களிற்றியானை நிரை - 77

பகுதி எட்டு : அழியாக்கனல்**-1**

தீக்ஷணன் வீட்டுக்கு வந்தபோது இரவு பிந்திவிட்டிருந்தது. அவன் அன்னை வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை தொலைவிலேயே பார்த்தான். மையச்சாலை ஒளியில் மூழ்கி சிவந்த நதி என அலைகொண்டிருந்தபோதிலும் அவன் வாழ்ந்த தெரு அரையிருளில் இருந்தது. மையச்சாலையின் ஒளி கசிந்து அதன் இரு முனைகளிலும் பரவியிருந்தது. அவனுடைய வீடு முற்றிருளில் ஒற்றை பிறைவிளக்குச் சுடர் விழியென திகழ்ந்திருக்க கதவுகள் வாய்திறந்து அமைந்திருந்தது. அத்தெருவில் அவ்வேளையில் மானுடர் எவருமே இருக்கவில்லை. முற்றாக கைவிடப்பட்டதுபோல் அது கிடந்தது.

சாலையின் மையத்தில் இருந்த கற்தூண்மேல் பீதர்நாட்டு பளிங்கு விளக்கு புன்னைக்காய் எண்ணையில் எரிந்துகொண்டிருந்தது. பின்னிரவில் அதன் பளிங்குச் சுவர்கள் கருமைகொண்டு ஒளி மங்கியிருந்தன. தூணுக்குக் கீழே சிந்திய செந்நீர் என வெளிச்சம். சாலையின் முழக்கத்தையும் பரபரப்பையும் கண்டு அஞ்சிய தெருநாய்கள் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தன. அவை அந்த ஒளிவட்டத்திற்கு அப்பால் இருளில் வெவ்வேறு மூலைகளில் உடல்களை சுருட்டிக்கொண்டு படுத்திருந்தன. காவல்பொறுப்பிலிருந்த நாய்கள் மட்டும் ஒளிப்பரப்பை நோக்கியபடி முன்கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டு விழிகள் இருளில் கங்குகள்போல் மின்ன அமர்ந்திருந்தன. அவற்றின் கண்களுக்கு நடுவே அந்த ஒளிப்பரப்பு ஒழிந்த கூத்துமேடை எனத் தெரிந்தது.

பிறைவிளக்கு அன்னையின் தலைக்குப் பின்னால் இருந்தது. அவளுடைய கூந்தலிழைகள் செந்நிறமாக சுடர்விட்டன. அவள் நிழலுருவெனத் தெரிந்தாள். தீக்ஷணன் இல்லத்தை அணுகுந்தோறும் நடைதளர்ந்தான். அன்னையின் தோற்றம் அவனுக்கு கசப்பூட்டியது. அவன் இல்லம் திரும்பியது அன்னைக்காகத்தான். நகரில் அலைந்துகொண்டிருந்தபோது அன்னை காத்திருப்பாள் என்ற எண்ணம் குளிர்ந்த ஊடுருவலென அவன் வயிற்றில் புகுந்தது. அதை தவிர்க்க முயன்று தெருக்களின் கொண்டாட்டங்களில் திளைக்க முற்பட்டபோதிலும் அது அவனுள் உறுதியாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அதன் எடையை தாளமுடியாமல் ஆகியது. ஆகவே அவன் திரும்பிவந்தான். ஆனால் அன்னையின் காத்திருப்பைக் கண்டதுமே அவளை வசைபாடி சிறுமைசெய்யவேண்டும் என்ற வெறி எழுந்தது. சினத்தில் அவன் உடல் நடுங்கியது. படிகளில் ஏறும்போது அவன் காலடியோசையில் அது எதிரொலித்தது.

