கல்பொருசிறுநுரை - 28

பகுதி நான்கு : அலைமீள்கை – 11

கணிகர் அத்தனை எளிதாக பேசத்தொடங்கிவிடமாட்டார் என்று நான் எண்ணினேன். நிறைய சொல்கூட்டி சுற்றி அங்கே செல்வதே அவர் வழக்கம். என் அருகே இருந்த ஸ்ரீபானுவிடம் சுபூர்ணர் உரத்த குரலில் தன்னிடம் இருக்கும் படைப்பிரிவுகளையும் அவை ஒவ்வொன்றின் திறமைகளையும் சொல்லத்தொடங்கியிருந்தார். அவன் முற்றாகவே மறுபக்கம் திரும்பிவிட்டிருந்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேச்சில் மூழ்கினர்.

மூத்தவர் ஃபானு எழுந்து சென்று ஸ்வரஃபானுவின் அருகே அமர்ந்து அவர் தோளைத்தொட்டபடி பேசத்தொடங்கியிருப்பதை பார்த்தேன். மூத்தவர் ஃபானுவுக்கு எப்போதுமே ஸ்வரஃபானு மேல் ஐயமும் அதன் விளைவான அச்சமும் இருந்தது. அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஏனென்றால் விருஷ்ணிகளின் தலைவர் என தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஒரு தருணத்தையும் ஸ்வரஃபானு தவறவிட்டதில்லை. அன்று மூத்தவர் அஞ்சுவதற்கு எஞ்சியிருந்தது விருஷ்ணிகளின் ஐயம்தான்.

நான் அதை பார்ப்பதைக் கண்ட கணிகர் என்னிடம் “அவர் விருஷ்ணிகளை அஞ்சுகிறார்” என்றார். நான் அவரை திரும்பிப் பார்த்து “ஆம்” என்றேன். “இயல்பானதுதான் அது. விருஷ்ணிகளே இந்நகரத்தை அமைத்தவர்கள். ஆனால் அவர்கள் போர்வீரர்கள் அல்ல” என்று நான் சொன்னேன். “அது வேறு. ஆனால் இன்று நம்முடைய துணையரசுகளாக இருக்கும் இரு நாடுகளும் விருஷ்ணிகளுக்குரியவை. மதுவனமும் மதுராவும் இன்றி இங்கே துவாரகை நிலைகொள்ள இயலாது. போஜர்களுக்கு மார்த்திகாவதியும் அந்தகர்களுக்கு ஹரிணபதமும்தான் எஞ்சியிருக்கின்றன. அவை இரண்டும் இன்று ஆற்றல் உள்ள நகரங்களே அல்ல” என்றார் கணிகர்.

“அந்தகக் குலத்து நிம்னரின் மைந்தரும் ஹரிணபதத்தின் அரசருமான சத்ராஜித்தின் கொடிவழியினர் இன்று பெயரறியாதவர்களாக சுருங்கிவிட்டனர். சத்ராஜித்தின் தங்கைமைந்தர் விஸ்வஜித் அங்கே ஆட்சி செய்வதை அவர் மட்டுமே அறிவார். குந்திபோஜருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவர் இறுதி அரசியின் மைந்தன் விரோசனன் ஆற்றல் அற்றவன். குந்திதேவி அஸ்தினபுரியிலிருந்து மிக விலகி எங்கோ சென்றுவிட்டபிறகு விருஷ்ணிகள் எவ்வகையிலும் அஸ்தினபுரியின் உதவியை தேடவும் முடியாது. இன்றிருக்கும் நிஷாத அரசியான சம்வகை துவாரகை அழியுமென்றால் நன்று என்று எண்ணுபவராக இருக்கிறார்” என்று கணிகர் சொன்னார்.

