கல்பொருசிறுநுரை - 33

பகுதி நான்கு : அலைமீள்கை – 16

நீண்டநேரம் கிருதவர்மன் அமைதியாக இருந்தார். பின்பு “நான் அவரை சந்திக்கும் களங்கள் முடியப்போவதே இல்லை என்றே எப்போதும் உணர்கிறேன். என் இருப்பு என்பதே அக்களங்களில் எதிர்நிலையாக உருவாவதுதான். அந்தக் களங்கள் இல்லையேல் நான் இல்லை” என்றார். “மூதாதையே, உங்கள் களங்கள் பிறவிபிறவியென நீள்வனவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் இனி அவரை இங்குள்ள களத்தில் சந்திக்கப்போவதில்லை” என்று நான் சொன்னேன்.

“அவர் முற்றாக விலகிவிட்டார். சாத்யகி சென்று அவரை சந்தித்து மீண்டதை விரிவாக சொல்கிறேன். அவர் எந்தையின் காலடியில் விழுந்து மன்றாடினார். அன்னையர் எண்மரின் கண்ணீருடன் சென்றிருந்தார். அவரை எந்தை திருப்பி அனுப்பினார். ஆனால் சாத்யகி செல்லும்போதே நான் அறிந்திருந்தேன், அவர் வரப்போவதில்லை என்று. சாத்யகி திரும்பிவந்தபோது மைந்தர் எண்பதின்மரில் எவரும் மெய்யான ஏமாற்றம் அடையவில்லை. அப்போது அறிந்தேன், எவருக்குமே அந்த எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்று. மைந்தர் அவரை அறிந்திருக்கிறோம்” என்றேன். “இக்களம்போல் அவர் எழுந்தாகவேண்டிய பிறிதொன்று இல்லை. இங்கே அவர் விலகி நிற்கிறார் என்றால் இனி எங்குமில்லை என்றே பொருள்.”

“நீங்கள் அவரை களத்தில் சந்தித்ததாக எண்ணிக்கொள்வதுகூட மாயையே” என்று நான் தொடர்ந்தேன். “இங்கு வாழும் எவரும் அவரை களத்தில் சந்தித்ததில்லை. ஏனெனில் எந்தக் களத்திலும் அவர் நின்றதில்லை. இங்கு இத்தனை காலம் அவர் திகழ்ந்திருந்தாரென எண்ணிக்கொள்வதைப்போல் மாயை பிறிதில்லை. அவர் இங்கில்லை, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தருணத்திற்கும் உரிய தன் உருவொன்றை அவர் படைத்தார். அதனுடன் உங்களை விளையாடவிட்டார். எட்டு அன்னையர் அவருடைய உருவொன்றுடன் முயங்கி எங்களை பெற்றனர். நாங்கள் எண்பதின்மரும் எங்களுக்குரிய உருவொன்றை படைத்து அதனுடன் உறவாடினோம். விரும்பியும் வெறுத்தும் முயங்கியும் விலக்கியும்.”

“நீங்கள் அவர் எதிரிகள், உங்களுக்குரிய உருவை நீங்கள் படைத்துக்கொண்டீர்கள். அவற்றுடன் போராடும்போது நீங்கள் ஒருபோதும் வெல்ல இயலாது. ஏனெனில் அது உங்களுக்குள்ளிருந்து நீங்கள் படைத்துக்கொண்டது. அவற்றுடன் போராடுகையில் நீங்கள் உங்களுடன் போராடுகிறீர்கள். தன்னை தான் வெல்லுதல் எளிதா? யோகிகளுக்கும் அரிய செயல் அல்லவா அது? எவருடன் நீங்கள் போரிட்டீர்கள் கூறுக?” என்றேன். சொல்லிச்சொல்லி நான் உருவாக்கிய சித்திரத்தை முழுமை செய்துவிட்டிருந்தேன். அதை தொட்டுத்தொட்டு பெரிதாக்க என் அகம் துள்ளியது.

