாத்யகி எவ்வகையிலேனும் கிருதவர்மனை சிறுமைசெய்துவிட்டால் துவாரகையில் சற்றே அடங்கியிருந்த விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்குமான போர் மீண்டும் தொடங்கிவிடக்கூடும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. செல்லும் வழியிலேயே அவர் வந்துகொண்டிருக்கும் செய்தி சாத்யகிக்கு தெரிந்துவிடும். அச்சந்திப்பை ஒழியும்பொருட்டு அவர் எங்கேனும் கிளம்பிச் சென்றுவிடக்கூடும். வேட்டைக்குச் செல்லலாம். ஆனால் கிருதவர்மன் அவர் வேட்டையாடும் இடத்திற்கே சென்று அவரை சந்திக்கத் துணிபவராகவே தோன்றினார்.

அவர்கள் சாத்யகியின் படையிருப்பை நோக்கி செல்கையிலேயே தொலைவில் புழுதிபறக்க புரவிகள் வருவதை கண்டார்கள். ரிஷபவனத்தின் கொடி தெரிந்தது. அது அரசமுறை வரவேற்பாக இருக்கலாம், அல்லது படையெதிர்ப்பாகவும் இருக்கலாம். ஃபானுமான் நின்று அவர்களுக்காக காத்திருந்தான். வந்தவர் சாத்யகி. இரு கைகளையும் விரித்தபடி வந்தவர் கிருதவர்மனை புரவியிலிருந்தபடியே தழுவிக்கொண்டார். இருவரும் விழிநீர் உகுத்தனர். தோள்களில் அறைந்துகொண்டார்கள். பின்னர் பொருளில்லா பெருநகைப்பை எழுப்பினர்.

புரவியிலிருந்து இறங்கி இருவரும் மீண்டும் தழுவிக்கொண்டனர். சாத்யகி மீண்டும் விழிநீர் எழ “இளைய யாதவருக்காக!” என்றார். “ஆம், அவருக்காக” என்று கிருதவர்மன் சொன்னார். “இத்தருணத்தில் அவர் இங்கே இருந்திருக்கவேண்டும்” என்றார் சாத்யகி. “அவர் இருப்பதை உணர்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “வருக, இன்று நான் ஒரு பெருமுடிவை அவையில் அறிவிக்கவிருக்கிறேன்! நீங்களும் அவையில் இருக்கவேண்டும். காலைமுதல் அதை எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி “நானும் அதையே எண்ணினேன். தங்கள் உளநிலை என்ன என்னும் எண்ணமே தடையாகியது” என்றார். “என் உளநிலையா? மைந்தரால் பொலிந்த தந்தையுடையது” என்று சொல்லி கிருதவர்மன் நகைத்தார்.

“வருக, நாம் ஆடைமாற்றி உணவருந்தி மீள்வோம்!” என்றார் சாத்யகி. “எதற்கு? இப்புழுதிபடிந்த ஆடைகளுடன் நகரினூடாகச் செல்வோம். மக்கள் நம்மை காணட்டும்…” என்று கிருதவர்மன் சொன்னார். அங்கிருந்தே அவர்கள் துவாரகை நோக்கி திரும்பினர். பேசியபடி செல்கையில் சாத்யகி “அவர் இங்கே இருந்ததுதான் உங்கள் பகைமையை உருவாக்கியதா? நகர்த்தெருக்களினூடாக குடிகளால் போற்றி அழைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதும் பகை மறந்தீர்களா?” என்றார். “அறியேன். ஆனால் குடிகள் என்னை வாழ்த்தியபோது நான் அரசன் என்று உணரவில்லை, அனைவருக்கும் தந்தையென்றே உணர்ந்தேன். என்னை நோக்கி நீண்ட கைகளில் இருந்த தவிப்பையும் விழிகளில் எழுந்த கண்ணீரையும் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை” என்றார்.