தீக்ஷணன் அவளிடம் ஒரு சொல்கூட பேசாமல் திண்ணையில் ஏறி உள்ளே சென்றான். அன்னை எழுந்து உள்ளே வந்தாள். அவள் உடலின் எலும்புகளின் ஓசை கேட்டது. அவன் தன் சிற்றறைக்குள் சென்று மஞ்சத்தில் அமர்ந்துகொண்டான். அன்னை அவனருகே வந்து நின்றாள். அவன் நிமிர்ந்து நோக்காமல் அமர்ந்திருந்தான். அன்னை தாழ்ந்த குரலில் “அன்னம் கொண்டுவருகிறேன்” என்றாள். “வேண்டாம்” என்று அவன் சொன்னான். “நான் உண்டுவிட்டே.ன்.” அன்னை சிலகணங்கள் பொறுத்து “நான் அறிவேன், நீ உண்ணவில்லை” என்றாள். அவன் சீற்றத்துடன் எழுந்து “நான் உண்ணவில்லை என நீ அறிந்தாயா? நான் சொல்வது பொய்யா? நிறுவவேண்டுமா நான்? என் நெஞ்சைப் பிளந்து பார்க்கவேண்டுமா உனக்கு?” என்று கூவினான். அன்னை தலைகுனிந்து நின்றாள். அவளுக்குப் பின்னால் விளக்கின் ஒளியிருந்தமையால் முகம் தெரியவில்லை. ஆனால் விழிநீர் உதிர்வது தெரிந்தது.

அவன் அவளுடைய மெல்லிய விசும்பலோசையை கேட்டான். “ம்” என்றான். பின்னர் மீண்டும் “ம்” என்றான். அன்னை “ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? இந்த நகரே கொண்டாடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “நானும் கிளம்புகிறேன். நானும் கொண்டாடிவிட்டு வருகிறேன்…” என்று அவன் பற்களைக் கடித்தபடி சொன்னான். “மூக்குவார கள்ளருந்துகிறேன். பரத்தையரிடம் ஆடிவிட்டு மீள்கிறேன். நிறைவா உனக்கு?” அன்னை ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். விழவொழிந்த ஆலயம் என்னும் சொல் நெஞ்சில் எழுந்தது. எந்த நூலில் வரும் ஒப்புமை? அவன் உள்ளம் தணிந்தது. “செல்க, பால்கஞ்சி மட்டும் கொண்டுவருக!” என்றான். அன்னை பெருமூச்சுடன் திரும்பிச் சென்றாள்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். நகரின் கொந்தளிப்பான அசைவுகளும் ஒளிப்பெருக்கும் கண்களுக்குள் எஞ்சியிருந்தன. அவன் பெருமூச்சுவிட்டு கண்களைத் திறந்து எதிர்ச்சுவரை பார்த்துக்கொண்டிருந்தான். சுவரிலிருந்த காரை பெயர்ந்த வடுக்கள் ரிஷிகளின் முகங்களாயின. அவன் அவற்றை விழிதொட்டு விழிதொட்டு சந்தித்தான். உரு அடைந்தன, விழி கொண்டன, நோக்கு தெளிந்தன, சொல்கொண்டன. அவன் அவற்றையே நோக்கிக்கொண்டிருக்க அன்னை கஞ்சிக்குடுவையுடன் வந்து நின்றாள். அவள் காலடியோசை கேட்டு அவன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அக்கலயத்தை வாங்கி ஒரே மூச்சில் அருந்தினான். “சுடும்… வெம்மை மிக்க கஞ்சி” என அன்னை பதறுவதற்குள் குடுவையை திரும்ப அளித்துவிட்டான். அன்னை அவனை திகைப்புடன் பார்த்தாள்.