கிருதவர்மன் வெறுமனே முனகினார். “இளமையில் இளைய யாதவரென்று உங்களுக்கு வந்து சேர்ந்த ஒரு வடிவின் மேல் பெருங்காதல் கொண்டிருந்தீர்கள். கோகுலத்தில் ஆடியவன், பெண்டிருக்கு இனியவன். பேராற்றல் கொண்டு எழுந்து கம்சனை வென்றவன். மதுராபுரியின் புகழ்மிக்க அரசன். யாதவ குலத்தலைவன். இந்த யுகத்தின் வெற்றிக்கொடி. நீங்கள் அவன் மேல் மோகம் கொண்டீர்கள். அவனை வழிபட்டீர்கள். ஒவ்வொரு நாளுமென நீங்களும் உளத்தில் அவனை பெருக்கினீர்கள். பேருரு அடையச்செய்தீர்கள். அதன் காலடியில் அமர்ந்திருந்தீர்கள். யாதவரே, அவ்வுருவுடன் நீங்கள் துவாரகைக்கு வந்தீர்கள். அங்கிருந்த அரசரைக் கண்டு மேலும் விம்மிதம் கொண்டீர்கள்.”

“மேலும் மேலும் அவரை வளர்த்தீர்கள். பாரதவர்ஷத்தைவிட பெரிய ஒருவராக ஆக்கினீர்கள். நீங்கள் அறியாமலேயே உங்களை அதற்கிணையாக பெருக்கிக்கொண்டிருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களா? ஒன்றை பெருக்கி கனவு காண்பவன் தன் சிறுமை உணர்வால் அதை செய்யவில்லை. தன் பெருமையுணர்வால் அதை செய்கிறான். ஒவ்வொரு கணமும் அதற்கிணையாக தன்னையும் பெருக்கிக்கொள்கிறான். தெய்வத்திற்கு இணையானது பக்தனெனும் ஆளுமை. தெய்வத்தை அள்ளுவது பக்தனெனும் ஆணவம். நீங்கள் உங்களுக்குள் பெருக்கி வைத்திருந்த அவர் உருவுக்கு நிகராக அதன் ஆடிப்பாவையென நீங்கள் உருவாக்கி நிறுத்தியிருந்தது உங்கள் பேருரு.”

“எங்கோ ஒரு கணத்தில் நீங்கள் உணர்ந்தீர்கள், அப்பேருருவை அவர் அடையாளம் காட்டவில்லை என. அவர் அதை பொருட்டெனக் கருதவில்லை. அத்தருணத்தில் அனைத்தும் நஞ்சாகியது. நீங்கள் கசந்தெழுந்தீர்கள். காழ்ப்பும் பகைமையும் கொண்டவரானீர்கள். எரிந்து எரிந்து எரிந்து இதுநாள் வரை வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு களம் கிடைத்திருக்கலாம், அவருடன் எதிர் நின்று சமராடுவதற்கு. ஓர் அம்பையேனும் அவர் உங்கள் மேல் எய்திருக்கலாம், அது நிகழவில்லை. குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நீங்கள் எதிர்நின்று போரிட்டது அவருடன்தான். படைத்திரள் என விற்பெருவீரர் என அரசர் என பிதாமகர் என பெருகி உங்கள் முன் வந்த அனைவரும் அவர்தான். ஆனால் அவர் அப்பால் எதையும் ஆற்றாமல் அமைந்திருந்தார்.”

“அங்கே வென்றீர்கள், தோற்கடிக்கப்பட்டீர்கள், எரிந்தழிந்து உடலுருகி இங்கு வந்து அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் படைக்கலன்கள் அனைத்தும் தொடப்படாது துருப்பிடிக்கின்றன. உங்கள் உளஆற்றல் இலக்கின்றி அலைமோதுகிறது. எண்ணுக, நீங்கள் அவரை வெல்லாது இறக்க இயலாது! உடல் அழியலாம், உடலாகி வந்தது, உடலை இயக்கியது, உடல் கடந்து தருக்கியது, உடலில் அனலென இயல்வது ஒருபோதும் இறக்க இயலாது. அழிவின்மை கொண்டு இங்கு நின்றிருக்கும் உங்கள் பெருவஞ்சம். ஏனெனில் இது இங்கு ஊதி எழுப்பப்பட்ட ஓர் அனல். தன் பணி முடித்து தானே தன்னை அது அணைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மேலும் மேலும் பெருகுவதே அதன் இயல்பு.”

