கல்பொருசிறுநுரை - 32
பகுதி நான்கு : அலைமீள்கை – 15
கிருதவர்மனின் உள்ளத்துள் என் சொற்களை செலுத்திவிட்டேன் என்றே உணர்ந்தேன். “தந்தையே, நீங்கள் எங்கள் குலமூதாதை ஹ்ருதீகரின் மைந்தர். ஒவ்வொரு நாளும் பொழுதிணைவு வணக்கங்களில் நாங்கள் சொல்லும் பெயர்களில் ஒன்று அது. ஒவ்வொருநாளும் அவருக்கு நீர் அளிக்கும் நிலங்களில் ஒன்று துவாரகை” என்றேன். அவர் என்னை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். “களம்பட்ட உங்கள் மைந்தர் பாலிக்காக நீர் அளித்தவர்களில் ஒருவன் என நின்று இதை உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். “என்றும் அது அவ்வண்ணமே நீடிக்கும். நாம் முரண்படலாம், போரிடலாம், அழியலாம், குலம் நம்மைக் கடந்து என்றுமிருப்பது.”
“நீ சொல்வது இயல்வதே, பிரத்யும்னன் தன் கோல் நிலைகொள்ள உன் தந்தையை தெய்வமாக்கலாம்” என்றார் கிருதவர்மன். “ஆனால் நீங்கள் முடிசூடினாலும் அதுதானே நடக்கும்? உங்கள் தந்தையின் அடையாளமின்றி எதன் பொருட்டு நீங்கள் அரசமைக்க முடியும்?” என்றார். “மெய், எங்கள் தந்தையின் அடையாளத்தை நாங்கள் விடமாட்டோம். அதை கூறுவோம். ஆனால் அதை முதன்மைப்படுத்த மாட்டோம். முதன்மைப்படுத்தவும் இயலாது. எங்கள் செயல்பாடு அவர்களுக்கு நேர் எதிரானது. நாங்கள் முடிசூடும்போது தந்தை எங்களுக்கு தேவைப்படுகிறார், சூடியபின் தேவைப்படமாட்டார். அதன் பின் நாங்கள் எங்களை யாதவர் என்றே முன் வைப்போம். எங்களை தூய யாதவர் என்றும், தொன்மையான யாதவர் என்றும் முன் வைப்பதற்கு தடையாக இருப்பது எந்தை இளைய யாதவரின் அடையாளமல்லவா?” என்றேன்.
“நாங்கள் எங்களை கார்த்தவீரியரின் குடி என்போம். சூரசேனரின் குருதி என்போம். பலராமர் வரை ஒரு கொடிவழியை உருவாக்குவோம். அதில் ஒரு பெயராக மட்டும் இளைய யாதவரை நிலைநிறுத்துவோம். அரசே, பெருவீரர்களின் இயல்பு ஒன்றுண்டு, அவர்கள் தங்கள் வீரத்தால் வெல்வது எதிரிகளை மட்டுமல்ல, தங்கள் முன்னோடிகளையும் கூடத்தான். என்று இளைய யாதவர் எங்கள் குடியில் எழுந்தாரோ அன்றே கார்த்தவீரியரின் புகழ் மங்கிவிட்டது. இனி நாங்கள் எங்கள் குடிமூதாதையரின் பெயரை முன் நிறுத்தவேண்டுமெனில் மாவீரர் கம்சரின் பெயரையும் சொல்லித்தான் ஆகவேண்டும். கம்சரின் பெயரை சொல்லவேண்டுமெனில் இளைய யாதவரின் பெயரை சற்றே குறைத்தாக வேண்டும்.”