அவன் எழுந்து சென்று குறுந்திண்ணையில் இருந்த சிறுகலத்து நீரில் வாய் கழுவி வந்தான். மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். “படுத்துக்கொள்… துயில்க!” என்று அன்னை சொன்னாள். அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மிக அருகே வந்து கூர்கொண்டது ரிஷிமுகம். கணாதரின் முதிய விழிகள் அவனை நோக்கின. “அறிவது எதை, மெய்மை என ஒன்றுண்டு என்றால் அதற்கு ஏன் இத்தனை விளக்கங்கள்?” அவன் “புரியவைக்க” என்றான். “அல்ல, பிழைப்புரிதல்களை களைய” என்றார். “ஒவ்வொரு மெய்மையையும் அடைந்த அக்கணமே மானுடர் மறுக்கத்தொடங்குகிறார்கள். அவர்களின் அன்றாடத்திற்கு ஏற்ப திரிக்கிறார்கள். அந்த மறுப்புக்கும் திரிப்புக்கும் எதிராகத்தான் இத்தனை விளக்கங்கள் தேவைப்படுகின்றன.” அவன் “ஆம்” என்றான். “ஏன் அவற்றை மறுக்கிறார்கள்?” என்று அவர் மீண்டும் கேட்டார். அவன் அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

“ஏனென்றால் அம்மெய்மைகள் முழுமையானவை அல்ல. அவை ஒருபக்கம் உண்மை என்றிருக்கையில் மறுபக்கம் பொய்யென்றும் போதா என்றும் தோற்றம் கொள்கின்றன.” அவன் “ஆம்” என்றான். “ஏன்? ஏன் மெய்மைகள் அவ்வண்ணம் இருக்கின்றன?” அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் உரக்க நகைத்து “அவை அடையப்படும்போதே அவ்வண்ணம்தான் வந்தணைந்தன… மூடா, நீரிலல்ல நதியிலல்ல அழுக்கு, அள்ளிய கைகளில்தான்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “கைகள் கறைபட்டவை. தன்னுணர்வால், விழைவால், அச்சத்தால் கட்டுண்ட உள்ளத்தில் வந்தமைகையில் மெய்மை தன்னை சிதைத்துக்கொள்கிறது. வளைக்குள் சென்று சுருண்டமையும் நாகம் பத்திவிரிக்க இயலாது.”

அவன் அவர் சொல்வதையே நோக்கிக்கொண்டிருந்தான். “அச்சத்திலிருந்து, விழைவிலிருந்து, தன்னுணர்விலிருந்து விடுதலை கொள்பவனுக்கு மட்டுமே மெய்மையை அள்ளும் அகக்கலம் அமைகிறது. அஞ்சியவனுக்கு அளிக்கப்படும் மெய்மை படைக்கலமும் கோட்டையும் என்றாகும். விழைவுகொண்டவனுக்கு அது கருவூலமென்றாகும். தன்னுணர்வு கொண்டவனிடம் சொற்குவை என்றாகும். தன்னந்தனி நிற்பது, தானொன்றறிந்து இன்னும் ஒருவருக்கு இயைவிக்கும் மெய்மை என்பது தனியர்களுக்குரியது. தன்னிலும் பிரிந்து தனித்தோர். தனியென்று தருக்கினோர். தானன்றி பிறிதொன்று தன்னைக் கடந்ததை அன்றி ஒன்றை ஏற்காதோர்.”

அவன் புரண்டு படுத்து பெருமூச்சுவிட்டான். அவன் அறைச்சுவர்கள் முழுக்க அவர்கள்தான். பிரஹஸ்பதியின் வழித்தோன்றல்கள். சுக்ரர், கபிலன், கௌதமன், தீக்ஷணன், பரமேஷ்டி, அஜிதகேசகம்பளன். அவர்களின் சொற்களால் சூழப்பட்டு அங்கே அவன் துயின்று விழித்தான். அவர்களிடமிருந்து தப்பும்பொருட்டு கிளம்பிச் சென்றான். அவர்களை இழந்த வெறுமை தாளாது திரும்பி வந்தான். அவன் எழுந்து அமர்ந்தான். நீர்க்குடுவையை அரையிருளிலேயே கைநீட்டி எடுத்து குளிரக்குளிர குடித்தான். தாடியில் வழிந்த நீரை துடைத்தபின் மீண்டும் படுத்துக்கொண்டான். பெருமூச்சுவிட்டான். இவ்விரவில் தீரா நோய்கொண்டவர்கள் மட்டுமே படுக்கைகளில் முடங்கிக்கிடப்பார்கள். வலியுடன் இயலாமையுடன். நான் கொண்டதும் நோய்தான் போலும்.

