களிற்றியானை நிரை - 57
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 7
யுதிஷ்டிரன் அவருடைய சிற்றறையில் தாழ்வான மஞ்சத்தில் இடைவரைக்கும் மரவுரிப் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்தார். ஏவலன் வரவு அறிவித்தபோது சற்றே புரண்டு தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு வெறுமனே விழிகளைத் திறந்து நோக்கிக்கொண்டிருந்தார். நகுலன் உள்ளே நுழைந்து முகமன் உரைத்து தலைவணங்கினான். சுரேசரும் யுயுத்ஸுவும் அவனைத் தொடர்ந்து வந்து அறைக்குள் நின்றனர். சுரேசர் மட்டும் யுதிஷ்டிரனின் தலையருகே சிறுபீடத்தில் அமர்ந்தார். யுதிஷ்டிரன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை.
நகுலன் “மூத்தவரே, தங்கள் ஆணைப்படி படைகொண்டு சென்று யவனநாட்டு எல்லைவரை வென்று திறைகொண்டு திரும்பியிருக்கிறோம். வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறோம். நம் வெற்றியை பாரதவர்ஷமே இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி அனைத்துக்கும் உரியவர் வெற்றிக்கெனவே பிறந்த குருகுலத்துப் பேரரசர் யுதிஷ்டிரன் என பாவலர் நவில்கிறார்கள். வெற்றிகள் இன்னும் நம்மை காத்திருக்கின்றன. இந்நகர் இனி வெற்றித்திருநகர் என்றே அழைக்கப்படும்” என்றான்.
யுதிஷ்டிரன் விழிகளில் எந்த மாறுபாடும் தெரியவில்லை அவருக்கு அகிபீனா கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை யுயுத்ஸு அடைந்தான். நகுலன் “வெற்றி என்பது செல்வம். வெற்றி என்பது எளியோர்க்கு அளிகொள்ளும் ஆற்றல். இன்று இவ்வெற்றியால் தங்கள் அருள் பாரதவர்ஷமெங்கும் பரவுகிறது. தென்னிலத்திலும் வடநிலத்திலும் கிழக்கிலும் மேற்கிலும் தங்கள் சொல்லே இறையாணை என திகழவிருக்கிறது. வெற்றிகொண்டு நிலைபேறடைந்த குருகுலத்தின் மாண்பும் யயாதியின் கொடிவழியினரின் சிறப்பும் இனி என்றென்றும் பாரதவர்ஷத்தின் வெற்றிக்கதையாகவே நிலைகொள்ளும்” என்றான்.
யுதிஷ்டிரன் மெல்ல முனகி உடலை அசைத்து மல்லாந்து படுத்தார். அவர் விழிகளிலிருந்து நீர் பெருகி கண்களின் இருபுறங்களிலும் வழிந்தது. நகுலன் “தாங்கள் உடல்நலம் இன்றி இருக்கிறீர்கள் என்றார்கள். இன்று என் பொருட்டு அவையில் அமர்வதும் இயலாதென்று அறிந்தேன். ஒருவேளை இன்று மாலையே இளையோன் தன் படைகளுடன் நகர்புகக் கூடும் என்று கூறினர். அவனுடைய வெற்றியையும் அறிந்தேன். இன்னும் சில நாட்களில் மூத்தவர் இருவரும் வெற்றியுடன் நகர்நுழைவார்கள். நான்கு படைகளும் நகர்நுழைந்த பின்னர் அவை கூடி முறைமை அறிவிப்புகளை வெளியிடுவதே உகந்ததென்று தோன்றுகிறது. வெற்றியை பிந்தி அறிவிப்பதும் பீடுதான். தாங்கள் அதற்குள் உடல்நலிவு நீங்கி எழவும் கூடும்” என்றான்.