“அனலுக்கு ஓர் பிறவிப்பண்பு உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். பெருகிக்கொண்டிருக்கும் வரைதான் அதனால் திகழவே முடியும். வஞ்சமும் பகைமையும் அவ்வாறுதான். நீங்கள் உங்கள் வஞ்சத்தையும் பகைமையையும் பெருக்கி நிலைநிறுத்தும்போது மட்டுமே இங்கிருக்கிறீர்கள். அவை அழிகையில் நீங்களும் அழிவீர்கள். எனில் உங்களை ஒருபோதும் எதிர்கொள்ளாத ஒருவரை எவ்வண்ணம் வெல்வீர்கள்? அவரிடம் எவ்வண்ணம் போரிடுவீர்கள்? வெல்லலாம் தோற்கலாம், போரிடவே இயலாதென்றால் உங்களுக்கு எஞ்சுவதென்ன?”

“இங்கு நீங்கள் அமர்ந்திருக்கையில் அடைந்திருக்கும் பெருவெறுமை எதுவென்று உணர்கிறீர்களா என்ன? நீங்கள் கொண்டிருப்பது ஒரு பொருளின்மை. உங்கள் வஞ்சத்தை என்ன செய்வதென்றறியாது அமர்ந்திருக்கிறீர்கள். பேருருக்கொண்ட வளர்ப்பு விலங்கொன்றை கொஞ்சுவதுபோல அருகே வைத்துக்கொண்டு இங்கே ஒடுங்கியிருக்கிறீர்கள். மூதாதையே, ஒரு வழியே உள்ளது. எழுக! அவருடன் போர்புரிக! போர் ஒன்றே உங்களை நிலைநிறுத்துவது. போர் ஒன்றே உங்களுக்கு புகழ் அளிப்பது. போர் ஒன்றே உங்களுக்கு வீடுபேறளிப்பது.”

மானுடர் எவ்வண்ணம் பழைய உடைகள் களைந்து புத்தாடை அணிகிறார்களோ அவ்வண்ணமே உடல்கொண்டு வந்து உள்ளிருப்பது நலிந்த உடல்களை உதறி புதியவற்றை கொள்கிறது. வஞ்சம் ஆற்றல் அளிப்பது, வஞ்சம் நிலைபேறளிப்பது, வஞ்சம்கொண்டோர் வெல்கிறார்கள். ஆனால் அவ்வஞ்சம் செயலாக ஆகும்போது உணர்வுநிலைகளை கடந்தாகவேண்டும். இருத்தல் இல்லை என்னும் இருநிலை கடந்து ஒன்றாகவேண்டும். உள்ளத்தால் அல்ல தன்னுணர்வால் போர்புரிக! உள்ளத்தை அடக்காதவருக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. அவருக்கு தன்னிறைவும் இல்லை. தன்னிறைவற்றவருக்கு அமைதி இல்லை. அமைதியற்றவருக்கு வெற்றியின் இன்பங்களும் இல்லை.

போரின்றி வெற்றிச் சிறப்பில்லை என்பதை அறிக! செயல்களை செய்யாதொழிவதனால் எவரும் செயலற்ற நிலையை அடைவதில்லை. செயலை நாம் ஒழியலாகாது, செயல் நம்மை ஒழியவேண்டும். நிறைவடைந்த செயலே செய்பவனை விடுவிக்கிறது. செயலால் கைவிடப்படாதவர் துறவை அடைவதில்லை. புலன்களை வலிந்து அடக்கிக்கொண்டு ஆழத்தில் அப்புலன்களை ஆளும் அனலை ஓம்பியபடி இருக்கையில் எப்படி விடுதலை நிகழ முடியும்? அது தன்னைத்தானே ஏய்த்தலன்றி வேறென்ன? புலன்களை ஆள்பவர், தனக்குரிய செயலை தன்னை அளித்துச் செய்பவரே செயல்நிறைவடைந்து வீடுபேறடைகிறார். இங்கு உங்களுக்கென அமைந்த தன்னறத்தை செய்க! செயலின்மையைவிட மேலானது செயல். செயலின்றி இருந்தால் நீங்கள் இவ்வுடலையே சுமையென உணரலாகும், ஆகவே எழுக, போர்புரிக!

எண்ணுக மூதாதையே, இங்கிருந்து அனைத்தையும் தனக்குள் திருப்பி எடுத்தபடி அவர் எங்கோ சென்று ஒடுங்கிவிட்டார்! இனி அவருடன் நீங்கள் போரிட இயலாது. அவருடையதென்று ஒரு துளி இனி எங்கும் எஞ்சாது. ஐயமே தேவையில்லை, இனி எந்தக் களத்திலும் அவர் தோன்றப்போவதில்லை. நீங்கள் அவரை இனி ஒருபோதும் முகத்தோடு முகம் நோக்கப்போவதுமில்லை. இங்கிருந்து அவ்வண்ணம் ஒரு வாய்ப்பை எண்ணி நீங்கள் பொழுது கழித்தீர்கள் எனில் முடிவிலிக்கணம் வரை எரிந்தெரிந்து அழிவின்மை கொள்ளும் பெருந்துயரொன்றை உங்களுக்கென ஈட்டிக்கொள்வீர்கள்.

