கல்பொருசிறுநுரை - 16
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 11
அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவையில் அவர் வெளிப்படுத்தியது ஒரு பொது உணர்வு, அது தந்தையின் மகள் என அவர் திகழ்ந்தது. அவர் தந்தையின் இறப்பிற்கு தாங்கள் வழி வகுத்தீர்கள் என்பதை இன்று சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்ட பின்னர் அவ்வண்ணமன்றி அவர் தோற்றமளிக்க இயலாது. ஆனால் அதற்கப்பால் அவருக்குள் நீங்கள் திகழ முடியும், திகழ்ந்தே ஆகவேண்டும்.
பாரதவர்ஷமெங்கும் கன்னியரின் கனவுப் பருவத்தில் ஒளியுடன் உள்ளே நுழைபவர் நீங்கள். ஒருபுறம் இசையாலும் மறுபுறம் கவிதையாலும் வடிக்கப்பட்டது உங்களுடைய உருவம். பெண்டிர் பின்னர் துணைவியராகி, அன்னையராகி, முதியோராகி உருமாறிக்கொண்டாலும் கன்னியராக இருந்த காலகட்டத்தின் பாவனை ஒன்று அவர்களுள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. எங்கு வழி பிரிந்து எத்தனை தொலைவு சென்றாலும் தனித்த ஆழத்தில் தன்னுள் தனியாக திரும்பிச்சென்று தன் புதைந்த சிற்றறைக்குள்ளிருந்து அந்தக் காலகட்டத்தின் அணிகளையும் பூண்களையும் எடுத்து நோக்கி மகிழாமல் இருக்க அவர்களால் இயலாது.
பெண்களுக்கு அவர்களின் பெண்ணெழிலும் பெண்ணாற்றலும் பெண்ணுவகையும் முழுதுற அமைவது கன்னிப்பருவத்திலேயே. அவர்கள் தருக்கி நிமிர்வதும், மகிழ்ந்து மெய்மறப்பதும், தன்னை தானே உருவாக்கி தன்னை தான் நுகர்ந்து நிறைவடைவதும் கன்னிப்பருவத்திலேயே. கன்னியென பெண்டிர் அனைவரையும் நூல்கள் சொல்வது அதனால்தான். கன்னியன்னையென புடவிபடைத்த விசையை கல்லில் நிறுத்தியவன் கண்ட மெய்மை அது. முன்பு கேட்டேன், ஒரு சூதன் பாடியதை. அன்னையரின் மைந்தரை எண்ணி சொல்லிவிடலாம், கன்னியரின் மைந்தர் கணக்கற்றவர் என்று. துணைவியரின் ஆண்கள் ஒருசிலரே, கன்னியருக்கு அவர்கள் ஒற்றைப் பேருரு என்று. ஆகவே நான் அவரை சந்திக்கவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினேன்.
எவ்வண்ணம் அச்சந்திப்பு நிகழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கோத்துக்கொண்டேன். அவரிடம் சென்று உங்களுக்கென ஒரு செய்தியை கேட்பதல்ல எனது நோக்கம். அவ்வண்ணம் கேட்டால் இச்சூழல் எதை வகுத்திருக்கிறதோ, அவரிடம் எதை எதிர்பார்த்திருக்கிறதோ அதை மட்டுமே கூற இயலும். பிறிதொன்றைச் சொல்லி பழி சூடிக்கொள்ளவோ பிறிதொன்றை எண்ணி தனக்குத்தானே பழி ஏற்றுக்கொள்ளவோ அவர் துணியமாட்டார். இயல்பாக பேசிக்கொண்டிருக்கவேண்டும். அப்பேச்சில் அரசியல் எழலாகாது. நான் அவரிடம் பர்சானபுரியின் ராதையைப்பற்றி பேசலாமா என்று எண்ணினேன். பின்னர் அதையும் தொடக்கூடாது என்று முடிவு செய்தேன்.
