களிற்றியானை நிரை - 7
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 7
வடபுலம் நோக்கி செல்லச் செல்ல ஆதன் அங்கு நிகழ்ந்த பெரும்போரைப் பற்றிய செய்திகளை மேலும் மேலுமென அறிந்துகொண்டிருந்தான். முதலில் துளிச்செய்திகள் வந்தன. விந்திய மலையைக் கடந்த பின் அனைத்து திசைகளிலிருந்தும் அறையும் மழையென அப்பெரும்போரைப் பற்றிய கதைகள் வந்தபடியே இருந்தன. அதிலிருந்த காட்சிகளையும் விரித்துரைப்புகளையும் அவன் எண்ணி எண்ணி தன்னுள் கோத்து அமைத்துக்கொண்டான். அதன்பொருட்டு அவன் அப்போரை தன்னுள் மீளமீள நிகழ்த்திக்கொண்டான்.
ஒவ்வொரு செய்தியும் அவனை வந்தடைந்தபோது அது என்றோ நிகழ்ந்த தொல்கதை போன்ற கட்டுக்கோப்பையும் அழகையும் கொண்டிருந்தது. அக்கட்டுக்கோப்பும் அழகும் அது மிக அகன்றிருந்தமையால்தான் என்று பின்னர் உணர்ந்துகொண்டான். தொலைவில் தெரியும் குன்றின் வடிவ முழுமைபோல் அதன் ஒவ்வொரு சொல்லும் கூர்கொண்டிருந்தது. ஒவ்வொரு உணர்வுக்கும் இலக்கிருந்தது. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று இயல்பாக ஒருங்கிணைந்து ஒற்றைப் பெருக்கென்று, ஒருமைகொண்ட கட்டமைவென்று ஆயிற்று.
ஆனால் மேலும் மேலும் செய்திகள் வந்து பெருகும்தோறும் பொருள் சிதறியது. ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உணர்வும் பிறிதொரு உணர்வால் சிதறடிக்கப்பட்டது. ஒவ்வொரு பெருவீரனும் தன் ஒளிமிகுந்த முகத்துடன் எழுந்த கணமே இருள் கவியும் முகிலொன்று அவன் தலைக்குமேல் தோன்றியது. அறம் திகழும் நிகழ்வை கீழ்மையின் உச்சமென பிறிதொரு நிகழ்வு ஈடு செய்தது. எங்கும் ஒரு கணமும் நிலைக்கவிடாது மலைவெள்ளச் சுழிப்பென அப்போரின் கதைகள் அவனை அலைக்கழித்தன.
தண்டகாரண்யத்தில் சூதனொருவன் உணர்வு கொப்பளிக்க நெஞ்சில் அறைந்து வான்நோக்கி வீறிடும் ஒலியுடன் குருக்ஷேத்ரப் பெரும்போரில் பீஷ்மர் களம்பட்ட கதையைச் சொல்லி நிறுத்தியபோது சற்று அப்பால் இலைப்படுக்கையில் கையில் தலைவைத்து வானை நோக்கி படுத்திருந்த அவன் மெல்ல சிரித்தான். அவ்வோசை கேட்டு அவனருகே படுத்திருந்த பிறிதொரு வழிப்போக்கன் திரும்பி “சிரிக்கிறீர்களா?” என்றான். ஆதன் “சிரித்திருக்கலாகாது. ஆனால் இத்தகைய பெருங்கொந்தளிப்புக்குப் பின் அறுதியாக ஒரு சிரிப்பன்றி வேறேதும் எஞ்சாதென்றும் தோன்றுகிறது” என்றான்.