சுவரில் எழுந்த இளமையான படிவர்முகம் ஒன்று அவனை அணுகியது. “மெய்யென்று ஒன்றிருந்தால் எல்லா வழிகளும் அங்கேதான் செல்லும். அதை எண்ணித் தொட்டு எடுக்கமுடியும். நோக்க முடியும். கைகளால் தொட்டு அடையமுடியும். நாம் நோக்கவில்லை என்றாலும் அங்கிருக்கும். நாம் அனைவருமே மறைந்தாலும் தான் எஞ்சியிருக்கும்.” அவன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். “மெய்மை ஒன்றே. பகலொளிபோல் தெளிவானது. நாளுமென நாம் அறிவது. நம் அன்னமும் நலமும் அழகும் ஆவது. அதை மறுக்கவும் தாண்டவுமே பிற மெய்மைகள் சமைக்கப்பட்டன. அதிலிருந்து அள்ளப்பட்டு அதனாலேயே ஒளியூட்டப்பட்டு அதன்மேலேயே போடப்பட்டன. யானையை மறைக்க நெற்றிப்பட்டமும் கவசமும்போல் பிறிதொன்று உதவுவதில்லை.” அவர் வாய்விட்டுச் சிரித்தார். “ஏனென்றால் அவை மேலும் சிறந்த யானை என தங்களை காட்டுவன. மேலும் ஆற்றல்கொண்டவை, மேலும் அழகியவை.”

அவன் எழுந்து சென்று தன் அறையின் மூலையில் இருந்த சிறிய பெட்டியை திறந்தான். அதற்குள் அவன் தன் மரவுரி ஆடைகளை வைத்திருந்தான். ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்து உள்ளிருந்து தொன்மையான ஏட்டுச்சுவடி ஒன்றை எடுத்தான். பழுப்பேறி மண் ஓடுகள் என்றே தோன்றின. விளக்கைத் தூண்ட அவன் தயங்கினான், அது அன்னையை எழுப்பிவிடக்கூடும். சாளரத்தருகே சென்று அமர்ந்து வெளியே இருந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அச்சுவடிகளை படித்தான். விழிகளுக்கு எழுத்துக்கள் தெளியவில்லை. கண்களை மூடி விரலால் தொட்டுத் தொட்டு எழுத்துக்களை படித்தறிந்தான். விழிகளால் படிப்பதைவிட அவ்வண்ணம் படிக்கையில் சொற்கள் மேலும் கூர்மைகொள்கின்றன. ஆணிகளை அறைவதுபோல இறங்கி அமைகின்றன.

அவன் பலமுறை படித்த நூல். பிரஸ்னசமுச்சயம், ஆயிரம் வினாக்கள் மட்டுமே அடங்கியது. ஒவ்வொரு வினாவுக்கு நடுவிலும் சொல்லில்லாமல் விடை அளிக்கப்பட்டுள்ளது என்பார்கள். அவ்விடையிலிருந்தே அடுத்த வினா எழுகிறது. ஆகவே ஒரு வினாவின் விடையை அடைந்த பின்னரே அடுத்த வினாவை சென்றடைய முடியும். சில இடைவெளிகள் எளிதில் தாண்டக்கூடியவை. சிலவற்றின் நடுவே அடியிலியென ஆழம். அச்சமூட்டும் இருள். ஆனால் அவ்விருளே அவ்விரு வினாக்களின் விளிம்புகளையும் ஈர்ப்பு மிக்கதாக்குகிறது. அவன் வாயிலருகே அன்னையின் நிழலசைவை உணர்ந்தான். அச்சுவடிக்கட்டை தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டான். அவளை திரும்பி நோக்காமல் அமர்ந்திருந்தான்.