“விருஷ்ணிகள் ஆற்றல் இழந்திருக்கிறார்கள். ஆனால் விருஷ்ணிகள் இந்நகரை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தன்னுணர்வு இருக்கிறது. அந்தத் தன்னுணர்வு ஒரு பெரும் படைக்கலம். இதை விட்டுவிடலாகாது, இது தங்களுடையது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பிறருக்கு மோதிப் பார்ப்போம், இயன்றால் வெல்வோம், இல்லையென்றால் சென்று தங்கள் இடத்தை தேர்வோம் என்ற எண்ணம் இருக்கும். தன் மனைவிக்காக போரிடுவதைவிட மைந்தனுக்காக மேலும் போரிடுவார்கள் மானுடர்கள்” என்றார். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆகவே விருஷ்ணிகளின் தலைவராக ஸ்வரஃபானு தன்னை நிறுத்திக்கொள்வதென்பது அந்தகர்களுக்கு அறைகூவலே. அவரை உடன் நிறுத்தியாகவேண்டும்” என்றார் கணிகர்.

“அதைத்தான் மூத்தவர் செய்கிறார்” என்றேன். “இல்லை இல்லை. அதன் பொருட்டு அவர் பிழை செய்கிறார். விருஷ்ணிகளை தன்னுடன் நிறுத்துவதற்காக விருஷ்ணிகளின் தலைவர்களை அவர் மதிக்கிறார். அவையமர்வு கொடுக்கிறார். அவர்களிடம் இன்சொல்லாடுகிறார். விளைவாக அவர்கள் அவைமுதன்மை பெறுவார்கள். அவர்களின் குடிக்கு அவர்கள் மறுப்பில்லா தலைவராவார்கள். நம் எதிரியை நாமே ஆற்றல்மிக்கவராக ஆக்கிக்கொள்வதுதான் அது. எப்போதும் நாம் அதை செய்கிறோம், நம் எதிரிகளை நம்முடன் நிறுத்தும் பொருட்டு அவர்களை மதிக்கிறோம். அம்மதிப்பினூடாக அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்குகிறோம்” என்றார்.

“பிறகென்ன செய்யவேண்டும்?” என்று நான் எரிச்சலுடன் கேட்டேன். “ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களை விருஷ்ணிகளுக்கு உருவாக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ஃபானு ஆற்றல்மிக்கவராக ஆகமுடியும்” என்றார் கணிகர். “இன்று இளைய யாதவரின் மைந்தரில் விருஷ்ணிகளின் தலைவராக ஸ்வரஃபானு மட்டுமே இருக்கிறார். இன்னொரு தலைவர் நமக்கு தேவை.” நான் “யார்?” என்றேன். “தெரியாது. ஆனால் இன்னொருவரை உருவாக்கியே ஆகவேண்டும். அவர் பாமையின் மைந்தர்களில் ஒருவராக இருக்க முடியும்” என்றார் கணிகர்.

“எனில் நாங்கள் பத்து உடன்பிறப்புகளும் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக்கொள்ள வேண்டும் என்று அல்லவா ஆகிறது?” என்றேன். “ஆம், அதற்கு மாற்று வழியே இல்லை. எப்படி இருந்தாலும் இந்தப் பத்து பேரில் ஓரிருவரே எஞ்சமுடியும். ஃபானுவும் அவருடன் உறுதியாக நின்றிருக்கும் மைந்தர்களும். அவருடன் சிறு உளவேறுபாடு கொண்டவர்கள்கூட கொல்லப்படுவார்கள். அதை தவிர்க்கவே முடியாது” என்றார் கணிகர். “கொல்லப்படுவார்களா?” என்று நான் கேட்டேன். “அழிக்கப்படுவார்கள். எச்சமின்றி. வேறெந்த நஞ்சை எஞ்சவிட்டாலும் உடன்பிறந்த நஞ்சு ஒரு துளிகூட எஞ்சலாகாது” என்றார் கணிகர்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆனால் அது அத்தனை எளிதல்ல” என்று அவர் மேலும் சொன்னார். நான் அவர் கண்களை பார்த்தேன். “இங்கு நான் பார்த்தவரை துலாவின் தட்டுகள் மேலும் மேலும் இணையாகிக்கொண்டே செல்கின்றன. யாதவருக்குள் ஃபானு ஆற்றல்மிக்கவர். ஏனெனில் அவர் முதன்மையானவர். இயல்பான தலைமை கொண்டவர். ஆனால் படைநடத்தத் தெரியாதவர். அந்தகர்களின் தலைவர் என்னும் அடையாளமும் கொண்டவர். ஸ்வரஃபானு விருஷ்ணிகளின் தலைவர் என அறியப்படுபவர், படைநடத்தத் தெரிந்தவர். அவருக்கு விருஷ்ணிகளின் தலைவர் என இங்கே வரவிருக்கும் கிருதவர்மனின் வாழ்த்தும் இருக்குமெனில் இணையான தலைவராகிவிடுவார்” என்றார் கணிகர்.

