களிற்றியானை நிரை - 67
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 17
யுயுத்ஸு துரோணரின் குருநிலையைச் சென்று சேர்ந்தபோது உச்சிப்பொழுதாகிவிட்டது. அவன் வழியிலேயே காய்களைத் தின்று நீர் அருந்தியிருந்தான். எனினும் பசித்துக் களைத்திருந்தான். அவனைக் கண்டதுமே அங்கிருந்த யாதவ இளைஞன் “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம். தங்கள் குடிலுக்கு உணவை கொண்டுவரும்படி ஆணையிடுகிறேன்” என்றான். யுயுத்ஸு “என் வருகையை இளைய யாதவருக்கு அறிவிக்கவேண்டும். எனக்கு நெடும்பொழுது ஓய்வு தேவைப்படாது. சற்றே முதுகை நீட்டிக்கொண்டாலே போதும்” என்றான். “அவர்களிடம் நான் அரசமந்தணச் செய்தியுடன் வந்திருப்பதாகச் சொல்க!”
அவனுக்கு பெரிய கொப்பரையில் கிழங்குகளும் கீரையும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சி வந்தது. உடன் உண்பதற்கு சுட்ட ஊன்துண்டுகள். அவை சிவந்து நெய்க்குமிழிகள் பொரிய சூடாக முனகிக்கொண்டிருந்தன. உண்டு முடித்து சிறுகுடிலில் பசுஞ்சாணி மெழுகிய திண்ணையில் தர்ப்பைப்புல் பாயில் படுத்தபோது ஒரு கணம் திரும்ப அஸ்தினபுரிக்கே செல்லவேண்டாம் என்னும் எண்ணம் யுயுத்ஸுவுக்கு ஏற்பட்டது. கங்கையிலிருந்து குளிர்காற்று அலையலையாக எழுந்து வந்துகொண்டிருந்தது. உச்சிப்பொழுதுக்கே உரிய மயங்கும் பறவைக்குரல்கள். நெடுந்தொலைவு வரை கொண்டுசெல்பவை ஓசைகள். கண்களை மூடி ஓசைகளை கேட்கத் தொடங்கினாலே உள்ளம் மிக விரிந்த நிலப்பகுதியை உணரத் தொடங்கிவிடுகிறது. மிகமிக அப்பால் ஏதோ பறவை இன்குழலோசை ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தது. அதற்கும் அப்பால் ஏதோ நாயின் ஓசை. பறவையின் குழலோசை சுழன்று சுழன்று அவனை ஆட்கொண்டது. அவன் ஆழத்திலிருந்தே எழுவது போலிருந்தது அது.
இனிமை இனிமை இனிமை என உள்ளம் நிறைவுகொண்டது. இருத்தலைவிட இனிதாவதொன்றும் இல்லை. எதையும் சென்று எய்தாமல் எதையும் எண்ணிக்கொள்ளாமல் எவருக்கும் எதையும் நிறுவத் தேவையில்லாமல் வெறுமனே இருத்தலைப்போல் நிறைவளிப்பது வேறொன்றுமில்லை. அஸ்தினபுரி ஒரு பெரும் பொய். அங்குள்ள அரசியல்சூழ்ச்சிகள் பொய். பாரதவர்ஷமே மாபெரும் பொய். மெய்யென்றிருப்பது உடலே. அதன் எளிய இன்பங்களே. நல்லுணவு. நல்ல உறக்கம். நன்னீராடல். நல்லகாற்று. வானின் கீழ் இருத்தல். மண்ணின்மேல் இருத்தல். அவன் துயில்கொள்ளத் தொடங்கியதை அவனே அறிந்தான். நல்ல துயில் வந்தணையும் இடத்திலேயே நல்ல எண்ணங்கள் முளைக்க முடியும். வாழ்க்கையின்மேல் நம்பிக்கை கொண்ட பெருநோக்குகள் எழ முடியும். துயிலணையாத இடங்களில் இருப்பவை முட்கள். கால முட்கள். ஆணவ முட்கள்.
அவன் விழித்துக்கொண்டபோது எண்ணியதைவிட பொழுது பிந்திவிட்டிருந்தது. உள்ளம் பதற்றம் கொண்டது. எடுத்த பணியை தவறவிட்டுவிட்டோமா? இன்றே இளைய பாண்டவருடன் பேசிமுடித்துவிட வேண்டும். நாளையாயினும் அவர் நகர்புகவேண்டும். நாளை கிளம்பி வருவதற்கு அவரிடம் இன்று சொல்பெற்று இரவுக்குள் அவன் மீண்டுவிட வேண்டும். அவன் ஆடை திருத்தி முகம் கழுவி கிளம்பியபோது துயில்வதற்கு முந்தைய எண்ணங்களை நினைவுகூர்ந்து புன்னகை செய்தான். ஆனால் ஒன்றை உணர்ந்தான். அவன் வந்தபோதிருந்த பதற்றம் குறைந்திருந்தது. நம்பிக்கை உருவாகிவிட்டிருந்தது. அந்த இனிய எண்ணங்களின் அடியோட்டம் நெஞ்சுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது.
