கல்பொருசிறுநுரை - 30

பகுதி நான்கு : அலைமீள்கை – 13

நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து என் தேரை நோக்கி வந்தான். அவன் அத்தனை வெறிகொண்டு புரவிக்கால்களில் செம்முகில் எழ வந்தது என்னை திகைப்படையச் செய்தது. “தேரை நிறுத்து!” என்று நான் ஆணையிட்டேன். அவன் வந்து என்னருகே புரவியை இழுத்து மூச்சிரைத்து “தெரிந்துவிட்டது! கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது!” என்றான்.

நான் சரியாகக் கேட்காமல் “இங்கு வந்திருக்கிறாரா?” என்றேன். “இல்லை, இங்கில்லை. அவர் இருக்குமிடத்தை நமது ஒற்றர்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள்” என்றான். “நமது ஒற்றர்களா?” என்றேன். அவன் என் குரலில் ஒலித்த நம்பிக்கையின்மையை புரிந்துகொள்ளவில்லை. “நமது ஒற்றர்கள் அல்ல, அவர்களுடைய ஒற்றர்கள். பிரத்யும்னனின் ஒற்றர்கள் நாடெங்கும் அவரைத் தேடி அலைந்துகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வடக்கே குருநிலையில் அவர் இருப்பதை கண்டறிந்தார். அவர் உடலெங்கும் அனல் பட்டு வெந்திருப்பதால் அங்கு காட்டுக்குள் அமைக்கப்பட்ட தனிமைக்குடிலொன்றில் பிற எவரும் அறியாது தங்கியிருந்திருக்கிறார்” என்றான்.

அவனுக்கு மூச்சிரைத்தது. “நாம் அவர் எங்கோ படைக்களத்திலோ, பாடிவீடுகளிலோ இருப்பார் என்று எண்ணி தேடிக்கொண்டிருந்தோம், பிரத்யும்னனின் ஒற்றர்கள் அவரைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்து அவர் தன்னந்தனிமையில்தான் இருப்பார் என்பதை உய்த்துணர்ந்தனர், தன்னந்தனிமையில் தங்கியிருப்பதற்கான இடங்கள் ஒவ்வொன்றையாக அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். சென்ற சில நாட்களாக அவர்கள் நூறு மடங்கு ஒற்றர்களை இதன்பொருட்டு அனுப்பியிருக்கிறார்கள். சாம்பனும் அதே அளவு ஒற்றர்களை அனுப்பியிருக்கிறார். இரு தரப்பினரின் ஒற்றர்களும் ஒருவருக்கொருவர் செய்திகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே இதுவரை விரிக்கப்படாத மிகப் பெரிய வலை விரிக்கப்பட்டது.”

“இறுதியாக கிருதவர்மனை அடையாளம் கண்டுகொண்டார்கள். அங்கு அவரிடம் பேசும்பொருட்டு எவரையேனும் அனுப்பவேண்டுமென்று நேற்று பிரத்யும்னன் அவையில் பேசப்பட்டிருக்கிறது. பிரத்யும்னன் கவலையுடன் இருக்கிறார். கிருதவர்மன் இங்கு வரும் உளநிலையில் இல்லை என்று அவர் ஒற்றர்கள் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை நம்பவில்லை. அவர் இங்கு வருவார் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். அதைப் பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்திருக்கிறது. அதை உடனடியாக அங்குள்ள ஒருவர் நமக்கு தெரிவித்திருக்கிறார். அவர் நமக்கு நெருக்கமானவர்” என்றான்.

“அங்கு அத்தகைய பேச்சு எழுந்தால் மிக அணுக்கமான உடன்பிறந்தார் நடுவேதான் நடந்திருக்கும்” என்றேன். “ஆம், அதில் ஒருவர் நம்மவர் என்றார்கள். ஆனால் அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “எனக்குத் தெரியும்” என்று நான் சொன்னேன். “எவ்வண்ணமாயினும் அது நன்று. நமக்குத் தெரிந்துவிட்டது. மூத்தவர் உங்களை சந்திக்க விரும்புகிறார்” என்றான் ஃபானுமான். “என்னையா?” என்றேன். “ஆம், சாத்யகியை நீங்கள் சந்தித்துவிட்டீர்களா என்று பார்க்கும்படி மூத்தவர் சொன்னார். நீங்கள் வந்தவுடனே அழைத்துவரும்படி ஆணை” என்றான்.