“கிருதவர்மன் அவ்வண்ணம் ஒரு தரப்பெடுப்பாரா?” என்றேன். “வேறு வழியில்லை. கிருதவர்மன் எக்குலத்தைச் சார்ந்தவரோ அக்குலத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். தன் குலத்திற்குமேல் எழும் தகைமைகள் கொண்டவர்கள் சிலரே. குலத்தையும் குடியையும் விட்டு மேலெழுவதற்கு அற உணர்ச்சி வழிவகுப்பதில்லை. தத்துவக்கல்வியே வழிவகுக்கும். மானுடன் என நின்றிருக்கும் தன்னிலையை அது அளிக்கும். ஆனால் தீயூழ் என்னவென்றால் கிருதவர்மன் தத்துவம் பயின்றவர் அல்ல.” நான் “எனில் என்ன நிகழும்?” என கேட்டேன்.

“சிம்மமும் சிம்மமும் போரிட நேரும். இணையான போர்” என்றார் கணிகர். நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். “இரு சிம்மங்களும் அழியலாம். நோக்கி நின்றிருக்கும் சிறு நரிகளில் ஒன்று மணிமுடி கொள்ளலாம்” என்றார். ஒருகணத்தில் என்னுள் எழுந்த எண்ணத்தை உடனடியாக தன் கண்களால் தொட்டெடுத்தார். “ஆம், அதையே நான் சொன்னேன். சிறுநரிகளில் ஒன்று வெல்லலாம் என்று” என்றார். நான் மேலே பேசுவதற்குள் “நிகர் ஆற்றல்கள் ஒன்றையொன்று வென்றதே இல்லை. நிகர் ஆற்றல்கள் மோதும் இடங்கள் அனைத்திலும் மூன்றாவது தரப்பே வென்றுள்ளது. நான் மூன்றாவது தரப்பு இங்கு எது என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

நான் விழிகளை விலக்கிக்கொண்டேன். அவர் மெல்ல கனைக்க திரும்பி அவரை பார்த்தேன். அவர் புன்னகைத்து “மூன்றாவது தரப்பாக அமைவதற்கு இன்று தேவை விழைவு. விசைகொண்ட, கூர்கொண்ட, நஞ்சும் கொண்ட விழைவு. விழைவென்பது ஊசிமுனையில் நிறுத்தப்பட்ட உருள்மணி போன்றது. ஒவ்வொரு கணமும் இடைவிடாது நிகழும் நிகர்ப்படுத்தலினூடாகவே அது அங்கு நின்றிருக்கும். ஒருகணத்தில் உதிரவும் கூடும். அவ்வண்ணம் ஒரு விழைவை நெடுங்காலம் நிலைநிறுத்தி நின்ற ஒருவர் இன்று இங்கே தேவை. அவருடைய முதன்மை விசை ஆழத்து விழைவுதான்” என்றார் கணிகர்.

