கல்பொருசிறுநுரை - 35

பகுதி நான்கு : அலைமீள்கை – 18

கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அன்று பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையின் ஒளிகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் ஐயங்களையும் அச்சங்களையுமே சொன்னார்கள். எவரை வெறுக்கிறார்களோ அவரை நோக்கி சென்று அருகே அமர்ந்துகொண்டார்கள். எவரை அஞ்சுகிறார்களோ அவர்கள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அனைத்து வெறுப்புகளையும் நகையாட்டென மாற்றிக்கொண்டார்கள். அனைத்து அச்சங்களையும் இன்சொல்லென மாற்றிக்கொண்டார்கள்.

பிரத்யும்னனை நோக்கி மூத்தவர் ஃபானு “இவர் கையால் ஒருநாள் களத்தில் நான் கழுத்தறுபட்டு விழுவேன் என எண்ணினேன். அப்போது இவர் என் தலையைப் பற்றி தூக்குவார் என்று கற்பனை செய்தேன். அதன்பொருட்டே இந்நீள்குழல் வளர்த்தேன்” என்றார். “நன்று, இருவருக்கும் முடி இருக்கிறது. இரு தலைமுடிகளையும் சேர்த்து கட்டினால் தேங்காய்போல கையிலே தூக்கமுடியும்” என்று கிருதவர்மன் சொன்னார். இருவரும் வெடித்து நகைத்தனர். விழிநீர் துளிக்கும் அளவு நகைப்பு. சாம்பனிடம் சுதேஷ்ணன் “அசுரர் அவைகளில் ஷத்ரியர்களுக்கு வெறுங்கைகளில்தான் உணவு அளிக்கப்படும் என்று ஒரு சூதன் பாடினான். மெய்யாகவே அன்று எங்கள் இளையோர் பலர் வெறுங்கையில் உணவுண்பது எப்படி என்று எண்ணிக்கொண்டனர்” என்றார். தொடையில் அறைந்து சாம்பன் நகைத்தார். நகைத்து நகைத்தே உடல் சோர்ந்து தளர்ந்து விழமுடியும் என்று அன்று கண்டேன்.

இனி ஒன்றுமில்லை. அனைத்தும் முடிந்துவிட்டன என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குரல் எழுந்ததுபோல. ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டிருந்த எதுவோ ஒன்று. அந்தப் பேருரு கொண்ட அச்சத்திலிருந்து தப்பவே சிறிய அச்சங்களையும் ஐயங்களையும் உருவாக்கிக்கொண்டோம் என்றும் அப்போது உணர்ந்தேன். ஒருநாளில் அச்சம் விலகியதுபோல. கொலை விழியுடன் எழுந்த தெய்வம் புன்னகைத்து அருட்கை காட்டியதுபோல. பின்னர் மெல்லமெல்ல ஓய்ந்தோம். பேச்சு குறைந்தது. சிரிப்பும் குறைந்தது. ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒருவரை ஒருவர் உடலால் தொட்டபடி அமர்ந்திருந்தோம். ஒவ்வொரு கையும் வேறு எவர் மேலோ இயல்பாக அமைந்திருந்தது. ஒருவர் மேல் ஒருவரென சாய்ந்திருந்தோம்.

நடுவில் அமர்ந்திருந்த கிருதவர்மன் கண்கள் கலங்கி முகம் உணர்ச்சிகளால் சுருங்கி விரிய அழுபவர் என தோன்றினார். “நன்று. இவ்வண்ணம் நிகழவேண்டும் என்று இருக்கிறது” என்றார். “நன்று, இளைய யாதவர் இங்கு இப்போது வந்தாரென்றால் மிக நன்று” என்றார். ஃபானு “தந்தையை அழைக்கச்செல்வோம். எண்பதின்மரும் இணைந்து செல்வோம்” என்றார். “ஆம், ஒருவர்கூட எஞ்சாது கிளம்பிச்செல்வோம். சாத்யகிக்கு தெரியும் அவர் எங்கிருக்கிறார் என்று. அவரை அழைத்துக்கொண்டு செல்வோம்” என்றார். “அவர் வராவிட்டால் இழுத்து வருவோம். இங்கே மைந்தர் மகிழ்ந்து பொலிவதை அவர் காணவேண்டும். அவருக்கு என்றும் எங்கள் மேல் நம்பிக்கையின்மை இருந்தது. இந்நகரை விட்டு அவர் விலகிச்சென்றதே அதனால்தான்” என்றார் சுஃபானு.