குறுங்காட்டின் விளிம்பில் ஒரு பாறையில் இளைய யாதவர் அருகே அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை யுயுத்ஸு கண்டான். அவர் இசைமீட்டிக்கொண்டிருந்திருப்பாரோ என நினைத்தான். ஆனால் அவருடைய குழல் இடைக்கச்சையில்தான் இருந்தது. ஏன் அவ்வாறு எண்ணினோம் என்று பின்னர் வியந்தான். அவர்களின் முகங்களில் அந்தக் கனிவு நிறைந்திருந்தது. யாதவ மாணவன் “அவர்களிடம் செல்க! ஆணை பெற்றுவிட்டேன்” என்று சொல்லி தலைவணங்கி திரும்பிச் சென்றான். யுயுத்ஸு அவர்களை நோக்கி நடந்தான். அவர்கள் அவன் வருவதை அறிந்திருந்தாலும் திரும்பி நோக்கவில்லை. ஆனால் அவர்களின் நோக்கை உணர்ந்தவனாக அவன் நடைதளர்ந்தான்.
அவர்கள் தன்னை வேண்டுமென்றேதான் நோக்கவில்லையா? இல்லை, அவர்கள் இருந்த ஒருமையில் அவனுக்கு இடமில்லையா? அவனுக்கு கசப்பு ஒன்று ஊறி எழுந்தது. பெரும் பொறாமை அது எனத் தெரிந்தது. அத்தகைய நட்பை அடைந்தவன் அதற்குப் பின் இப்புவியில் அடைவதற்கென்ன உள்ளது? காதல்கள் அதற்கு ஈடாகுமா? தந்தையும் அன்னையும் அளிக்கும் அன்பு நிகராகுமா? எதுவுமில்லை. ஒன்றே எஞ்சுவது. ஆசிரியர் மாணவன் என்னும் உறவு. இங்கு நண்பனே ஆசிரியனாக அமர்ந்திருக்கிறான். அவன் பெருமூச்சுவிட்டான். அதை அடைவதற்குரிய தகுதி ஒன்றுண்டு. எஞ்சாமல் தன்னை அளிப்பது. அதை ஆணவமில்லாதவர்களே அடையமுடியும்.
ஆணவமில்லா நிலை எவருக்கும் இல்லை. மானுடக்கீழோரிடம்கூட ஆணவமே நிறைந்திருக்கிறது. ஆணவத்தைக் கடந்தோரிடம் மட்டுமே அந்த ஆணவமழிந்த நிலை உருவாகும். அதற்கு தன்னில் நிறையவேண்டும். தான் எனும் எல்லையை கண்டடையவேண்டும். தானெனத் தருக்கிச் சென்றடையும் உச்சமேது என்று புரிந்துகொண்டு மீளவேண்டும். இளமையிலேயே தன் திறனின் எல்லையை சென்று கண்டவனுக்குரியது அந்நிலை. அது வில்லுடன் பிறந்த விஜயனுக்கு இயல்பாகலாம். தொட்டுத்தொட்டு தன்னைப் பயின்று தானென்று உணர்ந்து சென்றடைந்து மேலும் நோக்கி ஏங்கி ஏங்கி நின்றிருக்கும் எளியோருக்குரியது அல்ல. ஆசிரியனாதல்கூட எளிது, மாணவனாதலே கடினம்.
அவன் அருகணைந்து வணங்கினான். இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகைத்தார். அவருடைய புன்னகை எப்போதுமே அவனை உளம்பொங்கச் செய்வது. அது அவனுக்காக மட்டுமே எழும் ஒன்று என்று தோன்றச் செய்வது. பால்பற்கள் எழுந்த குழவிக்குரிய கண்கள் ஒளிவிடும், முகமே மலரும் புன்னகை. அவன் “நான் இத்தருணத்தில் இங்கு வரும் பேறு பெற்றேன்” என்றான். அவர் “உன்னை உண்மையில் இவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை விடமாட்டார்கள் என அறிந்திருந்தான். அவர்கள் பொருட்டு உன்னைத்தான் சுரேசர் அனுப்புவார் என்றான்” என்றார். அர்ஜுனன் அவனை நோக்கி புன்னகை செய்து “சொல்ல வந்ததை சொல்! அங்கே மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் செல்லாவிட்டால் விழவு முழுமையடையாது. அரசரும் உடன்பிறந்தவரும் நான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். அரசர் நோயுற்றிருக்கிறார், நான் செல்வது அவருடைய நோயை அவிக்கும். வேறென்ன?” என்றான்.