“விழைவு அனைவரிடமும் இருக்குமல்லவா?” என்றேன். “ஆம், ஆனால் தகுதியும் விழைவும் கொண்டவர்கள் அரிது. தகுதியற்றவர்களுக்கு தங்கள் விழைவு வெறும் பகற்கனவு என தெரிந்திருக்கும். அவர்கள் அதை சொல்லிச் சொல்லி பெருக்குவார்கள். ஆணவமும் கழிவிரக்கமும் இரு எல்லைகளாக அமைந்து அவர்களை அலைக்கழிக்கும். ஆனால் மிகைவிழைவு என்னும் ஆற்றலைக் கொண்டவர்கள் அவைகளில் முற்றமைந்திருப்பார்கள். அனைத்தையும் அறிந்தும் இருப்பார்கள், அறியப்படாதவர்களாகவே எஞ்சுவார்கள்” என்று கணிகர் சொன்னார்.

நான் படபடப்புடன் அவரை பார்த்துவிட்டு மீண்டும் விழியை விலக்கிக்கொண்டேன். அதன் பின் உண்டாட்டில் அவர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவரருகே சுஃபானு வந்து அமர்ந்தார். அவரிடம் புதிய சொற்களை பேசத்தொடங்கினார். நான் அவரை அதன்பின் ஒருமுறைகூட திரும்பிப்பார்க்கவில்லை. ஆனால் என் உடம்பில் அப்பக்கம் முழுக்க ஒரு தொடுஉணர்வுபோல, இளவெம்மைபோல, அல்லது ஒரு குளிர் நடுக்குபோல ஏதோ ஒன்று இருந்துகொண்டிருந்தது.

அன்று நான் என் அறைக்குச் சென்றதும் பெரும் சோர்வை உணர்ந்தேன். ஆடைகளை மாற்றாமலேயே படுக்கையில் அமர்ந்திருந்தேன். என் ஏவலன் வந்து பணிந்து “செய்தி உள்ளது, இளவரசே” என்றான். “சொல்” என்றேன். “மதுவனத்திலிருந்து இளவரசியும் மைந்தரும் வந்துள்ளனர். நகர்ப்புறத்து அரண்மனையில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். நான் திகைப்புடன் எழுந்துகொண்டு “இங்கா? ஏன் இங்கு வந்தனர்?” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “தங்களை சந்திக்க பொழுது கோரினர்” என்றான். “நான் கிளம்புகிறேன், தேர் ஒருங்குக!” என்றேன்.

தேரில் நகரினூடாகச் செல்கையில் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மதுவனத்தின் யாதவ குடித்தலைவர் சீர்ஷரின் மகள் சுப்ரபையை உங்கள் ஆணைப்படித்தான் நான் மணந்துகொண்டேன். ஆனால் அவளுடன் என் வாழ்க்கை இனிதானது அல்ல. அவள் துவாரகையை வெறுத்தாள். “வெறுநிலம்” என்றுதான் அவள் இந்நகரை சொன்னாள். “வெறுநிலம் அல்ல இது, செல்வக்களஞ்சியம்” என்று நான் அவளிடம் சொன்னேன். “ஆம், பாலைவனத்தில் கள்வர்கள் அவ்வண்ணம் பொன்புதைத்து வைப்பதுண்டு என்பார்கள். நீர் விழைந்து மண்ணை அகழ்கையில் பொன் கிடைத்து சிரித்தும் அழுதும் உயிர்விட்ட பாலைப்பயணிகளைப் பற்றிய கதைகளை நான் கேட்டதுண்டு” என்றாள்.

அவளிடம் பேசமுடியாது. இரண்டாவது மைந்தன் பிறந்தபின் அவளை மதுவனத்துக்கே அனுப்பிவிட்டேன். அங்கே கன்றுமேய்த்து காடுகளில் மகிழ்ந்து வாழ்ந்தாள். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே சென்று சின்னாட்கள் தங்கி மீள்வேன். அதுவன்றி எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மைந்தர் என்னைப்போன்றே இருந்தனர், தோற்றத்தால் விழிகளால். ஆனால் அவர்களுக்குள் இருந்தவர்களை நான் அறியவே இல்லை. அவர்களுக்கு அரச சூழ்ச்சிகள் தெரிந்திருக்கவில்லை. அரசமுறைமைகளோ சொற்களோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அயலாரை அஞ்சும் எளிய யாதவர்களாகவே இருந்தார்கள்.

