கல்பொருசிறுநுரை - 22

பகுதி நான்கு : அலைமீள்கை – 5

தந்தையே, கணிகர் மிகத் தாழ்ந்த குரலில் பேசினார். பேசும்போது விழிகள் அச்சொற்களுக்கு தொடர்பே அற்றவைபோல மின்னிக்கொண்டிருக்கும். அவர் நகையாட்டு உரைப்பதில்லை. ஆனால் நகையாடுவதுபோலத் தோன்றும். ஏனென்றால் அவர் விழிகளில் ஒரு சிறு புன்னகைபோல் ஓர் ஒளி இருக்கும். அவர் பேசுவதை நாம் செவிகொடுக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் உளம்பதிக்காமல் அகலவே இயலாது. அது ஏன் என்று அன்றே எண்ணிக்கொண்டேன், இன்றும் எண்ணுகிறேன். அவர் முற்றிலும் புதியவர், அவைக்கு அப்போதுதான் வந்திருந்தார். ஆனால் நான் அவர் சொற்களில் என்னை மூழ்கடித்தவன்போல் அவர் முன் அமர்ந்திருந்தேன்.

கணிகர் “நான் இங்கு வரும்போது இளைய யாதவரைப் பார்த்து உசாவி திரும்பிப்போகும் எண்ணத்திலிருந்தேன். வந்தபின்னரே யாதவக் குடியின் முதன்மை அரசராகிய ஃபானுவை முறைமீறி நிலம்விழையும் ஷத்ரியர்களும் கட்டுகளற்ற அசுரர்களும் எதிர்ப்பதை கண்டுகொண்டேன்” என்றார். “என் பணி யாதவர்களுக்கு உதவியாக இங்கே களம்நிற்பதே என உணர்ந்தேன். ஆகவே நேராக வந்து அரசரை பார்த்தேன். நல்லவேளையாக நான் வந்தநாளில் இங்கே லக்ஷ்மணையின் மைந்தர் யாதவர்களுடன் கைகோக்கும் நிகழ்வு உருவானது. அரசர் உளம் மகிழ்ந்த நிலையில் இருந்தார். என்னை இந்த அவைக்கு வரும்படி சொன்னார்.”

நான் “இயல்பாக நீங்கள் ஷத்ரியர்களை ஆதரிக்க வேண்டியவர் அல்லவா? அந்தணர்கள் எப்போதும் ஷத்ரியர்களுடன்தானே நிலைகொள்வார்கள்?” என்றேன். ”ஆம், அது மெய். ஆனால் அந்தணர்கள் ஷத்ரியர்களால் முறையாக அழைக்கப்பட வேண்டும். அவர்கள் என்னை அழைக்கவில்லை. அவர்கள் அவையில் இன்று என்னைப்போல் ஆற்றல் மிக்க அந்தணர்கள் எவருமில்லை. ஏனெனில் பிரத்யும்னன் தன்னை ஷத்ரியரென்று எண்ணவில்லை. அங்கே அந்தணர் செல்வதில்லை. ஏனென்றால் பிரத்யும்னன் தன்னை அசுரக்குருதி சார்ந்தவர் என்றுதான் உள்ளாழத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றார். நான் “எவ்வண்ணம்?” என்றேன். “அன்னம்போல ஒருவரை அடிமைப்படுத்துவது பிறிதொன்றில்லை. சுகவனத்தின் கிளிகள் வேதம் ஓதுகின்றன என்கிறார்கள். எனில் அது அங்கு பழுக்கும் கனிகளின் சுவையாலேயே. பிறிதொரு காட்டில் அவை வளர்ந்தால் அவற்றின் நாக்கில் வேதம் எழுவதில்லை” என்றார்.