யுயுத்ஸு சிரித்துவிட்டான். “என் பணியை எளிதாக்குகிறீர், மூத்தவரே” என்றான். “ஆனால் அதை நான் நாலாயிரம்முறை மீண்டும் மீண்டும் சொல்வதாக எண்ணிக்கொள்ளுங்கள்.” அர்ஜுனன் வெடித்து நகைத்து இளைய யாதவரிடம் “இவனிடம் மூத்தவரிடம் இருக்கும் எல்லா சாயல்களும் உண்டு. ஒன்று கூடுதலாக உண்டு என்றால் அது நகையாட்டு” என்றான். “அதை நான் கௌரவ மூத்தவரிடமிருந்து பெற்றேன்” என்றான் யுயுத்ஸு. “ஆம், கௌரவ அவை சிரிப்பும் நகையாட்டுமாக செல்வது என அறிந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நீங்கள் இங்குதான் வந்திருக்க முடியும் என நான் அறிந்துள்ளேன். இங்கு நீங்கள் வந்ததே எவ்வகையிலும் முறையானதும்கூட. உங்கள் ஆசிரியர் இங்கிருக்கையில் வேறெங்கும் நீங்கள் நிறைவுகொள்ளவும் முடியாது” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் அங்கு நீங்கள் செய்யவேண்டுவனவற்றை செய்த பின் இங்கு மீண்டீர்கள் என்றால் நிறைவுடன் இருப்பீர்கள். நான் கூற வந்தது அதை மட்டுமே.”
“முடிவில்லாத நடிப்பு, அது எனக்கு சலிப்பூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம், அதையே சற்றுமுன் கங்கைக்கரைக் காற்றேற்று துயில்கொள்கையில் நானும் உணர்ந்தேன்” என்றான் யுயுத்ஸு. “ஆனால் அது உங்கள் கடமை. உங்கள் மூத்தவர்கள் எதிர்பார்க்கையில் அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். எவ்வகையிலும் தவிர்க்க உங்களுக்கு உரிமை இல்லை.” அர்ஜுனன் “நான் என்னால் இயன்றதை செய்துவிட்டேன். இனிமேலும் நடிப்பதில் பொருளில்லை. எங்கோ ஓர் இடத்தில் இதை நான் நிறுத்திக்கொண்டே ஆகவேண்டும்” என்றான். “நேற்று அங்கிருந்தவர்கள் என்னை இளமை முதல் அறிந்தவர்கள். அவர்கள் முன் அவ்வாறன்றி நான் தோன்றமுடியாது. இவர்கள் முன்னால் அவ்வாறு நான் தோன்றினேன் என்றால் அது மீண்டும் ஒரு தொடக்கம். போதும், என் விழைவின்மையை நீயே அரசரிடம் தெரிவித்துவிடு” என்றான்.
“நீங்கள் அஸ்தினபுரியின் முதன்மை முகம். அங்கிருப்போர் உங்களை அவ்வண்ணமே அறிந்திருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “நான் இறுதி முடிவை எடுத்துவிட்டேன். நீ பேசி என்னை மாற்றிவிட முடியாது” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவர் அருகே இருக்க விழைகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை.” இளைய யாதவர் “நான் நகருக்குள் வருவதாக இல்லை. இன்றிருக்கும் நிலையில் நான் எந்நகருக்குள்ளும் நுழையக்கூடாது. நான் துவாரகையால் வெளியேற்றப்பட்டவன்” என்றார். “உங்களை மாற்றி அழைத்துச்செல்ல முடியும் என நான் நினைக்கவில்லை. என் எல்லைகளை நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. அர்ஜுனன் “இளையோனே, நான் இளைய யாதவர் அருகேதான் இருக்கப்போகிறேன். அவருடன் இருக்கையில் மட்டுமே நிறைவை அடைகிறேன். நான் ஆற்றிய பணிகளுக்கு எதையேனும் என் மூத்தவர் அளிப்பாரென்றால் இதையே கோருவேன்” என்றான்.
“ஆனால் உங்கள் மூத்தவரின் விழைவு…” என யுயுத்ஸு தொடங்க “அவர் தன் விழைவை உன்னிடம் கூறினாரா? எனக்குரிய ஆணை என எதையேனும் விடுத்தாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “இல்லை” என்றான் யுயுத்ஸு. “எனில் சென்று அவரிடம் கேள். நான் இளைய யாதவரை விட்டுவிட்டு என் விழைவுக்கு மாறாக அஸ்தினபுரிக்குள் நுழைந்தாகவேண்டும் என அவர் ஆணையிடுகிறாரா என்று” என்றான் அர்ஜுனன். “அவர் இளைய யாதவரின் விழைவுக்கு மாறாக ஆணையிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. “எனில் என்ன எஞ்சுகிறது? நாம் பேசிக்கொள்ள ஏதுமில்லை. நான் வரவியலாது” என்று அர்ஜுனன் சொன்னான். யுயுத்ஸு “நான் என் தூதை சொல்லிவிட்டேன். அறுதி முடிவுகளுடன் பேசும் ஆற்றல் எனக்கில்லை. நான் எளியோன்” என்றான். பெருமூச்சுடன் கைகளை மடியில் சேர்த்துவைத்து அமர்ந்துகொண்டான். குறுங்காட்டிலிருந்து காற்று இலையோசையுடன் வந்து அவர்களைத் தழுவி கடந்துசென்றது.