அரசே, நீங்கள் வெல்ல வேண்டிய எதிரி ஒருவர் பேருருக்கொண்டு இங்கு நின்றிருப்பதை நீங்கள் உணரவில்லையா? தன் உருவங்களை ஆயிரம் பல்லாயிரம் என பெருக்கி இந்நிலத்தில் நிறைந்தவன் அவற்றை எல்லாம் இங்கு விட்டுச் சென்றிருக்கிறான். அம்முகங்கள் இங்கு வாழும். நிலங்கள்தோறும் தெய்வங்கள் என அமர்ந்து வெண்ணையும் இனிப்பும் கொள்ளும். பீலி சூடி, விழி மலர்ந்து விளையாடும். குழலூதி கனவுகளுக்குள் வந்து அமரும். இனி நீங்கள் போரிட வேண்டியது அப்பேருருவுடன்தான்.

ஒவ்வொன்றாக அவ்வுருவங்களை நீங்கள் அழிக்கலாம். அது கடல்நுரையை ஒவ்வொரு குமிழியாக உடைப்பதற்கு நிகர். நீங்கள் போரிடுவதற்கு அலையலையென எழுந்து வந்துகொண்டிருக்கும் ஆயிரம் பல்லாயிரம் இளைய யாதவர்களை பாருங்கள். ஒருகணம்கூட இங்கு நீங்கள் ஓய்ந்திருக்க பொழுதில்லை என்று உணருங்கள். எழுக, உங்கள் இறுதிக்களம் ஒருங்கியிருக்கிறது! இதை தவறவிட்டால் இங்கு நீங்கள் அமைதிகொள்ள இயலாது. அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஆயிரம் பல்லாயிரம் காதம் அலைவீர்கள். உங்களை நோக்கி அறைகூவுவது காலவடிவம் கொண்ட பரம்பொருளே என்றுணர்க! எழுக! போர்புரிக!

கிருதவர்மன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. அவர் நெடுநேரம் கழித்து தணிந்த குரலில் “உண்மை” என்றார். “நான் இங்கு இருக்கையில், வெளியிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் நூறு முறை தடுக்கும் கதவுகள் என்னை சூழ்ந்திருக்கையில்கூட எவ்வண்ணமும் சில நாட்களுக்கு ஒருமுறை அவர் பெயர் என்னை நோக்கி வந்தபடி இருக்கிறது. வெளியே சிறுபனித்துளி உதிர்வதென ஒலிக்கும் அவர் பெயர் என்னுள் இடியோசையாகிறது.” நான் “அப்பெயரை நீங்கள் அழிக்க இயலாது. ஒன்றை அழிப்பதற்கு மிகச் சிறந்த வழி அதை திரிப்பதே. அதனுடன் பிறிதொன்றை இணைத்துவிடுதல். முதல் வடிவை சுமைகொள்ளச் செய்வது அது. நோயுறச் செய்வது. அறுதியாக வீழ்த்துவது” என்றேன்.

“நமது படைக்கலங்கள் நமது உயிராற்றலால் இயங்குவன. நோயை அவ்வுயிர் தனது உயிராற்றலால் இயக்கிக்கொள்கிறது. எதிரியை நோயுறச்செய்க! ஒவ்வொரு உயிருக்கும் நோயை பெருக்கிக்கொள்ளும் விழைவும் உண்டு. அது ஒவ்வொன்றையும் உடைத்து அழிக்கும் காலத்தின் ஆணை. உடல் தன் உயிருடன் நோயையும் கலந்துவிடும். உயிர் எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நோயும் பெருகும்” என்றேன். “பெருமானுடரின் புகழை, மாபெரும் கருத்துக்களை, யுகக்கனவுகளை வெல்ல எளிய வழி அவற்றை திரிப்பதே. அவற்றின் எல்லையற்ற உயிராற்றலால் அவை நம் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டவையாகின்றன. நாம் அவற்றை திரித்தால் தங்கள் உயிராற்றலாலேயே அவை தங்களை மேலும் மேலும் திரித்துக்கொள்கின்றன. திரிபால் பிரிவினை அடைகின்றன. பிரிவுகள் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொன்றையும் வீழ்த்த விழையும் காலத்தை நாம் துணைகொள்வோம்.”

