களிற்றியானை நிரை - 63
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 13
பீமன் அந்தப் பேழையை மீண்டும் பீடத்தின்மேல் வைத்தான். அவர்கள் அனைவரையும் ஒரே தருணத்தில் நோக்கியபடி அது அங்கிருந்தது. சற்றுநேரம் சொல்லின்மை நிலவியது. பீமன் “இதைப்பற்றி சொல்லும்படி நான் கின்னரநாட்டு பாணர்களிடம் உசாவினேன். புதுப்புது பாணர்களை அழைத்துவரச் சொன்னேன். ஒவ்வொருவரும் ஒரு கதை சொன்னார்கள். ஒன்றுடன் ஒன்று பிணைந்து தனிவழி தேரும் கதைகள் அவை. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அந்தியின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கொண்டேன்” என்றான்.
“உண்மையில் நான் இந்த விழிமணியை என் அகம் பொருட்படுத்தவில்லை என்றும் ஆகவே அக்கதைகளினூடாக செறிவுபடுத்திக் கொள்வதாகவும் நினைத்துக்கொண்டேன். இப்போது தெரிகிறது, இந்த விழிமணியை என் அகம் பெருஞ்சுமையாகவே எடுத்துக்கொண்டுவிட்டிருந்தது என்று. ஆகவே கதைகள் வழியாக அதை கரைத்தழிக்க, நான் அறிந்த பல்லாயிரம் கதைகளில் ஒன்றாக மாற்றிவிட முயன்றேன் என்று. ஆனால் கதைகள் இதைச் சூழ்ந்து பறந்தன. கதைகளுக்கு அப்பால் இது அவ்வண்ணமே இருந்துகொண்டிருந்தது” என்று பீமன் தொடர்ந்தான். “இதைப்பற்றிய கதைகள் அனைத்துமே ஷம்பாலா என்னும் மறைநகரை சுட்டுபவைதான்.”
ஷம்பாலா மெய்யறிதலின் நகர். இப்புவியில் மானுட உள்ளத்தில் பாலில் நெய் என மெய்மை திகழ்கிறது. சற்றேனும் மெய்மை இல்லாத மானுடகுலமே உலகில் இல்லை. அவை அவர்களின் அச்சங்களால், விழைவுகளால், ஐயங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மெய்மைகள் மெய்மையுடன் போரிடுகின்றன. ஒரு மெய்மை இன்னொன்றை திரிபடையச் செய்கிறது. ஒரு மெய்மை இன்னொன்றை பொய் எனக் காட்டுகிறது. இரு மெய்மைகள் ஒன்றையொன்று நிரப்பி இரண்டுமே பொருளற்றவை என்று ஆகிவிடுகின்றன. மெய்நாடுபவன் நிலைபேறடைய நூறுமடங்கு மெய்யல்லாதவற்றை களையவேண்டியிருக்கிறது. மெய்நாட்டம் என்பது எப்போதும் பொய்யை, திரிபை களைந்து களைந்து ‘ஈதில்லை ஈதில்லை’ என முன் செல்வது மட்டுமே என்றாகியிருக்கிறது.
ஆகவே காலமெல்லாம் மக்கள்திரளால் மெய்மை கடையப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அலைகொள்கிறது, கொந்தளிக்கிறது. அரிதாக சில நிலங்களில், சில மக்கள்திரள்களில், ஒரு வரலாற்றுத் தருணத்தில் திரண்டு எழுகிறது. சற்றே நிலைகொள்கிறது, பிறிதொன்று வந்து அறைய சிதைவுறுகிறது. கரைந்து கலந்து திரிந்து உருமாறி அமைகிறது. அவ்வண்ணம் திரண்ட மெய்மைகள் முற்றாக மறைவதில்லை. மறந்தவை கனவில் திரண்டிருப்பதுபோல அவை எங்கோ ஓர் ஆழத்தில் ஒன்றென ஆகி நிலைகொள்கின்றன. அந்த இடமே ஷம்பாலா. அது மெய்மைகள் மட்டுமே செறிந்து உருவான பெருநகர். மெய்யில் திகழ்வோர் மட்டுமே வாழ்வது. மெய்யே ஒலிப்பது. மெய்யன்றி பிறிதில்லாதது.