ஃபானு “அந்நம்பிக்கையை நாம் பேணிக்கொள்ளவில்லை” என்றார். அப்போது அவர் குரல் உடைந்தது. விழிநீர் வழியலாயிற்று. “நாம் நம் சிறுமையையே வெளிக்காட்டினோம்… இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். நாம் அவர் நம்மைவிட மிகப் பெரியவர் என்பதனால் அவரை அஞ்சினோம். அவரை விலக்கினாலொழிய நாம் பெரியவர்களாக தெரிய முடியாது என்பதனால் அவரை வெறுக்க எண்ணினோம். ஒருவரை வெல்ல விழைந்தால் அவரை வெறுப்போம். அது மானுட உளப்போக்கு. அவ்வெறுப்பால் அவர்களை வெல்வதற்கு எதையும் செய்யலாமென்னும் நிலையை அடைவோம்.” சுதேஷ்ணன் “ஆம், மெய்… அவருக்கு நாம் பெரும்பிழையை இழைத்தோம். அவர் உருவாக்கிய இந்நகரிலிருந்து அவரை அகற்றினோம்” என்றார்.

“இது அவருடைய நகர். நாம் இதில் வெறும் ஒட்டுண்ணிகள்” என்று ஃபானுமான் சொன்னான். “சொல்லுங்கள். நாம் யார்? நாம் வெறும் யாதவர். இந்தக் கடலோர பாலைநிலத்து நகரில் நம் இடமென்ன? ஏன் இங்கே அமர்ந்திருக்கிறோம்? நம் மூதாதையரா இதை ஈட்டினார்கள்? அல்ல, இது முழுக்கமுழுக்க நம் தந்தை இளைய யாதவரின் கொடை. ஆனால் அவர் நமக்கு அளித்ததை முற்றும் பிடுங்க முனைந்தோம். அது முதலைகளின் இயல்பு. அவை உணவிடும் கைகளை அள்ளிக்கவ்வ முயலும். உணவிடுபவர்களையே உண்ணவும் முனையும்… நாம் வெறும் முதலைகள். எண்ணமோ நெறியோ இல்லாதவர்கள்.” அச்சொற்கள் ஒவ்வொருவரையும் உணர்வழியச் செய்தன. மூத்தவர் ஃபானு விசும்பி அழலானார். அதுவே தொடக்கம். பலரும் விழிநீர்விட்டனர்.

அப்போது அமைச்சர் மெல்ல வந்து “அரசர் கிருதவர்மன் நேரடியாக நீண்ட பயணத்திலிருந்து வந்திருக்கிறார். அவர் உடல் சோர்ந்திருக்கக்கூடும். அவரை உணவுண்ண அனுப்ப வேண்டும், அவர் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்றார். “ஆம் தந்தையே, தாங்கள் ஓய்வெடுங்கள்” என்றபடி ஃபானு எழுந்தார். “தந்தையே, நானும் அதை மறந்துவிட்டேன். தாங்கள் ஓய்வெடுக்கவேண்டும்” என்றார் பிரத்யும்னன். “இல்லை, இதற்கு மேல் ஓர் இளைப்பாறலோ அன்னம்கொள்ளலோ உண்டா என்ன?” என்றார் கிருதவர்மன். முகம் மலர்ந்து கைவிரித்து “இந்நாளில் நான் பெருந்தந்தையென ஆனேன். ஆண் நிறைவுகொள்வது பெருந்தந்தை என்னும் நிலையிலேயே” என்றார்.

ஃபானு “மீண்டும் சந்திப்போம். மாலை தங்களுக்கென ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறோம்” என்றார். “களியாட்டும் இசையும் இருக்கட்டும் அதில்” என்று பிரத்யும்னன் சொன்னார். “ஆம், இங்கேயே பேரவைகூடத்திலேயே ஏற்பாடு செய்வோம்” என்றார் ஃபானு. “நெடுங்காலமாக அது பூட்டியே கிடக்கிறது. உண்மையில் எந்தை இங்கிருந்து சென்றபின்னர் களியாட்டு அறைகள் எல்லாமே ஓய்ந்துவிட்டன. பெரும்பாலானவை அன்று பூட்டப்பட்டவை. அதன் பிறகு தூய்மை செய்யப்படவில்லை.” ஃபானுமான் “ஆம், களியாட்டறைகள் ஓய்ந்தமையால்தான் நகர் இருண்டது. துவாரகை களியாட்டின் நகரம். களியாட்டுக்குரிய தேவதைகளை சிறைவைத்துவிட்டோம்!” என்றான்.