“நாம் இளைய யாதவரை திரிப்போம். அவர் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் அத்திரிவுகளும் சென்றமையும். அவற்றை உருவாக்குவதற்கு நமக்கு ஓர் அரசு தேவை. அரசே, துவாரகையில் இன்று அரசு சூடி அமர்ந்திருப்பவர்களில் நான் மட்டுமே அவருடைய பாவையை பெரிதாக்க வேண்டியதில்லை என்ற தெளிவை அடைந்திருக்கிறேன். அந்தப் பாவையை பெரிதாக்குவதைவிட அழிப்பதே உதவுவது என்றும் எண்ணுகிறேன். வெவ்வேறு வகையில் அங்கிருக்கும் அனைத்துத் தரப்பினரும் அவரது உருவைப் பெரிதாக்கி அதை தன் பீடமாகக் கொள்ளவேண்டும் என்னும் தேவை உடையவர்கள். அங்கு வந்து என்னுடன் நின்று எனக்கு மணிமுடியை அளித்தீர்கள் எனில் அவருக்கு எதிரான போரில் மிகப் பெரிய தேர் ஒன்றை நீங்கள் அடைவீர்கள்.”

“என் மேல் ஏறி நில்லுங்கள். என்னை கருவியாக்கிக் கொள்ளுங்கள்” என்று நான் சொன்னேன். “அவர் புகழை அழிப்பதற்கான வழிகளில் முதன்மையானது அவர் மைந்தர் தங்களுக்குள் போரிட்டு அழிய வேண்டும் என்பது. உலகைக் காக்க வேதம் உரைத்தவன் தன் குடி காக்க இயலாது ஒழிந்தான் என்னும் அவப்பெயர் நிலைகொள்ள வேண்டும். தன் கண்முன் மைந்தர்கள் போரிட்டு அழிவதைக் கண்டு நெஞ்சு பதைத்து துடித்து விழிநீர் சிந்தினான் என்று உலகு எண்ண வேண்டும். குருக்ஷேத்ரத்தில் அவன் இழைத்த அனைத்திற்கும் துவாரகைக் களத்தில் நிகர்வைத்தான் என்று சொல் எழவேண்டும். உளமுடைந்து அவன் அழுதான் என்றும் பெரும்பழிகொண்டு அகன்றான் என்றும் வீணில் இறந்தான் என்றும் கதை நிலைகொள்ளவேண்டும்.”

“அதன்பின் குருக்ஷேத்ரத்தை நாம் மாற்றி வனைய இயலும். அங்கு வீழ்ந்தவர் அனைவரையுமே நாம் சொல்லில் மீட்டெடுக்கலாம். ஒளியுடன் பீஷ்மர் எழவேண்டும். ஏழு புரவித் தேரில் கர்ணன் எழவேண்டும். நூறு தோள்களுடன் துரியோதனன் தம்பியருடன் எழவேண்டும். அஸ்வத்தாமன் அழிவற்ற அறச்சீற்றத்துடன் நிலைகொள்ள வேண்டும். நிஷாதர்களின் முகமென கடோத்கஜன் இல்லந்தோறும் நிலைகொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் தெய்வங்களென இங்கு நிலைகொள்கையில் அவர் சுருங்கிச் சிறுப்பார். அதை செய்வதற்கு நமக்கு அரசு தேவை.”

“அரசே, துவாரகை அவர் விட்டுச்செல்லும் தடம். நம் கோல் கீழ் அந்நகர் பிறிதொன்றாகவேண்டும். அது அவரின்றி நிலைகொள்ள இயலாது. எனில் அவ்வாறு நிலைகொள்ளும் அவர் எவ்வகையிலும் அவரன்று என்றிருந்தால் அதுவே அவரை மறைக்கும் ஒன்றாகும். முற்றிலும் புதிய ஒரு இளைய யாதவரை அங்கு நிறுவுவோம். துயர்கொண்டு தனித்து கைவிடப்பட்டு தன் ஒவ்வொரு சொல்லையும் எண்ணி வருந்தி வாழ்ந்தவர். தன் சொற்கள் அனைத்தையும் தானே மறுத்து, தான் கொண்டு வந்த அனைத்தையும் திரும்ப எடுத்துக்கொண்டு இங்கிருந்து மறையும் ஒருவர். அத்தகைய இளைய யாதவரை உருவாக்குவோம். அரசே, அதன் பொருட்டு எழுக!”