“அது எவ்வண்ணம்?” என்று கேட்டேன். “அவ்வண்ணமே” என்று அவர் என்னை கூர்ந்து நோக்கியபடி சொன்னார். “எண்ணி நோக்குக!” என்று அவர் மேலும் சொன்னார். “உண்ணும் உணவுபோல் உயிரை நேரடியாக சென்று தொடும் பிறிதொன்றுண்டா? எண்ணங்களும் கனவுகளும் உணர்வுகளும் உயிரின் வெளிப்பாடுகளல்லவா? சுடரிலிருந்து ஒளியும் புகையும் வெப்பமும் எழுவதுபோல அல்லவா அவை எழுகின்றன?” நான் “ஆம்” என்றேன். “அவ்வுயிரைப் பேணும் உணவு அம்மூன்றையும் ஆளுவதில்லையா என்ன?” என்றார். “ஆம், ஆள்கிறது” என்றேன். “யாதவ இளவரசே, சம்பராசுரரின் உணவை பன்னிரண்டு ஆண்டுகளாக உண்ட பிரத்யும்னன் எச்சிந்தனைகளால் ஆளப்படுகிறார்?” என்றார்.

“நான் அதை எண்ணியதில்லை” என்றேன். “எண்ணுக, அவர் ஒருவகையில் அசுரமைந்தன்!” நான் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “இளவரசே, இதுவல்லவா நிகழ்ந்தது? விதர்ப்பினியாகிய ருக்மிணி தன் முதல் மைந்தனை நகருக்கு வெளியே இருந்த பேற்றரண்மனையில் ஈன்றார். மைந்தனுக்கு இருபத்தெட்டாம் நாள் இடைநூல் அணிவிக்கும் விழா ஒருக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் அவர் தன் தோழியருடன், இளமைந்தனுடன் நகர்நுழைந்தார். அன்று அரசி தேரில் கொலுவிருந்து மக்களுக்கு காட்சியளித்தார். மைந்தனை மக்கள் மறுநாள்தான் காணமுடியும், விழிக்கோள் ஒழிய இடைக்காப்பு அணிவித்தபின். ஆகவே அருகே வந்த பல்லக்கில் இளஞ்சேடியர் இருவர் மைந்தனுடன் வந்தனர்” என்றார் கணிகர்.

“அணியூர்வலம் அரண்மனையை அடைந்ததும் பல்லக்கும் உடன்வந்து நின்றது. ஏவற்பெண்டுகள் அதற்குள் ஏறிப் பார்த்தபோது இரு சேடியரும் நஞ்சூட்டப்பட்டு இறந்துகிடந்தனர். அவர்களிடம் இருந்த மைந்தனை காணவில்லை. அச்சேடியரை மயக்கியது எந்த நஞ்சு என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மைந்தன் எங்கு சென்றார் என்றும் அறியமுடியவில்லை. இளைய யாதவர் அன்று நகரில் இல்லை. அவர் அன்று இரவுதான் வந்துசேர்வதாக இருந்தது. நகரை ஆண்டுகொண்டிருந்தவர் அவருடைய சாலை மாணாக்கரான ஸ்ரீதமர். உடனடியாக நகரின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. கலங்கள் எவையும் கடல் நீங்கலாகாதென்று ஆணையிடப்பட்டன. நகர் எங்கும் வீரர்கள் சென்று ஒரு சிறு இடுக்கு கூட எஞ்சாமல் உசாவி நோக்கினர். எங்கும் அவர் இல்லை.”

“மைந்தன் முற்றாகவே மறைந்துவிட்டிருந்தார். பின்னர் இறந்துகிடந்த இரு சேடியரையும் ஆராய்ந்த மருத்துவர்கள் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கிறது என்றும், அந்த நஞ்சு மண்ணில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை நச்சுக்கல்லின் புகையால் ஆனது என்றும், அவ்வகை நச்சு அசுரர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் கூறினார்கள். அசுரர்களின் சிறைகளில் எங்கேனும் இளமைந்தன் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக ஒற்றர்கள் அனுப்பப்பட்டனர். எச்செய்தியும் வரவில்லை. இளைய யாதவர் தன் ஒற்றர்களின் நுண்ணுணர்வால் அசுரர் வந்த வழியை கண்டடைந்தார். அவர்களின் அடையாளங்களைக் கொண்டு மைந்தனை இங்கு வந்து தூக்கிச்சென்றவர்கள் சம்பராசுரரின் ஒற்றர்கள் என்று கண்டடைந்தார்.”