அவர்கள் செல்வத்தையே அஞ்சினார்கள். பொன்னின் மதிப்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பசுவையே செல்வம் என்று சொல்வது அவர்களின் வழக்கம். அது வாழும் செல்வம், பிற அனைத்தும் இறந்த செல்வங்கள். பிற செல்வங்கள் அனைத்துடனும் எவருடைய கண்ணீரோ குருதியோ இணைந்துள்ளது, பசு அளிக்கும் செல்வம் மட்டுமே பழியற்றது. உழவரும் சிற்றுயிரின் பழிகொண்டவர்களே என்று அவர்கள் சொன்னார்கள். வேட்டைச்செல்வம் குருதிப்பழிகொண்டது என்றார்கள். துவாரகையின் செல்வத்தை அவர்கள் அஞ்சி அருவருத்தனர். அந்த எண்ணத்தை அவர்கள் வாழ்ந்த சூழல் உருவாக்கி நிலைநிறுத்தியது.

அவர்களுடன் என்னால் உரையாடவே இயலவில்லை. மதுவனத்திற்குச் செல்கையில் அவர்களுடன் இருப்பேன். அவர்களின் உடலில் இருந்து எப்போதுமே சாணிவாடை எழுகிறது என்று தோன்றும். அவள் உடலிலேயே அந்த வாசனை உண்டு. முதல் ஆண்டுகளில் அது என்னை காமம் கொள்ளச்செய்தது. பின்னர் ஒவ்வாமையை உருவாக்கியது. துவாரகையில் நான் எப்போதுமே அயல்நிலத்துப் பெண்டிரையே நாடினேன். அவள் முகம் என்றோ எப்போதோ நினைவிலெழுந்தது, அன்றி அவளை நான் மறந்தே வாழ்ந்தேன்.

புறக்கோட்டத்தின் அரண்மனையில் அவர்கள் இருந்தனர். அவர்களே தெரிவுசெய்துகொண்ட இடம் அது. முன்பு, துவாரகையைச் சுற்றி புல்வெளிகள் இருந்த காலகட்டத்தில், அங்கே ஆநிலைகள் இருந்தன. அங்கே பசுக்களின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. நான் தேரை நிறுத்தி மாளிகைக்குள் சென்றேன். என்னை எதிர்கொண்ட ஏவலனிடம் நான் அரசியை சந்திக்க விழைவதாகச் சொன்னேன். அவன் தலைவணங்கி சென்றான். நான் உள்ளறைக் கூடத்தில் அமர்ந்தேன். இனம்புரியா எரிச்சலுடன்தான் அங்கே வந்தேன். அந்த மாளிகைக்கு முன் தேர் நின்றதுமே இன்பமான எதிர்பார்ப்பை அடைந்து உள்ளம் இனிமையாகியது.

அவர்களை அங்கே நான் விரும்பவில்லை. நகரம் அரசியல்சூழ்ச்சிகளால் சிக்கலாகிக்கொண்டே செல்லும் பொழுது. எக்கணமும் போர் நிகழலாம். போர் நகருக்குள்ளேயே நிகழவும்கூடும். அவர்கள் அங்கிருப்பதைப்போல இடர் ஏதுமில்லை. ஆனால் அவர்கள் அப்போது அங்கிருப்பதை என் அகம் விரும்பவும் செய்தது என்பதை நான் அங்கே வந்த பின்னரே உணர்ந்தேன். என் மைந்தர் எனக்கு எத்தனை முதன்மையானவர்கள் என்பதை ஆழத்தில் அறிந்திருந்தேன். அவர்களின் காலடியோசைக்காக என் செவிகள் கூர்கொண்டன.