“நான் இக்கதைகளை கேட்கத்தொடங்கி நெடுநாளாகிறது. போர் முடிந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் செவிகளிலிருந்து செவிகளுக்கென பெருகி இக்கதைகள் எங்கெங்கோ சென்றுவிட்டன. இக்கதைகள் ஒலிக்காத நாவே இன்று பாரதவர்ஷத்தில் இல்லையென்று தோன்றுகிறது” என்றான். “ஆம், நானும் இக்கதையை இருமுறை கேட்டுவிட்டேன்” என்றான் வழிப்போக்கன். “பெருகிப் பெருகி பொருளழிதல்” என்று ஆதன் சொன்னான். வழிப்போக்கன் அச்சொல்லை சரிவர புரிந்துகொள்ளாமல் “ஆம், பாரதவர்ஷமே இப்போர்க்கதையால் நிறைந்துள்ளது” என்றான்.
தனக்குத்தானே தலையை அசைத்த பின் வழிப்போக்கன் “யார் வீரர், யார் கோழை, யார் அறத்தார், யார் அறம் மறந்தவர் என்று எவராலும் கூறமுடியாதாகிவிட்டது. வெறும் பதினெட்டு நாட்கள். இன்னும் சில நாட்களில் பாரதவர்ஷத்தில் எவரும் எதையும் இப்போரின் கதை என சொல்லலாம் என்று ஆகும். எதுவும் எவரும் சொல்லாமலும் ஆகும்” என்றான். “சூதர்களால் கதையை பெருக்காமலிருக்க முடியாது. அறிந்தவற்றை தேவைக்கேற்ப பெருக்கிச் சொல்வது அவர்கள் தொழில். சொல்லச்சொல்ல எழும் உணர்வு சொல்லப்படுவனவற்றை விரிக்கிறது. அது தெய்வமெழுந்து சொல்லுதல் என்று அவர்கள் கூறுகிறார்கள்.”
“நேற்று ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த கதை இந்திரவிஜயம் என்னும் நூலில் உள்ளது. விருத்திரனுக்கும் இந்திரனுக்குமான போர். அவன் அதை அர்ஜுனனுக்கும் பால்ஹிகருக்குமான போராக மாற்றிவிட்டான்” என்று அப்பால் ஒருவர் இருட்டிலிருந்து சொன்னார். ஆதன் “மேலும் பெருகும், பின்னர் கதைகள் குறையத்தொடங்கும்” என்றான். “ஏன்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “இதிலுள்ள இப்பெரும் பொருளின்மையை இப்போதே ஒவ்வொருவரும் உணரத் தொடங்கிவிட்டனர். அறிந்த கதைகளைத் திரட்டி விழுப்பொருளை வகுக்காமல் நம்மால் அவற்றை உள்ளத்தில் வைத்துக்கொள்ள இயலாது. இவ்வண்ணம் கதைகள் பெரும்புயலாக வீசுகையில் எவராலும் அதை செய்ய முடியாது.”
“பொருளின்மையை எவரும் விரும்பமாட்டார்கள்” என்றான் வழிப்போக்கன். “ஆம், கதை கேட்பவர்கள் அதை கடைந்து திரட்டி வெண்ணெயுடன் வீடு திரும்பவே விரும்புவார்கள். கேட்ட கதையை தானறிந்த விழுப்பொருளுடன் திரும்பச் சொல்வார்கள். அவ்வாறு பல்லாயிரம்பேர் சொல்கையிலும் மாறாத பொதுவிழுப்பொருளை அடைந்த கதைகளே நீடிக்கின்றன” என்றான் ஆதன். “இக்கதைகள் சிதறிப் பரந்திருக்கின்றன. ஒரு மாபெரும் ஓலம்போல். பல்லாயிரம் குரல்கள் நெஞ்சு வெடித்து விண்ணோக்கி எழுப்பும் ஓலம். இதற்கென்ன பொருள்? வெறும் கண்ணீர், வெறும் சினம், வெறும் விழைவு. அவற்றால் எவருக்கென்ன பயன்? மானுடனை ஆட்டி வைக்கும் விசைகளை நேருக்கு நேர் காண்பதன்றி அவற்றால் கேட்போன் பெறும் நன்மை என்ன?”