“ஆனால் சம்பராசுரரின் அரண்மனையிலோ அகத்தளத்திலோ அம்மைந்தன் வளர்க்கப்படவில்லை. சம்பராசுரரின் அவையிலிருந்த சேடியொருத்தி பல நாட்கள் முன்னரே தனக்கு வயிற்றில் கரு தங்கியிருப்பதாக நடித்துக்கொண்டிருந்தாள். கையில் குழந்தையுடன் அவள் மீண்டும் பணிக்கு வந்தபோது அது அவள் குழந்தை என்று நம்பப்பட்டது. அவ்வாறு அகத்தளத்தில் அக்குழவி வளர்ந்தது. பதினாறாண்டுகள் அம்மைந்தன் இல்லாமையினால் அவருடைய இளவலாகிய சாருதேஷ்ணனை இளவரசர் என்று பட்டம் கட்டினார்கள். அவர் இளவல் என அரியணை அமர்ந்து ஆட்சி செய்தார், அனைத்துச் சடங்குகளிலும் அவரே அமர்ந்தார்.”

“அந்நிலையில் ஒருநாள் கடலாடச் சென்ற பிரத்யும்னன் எண்ணியிராது எழுந்த அலைக்கொந்தளிப்பால் நிலையழிந்த படகிலிருந்து நீரில் விழுந்தார். அசுரர்கள் கடலில் பாய்ந்தும் வலைவீசியும் அவரை தேடினர். அலைகளில் அவர் மறைந்துவிட்டார். அசுரர்களின் படகுகளை அலைகள் அறைந்து வேறு திசைக்கு கொண்டுசென்றன. மைந்தனை இழந்து திரும்பி வந்த அசுரர்களைக் கண்டு சம்பராசுரர் கடுமையாக சினம்கொண்டார். வாளை உருவி அவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தினார். மீண்டும் பல நாட்கள் மைந்தனுக்காக தேடினார்கள். அவர் உடல் கிடைக்கிறதா என்று கடலோரங்கள் முழுக்க அலைந்து நோக்கினார்கள். மைந்தன் மறைந்துவிட்டிருந்தார்.”

“ஆனால் அவர் சாகவில்லை. அவரை கடல்வாழ் முதலைமீன் ஒன்று நீரிலிருந்து தூக்கி வானில் வீசி மூழ்காது காப்பாறியது. அவரை அது தன் வாலாலும் மூக்காலும் தட்டி உந்தி அங்கிருந்த பாறை ஒன்றுக்கு கொண்டுசென்றது. பாறையில் தொற்றி ஏறி மயங்கிக் கிடந்த அவரை மீனவர் சிலர் கண்டடைந்தனர். அவர்கள் தெற்கே நெடுந்தொலைவிலிருந்து வந்தவர்கள். வீசிய புயலால் நிலையழிந்து திசைமாறி அலைந்தவர்கள். அவர்கள் அவரை கொண்டுசென்றனர். தங்கள் குடிலில் மருத்துவம் செய்து உயிர்மீட்டனர்.”

“ஆனால் மைந்தன் மொழியை மறந்திருந்தார். நினைவுகளை இழந்திருந்தார். அவர் எவர் என அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர் அவர்களிடம் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஒருநாள் அவர் உடல் அடையாளங்களைக் கண்ட ஒற்றர்கள் சிலர் சம்பராசுரரிடம் சென்று மைந்தனை மீன்குடியினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சொன்னார்கள். படைகளுடன் சம்பராசுரரே மீன்குடிகளை வெல்லும்பொருட்டு வந்தார். மீன்குடியினர் கரைப்போர் அறியாதவர் என எண்ணி அவர் வெறும் எழுபது படைவீரர்களுடன் வந்தார். அவர்கள் மீன்குடியினரின் ஊரை தாக்கினார்கள்.”