“வேண்டாம், மைந்தா. சொல்வதை கேள். அச்சுவடிகளை படிக்காதே. அவற்றை வீசிவிடு… வேண்டாம். அன்னைசொல் கேள். உனக்காகவே நான் இதுவரை வாழ்ந்தேன். இங்கு தனிப்பெண் எதிர்கொள்ளும் துயர்களை நீ அறியமாட்டாய். நான் ஒவ்வொரு முள்முனையிலாக தவம் செய்து இங்கு வந்திருக்கிறேன். உன்னை கண்ணீரால் நீராட்டி வளர்த்திருக்கிறேன்.” தீக்ஷணன் திரும்பி அவளை நேர்நோக்கி வெறுப்புடன் உதடுகளைச் சுழித்து “அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? அடிமையென உனக்கு தொண்டு செய்யவேண்டுமா?” என்றான். அன்னை உடனே விசும்பினாள். “நீ அச்சுவடிகளை படிக்காதே. அவற்றை வீசிவிடு. அவற்றை படித்துத்தான் உன் தந்தை என்னைவிட்டு கிளம்பிச் சென்றார். உன்னையும் இழந்தால் என் உலகமே அழிந்துவிடும்.”

அவன் அவளை நோக்கி இகழ்ச்சியுடன் “உன் உலகைப் பேணும் பொறுப்புதான் எனக்கு வாழ்க்கை, அல்லவா?” என்றான். அவளால் அதற்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. “வேண்டாம், மைந்தா…” என்றாள். “செல்க! செல்க!” என்றபடி தீக்ஷணன் எழுந்தான். கைவீசி “என்னை தனிமையில் விடு… என்னை விட்டுவிடு…” என்று கூவினான். அவன் குரல் உடைந்து ஒலித்தது. “என்னை உன் காலடியில் நாயென கட்டியிட நினைக்கிறாய். என்னை உன் அடிமையென எண்ணுகிறாய்… நீதான் என் தளை. என் சிறை நீ.” அன்னை உதடுகளை இறுக்கிக்கொண்டு ஓசையின்றி அழுதாள். அவன் அந்த அழுகையோசைகளை அன்றி எதையும் கேட்க முடியாதவனாக அமர்ந்திருந்தான். அவை கூசவைத்தன, சிறுமைகொள்ளச் செய்தன, ஆகவே சீற்றத்தை எழுப்பின. எதையோ கிழித்துக் கிழித்து வீசிக்கொண்டிருப்பதுபோன்ற அழுகை.

அவன் வெளியே சென்றுவிடலாம் என்று எண்ணினான். ஆனால் அஸ்தினபுரியின் ஓசையும் ஒளியும் அவன் நினைவிலெழுந்து உடலை கூசவைத்தன. மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். பின்னர் வெறியுடன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். விம்மலும் கேவலுமாக அழத்தொடங்கினான். அன்னை ஓடிவந்து அவன் கைகளை பற்றினாள். அவன் அவளை உதறி அகற்ற முயல கைகளை இறுகப்பற்றி இறக்கி அவன் மடிமேல் அமைத்து அழுத்திக்கொண்டாள். “உனக்கு என்னவேண்டும்? எதற்காக இத்தனை துயரம் அடைகிறாய்? சொல், உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் சாகிறேன். நான் செத்தால் நீ மகிழ்ச்சியாக இருப்பாயா?”

அவன் அவளை பெருகிப் பெருகி உடலையே ஆட்கொண்ட கசப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அந்த உணர்வுகள் மிகை. அந்தச் சொற்கள் மிகை. ஆனால் காலந்தோறும் அத்தனை பெண்களும் அத்தருணத்தில் அத்தகைய சொற்களையே சொல்லிவந்திருக்கிறார்கள். அவர்கள் வேறொன்று அறியார். அவன் அவள் முகத்தை நோக்கி “நான் இந்நகரை வெறுக்கிறேன். இந்த வீட்டை வெறுக்கிறேன். இந்த மக்களை, என் சுற்றத்தை, உன்னை வெறுக்கிறேன்” என்றான். “ஏனென்றால் இவையனைத்துமே பொய். பொய்யை உண்டு பொய்யை உயிர்த்து பொய்யில் திளைக்கிறீர்கள் நீங்கள். இந்தப் பொய் என்னை தொட்டாலே கூசுகிறேன். எண்ணி எண்ணி அருவருக்கிறேன்.”