“தந்தையாதலே ஆண்மையின் நிறைவு என்பார்கள்” என்று சாத்யகி சொன்னார். “ஆம், தந்தையெனும் நிலையில் நம்மை இயக்கிய அனைத்தையும் நாம் கடந்துவிடுகிறோம். பண்டு யயாதியும் ஜனகராஜரும் எவ்வண்ணம் உணர்ந்தனர் என்று என்னால் அறிந்துகொள்ள முடிகிறது” என்றார் கிருதவர்மன். அவர்கள் இருவரும் நகரில் நுழைந்தபோது ஒரு சுழலிக்காற்று வீசியது போலிருந்தது. மக்கள் கலைந்து கூச்சலிட்டு அவர்களை சூழ்ந்தனர். சாலையோரங்கள், மாளிகைமுகடுகள், அங்காடிமுகப்புகள் எங்கும் முகங்கள். கண்ணீருடன் அவர்கள் வாழ்த்துக்கூச்சலிட்டனர். அவர்களின் புரவிகள் மேல் மலர் அள்ளி வீசினர். அவர்களின் புரவித்தடம் பதிந்த மண்ணைத் தொட்டு தொட்டு விழிகளில் ஒற்றிக்கொண்டனர்.

அரண்மனை முகப்பில் அதற்குள் ஃபானுவும் பிரத்யும்னனும் சாம்பனும் வந்து நின்றிருந்தனர். புரவிகள் முற்றத்தை நெருங்கியதும் பெருமுரசுகள் முழங்கி வாழ்த்தொலி எழுப்பின. மங்கலச்சூதர் இசை முழக்கினர். அணிச்சேடியர் ஐம்மங்கலம் காட்டி எதிரேற்றனர். ஃபானு வந்து இருவர் கால்களையும் சேர்ந்தே பணிந்தார். இருவரும் சேர்ந்து அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். சாம்பனும் பிரத்யும்னனும் வந்து வணங்கினர். மூவரையும் அவர்கள் இருவரும் நான்கு கைகளால் அணைத்துக்கொண்டார்கள். இளையவர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களை வணங்கினர். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களில் இருந்தும் பெண்டிர் குரவையொலி எழுப்பி மலர் பொழிந்தனர்.

அன்றைய உண்டாட்டில் யாதவ மைந்தர் அனைவரும் அமர்ந்து உணவுண்டுகொண்டிருந்த பெருங்கூடத்தில் கைதட்டியபடி எழுந்த கிருதவர்மன் “அனைவரும் செவி கொள்க, துவாரகையின் வரலாற்றில் மிகப் பெரிய அறிவிப்பொன்றை விடுக்கவிருக்கிறேன்!” என்றார். அதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும்கூட அத்தருணம் ஒரு திகைப்பை அளித்தது. அனைவரும் நிமிர்ந்து அவரை பார்த்தனர். புன்னகையுடன் “இங்கு யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடியிருக்கிறோம். குடித்தலைவர் எழுபத்தெட்டு பேரும் இங்கு அமர்ந்திருக்கிறோம். யாதவக் குடிமூத்தவராகிய சாத்யகி இருக்கிறார், நானும் இருக்கிறேன். கணிகர் முதலாய அமைச்சர்கள் உள்ளனர். இத்தருணமே உகந்தது. இதில் முறையாக இவ்வறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.

அவர் சொற்களை உணர்ந்துகொண்டு அனைவரும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். “துவாரகை இன்று முறையான அரசர் இன்றி திகழ்கிறது. இந்நகரைச் சமைத்து காத்து புகழ்பெறச் செய்த விருஷ்ணி குலத்து இளைய யாதவர் கிருஷ்ணன் நகர் நீத்தபின் அவருடைய ஆணைப்படி நகரை அவர் மைந்தன் சாம்பன் புரந்துவருகிறார். அவர் மைந்தர்கள் ஃபானுவும் பிரத்யும்னனும் உடன் நின்றிருக்கிறார்கள். ஆனால் இந்நகர் முன்பெனப் பொலிவுகொள்ள இங்கே உறுதியான கோல் நிலைகொள்ளவேண்டும். அரசவை அன்றாடம் என நிகழவேண்டும். ஒற்றைப்பெரும்படையாக நாம் திரளவேண்டும். அதற்கு அரசர் ஒருவரை முறையாக அரியணை அமர்த்தியாக வேண்டும். அதற்கான தருணம் இது” என்றார் கிருதவர்மன்.