“நாணொலி கேட்டதும் இயல்பாகவே பிரத்யும்னனின் தோள்கள் எழுந்தன. வெளியே ஓடிச்சென்று தங்களை தாக்கவந்த இருவரை தூண்டில்வேல் எறிந்து வீழ்த்தி அவர்களில் ஒருவரின் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டார். அவருடைய வில்திறனுக்கு முன் சம்பராசுரரால் நிற்க முடியவில்லை. போர்க்களத்திலேயே பிரத்யும்னனின் அம்பேற்று சம்பராசுரர் மண்படிந்தார். அசுரப்படை தோற்று ஓடியது. அவர்கள் மேலும் படைகளுடன் வருவதற்குள் மீன்குடியினர் தங்கள் படகுகளில் ஏறி கடலுக்குள் சென்றுவிட்டனர்.”

“சம்பராசுரர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததுமே அது தன் மைந்தன் பிரத்யும்னன்தான் என இளைய யாதவர் உய்த்தறிந்தார். உடனே துவாரகையின் படைகள் கடற்கரை நோக்கி சென்றன. கலங்களும் கடல்வழியே சென்றடைந்தன. அசுரர்கள் அஞ்சி பின்னடைந்தனர். பிரத்யும்னன் இளைய யாதவரின் மைந்தனே என்று அவர் உடலில் இருந்த எட்டு அடையாளங்களைக் கண்டு உறுதிசெய்தனர். அதை அவருக்கும் கூறி ஏற்கச் செய்தனர். அவர் துவாரகைக்கு மீண்டார். தனக்கு வாழ்வளித்த மீனவர்களுக்கு நன்றிசொல்லும் பொருட்டு தன் கொடியில் முதலைமீன் அடையாளத்தையும் பொறித்துக்கொண்டார்.”

மெய்யாகவே நான் அக்கதையை அறிந்திருக்கவில்லை. நான் அறிந்தது வேறொரு கதை, குழந்தைகளுக்குச் சொல்வதற்கு ஏற்றது. நான் “இந்தக் கதை எனக்கு வேறுவகையில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றேன். “ஆம், கதைகளை சொல்லிச் சொல்லி பயனற்றவையாக ஆக்கி நிலைநிறுத்துவதே சூதர்களின் தொழில்” என்று கணிகர் சொன்னார். நான் சிரித்தேன். “கதைகளினூடாக அரசியல் உருவாகிவிடக்கூடாது என்பதை அரசர்களும் விரும்புகிறார்கள்” என்றார் கணிகர். “உங்கள் அரசியல்கதையை சொல்லுங்கள்” என்றேன்.

“துவாரகைக்கு வந்தபின் பிரத்யும்னன் சம்பராசுரரின் குடிகளுடன் இசைவுகொண்டார். அவர்களும் அவரை தங்கள் இளவரசராக ஏற்றுக்கொண்டார்கள். சம்பாசுரரின் குடியிலேயே மணம்கொண்டார்மாயாவதி, சாருமதியும் அவருடைய முதல் மனைவியர்.,தன் அன்னை ருக்மிணியின் மூத்தவர் ருக்மியின்மகள் ருக்மவதியையும் மணந்துகொண்டார். அவ்வாறாக மைந்தனை மீட்டெடுத்தனர் துவாரகையினர். அவரை மீண்டும் ஷத்ரியகுடியுடன் குருதியால் இணைத்தனர். ஆனால் துவாரகையினர் ஒன்றை நோக்க விட்டுவிட்டிருந்தனர். அசுரர்கள் அன்னத்தை வழிபடுபவர்கள். அன்ன வடிவிலேயே இங்கு தெய்வம் எழுந்தருள முடியும் என்று தொல்நம்பிக்கையாக சாங்கியம் கூறுகிறது. ஆகவே அவர்கள் தங்கள் அன்னத்தில் ஒரு பகுதியை முறைப்படி நுண்சொல் உரைத்து அளித்து அவரை வளர்த்திருக்கிறார்கள்.”