இங்குள்ள அத்தனை பெண்டிரிலும் ராதை உறைகிறாள். ஆனால் தங்களை ராதையென உணரும் அக்கணமே விலகி ராதை மேல் காழ்ப்பு கொள்ளாத எவருமில்லை. ராதையை தொட்டெழுப்ப வேண்டும், ராதையைப் பற்றி பேசிவிடலாகாது. ராதை என் பேச்சினூடாக எவ்வண்ணமேனும் என்னையறியாமல் அங்கு நினைவுகூரப்படுவாளெனில் அது நன்று. அவரை தன் கன்னிப்பருவம் நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். அன்று அவருள் எழுந்த தங்கள் இனிய வடிவை ஒருகணமேனும் நினைத்து முகம் மலர்வார் எனில், விழி கனிவார் எனில், சொல் குளிர்வாரெனில் அதுவே அத்தருணம், அப்போது தங்களைப்பற்றி சொல்லவேண்டும்.
இன்று தாங்களிருக்கும் இத்தனிமை, அனைவரும் உடனிருக்கையிலும் எவருமிலாதிருக்கும் இந்த உச்சம் பற்றி கூறவேண்டும் என முடிவெடுத்தேன். பெண்டிர் ஆண்கள் துயருற்றிருப்பதை விரும்புகிறார்கள், அது இறுகிய நிலம் மீது பெருமழை பெய்து மண் இளகுவதுபோல் அவர்கள் மேல் தாங்கள் வேர் விடுவதற்கு உகந்தது. தளிர்க்கிளை விரித்து தழைத்தோங்குவதற்குரிய கதுப்பு. பெண்டிர் உள்ளத்தில் தனித்த, நோயுற்றுத் துயரடைந்த ஆண் எப்போதும் எழுகிறான். அப்போது அவர்கள் அவனை மாண்பு நீக்கி, பேருரு அகற்றி, ஆணவம் களைந்து குழவியாக்கிக்கொள்ள முடியும். ஆடைகளைக் களைந்து கையிலெடுத்துக்கொள்ள முடியும்.
நான் என் ஏவலன் செய்தியுடன் மீண்டு வருவதை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தேன். ஒருவேளை இளவரசி கிருஷ்ணை என்னை சந்திப்பதை முற்றாக தவிர்த்துவிடக்கூடும் என்றும் எண்ணினேன். பலமுறை அவ்வாறே நிகழ்ந்துள்ளது. குருக்ஷேத்ரப் பெரும்போர் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தபோது இளவரசி தன் கொழுநர் உட்பட எவரையுமே சந்திக்கவில்லை என்றார்கள். களத்திலிருந்து வந்த செய்திகளை மட்டும் ஒரு சேடிப்பெண் வந்து கேட்டு சென்று அரசியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். போர் தொடங்குவதற்குள்ளேயே அப்போரின் முடிவை முற்றுணர்ந்து தன்னுள் தனித்து குளிர்ந்து இறுகிவிட்டார் கிருஷ்ணை. அவருக்குத் தெரியும் நீங்கள் யார் என்று.
அச்சேடியிடம் பின்னர் கேட்டேன் “செய்திகளை நீ சென்று அவரிடம் சொல்வதுண்டா?” என்று. “இல்லை” என்று அவள் சொன்னாள். “கௌரவத் தரப்பின் பெருவீரர்கள் உட்பட எவர் மறைந்தாலும் அதை தன்னிடம் வந்து சொல்ல வேண்டியதில்லை என்றார். போரில் என்ன நிகழ்கிறது என்றும் தன்னிடம் விரித்துரைக்க வேண்டியதில்லை என்று இளவரசி ஆணையிட்டிருந்தார். களத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நோக்கி, அங்கே அஸ்தினபுரியின் அரசரோ அவரது இளவல்கள் நூற்றுவரோ அவர் மைந்தரோ களம்படுவார்களெனில் அச்செய்தியை மட்டும் உரைத்தால் போதும். மாண்டோர் பெயர் மட்டும் கூறப்பட்டால் போதும். அச்செய்தியையும் சொல்லென உரைக்க வேண்டியதில்லை. அதை ஓலையில் எழுதி அளித்தால் போதும் என்றார்.”