அவனை தேரிலேற்றிக்கொண்டு நான் துவாரகையின் அரண்மனைக்கு சென்றேன். துவாரகையின் நகர் முற்றாக மாறிவிட்டிருப்பதை கண்டேன். ஒவ்வொருவரும் ஊக்கம் கொண்டிருந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல தோன்றியது. ஏதேனும் நிகழும்போது மக்கள் மகிழ்வு கொள்கிறார்கள். திரள் என்ற வகையில் மக்களின் அன்றாடம் என்பது சலிப்பில் ஊறியது. விழவுகள் அவர்களை ஊக்கப்படுத்துவது போலவே போர்களும் பிற அழிவுகளும் கொடுநோய்களும்கூட பரபரப்படையச் செய்கின்றன. எந்தப் பரபரப்பையும் அவர்கள் ஒருவகை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாவற்றையுமே கொண்டாடுகிறார்கள்.

எதுவோ ஒன்று அணுகப்போகிறது என்று அனைவரும் அறிந்திருக்கிறார்கள் என அனைவர் முகங்களும் காட்டின. சாலையில் செல்லும் வண்டியை பேச்சை நிறுத்திவிட்டு பலநூறு பேர் நின்று கூர்ந்து பார்த்தார்கள். ஒவ்வொருவரும் அதை எப்படி ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்த ஒரு செய்திக் கதையின் ஒட்டுமொத்த விரிவில் கொண்டுசென்று பொருத்தலாம் என்று எண்ணுவதாக எனக்குத் தோன்றியது. துவாரகையின் அரண்மனை முன் தேரிலிருந்து இறங்கினேன். அங்கு மேலும் இரு உடன்பிறந்தார் எனக்காக காத்து நின்றிருந்தனர். அவர்களும் பரபரப்படைந்திருந்தனர்.

“மூத்தவர் உன்னை அழைக்கிறார்” என்றார் சந்திரஃபானு. நான் “என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்து உடைமாற்றி மூத்தவரை சந்திக்கச் செல்லலாமே” என்றேன். “இல்லை, உன்னை உடனடியாக சந்திக்கவேண்டுமென்று விரும்புகிறார்“ என்றார் சந்திரஃபானு. நான் சலிப்புடன் “நான் நீண்ட பயணம் முடித்து வந்திருக்கிறேன். பொறுத்திருக்கச் சொல்க! அரைநாழிகைக்குள் அரண்மனை அறைக்கு சென்றுவிடுகிறேன்” என்றேன். எப்படியாயினும் நான் பொழுது எடுத்துக்கொண்டுதான் எதையும் செய்ய இயலும். ஆனால் மூத்தவர் உளம் பொறுக்காமல் என்னை பல முறை தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

அதுவே அவருடைய தகுதிக்குறைவு. ஓர் அரசன் தனக்கு எத்தனை பதற்றம் இருந்தாலும், எத்தனை உளஎழுச்சி இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாதவனாகவே காட்டிக்கொள்ளவேண்டும். அது அளிக்கும் ஆற்றல் அளப்பரியது. தன்னியல்பிலேயே தொய்ந்த உளநிலை கொண்டவர்கள், எந்தப் பேச்சையும் மெதுவாகவே பேசுபவர்கள், உயர்குடியில் பிறந்த பழக்கத்தினாலேயே எந்த அவையிலும் பொருட்படுத்தாமல் இயல்பாக இருப்பவர்கள் அவ்வியல்பினாலேயே பேரரசர்களாக தோற்றமளிப்பதும் பேரரசர்களாகவே வாழ்ந்து மறைவதும் இயல்வதே. ஆனால் பரபரப்பு கொள்பவனும், கிளர்பவனும், குரல் எழுப்புபவனும், நிலைகொள்ளாதவனும் எத்துணை வீரர்கள் ஆயினும் மதியூகிகளே ஆயினும் அவையில் ஒருகணத்தில் தங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள்.