அவள் அவன் கையை உலுக்கி “வேண்டாம், இப்படியெல்லாம் நினைக்காதே. இது உன்னை தூக்கிக்கொண்டு சென்றுவிடும்” என்றாள். “ஆம், இங்கிருந்து சென்றுவிடவே எண்ணுகிறேன். இவையனைத்தையும் ஒருகணம்கூட எண்ணாமல் அகன்றுவிடவேண்டும் என்று விழைகிறேன்” என்றான். அவள் “மைந்தா… மைந்தா, என் உயிர் நீ. என் வாழ்க்கையின் பொருள் நீ” என்றாள். மீண்டும் அவன் உடல்கூசினான். ஏதோ கூத்துப்பாடலின் வரிபோல அத்தனை தொன்மையானது, பழகியது, ஆகவே செயற்கையானது அச்சொற்றொடர். அவ்வழுகையும் அந்த முகமும்கூட அத்தனை குமட்டலை உருவாக்கின. “எழுந்துசெல். நீ என் தளை. உன்னை உதறினாலன்றி எனக்கு விடுதலை இல்லை” என்றான்.

அவள் கண்களில் ஒருகணம் வந்து மறைந்த சீற்றம் அவனுக்கு நிறைவை அளித்தது. “சினமடைகிறாய் அல்லவா? அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அது உண்மையானது, இந்த அழுகையும் புலம்பலும் பொய். எனக்கு பொய் குமட்டுகிறது” என்றான். அவள் உடலுக்குள் அவள் இன்னொன்றாக மாறுவதை அவனால் உணரமுடிந்தது. அவள் குரல் மாறிவிட்டிருந்தது. “உன் தந்தையும் இப்படித்தான் என்னிடமிருந்து கிளம்பிச் சென்றார். நீயும் செல். சென்று எதை அடையப்போகிறீர்கள் நீங்கள்?” என்று அவள் கூவினாள். அவள் முகம் வெறுப்பில் வலிப்பு கொண்டிருந்தது. “நான் சொல்கிறேன், நீயும் உன் தந்தையும் உன்னைப் போன்றவர்களும் எதையும் அடையப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தன்மையம் கொண்டவர்கள். ஆணவம் நிறைந்தவர்கள். அந்த ஆணவம் பெருகி அழுகி சீழ்கட்டி துடிக்கும்போது சூழ இருப்பவர்களை புழுக்கள் என நினைக்கிறீர்கள். அவர்களுக்கு மேல் தலைதூக்கி நின்று மானுடப்பதர்களே என அழைக்க விரும்புகிறீர்கள். நீங்கள் நாடுவது அதை மட்டுமே. உன் தந்தை அதன்பொருட்டே கிளம்பிச் சென்றார். நீயும் அதற்காகவே செல்கிறாய்.”

அவள் எழுந்து விசையுடன் தன் அவிழ்ந்த குழலை சுழற்றிக் கட்டினாள். “செல், சென்று ஆடையில்லாமல் மண்பூசிய உடலுடன் சுடுகாட்டில் வாழ்ந்துகொள். சடை நீட்டி பேயுருக் கொள். மானுடர் விழைவன அனைத்தையும் விலக்கு. மானுடர் அருவருப்பும் அச்சமும் கொள்வன அனைத்தையும் செய். நான் நான் என தருக்கு. முச்சந்திகளில் சென்று நின்று மானுடமே என அறைகூவு. அதுதானே நீ விழைவது?” அவன் நடுங்கத் தொடங்கினான். அவளுடைய சீற்றம் முதலில் அவனுக்கு அளித்த தண்மை அகன்று அவன் அகம் கொதிக்கத்தொடங்கியது. “மூடு வாயை” என்று கூவினான்.