“எண்ணி நோக்குக, நாங்கள் வென்றால் தந்தை உரு சிறுத்து மூதாதை நிரையில் நூற்றில் ஒருவர் என்றே அமைவார்! அவருக்கு இடப்பக்கம் சூரசேனரும் வலப்பக்கம் பலராமரும் அமர்ந்திருப்பார்கள். அவரை தனிப் பெருவீரராக காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அது எங்களுக்கு இடரும்கூட. எங்கள் மாவீரர் நிரையில் நீங்களும் இருப்பீர்கள். அந்தகக் குடியின் அனைத்துப் பெருவீரர்களும் இருப்பார்கள். போஜர்களும் குக்குரர்களும் இடம்பெறுவார்கள். அவ்வண்ணம்தான் நாங்கள் யாதவர்களின் குடியொற்றுமையை பேணிக்கொள்ள முடியும்” என்றேன்.
“ஆனால் பிரத்யும்னன் அதை செய்யமாட்டார். பிரத்யும்னன் யாதவர்களை தன்னுடன் நிறுத்திக்கொள்ள தந்தையுடனான தனது குருதிஉறவை மேலும் மேலும் நிறுவிக்கொள்ளவேண்டும். அதற்கு எந்தையை மேலும் மேலும் புகழ்ந்து தெய்வமாக்கி நிலைநிறுத்தவேண்டும். அதனூடாக எந்தை யாதவ குடித்தலைவர் அல்ல என்பதையும் அவர் எவ்வண்ணமோ நிலைநிறுத்துவார். ஏனென்றால் தந்தையை யாதவ குடிமூத்தவராக நிலைநிறுத்துகையில் மறைமுகமாக யாதவ ஆற்றலை அவர் சொல்வதாக ஆகிவிடும். யாதவர்களே துவாரகையில் இயல்பான குடிகள் என்று சொல்வதுபோல் அது தோன்றும். அது எந்நிலையிலும் அவருடைய கோன்மைக்கு எதிரானதே. அவர் யாதவர்களை குடிகளாக நிறுத்த விழைவார், அவர்கள் கோன்மைகொண்டு எழ ஒப்பமாட்டார்.”
“தந்தையே, கோல்கொண்டு அமர்ந்தால் பிரத்யும்னன் சில ஆண்டுகளில் அஸ்தினபுரிபோல வரவுக்குடிகளைக்கொண்டு துவாரகையை நிறைப்பார். அவ்வண்ணம் வருபவர்கள் எந்தை இளைய யாதவரை தெய்வம் என்று வழிபடவேண்டும். அப்போதுதான் அவர்கள் பிரத்யும்னனையும் தெய்வநிரையினர் என ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு எந்தை இளைய யாதவரை வழிபடவேண்டுமென்றால் இளைய யாதவர் அவருடைய யாதவ அடையாளத்தையும் மீறிய தெய்வமாகவேண்டும். அதற்கு அவரை யாதவர் அல்லாதாக்குவது ஒன்றே வழி. அதற்கு அவரை யாதவ அடையாளத்தை மீறிய தெய்வமாக்கியாகவேண்டும். யாதவக் குடியில் தோன்றிய விண்ணவனாக அவரை காட்டவேண்டும்.”
“அதன்பொருட்டு அவரை தெய்வத்தின் மானுடப்பிறப்பு என்பார்கள். அவருடைய இளமைக்கால கதைகளை விதந்து பெருக்குவார்கள். அவர் யாதவர் என்பது ஒரு தற்செயல் நிகழ்வே என்பார்கள். யாதவர் என்பது அவருடைய அடையாளம் அல்ல, அந்த தெய்வம் வந்தெழுந்த பீடம் மட்டுமே எனக் காட்டுவார்கள். ஐயம் தேவையில்லை, பிரத்யும்னன் அதையே செய்வார்” என்றேன். “அது மிகச் சிறந்த உத்தி. எந்த விருஷ்ணியும் எந்த யாதவரும் இளைய யாதவர் என்ற பெருவீரரை, முனிவரை புகழ்வதை மறுக்க முடியாது. புகழப்புகழ அவர் தெய்வமாகி யாதவரல்லாமலாகி அகல்கிறார் என்பதை அவர்களில் எளியோர் உணரவே போவதில்லை. உணர்ந்தோர் அதை சொன்னால் அவர்களை இளைய யாதவரின் புகழை விரும்பாதோர், யாதவக் குடிமேன்மையை கருதாதோர் என்று பழி சுமத்தி அழித்தும்விடலாம்.”