ஒவ்வொரு பெயராக அவர் தன் உள்ளத்திலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். இறுதியில் துச்சாதனன் மறைந்தால் இளஞ்சிவப்புப் பட்டாடை அணிந்து வந்து தன் முன் நிற்கவேண்டும் என்றும் லக்ஷ்மணன் மறைந்தால் பச்சை என்றும் துருமசேனனுக்கு மஞ்சள் என்றும் துரியோதனன் மறைந்தால் அடர்சிவப்பு என்றும் அரசி ஆணையிட்டிருந்தார். அவ்வாறு சொல்லின்மையில் இருந்தே அச்செய்தியை அவர் அறிந்திருக்கிறார். தந்தையின் நீப்புச் செய்தியை அறிந்த அக்கணமே உணவொழித்து பன்னிரு நாட்கள் நோன்பு கொண்டார். பின்னர் வெளிவந்தபோது மெலிந்து வாயுலர்ந்து விழி மங்கி பிறிதொருத்தியாக மாறியிருந்தார்.
“அதன்பின் இன்று வரை அவர் புன்னகைக்கவில்லை. விழிகளில்கூட புன்னகை எழவில்லை” என்றாள் சேடி. “ஒவ்வொரு நாளும் அரசுசூழ் பணிகளுக்கு வந்தமர்ந்துவிட்டு தன் சிற்றறைக்கு மீள்கிறார். அணுக்கர் என்று இன்று அவருக்கு எவரும் இல்லை. அரசர்கூட மிக அரிதாகவே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அங்கிருப்பது ஓர் அறியாத் தெய்வம். அவ்வுள்ளத்தில் நிகழ்வதென்ன என்பதை எவரும் அறியார்” என்றாள். நான் அத்தோற்றத்தை என்னுள் முன்னரே எழுப்பிக்கொண்டிருந்தேன். நான் நேரில் கண்ட கிருஷ்ணை அவ்வாறே தோற்றமளித்தார். ஆயினும் எனக்கு அவரை சந்திக்கமுடியும் என்னும் நம்பிக்கை இருந்தது. அவையில் அவர் பேசியவை குறைவு. எஞ்சிய சொற்கள் அவரிடம் இருக்கும், அவை அவரை என்னை சந்திக்கச்செய்யும். எஞ்சும் சொற்கள் கணமொழியாமல் புழுக்கள் எனத் துடிப்பவை.
பலமுறை பலரும் அவரை தனியாக சந்திக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அஸ்தினபுரியிலிருந்து பெருங்கவிஞர் சாரிகர் இங்கு வந்து ‘அருந்ததி வைபவம்’, ‘துவாரகை வலம்’ எனும் இரு காவியங்களை எழுதியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அருந்ததி வைபவம் இன்று உத்தராபரிணயம் என்ற பேரில் சூதர்பாடலாக ஆகி மக்களிடையே புகழ்பெற்றிருக்கிறது. அக்காவியங்களை அவர் சாம்பனின் அவையில் அரங்கேற்றியபோது மேடையில் அரசருக்கருகே கிருஷ்ணை அமர்ந்திருந்தார். அச்சொற்களில் ஒன்றேனும் அவர் செவியில் நுழைந்ததா என்பதற்கு சான்றில்லை என்று அவையோர் உணர்ந்தனர். அவர் விழி கனிந்தது ஒரு சொல்லுக்காக மட்டுமே. உடல் சுருங்கி பிறந்து மெல்ல உருக்கொண்டு வளர்ந்து வந்த பரீக்ஷித்தின் பெயர் கூறப்பட்டபோது.
