களிற்றியானை நிரை - 60

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 10

இடைநாழியினூடாக நடக்கையில் நகுலன் சகதேவனின் தோளைத் தட்டி “இப்பரிசை அரசருக்கு அளிக்கையில் இது எவ்வண்ணம் பொருள்படும் என்று நம்மால் கணிக்க இயலாது. அதைப்பற்றி அமைச்சரே அறிவிக்கட்டும். உரிய தருணம் உருவானால் அன்றி அரசரிடம் இதை முன்வைக்க இயலாது” என்றான். சகதேவன் “எப்படியும் நான் கூறியதையேதான் அவர் கூறப்போகிறார்” என்றான். “அவர் கூற வேண்டிய முறையில் அதை கூறுவார். இது அறத்தோனா அன்றா என்ற தீர்ப்பை அளிக்கும் ஒரு மாயப்பொருள் என்று நீ அவர் முன் வைத்தாய் எனில் அதன் விளைவுகள் பிறிதொன்றாக இருக்கும். மூத்தவர் இன்று உரிய உளநிலையில் இல்லை. இன்று அவரை மெய்யாகவே ஆட்டிவைப்பது தன்னைப் பற்றிய ஐயங்கள்தான்” என்றான்.

நகுலனின் புன்னகைத்த முகத்தைக் கண்டு சகதேவன் குழம்பி சுரேசரை ஒருமுறை பார்த்துவிட்டு “எந்த வகையான ஐயங்கள்?” என்றான். ”பல நிலைகளில்… பல விசைகளில்” என்றான் நகுலன். “அஸ்தினபுரிக்குள் அவர் இன்று எவ்வாறு கருதப்படுகிறார் என்ற ஐயம். தன் வாழ்நாளெல்லாம் அறத்தோன் என்று அறியப்படவேண்டும் என்பதற்காகவே அவர் நிலைகொண்டிருக்கிறார். அதன் பொருட்டே கடுந்துயர்களை அடைந்திருக்கிறார். இன்று இங்கு வந்து பெருகியிருக்கும் திரள் இறந்தகாலம் அற்றது. அதன் நினைவுகள் அனைத்தும் நிகழ்காலத்திலிருந்து பின்னகர்ந்து கதைகளை நோக்கி படர்கின்றன. அக்கதைகளில் சூதர்கள் அவரைப்பற்றி என்ன சொல்லவிருக்கிறார்கள் என்பதை இப்போது உணர முடியாது. இன்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இவற்றில் எது நிலைகொள்ளும் என காலத்தை ஆளும் தெய்வங்களே முடிவு செய்யமுடியும்.”

“முன்பு அவரை ஐயமின்றி அறத்தோன் என நம்பிய ஒரு பெருந்திரள் இங்கிருந்தது. அவர்களின் அந்நம்பிக்கை என்பது குலமுறையானது. அவர் உருவில் அவர்கள் யயாதியையும் குருவையுமே கண்டனர். அவர்களின் இல்லங்களில் ஒவ்வொரு நாளும் வாழ்த்திச் சொல்லப்படும் குலவரிசையின் நீட்சி அவர். மதிப்பை அவர் ஈட்டவில்லை, பெருமதிப்பை பெற்ற பின்னர்தான் மண்ணிற்கு வந்தார். இன்று இங்கு பெருகியிருக்கும் திரள் அவரை மதிப்பிட்டு நிறுத்தும் இடத்தில் இருக்கிறது. அவர் அதை அஞ்சுகிறார். ஆகவே நிலையழிந்திருக்கிறார்” என்றான் நகுலன். சகதேவன் “அவர்களின் மதிப்பைப் பெறுவது மிக மிக எளிது என்பார்கள்” என்றான். “கொடையால் புகழை அடையலாம் என்று நமக்கு எப்போதுமே சொல்லப்படுகிறது.”

நகுலன் “இல்லை. அவர்கள் இன்று எந்த கட்டுக்குள்ளும் அடங்காத யானையைப் போன்றவர்கள். இங்கு முன்பிருந்ததது பழகிய பட்டத்துயானை. இது காட்டுயானை. இந்த யானை எதை ஏற்கிறது எதை மறுக்கிறது என்று எவரும் இப்போது கூறிவிட இயலாது” என்றான். சகதேவன் பெருமூச்சுவிட்டு “பொய்யாகவேனும் ஓர் ஏற்பை உருவாக்க முடியுமென்றால் நன்று” என்றான். “அதை பொய்யான ஏற்பு என்று உடனே கண்டுகொள்வதே அரசரின் நோய்” என்று நகுலன் சொன்னான். சகதேவன் நீள்மூச்செறிந்தான். “நெடுங்காலம் நாம் குடிகளின் இப்பெருந்திரளை எந்த அடிப்படையும் அற்ற அலைவு என்று எண்ணியிருக்கிறோம். இதை ஆள்வது எளிது என்று கணித்திருக்கிறோம். அல்ல என்று அது எழுந்து நிற்கையில் திகைப்பே எஞ்சுகிறது” என்றான் நகுலன்.