“பிரத்யும்னன் முடிசூடினால் அவர் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே மதுராவையும் மதுவனத்தையும் வென்றாகவேண்டும். யாதவ நாடுகள் அனைத்தையும் தன்னுடன் சேர்த்தாகவேண்டும். யாதவ நிலத்தை ஒருங்கிணைக்க வாளேந்திய இளைய யாதவராக தன்னை அவர் காட்டிக்கொண்டாரென்றால் மட்டுமே அதை செய்ய முடியும். எங்களுக்கு அப்படி அல்ல. நாங்கள் எந்நிலையிலும் குலத்தின் அமைப்பை அழிக்க இயலாது. ஏனெனில் அதுவே எங்கள் ஆற்றல். குலத்தின் அமைப்பு நீடிக்க நீடிக்க விருஷ்ணிகள் மட்டும் பேருருக்கொள்ளவும் இயலாது. போஜர்களிலும் அந்தகர்களிலும் உள்ள பெருவீரர்களையும் நாங்கள் முன்னிறுத்தியாகவேண்டும்.”
“ஆகவே இளைய யாதவரை வரலாற்றின் ஒரு பெயரென குறுக்கவேண்டுமெனில் நீங்கள் எங்களுடன் நின்றாகவேண்டும். நாங்கள் வென்றாகவேண்டும். இளைய யாதவர் பேருருக்கொண்டு அங்கு நிலைநிற்கவேண்டுமெனில் நீங்கள் இங்கேயே இருங்கள். உங்கள் விலக்கத்தால் பிரத்யும்னன் முடிசூடட்டும், அநிருத்தன் முடி தொடரட்டும்” என்றேன். என் தரப்பை வலுவாகச் சொல்லிவிட்டேன் என்று உணர்ந்தேன். இந்த மூதாதையரின் அவைத்திறனை மெய்யாகவே நான் அறியேன். அவர்கள் தங்கள் மைந்தரின் உள்ளத்தை நன்கு அறிவார்கள். ஆகவே சொல்கடந்து வந்து எங்கள் அகத்தை நுண்ணிதின் உணர்வார்கள். தந்தையர் உள்ளங்களை மைந்தர் அறிய இரண்டு வழிகளே உள்ளன. அவர்களின் குருதிப்பற்றை தூண்டுதல், அவர்களின் ஆணவத்தை வளர்த்தல். நான் இரண்டையும் இணைத்துச் செய்துவிட்டேன் என்று எண்ணிக்கொண்டேன்.
கிருதவர்மன் மெல்ல சிரிப்பதை கேட்டேன். அவர் உள்ளம் செல்வதெங்கே என எனக்கு புரிந்தது. என் சொற்கள் அவரை நகர்த்திவிட்டன. ஆனால் அவ்வண்ணம் நகர்ந்தது குறித்து அவர் நாணுகிறார். “அதாவது, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறீர்கள். பிரத்யும்னன் இளைய யாதவரை தெய்வமாக்குவான், நீங்கள் தந்தையென நிலைநிறுத்துவீர்கள். இரண்டில் ஒன்றை நான் தெரிவுசெய்யவேண்டும், இல்லையா?” என்று கிருதவர்மன் சொன்னார். அவருடைய அந்தச் சொற்களுக்காகவே நான் காத்திருந்தேன். “இல்லை, நான் இங்கு வந்தது மூன்றாவது ஒரு வாய்ப்பை தங்களுக்கு அளிப்பதற்காக” என்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. குழம்பி “கூறுக!” என்றார்.