“அன்னத்தால் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்” என்றபோது கணிகரின் விழிகள் மேலும் கூர்மைகொண்டன. “அவரில் ஓடும் குருதி அசுரர்களுடன் தொடர்புடையது. இனி அதை அவரிடமிருந்து நீக்கவே முடியாது. ஆகவேதான் ஷத்ரியகுடியில் மூன்று இளவரசியரை மணந்த பின்னரும் அவர் அசுரப்பெண்ணைக் கண்டு காதல்கொண்டார். அசுரகுலச் சக்கரவர்த்தியான ஹிரண்யாக்ஷரின் குடியில் வந்த வஜ்ரநாபரின் மகள் பிரபாவதியை அவர் மணந்தது அவ்வாறுதான். தன் மைந்தன் அனிருத்தன் பாணாசுரரின் மகள் உஷையை விழைந்தபோது படைகொண்டு சென்று அப்பெண்ணைக் கவர்ந்து அவருக்கு மணமுடித்தார். அப்பெண்ணின் குருதியில் பிறந்த மைந்தனுக்கு வஜ்ரநாபன் என்றே பெயரிட்டார்.”

“அம்மைந்தன் நாளை துவாரகையை ஆளவேண்டும் என்று கனவு காண்கிறார் அவர்” என்று கணிகர் தொடர்ந்தார். “வஜ்ரநாபன் அசுரரேதான். நஞ்சு கலந்த பால் பாலே அல்ல, நஞ்சுதான். அந்தணனாகிய நான் ஒருபோதும் அசுரர்களை அரசர் என ஏற்க இயலாது. கறைபட்ட ஷத்ரியர், அசுரர், நிஷாதர் என்னும் மூன்று தரப்புகளுக்கு எதிராக யாதவர்களை வலுப்படுத்துவது என் கடன்.” நான் “ஆனால் அவரை ஷத்ரியர் என்கிறார்கள்” என்றேன். அவர் சீற்றத்துடன் “ஷத்ரியர்க்ள் என்பவர்கள் யார்? ஆற்றல்கொண்டு நிலம்வென்றபின் வேதவழிநின்ற அந்தணர்கள் சொல்கேட்டு நடக்கும் அனைவரும் ஷத்ரியரே. அவ்வண்ணமென்றால் யாதவரும் ஷத்ரியரே” என்றார்.

“அறிக! தொன்மையான சேதிநாட்டு அரச குலமும், விதர்ப்ப அரசகுலமும் யாதவக் குடியிலிருந்து எழுந்தவையே. அஸ்தினபுரியின் பாண்டவர் யாதவஅன்னையின் மைந்தர் அல்லவா? இன்று பாரதவர்ஷம் எங்கும் பரவிக்கொண்டிருப்பது யாதவக் குருதி. அதை மேம்படுத்தி ஷத்ரியர் என்றாக்கி நிலைநிறுத்துவது அந்தணர்களின் பொறுப்பு” என்றார். “நான்கு எனத் திரண்ட தொல்வேதம் ஷத்ரியர்களை முற்றாக வகுக்கிறது. அவர்களுக்குரிய நெறிகளை வகுத்து அந்நெறிகொண்டோர் அனைவரும் ஷத்ரியரே என்கிறது ஐந்தாம் வேதம். நான் இளைய யாதவர் அருளிய ஐந்தாம் வேதத்தை ஏந்தியே இந்நகருள் புகுந்தேன்” என்றார் கணிகர்.

“இங்கு தங்கள் வரவு நலம் தருக!” என்றேன். “ஆனால் தாங்கள் நுழைந்த தருணம் நன்றல்ல என்று தோன்றுகிறது. இப்போது தங்கள் செவிகளில் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் எவரும் இல்லை” என்றேன். “ஆம், அதை அறிவேன். ஆனால் மிக மெல்ல எவரும் அறியாது உள்நுழைவதே என் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்று இவர்கள் அனைவரிடமும் ஒரு சொல்லேனும் நான் உரைத்து அது இவர்கள் உள்ளத்தில் நிற்கச் செய்துவிடுவேன். என்னைப்பற்றிய நினைவென ஒன்றை இவர்களுக்குள் பதித்துவிடுவேன், அதன்பின் இவர்கள் அவையில் இயல்பாக நான் வந்து அமர்வேன்.”