பரீக்ஷித்தை அவர் பேரன்புடனும் அதற்குரிய பதற்றத்துடனும் பேணினார். அம்மகவை ஏழு நாட்களுக்கு ஒருமுறை அவரே சென்று பார்த்தார். தொட்டிலுக்கு அருகே தன் கைவிரல்களால் அம்மகவின் சிறு தளிர்விரல்களைத் தொட்டு அமர்ந்திருக்கையில் விழி சரித்து ஒரு கனவுநிலைக்குச் சென்றார். பரீக்ஷித் அஸ்தினபுரிக்கு கிளம்பியபோதுதான் நீண்ட நாட்களுக்குப் பின் அரசி கிருஷ்ணை தன் அகத்தளத்திலிருந்து வெளிவந்து துவாரகையின் பெருமுற்றத்தில் நிகழ்ந்த கொலுஅமர்தலுக்கும் விடைகொடலுக்கும் அமர்ந்தார். அவரை எதிர்பார்த்திருந்த குடிகள் அவருடைய தோற்றம் கண்டு திகைத்து சொல்லவிந்தனர். எனவே வாழ்த்தொலிகள்கூட எழவில்லை. உயிர்நீத்த உடல்போலிருந்தார் அரசி என்று சேடி ஒருத்தி என்னிடம் சொன்னாள்.
அஸ்தினபுரியின் இளவரசரை பட்டு விரித்த பொற்தாலத்தில் ஏந்தி துவாரகையின் குடிமக்களுக்கு காட்டியபோது அரண்மனை முற்றமெங்கும் நிறைந்திருந்த திரள் ஒரு சொல்லையும் உரைக்கவில்லை. ஒரு வாழ்த்தொலிகூட எழவில்லை. திகைத்தவர்கள்போல, அஞ்சியவர்கள்போல அவர்கள் விழி மலைத்து நோக்கி நின்றனர். இரு கைகளையும் கூப்பியபடி எழுந்த கிருஷ்ணை “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க! வெல்க குருவின் கொடிவழி வந்த பரீக்ஷித்!” என்று கூவினார். அவர் குரல் முன்னால் நின்ற சிலருக்கே கேட்டது. ஆனால் உதடுகள் அசைவதிலிருந்து புரிந்துகொண்டு துவாரகையின் குடிமக்கள் பேரொலி எழுப்பி அம்மைந்தனை வாழ்த்தினர். முனிவரும் அந்தணரும் புலவரும் சூதரும் குடிமுற்றம் வந்து மைந்தனை மலரிட்டு வாழ்த்தினர்.
அரசி மைந்தனை எடுத்து நெஞ்சோடணைத்து முன்நெற்றியில் முத்தமிட்டு நற்சொல் உரைத்து அஸ்தினபுரியிலிருந்து அவரை கொண்டுசெல்வதற்காக வந்திருந்த தூதுக்குழுவிடம் அளித்தார். சுதமனும் சுரேசரும் அரசியை வணங்கி மைந்தனை பெற்றுக்கொண்டனர். அணிநிரை அரண்மனைமுற்றத்திலிருந்து கிளம்பி அகன்று செல்வதை பார்த்தபடி அரசமேடையில் கைகளைக் கோத்து நெஞ்சில் வைத்து அமர்ந்திருந்தபோது அரசி கிருஷ்ணை விழி நிறைந்து முகம் கனிந்தார். தேர்கள் சென்று மறைந்த நெடுந்தொலைவு வரை நோக்கிக்கொண்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் குடிகள் காண எங்கும் கொலுஅமரவில்லை. பின்னர் பல விழவுகள் வந்து சென்றன. ஒவ்வொரு ஆண்டும் துவாரகையில் கூடும் ஆவணிமாத எட்டாம் கருநிலவுநாள் கொண்டாட்டம் இப்போது பொலிவிழந்து பேருக்கென நிகழ்கிறது. அன்று பழைய நினைவை இழக்க விரும்பாத குடிகள் துவாரகையின் அரசமுற்றத்திற்கு வந்து அங்கு கூடிநின்று அரசரையும் அரசியையும் வணங்கிச் செல்வதுண்டு. அவ்விழவுக்கும்கூட அரசகொலுமேடையில் அரசர் சாம்பன் தன்னந்தனியாகவே வீற்றிருந்தார். ஆனால் பரீக்ஷித் அஸ்தினபுரிக்குச் சென்று சேர்ந்ததைப்பற்றி அஸ்தினபுரியின் கவிஞர் ஒருவர் எழுதிய ‘சூக்திகம்’ என்னும் பாடலை சூதர்கள் பாடிய நிகழ்வில் அரசி கிருஷ்ணை வந்து அமர்ந்திருந்தார். அவர் விழி கனிந்து அதை கேட்டுக்கொண்டிருப்பதை அனைவரும் வியப்புடன் நோக்கினர்.