இளைய யாதவர் அவனிடம் “இளையோர் கொண்டு வந்த தனிப்பரிசுகள் என்னென்ன?” என்றார். யுயுத்ஸு அவரை திரும்பிப் பார்த்தான். அவர் அவற்றைப் பற்றி அறிந்திருப்பார் என்றே அவனுக்கு தோன்றியது. அவனுக்கு அவர் கேட்பதன் நோக்கம் புரியவில்லை. இருந்தாலும் சொல்லத் தொடங்கினான். ஒவ்வொருவரின் பரிசைப் பற்றியும் யுதிஷ்டிரன் அவற்றுக்கு அளித்த எதிர்வினை பற்றியும் அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது அர்ஜுனன் ஆர்வமற்று காட்டை பார்த்துக்கொண்டிருந்தான். இளைய யாதவர் அவ்வப்போது சிரித்தும் ஊடுவினாக்கள் எழுப்பியும் அவன் சொல்வதை கேட்டார். பின்னர் அர்ஜுனனிடம் “விந்தைதான், மூன்று திசைகளிலிருந்தும் ஏறத்தாழ ஒரே பரிசு வெவ்வேறு வகையில் வந்திருக்கிறது” என்றார். யுயுத்ஸு திகைத்து அவரை பார்த்தான். அவருக்கு அப்பரிசுகளைப் பற்றி தெரியவில்லை என்று தோன்றியது. விளக்கியபோது அவர் கூர்ந்து கேட்டதுபோலத்தான் தோன்றியது.
அர்ஜுனன் உளம்குவியாமல் “அப்படியா?” என்றான். இளைய யாதவர் “நீ கூட அதேபோல எதையாவது ஒன்றை கொண்டுசென்று கொடுக்கலாம். இப்பரிசுகளுக்கு ஓர் ஒழுங்கு உள்ளது. நால்வரும் நான்கு திசைகளிலிருந்து நான்கு பரிசுகளை அரசருக்கு கொடுக்கிறார்கள். நான்குவகை வினாக்கள், நான்கு விடைகள். சூதர்கள் கதை சொல்ல உகந்தவை. நீ செல்லாவிட்டால் கதை அறுந்து நின்றிருக்கும்” என்றார். “நான் அவ்வகையில் எதையும் கொண்டுவரவில்லை” என்று அர்ஜுனன் எரிச்சலுடன் சொன்னான். “எதையாவது கொண்டுவந்திருப்பாய். நன்கு எண்ணிப்பார்” என்ற இளைய யாதவர் “இல்லையேல் கொண்டுவந்த எதையேனும் அவ்வாறு அரும்பொருளாக ஆக்கிக்கொள்ளலாம்” என்றார். “விளையாடாதீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “நீ கூறியது நினைவுக்கு வருகிறது. மணிபூரகநாட்டின் மறுஎல்லையில் மாமேருவின் அடிவாரத்தில் இருந்த ஊர்களின் தெய்வங்களைப்பற்றி சொன்னாய். அவற்றில் ஒன்று உன்னை தேடிவந்ததைப்பற்றி…” என்றார்.
யுயுத்ஸு புரிந்துகொண்டான். புன்னகையுடன் அர்ஜுனனிடம் “எதை கண்டீர், மூத்தவரே?” என்றான். அர்ஜுனன் எரிச்சல் விலகாதவனாக “எங்குமுள்ளவைதான். அங்குள்ள சிற்றூர்கள் எல்லாமே தொல்தெய்வங்களால் நிறைந்திருக்கின்றன” என்றான். “பாரதவர்ஷம் முழுக்க அத்தனை தொல்குடிச் சிற்றூர்களிலும் எண்ணித்தீராத தெய்வங்கள் உள்ளன. முதல் நோக்கில் அவை வேறுபட்டவைபோலத் தோன்றும். ஆனால் அனைத்தும் ஒன்றே. விண்ணில் ஒரு சொல் ஒலிக்க அதை மண்ணில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் சொல்லிக்கொள்வதுபோல. தவளைகளும் கிளிகளும் விலங்குகளும் மானுடரும். அவை வெவ்வேறு ஒலிகள். ஆனால் எங்கோ அவை ஒன்று என்றும்படுகின்றன.” அவனை பேசவைக்க யுயுத்ஸு விழைந்தான். “அவ்வாறு சொல்லிவிடமுடியுமா என்ன? நாம் பொதுமையை நோக்கும் விழிகொண்டிருந்தால் பொதுமை நம் கண்களுக்குபடுகிறது” என்றான்.