“தந்தையே, நான் வந்தது மேலும் ஒன்றை உங்களுக்கு உரைப்பதற்காக. அங்கு மூன்று தரப்புகள் இருப்பது புறத்தோற்றம். ஒரு தரப்புக்குள்ளும் பல்வேறு துணைத்தரப்புகள் உண்டு. எண்பது பேரில் என்றேனும் ஒரு நாள் துவாரகையின் மணிமுடியை சூடலாம் என்று எண்ணாத ஒருவரேனும் உளரா என்று கேட்டால் இல்லை என்றே மறுமொழி கூற இயலும்” என்றேன். அவர் “நீ உட்பட?” என்றார். “ஆம், இத்தனை தொலைவு வந்து இத்தனை உணர்வெழுச்சியுடன் நான் பேசிக்கொண்டிருப்பது என் தமையனுக்காகவோ யாதவ குலத்திற்காகவோ அல்ல என்பதை தாங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால் நாம் யாதவராயினும் உணர்வால் ஷத்ரியர்கள்” என்றேன். அவர் ஒன்றும் கூறவில்லை.
“நான் இம்மூன்று தரப்பிலும் எதையும் வென்றெடுத்து அமர்ந்து ஆட்சி செய்ய இயலாது. மூவரும் என்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “ஆனால் மூன்று தரப்புகளுக்கிடையே நிகர்வல்லமையுடன் போர் நிகழுமெனில், அதில் மூன்று தரப்பினருமே மாறி மாறி முழுமையாக தோற்கடித்துக்கொள்வார்கள் எனில், எஞ்சியோருக்கு நான் தலைமை தாங்க முடியும். அவர்களுக்கு வேறு வழியில்லை. நான் அவர்களை அழைத்துக்கொண்டு துவாரகையிலிருந்து வேறெங்கேனும் சென்று ஒரு அரசை உருவாக்க முடியும். அல்லது உடைந்து சிதைந்தழிந்த துவாரகையை பிறிதொரு பெயரில் கட்டி எழுப்பி அங்கு முடிசூட முடியும்” என்றேன்.
அவர் “இடிபாடுகளில் இருந்து முளைத்தெழுதல்” என்றார். “ஆம், அவ்வண்ணம் மீண்டும் முளைத்தெழும்போது அதில் இளைய யாதவரின் பெயர் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற சொல்லை நான் உங்களுக்கு அளிப்பேன் எனில் நீங்கள் என்னுடன் வர இயலுமா?” என்றேன். “உன்னுடன் நான் வரவேண்டுமா?” என்றார். “இப்போது என்னுடன் வந்து யாதவ தரப்பிற்கு படைத்தலைமை கொண்டு நில்லுங்கள். அவர்கள் எண்ணுவதுபோல் எளிதில் யாதவர்களை வென்றுவிடமுடியாது என்ற எண்ணத்தை அவர்களுக்கு அளியுங்கள். அசுரரும் ஷத்ரியரும் ஒன்று திரண்டால்கூட யாதவர்கள் வென்று நிற்பார்கள் என்பது நீங்கள் வரும்போதே தெரிந்துவிடும். ஒவ்வொன்றும் மாறத்தொடங்கிவிடும்… ஷத்ரியப் படைகள் துவாரகைக்குள் நுழைவதை பத்துமுறை எண்ணிச்சூழ்வார்கள்” என்றேன்.