முதலில் வந்தவன் இளையவனாகிய தனகன். அவனைத் தொடர்ந்து ஜயத்வஜனும் ரிஷபனும் மதுவும் ஊர்ஜிதனும் சூரசேனனும் வந்தனர். கார்த்தவீரியரின் மைந்தர்களின் பெயர்களை நான் என் மைந்தர்களுக்கு இட்டிருந்தேன் என நீங்கள் நினைவுகூர்வீர்கள், தந்தையே. தனகன் “தந்தையே!” என்று உரக்கக் கூவியபடி பாய்ந்தோடி வந்து என்னைக் கண்டதும் திகைத்து நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த ஜயத்வஜன் “தந்தையை வணங்குக!” என்றான். ஆனால் தனகன் அவ்வகை முறைமைகளை அறிந்தவன் அல்ல. அவன் மூக்கில் சுட்டுவிரலை நுழைத்து உடலை நெளித்து என்னை நோக்கியபடி நின்றான்.

நான் புன்னகையுடன் அவனை அருகே அழைத்தேன். அவன் மெல்ல அருகே வந்தான். அவன் இடையைச் சுற்றி இழுத்து அருகே சேர்த்துப் பிடித்து “எப்போது வந்தீர்கள்?” என்றேன். “நாங்கள் தேரில்… அதற்கு முன் படகில்… ஆனால் பெரிய படகு அது” என்று அவன் சொன்னான். “அதை துடுப்பு போட்டு… பெரிய பாய் கட்டி… ஓட்டி…” அவன் துவாரகைக்கு வருவது அதுவே முதல்முறை என்று நினைவுகூர்ந்தேன். அவனுக்கு மூத்தவனாகிய சூரசேனன் குழவியாக இருக்கையில் அவர்கள் நகருக்குள் வந்திருக்கிறார்கள். சூரசேனனுக்கும் நகரம் நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

“நாங்கள் இன்று புலரியில் நகர்புகுந்தோம்” என்று ஜயத்வஜன் சொன்னான். நான் புன்னகைத்து “இது நகரம் அல்ல. இன்னும் துவாரகை தொடங்கவே இல்லை. நெடுந்தொலைவுக்கு அப்பாலுள்ளது அதன் தோரணவாயில். அதற்கப்பால் பெருமாளிகை நிரை” என்றேன். ரிஷபன் “நான் பார்த்திருக்கிறேன். சென்றமுறை வந்தபோது… மிகப் பெரிய மலைகளை வீடுகளாக ஆக்கியிருப்பார்கள். மலைகளுக்குமேல் உப்பரிகைகள்… அதில் மனிதர்கள்” என்றான். “அங்கிருந்து பார்த்தால் கடல் தெரியும்… அதில் மிகப் பெரிய படகுகள்… வீடுகள் போன்ற படகுகள்” என்றான். நான் “அவை மரக்கலங்கள், படகுகள் அல்ல. மதுவனத்திலுள்ள அத்தனை இல்லங்களையும் அவற்றுக்குள் வைக்கமுடியும்” என்றேன்.

ஜயத்வஜன் “துவாரகைக்குள் நாளை செல்லலாம் என்று அமைச்சர் அஸ்வகர் சொன்னார்” என்றான். “ஆம், நானே அதற்கு ஆணையிடுகிறேன்” என்றேன். மதுவையும் ஊர்ஜிதனையும் பார்த்து “வருக!” என்றேன். அவர்கள் வந்து என்னருகே நின்றனர். அவர்களிடம் புழுதியின் மணமும் வியர்வையின் மணமும் வந்தது. அவர்களை தோள்தழுவி சிறுசொல்லாடி அங்கே அமர்ந்திருக்கையில் மானுடனெனப் பிறப்பதன் பேருவகைகளில் ஒன்றை அடைந்து அதில் திளைத்தேன். அவர்களை தொட்டுக்கொண்டே இருந்தேன். விலங்கெனப் பிறந்திருந்தால் நாவால் நக்கியிருப்பேன். என் உடலெங்கும் நிறைத்துக்கொண்டிருப்பேன்.