சற்றே சரிந்து அமர்ந்திருந்த அர்ஜுனன் எழுந்தான். “இவ்வாறு சொல்லாடுவது எளிது. நான் அதை விழையவில்லை. நான் கூறுவது நானே கண்டது” என்றான். “கீழைநிலத்தில் நான் கண்ட தெய்வங்கள் அனைத்துமே நீத்தாரின் வடிவங்கள்தான். நீத்தார் பல்வேறு பறவைகள், உயிரினங்களின் வடிவில் மானுடர் முன் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வடிவிலேயே வழித்தோன்றல்களால் வழிபடப்பட்டு தெய்வங்களாகியிருக்கிறார்கள்.” அவன் பேசும் உளநிலையை அடைந்துவிட்டான் என்று யுயுத்ஸு உணர்ந்தான். “நாங்கள் கிழக்கே காமரூபம் வரைதான் சென்றோம். அதற்கு அப்பால் படைகொண்டுசெல்ல எங்களுக்கு பொழுதில்லை. ஆகவே நான் ஓர் அறைகூவலை விடுத்தேன். கிழக்கிலிருக்கும் ஒவ்வொரு நாட்டு அரசனும் தன் கப்பத்தை என்னிடம் கொண்டுவந்து அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காதவர்கள் எதிரிகளென கருதப்படுவார்கள். அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மேல் படைகொண்டு வருவேன் என்று.”
கிழக்கே இருந்த அனைத்து நிலங்களில் இருந்தும் மன்னர்களும் குடித்தலைவர்களும் எங்களுக்கு பரிசில்களை கொண்டுவந்து அளித்தனர். பரிசிலளிக்க வருபவர்கள் தங்கள் குடிக்கோல்களுடன் அரசகுடியைச் சேர்ந்த ஒருவரை அனுப்பவேண்டும் என்று நான் ஆணையிட்டிருந்தேன். காமரூபத்தைச் சேர்ந்த துரூமன் என்னும் அமைச்சன் என்னுடன் சேர்ந்துகொண்டான். அவன் என்னிடம் அவ்வண்ணம் கோல்களுடன் வருவதில் பொருளில்லை, அவர்கள் தங்கள் குடித்தெய்வங்களில் ஒன்றை கொண்டுவந்து என்னை வாழ்த்தவும் வேண்டும் என ஆணையிடும்படி சொன்னான். ஆகவே அவ்வாணைகளையும் இட்டேன். அதன்பின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்கள் என்னை தேடிவந்தன. விந்தையான தோற்றங்கள் கொண்டவை. ஆனால் பெரும்பாலானவை விலங்குகளின், பறவைகளின், பூச்சிகளின் வடிவம்கொண்டவைதான். ஒரு நிலையில் அது ஓர் இனிய விளையாட்டாக ஆகியது.
அப்போதுதான் பாரதவர்ஷத்தின் எல்லைக்கு அப்பாலிருந்த மேருநிலத்தைச் சார்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். அவன் அங்கிருந்த தொல்குடிகளைச் சேர்ந்த பூசகன். அவனுடன் எவரும் வரவில்லை. அவன் என்னிடம் அவர்களின் குடி எனக்கு அடிபணியவோ பரிசில் அளிக்கவோ போவதில்லை என்றான். ஏனென்றால் அவர்கள் தங்கள் தெய்வங்களிடம் ஆணை கோரியிருக்கிறார்கள். தெய்வங்கள் ஆணை மறுத்திருக்கின்றன. அச்செய்தியை எனக்கு அறிவிக்கவே அவன் குடி அவனை அனுப்பியிருக்கிறது. முதலில் எனக்கு சீற்றம் எழுந்தாலும் உடனே சிரிப்பும் எழுந்தது. அவனுடைய குடி மிகமிகச் சிறிது என்று தெரிந்தது. அது என் படைப்பிரிவில் ஒன்றை ஒருநாள்கூட எதிர்த்து நிற்க முடியாது. நான் அவர்களின் நம்பிக்கையை எண்ணி வியந்தேன். அதை மேலும் சீண்டி நகையாட விழைந்தேன்.