நான் துவாரகையின் அரண்மனையின் படிகளில் ஏறி இடைநாழிகளினூடாக நடக்கையிலேயே மேலும் இரு உடன்பிறந்தார் என்னை நோக்கி வந்தனர். “மூத்தவர் உங்களை தேடிக்கொண்டிருக்கிறார். மிக முதன்மையான செய்தி. உடனடியாக தங்களை பார்க்கவேண்டுமென்றார்” என்று ஸ்ரீஃபானு கூவினான். ”அதற்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன். அரைநாழிகையில் செல்வேன்” என்றேன். மூத்தவரான பிரஃபானு என்னிடம் “என்ன, உனக்கு அவையில் முதன்மை இடம் அமைகிறதுபோல தோன்றுகிறதே?” என்றார். அவர் கண்களில் இருந்த பொறாமையை கண்டேன். அதற்கு என்ன மறுமொழி சொல்லவேண்டும் என்று அறிந்திருந்தேன். “நான் முதன்மை பெறுவதென்றால் அது தாங்கள் வெற்றி பெறுவதுபோல அல்லவா?” என்றேன்.

அது மிக நேரடியான ஒன்றுதான், அத்தகைய நேரடிக் கூற்றுகளை நோக்கி நம்பிக்கைக் குறைவை வெளிப்படுத்துவது மானுட இயல்பு. ஆனால் அது நான் அறிந்தவரை காதலிலும் அரசுப்போட்டியிலும் மட்டும் அவ்வாறல்ல. நேரடியான பற்றை வெளிப்படுத்துவதும், வஞ்சினத்தை உரைப்பதும், வெற்று முகமன்களும்கூட இங்கு முகம்மலரச் செய்கின்றன. பொருளாழம் கொண்டவைபோல் தோன்றுகின்றன. பெரும்பாலான தருணங்களில் அனைத்து வழமைச்சொற்களுக்கும் நேரடிப்பொருளே கொள்ளப்படுகிறது. பிரஃபானு மலர்ந்து “பேச்சு மட்டும் குறைவில்லை. நன்று, உடனே ஒருங்கி வா. உனக்காக அவை காத்திருக்கிறது” என்றார்.

நான் மூத்தவர் அறைக்குள் நுழைந்தபோது அங்கே கணிகர் இருந்தார். பிற உடன்பிறந்தவர்களும் கொந்தளிப்புடன் பேசிக்கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்து தலைவணங்கி முகமன் உரைத்ததும் மூத்தவர் எழுந்து என்னை நோக்கி வந்து “என்ன நிகழ்ந்ததென்று சொல்… அவைக்கு சொல்” என்றார். “நான் ரிஷபவனத்தின் அரசர் சாத்யகியை பார்த்தேன். அவரிடம் தங்கள் ஆணையை உரைத்தேன். அவர் இங்கு நம் குடித்தலைவர்களிடையே நிகழும் பூசலைக் கண்டு கவலை கொண்டிருக்கிறார். இளைய யாதவரின் குடிகளிடையே பூசல் நிகழ்வதை எவ்வகையிலும் தான் ஏற்க இயலாது என்றும் அதில் எந்த ஒரு தரப்பையும் தான் எடுக்க இயலாது என்றும் சொன்னார்” என்றேன்.

“கிருதவர்மனைப் பற்றி சொன்னாயா?” என்றார் ஃபானு. “ஆம், கிருதவர்மன் படைமுகம் நிற்பாரெனில் உடன் நிற்பதற்கு அவருக்கு தயக்கமுண்டா என்று கேட்டேன். இல்லை, எவராயினும் தான் படைமுகம் வரப்போவதில்லை என்று அவர் சொன்னார்” என்றேன். சுஃபானு “நீ என்ன சொன்னாய்?” என்றார். “படைமுகம் வரப்போவதில்லை என்ற நிலைபாட்டையாவது அவர் உறுதியாக எடுக்கவேண்டுமென்று விரும்பினேன். அதை ஓரிருமுறை வலியுறுத்தினேன். அவர் அதையும் அறுதியாகச் சொல்லவில்லை” என்றேன். சுஃபானுவும் மதிசூழ்திறன் கொண்டிருந்தாலும் அரசருக்குரிய உணர்வடக்கம் அற்றவர் என்று எண்ணிக்கொண்டேன்.