“இவர்கள் அவைசூழ்ந்திருக்கையில், அகம் முழு விழிப்பு கொண்டிருக்கையில் நான் வந்தால் என்னை ஏற்கையிலே ஒரு சிறு ஐயத்தையும் அடைவார்கள். என் நினைவு எழும்போதும், என் முகம் காணும்போதும் அந்த ஐயமும் உடன்வந்து அமையும். இப்போது சித்தம் மயங்கி தெளிவற்றிருக்கையில் விழிப்பறியாமல் நான் அகத்தே கடக்கின்றேன். கூடத்தில் நுழையாமல் அகத்தளத்தில் தோன்றுவதே நாகங்களின் வழி என்பார்கள். நஞ்சுள்ள அனைத்துக்கும் அதுவே இயல்பு” என்றார்.

நான் “நீங்கள் நஞ்சு கொண்டவரா?” என்றேன். அவர் இரு கைகளையும் ஊன்றி எழுந்து என்னை கண்களுள் உற்றுப்பார்த்து “என்னைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்றார். நான் ஒருகணம் அகநடுக்கை அடைந்தேன். என் கைகள் அதிரத்தொடங்கின. “ஆம்” என்றேன். “ஆம். நான் நஞ்சு கொண்டவனே. வெல்லப்பட முடியாத நஞ்சு. அந்நஞ்சுடன்தான் அஸ்தினபுரிக்குள் சென்றேன். அக்குடியை முற்றழித்தேன். குருக்ஷேத்ரம் மேல் என் கொடியை பறக்கவிட்டேன். இங்கு வந்துள்ளேன். இங்கும் அதை நிகழ்த்துவேன்” என்றார்.

நான் அது கனவா என்று எண்ணினேன். மெய்யாகவே அவ்வண்ணம் ஒருவர் வந்தாரா? எனில் சூழ்ந்திருந்த எவரும் ஏன் அவர் சொல்வதை கேட்கவில்லை? ஒவ்வொருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பெருந்திரளில் முற்றிலும் தன்னந்தனியராக அவர் அமர்ந்திருந்தார். பத்தி விரித்து எழுந்து நின்றிருக்கும் அரவரசனாக. அவர் முன் சிறு தவளைக் குஞ்சென நான் இருந்தேன். அவர் புன்னகைத்து “எனது நஞ்சு வெல்லப்பட இயலாதது. ஏனெனில் இது நேர்நஞ்சல்ல, எதிர்நஞ்சு. எதிரி இருக்கையில் மட்டும் எழுவது, எதிரிக்கு இணையாகவே வளர்வது. இதை வெல்ல ஒரே வழியே உள்ளது, எதிரியிலாதிருத்தல். எதிரியில்லா மானுடர் ஒருவர் உண்டேல் அங்கே இது பொருளிழக்கும்” என்றார்.

“நான் எவரிடமும் நஞ்சைச்செலுத்துவதில்லை. ஒருதுளி கூட. அவர்களிடம் முன்னரே இருந்த நஞ்சைத் தொட்டு உயிர்ப்பித்துப் பெருக்கும் ஒன்றையே கொடுக்கிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் நஞ்சை தாங்களே பெருக்கிக்கொள்கிறார்கள். தாங்களே நச்சுரு ஆகிறார்கள். பிறரை அழிக்கிறார்கள். தாங்களும் அழிகிறார்கள். எனது நஞ்சு என்னுள்ளிருந்து ஒரு துளியும் வெளியே செல்வதில்லை. அது தோன்றிய நாளிலிருந்து குன்றாது குறையாது அவ்வண்ணமே இருந்துள்ளது. ஐயம் தேவையில்லை, இந்நகர் என்னால் அழியும். இக்குடி என்னால் முற்றழியும்” என்றார் அவர்.