சுஃபானு கைதூக்கி “அத்தனை களியாட்டறைகளும் ஒருங்கட்டும். அத்தனை விருந்தறைகளும் ஒருங்கட்டும். நகர்மக்கள் அனைவருக்கும் நாளை பெருவிழவொன்றை அறிவிப்போம். யானை மீதேறி கிருதவர்மன் நகர் மீது செல்லட்டும். எந்தையே அவர் வடிவில் எழுந்திருக்கிறார் என்பதை நகர் மக்கள் அறியட்டும். இங்கு இனி அவர் சொல்லுக்கு மறுசொல்லென ஒன்றில்லை என்று குடிகள் தெளியட்டும்” என்றார். ஃபானு “ஆம்! அது குடியின் மூத்த மைந்தன் என என் சொல்” என்றார். பிரத்யும்னன் “அறியட்டும் உலகு! அது என் குடியின் சொல்” என்றார். “ஆம், அவ்வாறே” என்றார் சாம்பன். மைந்தர் அனைவரும் கைதூக்கி “ஆணை! ஆணை! ஆணை!” என்று கூவினர். கிருதவர்மன் கைதூக்கி “வெல்க யாதவப்பெருங்குலம்! வெல்க துவாரகை!” என்றார்.

நான் கிருதவர்மனிடம் “மாலை விருந்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை தாங்கள் நீராடி ஓய்வெடுக்கலாம்” என்றேன். கிருதவர்மன் “ஆம், ஓய்வைப்பற்றிப் பேசியதுமே களைப்பு எழுகிறது. என் உடல் இத்தனை வெம்மையை தாங்காது” என்றார். எழுந்து ஃபானுவின் தோளில் தட்டி “மைந்தா, வருகிறேன்” என்றார். பிரத்யும்னனின் வயிற்றில் கையால் விளையாட்டாகக் குத்தி “நெடுநாட்களாக படைக்கலம் பயிலவில்லை நீ. அரியணை அமர்ந்து சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறாய். தசை திரண்டிருக்கிறது வயிற்றில்” என்றபின் சாம்பனின் தலைமேல் கைவைத்து சற்றே உலுக்கிவிட்டு என்னுடன் வந்தார்.

இடைநாழியினூடாகச் செல்கையில் என்னிடம் “நன்றி, மைந்தா. நான் இதை எதிர்பார்க்கவில்லை. இங்கு இவ்வண்ணம் நிகழும் என்று எண்ணியிருக்கவும் இல்லை. அதைவிட என்னுள் இருந்து இவ்வண்ணம் ஒருவன் எழுவான் என்றும் கருதவில்லை” என்றார். “வரும் வழியெல்லாம் அச்சமும் ஐயமுமாக அலைக்கழிக்கப்பட்டேன். இங்கு சிறுமைகொண்டு விழிநீர்விட்டே நின்றிருப்பேன் என்றும், ஒருவேளை மேலும் சிறுமையென இங்கு களம்படுவேன் என்றும் எண்ணிக்கொண்டேன். மைந்தரால் கொல்லப்படுபவன் விண்ணுலகை எய்துவதில்லை. ஏனெனில் தனக்கும் தனது ஏழு மூதாதையருக்குமான அன்னத்தையே அவன் நிறுத்திவிடுகிறான்” என்றார்.