என் துணைவி வந்து அப்பால் நின்றாள். அவளைக் கண்டதும் ஜயத்வஜன் “அன்னை” என்றான். மைந்தர்கள் என் பேச்சுக்கு சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முதற்கட்ட தயக்கம் விலகியதும் கூச்சலிட்டுப் பேசத்தொடங்கினர். பேசப்பேச குரல் ஓங்கியது. திறந்த வெளியில் வாழும் யாதவர்கள் எப்போதுமே உரக்கப்பேசுபவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு பல இருந்தன. அவர்கள் ஊரிலிருந்து கிளம்பியதுமுதலே விந்தைகளைக் கண்டுவந்தனர். சிந்துவில் மீன் துள்ளுவதுகூட அவர்களுக்கு செய்தியாக இருந்தது. ஜயத்வஜன் “அன்னை வந்துள்ளர்” என்று சொல்லி மைந்தர்களைப் பிடித்து இழுத்து விலக்கினான்.

சுப்ரபை வந்து “செல்க!” என்று அவர்களிடம் சொன்னாள். அவர்கள் என்னை வணங்கி வாழ்த்து பெற்று விலகிச் சென்றனர். அவள் என்னருகே வந்து இயல்பாக தலைவணங்கி எதிரே அமர்ந்தாள். அதுவும் யாதவர்களின் வழக்கம். அவர்களின் மகளிர் ஆண்களின் கால்தொட்டு வணங்குவதில்லை. நான் அவளை உளம் மலர்ந்து நோக்கினேன். மைந்தருடன் விளையாடி என் உள்ளம் களிப்படைந்திருந்தது. “அங்கே வந்த செய்திகள் என்னை வரச்செய்தன” என்று அவள் சொன்னாள். எந்த முகமனும் இல்லாமல், அன்புச்சொற்கள் இல்லாமல் அவள் வந்த நோக்கத்தை சொல்லத் தொடங்கினாள். அவள் அவ்வாறுதான் எப்போதுமே. “என்ன?” என்று நான் கேட்டேன்.

“இங்கே ஓர் அரசியல்பூசல் நிகழவிருக்கிறது என்று அறிந்தேன். அது குருதிப்பூசலாக ஆகும் என்றார்கள். துவாரகையின் அரசர் வந்து பூசல்களை தீர்த்துவைப்பார் என்று எண்ணியிருந்தோம். அவர் வரப்போவதில்லை என்றும் சாத்யகி திரும்பி வந்துவிட்டார் என்றும் சொன்னார்கள். ஆகவேதான் நானே கிளம்பிவந்தேன். தூதனுப்புவதைவிட மைந்தருடன் வந்து பேசுவதே உகந்தது என்று தோன்றியது” என்றாள். “நீ வந்திருக்கக்கூடாது” என்றேன். “நான் இங்கே தங்கப்போவதில்லை. என்னுடன் உங்களை அழைத்துச்செல்லவே வந்துள்ளேன்” என்றாள். “எங்கு?” என்றேன்.

“மதுவனத்திற்கு. உங்களுக்கு என்று அங்கே உறவும் குடியும் நிலமும் உள்ளது. இங்குள்ள பூசல்களில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை. அதனால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எண்பதின்மரில் ஒருவராக இந்த அவையில் இருந்து இங்குள்ள பூசல்களில் ஏன் உழலவேண்டும்? என்னுடன் வருக… என் மைந்தரை எண்ணுக! என்னை எண்ணுக… எங்களுடன் வாருங்கள்” என்றாள். இறுதிச் சொற்களில் உளமுடைந்து விழிநீர் மல்கினாள்.