“அவர் படைமுகம் வராமலிருக்க இயலாது. வந்தே தீரவேண்டும்” என்று ஃபானு சொன்னார். ”ஏனென்றால் கிருதவர்மன் அந்தகக் குடியைச் சேர்ந்தவர். அவர் வந்து நம் படைத்தலைமையை அடைவாரென்றால் விருஷ்ணிகளின் இடம் இல்லாமலாகும். ஏற்கெனவே நம் அன்னை அந்தகர் என்பதனால் அந்தகர்களின் கை ஓங்கியிருக்கிறது என்னும் பேச்சு உள்ளது. அவர் வந்தாலொழிய விருஷ்ணிகளின் இடம் இணைநிலை பெறாது.” ஃபானுமான் “அவர் வருவது நமக்கும் நல்லது. விருஷ்ணிகள் அவர் வந்தால் தங்கள் இடம் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை அடைவார்கள்” என்றான்.

“ஆம்” என்று நான் சொன்னேன். “நாம் முதலில் சாத்யகியைத்தான் அழைக்கச் சென்றோம் என்பது இப்போது துவாரகையில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. விருஷ்ணிகள் இனி குறை சொல்லமுடியாது.” சுஃபானு “என்ன சிக்கல் என்றால் அந்தகரோ விருஷ்ணிகளோ எவர் உளக்குறையுடன் விலகி நிற்கிறாரோ அவர் தரப்புக்கு போஜர்களும் குக்குரர்களும் சென்று சேர்ந்துகொள்கிறார்கள். உடனே அத்தரப்பு பெரிதாகிவிடுகிறது. அக்கணமே எதிர்த்தரப்புக்கு உளக்குறை எழுகிறது. அந்தகர்களும் குக்குரர்களும் இப்பக்கம் வந்துவிடுகின்றனர். சென்ற சில மாதங்களுக்கு முன்புவரை உளக்குறைகொண்டவர்களாக இங்கிருந்தவர்கள் அந்தகர்கள். இன்று விருஷ்ணிகள். இந்த ஊசல் நிலைகொள்ளவே இல்லை” என்றார்.

“அவர் வந்தாகவேண்டும்” என்று ஃபானு மீண்டும் சொன்னார். “வருவார் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால் மிகவும் தயங்கிக்கொண்டிருக்கிறார்” என்றேன். “அவரை தயக்கம் அழித்து படைமுகம் வரச்செய்யும் செய்தியைத்தான் நாம் இப்போது பெற்றிருக்கிறோம். கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது” என்றார் ஃபானு. “ஆம், சற்றுமுன் சொன்னார்கள்” என்றேன். ஃபானு சலிப்புடன் “எவரிடமும் சொல்லலாகாது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இவர்கள் ஊரெல்லாம் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள், வீணர்கள்” என்றார். “என்னிடம் மட்டும்தான் சொன்னார்கள்” என்றேன்.

“உன்னிடம் மட்டும் சொல்லியிருக்க மாட்டார்கள், செல்லும் வழியெங்கும் அனைவரிடமும் சொல்லியிருப்பார்கள், தங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நூறு செவிகளுக்கு இதற்குள் சென்று சேர்ந்திருக்கும். இது தைலம் நனைந்த காடு போலிருக்கிறது. எக்கணமும் மொத்த நகரமும் ஏதேனும் ஒன்றால் பற்றிக்கொள்ளும்” என்றார் சுஃபானு. நான் ஒன்றும் சொல்லவில்லை. “கிருதவர்மன் தனிமையில் இருக்கிறார். அவரை பிரத்யும்னனின் ஒற்றர்கள் கண்டடைந்துவிட்டார்கள். அச்செய்தியை அவர் தரப்பில் இருந்து நமக்கு சொன்னார்கள். அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. நாம் அவரை சென்று சந்தித்து இங்கு அழைத்து வரவேண்டும். உரிய முறையில் அதற்குரிய தூதை அனுப்பவேண்டும்” என்றார் ஃபானு.