யுதிஷ்டிரனின் அறைவாயிலில் நின்றிருந்த காவலனிடம் சுரேசர் “அரசர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று கேட்டார். “சற்று முன்னர்தான் மருத்துவர் வந்து நோக்கிச் சென்றார். மெல்லிய காய்ச்சலும் நடுக்கமும் இருக்கிறது. உணவு ஒழிந்திருக்கிறார்” என்று அவன் சொன்னான். “துயில்கிறாரா?” என்று சுரேசர் கேட்டார். ”முழுத் துயில் அமைவதே இல்லை அவருக்கு. ஆனால் எப்போதும் துயிலிலேயே இருக்கிறார். அவ்வப்போது விழித்துக்கொண்டு எவரையேனும் அழைத்துவரச் சொல்லி கூவுகிறார். அவர் மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டு உசாவினால் அன்றி எவரையும் அழைத்துவர வேண்டாம் என்பது மருத்துவரின் ஆணை என்பதனால் நான் அதை இயற்றுவதில்லை” என்றான் காவலன். “நன்று, எங்கள் வரவை அறிவி” என்று சுரேசர் சொன்னார்.

ஏவலன் உள்ளே சென்று அறிவித்துவிட்டு மீண்டு வந்து “அவர் தங்களை அறியவில்லை என்று விழிகள் காட்டுகின்றன. பலமுறை யார் யார் என்று கேட்டார்” என்றான். “அகிபீனா மயக்கில் இருக்கிறாரா?” என்று சுரேசர் கேட்டார். “இல்லை அமைச்சரே, மதுவோ மயக்கோ அளிக்கப்படவில்லை, காய்ச்சல் மட்டுமே நீடிக்கிறது” என்றான். “வருக!” என்று நகுலனிடமும் சகதேவனிடமும் விழிகாட்டிவிட்டு சுரேசர் அறைக்குள் நுழைந்தார். யுயுத்ஸு சகதேவன் ஒருகணம் தயங்குவதை கண்டான். நகுலன் அவனை ஆறுதல்படுத்துவதுபோல தோளில் தொட்டான். அவர்கள் உள்ளே நுழைந்தபின் யுயுத்ஸுவும் தொடர்ந்து சென்றான்.

அவர்களைக் கண்டதுமே படுக்கையில் இருந்து எழுந்த யுதிஷ்டிரன் “சுரேசரே, நான் சற்று முன் தங்களிடம் கூறியது நினைவில் உள்ளதா?” என்றார். சுரேசர் “ஆம். நினைவில் உள்ளது, அரசே” என்றார். “அந்த ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும்” என்று யுதிஷ்டிரன் கூறினார். ”ஆம். அனைத்து ஆணைகளும் முறைப்படி பிறப்பிக்கப்பட்டுவிட்டன. தங்கள் சொல் இங்கு இறை ஆணை என திகழும்” என்றார் சுரேசர். யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டு மஞ்சத்தில் அமர்ந்து பின்னர் திரும்பி நகுலனையும் சகதேவனையும் பார்த்து “இவர்களிடம் தனியாக வேறு ஆணைகளை நான் இடவேண்டும்” என்றார். “ஆம், ஆணைகளை பெற்றுக்கொள்ளவே வந்தோம்” என்று சுரேசர் கூறினார். யுதிஷ்டிரனின் விழிகள் பதறிக்கொண்டிருந்தன. யுயுத்ஸுவை எவர் என அறியாதவர்போல பார்த்தார்.