“எனில் என்ன நிகழும்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “அறியேன். ஆனால் இவ்வண்ணம் நிகழ்கையில் எல்லாம் பெருங்கவிஞன் ஒருவன் எழுந்து வருகிறான். இவ்வனைத்தையும் தொட்டுச் சேர்த்து அவன் ஒரு பெருங்காவியத்தை படைக்கக்கூடும். அங்கே ஒவ்வொன்றுக்கும் பிறிதொன்றுடன் பிரிக்கமுடியாத உறவிருக்கும். ஒவ்வொன்றும் பொருள் கொண்டிருக்கும். மானுடர் எல்லைதீட்டப்பட்டிருப்பார்கள். நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டிருக்கும். எண்ணங்கள் உரிய சொற்களை கண்டடைந்திருக்கும். வடிவம் சிதறல்களாகவும் சிதறல்கள் அறுதி வடிவமாகவும் மாறும் இயக்கம் ஒன்று அதில் அமைந்திருக்கும்.”
“அத்தகைய பெருங்காப்பியம் ஒன்று எழுதப்படுமெனில் ஆழ்பிலத்தில் நதிகள் சென்று மறைவதுபோல் இந்தக் கதைகள் அனைத்தும் அதற்குள் சென்று ஒடுங்கும். பின்னர் அதுவே கதைகளை உருவாக்கும். காலமறியாத ஒரு நாவென அது பிறந்து பிறந்தெழும் மானுடத்திடம் இக்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும். மறுபிறப்பெடுக்கும் கதைகளே வாழ்கின்றன. இன்று வாழ்ந்து குருக்ஷேத்ரத்தில் மடிந்த அனைவரும் அக்காவியத்தினூடாக மறுபிறப்பெடுத்து வருவார்கள். அன்று அவர்கள் இன்றுள்ள பொருளின்மையை உணரமாட்டார்கள். தங்கள் பிறப்பும் இறப்பும் எவ்வண்ணம் கோக்கப்பட்டிருக்கிறதென்பதை அறிந்த தெளிவு அவர்களுக்கிருக்கும்.”
“காவியத்தில் எழுபவர்களுக்கு அழிவில்லை என்பார்கள். நாளை இங்கே எழவிருக்கும் ஒவ்வொருவரும் அவர்களை சொல்லிச் சொல்லி பெருக்குவார்கள். பெருகுவதெல்லாம் தெய்வமே. அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வமாகலாம். எத்தனை முகங்கள்! துரியோதனன், அர்ஜுனன், பீமன், யுதிஷ்டிரன், சகுனி… அவர்கள் அனைவருமே தெய்வமாவார்கள். இங்கு அவர்களை பற்றிய கதைகள் தொட்டுத் தொட்டு பெருகும்” என்றான் ஆதன். வழிப்போக்கன் “அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். இந்தப் புயலோசையை எவ்வளவு நேரம்தான் தாங்குவது!” என்றான்.
“என்னாலும் இக்கதைகளின் ஓசையை தாளமுடியவில்லை. ஆகவேதான் எப்போதும் இக்கதைகளை அருகிருந்து கேட்பதில்லை. இங்கு கதை கேட்பவர்களை பாருங்கள். சூதனின் அருகிருந்து ஒவ்வொரு சொல்லையும் தலையசைத்து மெய்ப்பாடு காட்டி கேட்பவர்கள் அக்ககதையிலேயே வாழ்பவர்கள். சற்றே சலித்தவர்கள் அச்சொல் மட்டும் செவியில் விழும் அளவுக்கு அகன்றிருக்கிறார்கள். அக்கதையை கேட்காமலிருக்க விரும்புபவர்கள், ஆனால் கேட்காமலிருக்க இயலாதவர்கள் அவர்கள். அக்கதை ஒலிக்கையில் அதனுடன் எத்தொடர்பும் இன்றி அகன்றிருப்பவர்கள் அக்கதையில் முழுமையாகவே சலித்துவிட்டவர்கள்.”