“நீங்கள் வந்தால் சாத்யகியும் களம் வராமல் இருக்கமாட்டார். உங்கள் கையில் யாதவர்களின் முழுத் தலைமையையும் கொடுத்துவிட்டு நிற்க அவரால் இயலாது. ஆம், உறுதியாக அவரும் வருவார். நீங்கள் இருவரும் சேர்ந்து படைமுகம் நின்றீர்கள் என்றால் யாதவர்களை வெல்ல அவர்களால் இயலாது. இணையான போர்த்தரப்புகள் ஏற்படும், முனைகள் கூர்கொள்ளும். மேலும் இறுக்கம் நீடிக்கும். ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும். போரென்றாகும். போரில் யாதவர்களும் பெருமளவுக்கு அழிவார்கள். நீங்கள் ஷத்ரியர்களை முற்றழிப்பீர்கள், அசுரர்களை அகற்றுவீர்கள். தந்தையே, அந்தப் போரில் அந்தகர்கள் குறைந்த அளவே மடியும்படி நான் சூழ்கை வகுக்கிறேன். அந்தச் சொல்லை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”
“நீ சாத்யகியை சந்தித்தாயா?” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்றேன். “அவனிடமும் இதையே பேசினாயா?” என்றார். “ஆம்” என்றேன். “நீங்கள் மூதாதை, உங்களிடம் எதையும் மறைக்க நான் விழையவில்லை. இதே சொல்லுறுதியை அவரிடமும் பெற்றேன்.” கிருதவர்மன் “அவனிடம் என்ன சொன்னாய், விருஷ்ணிகளின் சாவை குறைக்க முயல்வதாக, அல்லவா?” என்றார். “அல்ல, அவர் வருவதாக ஒப்பவில்லை. ஆகவே இப்பேச்சு எழவில்லை” என்றேன். “தந்தையே, நான் அந்தகக் குலத்து அன்னையின் மைந்தன். அந்தகர்களின் அரண்மனையில் வளர்ந்தவன். நீங்கள் என்னை அந்தகனாக அன்றி எவ்வகையிலும் சேர்க்கக்கூடாது.” கிருதவர்மன் “எனில் நன்று!” என்றார்.
அதை மேலே வளர்க்கக்கூடாது என எண்ணி நான் தொடர்ந்தேன் “என் கணிப்பு இது. பிழை எனில் கூறுக! போருக்குப் பின் எஞ்சும் யாதவர்கள் வல்லமை அற்றவர்களாகவும், துயருற்று தனித்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நான் அரசனாகிறேன். அவர்களைக் கொண்டு ஓர் அரசை அமைக்கிறேன். ஆற்றலற்ற அரசு. ஆகவே கப்பம் கட்டி ஒளிந்திருக்கும் எளிய அரசு. அது எனக்கு போதும்.” அவர் சில கணங்களுக்குப் பின் “உன் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்க என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றபின் உரக்க நகைத்து “ஒவ்வொரு படைவீரனின் உள்ளத்தையும் இன்னொரு படைவீரன் எண்ணி எண்ணி சொல் சொல் என எடுக்க முடியும். ஏனெனில் படைவீரர்கள் ஒன்றே போன்றவர்கள்” என்றார்.
நான் அவர் சொற்களுக்காக காத்திருந்தேன். “நீ இப்போது எண்ணுவது என்னவென்றால் அவ்வண்ணம் மூன்று தரப்பினரும் முற்றழிந்தபின் எஞ்சிய யாதவக் குடியில் இருந்து நீ அரசன் என எழுந்தால் முடிசூடும் வரைக்கும் மட்டுமே நீ அனைவருக்கும் கட்டுப்பட்டவன். அதன் பிறகு நீ ஒரு தனி மன்னனென எழுவாய். துவாரகையை இளைய யாதவர் உருவாக்கியதுபோல நீ அதை மீட்டெழுப்புவாய். அவர் கொடிவழியென அங்கு அமர்ந்திருப்பாய்.” அவர் குரல் மேலும் சிரிப்பை கொண்டது. “அப்போது நான் சாத்யகியால் கொல்லப்பட்டிருப்பேன், அவன் என்னால் கொல்லப்பட்டிருப்பான். அப்படி கணித்துள்ளனர் நிமித்திகர், இல்லையா?”
நான் உறுதியாக “அல்ல” என்றேன். “இளம் அகவையிலிருந்தே நான் எண்ணியது எந்தையைப்போல் ஆகவேண்டும் என்றுதான். அதை மறுக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக எந்தையைக் கடந்துசெல்ல வேண்டும் என்ற கனவு என்னுள் இருக்கிறது. அரசே, இந்த நீண்ட பாலைவனத்தைக் கடந்து வந்த இந்த நாட்களில் எந்தை இல்லாது நான் மட்டும் நின்றிருக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். எந்தையை நான் ஒருபோதும் சென்றடைய இயலாது. அவருடைய புகழும் பெருமையும் என்னை சிறியவன் என்றே ஆக்கும். போருக்குப் பின் எப்படி நான் முடிசூடினாலும் என் மேல் பழியே குவியும். போரில் எஞ்சியிருப்பதே பழி என எண்ணுவர் வீரர்.”