நகுலனும் சகதேவனும் பீடங்களில் அமர்ந்தனர். யுதிஷ்டிரன் அதன் பின்னரே சகதேவனை உணர்ந்து “இவன் எப்போது வந்தான்? நீ தெற்கே படைகொண்டு சென்றவன் அல்லவா?” என்றார். “ஆம், மூத்தவரே. படைவென்று திரும்பியிருக்கிறேன்” என்றான். “எங்கும் உன் படைகள் எதிரிகளால் தடுத்து நிறுத்தப்படவில்லை என்று அறிந்தேன்” என்றபின் யுதிஷ்டிரன் உரக்க நகைத்தார். “முகிலை வாள் வெட்டுவதுபோல் யுதிஷ்டிரனின் படைகள் பாரதவர்ஷத்தை பிளந்து சென்றன என்று சூதன் நேற்று பாடினான். நேற்றல்ல அதற்கு முன்பு. உண்மை! இன்று இப்புவியில் எனக்கு தடைகளே இல்லை. பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரி எனும் சொல்லே அச்சுறுத்தும் பெரும்படைக்கலமாக மாறியிருக்கிறது. இனி எவரும் எதிர்நிற்கப் போவதில்லை. சிந்துவின் ஜயத்ரதனோ பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனோ அல்லது குருகுலத்தின் துரியோதனனோ விண்ணிலிருந்து கீழ்நோக்கி திகைக்க வேண்டும்.”

கைகளை விரித்து “அவர்கள் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் கண்டேன்” என்று அவர் சொன்னார். ஆனால் அவர் முகத்தில் எழுந்த அந்தப் பித்தின் களிப்பு உடனே மறைந்தது. குரல் தாழ்த்தி “செல்லுமிடமெங்கும் பறப்பது அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி அல்லவா?” என்றார். “ஆம் அரசே, நமது கொடிதான்” என்றார் சுரேசர். “நமது கொடி, குருகுலத்தின் கொடி, ஹஸ்தியின் பிரதீபரின் சந்துனுவின் விசித்திரவீரியனின் பாண்டுவின் கொடி” என்றார் யுதிஷ்டிரன். அதன் பிறகு எழுந்து “நமது இலச்சினையை மாற்ற வேண்டும். அதில் பாண்டுவின் பெயர் இருக்கவேண்டும். அனைத்துக் கொடிகளிலும் பாண்டுவின் பெயர் எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்றார். “அவ்வாறு வழக்கமில்லை” என்று சுரேசர் கூரிய குரலில் சொன்னார். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு நோக்கி “ஏன்? ஏன்? ஏன் வழக்கமில்லை? என் தந்தையின் பெயர் கொடியில் இருப்பதில் என்ன தவறு?” என்றார்.

“கொடிகளில் அவ்வாறு பெயர் எழுதும் வழக்கமில்லை. பெயர் எழுதினாலும் அதை எவரும் படிக்க இயலாது. கொடிகள் முத்திரைகளை மட்டுமே கொண்டவை. ஏனெனில் அவை மொழியறியாதவரும் படிக்கத்தக்கவை. தொலைவில் இருந்தே அறியத்தக்கவை” என்றார் சுரேசர். “ஆம், அவ்வாறென்றால் பாண்டுவிற்கு தனி இலச்சினை இருக்குமா என்று பார்க்கவேண்டும். அதை இங்கே அனைத்து மாளிகைகளிலும் பொறிக்க வேண்டும். பாண்டுவுக்கு மட்டுமான தனி முத்திரை…” என்று யுதிஷ்டிரன் சொன்னார். ”அவ்வண்ணம் ஒன்று இங்கில்லை, அரசே” என்றார் சுரேசர். “இல்லையென்றால் உருவாக்குவோம்” என்று யுதிஷ்டிரன் கூறினார். “உருவாக்கி என்ன பயன்? அதை பாண்டுவின் முத்திரை என்று தெரிவிக்கவே நாம் நெடும் உழைப்பை செலுத்தவேண்டியிருக்கும்” என்றார் சுரேசர்.

யுதிஷ்டிரன் சலிப்புடன் கையை வீசி “நான் என்ன சொன்னாலும் இங்கு உடனே மறுப்பு எழுந்துவிடுகிறது. என் சொற்கள் பொய்யான மதிப்பையே பெறுகின்றன. மெய்யென அவை கொள்ளப்படுவதில்லை” என்றார். சுரேசர் சகதேவனை நோக்கி ”தாங்கள் கொண்டு வந்த பரிசை அரசரிடம் அளிக்கலாம்” என்றார். “பரிசா?” என்றபின் யுதிஷ்டிரன் சலிப்புடன் கையை மீண்டும் வீசி “செல்க! எனக்கு இப்போது எந்தப் பொருளிலும் ஆர்வமில்லை. பரிசென எந்தப் பொருளையும் கொள்ளும் நிலையில் நான் இல்லை” என்றார். “இது எளிய பரிசல்ல. இது முனிவர் ஒருவரால் தங்களுக்கென அருளப்பட்டது” என்றார். “நான் முனிவர்களின் வாழ்த்துக்களை நிறையவே பெற்றிருக்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “செல்லுமிடங்களிலெல்லாம் முனிவர்களைக் கண்டு வணங்கி சொல் பெற்றிருக்கிறேன். எச்சொல்லும் எனக்கு துணை வரவில்லை. எச்சொல்லுடனும் இணைத்து நான் பேசப்படவில்லை.”