“அவ்வாறு நிகழும் என்று தாங்கள் எதிர்பார்த்திருக்கக்கூடாது” என்றேன். “அது எங்கள் குடிமேல் சொல்லும் பழி. ஒருபோதும் அவ்வண்ணம் நிகழ்ந்திருக்காது.” கிருதவர்மன் “நிகழும்” என்றார். “யாதவக் குடியில் அவ்வாறெல்லாம் நிகழும் என்ற குறிப்பு நெடுங்காலமாகவே உள்ளது. ஒவ்வொரு முறை யாதவர்களுக்குள் பூசல் எழுகையிலும் மூத்தவர்கள் பதறுவது ஒரு குலப்பேரழிவு இங்கு நிகழும் என்ற தொன்மையான ஐயத்தால்தான்” என்று அவர் சொன்னார். “யாதவக் குடி தன்னுள் போரிட்டு முற்றழியும் என்றும் பின்னர் பிற குருதிக்கலப்புடன் பிறந்தெழும் என்றும் நிமித்தச்சொல் எழுந்து பதினெட்டு தலைமுறை ஆகிறது. பதினெட்டு தலைமுறைக்குப் பின் அவ்வண்ணம் நிகழும் என்பதே சொல் என்கிறார்கள் பூசகர்கள்.”

“ஆனால் இன்று நிகழ்ந்தவற்றை பார்க்கையில் ஒருபோதும் அதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது” என கிருதவர்மன் தொடர்ந்தார். “அகத்தில் நாம் அனைவரும் மிக எளியவர்கள். ஒருவரோடொருவர் மெய்யான அன்பு கொண்டிருக்கிறோம். தந்தையர் மேல் மாறாத மதிப்பும் கொண்டிருக்கிறோம்.” அவர் முகம் கனிந்தது. வெந்து கரைந்த முகத்தில்கூட கனிவு பேரழகுடனேயே வெளிப்படுகிறது என்று கண்டேன். நான் புன்னகைத்து “நாம் தீயவர்களல்ல என்று நாமே உணர்வதைப்போல் மகிழ்வும் நிறைவும் அளிப்பது பிறிதொன்றில்லை. நாம் நம்மை நாமே தழுவிக்கொள்கிறோம். நம்மை நாமே கொஞ்சி குலாவிக்கொள்கிறோம்” என்றேன்.

“உண்மைதான்” என்று அவர் கூறினார். “இன்று நான் நிறைவுற்றிருக்கிறேன். தெய்வங்கள் என்மேல் கருணைகொண்டவை என்றால் இன்றே துயிலில் இப்புன்னகை என் முகத்தில் திகழ்ந்திருக்க என்னை உயிர்நீக்கச் செய்யும். எனில் அங்கு ஒளிமிக்க விண்ணுலகு எனக்காக ஒருங்கியிருப்பதை சென்று காண்பேன்” என்றார்.  நான் “விழைந்த சாவை யோகியருக்கு அன்றி பிறருக்கு தெய்வங்கள் அளிப்பதில்லை என்பார்கள். விழைந்த மரணம் என்பது ஊழல்ல, பரிசும் அல்ல, அது நாம் ஈட்டும் செல்வம்” என்றேன். “ஆம்” என்று அவர் சொல்லி புன்னகைத்து “ஒருவேளை விரும்பிய வாழ்வை விலையெனக் கொடுத்து இதை ஈட்டியிருக்கிறேனோ என்னவோ?” என்றார்.

நான் “அவ்வண்ணமல்ல. தாங்கள் வாழ்ந்த வாழ்வும் பொருள் உள்ளதே” என்றேன். கிருதவர்மன் “வஞ்சத்தை மட்டுமே ஈட்டிக்கொண்டிருந்தேன். வஞ்சத்தை பீடமெனக் கொண்டு அமர்ந்து வஞ்சத்தை மணிமுடியென சூடி அமர்ந்திருப்பவன் என்று என்னைப்பற்றி ஒரு சூதன் பாடியபோது நான் அகம் மகிழ்ந்ததை நினைவுகூர்கிறேன். வஞ்சமகன் என்று சொல்லை எனக்கென சிறப்பு மொழியாகவே எண்ணியிருந்தேன்” என்றார். “ஆனால் அதை எண்ணி இப்போது உளம் கூசுகிறேன். இவ்வாழ்வு வஞ்சத்தில் வீணடிக்கப்படுவதற்குரியதல்ல. எண்ணி இன்புறுவதற்குள்ள எல்லாம் இங்குள்ளன. மகிழ்விக்கக்கூடியவை. விழிநீர் சிந்தி நின்று வழிபடுவதற்குரியவை. உளம் விரிந்து தழுவுதற்குரியவை.”