“எல்லா நெறிகளின்படியும் மூத்த அரசியின் மூத்த மைந்தரே முடிக்குரியவர். ஆகவே இளைய யாதவர் கிருஷ்ணனின் முதல் மைந்தனும், அவர் முதல் துணைவி சத்யபாமையின் மைந்தனுமான ஃபானுவை நாம் இங்கே அரசர் என முடிகொண்டு நிலைநிறுத்துவதே உகந்தது. யாதவ மைந்தர் எண்பதின்மரும் ஒருங்கிணைந்து மறுசொல்லின்றி இவ்வறிப்பை வெளியிடுவார்கள். இளையோர் பிரத்யும்னனும் சாம்பனும் இருபுறம் நின்று கரம் பற்றி அழைத்துச்சென்று ஃபானுவை மேடையில் அமர்த்துவார்கள். இது என் விழைவு. இதை நிகழ்வாக்கவேண்டும் இந்த அவை” என்றார் கிருதவர்மன். கைகூப்பி நின்றபோது அவர் முகம் தெய்வச்சிலைகள்போல கனிந்திருந்தது.

ஒருகணம் அந்த அவையிலிருந்தது அமைதியா பலமடங்கு அழுத்தப்பட்ட ஒலியா என எனக்கு ஐயமாக இருந்தது. கிருதவர்மன் “இதை சாம்பனிடமும் பிரத்யும்னனிடமும் நான் முன்னரே பேசிவிட்டேன். இருவருக்கும் மாற்றுக்கருத்தென ஏதுமில்லை. இதுவே உகந்த தருணம். ஒருங்கிணைந்த துவாரகை பாரதவர்ஷத்தின் மணிமுடியென திகழும். இதைப்போல ஒரு வரலாற்று வாய்ப்பு யாதவர்க்கு இனி வருவதற்கில்லை என்பதை உணர்க! உங்கள் பெருந்தந்தை யானை சென்ற வழியென ஒன்றை காட்டினூடாக உருவாக்கி அளித்திருக்கிறார். அதனூடாக ச்சென்று பாரதவர்ஷத்தை முழுமையாக வெற்றிகொள்ளும் நல்வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கிறது. அதைக் கண்டு உங்களை வாழ்த்தும் பொருட்டு நாங்கள் உயிர் எஞ்சியிருக்கிறோம்” என்றார்.

அவர் குரல் சற்றே உடைந்தது. “தந்தையரின் வடிவென நின்று இந்த அவையில் நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டுமே. ஒற்றுமையை எங்களுக்கு பரிசளியுங்கள். எங்கள் மைந்தர்கள் வெல்வார்கள் என்னும் நம்பிக்கையை பரிசளியுங்கள். வாழ்க!” கைகூப்பி கிருதவர்மன் வணங்கியபோது அருகமர்ந்திருந்த சாத்யகியும் எழுந்து கைகூப்பினார். அவையினர் வாழ்த்தொலி எழுப்பி கைகளை தூக்கினர். வாழ்த்தொலிகள் தங்கள் செவிகளில் விழுந்தோறும் ஒவ்வொருவரும் மேலும் மேலுமென களிவெறிகொண்டனர். கூவி ஆர்ப்பரித்தனர்.

சாம்பனும் பிரத்யும்னனும் எழுந்து ஃபானுவை அணுகி அவர் இரு கைகளையும் பற்றி மேலே உயர்த்தினர். மைந்தர் எண்பதின்மரும் எழுந்து கைதூக்கி “துவாரகை வெல்க! வெல்க இளைய யாதவர் பெரும்புகழ்! வெல்க ஐந்தாம் வேதப்பெருநெறி! வெல்க யாதவ பெருங்குடி! வெல்க பேரறம்!” என்று வாழ்த்து கூவினர். அலையலையாக வாழ்த்தொலி எழுந்துகொண்டே இருந்தது. அதை நிறுத்தினால் அத்தருணத்திலிருந்து இறங்கிவிடுவோம் என அஞ்சியவர்கள்போல அவர்கள் மீண்டும் வாழ்த்தொலியை எழுப்பினர். காற்றில் பறந்து தாழும் பந்தை உதைத்து உதைத்து விண்ணில் நிறுத்தியிருப்பதைப்போல குறையக்குறைய வாழ்த்தொலி பெருக்கி அத்தருணத்தை நீட்டி நீட்டிச் சென்றனர்.