அவர் முகம் கசப்புகொண்டது. “என் பொருட்டு களத்தில் பிறர் இயற்றிய பிழைகளால் மட்டுமே நான் காலத்தில் நினைவுகூரப்படுவேன் போலும். எனது சிறுமைகளால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவேன். ஆம், அவ்வாறுதான் நிகழும். அதை நான் அறிவேன். அது உலக இயல்பு. மானுடர் பிறரை அவர்களின் சரிவுகள், சிறுமைகள் வழியாகவே எண்ணிக்கொள்கிறார்கள். மானுடர் பிறரை எண்ணுவதே தங்கள் சிறுமையையும் வீழ்ச்சியையும் அவர்களுடன் ஒப்பிட்டு நிறைவடைவதற்காக மட்டுமே. இனி என்றும் பாரதவர்ஷத்தில் பேரறத்தான் எனப்பட்ட யுதிஷ்டிரனேகூட பெரும் பிழைகள் செய்தான், நமக்கென்ன என்ற சொல்லே என்னைப்பற்றி உலவும், முனிவர்கள் அதை மாற்ற முடியாது” என்றார்.

“இந்த முனிவர் தங்களை வாழ்த்தி பரிசனுப்பவில்லை” என்று சுரேசர் கூறினார். யுதிஷ்டிரனின் விழிகள் மாறின. சகதேவனிடம் ”யார்?” என்றார். சகதேவன் “எவரென்று அறியாத ஒரு முனிவர். அவர் குடமுனிவரான அகத்தியரின் மாணவர்நிரையில் வந்தவர் என்கிறார்கள். இப்பொருளை தங்களிடம் ஒப்படைக்கக் கொண்டு வந்தவர் முதிய பெண்மணி ஒருவர். அதை எங்களிடம் அளிக்கையில் கூறியவற்றை மட்டுமே நான் கூற முடியும்” என்றான். யுதிஷ்டிரன் மெல்ல நடுங்கத்தொடங்கினார். கைகளைக் கோத்துப் பற்றிய பின் நகுலனையும் சகதேவனையும் அலையும் விழிகளால் மாறி மாறி பார்த்தார். சகதேவன் ”ஆம் மூத்தவரே, இது தென்னிலத்தைச் சேர்ந்த ஒரு முதுமகளால் எனக்கு அளிக்கப்பட்டது. தங்களுக்குப் பரிசென இதை கொண்டுவந்தேன்” என்றான்.

அவன் நீட்டிய பேழையை யுதிஷ்டிரன் ஐயத்துடன் கைநீட்டி பெற்றுக்கொண்டார். அதை கையில் வைத்து திருப்பித்திருப்பி நோக்கினார். “உள்ளே என்ன?” என்றார். அவன் “திறந்து நோக்குக, மூத்தவரே!” என்றான். அவர் திறந்து நோக்கி “முத்துச்சிப்பி…” என்றார். “நன்னீர் முத்து… மிகமிக அரிதானது என்பார்கள். ஆனால் இங்கே அரண்மனையில் முன்னரும் இவ்வகை முத்து கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார். சகதேவன் “இது கோதாவரி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு ஓடையில் இருந்து எடுக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் வாழ்வு கொண்டது” என்றான். “இது அரிய ஆற்றல்கள் கொண்டது என்றார்கள்.” யுதிஷ்டிரன் நிமிர்ந்து “இது என்ன என்று சொல்லப்பட்டது?” என்றார். சகதேவன் அழுத்தமாக “மூத்தவரே, பேரறத்தான் என்று மண்ணில் நிலைகொள்ளும் ஒருவர் இதை தொட்டால் மட்டுமே இது அவரை ஏற்கும். பிற எவர் தொட்டாலும் அவர்களை தான் ஏற்கவில்லை என்று காட்ட அவர்களின் கைகளில் நீலநிறக் கறையை படியச்செய்யும்” என்றான்.