அரசியின் உள்ளத்தை அறிந்துவிட்டேன் என்று தோன்றியதுமே அவ்வாறு எவர் உள்ளத்தையேனும் அறிய முடியுமா என்றும் ஐயுற்றேன். நான் நம்பியது ஒன்றையே, ஒளி இலாது நீரில்லை. இருண்டிருக்கையில், மண்ணில் ஆழத்தில் உறைகையில் கூட நீர் தன் ஒளியை தக்கவைத்திருக்கிறது.
நான் எண்ணியதுபோலவே எனக்கு அரசியிடமிருந்து அழைப்பு வந்தது. நான் ஏவலனால் அவருடைய அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். செல்லும் வழியில் எண்ணங்களை தொகுக்க முயன்றேன். ஆனால் என்னால் குவிய இயலவில்லை. உள்ளறைக்குள் சற்றுநேரம் காத்திருந்தபின் அரசியின் சிற்றறைக்குள் செலவொப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளே கிருஷ்ணை சிறுபீடத்தில் இளநீல ஆடை அணிந்து அமர்ந்திருந்தார். நீலநிற மலர்கள் சூடிய குழல் நீண்டு கிடந்தது. நீலக் கல் பதித்த அட்டிகை. முகமன் உரைத்தபோது அந்த நீல நிறத்தையே நான் நோக்கினேன். என்னை அமரச்சொன்னார்.
“நான் தங்களைப் பார்க்கவந்தது ஒரு கோரிக்கையுடன்தான், அரசி” என்றேன். “அரசர் இங்கு மீளவேண்டும் என்னும் கோரிக்கையை அவருடைய துணைவியர் எழுவரிடமிருந்தும் பெற்றுள்ளேன். காளிந்தி அன்னையை சந்திக்கச் செல்லவிருக்கிறேன். அதற்கு முன் உங்களிடமிருந்து ஒரு சொல் பெற விழைந்தேன். காளிந்தி அன்னைக்குப் பின் எவரையும் சந்திக்க நான் விழையவில்லை” என்றேன். “சொல்க!” என்று அவர் சொன்னார். “தேவி, இங்கே மீண்டுவருவதற்கு துவாரகையின் அரசருக்கு ஏதேனும் உளத்தடை இருக்குமென்றால் அது உங்களை சந்திக்கவேண்டும் என்பதே. உங்கள் தந்தையின் இறப்புக்கு முன்நின்றவர் துவாரகையின் அரசர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் அது போர், அரசர்களின் அறம். இன்று அனைவருமே அதைக் கடந்து உளம் அமைந்துள்ளனர். நீங்களும் அவ்வண்ணமே கடந்துள்ளீர்கள் என்றே எண்ணுகிறேன். அரசர் இங்கே நகர்நுழைகையில் அவரை வரவேற்பவர்களில் தாங்களும் முதன்மைகொள்ளவேண்டும் என்பது என் விழைவு. அவ்வண்ணம் ஒரு சொல்லை தங்களிடம் இருந்து பெற விழைகிறேன்.”