அவன் அப்பால் அடுமனைப்பணியிலும் புரவி நோக்குதலிலும் சகடம் சீர்செய்வதிலும் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கிய பின் “ஆனால் ஒருமுறைகூட இக்கதைகளை செவிகொள்ளாதவர்கள் இந்நிலத்தில் பல கோடி. அவர்களின் மொழிகளில் இக்கதைகள் இன்னும் எத்தனை யுகங்களுக்குப் பின் சென்று சேரும் என்று தெரியவில்லை. இன்று அவர்களுக்கும் நமக்கும் இடையே இருப்பவை சில சொற்கள். சில ஆணைகள், சில உசாவல்கள், சில மறுமொழிகள். நாணயங்கள்போல அவை புழங்குகின்றன. அவற்றில் எந்தக் கதையும் சென்றமர இயலாது” என்றான். அடுகலத்துடன் சென்ற நாகர்குலத்து இளைஞனைச் சுட்டி “அவனுக்கு கர்ணனின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை” என்றான்.
“அவர்கள் ஒருவகையில் நல்லூழ் கொண்டவர்கள். இன்று மட்டும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சொல்லின் எக்களிப்பும் துயரும் இல்லை. இயல்பாகப் புவிதிகழ்ந்து மறையக்கூடியவர்கள்” என ஆதன் தொடர்ந்தான். “அதற்கும் அப்பால் இச்சொல்லிலிருந்து அகன்றிருப்பவர்கள் சொல்கடந்தவர்கள், முனிவர்கள். இதற்கு முன் தங்கிய இடத்தில் நான் ஒருவனை பார்த்தேன். கர்ணன் களத்தில் கவசங்களும் குண்டலங்களுமின்றி நின்றிருக்கும் கொடுந்துயரக் காட்சியை சூதன் சொல்லிக்கொண்டிருந்தபோது மிக அப்பால் மரத்தடியில் இலைப்பரப்பில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தான். அரைக்கணம் திரும்பி அவன் விழிகளை பார்த்தேன். அதிலிருந்த மலர்வு என்னை திகைக்கச் செய்தது. அது தன்னுள் தான் நிறைந்தவனின் உளமறியும் உவகையின் வெளிப்பாடு.”
“அக்கணத்தில் ஒன்றை உணர்ந்தேன், யோகியின் முகத்திலிருக்கும் ஒளிபோல் இப்புவியில் எளிய மானுடருக்கு எதிரான ஒன்றில்லை என. கொலைவாளின் மின் போன்றது. இங்குள்ள அனைத்திற்கும் எதிரான தெய்வத்தின் இளிவரல். எழுந்து சென்று இங்கு குருதி இவ்வண்ணம் பெருகி வழிகையில் உனக்கு யோகம் எதை அளிக்கிறது, அறிவிலி என்று கூவ வேண்டும் போலிருந்தது. துயரமும் அழிவும் சிறுமையும் இழிவும் பெருகிச் சூழ்ந்திருக்கையில் அங்கே அவ்வண்ணம் அமர்ந்து நெஞ்சில் ஒரு சுடரை பேணிக்கொள்வதில் தவிர்க்க இயலாத ஒரு கீழ்மை ஒன்று உள்ளது என்று தோன்றியது. அங்கிருந்து நெடுநேரம் உளம் கொதித்துக்கொண்டிருந்தேன்” என்றான் ஆதன்.
“ஆனால் எழுந்து சென்று அவரிடம் அதை கேட்கவில்லை அல்லவா?” என்றான் வழிப்போக்கன் மெல்லிய சிரிப்புடன். “ஆம், அவ்வுணர்வுகள் எனக்கு உவப்பானவை என்பதனால் அவற்றை தொட்டுத் தொட்டு வளர்த்துக்கொண்டேனே ஒழிய அவை மெய்யானவை அல்ல என்று எப்போதுமே அறிந்திருந்தேன். மானுடர் தங்கள் உள நாடகங்களில் உணர்வுகளில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் அவற்றின் புற மதிப்பென்ன என்பதை அவர்கள் எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள்.”