யுதிஷ்டிரன் முகம் சுளித்தார். சலிப்புடன் “என் கையில் கறை படியும். என் உடலெங்கும் கறை படியும். ஐயமேதும் தேவையில்லை” என்றார். சுரேசர் “அவ்வாறு நாங்கள் எண்ணவில்லை என்பதனால்தான் இதை உங்களிடம் கொண்டுவந்தோம். இதை தாங்கள் மட்டுமே தொட்டு உயிர்ப்பிக்கக்கூடும்” என்றார். சகதேவன் “இதற்குள் இன்னும் முத்து உருவாகவில்லை. பேரறத்தான் ஒருவனால் தொடப்பட்டால் அவனை வாழ்த்தும் பொருட்டு வாய் திறக்கும். அப்போது காற்றில் ஒரு துளியை விழுங்கி முத்தென கருக்கொள்ளும். அவன் வீடுபேறு அடையும்போது இது தானாக வாய் திறந்து அந்த முத்தை உமிழும். அதை அவன் தன் நுதல் விழியெனச் சூடி விண்ணேகலாம்” என்றான். யுதிஷ்டிரன் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடலின் நடுக்கை நோக்கியபின் சுரேசர் தாழ்ந்த குரலில் “தாங்கள் இதை தொடலாம்” என்றார்.

“இல்லை, நான் தொடப்போவதில்லை” என்று யுதிஷ்டிரன் கூறினார். கைகளை முதுகுக்குப் பின் வைத்துக்கொண்டார். “இதைத் தொடும் துணிவு எனக்கு வராது” என்றார். “தொடாமல் இருக்க தங்களால் இயலாது” என்று சுரேசர் சொன்னார். “தாங்கள் தங்களை அறிந்தாகவேண்டும். அதுவே தங்கள் ஊழ்.” யுதிஷ்டிரன் “அதைவிட நீங்கள் என்னை அறிந்தாகவேண்டும் என்று விழைகிறீர்கள்” என்று உரக்க கூவினார். “என்னை நீங்கள் அளவிட முயல்கிறீர்கள். அதன் பொருட்டே இதை கொண்டுவந்திருக்கிறீர்கள். என்னை அளவிடுவதற்கு எவருக்கும் தகுதியில்லை. களத்தில் என் கையால் நான் பிழைகள் இயற்றவில்லை. பிறர் பிழைகளுக்கு ஒத்து அங்கிருந்தேன், அவ்வளவே என் பிழை. என் உள்ளத்தில் இருந்து எப்பிழையையும் நான் எடுக்கவில்லை. எந்த தெய்வத்தின் முன் நின்றும் அதை நான் சொல்ல முடியும்.”

“அல்ல, உங்கள் மீதான ஐயமில்லா நம்பிக்கையே இதை கொண்டுவரச் செய்தது” என்றான் சகதேவன். “ஆம் மூத்தவரே, இதை தொடுவதற்கு பிறர் இல்லை இப்புவியில் என்னும் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் அவர்களின் முகங்களை மாறி மாறி பார்த்தபின் “அல்லது நான் உளம்தளர்ந்து இருக்கிறேன் என்று கணித்து என்னை மீட்க எண்ணி இச்சூழ்ச்சியை இயற்றுகிறீர்களா? இத்தனை எளிய ஒரு செயலினூடாக என்னை மீட்டுவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? எனக்கு வேண்டியது இதோ இந்த எளிய சிப்பியின் வாழ்த்து அல்ல. இதை கொண்டுவந்த சிற்றுள்ளங்களின் ஏற்பும் அல்ல. எனக்கு தெய்வங்களின் ஏற்பு வேண்டும். மூதாதையரின் ஏற்பு வேண்டும். காலத்தின் ஏற்பு வேண்டும்” என்றார்.

“அவை உண்டா என்று அறிவதற்கான வழி இது. இதை நாங்கள் எதன் பொருட்டு கொண்டுவந்திருந்தாலும் இன்று அவ்வாறு அறிவதற்கான ஒரே வழி. காலமும் மூதாதையரும் தெய்வங்களும் கண்ணகலே உள்ளன. இது கையெட்டும் அண்மையில் உள்ளது” என்றார் சுரேசர். யுதிஷ்டிரன் உரக்க “எடுத்துக்கொண்டு செல்லுங்கள் இதை. தேவையில்லை எனக்கு. ஒருபோதும் இதை நான் தொடப்போவதில்லை” என்றார். “நன்று. இதை தங்களுக்கெனவே கொண்டுவந்தோம். தங்களுக்குப் பரிசென இதை அளிக்க விரும்பினர் தங்கள் இளையோர். அதை அளித்தவர் முனிவர். அதை இங்கு கொண்டுவந்ததற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி அதை மூடும்படி விழிகாட்டினார் சுரேசர். சகதேவன் அதை மூடினான்.