யுதிஷ்டிரன் முனகியபடி தலையை அசைத்தார். “அரசே, அஸ்தினபுரியின் கருவூலம் நிறையும் அளவிற்கு பரிசுகளும் கொண்டு வந்திருக்கிறோம். வெற்றியின் அளவை சுட்டுபவை அச்செல்வக்குவைகள். அவை மேலும் நமக்கு வெற்றியை அளிப்பவை. வெற்றித்திரு வீரத்திருவை தொடர்கிறாள்” என்றான். யுதிஷ்டிரன் “இக்குடிகள் உன்னை நகர்முகத்தில் வந்து எதிர்கொண்டார்களா?” என்றார். நகுலன் அவ்வெதிர்பாரா வினாவால் சற்று திகைத்து சுரேசரைப் பார்த்துவிட்டு “ஆம், பெருந்திரளென வந்திருந்தார்கள்” என்றான். யுதிஷ்டிரன் சுரேசரைப் பார்த்துவிட்டு “திரண்டு வந்திருப்பார்கள் என்று நான் அறிவேன். இதுவரை எவருக்கும் வராத திரளா அது? முன்னொருபோதும் எழாத வாழ்த்துப் பெருக்கா?” என்றார்.
சுரேசர் கைகளை மார்பில் கட்டியபடி பேசாமல் அம்ர்ந்திருக்க நகுலன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி “அறியேன். ஆனால் நான் நகர்நுழையும்போது முன்னர் இதுபோல் பெரும் வரவேற்பு எழுந்ததில்லை” என்றான். “நான் சுரேசரிடம் கேட்டேன்” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “இல்லை. பேரரசி நகர்புகுந்தபோது எழுந்த வரவேற்புக்கு சற்றே குறைவுதான். அவ்வாறே அதை எதிர்பார்க்கவும் இயலும்” என்றார். “ஏன்? ஏன்?” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்து அமர்ந்தார். அவர் உடல் நடுங்கியது. சுரேசர் “அவர் பேரரசி என்பதனால்” என்றார். யுதிஷ்டிரன் மஞ்சத்தில் ஊன்றிய இரு கைகளும் நடுங்க உதடுகள் துடிக்க கலங்கிய கண்களுடன் சுரேசரை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து மீண்டும் மஞ்சத்தில் படுத்து “ஆம், அதுதான் மெய்” என்றார்.
நகுலன் “இங்கு இந்நகரின் மையமென அமைந்திருப்பவர் பேரரசி திரௌபதி. அவரை மண்திகழ் தெய்வமென மானுடர் வழிபடுவதில் பிழையொன்றும் இல்லை” என்றான். “இங்கு மட்டும் அல்ல சென்ற திசையெங்கும் எங்கள் படையை அரசியின் ஒரு சொல் ஆணையென எழுந்து பருவடிவு கொண்டு பெருகி வந்ததாகவே குடிகள் கருதினார்கள். அதை மன்னர்கள் அஞ்சினார்கள்.” சுரேசர் நகுலனை நோக்கி விழிகளால் தடுத்தாலும் அவனால் நிறுத்த முடியவில்லை. “அரசர்கள் எங்குமுள்ளனர். அரசி முடிகொண்டிருப்பது இங்குதான். பலநூறு நிஷாதத் தொல்குடிகள், அசுரர்கள், அரக்கர்கள் எங்களை முகம் மலர்ந்து ஏற்றுக்கொண்டது அரசியின்பொருட்டே. அன்னை அன்னை என்று அவர்கள் கூவினார்கள்” என்றான்.