“சொல்க, உங்கள் தெய்வங்கள் எவை? அவை எவ்வகைப்பட்டவை? அவை என்னை முன்னர் அறியுமா?” என்று அவனிடம் கேட்டேன். “அறியா எனில் அவற்றுக்கு நான் என்னை அறிவிக்க என்ன செய்யவேண்டும்?” அவன் பெயர் ஹைமன். அதன் பொருள் பனி. அவன் என்னிடம் அவர்களின் தெய்வங்களைப் பற்றி சொன்னான். மண்ணில் பிறந்தவர்களுக்கு பலவகையான இறப்புகளை தெய்வங்கள் அளித்திருக்கின்றன. கனிகள் மரங்களிலிருந்து உதிர்வதுபோல. கனிந்து, பின் அழுகி, காம்பு இற்று உதிர்கின்றனர் மானுடர். இனிமையும் வண்ணமும் சிறந்த உயரிய கனியை மட்டும் தெரிவுசெய்து காம்புகளில் பால் வடிய தெய்வங்கள் பறித்துக்கொள்கின்றன. இளமையிலேயே கொடிய சாவுகொண்டவர்கள் தெய்வங்களால் பலியெனக் கொள்ளப்பட்டவர்கள். மலைகளிலிருந்து விழுபவர்கள், இடிவிழுந்து கருகுபவர்கள், நாகநஞ்சு ஏற்பவர்கள். அவர்கள் தெய்வங்களாகிறார்கள். அவர்களை நாத் என்கின்றனர்.
நாதர்கள் விண்நிறைந்த தெய்வங்களின்பொருட்டு இப்புவியை ஆள்கின்றனர். அவர்களில் முப்பத்தேழு நிழல்வடிவ நாதர்கள் புவியை மண்ணில் ஊர்ந்தும் புதைந்தும் கட்டுப்படுத்துகின்றனர். அந்த முப்பத்தேழுபேரின் ஒளிவடிவங்கள் விண்ணில் பறந்தும் மரங்களின் மலர்களில் குடிகொண்டும் மானுட வாழ்க்கையை நடத்துகின்றன. மேருநிலத்து மக்களின் அனைத்துச் சிற்றூர்களின் நடுவிலும் நாதர்களின் ஆலயங்கள் உள்ளன. மேலடுக்கில் விண்ணோரும் கீழடுக்கில் மண்ணோரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு மலர்கள் சூட்டப்படுகின்றன. இனிய நறுமணப்புகை எழுப்பப்படுகிறது. படையல் என தேங்காய்கள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அவ்வூர்களை காக்கின்றனர். அவ்வூரின் அனைத்து நிகழ்வுகளையும் வழிநடத்துகின்றனர். அவர்களின் காலம், பருவமாறுதல்களினூடாக அவர்களால் நடத்தப்படுகிறது.
நாதர்களின் முதல்வன் திங்க்யான் என அவர்களால் அழைக்கப்படுகிறான். திக்ஞானன் புவியையும் விண்ணையும் இணைப்பவன். அதனூடாக இங்குள்ள வாழ்க்கையின் நிகர்நிலைகளை பேணுபவன். அவனுடைய இளையவள் ஆஹ்தி என அவர்களால் கூறப்படுகிறாள். திக்ஞானனும் ஆகுதியும் முன்பொரு நாள் சூதாடினார்கள். சூதுக்களத்தில் கருக்கள் என அவர்கள் சந்திரனையும் சூரியனையும் கோள்களையும் விண்மீன்களையும் வைத்தனர். அந்த ஆட்டத்தின் முடிவில் ஆகுதி தோல்வியடைந்தாள். தோல்வி முழுமையடைவதற்கு முன்னரே அவள் விண்மீன்களை கைகளால் அள்ளி வீசி எறிந்து ஆட்டக்களத்தை கலைத்தாள். சினமடைந்த திக்ஞானன் தன் மின்படைவாளால் ஆகுதியின் தலையை வெட்டினான்.
எரிந்தபடி அந்தத் தலை மண்மேல் விழவந்தது. அந்தத் தலையின் எரியெனும் குழல் நெடுந்தொலைவுக்கு எழுந்து பறந்தது. அவளுக்குப் பின்னால் மின்னி இடியோசையுடன் எழுந்த திக்ஞானன் நாதர்களிடம் “பிடியுங்கள்… பிடியுங்கள் அதை!” என்று கூவினான். நாதர்களில் ஒருவனான கொல்லன் மின் மகாகிரி அதை பிடித்துக்கொண்டான். “ஒருபோதும் அந்தத் தலை மண்ணை தொடலாகாது. மண்ணை அது தொடும்போது புவி அழியும். நினைவில் கொள்க!” என்று திக்ஞானன் ஆணையிட்டான். மகாகிரி தன் கை சுடும்வரை அந்தத் தலையை வைத்திருந்தான். அதை உடனே அடுத்த நாதனிடம் அளித்தான். அவர்கள் அதை கைமாறிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அதை இன்றுவரை நிலம்தொட விடவில்லை. ஆகவே இப்புவியில் மானுட வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
என்னைக் காணவந்த பூசகனாகிய ஹைமன் சொன்னான் “எங்கள் குடியினர் உங்களுக்குப் பணிந்தாகவேண்டுமா என்று எங்கள் குடித்தெய்வங்களிடம் கேட்டோம். நாங்கள் கேட்டபோது அந்த எரிதலையை மிந்தா என்னும் அரசமைந்தன் வைத்திருந்தான். அவனிடமிருந்தது சொல் அளிக்கும் உரிமை. அவன் என்னிடம் சொன்னான். பூசகனே, நீ உசாவுவது நன்று. நம் நிலத்தை ஆள விழையும் அயலவன் அதற்குரிய தகுதிகொண்டவனாக இருக்கவேண்டும். தெய்வங்களுக்கு உகந்தவனே நம் குடியின்மேல் கோல்கொள்ள முடியும். அவனை நீ சென்று அறிந்து வருக! நான் அவ்வாணையைப் பெற்று உங்களிடம் வந்தேன்.” நான் அப்போதும் அதை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். “நன்று, என் தகுதியை நான் எவ்வண்ணம் நிறுவவேண்டும்?” என்று கேட்டேன்.