கிருதவர்மன் “மைந்தா, உனது சொல்வலிமை ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. இதுவரை துவாரகையில் யாதவரில் எவரும் இவ்வாறு பேசியதில்லை. அதற்கான ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதை எவரும் சொன்னதில்லை. மெய்யாகவே இது நீதானா? ஏதேனும் மாய உருவா என்று ஐயுறுகிறேன்” என்றார். “ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப நாம் நம் ஆற்றலை கண்டடைகிறோம். ஒருபோதும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்று நான் சொன்னேன். “நன்று! உன்னுடன் இருக்கிறேன், உனக்கென எழுகிறேன்” என்றார் கிருதவர்மன். “வருக! என்னுடன் வந்து யாதவர்களுக்கு தலைமைகொள்க! தாங்கள் அங்கு இயற்றவேண்டியது என்ன என்பது இப்போது சொல்லற்கரியது. அங்குள்ள ஒவ்வொரு தருணத்திலும் அதற்கான தேவையும் வாய்ப்பும் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. அதை நாம் அடைவோம்” என்று நான் சொன்னேன்.

விஸ்வாமித்ரரின் தவக்குடிலில் இருந்து கிளம்புகையில் என்னை எண்ணி நானே தருக்கிக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்திற்கும் என்னுள்ளிருந்து புதிய ஒருவனை நான் வெளியே எடுக்க இயல்கிறது. மானுடர் இரு வகை. மாறாத உருக்கொண்டவர்கள். கல்லிலும் இரும்பிலும் சமைக்கப்பட்டவர்கள் போன்றவர்கள். அவர்கள் அமரும் பீடங்கள் முன்னரே ஒருங்கிவிட்டிருக்கின்றன. ஆற்ற வேண்டிய பணி வகுக்கப்பட்டிருக்கிறது. இங்கு வந்து திகழ்ந்து மறைபவர்கள் அவர்கள். துரியோதனனைப்போல, கர்ணனைப்போல. ஆனால் அவர்கள் வெல்வதில்லை. எத்தனை எடைகொண்டவர்கள் எனினும் விசைகொண்டவர்கள் எனினும் இரும்பாலும் கல்லாலும் ஆனவர்கள் பிளந்தே ஆகவேண்டும். ஏனெனில் காலம் என்றும் வெளி என்றும் இங்கு திகழ்வது ஒரு முடிவிலி. முடிவிலிக்கு முன் எதுவும் இன்மையே.

ஒவ்வொரு கணமும் தன்னை மாற்றிக்கொள்பவன், அத்தருணத்திற்கென புதிதாக எழுபவன் மட்டுமே வெல்பவன். கணந்தோறும் மாறிக்கொண்டிருந்தார் என் தந்தை, அவருடன் மாறிக்கொண்டிருந்தனர் பாண்டவர்கள். வென்றது அம்மாற்றமே. நானும் அவ்வாறே. என் நத்தைச் சிறு கூட்டிலிருந்து வெளிவந்திருக்கிறேன். வீசப்பட்ட விதைகளென ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வடிவு கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறேன். ‘கிருதவர்மனை வென்றுவிட்டேன். அவரை அழைத்துவருகிறேன்’ என்று செய்தி ஒன்றை அனுப்பினேன். பின்னர் என் சிறு குடிலுக்குள் சென்று ஓய்வெடுத்தேன்.

மறுநாள் என்னுடன் கிருதவர்மன் கிளம்பிவருகிறார் என்று முடிவு செய்யப்பட்டது. அச்செய்தியை குருகுலத்தின் தலைவரிடம் சென்று சொல்லும்படி ஏவலனை அனுப்பினேன். அவர் என்னை பார்க்க விழைவதாக சொன்னார். நான் சென்று அவரை வணங்கி அமர்ந்தேன். விஸ்வாமித்ரர் அவருடைய வழக்கமான நிகர்நிலையில் அன்று இல்லை. முகமன்களுக்குப் பின்னர் “நீங்கள் அவரை சந்தித்ததை அறிந்ததேன். உங்களுடன் அவரை அழைத்துச் செல்லவிருப்பதை ஏவலன் சொன்னான். நன்று, இங்கிருந்து அவர் செல்வது எங்கள் அனைவருக்குமே மகிழ்வளிக்கிறது” என்று அவர் சொன்னார்.