நான் அவரிடம் “ஆனால் நீங்கள் இப்புவியில் எதையும் விழைந்து வஞ்சம் கொள்ளவில்லை. தந்தையே, நீங்கள் உங்கள் பொருட்டு கூட வஞ்சம் கொள்ளவில்லை. உங்கள் வஞ்சம் உங்கள் தோழனின் பொருட்டு, அவர் இறப்பின் பொருட்டு. இப்புவியில் எதற்காகவும் உங்கள் தோழரை விட்டுக்கொடுக்கவில்லை. இப்புவியில் அனைத்தையும் ஒரு தோழனின், அதுவும் இறந்த தோழனின் நட்பின் பொருட்டு ஈடுவைத்தீர்கள். சததன்வாவின் வஞ்சத்தை இத்தனை ஆண்டுகள் இங்கு நிலைநிறுத்தினீர்கள். அது அத்தனை சிறிய விழுமியம் ஒன்றும் அல்ல. மானுடர் எண்ணி பயில வேண்டியது, ஊழ்கத்திலமர்ந்து உணரவேண்டியது” என்றேன்.

“இச்சொற்களை நீ என்னிடம் கூறியதே நிறைவளிக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. அவ்வாறுதான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் கிருதவர்மன். “ஆனால் இன்று தோன்றுகிறது, இங்கே இதுவரை பெருவஞ்சமும் காழ்ப்பும் கொண்டவர் எவராவது சிறுமையின் பொருட்டு, எளிமையின் பொருட்டு அந்த விழைவை கொண்டிருக்கிறார்களா என்று.” அவர் கண்கள் கனவிலெனத் தெரிந்தன. “பெருவஞ்சம் ஒரு களியாட்டு. அக்களியாட்டை அடைய விரும்புபவர் அதற்கென எல்லா முறையான சொற்களையும் தானே உருவாக்கிக்கொண்டிருப்பார். தன் பொருட்டல்ல, தன் குடியின் பொருட்டு என்பார். தன் தோழமையின் பொருட்டு என்பார். தன் தெய்வங்களின் பொருட்டு, பேரறத்தின் பொருட்டு என்பார். உயரிய விழுமியங்களை உரைப்பார்.”

“மாபெரும் நெறியொன்றின் பொருட்டே தான் அவ்விருளை சூடிக்கொண்டிருப்பதாக தன்னை தானே நம்ப வைத்துக்கொள்வார். தன்னை தானே நம்ப வைத்துக்கொள்பவர் பிறரையும் அவ்வாறே நம்பவைப்பதில் வெற்றி பெறுவார்” என்றார் கிருதவர்மன். ”ஆனால் உண்மையில் அவருடைய விழைவென்பது வஞ்சத்தின் பொருட்டே. அவருடைய நெறிகள் அனைத்தும் வஞ்சம் கொள்வதற்காகவே. வஞ்சம் ஒரு நோய். ஒருவன் நோயுறும்போது நோய் தோன்றுவதற்கு நெடுநாட்களுக்கு முன்னாலேயே அவன் நோயுறுவதற்கான அனைத்து உளநிலைகளையும் தெய்வங்கள் அவனிடம் உருவாக்கிவிடுகின்றன. அத்தனை சொற்களையும் கொண்டுவந்து சமைத்து அகத்தே பரிமாறிவிடுகின்றன. வஞ்சமும் அவ்வாறே.”

நான் அவரிடம் பேச விரும்பவில்லை. அவர் “நன்று. எவ்வாறாயினும் நோய் மட்டுப்பட்டுள்ளது. என் இருளிலிருந்து என்னால் வெளியே வரமுடியுமென்று இப்போது உணர்கிறேன். இருளில் இருக்கிறேன் என்று உணர்வதே ஒரு விடுதலை. அதிலிருந்து வெளிவரக்கூடுமென்ற நம்பிக்கையை பெறுவது பிறிதொரு விடுதலை. ஓர் அடியேனும் வெளியே வைத்துவிடுவது என்பது அதைவிடவும் பெரிய விடுதலை” என்றார்.