அவர் என்னை கூர்ந்து நோக்கி “அவ்வண்ணம் நான் வந்து நிற்கமாட்டேன் என எப்படி நினைக்கிறீர்கள்?” என்றார். “உங்கள் அரசநெறியை கைவிடமாட்டீர்கள் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்று ஜாம்பவதி அன்னையின் அவையில் உங்களை சந்தித்தபோது சிறு ஐயம் எழுந்தது, ஆகவே மீளவும் சந்திக்கலாம் என்று தோன்றியது” என்றேன். “அதாவது அவையில் நான் சொன்னவை பொய்யாக இருக்கக்கூடும் என்றும் என் அகத்தே நான் வேறு எண்ணம் கொண்டவளாக இருக்கலாமென்றும் கருதினீர்கள் அல்லவா?” நான் “இல்லை, ஆனால் அரசநெறியை மீண்டும் வலியுறுத்தவும் அப்பால் ஒருசில நடைமுறை நலன்களை சொல்லுறுத்தவும் தனிச்சந்திப்பில் வாய்ப்பு அமையும் என கருதினேன்” என்றேன்.
“சொல்க!” என்றார். “அரசி, ஒன்று உறுதிகொள்க! சாம்பன் இங்கே அரசாள நிஷாதர்களும் அசுரர்களும் அன்றி எவரும் விழையமாட்டார்கள். அறுதியாக யாதவரும் ஷத்ரியர்களும் அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைவார்கள். அஸ்தினபுரியின் ஆதரவும் அவர்களுக்கே அமையும். எனில் சாம்பனும் பிறரும் துவாரகையிலிருந்து முழுமையாகவே துரத்தப்படலாம். அவ்வாறு நிகழாது காக்கும் அடிப்படைகள் என்பவை இரண்டு. ஒன்று, துவாரகையின் அரசர் உருவாக்கிய ஐந்தாம் வேதம். இன்னொன்று சாம்பன் அவருடைய குருதியிலெழுந்தவர் என்பது. அவ்விரண்டையும் நிலைநாட்ட அவர் நேரில் வருவது இன்றியமையாதது.”
“அவர் வந்தால் சாம்பனை அரசர் என ஏற்பாரா?” என்று அவர் கேட்டார். “அதை நான் சொல்லமுடியாது. அது அவருடைய உளத்தில் உறைவது. ஆனால் அவரால் ஒருபோதும் தன் மைந்தரல்ல சாம்பன் என்று கூற இயலாது. நிஷாதரும் அசுரரும் அரசுகொள்வதற்கு எதிராக நிலைகொள்ளவும் இயலாது” என்றேன். அவர் புன்னகைத்தார். அதிலிருந்த வஞ்சம் என்னை திகைக்கச் செய்தது. “உங்கள் எவரைவிடவும் நான் அவரை அறிவேன்” என்று அவர் சொன்னார். “ஏனென்றால் நான் நினைவறிந்த நாள் முதல் அணுகி நுணுகி அறிந்துகொண்டிருப்பது அவரை மட்டுமே. அவர் விழைவது துவாரகையின் வாழ்வை அல்ல, அழிவை” என்று அவர் சொன்னார். அக்கணம் அதுவே உண்மை என்று என்னுள் ஓர் எண்ணம் எழ கடுங்குளிர்போல் அச்சம் என்னுள் நுழைவதை கண்டேன்.
“அவர் தெய்வப்பேருரு என்பதை நான் நன்கறிவேன். இந்நகர் அவர் ஒரு போருக்கென எடுத்த படைக்கலம். இங்கே அவர் அமர்ந்துசென்ற பீடம் இது. போர்முடிந்துவிட்டது, படைக்கலத்தை அவர் கடலில் வீசிவிடவே விழைகிறார். தெய்வங்கள் மலைநீங்கியபின் பீடத்தை முற்றழிப்பது பூசகர் வழக்கம்” என்றார் கிருஷ்ணை. “இல்லை தேவி, என் தலைவர் பேரளி கொண்டவர்” என்றேன். அவர் சிரித்தபோது மேலும் வஞ்சம் தோன்றியது முகத்தில். “தெய்வங்கள் அளிகொண்டவை என எவர் சொன்னார்கள்? எந்த வேதம் அவ்வண்ணம் உரைக்கிறது? பேரழிவின் வடிவங்களே தெய்வங்கள். அவை புயலென, ஊழியென, எரிமழை என பேருருக் காட்டுபவை. அவ்வண்ணமே இவரும் எழுந்திருக்கிறார். சென்ற வழியெங்கும் குருதியையும் விழிநீரையும் சாம்பலையுமே எஞ்சவைத்திருக்கிறார்.”