யுதிஷ்டிரன் முனகினார். சுரேசர் திரும்பி யுயுத்ஸுவை நோக்கி கைகாட்ட அவன் மெல்ல பின்னடைந்து மூடியிருந்த கதவை சுட்டு விரலால் சற்று தட்டினான். கதவு திறந்து ஏவலன் அந்த மீன்வடிவப் பேழையை உள்ளே கொண்டுவந்தான். அந்தக் காலடிகளைக் கேட்டும் யுதிஷ்டிரன் தலை திருப்பிப் பார்க்கவில்லை. நகுலன் திரும்பிப் பார்த்துவிட்டு புன்னகையுடன் “மூத்தவரே, நான் வடபுலத்திற்குச் செல்கையில் அங்கு யவனர்களின் நாட்டிலிருந்து வந்த பெருவணிகன் ஒருவனை கண்டேன். அவனிடம் அரியதொரு பொருள் இருப்பதாகவும் அதை எனக்கு பரிசளிக்க விழைவதாகவும் சொன்னான். அதற்குக் கைமாறாக அஸ்தினபுரியின் கணையாழியை அவனுக்கு அளிக்க வேண்டும் என்றும், நூறாண்டுகள் அவனுடைய வணிகக் குலம் பட்டுப்பாதையினூடாக செல்லும்போது அந்தக் கணையாழியின் ஆணையே காவலாக அமையுமென்றும் கூறினான்” என்றான்.
“அப்பொருளின் சிறப்பென்ன என்று நான் கேட்டேன். அது இப்புவியில் முதன்முதலில் எழுந்த அரசரின் ஆணை என்று அவன் சொன்னான். அதை பொன்னெழுத்துகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள். முன்பு நெடுந்தொலைவுக்கு அப்பால் இரு நதிகள் ஓடும் சமாரிய நிலத்தை ஆண்ட ஓர் அரசன் இட்ட ஆணை அது. யயாதிக்கு நிகரான சிறப்பு கொண்டவன் அவன். அவ்வாணைகள் அடங்கிய நெறி நூல் இது. புவியில் இதுவே முதல் நெறி நூல் என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்றான் நகுலன்.
யுதிஷ்டிரன் கண்களை மூடிக்கொண்டு “அதற்கும் தொன்மையான நெறிநூல்கள் இருக்கும். பாறைகளில் பொறிக்கப்பட்டிருக்கும். குகைகளில் வரையப்பட்டிருக்கும். மானுடன் உருவான பின்னரே நெறி உருவானது என்பது பிழை. நெறி உருவான பின்னரே மானுடன் உருவானான்” என்றார். ஏவலன் அந்தப் பேழையை கொண்டுவந்து அவரிடம் நீட்டினான். அவர் எழுந்து அமர்ந்து அந்த மீன்வடிவப் பேழையை பார்த்தார். கைநீட்டி அதை வாங்கவில்லை. நகுலன் அதை வாங்கித் திறந்து “இச்சுவடிதான்” என்றான்.
அவர் அதை எடுத்து விரல்களால் புரட்டிப் பார்த்தார். பொற்தகடு அதிர்ந்தெழுந்த ஓசை சிறு குருவியின் சிலைப்பொலிபோல் கேட்டது. “இது எந்த மொழி?” என்று அவர் கேட்டார். “பாலை மக்களின் தொல்மொழி” என்று நகுலன் கூறினான். “காப்பிரிகளின் மொழிபோல் உள்ளது” என்று யுயுத்ஸு கூறினான். “இதை படித்து பொருள்கொள்ளும் அறிஞர்கள் உள்ளனரா?” என்றார் யுதிஷ்டிரன். “ஏழு அறிஞர்களை இச்சுவடியுடன் அவ்வணிகனே எனக்கு அளித்தான். உரிய முறைமையுடன் அவர்களை அழைத்து வந்துள்ளேன். இங்கு நம் மாளிகையில் அவர்கள் தங்கியுள்ளார்கள். தாங்கள் உகக்கையில் அவர்களுடன் இச்சுவடியை சொல்ஆயலாம்” என்று நகுலன் கூறினான்.