அவன் தன் இடையில் ஒரு மூங்கில்குழலை வைத்திருந்தான். நமது வேய்குழல்களைவிட சிறியது. இரு பகுதிகளாக இருந்தது. அதை இணைத்து அவன் ஓர் இசையை எழுப்பினான். அது விண்ணுலகத்தின் ஒலியை மண்ணில் ஒலிக்கும் காலவின்கா என்னும் பறவையின் ஓசையை எழுப்புவது என்று அவன் சொன்னான். காலவின்கையின் குரலை எழுப்பினால் அதை கேட்கும் முதல் வானம்பாடியில் அந்த தெய்வப்பறவை எழும் என்று சொல்லி அதை ஊதலானான். கிழக்குப் பகுதிகளுக்கே உரிய கொஞ்சும் இசை. சுழன்று சுழன்று இறங்கும் புகைபோன்ற பண். சற்றுநேரத்தில் அருகே மரக்கிளையின் இலைச்செறிவுக்குள் அந்த இசையை ஒரு வானம்பாடி திரும்பப் பாடியது. “அதுதான், காலப்பறவை வந்துவிட்டது” என்று அவன் சொன்னான்.
“வானம்பாடிகள் குரல்களை திரும்பச் சொல்வதொன்றும் புதிதல்ல” என்று நான் சொன்னேன். “அல்ல, இது காலப்பறவை. இதற்கு மூன்றுகாலமும் தெரியும்” என்று அவன் சொன்னான். “இது நீங்கள் சொல்லும் எல்லா சொற்களையும் திரும்பச் சொல்லும். ஒரே ஒரு சொல்லைத் தவிர. அச்சொல்லையே நீங்கள் சாவின் போது இறுதிக்கணத்தில் சொல்வீர்கள். உங்கள் உதடுகள் அச்சொல்லில் உறைய உயிர்நீப்பீர்கள்” என்று அவன் சொன்னான். “எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக! அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக! என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”
“நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். “அது ஒரு சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். இப்புவியில் சொற்கள் முடிவிலாக் கோடி. எவ்வொலியையும் அவ்வண்ணமே திரும்பச் சொல்பவை வானம்பாடிகள். மானுடச் சொற்களை மட்டுமல்ல மரங்கொத்தியின் ஓசையைக்கூட அவை அவ்வண்ணமே எழுப்புகின்றன. ஒருவன் தான் அறிந்த சொற்கள் அனைத்தையும் வானம்பாடியிடம் சொல்லிக்கொண்டிருப்பான் என்றால் வாழ்க்கை முடிந்துவிடும்.” அர்ஜுனன் “ஆம், ஆகவே நான் அவனை செல்லவிட்டேன்” என்றான். “குறைந்தது ஒரு நல்ல கதையையும் ஓர் அழகிய சூழ்ச்சியையும் அவர்களால் உருவாக்க முடிந்தது அல்லவா?” யுயுத்ஸு “ஆம், மெய்தான்” என்றான்.
“ஆனால் அந்தக் குழலை நான் வாங்கிக்கொண்டேன். அவனே அதை எனக்கு அளித்தான். பாரதவர்ஷத்தில் எவர் காலப்பறவையை வரவழைத்து அதனிடமிருந்து தன் அறுதிச்சொல்லை உறுதிசெய்துகொள்கிறாரோ அவர் எங்கள் நிலத்திற்குரியவர் என்று அவன் சொன்னான்” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு “அது எங்கே?” என்றான். “என்னிடமே உள்ளது. நான் சற்றுமுன் காட்டிலிருக்கையில் அதை மீட்டி வானம்பாடியை வரவழைத்தேன். அதில் காலப்பறவை எழுந்தது. ஆனால் நான் ஒரு சொல்லையும் அதனிடம் கேட்கவில்லை. அதன்முன் என் மொழி திகைத்து நின்றுவிட்டது.” யுயுத்ஸு “ஏன்?” என்றான். “அதை நீயே உணர்வதுதான் வழி” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு ஆர்வத்துடன் “காட்டுக!” என்றான்.