“நீ புரிந்துகொள்ளவில்லை” என்றேன். “நான் இங்கே இளையோன் என ஒரு கடமையில் இருக்கிறேன். அதை உதறிவிட்டு வரமுடியாது. அவ்வாறு வந்தால் கோழை என்றே என்னை கொள்வார்கள்” என்றேன். “இல்லை, இப்போது எங்களுடன் கிளம்பினால் அவ்வாறு பேச்செழாது. போர் தொடங்கிய பின்னர்தான் உங்களால் கிளம்ப முடியாது. இப்போது நான் வந்து அழைத்தமையால் எங்கள் குடியின் பூசலொன்றை சீரமைக்க வருகிறீர்கள் என்று சொன்னால் மறுசொல் எழாது. நான் அறிவேன்” என்றாள். “ஆகவேதான் நானே வந்தேன். நீங்கள் அங்கே வந்தாகவேண்டிய பெருஞ்சிக்கல் ஒன்று எங்கள் குடியில் இருந்தமையால்தான் நான் மைந்தருடன் வந்தேன் என்று துவாரகையினருக்கு சொல்லிவிடலாம்.”

நான் “இல்லை, என் கடமையைவிட்டு வர நானும் விரும்பவில்லை” என்றேன். “என்ன கடமை? இந்த அவையில் நீங்கள் இருந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றாள். “மூத்தவருடன் இருப்பீர்கள், அவ்வளவுதானே? அதனால் என்ன ஆகப்போகிறது? மூத்தவரிடம் ஆணைபெறுக! நானே வந்து அவரிடம் பேசுகிறேன்.” அவள் முகத்தை சீற்றத்துடன் நோக்கி “வீண்பேச்சு வேண்டாம். நான் அவருடன் இருந்தாகவேண்டும். அவர் என் குடிமூத்தவர். என் மூத்தவர், நான் உடனிருந்தாகவேண்டும். அவருக்காக குருதிசிந்தவேண்டுமென்றால் அதற்கும் துணியவேண்டும். அதுவே குடிநெறி. ஆணின் வழி அது” என்றேன்.

அவள் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன. “நீங்கள் எண்ணுவது என்ன என்று எனக்குத் தெரியும்” என்றாள். “என்ன தெரியும்?” என்று நான் கூவினேன். “சொல், என்ன தெரியும் உனக்கு?” அவள் “எது தெரியவேண்டுமோ அது தெரியும். நீங்கள் விழைவதை அடையமாட்டீர்கள்” என்றாள். நான் அயர்ந்துவிட்டேன். என்னுடன் அவள் வாழ்ந்ததே குறைவு. ஆனால் என் ஆழத்தை அறிந்திருக்கிறாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். “அதை அடைய நீங்கள் களத்தில் வைத்தாடுவது எங்களை… என்னையும் உங்கள் மைந்தரையும்… அதை உளம்கொள்க!” என்றாள்.

நான் சீற்றத்துடன் எழுந்துவிட்டேன். “என்ன சொல்கிறாய்? என்னை கோழையாக்கவா வந்தாய்? விழைவை தலைக்கொள்பவன், அதன்பொருட்டு குருதிசிந்துபவனே ஷத்ரியன். நான் ஷத்ரிய அறம் கைக்கொண்ட யாதவன். என் இலக்கு என்ன என்று எனக்குத் தெரியும். அதிலேயே என் வெற்றியும் புகழும் நிறைவும் உள்ளது. அதைத் துறந்து உன்னுடன் வந்து பசுக்களுக்கு சாணிவழிக்க மாட்டேன்” என்றேன். அவள் என் கைகளை பற்றிக்கொண்டு “சொல்வதை கேளுங்கள்… நீங்கள் செல்லும் பாதை குருதியாலானது. நம் மைந்தரின் குருதி” என்றாள்.

“நான் அவர்களுக்கு தேடியளிப்பது மணிமுடியும், குடிச்சிறப்பும், பெரும்புகழும்… அதற்காக அவர்கள் அந்த இடர்களை கடந்தே ஆகவேண்டும். துணிந்தவர்களுக்கே வெற்றி அமைகிறது…” என்றபின் எழுந்து என் மேலாடையை சீரமைத்தேன். “இனி இதன்பொருட்டு நாம் ஒரு சொல்லும் பேசவேண்டியதில்லை” என்று சொல்லி வெளியே நடந்தேன்.