யுதிஷ்டிரன் சுவடியை அடுக்கி, மீண்டும் பேழையை மூடி, ஏவலனை நோக்கி அதை எடுத்துவைக்கும்படி கைகாட்டினார். “நன்று” என்றார். அவர் முகத்தில் நிறைவோ மகிழ்ச்சியோ எழவில்லை என்பதை யுயுத்ஸு கண்டான். ஆனால் அதை அவர் எத்தயக்கமும் இன்றி தொடுவதை எண்ணிக்கொண்டான். அதை அவ்வாறு தயக்கமின்றி எவருமே தொடவில்லை என்று தோன்றியது. ஒருவேளை அச்சுவடியின் காவலர்களாகிய அறிஞர்கள்கூட கை துவள மட்டுமே தொட்டிருக்கக் கூடும். யுதிஷ்டிரன் அவ்வாறு தொடுவார் என்று தெரிந்திருந்தாலும்கூட அது அவனுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.
யுதிஷ்டிரன் “நான் களைத்திருக்கிறேன், ஓய்வெடுக்க விழைகிறேன்” என்றார். “ஓய்வெடுங்கள், மூத்தவரே” என்றபடி நகுலன் எழுந்துகொண்டான். சுரேசர் “மருத்துவரிடம் ஆணையிட்டிருக்கிறேன் அரசே, நலம் பேணுக!” என்றபடி எழுந்து “செல்வோம்” என்று அவர்களிடம் கைகாட்டினார். அவர்களின் ஆடைகளும் அணிகளும் ஒலிக்க ஒவ்வொருவராக அறைவிட்டு வெளிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டது. அவர்களை அந்த ஓசை சற்று திடுக்கிடச் செய்தது. அறைக்குள் அந்தச் சுவடிப்பேழையுடன் அரசர் தனித்திருக்கிறார் என யுயுத்ஸு நினைத்துக்கொண்டான். அவர் அதை புரட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்.
யுயுத்ஸு “எவ்வகையிலும் அவர் மகிழவில்லை” என்றான். நகுலன் திரும்பிப் பார்த்தபின் “ஆம், அவ்வாறே எனக்கும் தோன்றியது” என்றான். சுரேசர் “மகிழ்ந்தார். சுவடியைக் கண்டு அவரால் மகிழாமல் இருக்க இயலாது” என்றார். “ஆனால் அவர் உளம்சோர்ந்ததுபோல் இருந்தது. அது ஏன்?” என்று நகுலன் கேட்டான். “ஒவ்வொரு பரிசும் ஒருவர் தன்னுள் கொண்ட வினாவுக்கான விடை. என்னை பிறர் மதிக்கிறார்களா, பிறர் என்னை தலைசூடுகிறார்களா என்ற வினாவே பெரும்பாலும் பரிசுகளை விடையாகப் பெறுகிறது. என் சொல் நிலமெங்கும் திகழ்கிறதா, நெடுந்தொலைவு என்னை அறிந்திருக்கிறார்களா, நான் அரிதினும் அரிதானவனா, அனைவருக்கும் முதன்மையானவனா என வினாக்களே அரசர்களை ஆட்கொள்கின்றன. அரிய பரிசுகள் அதற்கான விடைகள்” என்றார் சுரேசர்.
“இது பேரரசர்களுக்குரிய பரிசு என்பதில் ஐயமில்லை” என்றான் நகுலன். “ஆம், ஆனால் யுதிஷ்டிரன் இங்கு தன்னுள் கொண்ட வினாவுக்கு இப்பரிசு மறுமொழி அல்ல. இது அவருடைய பிறிதொரு இடத்தில் சென்று அமைகிறது. அவ்வினா அங்கேயே உள்ளது” என்றார் சுரேசர். நகுலன் “அதை எப்படி அறிவது? அதற்கு நாம் என்ன செய்வது?” என்றான். “நோக்குவோம். இன்று மாலை சகதேவன் நகர்புகுகிறார். அவரிடம் இருக்கும் பரிசென்ன என்று பார்ப்போம்” என்றார் சுரேசர்.