பின்னர் கிருதவர்மன் கைதூக்கி அனைவரையும் அடக்கி சொன்னார் “ஆகவே, நாளையே நிமித்திகர்களை வரச்சொல்வோம். அவர்கள் ஃபானு முடிசூடுவதற்குரிய நன்னாளை குறித்து நமக்கு அளிக்கட்டும். அதை முடிவுசெய்து பாரதவர்ஷத்திற்கு அறிவிப்போம். முடிமன்னர் புடைசூழ நம் மைந்தர் அரியணை அமரட்டும். அந்நாளிலேயே துவாரகை தன் பூசலை மறந்து ஒருங்கிணைந்துவிட்டது என்னும் செய்தியை உலகம் அறியட்டும்” என்றார். “ஆம்! ஆம்! இனி வெற்றி ஒன்றே நமக்கான சொல்!” என்றார் பிரத்யும்னன். மீண்டும் வாழ்த்துக்கூச்சல்கள். வெறியசைவுகள். களிச்சிரிப்புகள்.

நான் அந்த முகங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தேன். ஒவ்வொருவரும் உண்மையாகவே மகிழ்ச்சிகொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் தங்கள் விழைவால், கசப்பால், ஐயங்களால் எதிலோ கட்டுண்டிருந்தாலும்கூட எதிலும் கட்டுண்டிருப்பதை ஆத்மா விரும்புவதில்லை. அது விடுதலைக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலையின் சுவையை சற்று அறிந்தால் ஆத்மா பின்பு கட்டுகளை நாடுவதில்லை, அது ஆத்மா தன்னுள் இருந்து உருவாக்கிக்கொள்ளும் விழைவுகளாலும் ஆணவத்தாலும் ஆனதாக இருந்தாலும் கூட.

ஒவ்வொருவரும் மதுவெறி கொண்டவர் போலிருந்தனர். ஒவ்வொருவரும் உவகை அடைந்திருந்தனர். நான் அரைவிழியால் கணிகரை பார்த்தேன். அவர் முகம் மலர்ந்திருந்தது. பற்கள் தெரிய சிறுகுழந்தைபோல் புன்னகைத்துக்கொண்டிருந்தார். அப்பேரழகுப் புன்னகை அக்கணத்தில் என்னை அச்சுறுத்தியது. ஆம், என்னுள்ளில் மிக நுணுக்கமாக ஒரு நடுக்கு ஏற்பட்டது. அந்நடுக்கு ஏன் என்று என்னால் உணரக்கூடவில்லை. தென்னைக்குள் இளநீர் நலுங்குவதுபோல என்றொரு சூதர் சொல் உண்டு. அத்தகைய உணர்வொன்றை நான் அடைந்தேன்.

கிருதவர்மன் அனைவரையும் அமைதியுறச் செய்தபின் “மைந்தர்களே, இன்றைய சூழல் அனைத்தும் நமக்குரியவை. பாரதவர்ஷத்தின் முதன்மைப் பெருநகரென்று விளங்கும் அஸ்தினபுரி வெல்லும் விரைவின்றி உள்ளது. யுதிஷ்டிரனும் இளையோரும் நகர் நீங்கியுள்ளனர். அந்நகரை ஆளும் சூதர்குலப் பெண் சம்வகைக்கு ஷத்ரியர்களைப்போல் வென்றெழும் விழைவோ, கோன்மை கொள்ளும் ஆணவமோ இல்லை. அன்னைபோல் அணைத்துக் காத்து அவ்வண்ணமே கொண்டுசெல்லும் தன்மை கொண்டிருக்கிறார். அதுவும் நன்றே” என்றார். “அது யாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நாம் படைகொண்டுசென்று நாடுகளை வெல்லலாம். நம்மை அஸ்தினபுரி ஒருபோதும் எதிர்க்காது. அவர்கள் எதிர்க்கவில்லை என்பதை நமக்கான ஆதரவென்றே பிறர் எண்ணிக்கொள்வார்கள்.”

“மைந்தர்களே, யாதவர்கள் இதுகாறும் முறையான போர்வெற்றிகள் இல்லாதவர்கள். நாம் நிலங்கள்தோறும் பரவி, அந்நிலத்தை நாடென்றாக்கி, அந்நாட்டை பிறரிடமிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு மட்டும் போரிடுபவர்கள். கன்றுகள் கொண்டவர்கள் என்பதனால் நாம் நிலத்தை அழிப்பதை விரும்புவதில்லை. போரில் ஒரு பசு இறப்பதைக்கூட ஏற்பதில்லை. அவ்வண்ணம் நிகழக்கூடும் என்றால் உடனே நிலத்தை கைவிட்டு திசைவிளிம்பு நோக்கி செல்லவே நாம் துணிந்திருக்கிறோம். யாதவர்களுக்கு செல்லுமிடமே நாடு, கன்றுக் கால்பட்ட இடமெல்லாம் வீடு என்று ஒரு சொல் உண்டு” என்றார் கிருதவர்மன்.