ஆகவே அங்கே ஒளி மட்டுமே உள்ளது, இருளோ நிழலோ இல்லை. இன்பம் மட்டுமே உள்ளது, துன்பம் இல்லை. இனிமையும் இசையும் அழகும் மட்டுமே உள்ளன. அதை ஒருதட்டுத் துலா என்கின்றனர் பாணர். அவ்வண்ணம் ஒரு நிலத்தில் காலம் திகழமுடியாது. ஏனென்றால் சென்றும் வந்தும் ஆடுவதனூடாகவே தன்னை நிகழ்த்துவது காலம். அங்கே வாழ்வு நிகழமுடியாது, காலத்தின் ஒரு தோற்றமே வாழ்வு. எனவே அது காலமின்மையில் கனவென உறைவது. நிலைகொண்டது. சென்றடைவோர் மீள முடியாத ஆழத்தில் அமைந்தது. பன்னிரு தூவெண் பனிமலைகளால் மண்ணுக்கு மேல் விண்ணுக்குக் கீழே வெறும்வெளியில் அந்நகர் நிலைநிறுத்தப்படுகிறது.
ஷம்பாலா கனவினூடாக மானுட உள்ளங்களுடன் தொடர்புகொண்டுள்ளது. மானுடரில் ஒருகணமேனும் அதை உணராத எவருமில்லை. அது அகர்த்தம் என்னும் பாதாளப்பாதைகளினூடாக உலகிலுள்ள அனைத்து நகர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அகர்த்தத்தின் வாயில்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன. அதை அறிவது ஊழ்கத்தாலேயே இயலும். அகர்த்தம் முடிவில்லாத படிகளால் ஆன சுரங்கப்பாதை. விசைகொண்ட ஆறுகள் பெருகியோடும் இருண்ட குகை. அவை பின்னிச் சுழன்று சென்றடைவது ஷம்பாலாவையே. ஷம்பாலாவிலிருந்து இனிய குளிர்காற்று அந்த குகைவழிகள் வழியாக வந்து நகர்களில் நிறைவதுண்டு. அந்நகரில் இனிய நிகழ்வொன்று நிறைவுகொள்கையில், அந்நகரில் அனைவருமே கனவிலென மெய்மையின் துளிக்கீற்றொன்றை உணர்கையில். நறுமணம் கொண்ட காற்று அது. அறிந்த எந்த மணமும் அல்ல, எனில் அறிந்த எந்த மணமாகவும் தன்னை காட்டிக்கொள்வது.
“கின்னரநாட்டு முதுபாணன் சுரூபன் சொன்ன கதை இது” என்று பீமன் தொடர்ந்தான். “நான் கின்னரநாட்டிலிருந்து கிளம்பும்போதுதான் அவன் வந்தான். ஒவ்வொருநாளும் அந்தியில் மலைமடக்குகள் சூழ்ந்த குளிர்ந்த வெளியில் கூடாரம் அமைத்து தங்கும்போது, கூட்டெரி எழுப்பப்பட்டு அனைவரும் அதைச் சூழ்ந்து அமர்ந்தபின் அவன் பாடுவான். அவர்கள் கிணை, முழவு போன்ற தோற்கருவிகளை தாளத்திற்கு பயன்படுத்துவதில்லை. வெவ்வேறு அளவிலான விளிம்புமடிப்பில்லாத பித்தளைக் கிண்ணங்களை நிரத்திவைத்து அவற்றில் கழியால் மெல்ல தட்டுகிறார்கள். அவை அவர்களின் குரல்களுடன் இணைந்து பாடத்தொடங்குகின்றன. அவை தாளமாகவும் உடன்சுதியாகவும் பின்னிசையாகவும் மாறுகின்றன. இரவின் குளிர் கம்பளிக்குள் ஊறி நிறைந்து தசைகளை தளரச்செய்வது வரை பாடுவார்கள். அவ்வாறு பாடப்பட்ட கதைகளில் சுரூபன் இந்தக் கல்மணி பற்றி சொன்னான்.”