நான் “இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்? நானும் இவர்களில் ஒருவன்” என்றேன். “ஆம், நீங்களும் இவர்களில் ஒருவர்தான். ஆனால் எனக்கு எப்போதுமே உங்களைப்போன்று ஒருவர் தேவை. நெடுங்காலத்திற்கு முன் பிறிதொரு வடிவில் என் மூதாதை இலங்கையை ஆண்ட ராவண மகாபிரபுவின் அவையிலிருந்தார். அங்கே அவர் விபீஷணனிடத்தில் நஞ்சை எழுப்பினார். அவரே கிஷ்கிந்தையின் சுக்ரீவனை எழுப்பியவர். ஹிரண்யகசிபுவின் அவையில் பிரஹலாதனைத் தொட்டு மூட்டியவர் அவர். துரியோதனன் அவையில் நான் சகுனியை எழுப்பினேன். விகர்ணனை எழுப்பியதும் நானே. ஒவ்வொரு அவையிலும் எங்களுக்கு உங்களைப்போல் ஒருவர் தேவை. இன்று நீங்கள்.”

“நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்?” என்றேன். “நீங்கள் செய்வதற்கு இரண்டே உள்ளது. உடனே எழுந்து என்னை இந்த அவைக்கு அறிவிக்கலாம். அல்லது உங்கள் மூத்தவர்களை தனியிடத்தில் சந்தித்து இங்கு நான் சொன்னவற்றை அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் என்மேல் ஐயமும் வெறுப்பும் கொள்ளச்செய்யலாம். அவர்கள் நம்பமாட்டார்கள், உங்கள் முழு ஆற்றலையும் அதற்கு பயன்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். “இன்னொன்று என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகையாற்றல் கொண்ட படைக்கலம் நான். என்னை கையாளும் திறன் உங்களுக்கிருந்தால் நீங்கள் இந்நகரை வெல்லலாம். பாரதவர்ஷத்தை வெல்லலாம்.”

“ஆனால் இந்நகரை நீங்கள் அழிப்பீர்கள் என்றீர்கள்” என்றேன். “ஆம், ஆனால் கூட்டை உடைத்துத் திறக்காமல் எந்தப் பட்டாம்பூச்சி காட்டில் எழமுடியும்? அமைந்த இலையை உண்டு முடிக்காமல் அதற்கு எப்படி வண்ணச்சிறகு முளைக்கக்கூடும்?” என்றார் கணிகர். “எண்ணிப்பாருங்கள், துவாரகை என்ற இந்த இடத்திலிருந்து எழுந்து யாதவக்குடி நெடுந்தொலைவு சென்றாகவேண்டும். அதற்கு இந்த இடம் அழிந்தாகவேண்டும். இந்த அடையாளங்கள் அனைத்திலிருந்தும் அது விடுபட்டாகவேண்டும்.” அவர் என்ன சொல்கிறார் என்றே எனக்கு புரியவில்லை. தான் சொன்னவற்றையே மறுத்து மாற்றிச்சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது.

“எண்ணி நோக்குக, இன்று ஏன் இத்தனை பூசல்? தந்தை பரிசென தன் கையில் வைத்துத் தந்த இந்நகரை முழுதாளக்கூட ஏன் ஃபானுவால் முடியவில்லை?” என்று கணிகர் கேட்டார். “ஏனென்றால் யாதவர்களின் பூசல். பூசலிட வைப்பது அவர்களின் குடியடையாளம். அவை முற்றழிய வேண்டும். இளைய யாதவர் முயன்றதேகூட அதற்காகத்தான், அவரால் அது இயலவில்லை. யாதவக்குருதி பாரதவர்ஷம் முழுக்க பரவவேண்டும். யாதவக்கொடி பறக்கவேண்டும். அது நிகழவேண்டும் என்றால் யாதவக்குடி முற்றழியவும் வேண்டும். விதை அழியாமல் செடி முளைக்கவியலாது.”