“ஓய்வெடுங்கள், அரசே. மருத்துவர்களை அனுப்புகிறேன். தங்களுக்குரிய மருந்துகளை அவர்கள் அளிப்பார்கள். தங்களை துயிலில் எழுப்பியதற்கும் உணர்வுகளை அலைக்கழிய வைத்ததற்கும் பொறுத்தருளக் கோருகிறேன்” என்றபடி சுரேசர் எழுந்தார். நகுலனும் சகதேவனும் எழுந்து தலைவணங்கினர். அவர்கள் திரும்பியதும் யுதிஷ்டிரன் “பொறுங்கள். அது இங்கிருக்கட்டும்” என்றார். ”அதை தாங்கள் இங்கே வைத்திருப்பது…” என்று சுரேசர் சொல்ல “அதை தொட்டுப் பார்ப்பதற்காக அல்ல. என்னை நான் எவருக்கும் காட்டவேண்டியதில்லை. அது இங்கிருக்கட்டும். அதை நான் இந்த அறையிலேயே வைத்திருக்கிறேன். அது இங்கிருந்து சென்றால் நீங்கள் மாறி மாறி அதை தொடுவீர்கள். உங்களில் எவர் பழிசேர்ந்தவர், எவர் பழிகுறைவானவர் என்பதை நோக்குவீர்கள். பின்னர் அரண்மனை எங்கும் இது ஒரு விளையாட்டாகும். என் பெயர் சொல்லி அப்படி ஓர் இழிந்த விளையாடல் இந்த அரண்மனையில் நிகழ நான் விரும்பவில்லை” என்றார். “தங்கள் எண்ணப்படியே” என்ற சுரேசர் அந்தச் சிப்பியை அருகே வைத்துவிட்டு தலைவணங்கி வெளியே சென்றார்.

அவர்கள் வெளியே வந்ததும் நகுலன் ”அவர் மிகக் குழம்பியிருக்கிறார்” என்றான். சுரேசர் “இன்று இரவுக்குள் அவர் அதில் கையை வைப்பார். அவரால் அதை தவிர்க்கவே இயலாது” என்று சொன்னார். “அவர் கையில் கறைபடியுமெனில்?” என்று சகதேவன் கேட்டான். “கறைபடியுமென எண்ணுகிறீர்களா?” என்று சுரேசர் கேட்டார். சகதேவன் ”ஐயமின்றி” என்றான். “மண்ணில் முடிசூடி கோல்கொண்டு நாடாளும் எந்த அரசனும் கையில் கறைபடியாமல் இதை தொட இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.” நகுலன் “அதிலும் குறிப்பாக இவர்” என்றான். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று யுயுத்ஸுவை நோக்கி சுரேசர் கேட்டார். “கறைபடியாதென்றே எண்ணுகிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஏன்?” என்று சுரேசர் கேட்டார். “அவருடைய செயல்களை நீங்கள் அறிவீர்களல்லவா? அவருடைய உள்ள விழைவுகளையும் அதன் பொருட்டு அவர் செய்துகொண்ட சரிவுகளையும் ஒத்திசைவுகளையும் நீங்கள் முழுதறிவீர்கள்.”

“ஆம், அறிவேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் தன் ஆற்றலின்மைகளுடனும் அச்சங்களுடனும் ஆடையின்றி தன் முன் வந்து நின்றிருக்கும் மானுடனை தெய்வங்கள் விரும்பும் என்றே எண்ணுகின்றேன். அவனுடைய துயரங்களை அவை புரிந்துகொள்ளும். தன்னை ஒவ்வொரு கணமும் சிறிதென உணரத் தயங்காதவனை தெய்வங்கள் தோள்வளைத்து தலைதொட்டு வாழ்த்தும். இப்புவியில் மூத்தவர் அளவுக்கு உள்ளத்தால் எளிய மானுடர் எவருமில்லை. அவர் இன்று கொண்டிருக்கும் துயரம்கூட செறுத்துத் தருக்கும் ஆணவம் அவருக்கில்லை என்பதையே காட்டுகிறது. தன் செயலில் அவர் கொள்ளும் அலைவுகூட ஆணவம் இன்மையின் விளைவே. நிலையில்லாத மானுடரை நிலைகொண்ட தெய்வங்கள் அன்றி எவரால் அறிந்துகொள்ளமுடியும்?”