அன்று துயில்கையில் விண்ணில் நிறைந்திருந்த விண்மீன்களை ஆதன் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். காலையில் அவன் எழுந்தபோது வழிப்போக்கன் அருகே இல்லை. அவன் நீராடி வந்து மரவுரியை மாற்றிக்கொண்டு அன்னநிலையில் உணவருந்தி உச்சிப்பொழுது உணவுக்கான உலருணவு உருளைகளை பெற்றுக்கொண்டு குடுவையில் நீர் நிறைத்து எடுத்துக்கொண்டு மற்ற வழிப்போக்கருடன் இணைந்துகொண்டான்.
அவர்களில் ஒருவன் பாடிக்கொண்டு வந்தான். பயிலாத் தொண்டை மட்டுமே உருவாக்கும் இனிமை கொண்ட பாடல். மொழி புரியவில்லை. அது புலரியைக் குறித்தும், பறவைகளைக் குறித்தும், உழுத வயல்களைக் குறித்தும், ஒளிரும் விழிகள் கொண்ட கன்றுகளைக் குறித்துமாகவே இருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் சற்று நடந்து செவி கொண்டபோது அது குருக்ஷேத்ரப் போர்ப்பரணி என்று தெரிந்தது. சற்று திகைப்படைந்து மேலும் அருகணைந்து பாடுபவனை பார்த்தான். பதினேழு வயது இளைஞன். விழிகளில் குழந்தைமை ஒளி கொள்ள உடலெங்கும் துள்ளல் நிறைந்திருக்க கைகளைத் தட்டி அவன் பாடிக்கொண்டிருந்தான்.
சிறுவர்களுக்குரிய குரல் பெண்களைப் போன்றது. ஆனால் குழைவுகள் எல்லாம் வாள்சுழலல்கள் என விசைகொண்டிருப்பது. குருக்ஷேத்ரத்தில் எழுந்த வடவைமுகப் பேரனலின் தோற்றத்தை விரித்துரைக்கும் வரிகளை அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வரிகளை அவன் எப்படி ஒரு நடன தாளமாக, வழிநடைப் பாடலாக மாற்றிக்கொள்கிறான் என்று அவன் வியந்தான். பின்னர் புன்னகையுடன் அவன் எண்ணிக்கொண்டான். குழந்தைகள் அனைத்துப் பாடல்களையும் குழந்தைப்பாடலாக மாற்றிக்கொள்வது போலத்தான். இங்கு இனி இப்பெரும்போர் அனைத்துமாகலாம். மண்ணைக்கொண்டு இல்லங்களும் அடுகலங்களும் அமைப்பதுபோல். அதைக்கொண்டே இங்கு வாழ்க்கை அமைக்கப்படலாம்.
விந்தியனுக்கு அப்பால் இருந்த விரிநிலத்தை அடைந்த பின்னர்தான் அத்தனை மக்கள் அஸ்தினபுரி நோக்கி சென்றுகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். உண்மையில் கோதையின் கரையிலிருந்தே அஸ்தினபுரி நோக்கி செல்பவர்களின் நிரை தொடங்கிவிட்டிருந்தது. அவர்கள் உதிரிகளாக, தனியர்களாக, பிறருடன் உரையாடாதவர்களாக இருந்தமையால் அதை தனித்தறிய இயலவில்லை. தண்டகாரண்யத்தை அடைந்த பின்னர் வணிகர்களும் நாடோடிகளும் துறவிகளும் வடபுலம் நோக்கி சென்றுகொண்டிருந்ததை அவன் கண்டான். இயல்பான மக்கள் ஒழுக்கென்று அவன் எண்ணினான். வடபுலத்திலிருந்து குளிர்காலத்தில் பறவைகள் விண்ணலைகளென தெற்கு நோக்கி வருவதுபோல.