“இதை இந்த அவையில் வைத்து இப்படி சொல்கிறீர்கள்” என்றேன். “இங்கே கள்ளில் மூழ்காமல் எஞ்சுபவர் நீங்கள் மட்டுமே…” என்றார். “நான் இதை என் மூத்தவரிடம் சொன்னால் என்ன ஆகும்?” என்றேன். “சொல்க, அதுவும் நன்றே!” என்றார். “எனில் இதை நீங்கள் ஏன் செய்யவேண்டும்? அதுவே என்னை குழப்புகிறது” என்றேன். “நீங்கள் இதை அவர்களிடம் கூறக்கூற அவர்கள் என் மேல் ஆர்வம் கொள்வார்கள். எளிதாக நான் அவைக்கு வந்திருந்தால் அவர்கள் என்மேல் விழிதிருப்பவே வாய்ப்பில்லாது போய்விடக்கூடும். உங்கள் சொற்கள் அவர்கள் என்னை கூர்ந்து நோக்க வைக்கும். நோக்க நோக்க வளர்வது காமம், நோக்கினால் அணைவது வஞ்சம். நான் காமம் என உள்நுழைந்து அறியாமல் வஞ்சமென வளர்பவன். என்னை கூர்ந்து நோக்காதவர்களிடம் என்னால் செயல்பட இயலாது. இங்குள்ள அத்தனை யாதவர்களும் இரவு பகல் ஒழியாது என்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்க வேண்டுமெனில் ஒருவன் என்னை எதிர்த்து என்னை வெறுத்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். அது நீங்கள்தான்” என்று கணிகர் என்னிடம் சொன்னார்.

நான் அவருடைய புன்னகையை பார்த்தேன். மிகமிக தெரிந்த புன்னகை அது. தந்தையே, அவருடைய முகம் ஒடுங்கியது. குழிந்த கண்கள். தொய்ந்த மூக்கு. அவர் இதழ்கள் முதுமையால் சுருங்கியவை. ஆனால் புன்னகைக்கும்போது மட்டும் அவர் பேரழகு கொண்டவரானார். நான் தெய்வத்தின் முன் என நிலைமறந்து சொல்லிழந்து நின்றேன். பின்னர் அக்கனவிலிருந்து என்னை பிடுங்கி எடுத்துக்கொண்டேன். அந்த ஒரு .கணத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று இன்னமும் நான் அறியேன். நான் முறிந்தேன். முற்றாக அனைத்தையும் இழந்தேன். பல்லாயிரம் காதம் கடந்தேன். கைகூப்பி “இல்லை அந்தணரே, நீங்கள் என் ஆசிரியர். நான் உங்கள் அடியவன். எந்நிலையிலும் நான் உங்களைவிட்டு அகலப்போவதில்லை. உங்களுடன் சொல்லாலும் எண்ணத்தாலும் முரண்கொள்ளப் போவதுமில்லை. என்னை ஆள்க!” என்றேன்.

அவர் புன்னகைத்து “ஆகுக!” என்றார். நான் ஓர் அலை என சூழ இருந்த ஒலிகள் வந்து செவிகளை அறைவதை உணர்ந்தேன். துயிலில் இருந்தேனா அப்போது? கனவிலிருந்து மீண்டேனா? அவரை நோக்கினேன். அவர் மீண்டும் புன்னகைத்து “நன்று, இன்று நாம் இவ்வண்ணம் சந்திக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது” என்றார். நான் “நீங்கள் என்னை நோக்கி நேராக வந்தீர்கள்… என்னை முன்னரே அறிவீர்களா?” என்றேன். “இல்லை, ஆனால் முன்னரே கண்டிருந்தேன்” என்றார். “எங்கே?” என்று நான் நெஞ்சு துடிக்க கேட்டேன்.

“நான் இந்நகருக்குள் நுழைந்தது நேற்று” என்று அவர் சொன்னார். “வரும்வழியில் சாலையின் வலப்பக்கம் எழுந்த மணல்மேட்டின் மீது நீங்கள் நின்றிருப்பதைக் கண்டேன். தொலைவில், ஒரு சிற்றுருவெனத் தெரிந்தீர்கள். ஆனால், நீங்கள் என்னை அழைப்பதுபோலத் தோன்றியது.” நான் திகைப்புடன் “நானா?” என்றேன். “ஆம், நீங்கள்தான் என்னை அழைத்தீர்கள். நகருக்குள் நுழைந்ததுமே நீங்கள் எவர் என உசாவி அறிந்தேன்…” நான் திகைத்து அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன். “நான் தேடிவந்ததே உங்களைத்தான்” என்று அவர் சொன்னார்.