“எனில் துவாரகை மட்டும் பொலிவுடன் மிஞ்சும் என எப்படி எண்ணமுடியும்? இது இடிமின்னல் இறங்கிய பாறை என நொறுங்கும், வேறுவழியே இல்லை” என்று கிருஷ்ணை தொடர்ந்தார். “அரசியல் என நோக்கினாலும் இந்நகர் அழிவதே அவருக்கு நன்று. அவர் நிறுவிய வேதம் இங்கு முளைத்தெழவேண்டும் என்றால் அதை எழும் புதிய குடிகள் ஒவ்வொன்றும் தங்களுடையது என்று எண்ணவேண்டும். துவாரகை இங்கே பேரரசு எனத் தொடருமென்றால் அந்த வேதம் அவ்வரசின் முகப்படையாளமாக ஆகும். ஆகவே பிறரால் புறக்கணிக்கப்படும். துவாரகை இங்கே சிறுத்து நீளும் என்றால் அது அவ்வேதத்தின் தோல்வி என்றே கருதப்படும். இந்நகர் அழிந்து சொல்லில் பேருருக் கொள்ளும் என்றால் ஒவ்வொரு சிறுகுடியும் அது அமைக்கவிருக்கும் பெருநகரை துவாரகை என்று எண்ணிக்கொள்ளும். அவர்களின் கனவுகளில் அது நிலைகொள்ளும். அவர் விழைவது அதையே.”
“தன்னுடைய பருவுடல் அழிகையில் தனதென்று எதுவும் இங்கு எஞ்சாதொழியவேண்டும் என அவர் விழைகிறார். தன் நிழல் என தான் உருவாக்கிய அனைத்தையும் இழுத்துக்கொண்டு மறைய எண்ணுகிறார். தன் சொல் ஒன்றே இங்கு திகழவேண்டும் என்பதே அவருடைய திட்டம்” என்றார் கிருஷ்ணை. “ஆகவே எனக்கு அவர் இங்கு வந்து இந்நகரை மீட்பார், இது செழிக்க வழியமைப்பார் என்ற நம்பிக்கை எவ்வகையிலும் இல்லை. அவர் வரப்போவதில்லை, வந்தால் இதன் அழிவை விரைவாக்க, முழுமையாக்க செய்யவேண்டியவற்றையே செய்வார்.” அவர் மீண்டும் நகைத்து “அதையும் செய்யவேண்டியதில்லை. அடித்தளத்தில் விரிசலை உருவாக்கியபின் அவர் கட்டி எழுப்பிய பெருநகர் இது” என்றார்.
நான் சொல்லிழந்து அமர்ந்திருந்தேன். அரசி “வேறேதேனும் சொல்வதற்குள்ளதா?” என்றார். “எனில் நீங்கள் இங்கு போரிடுவது எவருடன், அரசி?” என்றேன். “அவருடன்தான். தெய்வமே என்றாலும் கொல்ல வரும் என்றால் எதிர்த்து நின்றிருப்பதே உயிர்களின் அறம். நான் அவர்மேல் வெறுப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் எனில் அது என்னால் இயலுமா என்று எண்ணி திகைத்திருப்பேன். ஆனால் வெறுக்கத் தொடங்கியதும் அது எத்தனை எளிதெனக் கண்டறிந்தேன். என் அன்பையும் அளிப்பையும் முழுமையாகவே கசப்பென்றும் காழ்ப்பென்றும் மாற்றிக்கொண்டேன். இன்று அவர் பெயரே என்னை குமட்டச் செய்கிறது. நேர்முன் அவரை கண்டால் முகத்தில் காறி உமிழக்கூடும். நெஞ்சில் வாளெடுத்துப் பாய்ச்சவும்கூடும்.”