நான் என்னை அழைத்தது அதற்கே என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். ஆனால் எனது நிலையில் உள்ள ஒருவரை அத்தனை தொலைவு அத்தனை பெரிய பணிக்கு அனுப்புவார்களா என்ற ஐயமும் இருந்தது. ஆகவே குழப்பமாக அவர்களை பார்த்தேன். “கணிகரிடம் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் நான் சுஃபானுவை அனுப்பலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். அத்தனை அவைமுதன்மை கொண்டவரை தொடக்கத்திலேயே அனுப்பவேண்டாம் என்றார் கணிகர். ஏனென்றால் ஒருவேளை நாம் பலமுறை வலியுறுத்த வேண்டியிருக்கும். அரசக்குருதியில் ஒருவரே செல்ல வேண்டும். ஆனால் அது படிநிலையில் இறுதியில் இருப்பவராக இருக்கவேண்டும். அவர் சென்று மன்றாட வேண்டும். அம்மன்றாட்டு அரசரின் மன்றாட்டாகவும் இருக்கவேண்டும், அரசருக்கு சிறுமையாகவும் அமையக்கூடாது.”

“மேலும் அது வெல்லவேண்டுமென்றால் மறுபடியும் இன்னொருவர் செல்ல வேண்டும். நாலைந்து பேர் தொடர்ந்து சென்று அவர் உளம் கரைக்கவேண்டும். எப்படியிருந்தாலும் வந்துகொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் எழவேண்டும். ஒருவேளை அரசராகிய நானே சென்று மன்றாடக்கூடும் என்று கிருதவர்மன் ஐயுற வேண்டும் என்றார் கணிகர். அது நல்ல எண்ணம் என்று தோன்றியது. ஆகவேதான் உன்னை வரவழைத்தேன்” என்றார் ஃபானு. “ஆகவே நீயே செல்லலாம். உன் சொற்களில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உன்னை சொல்பயிற்றுவித்து அனுப்ப கணிகரும் முன்வந்திருக்கிறார்.”

சுஃபானு “மேலும் ஏற்கெனவே நீ சாத்யகியை சந்தித்துவிட்டாய். நீ சாத்யகியை கண்டாய் என்பது கிருதவர்மனுடனான பேச்சில் மிக முதன்மையான ஒரு செய்தி. அதை நீ குறிப்பிட்டாகவேண்டும்” என்றார். “நான் எவ்வகையில் அதை குறிப்பிடவேண்டும்?” என்றேன். “சாத்யகி விருஷ்ணிகளின் படைத்தலைமை கொள்ளபோகிறார் என்று கூறு. அதற்கு நிகராக அவர் அறுதியாக துவாரகையின் அரசில் ரிஷபவனத்திற்கு முதன்மையை கோருகிறார் என்று கூறு. நான் அதற்கு ஏறத்தாழ ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் எனக்கு வேறு வழியில்லை என்றும் சொல்” என்றார் ஃபானு.

நான் “பொய் கூறவேண்டுமா?” என்றேன். “பொய்யல்ல அரசுசூழ்தல்” என்றார் மூத்தவர். “அவர் வந்தாகவேண்டும். அதற்குத்தான் உன்னை அனுப்புகிறேன்.” நான் தலைவணங்கினேன். “இங்கிருந்து நீ செல்ல இரண்டு நாட்களாகும். அங்கு செல்வதற்குள் நீ செல்லும் செய்தி இங்கு பரவிவிடும். அதை அத்தனை ஒற்றர்களாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். இங்குள்ள எந்த அமைப்பும் அதை மறைக்கவும் இயலாது” என்று சுஃபானு சொன்னார். “நீ செல்வதற்குள் இவர்கள் இங்கே தங்களை பெருக்கிக்கொள்வார்கள். ஒருவேளை படைமுகம் கொண்டு துவாரகையை தாக்கவும் கூடும். நமது முழுப் படைகளையும் ருக்மியையும் அவந்தியையும் எதிர்கொள்ளும்பொருட்டு ஒருக்கி நிறுத்திய பிறகே உன்னை அனுப்புகிறோம்.”