ஒருகணம் அவனை நோக்கியபின் சுரேசர் “நன்று. அவ்வாறும் கொள்ளலாம்” என்றபின் நகுலனின் தோளைத் தொட்டு “செல்வோம்” என்றார். அவர்கள் படியிறங்கப் போகும்போது அறைக்கதவு திறந்தது. உள்ளிருந்து யுதிஷ்டிரன் கையைத் தூக்கியபடி ஓடிவந்தார். “வருக! வருக! வந்தணைக! இதோ என் கைகள்! நான் அதை தொட்டேன்! என் கைகளால் அதை தொட்டேன்! எனக்கு அது கைகளில் கறையபடிய வைக்கவில்லை. என்னை அது மீட்டிருக்கிறது. என்னை அது அறத்தோன் என ஏற்றிருக்கிறது! தெய்வங்களே! மூதாதையரே! என்னை ஏற்றுக்கொண்டீர்கள்! என்னை வாழ்த்தினீர்கள்!” என்று கூவினார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விழுந்துவிடப்போகிறவர்போல தள்ளாடி சுவரை பற்றிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அருகணைந்து அவர் தோள்களை பிடித்தனர்.

“சுரேசரே, நோக்குக என் கையை! தூய்மையான கை! ஆம், நான் பிழைகளை இயற்றியிருக்கிறேன்! கீழ்மைகள் அடைந்திருக்கிறேன். ஆனால் அவ்வொவ்வொன்றின் பொருட்டும் உளம்வருந்தியிருக்கிறேன். ஒரு பிழைக்கு ஓராயிரம் முறை தெய்வங்களிடமும் மூதாதையரிடமும் பொறுத்தருளும்படி கோரியிருக்கிறேன். தெய்வங்கள் அதை அறியும். மூதாதையர் அதை நன்கறிவர். இது போதும். இதுவே எனக்கு நிறைவு. இதுவன்றி எனக்கு இப்புவியில் எஞ்ச எதுவுமில்லை” என்று யுதிஷ்டிரன் கூறினார். அவர் குரல் உடைந்தது. சுரேசர் “ஆம் அரசே, அதை அறிந்தே இங்கு கொண்டுவந்தோம். சற்று முன் தங்கள் இளையவர் அதையே கூறினார். இவ்வண்ணமோ அவ்வண்ணமோ ஒரு தீர்வு அமையுமெனில் தங்கள் துயர் தீருமென்று எண்ணியே அதை கொண்டு வந்தேன்” என்றார்.

நகுலன் யுதிஷ்டிரனின் கைகளை பார்த்தான். யுதிஷ்டிரன் அவன் பார்வையுடன் விழிதொட்டு உடனே தன் கைகளை பார்த்தபோது தன் வலக்கையில் செந்நிறமான கறை இருப்பதை பார்த்தார். “செந்நிறக்கறை! உன் உடலில் எங்கேனும் குருதியிருக்கிறதா?” என்றார். மீண்டும் நோக்கி “உன் ஆடைகளிலிருந்து அந்த வண்ணம் வந்துவிட்டதா?” என்றார். உடனே சிலம்பிய குரலில் வீறிட்டார். “அது என்னை பழிகொண்டவன் என்கிறது!” என்ற பின் தளர்ந்து விழப்போனார். நகுலன் அவரை பிடித்தான். அவர்கள் அவரைத் தூக்கி கொண்டுசென்றனர். அறைக்குள் படுக்க வைத்தனர்.