யுயுத்ஸு “அவர் நெறிநூல்களில் நம்பிக்கையிழந்திருக்கிறார்” என்றான். நகுலன் “மூத்தவரா?” என்றான். “ஆம், போருக்குப் பின் அவர் வெறிகொண்டு நெறிநூல்களை நோக்கினார். தன் செயல்களை நிறுவும்பொருட்டு அவற்றுடன் சொல்லாடினார். பின்னர் தன்மேல் நம்பிக்கை கொண்டு எழுந்தார். அதன்பின் நெறிநூல்களை தொடவில்லை. மெய்மைநூல்களையே ஆராய்ந்தார். இந்நகர் மீண்டு எழத்தொடங்கியதும் நெறிநூல்களையே மறந்துவிட்டார். சிற்பநூல்களில் ஆழ்ந்திருந்தார். காவியங்களைக்கூட பயின்றார். இனி அவருக்கு நெறிநூல்கள் தேவைப்படாது.” சுரேசர் “இந்நூல் தேவைப்படும் என நினைக்கிறேன்” என்றார்.
யுயுத்ஸு தன்னருகே நின்றிருந்த நகுலனை திரும்பிப்பார்த்தான். கைகளை கட்டிக்கொண்டு காடுகள் மேல் காலையொளி படுவதை விழிசுருக்கி நோக்கிக்கொண்டிருந்த நகுலன் முற்றிலும் அயலவனாகத் தெரிந்தான். அவன் ஆடைகள் காற்றில் நெளிந்துகொண்டிருந்தன. அவன் விழிகளைச் சுற்றி வெந்ததுபோல் தோல் செதில்கொண்டிருந்தது. எக்கணமும் சீற்றம்கொள்ளப்போகிறவன்போல, அழுதுவிடுபவன்போல இருந்தது அவன் முகம். “மூத்தவரே” என்று அவன் அழைத்தான். நகுலன் திரும்பிப்பார்த்தான். “மூத்தவரே, இந்த நெடும்பயணத்தில் தாங்கள் எவ்வண்ணம் மாறினீர்கள்?” என்று அவன் கேட்டான்.
“இது பயணமே அல்ல. முறைமைச்சடங்குகளின் தொகுப்பு. எந்த ஊரிலும் நாங்கள் தங்கவில்லை. இரவுகளில் துயின்று பகல் முழுக்க சென்றுகொண்டே இருந்தோம். பெரும்பாலும் குறுக்கு வழிகளினூடாக. குறுகிய நாட்களில் கூடுதல் ஊர்களுக்கு செல்வதொன்றே எங்கள் இலக்காக இருந்தது. எனவே எதையும் வளர்த்தவில்லை. அரசர்கள் வந்து அடிபணிந்து திறை அளிக்கும் சடங்குகள்கூட இரு நாழிகைக்குள் முடிந்துவிடும். பெரும்பாலும் ஒரு நாட்டின் எல்லைக்குள் நாங்கள் நுழையும்போது அங்கிருந்த அரசரும் திரளும் திறைப்பொருட்களுடன், முறைமைச் சீர்களுடன் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். பறவைகள் வலசை செல்வதுபோல கடந்துசென்று மீண்டோம்.”
“பாரதவர்ஷமே உள்ளங்கை எனச் சிறுத்து பொருளிழந்தது. இந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு மாதம் சுற்றிவந்ததுபோல் உணர்கிறேன்” என்றான் நகுலன். “ஆணவத்தால் தலையெழுந்துவிட்டால் மண் குறுகிவிடுகிறது. எதனால் பண்டு அசுரர்குலத்துப் பேரரசர்கள் விண்ணை வெல்ல விழைந்தனர் என்று இப்போது தெரிகிறது.” அவன் சிரிப்பில்கூட மாறாத கசப்பு ஒன்று கலந்திருந்தது. “ஆனால் உங்களிடம் ஏதோ ஒன்று மாறியிருக்கிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “மெய்யாகவா?” என்று கேட்டபடி நகுலன் திரும்பிப்பார்த்தான். “ஆம், மாறியிருக்கிறேன். ஒன்றை இழந்திருக்கிறேன்.”