“நீ முடிந்தவரை விரைவாக செல்லவேண்டும். நீ சென்று அவர் காலடியில் விழுந்து மன்றாடி அவரை அழைத்து வரவேண்டும். இங்கு அவரை அழைத்துவரும் முதன்மை விசை ஒன்றே. இங்கு சாத்யகி முதன்மை பெற்றுவிடக்கூடும் என்பது. சாத்யகியை அவர் பொறுத்துக்கொள்ளமாட்டார். சாத்யகியின் மைந்தரை அவர் கொன்றிருக்கிறார். அவரது மைந்தர்கள் சாத்யகியால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நிமித்திகர்களின் கூற்று நிகழுமெனில் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றொழிப்பார்கள்” என்று ஃபானு சொன்னார்.

“அத்தகைய முற்கூற்றுள்ள இருவரை ஒரே படையில் வைக்கவிருக்கிறோம்” என்று நான் சொன்னேன். “ஆம், ஆனால் அதுவும் ஒருவகையில் நன்று. நாம் இந்த நிலத்தை வென்று நகர்கொண்ட பிறகு முடிசூடும்போது அவர்கள் இருவரும் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு உகந்த இடத்தை அளித்தாகவேண்டும். என்ன இருந்தாலும் அவர்கள் வேற்றுநாட்டு அரசர்கள்” என்று சுஃபானு சொன்னார். “ஆம், முடி வென்று நமக்கு அதை அளித்தவர்கள் நமது கீழே அடங்கியிருக்கும் நாடுகளாக அமையமாட்டார்கள். நம்மை ஆள விரும்புவார்கள். அரசனுக்கு அரசர்களாக இங்கு அவை நிகர்க்க எண்ணுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றொழிப்பார்கள் என்றால் அதுவும் நன்றே. அவர்களின் மைந்தர்களும் இன்றில்லை. அவர்களின் குடி அயலாகும். அவர்களின் நிலங்களும் துவாரகையின் ஆட்சிக்கு கீழ் வரும்” என்று ஃபானு சொன்னார்.

அக்கணம் எனக்குத் தோன்றியது அவர் அதை அந்த அவையில் சொல்லியிருக்கக்கூடாது என்று. எப்படி பிரத்யும்னனின் அவையிலிருந்து செய்திகள் இங்கு வருகிறதோ அதுபோல இங்கிருந்து செய்திகள் அங்கும் செல்லும். சாத்யகியிடம் இந்தச் சொல் ஓரிரு நாட்களுக்குள் சென்று சேரும் என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் எங்கு எவர் என்று விழிகளிலிருந்து கருத முடியவில்லை. நான் ஒவ்வொரு கண்களையாக பார்த்துக்கொண்டு கணிகரின் கண்களை வந்தடைந்தேன். கணிகரின் கண்கள் புன்னகைப்பதுபோல் மின்னிக்கொண்டிருந்தன. நான் தலைவணங்கி “அரசரின் ஆணையை தலைக்கொள்கிறேன்” என்றேன்.

அரசரின் ஆணையைப் பெற்று அன்றே ஓரிரு நாழிகைக்குள் நான் வடதிசை நோக்கி கிளம்பினேன். எனக்குரிய பயண ஒருக்கங்கள் நடந்துகொண்டிருந்தபோது என் அறையில் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடி இரண்டு நாழிகை துயில்கொண்டேன். என் உடல் களைத்திருந்தது. அதைவிட உள்ளம் களைத்திருந்தது. உள்ளம் சலிக்குமளவு ஏதும் நிகழவில்லைதான். உண்மையில் நான் எண்ணியது மேலும் மேலும் கூர்கொண்டு நடந்துகொண்டிருந்தது. எனது இடம் வலுப்பெற்றுக்கொண்டு வருவது எனக்குத் தெரிந்தது. ஒவ்வொருவரும் என்னை நோக்கும் பார்வை மாறிவிட்டிருக்கிறது. அதுவரை நோக்கு படாதவனாக இருந்தவன் ஒவ்வொரு நோக்குக்கும் மையமாக ஆகிறேன்.