கிருதவர்மனின் அறையை அடைந்ததும் நான் தலைவணங்கி “தந்தையே, இது தங்களுக்குரிய அரண்மனை. எந்தை இங்கிருந்தபோது கோடைகாலத்தில் அவர் தங்குமிடம் இது. இது தெற்கிலிருந்து வரும் விசைகொண்ட காற்றால் உலைக்கப்படும் மாளிகை. ஆகவே தென்றல்மாளிகை என்று இதற்கு பெயர். இதன் அனைத்துச் சாளரங்களினூடாகவும் தெற்குக்காற்று உள்ளே பெருகி வரும். கடற்காற்று தங்களுக்கு உகந்ததென்றால் இங்கு தாங்கள் மகிழ்ந்திருக்கலாம்” என்றேன்.

“ஆம், காற்று எனக்கு எப்போதும் தேவைப்படுகிறது” என்றபின் உரக்க நகைத்து “நெடுங்காலமாக நான் காற்றில்லாத அறைகளையே விரும்பியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?” என்றார். நான் “மெய்யாகவா?” என்றேன். “ஆம். என்னால் பெரிய அகன்ற அறைகளில் அந்தியுறங்க முடிந்ததில்லை. மிகச் சிறிய அறைகள், காற்றோட்டமில்லாத அறைகள், எப்போதும் அரையிருள் நிறைந்த அறைகள் எனக்கு உகந்தவையாக இருந்தன. அவ்வறைக்குள் என் உடலின் வெம்மையும் என் உடலின் மணமும் நிறைந்திருக்கவேண்டும்” என்றார்.

நான் நகைத்து “புலிக்குகைகள்போல” என்றேன். “ஆம், மிகச் சரியாக புலிக்குகைகள்போல. புலியால் குகையில்தான் தங்க முடியும். வெட்டவெளி அதை அலைவுறச் செய்கிறது. அங்கு அதனால் துயில்கொள்ள இயலாது. மிகச் சிறிய அறைகளுக்குள் ஏன் துயில்கொண்டேன் என்று இப்போது எண்ணிப்பார்க்கிறேன். அங்கு நான் மேலும் தனித்திருக்கிறேன் என்பதனாலாக இருக்கலாம். கற்பனையில்கூட அங்கு இன்னொருவர் இருப்பதை விரும்பாததனாலாக இருக்கலாம். எப்போதும் என்னுடன் இன்னொருவரை துயில்கொள்ள விட்டதில்லை. அஸ்வத்தாமனும் நானும் உளத்தால் நெருங்கி இருந்த காலத்தில்கூட நான் தனியாக சிற்றறைகளுக்குள் அல்லது குகைப்பொந்துகளுக்குள் நுழைந்து தனித்தே துயில்கொண்டிருக்கிறேன்.”

“குருக்ஷேத்ரப் போர் முடிந்ததும் மேலும் தனிமைப்பட்டேன். தவக்குடில் என்று நான் சென்று அமைந்தது கால் நீட்டினால் தலை இடிக்கும் சிறிய குடிலில்” என்றார் கிருதவர்மன். “நெடுங்காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக இத்தனை பெரிய அறையில் துயில்கொள்ளவிருக்கிறேன். நன்று, ஏவலனை அழைத்து இச்சாளரங்கள் அனைத்தையும் திறக்கச் சொல்.” நான் “அனைத்தையும் திறந்தால் உள்ளே அனைத்துத் துணிகளும் சிறகுகளாகி படபடக்கும். காற்றில் அவை சுழன்று சுழன்று அடிக்கும்” என்றேன். “எனக்கு காற்று சுழன்று அடிக்கவேண்டும். கடல்மேல் படுத்திருக்கிறேன் என்று நான் உணரவேண்டும். உண்மையில் இந்த அறையை காற்று பறக்கடிக்கவேண்டும். நான் வெட்டவெளியையே விரும்புகிறேன்” என்றார் கிருதவர்மன்.