“தெய்வம் மானுடருக்கு அருள்கிறது என்பது மானுடர் தங்கள் எளிமையால், சிறுமையால் உருவாக்கிக் கொள்ளும் பொய். தெய்வமென மானுடர்முன் தோன்றுவன அனைத்துமே பேரழிவின் விசைகளே. பெருவெள்ளம், காட்டெரி, புயல், கடல்கோள், கொடுநோய். அவற்றை அஞ்சி அவற்றிடமே மன்றாடி அவற்றை வழிபடுகின்றனர் எளியோர். வழிபடுவதற்காக அவற்றை அளிகொண்டதாக அமைத்துக்கொள்கின்றனர். எறும்புகள் யானையின் கால்கள் இரக்கம் மிக்கவை என எண்ணிக்கொள்ளும் போலும். அவை மிதித்தழிப்பது நன்மைக்காகவே என்று கற்பனை செய்துகொள்ளும். யானை எறும்புகளை அறிவதே இல்லை. அதன் பாதையை எறும்புகள் உணரவும் இயலாது.”
“ஆயினும் எறும்புகள் வாழ்ந்தாகவேண்டும். நூறாயிரம்கோடி எறும்புகளில் ஒன்றேனும் திரும்பி யானையை கடித்தாகவேண்டும். கொடுக்கு உடையலாம், உயிர்துறக்கலாம். ஆனாலும் எதிர்த்தாகவேண்டும். நான் இன்று இவரை வெறுப்பதுபோல் எவரும் என்றும் வெறுத்ததில்லை. அந்த வெறுப்பு என் தந்தையையும் இளையோரையும் இவர் வஞ்சத்தால் களத்தில் வீழ்த்தியதிலிருந்து தொடங்குகிறது. பல லட்சம் மக்களை வெறும் தசைக்குப்பைகளாக அள்ளியிட்டு அழித்ததில் வளர்கிறது. அதன் பின்னரும் அறத்தை நாட்டுகிறேன் என அவர் கொண்டிருக்கும் பாவனை கண்டு பேருருக் கொள்கிறது. தன் சொல் நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக தன் குருதியினரையும் தன் நகரையும் அழித்துக் கடந்துசெல்லும் ஆணவம் கண்டு அழுகி கெடுநாற்றம் கொள்கிறது.”
அவர் குரல் உடைந்தது. அழுகையில் வெடிக்கப்போகிறார் என எண்ணினேன். ஆனால் மூச்சிழுத்து தன்னை திரட்டிக்கொண்டார். “அனைத்துக்கும் அப்பால் என் சிற்றிளமைப் பருவத்தில் நெஞ்சில் நுழைந்து இசையென்றும் அழகென்றும் நிறைந்தமைக்காக, தெய்வமென்றால் இனிதென்று என்னை நம்பவைத்தமைக்காக அவரை வெறுக்கிறேன். இக்கசப்புடன்தான் என் உடல் சிதைநின்று எரியவேண்டும். இதுவே இங்கே நான் ஈட்டிய மெய்யறிதல்” என்றார். நான் பெருமூச்சுடன் உடல் தளர்ந்தேன். “இதை நீங்கள் அவரிடம் சொல்லலாம்” என்றார்.
“சொல்கிறேன், அரசி” என்றேன். “வாழ்நாளெல்லாம் உளம்கனிந்த மகளிர்ச்சொல்லையே கேட்டு வந்தவர். கௌரவ மகளிரும் பாண்டவ மகளிரும் சேர்ந்து அளித்த பழிச்சொற்களை கைகூப்பி அவர் பெற்றுக்கொண்டு நின்றிருப்பதையும் கண்டேன். அவற்றையும் அவர் மலர்மாலையெனவே சூடிக்கொண்டார். இச்சொற்களும் அவர் நெஞ்சுக்கு அணிகலன் என்றாகலாம்” என்றேன். அரசி இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க நான் எழுந்து வணங்கி விடைகொண்டேன்.