ஓர் அவையில் நுழைகையில் அத்தனை விழிகளும் என்னை நோக்கி திரும்புவதும், நான் பேசுகையில் ஒவ்வொருவரும் என் கண்களையும் உதடுகளையும் பார்த்துக்கொண்டிருப்பதும் எனக்கு புதியது. ஆனால் அவை என்னை மேலும் மேலும் தன்மையம் கொண்டவனாக ஆக்கின. மேலும் ஆற்றல் கொண்டவனாக ஆக்கின. நோக்குகளே மானுடரை ஆற்றல்மிகச் செய்கின்றன என்று அப்போது எனக்குத் தெரிந்தது. அரசர்கள் என்பவர்கள் பிறரால் கூர்ந்து நோக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். சுழலும் வட்டத்தின் மையம் என்று ஒருவர் ஆவது அவ்வாறுதான். நோக்கப்படுகையில் அவர் சொற்கள் அழுத்தம் கொள்கின்றன. அவரது கையில் இருக்கும் ஒவ்வொரு படைக்கலமும் பலமடங்கு விசையும் எடையும் கொள்கிறது.

நான் மூத்தவர் ஃபானுவை எண்ணும்போது ஒவ்வொரு முறையும் மிகக் கீழ்நிலையிலிருந்து பணிவுடன் அண்ணாந்து நோக்கியிருந்தேன். அன்று அவர்களை எனக்கு இணையாக வைத்துப் பேசிய குரலில் இருந்த நம்பிக்கையும் கூர்மையும் அவர்களுக்கும் விந்தையாக இருந்திருக்கக் கூடும். எவ்வகையிலும் அதில் தயக்கமில்லை. என் எண்ணங்களை பற்றிய ஐயமும் எனக்கில்லை. பேசப்பேச அவர்கள் ஒவ்வொருவரைவிடவும் கூர்மை கொண்டவனாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் காணாதவற்றை காண்பவனாகவும் மாறினேன். மிக எளிதாக அவர்களை விலக்கி அந்த அரியணையில் அமரக்கூடியவன் என்று எனக்குத் தோன்றியது. அந்த எண்ணம் முன்பு ஒரு விழைவாக இருந்தது. பின்பு ஒரு நம்பிக்கையாயிற்று. இறுதியாக இயல்பான முடிவாக, பிறிதொன்றாக நிகழ முடியாத ஊழ்நெறியாக எனக்கு தோன்றத் தொடங்கியது.

தந்தையே, நான் துயிலில் உங்களை கண்டேன். நீங்கள் ஒரு காட்டுக்குள் கல்லாலான பீடம் ஒன்றில் கண்மூடி அமர்ந்திருந்தீர்கள். புன்னகைத்துக்கொண்டிருந்தீர்கள். ஆனால் துயருறுகிறீர்கள் என்று உங்களை நோக்கி வந்தேன். நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள் என்றும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் எனக்குத் தோன்றியது. ஆனால் அணுக அணுக உங்கள் முகத்திலிருப்பது புன்னகைதான் என்று கண்டேன். அந்தப் புன்னகை என்னை எரிச்சலுறச் செய்தது. சினத்துடன் உங்களை நோக்கி நான் வந்துகொண்டிருக்கும்போதே விழித்துக்கொண்டேன். என்னைக் காத்து ஏவலன் நின்றிருந்தான். நீராடி ஆடைமாற்றி கிளம்பியபோது தேர் ஒருங்கியிருந்தது.

தேரிலேறிக்கொண்டு “செல்க!” என்றேன். தேர் துவாரகையின் எல்லையைக் கடந்து பெரும்பாலை நிலத்திற்குள் சென்றபோது மீண்டும் துயில்கொண்டேன். மீண்டும் உங்களை கண்டேன். மீண்டும் அதே பீடத்தில் நீங்கள் புன்னகையுடன் அமர்ந்திருப்பதை கண்டேன். இம்முறை அப்புன்னகை என்னை குழப்பியது. நான் எண்ணுவது அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று தோன்றியது. அல்லது நான் எண்ணுவதற்கு அப்பால் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நிகழவிருப்பதை அறிந்துகொண்டிருக்கிறீர்கள். அவற்றிலிருந்து விலகியிருக்கிறீர்கள்.