நான் ஏவலர்களை அழைத்து சாளரங்களின் கதவுகளை திறக்கச் சொன்னேன். அவற்றின் கதவுகள் நெடுங்காலமாக திறக்காததனால் இறுகியிருந்தன. பித்தளைக் கீல்கள் என்பதனால் அவை அத்தனை நாட்களுக்குப் பிறகும் ஓசையின்றி திறந்தன. அவர்கள் அனைத்தையும் துடைத்தனர். பட்டு விரிக்கப்பட்ட மஞ்சத்தில் அவர் அமர்ந்தார். நான் எதிரே நின்று தலைவணங்கி “அனைத்தும் இங்கு ஒருக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்றேன். அவர் என்னிடம் “சாத்யகி எங்கிருக்கிறார்?” என்றார். என் உள்ளம் திடுக்கிட்டது. “அவர் இங்குதான் இருக்கிறார். அவரது குடிகள் இங்கு சிறிய தங்குமிடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அங்கிருக்கிறார். தங்களை இன்று மாலை அவர் சந்திக்க வருவார். விருந்திற்கு அவரை அழைக்க ஏவலர் சென்றிருக்கிறார்கள்” என்றேன்.

“நன்று. அவரை நான் சந்திக்கவேண்டும்” என்றார். நான் தலைவணங்கி வெளியே வந்தேன்.

இடைநாழியில் நடந்தபோது என் கால் தளர்ந்திருந்தது. உள்ளம் எடைகொண்டு ஒரு பொருள் என உள்ளே அமர்ந்திருந்தது. பின்னர் நீண்ட இடைநாழியில் நின்றேன். என் உள்ளம் அடைந்த சோர்வென்ன என்று எனக்கு புரியவில்லை. தவறான எதையோ கண்டுவிட்டிருக்கிறேன். தவறானது அல்ல, பிழையானது, ஒவ்வாதது. எதை? எதை? அல்லது அச்சுறுத்தும் எதையோ. எதை? எதை?

நான் அப்போது என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ள விரும்பினேன். என் அறையும் சற்று பெரியதுதான். துவாரகையில் அனைத்து அறைகளும் சற்று பெரியவைதான். எனக்கு அப்போது மிகச் சிறிய அறை ஒன்று தேவையாக இருந்தது. நான் மட்டுமே இருக்கும் அறை. இருண்ட சிறிய பொந்து போன்ற அறை. அப்போது தோன்றியது அது கணிகரின் அறை என்று. அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அத்தகைய அறை ஒன்றிலேயே அவர் தங்கியிருக்கக் கூடும். அதற்குள் சென்று அவருடன் அமர்ந்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

ஏன் அவ்வாறு தோன்றியது என்று எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். நமது உள்ளம் நமக்கு சற்று முன்னால் பறந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான தருணங்களில் நமது உள்ளமே நம்மை அறியாமல் முடிவுகள் எடுத்த பிறகு அதற்கான அனைத்து சொற்கூட்டல்களினூடாக அம்முடிவையே சென்றடைகிறோம். தந்தையே, வானில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டங்கள் உள்ளன. அவையே பறவைகளை புவி முழுக்க கொண்டுசெல்கின்றன. ஆனால் பறவைகள் தாங்கள் சிறகடித்து நீந்திச் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றன என்பார்கள்.

நான் ஏவலனிடம் என்னை அழைத்துச் செல்லும்படி ஆணையிட்டேன். அரண்மனைக்குப் பின்னால் யாதவர் குடிகளுக்கு அருகே ஒரு சிறு மாளிகையில் கணிகர் தங்கியிருக்கிறார் என எண்ணியிருந்தேன். ஆனால் மாளிகை நெருங்கியதும் ஏவலன் பக்கவாட்டில் திரும்பிச்செல்வதை கண்டேன். “எங்கு செல்கிறாய்?” என்று கேட்டேன். “கணிகரின் ஆணை. அவர் தனக்கு மாளிகையில் தங்கி பழக்கமில்லை என்று உரைத்தார். தனக்கென ஒரு சிறு குடிலை அமைக்கவேண்டுமென கோரினார். அவ்வாறே மாளிகைக்கு பின்பக்கம் சிறு தோட்டத்தில் அவருக்கான குடில் அமைக்கப்பட்டுள்ளது” என்றான்.