“அத்துடன் சூதர்களை எவரும் ஏமாற்ற இயலாது. பிறர் இல்லாமையால் வேறு வழியின்றி நான் அரசனானேன் என்று கூறுவார்கள். பின்னர் மெல்லமெல்ல மூவரையுமே நான் அழித்தேன் என்பார்கள். எவ்வண்ணம் அழித்தேன் என கதைகளை உருவாக்குவார்கள். மூன்று பேரின் போருக்குப் பின் சூழ்ச்சி செய்து குருதியுண்டு எழுந்த நரி எனும் பழி என்மேல் இருக்கும். ஒருவேளை எந்தையையே நான்தான் துவாரகையை விட்டு விரட்டினேன் என்றுகூட புனைந்துகொள்வார்கள்” என்றேன். “எந்தையின் மைந்தன் என என்னை முன்னிறுத்தும் தோறும் அப்பழி பெருகும். எந்தையை அவர்கள் மறந்தால் மட்டுமே நான் எழ முடியும். எந்தை இயல்பாக காலத்தில் மறையவேண்டும்.”
“மாவீரர்களை அழிக்க முடியாது. கதைகளாக்கி விலக்க முடியும். கதைகளை பெருக்கி மேலும் பெருக்கி அவரை தொலைவுக்கு கொண்டுசெல்வேன். யதுவும் மைந்தர்களும் கார்த்தவீரியரும் வாழும் உலகுக்கு. அங்கிருந்து அவர்கள் வாழும் உலகுக்கு வரமுடியாது. என்னைப் பற்றிய கதைகளை என் முதுமையில் நான் உருவாக்கிக்கொள்வேன். அவை முற்றிலும் வேறு கதையாக இருக்கவேண்டும். முந்தைய கதைகளின் நீட்சியாகவும் அவற்றிலிருந்து வேறுபட்டவையாகவும் ஆகும் கதைகள்” என்றேன். “அவற்றை உருவாக்குவது மிக எளிது. கதைகளின் ஆற்றல் அவை சுவையானவை என்பது. கதைகளின் நோய் என்பதும் அவை சுவையானவை என்பதே. எந்தப் பொய்யையும் சுவையானதாக சமைத்தால் எந்த மெய் மேலும் ஏற்றிவிடலாம் என்பதே கதைகளின் சிறுமை.”
“மூதாதையே, இங்கு வரும் வழியில் எண்ணினேன், எந்தையை மறக்கச் செய்ய என்னால் இயலாது. பாரதவர்ஷத்தின் நினைவில் அவர் பதிந்துவிட்டார். அப்பெரும்போரை அவர் இயற்றியமையாலேயே இனி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அவரை எவரும் மானுட நினைவிலிருந்தே அகற்ற இயலாது. ஆனால் ஒன்று செய்யலாம், அவரை அவர் அல்லாமல் ஆக்கலாம். அவர் பலமுகம் கொண்டவர். அதில் ஒன்றை மேலெழச் செய்யலாம். அவர் மேல் எதையும் புதிதாக ஏற்ற இயலாது. ஆனால் அவரில் இருக்கும் ஒன்றை மிகையாக்கி பெருக்கிக்கொள்ளலாம். கோகுலத்தில் பெண்களுடன் ஆடும் எளிய களியாட்டுச் சிறுவனாக அவரை காட்டலாம். குழலூதி உளம் மயக்கும் குறும்பனாக விரிக்கலாம். அதைப் பற்றிய பாடல்களை உருவாக்கலாம். அதைப் பற்றி கதைகளை உருவாக்கலாம்.”