“நாம் நமக்குள் முரண்பட்டும் இணைந்தும் நிலைகொண்டு இதுவரை வரலாற்றில் தங்கி வாழ்ந்திருக்கிறோமே ஒழிய எந்நிலையிலும் வென்றவர்களாக, பிறரால் அஞ்சப்படுபவர்களாக இருந்தது இல்லை. விலக்காக அமைவது கார்த்தவீரியரின் ஆட்சிச் சிறுபொழுது மட்டுமே. அதன்பின் கம்சரின் ஆட்சிக்காலத்தில் மகதத்துடன் இணைந்து மட்டுமே மதுரா சற்றேனும் நிலைகொள்ள இயன்றது. மகதத்தின் படைத்தலைவர்களில் ஒருவர் என்ற தகுதியே கம்சருக்கு இருந்தது. தன் தனித்தகுதியால் இளைய யாதவர் படிவர் என்றும் அறிஞர் என்றும் புகழ்பெற்றிருந்தபோதிலும் கூட அஸ்தினபுரியின் படைத்துணை கொண்டு நிலைகொள்வதாகவே துவாரகை அறியப்பட்டது என நாம் அறிவோம்.”

“துவாரகையின் வெற்றி என்பது அது பிற நாடுகளில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால், கடல் வணிகத்தை சிறப்புறச் செய்ததனால் அமைந்தது. ஆம், அது இந்த இடத்தை தெரிவுசெய்த இளைய யாதவரின் மதிநுட்பத்தால் வாய்த்தது. அவ்வாய்ப்பை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறோம். இங்கு இன்னமும் துவாரகையின் கருவூலம் நிறைந்திருக்கிறதென்பதை நாம் மறக்கவேண்டாம். நம்மால் பெரும்படையொன்றை மிக எளிதாக திரட்டிக்கொள்ள முடியும். வலுவான கடற்படை ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும். கடல்வழிகளினூடாகச் சென்று பாரதவர்ஷத்தின் பெரும்பாலான பெருநகரங்களை நம்மால் தாக்க முடியும். கடல்வல்லமை கொண்ட நிலம் என்பது இன்று சிலவே. அவற்றில் கலிங்கமும் வங்கமும் சோர்ந்து வலுவிழந்து கிடக்கின்றன.”

“நாம் படைகொண்டு சென்றாகவேண்டும், நம்மை அனைவரும் அஞ்சியாக வேண்டும். அனைத்து நாடுகளிலிருந்தும் கப்பம் இந்நாட்டுக்கு வந்தாகவேண்டும். யாதவக்குடி குருக்ஷேத்ரத்தில் அதன் தலைவராலேயே தோற்கடிக்கப்பட்டது என்ற கதை இன்று உள்ளது. இக்கதை இவ்வண்ணமே நீடிக்குமெனில் இன்னும் ஒரு தலைமுறைக்கு மேல் யாதவர்கள் எவராலும் மதிக்கப்படமாட்டார்கள். மதிப்பற்றவர்கள் அழிவார்கள் என்பது அரசியலின் நெறிகளில் ஒன்று. எண்ணுக! நாம் வென்றேயாக வேண்டும். வெல்வதற்கான வழிகளில் முதன்மையானது ஒருங்கிணைந்து பிறருக்கு அச்சமூட்டும் அளவுக்கு எழுந்து நின்றிருப்பது. இத்தருணத்தில் நாம் காட்டவேண்டியது இதையே!”

கிருதவர்மன் சொன்னார் “வாலில் கோல் கொண்ட நாகமென தலை தூக்கி நின்று சீறவேண்டிய தருணம் இது! உலகு அறியட்டும் நாம் பத்தி விரித்துவிட்டோம் என. இது எண்பது தலைகொண்ட அரசப் பெருநாகம்!” அனைவரும் மீண்டும் வெறிகொண்டு கூச்சலிடத் தொடங்கினார்கள். நான் அறியாமல் கணிகரை பார்த்துவிட்டு நோக்கை விலக்கிக்கொண்டேன்.