அக்குடில் தொலைவில் பார்த்தபோது ஒரு சிறு குருவிக்கூடென்றே தோன்றியது. கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு பறவைகள் உருவாக்கும் சிறு தங்குமிடம். அங்கு சென்று வெளியே நின்றபோது அதற்குள் இன்னொருவர் செல்லக்கூடும் என்று தோன்றவில்லை. மரக்கிளைகளில் செய்யப்பட்ட கூடல்ல அது. சுற்றியிருக்கும் இலைகளையும் சருகுகளையும் இழுத்தெடுத்து அமைக்கப்பட்ட ஒரு பதுங்குமிடம். புதர்ப்பறவைகளின் கூடுபோல. “உத்தமரே!” என்று நான் அழைத்தேன். கணிகர் உள்ளிருந்து அமர்ந்தவாறே எட்டிப்பார்த்தார். தரையிலிட்ட தர்ப்பைப் புல்லில் அமர்ந்து சுவடி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தவர் “வருக!” என்றார்.

நான் உள்ளே நுழைந்தேன். “அமர்க!” என்றார். நானும் அவரும் அமர்ந்துகொண்டபோது அக்குடிலின் சிறுவெளி நிறைந்தது. உண்மையில் என் உடலின் ஒரு சிறுபகுதி வெளியே கூட இருந்தது. “கூறுக!” என்றார். “கிருதவர்மன் வந்திருக்கிறார். இன்று மாலை ஒரு விருந்து ஒருக்கப்பட்டுள்ளது. அதற்கு தங்களையும் அழைக்கும்பொருட்டே வந்தேன்” என்றேன். அதை கூறிய பின்னரே அங்கு வந்ததற்கு மிகப் பொருத்தமான ஏது அது என்று எனக்கு தெரிந்தது. என்னை அறியாமலேயே மிகச் சரியான சொல்சூழ்கைகளை நான் எடுக்கத் தொடங்கியிருந்தேன். முன்பென்றால் அப்படி ஒரு சொல்லை எடுத்து முறைப்படி உரைக்கும்பொருட்டு நான் மிகவும் போராடியிருப்பேன்.

அவர் என்னிடம் “நன்று” என்றார். அவரது புன்னகை இனிதாக இருப்பதை நான் பார்த்தேன். அவரை நெடுங்காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அழகென்றும் நலமென்றும் எதுவுமே தெரியாத முகம் கொண்டவர். ஆனால் மிக அரிதாக புன்னகைக்கும்போது மட்டும் அவர் பேரழகுடன் இருந்தார். அத்தனை அழகுகொண்ட புன்னகையை அதற்கு முன் தங்கள் முகத்தில் மட்டும் பார்த்திருக்கிறேன். “தாங்கள் அவ்விருந்தில் பங்குகொள்ள வேண்டும், அந்தணரே. எங்கள் எண்பதின்மருக்கும் நடந்த பூசல்களையும் அதன் விளைவாக நடந்த காழ்ப்புகளையும் தாங்கள் அறிவீர்கள். கிருதவர்மன் வந்து அனைத்தையும் இனிதாக மாற்றிவிட்டார். ஒரே கணத்தில், ஒரே சொல்லில். சொல்கூட இல்லை, ஒரு நோக்கில்” என்றேன்.

“ஆம், அது நன்று. தெய்வங்கள் துவாரகையிடம் கனிவுடன் இருக்கின்றன” என்று அவர் சொன்னார். “இன்று தெய்வங்கள் நிறைக! மூதாதையர் பொலிவுறுக! இது ஒரு இனிய நாள். நான் இனிப்பென எதையாவது அருந்தியாகவேண்டும்” என்றார். ஏவலனை அழைத்து “இனிப்பு ஏதேனும் கொண்டு வா” என்றார். பின்னர் என்னிடம் “சாத்யகி எங்கிருக்கிறார்?” என்றார். அக்கணம் நான் மீண்டும் அந்த உளஅதிர்வை உணர்ந்தேன். உடனே எனக்கு ஒன்று தெரிந்தது. அந்த முதல் உடல் அதிர்வு ஏன் ஏற்பட்டது என்று. சாத்யகியைக் குறித்து கேட்டபோது கிருதவர்மனின் கண்களில் எழுந்தது ஒரு சிறு நஞ்சு. துளியிலும் துளி. ஊசிநுனியால் தொட்டு எடுப்பதற்குரியது. சிறிய நஞ்சு மேலும் வீரியம் கொள்ளும். ஏனென்றால் தன் தொடுகைக்குரிய நரம்புமுடிச்சை தேடி கண்டடையும் கூர் கொண்டது அது. கணிகர் அதை அறிந்திருக்கிறார் என்று உணர்ந்தேன்.