யுயுத்ஸு அவன் என்ன சொல்வான் என்பதற்காக காத்திருந்தான். “இத்தனை துயருக்கும் இழப்புகளுக்கும் அலைச்சல்களுக்கும் பிறகும் என்னுள் அரசன் என்று அமர்ந்திருப்பதன் மீதான விழைவு இருந்திருக்கிறது. என் ஆணவம் அதற்காக தவித்திருக்கிறது. முதல் நாள் இங்கிருந்து கிளம்பி மச்சநாட்டுக்குச் சென்று அவ்வரசனின் மணிமுடி என் புரவியின் காலடியில் வைக்கப்பட்டபோது அதை முற்றிலும் உணர்ந்தேன். அன்று என்னை மறந்து உளம்கரைந்து மெய்ப்பு கொண்டேன். எவரிடமோ நான் நான் என்று சொல்லிக்கொண்டேன். அன்று முழுக்க நிலைகொள்ளாமல் உடல் விம்மிக்கொண்டிருந்தேன். என் சொற்கள் அனைத்தும் பெருமுரசொலிபோல ஒலிப்பதாக எனக்குத் தோன்றியது. ஆணைகளை இட்டேன். அருள் புரிந்தேன்.”
“அங்கிருந்து கிளம்புகையில் மேலும் மேலும் வெற்றியென்று என் உடல் தவித்துக்கொண்டிருந்தது. ஆனால் மீள மீள ஒன்றே நிகழ்ந்தது. இறுதியில் மேற்கிலிருந்து திரும்புகையில் எவ்வண்ணமேனும் அஸ்தினபுரியை வந்தடைந்துவிட வேண்டுமென்றே தோன்றியது. நான் சலித்துவிட்டேன். அரசப் பொறுப்பு என்பதுபோல் சலிப்பூட்டக்கூடிய பொருளற்ற செயல் வேறில்லை. அகத்தே ஆணவம் கரையாது கல்லுருளை மட்டுமே இருப்பவர்கள் மட்டுமே அரசர்கள் என்று அமர முடியும். அவ்வாணவம் சற்றே கரையத்தொடங்கிவிட்டாலும் அரியணையில் அமர இயலாது.”
“ஏனென்றால் அரசன் அறியும் எவருடைய வணக்கமும் வணக்கமல்ல. எவருடைய அன்பும் அன்பல்ல. எவருடைய சொல்லும் மெய்ப்பொருள் கொண்டதல்ல. பொய்யை பொன்னென்றாக்கிக் குவித்து அதன் மேல் அமர்ந்து, பொய்யை செங்கோல் என்று ஏந்தி, பொய்யே உரைத்து, பொய் பற்றி, பொய்யில் மகிழ்ந்து, பொய்யில் நிறைவுறுவது அது” என்றான் நகுலன். அவன் குரல் வேறெவருடையதோ என ஒலித்தது. யுயுத்ஸு அவனையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த வினாவை ஏன் கேட்டோம் என அவன் அகம் வியந்தது. அவன் கேட்டது தன்னைக் குலைக்கும் ஒரு மறுமொழியை அவன் சொல்லவேண்டும் என்பதற்காக. தானே தெளிவாக உணராத ஒரு வினாவுக்கான விடைக்காக.
“எங்கோ என்னுள் ஒரு கனவு இருந்தது. என் இளமையில் வந்த கனவு. நான் இளையோன். ஆகவே இங்கு எனக்கு மணிமுடி இல்லை. மூத்தவரிடம் இருந்து ஒப்புதல் பெற்று இங்கிருந்து கிளம்பிச்சென்று எங்கோ ஒரு புது நிலத்தை வென்று அங்கு முடிசூடிக்கொள்ளவேண்டும் என்று நான் இலக்கு கொண்டிருந்தேன். எனக்கென்று குடிகளும் கோலும் கொடியும் குலமுறையும் அமையவேண்டுமென்று எண்ணியிருந்தேன். உண்மையில் குருக்ஷேத்ரத்தின் போர் முடிந்து பெருந்துயர் என்மேல் படர்ந்தபோது என்னுள்ளில் இருந்து எடுத்த அந்தச் சிறு கனவால் மட்டும்தான் நான் மீண்டெழுந்தேன். கடுங்குளிரில் கை அகல்விளக்கின் வெம்மை பெரிதாகத் தெரிவதுபோல் அதைக் கொண்டு சூழ இருக்கும் அனைத்தையும் கொளுத்தி நெருப்பாக்கி குளிர்காய்வதுபோல. இன்று அதை இழந்துவிட்டிருக்கிறேன்.”