“நான் வாயை மூடிக்கொள்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். பிறர் துயர் அறிய முடியாத உங்களைப் போன்றவர்கள் இப்புடவியில் ஒரு சிறுதுளியைக்கூட அறிய முடியாது. நான் உன்னை அறிவேன், ஏனென்றால் நான் என்றும் உன்னுடன் இருக்கிறேன். அணுக்கத்தால் அறிகிறேன். நீ என்னை துளியும் அறியமாட்டாய். ஏனென்றால் நீ என்னை விலக்கவே எண்ணிக்கொண்டிருக்கிறாய். விலகிச்சென்று அறிவது எங்ஙனம்? ஒவ்வொன்றாக விலக்கிச் சென்று இன்மையை அறிவதைப்போல் பேதைமை வேறென்ன? இருப்பதை அறிய வந்தாயா? இன்மையை அறிவதென்றால் அவ்வறிவின் பயன்தான் என்ன?”

அவன் “செல்க!” என்றான். “செல்க! செல்க! செல்க!” என்று கூச்சலிட்டான். அவள் வஞ்சத்துடன் அவனை பார்த்தாள். “உன் தந்தையை ஆயிரம் முறை நான் தீச்சொல்லிட்டிருப்பேன். அவர் என்னை நீங்கிச் சென்றமையால், எனக்களித்த துயரால் எதையுமே அறியலாகாது என்று. வெறுமையைச் சென்றடைந்து அழியவேண்டும் என்று. அத்தீச்சொல்லையே உனக்கும் அளிக்கிறேன். நீ எதையும் அறியப்போவதில்லை. நீ அடைவதென ஏதுமில்லை. கெடுக உன் அறிவு!” அவள் மூச்சிரைக்க திரும்பிச் சென்றாள். அவன் கூடவே சற்று எழுந்து கைநீட்டி எதையோ சொல்ல எண்ணி பின் ஒழிந்து தளர்ந்து அமர்ந்தான்.

சுவர்களில் இருந்து முகங்கள் எழுந்து வந்தன. அஜிதகேசகம்பளனின் முகம். “அதுவே மிகப் பெரிய மாயை. அது விழிநீரால், அறச்சீற்றத்தால், பழிச்சொல்லால் உன்னை அள்ளிக்கொள்ளும். ஆயிரம் கைகள், பல்லாயிரம் நாவுகள், பலகோடி கலங்கிய விழிகள் கொண்டது. வென்றெழுக!” அவன் “ம்” என்றான். “நோக்குக, இங்குள்ள ஒவ்வொன்றையும் அறியவே நீ வந்தாய்! ஆனால் கொள்ள எண்ணினால், பேண விழைந்தால், வெல்ல முனைந்தால் நீ அவற்றை உரியது என்றும் அல்லது என்றும் பிரித்துக்கொள்கிறாய். நன்றென்றும் தீதென்றும் அழகென்றும் அல்லவென்றும் ஆயிரம் பிரிவினைகளை நிகழ்த்திக்கொள்கிறாய். இங்கிருந்து அறியமுயல்வோர் பாதியையே அறிய முடியும். பாதியறிதல் என்பது முழுப் பொய்யே” என்றார்.

“நீ விடுவது இப்பொருட்களை அல்ல, இவ்வுறவுகளை அல்ல, இவ்வுலகையும் அல்ல. நீ விடுவது இவற்றுடன் நீ கொண்டுள்ள உறவையே. விலக்கம் பயிலவே விட்டுச் செல்கிறாய். விலகிய பின் அணுகி வந்து அறிக! அவ்வறிவே மெய்யென்று உணர்க!” அவன் பித்துவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். பரமேஷ்டி அவன் முன் எழுந்தார். “உன் அன்னை உன்னை அறிந்துள்ளாளா என்ன? அவள் அறிந்த நீயா உன் மெய்? நீ அவளை அறிந்ததற்கு மறுபக்கம் அது. இரண்டும் பாதியறிதல்களே. வெறுப்பதை அறியமுடியாதென்று அறியாதோர் எவருமிலர். எனில் விரும்புவதை மட்டும் எவரால் அறியமுடியும்?” அவன் முன் கபிலர் எழுந்தார். “இங்குள்ளோர் கொள்ளும் பெருந்துயரே அதுதானே? விரும்பியவர்களுக்காக அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். விரும்புவதனால் அவர்கள் அவர்களை அறிவதுமில்லை. ஆகவே அறியாதோருக்காக வாழ்வை அளிக்கிறார்கள். அறியமுடியாமையின் பெருந்துயரில் உழல்கிறார்கள்.”