யுதிஷ்டிரன் உரத்த குரலில் “என்னையும் அது பழிகொண்டவன் என்கிறது! எனக்கும் கறையை அளித்துவிட்டிருக்கிறது! தெய்வங்களே! மூதாதையரே! என்னையும் ஒதுக்கிவிட்டீர்கள். நான் இயற்றிய அனைத்திற்கும் தண்டனை அளித்துவிட்டீர்கள். என்னை கீழ்மகன் என்று நிறுத்திவிட்டீர்கள்” என்றார். வெறிகொண்டவர்போல் தன் நெஞ்சில் ஓங்கி கைகளால் அறைந்தபடி விலங்குபோல் ஊளையிட்டார். அவர் கழுத்துத் தசைகள் புடைத்திருந்தன. நெற்றியிலும் தோளிலும் நரம்புகள் எழுந்திருந்தன. இரு கால்களும் வலிப்பு கொண்டதுபோல் துடிக்க அலறியபடி எழுந்து வெளியே ஓட முயன்றார். நகுலனும் சகதேவனும் அவரை அழுத்தி மஞ்சத்தோடு படுக்க வைத்தனர். அவர் தலையை உருட்டியபடி “இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எவ்வகையிலும் இனி வாழவேண்டிய தேவை இல்லை. என் வாழ்வு பொருளற்றுவிட்டது. நான் இயற்றிய அனைத்தும் பயனற்றுவிட்டன” என்று கூவினார்.

யுயுத்ஸு “மூத்தவரே, ஒருகணம் பொறுங்கள்” என்றான். “வெளியே செல்! வெளியே செல்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். யுயுத்ஸு “ஒருகணம் பொறுங்கள். மூத்தவரே, ஒரு சொல் கேளுங்கள்” என்று உரக்கக் கூறி அவர் கையைப்பற்றித் திருப்பி அவர் முன் காட்டி “நோக்குக, செந்நிறக்கறை!” என்றபின் திரும்பி நகுலனிடம் “உங்கள் கையை காட்டுங்கள்” என்றான். நகுலனும் சகதேவனும் தங்கள் கையை காட்டினார்கள். “நோக்குக, அவர்களின் கறை நீலவண்ணம்! உங்கள் கறை சிவப்பு. என்ன பொருள் அதற்கு? கூறுக, என்ன பொருள் அதற்கு?” என்றான்.

யுதிஷ்டிரன் திகைத்து வாய் திறந்திருக்க, உதடுகளின் நடுக்கத்தால் தாடி அசைய யுயுத்ஸுவை பார்த்தார். “நீலம் என்பது எதிர்நிலை இயல்பு. அது அசுரர்களின் வண்ணம். இருளின் வண்ணம். தங்கள் கை செந்நிறமாக உள்ளது. தங்களை ஷத்ரியர் என்று அது சொல்கிறது. மூத்தவரே, இது மெல்ல மஞ்சளாக மாறும். மேலும் கரைந்து வெண்மையாகவும் ஆகும். தங்களுக்கான வாயில் மூடப்படவில்லை. மிகச் சரியாக அளந்து திறக்கப்பட்டுள்ளது. தங்கள் மீட்பு சொல்லளிக்கப்பட்டுள்ளது. இதைவிடப் பெரிய வாழ்த்தை மூதாதையரோ தெய்வங்களோ ஓர் அரசனுக்கு அளித்துவிட முடியுமா என்ன?” என்றான் யுயுத்ஸு.

யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டு “ஆம்” என்றார். மெல்ல தளர்ந்து “இது மெய்யாக இருக்கவேண்டும்” என்றார். சுரேசர் “ஐயமில்லை. யுயுத்ஸு சொல்வதே மெய். எந்த அரசருக்கும் நீ அரசரில் நல்லோன் என்றுதான் தெய்வங்கள் சொல்ல முடியும். நீங்கள் இன்று மீட்கப்பட்டுவிட்டீர்கள் என்று இந்தச் சிப்பி சொல்லவில்லை, இனி மீட்கப்படுவீர்கள் என்று சொல்கிறது. இதில் உங்களுக்கான முத்து விளையும், ஐயமே தேவையில்லை” என்றார். “அவ்வாறு நிகழ்க! தெய்வங்களே! அவ்வாறு நிகழ்க!” என்றபடி இரு கைகளையும் நெஞ்சில் வைத்து அழுத்தி யுதிஷ்டிரன் கண்மூடி விழிநீர் உகுத்தார். அவர் தாடியின் மயிர்களில் கண்ணீர்த் துளிகள் திரண்டு சொட்டுவதைப் பார்த்தபடி அவர்கள் நின்றனர்.

“இது உங்களுடன் இருக்கட்டும். உங்கள் அருள் இதில் வளரட்டும். உங்கள் மீட்பு இதற்குள் ஒளிகொள்கிறது” என்றபின் சுரேசர் எழுந்து தலைவணங்கினார். நகுலனும் சகதேவனும் எழுந்துகொண்டனர். அவர்கள் ஓசையின்றி அறையிலிருந்து வெளியே சென்றனர்.