இதை நாகவிழி என அழைக்கிறார்கள். அசைவற்றது, வெறித்து நோக்கி நிற்பது. பண்டு போதநிலத்தின் மலையுச்சிகளில் வாழ்ந்திருந்த வஜ்ரநாகம் எனும் ஒருவகை நாகத்தின் விழி அது. அவை மின்னல்களில் இருந்து உருவானவை. மின்னல் சிவந்து நெளிந்து துடிக்கையில் கூடவே கடுங்குளிரும் இருக்குமென்றால் அது குளிர்ந்து நாகமென்றாகிவிடுகிறது. மலையிடுக்குகளில் வெள்ளியருவிபோல தொலைவில் நின்று நோக்குபவர்களுக்குத் தெரிபவை அவையே. வழிதவறி மலைகளின் நடுவே அலைபவர்களுக்கு மலைப்பாதையோ என்று விழிமயக்கூட்டுவன. மண்ணில் அவை ஊடுருவிச்செல்ல பல்லாயிரம் சுரங்கப்பாதைகள் இருந்தன. விரும்பினால் விண்ணில் நெளிந்தெழுந்து சாட்டையெனச் சொடுக்கிப் பறக்கவும் அவற்றால் இயலும். அவை காற்றையும் இளவெயிலையும் உண்டு உயிர்வாழ்பவை. ஒளியாலானவை, எனவே நிழல்கள் அற்றவை.
அந்நாகங்கள் அனைத்துமே மலைகள் அனைத்துக்கும் மலையென்று அமைந்த போதமலைமேல் ஏறமுயலும். போதமலைகள் பன்னிரண்டு. அவற்றின் உச்சியில் அமைந்தது மகாபோத மலை. அதன்மேல் உள்ளது மெய்யறிவின் நகரமான ஷம்பாலா. ஒவ்வொரு நாளும் சுருளவிழ்ந்து சுற்றிப்படர்ந்து மலைமேறும் பல்லாயிரம் நாகங்களில் ஒன்று மட்டும் போதமலையின் முகடை சென்றடையும். அங்கு சென்றதுமே அது அழிவின்மையை அடைகிறது. போதமலையின் மீது எப்பொழுதும் மென்மையான மேகக்குவை ஒன்று நின்றிருக்கிறது. அது விண்ணொளியைக் கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் என்று சொல்கிறார்கள். அது அமுது. விண்ணில் நிறைந்திருக்கும் முடிவின்மையே அதில் அழிவின்மை என்றாகி திரண்டுள்ளது.
கீழிருந்து செல்லும் நாகம் அந்த உச்சிமலையில் நின்றால் நாநீட்டி அம்முகிலை தொடமுடியும். தொட்டதுமே உடலெங்கும் பரவும் தாளமுடியாத இனிமை ஒன்றை உணர்ந்து மெய்யழிந்து விழுந்துவிடும். பல நாட்கள் அங்கு அது தன்னிலை இன்றி திகழும். உணவும் நீருமாக அவ்வமுது மாறிவிடும். எண்ணங்கள் அனைத்தும் இனிக்கும். அதன்பின் அது துயர் என்னவென்பதை அறிவதில்லை. நினைவுகளே துயர் என்பதனால் கடந்தவை எண்ணத்திலிருந்தும் நினைவிலிருந்தும் கனவிலிருந்தும் ஒழிந்துவிடுகின்றன. அழிவிலியாக மாறி அவை அங்கே திகழும். அவற்றின் கண்கள் கீழே உதிர்ந்து கிடக்கும். அவை மென்பனியில் உருகிவரும் நீரில் கீழிறங்கிக் கிடக்கும். அவையே இந்தக் கற்கள்.