“இன்று மெய்யாகவே எவ்வகையிலும் நான் அதில் ஆர்வம் கொள்ளவில்லை. நான் மேற்கே படைகொண்டு செல்கையில் குடிமன்னர் கோல் நிலைகொள்ளாத புது நிலங்கள் பல அங்கு விரிந்திருக்கின்றன என்ற பயணியரின் சொல்லையே நினைவு கொண்டிருந்தேன். என் முடி சென்று நிலைக்கும் நிலமொன்றை கண்டடைய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அவ்வண்ணம் நூறு நிலங்களை பார்த்தேன். அங்கிருந்த குடிகள் தங்களுக்கு ஒரு அரசன் வேண்டுமென்று விழைவு கொண்டிருப்பதையும் கண்டேன். அவர்கள் அறத்தின் வாளுடன் வந்த மன்னன் என்று எண்ணி பெருகி வந்து என்னை அடிபணிந்தனர். அந்நிலங்கள் மழைவளம் கொண்டவை அல்ல எனினும் வணிக வளத்தில் செழிக்க முடியும். அங்கு உறுதியான காவலனின் கோல் நிலைகொள்ளுமெனில் ஒரு தலைமுறைக்குள் பெரும் செல்வம் கொண்ட பேரரசுகள் உருவாகும். நான் விழைந்த அனைத்தையும் அங்கு கண்டேன். விழைந்தவாறே வெல்லும் வாய்ப்பும் எனக்கு வந்தது.”
“ஆம், இன்று தாங்கள் ஒரு சொல் கூறியிருந்தால் தாங்கள் சென்ற நிலமனைத்தும் தங்களுக்கே அளிக்கப்பட்டிருக்கும்” என்றான் யுயுத்ஸு. “ஆனால் எனக்கு அது பொருட்டெனத் தெரியவில்லை” என்று நகுலன் சொன்னான். “எப்போது இவ்விழைவு என்னிலிருந்து அகன்றது என்று எனக்குத் தெரியவில்லை. மீள மீள நடந்த சடங்குகளாலா? ஆம். ஆனால் அதை நான் தெளிவாக முடிவுற உணர்ந்தது அங்கு பாலைநிலத்தில் ஒருநாள் நான் காட்டுப் புரவி ஒன்றை கண்டபோது.” அவன் முகத்தில் எழுந்த கடுந்துயரை யுயுத்ஸு வியப்புடன் நோக்கிக்கொண்டு நின்றான்.
“பாலையில் புரவிகளில் சென்றுகொண்டிருந்தேன். உடன் என் வீரர்கள் இருந்தனர். காட்டுக்குள் குதிரைக்குட்டி ஒன்றின் கதறலை கேட்டேன். அருகே சென்று பார்த்தபோது நோயுற்று மடிந்துகொண்டிருக்கும் அன்னைப்புரவி ஒன்றின் அருகே அதன் குட்டி நின்று கூவிக்கொண்டிருந்தது. அதை சுற்றிவந்து முட்டியது. எம்பிக்குதித்து கால்களால் மண்ணை அறைந்தது. முகத்தால் அன்னையை உந்தி எழுப்பிவிட முயன்றது. நான் என் குதிரையிலிருந்து இறங்கி அதை நோக்கி ஓடினேன். அதை என் கைகளால் அள்ளி எடுத்துக்கொள்ள, அதன் அன்னைக்கு தன் குழவியை பேணுபவன் வந்துள்ளான் என்னும் நம்பிக்கையை அளிக்க எண்ணினேன்.”