“அவ்வாறாக இப்போர்ச்செய்திகள், வீரகதைகள், அரசியலாடல்கள், குலவரலாறுகள் அனைத்திலிருந்தும் அவர் விலக்கப்படுவார். பெண்களுடன் ஆடி மகிழ்ந்திருக்கும் சிறுவன், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஆவார்” என்றேன். கிருதவர்மன் எண்ணுவது எனக்குத் தெரிந்தது. “நீங்கள் எண்ணுவது எனக்கு புரிகிறது. ஏன் அதை தெரிவுசெய்கிறேன் என்று. மூதாதையே, அவரது புகழை அழிப்பதற்கு ஒரு எதிர்ப் பெயரை உருவாக்குவதல்ல உகந்த வழி. அவருடைய நற்பெயர்களில் ஒன்றை பெரிதுபடுத்துவது. தன்போக்கில் பெருகி வளரும் இயல்புகொண்ட ஒன்றையே அவ்வாறு சொல்லமுடியும். இப்போதே அவருடைய மூன்று அடையாளங்களில் ஒன்று அது.”
“அவர் பெருவீரர், பேரறிஞர், பெருங்களியாட்டர். சூதர்கள் அவ்வண்ணமே அவரை பாடுகின்றனர். அவரை நான் களியாட்டர் என்று முன் வைக்கிறேன். அது புதிய சித்திரம் அல்ல. இங்கே அவர் இந்திரவழிபாட்டை நிறுத்தியதும் அவரை இந்திரன் என்றே வழிபடத் தொடங்கினர். அவருக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் இருப்பதாக சூதர் கதைகள் பாடுகின்றன. நான் ஒருவகையான இந்திரன் என்றே காட்டுகிறேன். பெண்களுடன் ஆடுபவர். இல்லங்களுக்குள் அறியாது காற்றென புகுந்து கன்னியரை கவர்பவர். கனவுகளில் நுழைந்து அவர்களை காமம் கொள்ளச் செய்பவர். இந்திரனின் எல்லா கதைகளையும் அவர்மேல் ஏற்றிவிடுகிறேன். அது வளரும் சித்திரம். அதை பெண்கள் வளர்ப்பார்கள்.”
“அதுவே அம்மூன்று சித்திரங்களில் அந்தக் கதைக்கு மிக உகந்தது. அறிஞரென அவரை முன்வைத்தால் புலவர்களே ஏற்பார்கள். ஆட்சியாளர் என மாவீரர் என முன்வைத்தால் அவரைப்பற்றி பாடாண் திணை மட்டுமே எழ இயலும். அகத்துறையின் அனைத்துத் திணைகளையும் அவர் நிரப்பி அமர்வார். முல்லையும் குறிஞ்சியும் மருதமும் பாலையும் நெய்தலும் ஆவார். அச்சித்திரமே இசைக்கு உகந்தது. ஆடலுக்கு இயைவது. காவியச்சுவை கொண்டது. கன்னியருக்கு அவர் அகக்காதலர். அன்னையருக்கு அவர் இளமைந்தர். ஆண்களுக்கு அவர் தங்களுள் வாழும் அழியா இளைஞன். அவர் களியாட்டர் என்று ஆகும்போது அவர் பேருருக்கொண்டு எங்கோ இருப்பார். நாம் அவருக்கான எளிய பூசனைகள் வழியாக அவரை மேலும் ஆழப் புதைப்போம்.”