அங்கு செல்லும் மானுடர் உண்டா என்று பிறிதொரு பாணனிடம் கேட்டேன். விண்ணில் ஏறிச்செல்லும் விழைவென்பது அனைத்து உயிர்களுக்கும் உரியது. போதமலை முடிமேல் ஏறிச் செல்வதென்பது அரிதினும் அரிதானது. செல்லும் வழியில் உயிர்நீத்தவர்களே மிகுதி. ஒவ்வொரு அடிக்கும் இறந்தவர்களின் எலும்புகள், ஓடுகள் மீது மிதித்து மேலேற வேண்டும். மேலே செல்லுந்தோறும் இறந்தவர்களின் விழிகள் அருமணிகளென விழுந்து கிடக்கும். அவை மெய்மையை கண்டுவிட்டவர்களின் விழிகள். அவர்களை அவ்விழிகள் நோக்கி புன்னகைக்கும். அருகணைந்து உற்று நோக்கினால் நோக்கை விடாது கவ்விக்கொள்ளும். அவ்விழிகளிலேயே சிக்கிக்கொண்டு அங்கேயே உயிர்விடுவார்கள் சிலர். ஆகவே மேலே செல்லும்போது ஒருபோதும் அவ்விழிகளை நோக்கலாகாதென்பார்கள்.
மேலே போதநகரியான ஷம்பாலாவைச் சென்றடைந்தோர் மெய்யறிந்து அங்கே அமைவார்கள். அதற்கு ஒரு படி முன்னரே நின்றுவிடுபவர்களே திரும்பி வருகிறார்கள். அவர்களின் இமைப்பு மறைந்த விழிகள் தேவர்களுக்குரியவையாக மாறிவிடும். விழிமணிகள் நீல வைரங்களென சுடர்விடும். அவர்களால் காலத்தின் மும்மடிப்பை பார்க்க முடியும். துயருற்ற எவரையும் அவர்கள் தங்கள் விழிகளால் பார்த்தால் அக்கணமே அவர்கள் துயரிலிருந்து விலகுவார்கள். அவர்களின் அருட்சொல் ஊழுக்கும் தெய்வங்களுக்கும் ஆணை எனத் திகழ்வது. அவர்கள் நன்று தீதென்றோ, தேவை அல்ல என்றோ, தனது பிறிது என்றோ அறியாதவர்கள். ஆகவே அருள் புரிவதில் மேலோர் கடையர் என்று உணர்வதுமில்லை. எப்பழி செய்தவராயினும் எந்நிலை கொண்டவராயினும் அத்தகைய ஒருவரை நேரில் காணும் ஒருவன் அவர்களின் விழிமுன் நின்றாலே மெய்ப்படைவான். துயரழிந்து தானும் பெருநிலை கொள்வான்.
“அவ்விழிகளில் ஒன்று இக்கல்மணி” என்றான் பாணன். “நோக்கு மின்னி மறைவது. விரைவால் காலத்தைக் கடந்தது. அதை கல்லில் நிலைகொள்ளச் செய்கிறார்கள். நின்று காலத்தை கடக்கச் செய்கிறார்கள். நோக்குக இந்தக் கல்லை, இது உங்களை நோக்கும் ஷம்பாலாவின் விழி என்று உணர்க!” என்றான். “ஒவ்வொரு கணமும் அன்றாடத்தில் உழல்கிறோம். இன்றென்று நிகழ்வன நாளையென எழுவன நேற்றென எஞ்சுவன. கணமொழியாது அவற்றை அளைந்துகொண்டிருக்கையில் ஆழத்தில் ஒரு துளி அசைவிலாதிருக்கவேண்டும். முடிவிலியின் அழிவிலியின் நோக்கு நம் மேல் என்றுமிருக்கவேண்டும். அது தந்தையின் கைவிரலை பற்றிக்கொண்டு பெருவிழவுக்கூட்டத்திற்குச் செல்லும் சிறுவன் என நம்மை பாதுகாப்பாக அமையச்செய்யும். இக்கல்மணி தெய்வம் என உடனிருக்கட்டும்” என்றான் பாணன்.