மேலும் வடக்கே வந்தபோதுதான் ஊர்களிலிருந்து மக்கள் கிளம்பி திரண்டு வழிகளை நிறைத்து பெருஞ்சாலைகளில் ஊறி நிறைந்து ஒழுகிக்கொண்டிருப்பதை கண்டான். தானும் அப்பெருக்கில் ஒரு துளி என ஆகி சென்றுகொண்டிருப்பதையே அவன் பின்னர்தான் உணர்ந்தான். “எங்கு செல்கிறார்கள் இவர்கள்?” என்று தன்னுடன் வந்த முதியவர் ஒருவரிடம் கேட்டான். “அஸ்தினபுரிக்குத்தான்” என்று அவர் சொன்னார். “நான் அஸ்தினபுரிக்குத்தான் செல்கிறேன்” என்று அவன் சொன்னான். உரக்க நகைத்து “இங்கு அனைவரும் அங்குதான் செல்கிறார்கள்” என்றார் முதியவர்.
“ஆனால் நான் கிளம்பும்போது அந்நகர் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. எதன் பொருட்டு அங்கு செல்கிறேன், அங்கே என்ன நிகழ்கிறது என்பது எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அப்பெயரன்றி எதுவும் என்னில் இருக்கவில்லை” என்றான். “இங்குள்ள பெரும்பாலானவர்கள் அப்படித்தான். இளமையிலேயே அப்பெருநகரைக் குறித்த செய்தி அவர்களை வந்தடைந்திருக்கிறது. என்றோ ஒருநாள் செல்லவேண்டிய இடம் எனும் எண்ணம் இருந்திருக்கலாம்” என்று முதியவர் சொன்னார். “அப்பெயருக்குள் அவ்வாறு ஓர் அழைப்பு உள்ளது” என்றான் ஆதன்.
“இவர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடங்களில் இருந்து வெளியேற விரும்பியவர்கள். வெளியேறுவதற்கான விசை ஒன்றுக்காக காத்திருந்தவர்கள். இன்று கதைகளினூடாக அஸ்தினபுரி பேருருவம் கொண்டிருக்கிறது. அதன் ஈர்ப்பை அவர்களால் தவிர்க்க இயலவில்லை. அவ்விசைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டார்கள்” என்று முதியவர் சொன்னார். “கிளம்பிவிட்டதன் விடுதலையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்லுமிடம் என்ன என்பது இப்போது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.”
அவன் தன்னைச் சுற்றிலும் புழுதி படிந்த உடைகளுடன், மரத்தாலான காலணிகளுடன், தோளில் மூட்டைகளுடன், இடையில் நீர்க்குடுவைகளுடன் சென்றுகொண்டிருப்பவர்களை பார்த்தான். பலர் குழந்தைகளையும் மனைவியரையும்கூட உடன் அழைத்துக்கொண்டிருந்தனர். பாணர்கள் இசைக்கலன்களுடனும் இல்லறப் பொருட்களுடனும் சென்றனர். சிறு வண்டிகளில் முதியவர்களையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டு அதைப் பிடித்தபடி உடன் சென்றனர். அத்திரிகளில் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர்.
“இத்தனை பேர் அங்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள்?” என்று ஆதன் கேட்டான். “அங்கு ஏதோ திருவிழா நிகழ்கிறது என்று இவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவன் அருகே சென்ற ஒருவன் சொன்னான். “திருவிழாவேதான். குருகுலத்து யுதிஷ்டிரனின் முடிசூட்டுவிழா நிகழப்போகிறது என்கிறார்கள்” என்றார் ஒரு முதியவர். “இல்லை, இது ராஜசூயம்” என்று இன்னொருவர் சொன்னார். “அவர் ஏற்கெனவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர். ஆகவே முடிசூட்டுவிழா நடத்தவேண்டியதில்லை. அவர் அஸ்தினபுரியின் மணிமுடியையும் சூடும் விழாதான் நிகழப்போகிறது” என்றார் இன்னொருவர்.