எப்பொழுதும் அந்தப் புன்னகை உங்களிடம் இருக்கிறது என்பதை நான் விழித்த பிறகுதான் என்னால் உணர முடிந்தது. நான் நினைவறிந்த நாளிலிருந்தே அனைத்தும் அறிந்தவர்போல் ஒரு புன்னகையை நீங்கள் சூடிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அது உங்களை பிறர் ஐயம் கொள்ள வைத்தது. உங்களுடன் பேசும்போது குழம்ப வைத்தது. உங்களை ஆற்றல் கொண்டவராக்கியது அந்தப் புன்னகையே. அதை அரசுசூழ்வோர் பலர் உங்களுடைய படைக்கலம் என்று சொல்வதையே கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புன்னகையை நானும் பயிலவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அனைத்தும் அறிந்தவனுடைய புன்னகை. ஆனால் அது மிகவும் எடைகொண்ட படைக்கலம். அனைத்தும் அறிந்தவன் என தன்னை காட்டுபவன் சற்றேனும் அறிந்தவனாக இருக்கவேண்டும். எங்கும் எதன்முன்னும் சற்றும் பதறாதவனாக இருக்கவேண்டும். அப்புன்னகையைக் காட்டி அவ்வப்போது அச்சத்தையோ ஐயத்தையோ காட்டுவேன் என்றால் அறிவிலி என்றே தோற்றமளிப்பேன். ஆனால் நான் உங்களைப்போல் ஆகிவிடவேண்டும் என்று எண்ணினேன். உங்கள் அரியணையில் அமர்கையில், உங்களை தொடர்பவன் என்று வரலாறு என்னைப்பற்றி கூறுகையில், நான் உங்களைவிட ஒரு படி மேலென எழவேண்டும்.

ஆம் தந்தையே, அவ்வாறே எண்ணினேன். அதை ஏன் எண்ணினேன் என்று இன்று எண்ணுகையில் நகைப்பே எழுகிறது. ஆனால் அவ்வாறு எண்ணினேன். அவ்வாறு எண்ணாமல் இருக்க இயலாது என்று தோன்றியது. மாமானுடரின் மைந்தராயினும் மைந்தர்கள் தந்தையை வெல்ல எண்ணுகிறார்கள். வென்றுவிடக்கூடுமென்று கனவு காண்கிறார்கள். அக்கனவில்லையேல் அவர்கள் வாழ இயலாது. அவர்களுடைய ஒவ்வொரு நாளும் சொல்லும் செயலும் பொருளற்றுப் போகிறது. நான் உங்களுக்கு நிகராக வேண்டுமென்று கனவு காண்பது மிகையென்று எண்ணிய ஒரு காலம் இருந்தது. உங்களுக்கு நிகரென்றாகக் கூடுமென்று எண்ணியது அதன் பெரும் பாய்ச்சல். உங்களுக்கு நிகரென்று அமர்ந்திருப்பேன் என்று நம்பத்தொடங்கியது என் வாழ்வின் ஆணவத்தின் உச்சம். ஆனால் அதுவே என் இருப்பின் உயர்நிலை.

தந்தையே, மிக எளிதாக உங்களை கடந்து செல்வேன் என்றும், வரலாறு என் தந்தையென்றே உங்களை சொல்லும் என்றும், எண்ணிக்கொள்ளும் அளவுக்கு ஆணவம் என் உள்ளே கூர்கொண்டு பேருருக்கொண்டு நின்றிருந்தது என்பதை எண்ணுகையில் தெய்வங்கள் மானுடரை எவ்வண்ணம் படைத்திருக்கின்றன என்ற விந்தையுணர்வையே அடைகிறேன். மானுடரை தெய்வங்கள் வைத்து விளையாடுகின்றன. அவர்களை நோக்கி சிரிக்கின்றன. எளிய களிப்பாவைகளன்றி வேறல்ல நாம். தந்தையே, நீங்களும்கூட. நீங்கள் தெய்வமாகவே இருக்கலாம். உங்களுள் உள்ள தெய்வத்தின் கைப்படைக்கலம் நீங்கள்.