“ஆனால் பிறிதொரு பாணன் இதை நஞ்சு என்றான்” என்று பீமன் சொன்னான். “மலையிறங்கி நிகர்நிலத்துக்கு வந்துவிட்டிருந்தோம் அப்போது. அவன் மலையிலிருந்து வரும் செய்திகளை அறிந்துகொள்ளும் கலையறிந்த பாணன் என்றார்கள். கங்கையில் ஒழுகிவரும் கற்களை எடுத்து அவற்றில் எழுதியிருப்பனவற்றைப் படித்து மலையின் எண்ணமென்ன என்று அறியும் கலை ஒன்று அம்மக்களிடையே உண்டு. அவ்வாண்டு பனி எவ்வளவு, பெருவெள்ளம் உண்டா, மழை எத்திசையில் என நூறுநூறு செய்திகளை அக்கற்களில் இருந்து அவர்கள் படித்தறிகிறார்கள். அவ்வாண்டுக்கான வேளாண்மையை, மேய்ச்சல்பெயர்வுகளை, இல்லங்களை அமைக்கும் கோணங்களை அதைக்கொண்டு முடிவுசெய்கிறார்கள். சில தருணங்களில் ஊர்கள் அனைத்துமே ஒழிந்து முற்றாக இடம்பெயரும்படிகூட ஆணைகள் வந்துள்ளன என்று அறிந்தேன்.
சைரன் என்னும் அப்பாணன் அவ்வாறு மலைகளுடன் உரையாடும் சடங்கை நிகழ்த்திக்காட்டினான். என் ஆணைப்படி ஊரிலிருந்து அவனை அழைத்து வந்திருந்தனர். பேச்சு ஒழிந்து உள்முகம்நோக்கிய முதியவன். வலுவான வளைந்த உடலும் கூழாங்கற்கள்போல் ஒளியணைந்த விழிகளும் கொண்டவன். பீதர்நாட்டான்போல முகம் முழுக்க சுருக்கங்கள் செறிந்தவன். எங்கள் படைவளையத்திற்கு நடுவே கங்கைக்கரை மணலில் கல்லடுக்கி எரிமூட்டி அவன் அமர்ந்தான். அவன் முன் அவனுடைய ஏழு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் முழவுகளையும் பெரிய பித்தளைச் சேங்கிலைகளையும் வைத்திருந்தனர். பதினெட்டு கூடைகளில் கோழிமுட்டை போலவும் புறாமுட்டை போலவும் வெவ்வேறு வடிவம்கொண்ட கற்கள் இருந்தன. அவை கங்கையிலிருந்து பொறுக்கி கொண்டுவரப்பட்டவை.
அவற்றை எடுப்பதற்கும் நெறிகளும் முறைமைகளும் உண்டு. நீரில் மலர்களைப் போட்டு அதன் ஒழுக்கில் அமைப்புகளை முதலில் வரையறை செய்கிறார்கள். மலர்கள் குவிந்து இழுபட்டும், நீண்டு நெளிந்தும், வளைந்து ஒசிந்தும் செல்லும் போக்குகளைக் குறிக்க நூற்றுக்கணக்கான சொற்கள் அவர்களிடம் உள்ளன. அவற்றில் சில மலர்கள் கரையோரமாக வந்து படிகின்றன. அங்கே இருந்து கூழாங்கற்களை பொறுக்கி எடுக்கிறார்கள். அக்கற்களை ஒன்று எடுத்து வீசிவிட்டு எட்டு வைத்து ஆழம் சென்று ஒன்று விட்டு ஒன்று தெரிவுசெய்யும் கணக்குகளும் மிகமிக நுட்பமானவை. ஆற்றின் திசை அங்கே எவ்வண்ணம் இருக்கிறதோ அதற்கேற்ப திரும்பி நிற்பதற்கும் வழமைகள் உண்டு. அவ்வாறு எடுத்த கற்களை வகைபிரிக்கிறார்கள். கற்களின் அடிப்பக்கத்தில் மண் படிந்திருக்கும் முறை, அவற்றின்மேல் பூசணமும் பாசியும் இருக்கும் வகை என அதற்கும் பலநூறு குறிப்புகள்.