அர்ஜுனன் தன் இடைக்கச்சைக்குள் இருந்து ஒரு சிறுகுழலின் இரு துண்டுகளை எடுத்து ஒன்றோடொன்று பொருத்தினான். அதை உதடுகளில் வைத்து இசைத்தான். மெல்லிய கூரிய இசைத்துணுக்கு வானம்பாடியின் ஓசைபோலவே இருந்தது. சற்றுநேரத்தில் வானம்பாடி ஒன்று அங்கே மறுகூவல் விடுத்தது. அர்ஜுனன் “இளையோனே, உன் சொற்களை நீ சொல்லிப் பார்க்கலாம்” என்றான். யுயுத்ஸு திகைத்து பின் இளைய யாதவரிடம் திரும்பி “தாங்கள் கூறி நோக்கினீர்களா?” என்றான். அவர் “என் சொல்லை நான் நன்கறிவேன்” என்றார். யுயுத்ஸு அந்த மறுமொழியால் திகைத்தான். பின்னர் “எவர் எதனடிப்படையில் தன் சொற்களை அதனிடம் கோரமுடியும்?” என்றான். “மிக விருப்பமான சொற்களா? மிக வெறுக்கும் சொற்களா? விழைந்தனவா? வென்றனவா? தெய்வங்களா அன்றி இருளிருப்புகளா? எதைக்கொண்டு தெரிவுசெய்வது?” என்றான்.
இளைய யாதவர் உரக்க நகைத்து “எது மிகமிகமிக பொருளில்லாமலிருக்கிறதோ, எது எல்லாவற்றையும் வெற்றுக்கேலிக்கூத்தென்று ஆக்கி கடந்துசெல்கிறதோ, அத்தகைய சொல்” என்றார். யுயுத்ஸு அவரை வியப்புடன் நோக்கினான். “என் வரையில் அதுவே உண்மை” என்றார். புன்னகை அணைய “அனைவருக்கும் அவ்வாறு ஆகவேண்டுமென்பதில்லை” என்றார். “எவரும் இதனிடம் ஒரு சொல்லும் உசாவத் துணியமாட்டார்கள். அச்செயலின் முடிவின்மையும் பொருளின்மையும் முகத்தில் அறைய உளமழிந்து அமர்ந்திருப்பார்கள்.” இளைய யாதவர் “யுதிஷ்டிரன் என்ன செய்வார் என நினைக்கிறாய்?” என்றார். யுயுத்ஸு அவரை நோக்கிய பின் “என்னால் சொல்லக்கூடவில்லை. அவர் எதையேனும் கேட்கவும்கூடும்” என்றான்.
அர்ஜுனன் “ஆம், நான் அவருக்கு இப்புற்குழலை அளிக்க விழைகிறேன். அவர் என்ன செய்வார் என்று அறிய வேண்டும்” என்றான். எழுந்துகொண்டு “நாம் செல்வோம். நான் இதை அரசருக்கு அளிக்கிறேன். இதுதான் நான் கீழைநாட்டிலிருந்து அவருக்காகக் கொண்டுவந்த அரும்பொருள்” என்றான். யுயுத்ஸு “அவர் இதை உசாவிநோக்காமலேயே அப்பால் வைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது” என்றான். “எனில் மேலும் நன்று. அவருக்கு அவர் வெல்லவே முடியாத அகமும் புறமும் சற்று எஞ்சியிருக்கிறது என்று காட்டுவோம்… நான் கிளம்பி வருகிறேன்” என்றான் அர்ஜுனன். “நன்று, நான் இச்செய்தியுடன் இப்போதே கிளம்புகிறேன். உங்களை அழைத்துவர அரசணிப்படையினர் அனுப்பப்படுவார்கள்” என்றபடி யுயுத்ஸு எழுந்துகொண்டான். “ஆகுக!” என்றான் அர்ஜுனன்.
யுயுத்ஸு திரும்பி குறுங்காட்டை நோக்கி “அந்தப் பறவை நம் சொல்லுக்காகக் காத்து அங்கே அமர்ந்திருக்கிறது” என்றான். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அச்சுறுத்துகிறது அவ்வெண்ணம்” என்றபடி யுயுத்ஸு திரும்பிக்கொண்டான். அர்ஜுனன் காட்டை நோக்கியபடி “என்னை கவர்ந்தபடியே இருக்கிறது. ஆனால் தயக்கமும் அளிக்கிறது” என்றான். யுயுத்ஸு தலைவணங்கி அங்கிருந்து நடந்தான். தப்பிஓடுபவன்போல விசைகூட்டினான். சற்றுமுன் உச்சிமயங்கலில் அந்தப் பறவையின் மெல்லிய இசையை கேட்டோமா என எண்ணிக்கொண்டான். அதில் ஒரு சொல் இருந்ததா? மிகமிக இனிய ஒரு சொல்?