என்னிடம் சொல்ல அவரிடம் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். “யாதவரே, இங்கு அவர் வந்தபோது தவக்கோலத்தில் இருந்தார். எங்களுடன் இருக்க விழைவதாகவும், எஞ்சியிருப்பதென்ன என்று கணிக்கவிருப்பதாகவும் சொன்னார். குருக்ஷேத்ரப் பெருநிலத்திலிருந்து அவ்வண்ணம் பல்லாயிரம்பேர் வீடுபேறு நோக்கி சென்றிருக்கிறார்கள் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்நிலத்தை நேரில் கண்டவர்கள், சொல்லில் கேட்டவர்கள், உணர்ந்தவர்கள் துறந்து குருநிலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். பாரதவர்ஷமே அவர்களால் நிறைந்திருக்கிறது, பால் நிறைந்த கலம் நுரைப்பதுபோல் குருக்ஷேத்ரம் மெய்யறிவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று இங்கு ஒரு சொல் உண்டு.”

“இங்கு வந்தபோது அவர் எவர் என அறிந்திருக்கவில்லை. ஆயினும் அவர் குருக்ஷேத்ரத்திலிருந்து வந்தார் என்று அறிந்திருந்தேன். மெய்மை நாடி துறந்தெழுந்தவர் என்று எண்ணினேன். அவ்வாறே ஆகுக என்று நிறைவுற்றேன். அவர் தனி தவக்குடிலமைத்து தனித்து தங்கினார். எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று எவரும் அறியவில்லை. தன்னை தான் கடந்து ஒவ்வொன்றாக எடுத்து அவர் பார்க்கட்டும், தன்னை மீண்டும் இங்கு கட்டி அமைத்துக்கொள்ளட்டும், எழுந்து வரட்டும் என்று கருதினேன்.”

“அவர் எவரென்று அறிந்திராவிட்டாலும்கூட என் மாணவர் ஒருவர் அவர் வஞ்சம் கொண்டிருக்கிறார். தனிமையில் வஞ்சம் பெருகவே செய்யும் என்றார். ஆம், ஆனால் வஞ்சத்தைவிட பெரியது தனிமை. சிறு தனிமை வஞ்சத்தை பெருக்குகிறது. பெருந்தனிமை அழிக்கும். தனிமை பேருருக் கொள்ளுமெனில், நெடுநாள் நீளுமெனில் அது அனைத்தையும் சிறிதாக்கி தான் மட்டுமே எஞ்சும், தனிமைக்கு மறுபெயரே மெய்மை என்று நான் சொன்னேன்.”

“முற்றிலும் தனிமையில் அவர் அங்கிருந்தார். அவருடன் ஒருபோதும் எவரும் விழியாலோ ஓசையாலோ உடனிருக்கலாகாதென்று ஆணையிட்டிருந்தேன். அத்தனிமை நீடிக்குமெனில் அவர் விடுபட்டிருக்கக்கூடும். அவர் பற்றியிருக்கும் சிலவற்றிலிருந்து விடுபட்டால் இங்கிருந்து அவருக்கு ஒரு நற்செலவும் அமையக்கூடும். ஆனால் அது நிகழவில்லை” என்றார் விஸ்வாமித்ரர். “அவருடைய ஊழ் அதுவல்ல. அவர் செல்லவிருக்கும் திசை முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருக்கிறது.”

“ஒருமுறை தொலைவில் அவர் மிகத் தனிமையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அவருடைய முகத்தின் தசையசைவு அவருக்குள் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று காட்டியது. அவர் இங்கு வந்து ஓரிரு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. அத்தனை காலம் தனித்திருந்த ஒருவர் தனக்குள் பேசிக்கொள்வது அரிது. தனிமை கொள்பவரின் அகம் கூச்சலாகிறது. குரல் பெருக்குகிறது. தனக்குள் தான் பிரிந்து பேசிப் பேசி சொல்லிழந்து சொல்லிழந்து பேச்சவிந்து முகம் சிலை என்றாவதே வழக்கம். தனிமையின் விளைவு உறைவுதான். ஏனென்றால் தனிமை என்பது ஓர் அகஅமைவு. அவர் கொந்தளித்துக்கொண்டிருந்தார். விரைந்துகொண்டிருந்தார்.”