அவ்வாறு கொண்டுவந்த கற்களை தன் முன் பரப்பியபின் அனல் வளர்த்து, அதற்கு அவியிட்டு, மூதாதையரையும் குடித்தெய்வங்களையும் பாடி வணங்கியபின் மலைகளைப் போற்றி பாடலானான். மலைகளை தன்னுடன் பேசும்படி அழைத்தான். மன்றாட்டு என்றும் ஆணை என்றும் மாறிமாறி ஒலித்தது அப்பாடல். ஒரு தருணத்தில் வெறியாட்டு எழுந்து அவன் முன்னும் பின்னும் அசைந்தாடினான். அவன் உடலெங்கும் தசைகள் நெளிந்தன. கைகள் அலைபாய்ந்தன. அவன் மாணவர்கள் அந்தக் கற்களை எடுத்து அவனிடம் அளித்தனர். அவற்றை வருடியும் முகர்ந்தும் அவற்றில் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் என வண்ணவரிகளாக பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை படித்தும் அவன் பேசலானான். அவனுடைய சொற்களை இசைக்கலங்களின் ஓசை உடன் இணைய முழக்கமிட்டு மீண்டும் கூவினர் அவன் மாணவர்கள். வான் என எழுந்த பெருமலை அடுக்கங்கள் அவ்வண்ணம் பேசக்கேட்டு நான் மெய்ப்பு கொண்டேன்.
அவனிடம் அன்று தனியாக பேசினேன். அவன் மாணவர்கள் உறங்கச் சென்றுவிட்டிருந்தனர். என் ஏவலர் இருவரும் படைத்தலைவனும் மட்டும் உடனிருந்தனர். அவன் நாங்கள் அளித்த மதுவால் மகிழ்ந்துவிட்டிருந்தான். “பாணரே, நீங்கள் மலையின் சொற்களை படிக்கக் கற்றவர். என்னிடம் இமையமலையடுக்குகளின் துளி ஒன்று உண்டு. சொல்க, இந்தக் கல்மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் செய்தி என்ன?” என்று அந்தக் கல்மணியை காட்டினேன். அவன் அதை வாங்கி விழிகூர்ந்து நோக்கினான். அதை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. “இது எந்த நீரொழுக்கில் கிடைத்தது?” என்று அவன் கேட்டான். “இது எனக்கு மலைமுதியவர் ஒருவரால் அளிக்கப்பட்டது” என்று நான் சொன்னேன்.
அவன் மேலும் கூர்ந்து நோக்கியபின் “இது செதுக்கப்பட்டது… கைகளால் உருட்டி மென்மையாக்கப்பட்டது” என்றான். “இதில் பொறிக்கப்பட்டிருப்பவை மானுடர் பொறித்தவை. மலைகளின் சொல் அல்ல.” நான் ஏமாற்றம் அடைந்தேன். “நான் மானுடரின் சொற்களை செவிகொள்வதில்லை. அவை சீவிடுகளின் ரீங்காரம்போல ஒற்றைச் சொல் மட்டுமே கொண்டவை. பொருளற்றவை. நான் கேட்பது மாமலைகளின் சொற்களை மட்டுமே. அவை அழிவற்றவை, என்றும் நிலைகொள்பவை” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றேன்.