“அவர் ராஜசூயம் நிகழ்த்தக்கூடும் என்று பேச்சிருக்கிறது” என்றான் அருகே வந்த உயரமான மனிதன். ஆதன் ராஜசூயம் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. அவன் விழிகளில் அதைக் கண்ட முதியவர் “அஸ்வமேதமும் ராஜசூயமும் மும்முடி சூடும் அரசர்களுக்குரிய நெறிகள். இன்று பாரதவர்ஷத்தின் பேரரசர் யுதிஷ்டிரனே. அதை நிறுவ அவர்கள் விரும்புவார்கள். இப்போருக்குப் பின் பாரதவர்ஷத்தில் அவர்களின் புரவிகளை பிடித்துக்கட்ட எவருமில்லை. அவர்களின் புரவிகள் இந்நேரம் அஸ்தினபுரியிலிருந்து நான்கு திசைகளுக்கும் எழுந்து சென்றிருக்கும். அவை திசைவெற்றி அடைந்து திரும்பி வருகையில் அஸ்தினபுரியில் மும்முடிசூடி அரியணை அமர்வதற்கு அரசரும் ஒருக்கமாக இருப்பார்.”
“ராஜசூயம் நிகழ்கையில் தன் கருவூலத்தில் ஒரு பொன் நாணயம்கூட எஞ்சாது அவர் கொடையளித்துவிடவேண்டும்” என்றார் ஒருவர். “ஒரு நாணயம் கூட எஞ்சாமலா?” என்று திகைப்புடன் அவன் கேட்டான். “ஆம், ஒரு நாணயம் கூட எஞ்சலாகாது” என்று முதியவர் சொன்னார். “ஆனால் அஸ்வமேதம் செய்த மன்னனின் கருவறை பெருகி நிறைந்துகொண்டுதான் இருக்கும். அஸ்வமேதம் செய்யாது எவரும் ராஜசூயம் செய்வதில்லை. உண்மையில் ராஜசூயம் என்பது அஸ்வமேதத்தால் வரும் பெரும் செல்வத்தை வைப்பதற்கு இடம் தேடி கருவூலத்தை ஒழிப்பதுதான் என்கிறார்கள்.”
ஆதன் தென்னாட்டு அரசர்கள் எவரேனும் எப்போதேனும் ராஜசூயமோ அஸ்வமேதமோ செய்து இருக்க முடியுமா என்று எண்ணினான். அவ்வெண்ணத்தை உணர்ந்ததுபோல் “தெற்கே எந்த அரசனும் அவற்றை செய்ய இயலாது. வடக்கே ஆரியவர்த்தம் ஒற்றைப் பெருநிலம். அரசுகள் சந்தைக்கூட்டமென செறிந்திருப்பது கங்கை நிலம். அங்கு அஸ்வமேதம் செய்து முழு வெற்றி அடைவதற்கு ஓராண்டுகூட வேண்டியதில்லை. இங்கே ஒருவன் புரவியை திறந்துவிட்டால் அது மக்களில்லாத பெருநிலத்திற்குச் சென்று நீரிலாது அழிந்து சாகவேண்டியிருக்கும்” என்றார் முதியவர்.
ஆதன் புன்னகைத்தான். ”இப்பெருந்திரள் செல்வதற்கு இன்னொரு நோக்கமும் உள்ளது” என்று தொடங்கினார் முதியவர். “அங்கே அப்பெரும்போரில் பல்லாயிரம் பேர் உயிர் துறந்திருக்கிறார்கள். பெரும் நிலங்கள் ஒழிந்துவிட்டிருக்கின்றன. போருக்கு அஞ்சியும் போரின் இழப்புகளை மறக்கும் பொருட்டும் அங்குள்ள சிற்றூர்களிலிருந்தெல்லாம் மக்கள் திரள் என கிளம்பி அறியா நிலங்களுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். தண்டகாரண்யத்தின் உள்காடுகளிலெல்லாம் புதிய ஊர்கள் உருவாகியிருக்கின்றன. அவர்களால் கைவிடப்பட்ட ஊர்களுக்கு இங்குள்ள மக்கள் சென்று குடியேறுகிறார்கள்.”