“ஆனால் அன்னை முனகலாக ஒரு சொல் கூறியது. குட்டி என்னை திடுக்கிட்டு திரும்பி நோக்கியது. அதன் மயிர்ப்பரப்பு சிலிர்த்து எழுவதைக் கண்டேன். செவிகள் முன் வளைய மூக்கைத் தூக்கி மோப்பம் பிடித்தபின் அது அலறியபடி விலகி ஓடியது. அறியாமல் அதைப் பிடிக்க சற்றே ஓடிய பின்னர்தான் அன்னை என்ன சொல்லியிருக்கக் கூடும் என்னும் எண்ணத்தை அடைந்தேன். திகைத்து நின்றுவிட்டேன். திரும்பி நோக்கியபோது அன்னைப்புரவியின் பெரிய இமைகள் மெல்ல சரிவதைக் கண்டேன். அது தன் குட்டி விலகி ஓடிவிட்டது என உணர்ந்து நிறைவுகொண்டபடி உயிர்விட்டது.”
“நான் அக்குதிரைக்குட்டியை பிடிக்கவில்லை. அது எவ்வகையிலேனும் காட்டில் வாழும் என எண்ணிக்கொண்டேன். அங்கிருந்து நேராக என் பாடிவீட்டுக்குத் திரும்பினேன். சோர்ந்து தனிமைகொண்டு இறந்ததற்கு நிகராக ஆகிவிட்டிருந்தேன். மெய்யாகவே அன்று இறந்தேன். நான் அகத்தே அறிந்ததுதான். ஆனால் அக்கணம் அது என் முகத்தில் பாறையென வந்தறைந்தது. நான் இனி புரவிகளால் ஏற்கப்படப் போவதில்லை. இனி அவற்றின் உலகில் எனக்கு இடமில்லை” என்றான் நகுலன்.
“அந்தச் சுவடி என் கையில் கிடைத்தபோது முதலில் எனக்குத் தோன்றியது அப்பெரும் பரிசை அரசருக்கு அளித்து என் கோரிக்கையை உடன் வைக்க வேண்டும் என்று. அவ்வண்ணம் தோன்றியதுமே பொருளற்ற ஒன்று கையில் கிடைத்ததுபோல், ஒவ்வாத ஒன்றை விழுங்கிவிட்டதுபோல் உளமறுப்பு எழுந்தது. அதை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. எதை இழந்து எதை பெறுகிறேன்? எதையேனும் பெற்றால் நான் இழந்தவற்றுக்கு அவற்றை நிகர்வைக்கிறேன் என்றல்லவா பொருள்! என் இறுதிக் கணத்தில் புரவிமுகத்துடன் வந்து என்னை அழைக்கும் தெய்வத்தை சிறுமை செய்வது அல்லவா அது?”
“உண்மையில் அப்பரிசை அரசரிடம் நான் கொடுக்கையில் அதை என்னிடம் இருந்து கையொழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தீது விளைக்கும் அரும்பொருளை ஆலயத்திற்குக் கொண்டுசென்று தெய்வம் முன் வைத்து திரும்பாது மீள்வதுபோல” என்றான் நகுலன். யுயுத்ஸு புன்னகைத்தான். அதைக் கண்டு “கூறுக!” என்று நகுலன் சொன்னான். “ஒன்றுமில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “கூறுக!” என்று உரக்க நகுலன் கேட்டான். “உங்கள் விழைவு எஞ்சியிருந்தால், உங்கள் கோரிக்கையுடன் அப்பரிசை அரசர் முன் நீங்கள் வைத்திருந்தால் அவர் மகிழ்ந்திருக்கக் கூடும்” என்று யுயுத்ஸு சொன்னான்.
நகுலன் திரும்பிப்பார்த்து “ஏன்?” என்றான். “அதை விளக்கத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு தோன்றுகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். நகுலன் சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “ஆம், மெய்தான்” என்றான்.