“அத்தனை காலம் அவர் எவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்? அதை எண்ணி எண்ணி வியந்தேன். அத்தனை தூரம் தன்னைப் பிளந்து தன் எதிரியை உருவாக்கிக் கொள்வதற்கு அத்தனை பெரிதென்று தன்னை கற்பனை செய்துகொண்டிருந்தாரா? நான் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் வெவ்வேறு இடங்களில் அவர் முகத்தை கூர்ந்து பார்த்தேன். ஏன் அவர் அத்தனை உரையாடுகிறார்? எவருடன்? தன்னுள் இருந்து மொண்டு அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் பிறிதொருவர் எவர்? உச்சிப்பொழுதில் அவர் நிழல் விழுந்திருப்பதை கண்டேன். நீர் அள்ள சுனையை நோக்கி குனியும்போது தன் ஆடிப்பாவையை நோக்கி நெடுநேரம் நின்றிருப்பதை கண்டேன். என்னில் ஆவல் பெருகியது. அவ்வண்ணம் பெருந்தனிமையிலும் விடாது உடனிருக்கும் ஒருவரை அவர் எவ்வண்ணம் தனக்கென உருவாக்கிக்கொண்டார்?”

“ஒருநாள் அதை அறியும்பொருட்டு தனிமையில் அவரை பார்க்கச் சென்றேன். அவர் குடிலுக்குள் துயின்றுகொண்டிருந்தார். அவர் அருகே எவரோ இருப்பதை கண்டேன். அணுகிச் சென்றேன். அவருடைய எதிரி அது என்று எனக்கு தோன்றியது. ஏனெனில் என் மாணவர்கள் திரும்பத் திரும்ப அதை சொல்லியிருந்தார்கள். தன் வாழ்நாள் எல்லாம் எதிரியை சொல்லிலும் கற்பனையிலும் நிரப்பிக்கொண்டவர் அவர் என்று. ஆனால் அருகணைந்து குடில்முற்றத்தை அடைந்தபோது அங்கிருந்தவர் எவரென்று கண்டேன். அங்கிருந்தவர் பீலி சூடியிருந்தார். உதடுகளில் குழல் சேர்த்து மீட்டிக்கொண்டிருந்தார்.”

“அது என் உளமயக்கென்று சற்று நேரத்திலேயே தெரிந்தது. ஆனால் உளமயக்கின் வடிவிலேயே எனக்கு மெய்மைகள் அமைகின்றன. அங்கு நான் கேட்ட அவ்விசையை என் ஊழ்கங்களின் உயர்நிலையிலேயே அறிந்திருக்கிறேன். மலைகளை முகில்களென எழுந்து பறக்கச்செய்வது அது. அத்தகைய பேரிசை. அதன் மடியிலென கிருதவர்மன் படுத்திருந்தார். அவர் முகத்திலிருந்தது குழந்தை அன்னையின் மடியில் படுத்திருக்கையில் எழும் கனவு. பெருங்கனவின் இனிமை நிறைந்த புன்னகை.”

“அன்று உளம் பதைத்து நான் திரும்பி வந்தேன். இங்கு அமர்ந்து ஒவ்வொன்றாக அணைத்து ஊழ்கத்தினூடாக நாம் சென்றடைந்த ஒரு துளியை தூய வஞ்சத்தினூடாக அடைந்து அவர் அமர்ந்திருக்கிறாரா? அதுவும் வழிதானா? இப்புடவிப் பெருவெளியில் எங்கும் எதுவும் செல்லும் வழிகள்தானா? அவரை அவ்வஞ்சத்திலிருந்து மீட்கவேண்டுமென்று நான் எண்ணியது எனது வீழ்ச்சியா? ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான விதைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அவர்களின் அகத்தெழும் விண்நீரால் முளைக்கின்றன.”

“யாதவரே, அவர் யோகி, முனிவர். வஞ்சம் அவர் தவம். தவம் தெய்வங்களுக்கு இனியது” என்றார் விஸ்வாமித்ரர். “அழைத்துச்செல்க! உங்களுடன் வருபவர் ஒரு வெறும் போராளி அல்ல, தவமுனிவர் என்றுணர்க! ஆம், அவ்வாறே ஆகுக!” நான் அவரை வணங்கினேன். அன்று மாலை நாங்கள் பருஷ்னி வழியாக துவாரகைக்கு கிளம்பினோம்.