“வாழ்வுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எளிய மக்கள் எப்போதும் காத்திருக்கிறார்கள்” என்றான் நெடியவன். “யுதிஷ்டிரனுக்கும் அங்கே குடிமக்கள் தேவை. ஆகவே ராஜசூயத்தை பெருமளவு நிகழ்த்துவார் என்று தோன்றுகிறது.” இன்னொருவன் “அங்கே இந்நேரம் பாரதவர்ஷமெங்குமிருந்து மக்கள் வந்து செறிந்திருப்பார்கள். எரியூட்டி பூச்சிகளை துரத்துவதுபோல நம்மை அகற்றப்போகிறார்கள்” என்றான். அந்த அச்சம் அனைவரிடமும் இருந்ததுபோல அவர்கள் அமைதி அடைந்தனர்.
ஆதன் அந்த மக்கள் திரளை மாறிமாறி நோக்கிக்கொண்டு நடந்தான். அணுகிப் பேசி ஒவ்வொருவரிடமும் அவர்களின் இலக்கென்ன என்பதை உசாவி அறிந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையிலிருந்தனர். அங்கு செல்பவர்கள் அனைவருக்கும் கைப்பிடியளவு பொன்னும் குடியிருக்க வீடும் உழுவதற்கு நிலமும் யுதிஷ்டிரனால் அளிக்கப்படுகின்றன என்று ஒருவன் சொன்னான். “ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்கள்!” என்று ஒருவன் கைதூக்கி உரக்க சொன்னான்.
“நிகரில்லாத போரில் வெற்றி அடைந்த அரசர் அவர். அப்போரைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள் அதை வாழ்த்தி விண்ணிலிருந்து பொன்மழை பெய்யவைத்தனர். அப்பொன்னை அள்ளிச் சேர்த்து மலையென குவித்து வைத்திருக்கிறார்கள். நூறு ஏவலரை நிறுத்தி மரக்கால்களால் அள்ளி பொன்னை அளிக்கிறார்கள். பொன் பெற்றவர்கள் அவர்களே வந்து சொன்ன செய்தி இது!” என்று ஒருவன் சொன்னான். “மரக்கால்களில் பொன்னா?” என்று இன்னொருவன் சிரித்தான். “ஒவ்வொருவருக்கும் நூறு கழஞ்சு என்றார்கள்” என்றான் அப்பால் ஒருவன்.
ஒவ்வொருவரும் அங்கே ஒரு மாயம் நிகழுமென எதிர்பார்த்தார்கள். “அறம் வென்றதென்று தெய்வங்கள் ஆணையிடுகின்றன. அறத்தோன் முடிசூடும் நிலத்தில் செல்வம் பெருகும். ஆகவே அங்கு செல்கிறோம்” என்றார் ஒரு அந்தணர். “வேதம் நிலைகொள்கிறது அங்கே. வேதம் ஓங்கிய நிலத்தில் செல்வமும் நிலைகொள்ளும்.”
அவன் அத்திரளின் உணர்வுகளை தானும் அடையமுடியாமல் அகம் தவித்தான். அந்த ஒழுக்கில் முழுமையாக தானும் கலந்துகொள்ள முயன்றான். அவர்களுடன் பேசிச் சிரித்தான். வழிநடைப்பாடலுக்கு கைதட்டி நடனமிட்டான். களைத்துச் சோர்ந்து அந்தியில் துயில்கொள்ளும்பொருட்டு அமர்கையில் அதுவரை திகழ்ந்த தன்னிடமிருந்து தான் விலகி துணுக்குற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்தது உவகையும் கொண்டாட்டமும்தான். புது வாழ்க்கை குறித்த கனவுகளின் மகிழ்வு. நேற்றுவரை பீடித்திருந்த அனைத்தையும் உதறிவிட்ட விடுதலை.
பாணர்களின் பாடலை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். துரோணர் அம்புகள் தைத்து களத்தில் சரியும் காட்சி. அதை கைகளை தட்டிக்கொண்டு சூதன் ஒருவன் பாட பலநூறுபேர் கைதட்டி ஏற்றுப்பாடினார்கள். அச்சொற்களின் பொருளறியாதவர்கள் அது அறுவடைப்பாடல் போலவோ மங்கலச் சடங்குப்பாடல் போலவோ கூட்டுக்களியாட்டுக்குரியது என்றே எண்ணிக்கொள்வார்கள்.