அவன் எழுந்துகொண்டு தன் சால்வையை எடுத்தான். அறையைவிட்டு வெளியே செல்ல முனைந்தபோது அன்னை ஓடிவந்து அவனை தடுத்தாள். “அன்னை சொல் கேள். மைந்தா, வேண்டாம். வேண்டம், செல்லாதே!” என்றாள். “நீ செல்லுமிடம் எனக்கு நன்றாகவே தெரிகிறது, வேண்டாம். நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடு. அவை அடிவயிற்று நெருப்பால் எழுந்த சொற்கள். நீ என் தெய்வம், என் மூதாதை வடிவம். என் கொடிவழிகளின் முகம். நீ இன்றி எனக்கு உலகமே இல்லை.” அவன் “விலகு” என்றான். “மைந்தா மைந்தா” என அவள் அவன் கையை பிடித்தாள். அவன் அவளை உதறி படியிறங்கினான்.

அவள் அவனுக்குப் பின்னால் ஓடிவந்தாள். “நான் சொன்னவை எல்லாம் பொய்யுணர்வுகள். உன்னைச் சீண்டும் பொருட்டு சொன்னேன். உன் பாதை செல்லுமிடம் வெறும் இருள். அன்னை அதை நன்கறிவேன். மைந்தா, அன்பன்றி வேறேதும் இப்புவியில் ஒரு பொருட்டல்ல. அதுவன்றி இன்பமும் வேறில்லை.” அவன் நின்று திரும்பி “எனில் நீ துயரடைவது அன்பால் அல்லவா? ஆணவத்தாலா?” என்றான். அவள் திகைத்து நின்றாள். “நீ மகிழ்வுறுகிறாயா? துயர்கொண்ட அன்னையென்னும் மாற்றுருவை நடித்து நிறைவடைகிறாயா?”

அவள் கசப்புடன் சிரித்தாள். “அணுக்கமானவர்களை துன்புறுத்தும் கலையை நாம் குழவிப்பருவத்திலேயே கற்றுக்கொள்கிறோம்” என்றாள். “ஆனால் நீ அறிவாய் மெய்யை. நான் ஐயமின்றி சொல்கிறேன். நீ செல்லும் பாதை வெற்று ஆணவத்தாலானது. அடியிலா இருளை அன்றி எதையும் அளிக்காதது. வேண்டாம். நில், அன்னையின் ஆணை இது நில்!” அவன் அவளை திரும்ப நோக்காமல் நடந்தான். அவள் தெருவருகே நின்றுவிட்டாள். நன்று, அவள் பெண். பெண்கள் தெருவுக்கு அப்பால் வரமாட்டார்கள். வீதிவரை மங்கை, காடுவரை மைந்தர். அவன் புன்னகைத்துக்கொண்டான்.

இம்முறை அவன் விளக்கொளியின் கீழ் சென்றுவிட்டான். அங்கே காவல்நின்றிருந்த நாய் ஒன்று அவனைக் கண்டு திடுக்கிட்டு பின்னகர்ந்து கூச்சலிட்டது. பின்னர் அனைத்து நாய்களும் ஊளையிட்டு அழுதன. அவன் ஒளியில் சிவந்த உடலுடன் அங்கே நின்று தன்னைச் சூழ்ந்து ஓசையிடும் பதைப்பு மிக்க விழிகளை கண்டான். பின்னர் மையச்சாலை நோக்கி சென்றான்.