அவன் தனக்குத்தானே முனகியபடி மேலும் மது கோரி குவளையை நீட்டினான். மதுவை ஊற்றியதும் முகம்சுளித்தபடி தொண்டையோசைகளுடன் அருந்தினான். இறுதியாக எஞ்சியதை நாவில் விட்டுவிட்டு அக்குவளையை தீயில் காட்டி நீலச்சுடர் எழுப்பினான். என்னிடம் கறைபடிந்த பற்களைக் காட்டி நகைத்து “மதுக்குவளையை தீயில் கழுவவேண்டும். இல்லையேல் மதுநாடி மலைத்தெய்வங்கள் வந்துவிடும். ஓநாய்களின் வடிவு கொண்டவை, விழிகளில் அனலெரிபவை” என்றான். அங்கேயே கால்களை நீட்டி படுத்தான்.
“உள்ளே சென்று படுங்கள்” என்றேன். “நான் குளிர்காலத்திலேயே மலைகளின் நோக்குக்கு கீழேதான் படுப்பேன்” என்றான். “மலைகளின் மூச்சுக்காற்றில் துயில்வேன். மலைகளின் இடிமுழக்கம் ஒலிக்கும் மழைக்காலத்தில்கூட என் தோல்போர்வையை போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பேன்.” அவனுடைய தோல்போர்வை எடைமிக்கது. உள்ளே மென்மயிர் கொண்டது. அது ஒரு கூடாரம்போல. அதை தன்னைச்சுற்றி அமைத்துக்கொண்டு ஒரு பெரிய குவை என ஆனான். சற்றுநேரத்திலேயே அவனுடைய ஆழ்ந்த குறட்டையோசை கேட்கலாயிற்று.
நான் தொலைவில் முகில்கள் என வானில் தெரிந்த வெண்ணிற மலைமுடிகளை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். அந்த மலைமுடிகளில் சில நாட்களுக்கு முன் இருந்திருக்கிறேன் என்று எண்ணவே விந்தையாக இருந்தது. அங்கே மானுடர் வாழ்கிறார்கள். விண்வாழும் தேவர்களுக்கு மிகமிக அணுக்கமானவர்கள். போதநிலம். போ என்னும் மெய்வழி. நான் அறிந்தவை எல்லாமே வெறும் கனவுகள்தானா என தோன்றியது. என் முன் சிமிழில் இந்தக் கல்மணி அமைந்திருந்தது. அதன் விழி என்னை நோக்கிக்கொண்டிருந்தது. அதன் ஒரு விழி நம்மை நோக்கும்போது பிறிதொன்று மறைந்திருக்கிறது. செந்நிற விழியை நாம் சந்திக்கும்போது நீலநிற விழி நம்மை கூர்ந்தபடி கரந்துள்ளது.
மலைகள் என்னை அறியாமல் எங்கோ என நின்றன. அவை கீழே விரிந்திருக்கும் இந்நிலப்பெருக்கை இங்கே செறிந்துள்ள மானுடரை அறிவதே இல்லை. அவை வானை நோக்கியே தவம் செய்கின்றன. ஆனால் இந்தக் கல்மணி என்னை நோக்கிக்கொண்டிருக்கிறது. கல்மணியில் எழுந்த பெருமலையின் நோக்கு. நான் அதனிடம் கேட்க விழைந்தேன். அது என்னிடம் சொல்வது என்ன என்று. எதன்பொருட்டு அது என்னுடன் வந்துகொண்டிருக்கிறது என்று. “இது மெய்யாகவே என்ன என்று தோன்றுகிறது?” என்று நான் படைத்தலைவனிடம் கேட்டேன். அவன் வெறுமனே விழித்து நோக்கினான். “இது என்ன?” என்றேன். குனிந்து அதை நோக்கி “விழியே உன் பொருள் என்ன?” என்றேன். அப்போது “நஞ்சு” என்ற சொல் ஒலித்தது.