“இச்சொல்லை நான் உங்களுக்கு அளிக்கிறேன். நான் வென்றால் மக்கள் நினைவில் அவ்வாறே அவரை எழுப்புகிறேன். அதைக்கொண்டே பிற அனைத்தையும் மறைக்கிறேன். நூறாண்டுகளுக்குப் பின் அவர் போர் புரிந்தாரா என்ன, நூல் நவின்றாரா என்ன என்று அவருடைய கதையை நாளெல்லாம் கேட்டு வளர்ந்தவர்களே வியக்கும் வண்ணம் ஆக்கிவிடுகிறேன். அவ்வாறு அவரையே மறைக்கிறேன். தோகையைக்கொண்டு மயிலை மூடுகிறேன். அவரை மறைத்தபின் அந்த இடத்தில் என்னை நிறுத்துகிறேன். என்னை களியாட்டற்றவன் என்றும் கலைகளில் ஆர்வமற்றவன் என்றும் காட்டுகிறேன். அரசுசூழ்தலும் ஆட்சியும் மட்டுமே அறிந்த முடிமன்னனாக நிலைநிறுத்துகிறேன்.”
“அவ்வுரு மெல்ல மெல்ல அவருக்கு மேலெழும். அவர் தன் களியாட்டால் அழியவிட்ட துவாரகையை, யாதவப் பெருங்குலத்தை தன் கனவுகளையும் சிரிப்பையும் படையலிட்டு காத்தவன் என்று என்னை காட்டுகிறேன். அவரில் இல்லாதிருந்த ஒன்று என்னில் பேருருக்கொண்டதென்றும் என்னில் அது பேருருக்கொண்டதனாலேயே துவாரகை நிலைநின்றதென்றும் அவருடைய தோல்விகள் அனைத்திலிருந்தும் நான் வென்று எழுந்தேன் என்றும் நிறுவுகிறேன். அதுவே அவரை அழிக்கும் வழி” என்று நான் சொன்னேன். “மூதாதையே, ஒன்றை உணர்க! நீங்கள் இனி களத்தில் அவரை வெல்ல இயலாது. ஏனென்றால் அவர் எந்தக் களத்திலும் இல்லை. உலகக் களங்கள் அனைத்தையும் அவர் கடந்துவிட்டார். அவர் இன்றிருப்பது புகழின் களத்தில். அதில் அவரை வெல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி இதுதான்” என்றேன்.
“அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு மூதாதையே, பெருந்தந்தையரை மைந்தர் அன்றி எவரும் வெல்லமுடியாது. இது மீள மீள நிறுவப்பட்ட உலகியல் உண்மை. நீங்கள் அவரை என் வழியாகவே வெல்லமுடியும் என்று உணர்க! எந்தையின் மைந்தர்கள் எண்பதின்மர். அவர்களில் ஒவ்வொருவரும் அவருடைய ஒவ்வொரு இயல்பை கொண்டிருக்கிறார்கள். அவருடைய சொல்சூழ் திறனின் நீட்சி என்னிடமே. அதை இப்போதே உணர்ந்திருப்பீர்கள். அவரை எந்த மைந்தனாவது வெல்லமுடியும் என்றால் அது நானே” என்றேன்.
கிருதவர்மன் “உன் சொற்களை நான் செவிகொள்வது அதனாலேயே” என்றார். “நீ அங்கே தோன்றிய முதற்கணம் இளமைத் தோற்றத்துடன் உன் தந்தை எழுந்ததாகவே எண்ணினேன். என் அகம் நடுங்கியது. உன்னில் எந்த உடற்சாயலும் இல்லை. அசைவுகளும் வேறு. குரலும் வேறே. ஆனால் நீ அவரென்று ஒரு கணம் தோன்றினாய். பின் மறைந்தாய். ஆனால் பேசப்பேச உன்னில் அவர் தோன்றித்தோன்றி மறைகிறார்.”
“ஆம், அவர் நானே” என்று நான் சொன்னேன். “என்னில் என்றும் எழும் கனவு அவரை நான் கொல்வதாகத்தான். அதைப் பற்றிய பதற்றம் எனக்கு இருந்தது. பின்னர் தெளிந்தேன். அது ஊழ் என்று. எந்தையும் தந்தைக்கொலை செய்தவரே. தாய்மாமன் கம்சரைக் கொன்ற பழி அவர்மேல் என்றும் இருக்கும். அது உருத்துவந்து ஊட்டும். அதுவே என்னில் எழுகிறது” என்றேன்.