நான் மெய்ப்பு கொண்டேன். “யார்?” என்றேன். படைத்தலைவன் “அவர்…” என பாணனை சுட்டிக்காட்டினான். “அவர் சொன்னார்” என்றான். நான் அவனை பார்த்தேன். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். குறட்டை ஒலி கேட்டது. “அவர்தான் சொன்னார்… துயிலில்” என்றான் படைத்தலைவன். “என்ன சொன்னார்?” என்றேன். “நஞ்சு என்றார்” என்றான். “நஞ்சு என்றா?” என்றேன். “இதையா?” என்று கேட்டேன். “அவர் கனவில் பேசியிருக்கலாம்” என்றான். “இல்லை, அவர் குரலில் பேசுவது மாமலையேதான்” என்றேன்.
அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டு காத்திருந்தேன். குறட்டை ஒலி மட்டுமே. பின்னர் அந்தக் கல்மணியை நோக்கி “சொல்க, நீ யார்? உன் பொருள் என்ன?” என்றேன். மறுமொழி இல்லை. மேலும் உரக்க “சொல்க, உன் பொருள் என்ன? உன்னில் திகழ்வது என்ன?” என்றேன். “காலம்” என்று அவன் சொன்னான். நான் அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவனுடைய சொல்தான். ஆனால் ஆழ்ந்த துயிலிலும் இருந்தான். “நீ நஞ்சா?” என்றேன். அவன் “ஆம்” என்றான். “அன்றி அமுதா?” என்றேன். “ஆம், அமுது” என்றான். “காலமென வந்துளாயா? காலமின்மையென்றா?”
அவன் மறுமொழி சொல்லவில்லை. நான் அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அவனுடைய சீரான மூச்சு ஒலித்துக்கொண்டிருந்தது. படைத்தலைவன் திகைத்துப்போயிருந்தான். நெடுநேரம் காத்திருந்தோம். மறுமொழி எழவில்லை. பின்னர் நான் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்து அந்தப் பேழையை மூடப்போனேன். அப்போது அவன் குரல் ஒலித்தது. “அசைவின்மையாக சென்றுகொண்டிருக்கிறேன்.” அதற்கப்பால் ஒன்றுமில்லை. நெடுநேரம் காத்திருந்தேன். ஒரே சொல் மட்டும்தான். நான் அச்சொல்லை நாவுக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். அசலகமன. ஒற்றைச் சொல்தான். அதை ஏந்தியபடி விடியும்வரை அங்கேயே அமர்ந்திருந்தேன். அருகே அச்சொல் என கங்கை ஒழுகிக்கொண்டிருந்தது. இருளுக்குள் ஒளிரும் இருளின் அலைகள் என.
இரவில் பனிமலைமுகடுகள் மேலும் மேலும் துலங்கின. உதிர்வனபோல விண்மீன்கள் முழுத்து வந்தன. நான் மதுவை அனலில் காட்டி இளவெம்மையுடன் அருந்திக்கொண்டே இருந்தேன். அசலகமன. அசலகமன. அச்சொல்லைத்தான் அவன் சொன்னானா, அன்றி நானே அதை உருவாக்கிக்கொண்டேனா? அச்சொல்லே அன்றைய இரவு. மெல்ல விடிந்தது. வெண்முகடுகள் வெளிறின. பின் குருதி பூசிய ஈட்டிமுனைபோல் ஒளிகொண்டன. ஒவ்வொரு மலைமுகடாக எரியத் தொடங்கியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிக்கொண்டு எரிந்தெழுந்து அனல்வெளியென்றாகிச் சூழ்ந்தன. அவற்றின் மடிப்புகளில் மேகப்பிசிறுகள் விழுந்து கிடந்தன. மிக மென்மையானவை. வெண்பறவையின் ஈரம் காயா குஞ்சுகள் போன்றவை. வானம் ஒளிகொண்டது. ஒரு சொல்கூட இல்லாமல் மலைப்பெருக்கு தன்னை எனக்கு காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு திரையாக விலக்கி. மேலும் மேலும் மேலும் என. பின்னர் இசையமைந்தது. ஓசையின்மை நிறைந்தது. அது வானின் அமைதி என்றாயிற்று. நான் அதை நோக்கியபடி கைகளைக் கூப்பி அழுதுகொண்டிருந்தேன்.